திராவிட மாயை - 6
தமிழ்த் தேசிய இயக்கத்தின் தோற்றமும் பின்னடைவும்
இனி,
தமிழகத் தேசியப் போராட்டத்தின் வரலாற்றைப் பார்ப்போம். ஆங்கிலர் தம் ஆட்சிக் காலத்தில்
பிரிட்டனின் துணி ஆலைகளுக்குத் தேவைப்பட்ட பஞ்சுக்காகப் பருத்திப் பயிரை
ஊக்குவித்தனர். எனவே புன்செய் நிலங்களில் செறிந்திருந்த தெலுங்கு பேசும் மக்கள்
அத் துறையில் கவனம் செலுத்திச் செல்வம் சேர்த்தனர். அவர்கள் கோவைப் பகுதியில்
பருத்தியைப் பதப்படுத்தவும் நூலாக்கவும் ஆகிய தொழில்துறைகளில் இறங்கினர்.[1]
பர்மா,
சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வட்டித்தொழில் செய்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்
அங்கு கிடைத்த பணத்தைக் கொண்டு இங்கு வங்கிகளை உருவாக்கினர்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க,
வெள்ளையர்கள் இங்கு வந்த போது அவர்களுக்கு துபாசிகள் எனும் மொழிபெயர்ப்பாளர்களாக
இருந்து, உள்நாட்டு உளவுகளைச் சொல்லி நாடு பிடிப்பதற்கான துப்புகளைக் கொடுக்கும்
துப்பாளிகளாகச் செயற்பட்டோர் பெரும்பாலும் பார்ப்பனர்கள் அல்லாத மேற்சாதியினர்.
ஆங்கிலர்களின் ஆட்சி உறுதிப்பட்ட நிலையில் உள்ளூர் மக்களின் பரிவைப் பெறுவதற்காக
அவர்கள், பிற படையெடுப்பாளர்களைப் போல் (முகம்மதியர்கள் விதிவிலக்கு,
திப்புசுல்தான் சில கோயில்களுக்குக் கொடைகள் வழங்கியிருப்பதாகத் தெரிகிறது)
கோயில்களுக்குக் கொடைகள் வழங்கினர். இதைப் பயன்படுத்தி தேவதாசிகள் மூலம் பதவிகளில்
ஏறினர் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களே உயரதிகாரிகளாக அனைத்து இடங்களையும்
பிடித்துக்கொண்டனர். அரசர்களின் பரிவைப் பெறவும் காலம் காலமாக அவர்கள் இதே
உத்தியைத்தான் கையாண்டுள்ளனர்.
அதுவரை தங்களுக்கு அடிப்பட்டு
கோயில்களுக்குள் அடங்கியிருந்த பார்ப்பனர்கள் இப்போது தங்கள் மீது மேலாளுமை
செலுத்தும் ஆங்கிலருக்கு நம்பகமான அதிகாரிகளாக மாறித் தம்மை இழிவு செய்வோராக
மாறிவிட்டதைக் கண்டும் அரசிடம் தமக்கு ஆகவேண்டிய சின்னஞ்சிறு வேலைக்குக் கூட
அவர்கள் முன்பு கைகட்டி நிற்க வேண்டி வந்த இழிநிலையாலும் கொதித்துப் போன உள்ளூர்
நிலக்கிழார்களும் சிற்றரசர்களும் மேலே நாம் குறிப்பிட்ட புதிய தொழில், வங்கித்
துறையினரும் இணைந்து உருவாக்கியதுதான் நயன்மைக் கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச்
சங்கம்.
பார்ப்பனரை முதன்மை எதிரியாகக்
கொண்டு அவர்களை எதிர்ப்பதற்கான ஒரு கூட்டணி உத்தியாக தமக்குக் கீழ் அடுக்கிலுள்ள மக்களுக்கும்
தமக்கும் ஒரே சமயத்தில் பயன்படும் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு, கீழ்
அடுக்கு மக்கள் ஆட்பட்டுவரும் குமுக ஒடுக்கலுக்குத் தீர்வாக சாதிய ஒழிப்புக்
கொள்கை ஆகியவற்றை அக்கட்சி முன்வைத்தது. ஆக அன்று நிலவிய நிலக்கிழமை வகுப்பு
மற்றும் புதிதாக அரும்பிய முதலாளியத் தனிமங்கள் ஆகியவற்றின் புரட்சிகரப்
பகுதியினரின் இயக்கமாக நயன்மைக் கட்சி உருவெடுத்தது. தன் ஆட்சிக் காலத்தில்
ஒதிக்கீடு என்ற வகையில் அக முரண்பாட்டை அகற்ற முயன்றும் வடக்கத்திகளின் பொருளியல் ஊடுருவல் என்ற
புற முரண்பாட்டை எதிர்கொள்ள புதிய தொழில்கள் தொடங்க பல்வேறு சலுகைகளையும்
வசதிகளையும் அவ் வியக்கம் செய்து கொடுத்தும் தான் அறிவித்த கொள்கைகளுக்கு
நாணயமாகவே செயற்பட்டது.
ஆனால் பெரியார் கைக்கு இயக்கம்
வந்த பின்னர் பார்ப்பனர் எதிர்ப்பு எனும் அக முரண்பாட்டை மட்டும்
கையிலெடுத்துக்கொண்டு வடக்கத்திகளின் பொருளியல் படையெடுப்பு என்னும்
புறமுரண்பாட்டுக்கு எதிராக “பார்ப்பன - பனியா” என்ற ஒரு மந்திரத்தை மட்டும் ஓதி ஏமாற்றினார். அவரது தொடக்க கால
வளர்ச்சியிலும் செல்வாக்கிலும் வடக்கத்திகளின் நெருக்குதல்களை எதிர்கொண்ட
உள்நாட்டுப் பொருளியல் விசைகளின் பண வலிமைக்கும் குமுகச் செல்வாக்குக்கும்
குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இவ்வாறு புற முரண்பாட்டுக்கு எதிரான உணர்வுடன்
களமிறங்கியோரை அகற்றவும் எஞ்சியோரின் சிந்தனையைப் புற முரண்பாட்டிலிருந்து
திசைதிருப்பவும் அக முரண்பாட்டைக் கையாண்ட ஒரு நேர்வாகும் பெரியாரின் செயற்பாடு.
[1] தூத்துக்குடி வட்டாரத்தில் நாடார்கள்
ஆங்கிலர் ஆலைகளுக்குப் பருத்தி வழங்கியதாகவும் அவர்கள் வ.உ.சி.யின் கப்பலுக்கு
எதிராகச் செயற்பட்டதாகவும் பின்னர் காந்தியின் இயக்கத்தில் கலந்து மறைந்ததாகவும்
அண்மையில் கிடைத்த செய்தியொன்று காந்தியின் அழிம்பு வேலைக்குச் சான்று பகர்கிறது.
(காலச்சுவடு, நவம்பர்; 2009 பக். 78 - 79)
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக