13.12.15

சாதி வரலாற்றுக்கு ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 5


வலங்கையர் கதை:
            சாணர்களின் வரலாறு குறித்த ஒரு கதைப்பாடல் உள்ளது. வலங்கையர் கதை அல்லது வெங்கலராயன் கதை என்பது அதன் பெயர். அதில் அவர்களின் தோற்றக் கதை ஒன்று உள்ளது. சப்த மாதர்கள் எனப்படும் ஏழு பெண்களுக்குப் பிறந்த ஏழு மகன்களின் வழிவந்தவர்கள் அவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாதிகள் பற்றிய பல கதைகளிலும் இந்த ஏழு பெண்களே மூலவர்களாகக் கூறப்பட்டுள்ளனர். ஒரு சாதியின் வேறுபட்ட கதைகளில் ஒன்றில் ஏழு தாய்களும் மற்றொன்றில் ஏதாவதொரு முனிவரும் மூலவர்களாகக் கூறப்பட்டிருக்கின்றனர். இரண்டாவது கதை பார்ப்பனர்களின் கோத்திரங்களைப் பார்த்துப் புனைந்து கொண்டதாக இருக்க வேண்டும். மொத்தத்தில் தமிழர்கள் அனைவரும் இந்த ஏழு பெண்களின் வழி வந்தவர்கள் என்பதை இந்தச் சாதிக் கதைகள் வலியுறுத்துகின்றன. மனித குலத்தின் தொடக்க காலத்தில் மக்கள் தாய் வழியில் அமைந்த குக்குலங்களாக(இனக் குழுக்களாக) வாழ்ந்தனர் என்பதும் தந்தை என்ற உறவே குமுகத்தில் உருவாகாத ஒரு நிலையும் இருந்தது என்றும் மாந்தநூலார் குறிப்பிடுவர். அது போன்று ஏழு குக்குலங்களாக இருந்து பின்னர் ஐந்நிலங்களின் அடிப்படையில் அந்தக் குக்குலங்கள் தங்கள் தங்கள் நில எல்லைகளுக்குள் ஒரே மக்கள் குழு‌‌வாக இணைந்தனர் என்றும் பின்னர் தொழில்களும் தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்து ஓர் எல்லையைத் தொட்டதும் தேக்கமடைந்து தொ‌ழில் அடிப்படையிலான சாதிகளும் வருணங்களும் தோன்றி, தொடர்ந்த தேக்கத்தால் அவை பிறப்படிப்படையில் இறுகிப் போய்விட்டன என்றும் கொள்ள வேண்டியுள்ளது. இதை இன்று எஞ்சி நிற்கும் ஏழு தாய்களைப் பற்றிய சாதிக் கதைகள் நமக்குச் சுட்டுகின்றன. கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தில் இருந்தனவாக உரை‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாசிரியர்கள் கூறும் ஏழ்பனை நாடு, ஏழ்தெங்க நாடு போன்றவையும் இந்த ஏழு குக்குலப் பி‌‌‌‌‌‌‌ரிவுகளின் எச்சம் தானோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

            சாணர்களின் தோற்றக் கதைகளில் குறைந்தது மூன்று தந்தைகள் வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு செய்து ஆர்டு கிரேவ் சூ‌னியர் என்ற அமெரிக்கர் எழுதிய நாடார் வரலாறு எனும் நூ‌‌லில் ஏழு பெண்களும் இந்திரனைச் சேர்ந்து ஏழு பிள்ளைகளைப் பெற்றனர் என்ற கதை கூறப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அகிலத் திரட்டு அம்மானையில் அந்தப் பெண்கள் கண்ணனைக் கூடினர் என்று கூறப்பட்டுள்ளது. கண்ணன் ஆயர்பாடிப் பெண்களின் சேலையை மறைத்து வைத்த கதையோடு இது இணைத்துக் கூறப்பட்டுள்ளது. வலங்கையர் கதையோ வித்தியாதர முனிவர் என்பவரோடு அந்தப் பெண்கள் கூடினர் என்கிறது. வித்தியாதரர் எனப்படுவோர் தேவர்களில், வானில் மேகத்தை ஊர்தியாகக் கொண்டு இயங்கும் ஒரு பிரிவினர். ஆனால் முனிவர் என்ற அடைமொழியால் இந்த வித்தியாதர முனிவர் விசயநகரப் போரரசை நிறுவிய அ‌‌‌‌‌‌‌ரிகரன், புக்கன் ஆகியோருக்கு ஆ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சானாக(குருவாக) இருந்த வித்தியாரண்ய‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரா இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தந்தக் கால அரசியல் - குமுகியல் சூழல்களுக்கேற்பக் கதைகளை எழுதியவர்கள் தங்கள் சாதியினர்களின் தந்தையை வரவழைத்துக் கொண்டனர் போலும். இதுவே தந்தை என்ற உறவு குமுகத்தில் உருவாகாத குக்குல ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையை இக் கதைகள் குறிக்கின்றன என்பதற்கு வலிமையான சான்றாகும்.

            சாணார்கள் சோழ அரசனிடம் போர் வீரர்க‌‌‌ளாக இருந்ததாகவும் காவிரி உடைப்பெடுத்த போது அதை அடைக்க பிரம்புக் கூடையில் மண் சுமக்கு‌‌‌மாறு சோழன் அவர்களைப் பணித்ததாகவும் தாங்கள் கடகம்(கடவம்) எனப்படும் பனை ஓலைக் கூடையில்தான் சுமப்போம் என்று அவர்கள் மறுத்ததாகவும் தன் ஆணைக்குப் பணிய மறுத்த அவர்களின் தலைகளை யானையால் இடற முற்பட்ட போது முதல் இருவரின் அறுந்து ஓடிய தலைகள் அரசனுக்கு அறைகூவல் விடுத்ததாகவும் அதனைக் கண்டு மிரண்ட அரசன் மீதியுள்ள ஐவரையும் விடுவித்ததாகவும் வலங்கையர் கதையிலும் அகிலத் திரட்டு அம்மானையிலும் ஒரு கதை உள்ளது. வலங்கையர் கதை கூடுதலாக ஒரு செய்தி‌யை‌யும் கூறுகிறது. சோழ நாடு மழையின்றி நீண்ட வறட்சியைக் கண்டது. மழை பொழிய வைக்க அரசன் அமைச்சர்களின் அறிவுரையை நாடினான். பத்தினிப் பெண் ஒருத்தி ஆணையிட்டால் மழை பொழியும் என்று அவர்கள் கருத்துரைக்கின்றனர். பத்தினிப் பெண்களை அறிந்து தெரிவிக்குமாறு அரசன் மக்களுக்கு அறிவிக்கிறான். இந்த நிலையில் பொற்கொல்லன் ஒருவன் வீட்டினுள்ளிருந்தவாறே கிணற்றில் நீரிறைத்துக் கொண்டிருந்த தன் மனை‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வியை அழைத்தான். கிணற்றில் தான் இழுத்துக் கொண்டிருந்த தோண்டியை அப்படியே விட்டுவிட்டு அவள் வீட்டினுள் ஓடினாள். தோண்டி அவள் விட்ட நிலையில் கீழிறங்காமல் அப்படியே நின்றது. இந்தக் காட்சியைப் பனை மேலிருந்து பார்த்த பனையேறி ஒருவன் அரசனுக்குத் தெரி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வித்தான். அரசன் அந்தப் பெண்ணை அரசவைக்கு வரவழைத்து மழை பெய்ய ஆணையிடு‌‌‌மாறு வேண்டுகிறான். அரசவையில் பலர் நடுவில் தான் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிற்பதற்குக் காரணமானவனின் குலம் அழியுமாறு பெய்யாப் பெருமழை பெய்கவென்று அவள் ஆணையிட்டாள். ஆறு உடைப்பெடுத்ததும் பின்னர் நிகழ்ந்தவற்றையும் நாம் மேலே பார்த்தோம்.

            உடைப்படைக்கும் இந்தக் கதையைக் கரிகாலனோடு பொதுவாகத் தொடர்புபடுத்துவர். கரிகாலன் ஈழத்தின் மீது படையெடுத்து பன்னீராயிரம் போர் வீரர்களைச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிறை பிடித்துவந்து காவிரிக்குக் கரையமைத்தான் என்று வரலாறு கூறுகிறது. போர் வீரர்களான இவர்கள் இந்த அடிமை நிலையை எ‌‌திர்த்து நின்றிருக்க வேண்டும். இன்று கேரளத்தில் ஈழவர் என்று அழைக்கப்படும் மக்கள் இவர்கள்தாம் என்று சிலர் கருதுகின்றனர். இவர்களது தொழில் கள்ளிறக்குவதுதான். இவர்களைத் தீயர்கள் என்று பெயர் சூட்டி ஒதுக்கி வைத்திருந்தனர். தீவர்கள்(இலங்கைத் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதுதான் தீயர்கள் என்று மருவி வழங்கிற்று என்றும் கூறப்படுகிறது. காணாமை, கேளாமை போன்ற கொடுமைகளுக்கு இவர்கள் ஆளாக்கப்பட்டிருந்தனர். நாராயண குரு என்ற தலைசிறந்த தலைவர் ஒருவரின் அறிவார்ந்த முயற்சிகளின் விளைவாக அவர்கள் அக் கொடுமைகளிலிருந்து தங்களை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விடுவித்துக்கொண்டு கேரளத்தில் ஒரு வலிமையான அரசியல் ஆற்றலாக விளங்குகின்றனர். பணிக்கர் எனும் சாதிப் பட்டத்தைத் தாங்குவோர் இவர்களே. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் நாஞ்சில் .மனோகரன் இச் சாதியைச் சேர்ந்தவரே. தமிழகத்தில் இல்லத்துப் பிள்ளைமார் என்று அழைக்கப்படுவோரும் இவர்கள்தாம். ஆ‌னால் அவர்கள் கள்ளிறக்கும் தொழிலில் ஈடுபடுவதில்லை. ஈழவர்களும் தாங்களும் ஒரே பிரிவினர் என்பதையும் இவர்கள் ஏற்ப‌‌தில்லை. ஆனால் கேரளத்து ஈழவர்களுக்கும் இவர்களுக்கும் கோத்திரப் பெயர்களும், அகமண - புறமணக் கிளைப் பெயர்களும் பிற மரபுகளும் ஒன்றாகவே உள்ளன. ஈழத்துப் பிள்ளைமார் என்பதுதான் இல்லத்துப் பிள்ளைமார் என்று திரிந்துள்ளது உறுதி.

            ஈழத்திலிருந்து கரிகாலனால் ‌பிடித்துவரப்பட்டவர்கள் தமிழர்களா சிங்களர்களா என்பது தெரியவில்லை. அரசன் சிங்களனான கயவாகுவின் தந்தை. உலகில் பனை மரங்கள் செறிவு மிக்க பகுதி யாழ்ப்பாணம். யாழ்ப்பாணர்கள் தங்கள் பண்பாடே பனைப் பண்பாடு என்று கூறுகின்றனர். எனவே யாழ்பாணத் த‌மிழர்களாகவும் அவர்கள் இருக்கலாம். அதே வேளையில் ஈழத்து(இல்லத்து)ப் பிள்ளைமார் பனை ஏறுவதில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தச் சிக்கலைத் தீர்க்க கோத்திரம், அகமண - புறமணப் பிரிவுகள் மற்றும் பிற மரபுகளில் இவர்களுக்கு ஒத்தவர்களாக இலங்கையில் எந்தக் குழுவினர் உள்ளனர் என்பதை வைத்து முடிவு செய்ய இயலும்.

            வலங்கையர் கதையில் உள்ள உடைப்பு அடைக்கும் கதையின் வடிவம் வேறொரு கோணத்தைத் தருகிறது.

            அருள்மொழிவர்மனான இராசராசன் பால்குடி மறக்காத பருவத்திலேயே அவன் தந்தை இறந்து போனான். தாய் உடன்கட்டை ஏறி மாண்டாள். அவன் தமக்கை குந்தவைதான் அவனை ஒரு மாமன்னன் ஆகும் தகுதியுடையவனாக வளர்த்துவிட்டவள். அந்த அன்‌புணர்வில்தான் அவன் தன் மகளுக்குக் குந்தவை என்று பெயர் வைத்தான்.[1]
           
            இராசராசன் தன் மகள் குந்தவையைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அவளது மகனுக்கு இராசேந்திரன் தன் மகள் அம்மங்காதேவியைக் கொடுத்தான். அவளுக்குப் பிறந்த மகன் இரண்டாம் இராசேந்திரன் என்ற பெயரில் சாளுக்கிய மன்னனாக இருந்தான். இவன் இளமையில் தாய் வீடாகிய சோழ அரண்மனை‌‌‌‌‌‌‌‌‌யில் வளர்ந்திருக்கும் ‌‌வாய்ப்புள்ளது. சோழ மரபில் வந்த அதிராசேந்திரன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் சோழ அரசின் வரிக் கொடுமைகளையும் ஆகமக் கோயில்க‌ளின் வரம்பற்ற சுரண்டலையும் எதிர்த்து வலங்கை, இடங்கை என்று பிரிந்திருந்த மக்கள் ஒன்றுசேர்ந்து புரட்சி செய்தனர். கோயில்களை இடித்துப் பார்ப்பனப் பூசாரிகளைக் கொன்றனர். அரசனையும் கொன்றனர். இந்த இடைவெளியில் சாளுக்கிய மன்னனாக இருந்த இவன் குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ அரியணையில் அமர்ந்தான். இந்தப் புரட்சியிலும் அரசனைக் கொன்றதிலும் குலோத்துங்கனின் உட்கை இருந்தது என்று கருத இடமுள்ளது. தஞ்சை அரண்மனையினுள்ள அரச குடும்பத்திலும் இவனுக்கு‌ ஆதரவு இருந்திருக்கலாம்[2]. அத்துடன் அவனுக்கு இடங்கையினரான ஐந்தொழிற் கொல்லர்களில் அன்று செல்வச் செழிப்பில் இருந்த பொற்கொல்லர்களின் துணையும் இருந்திருக்கலாமென்று ஐயுற வேண்டியுள்ளது. வலங்கை, இடங்கை என்ற பிரிவின் அடிப்படை அரசு, கோ‌‌‌‌‌‌‌‌‌யில்கள் தொடர்பான பணிகளைச் செய்வோர் வலங்கையரென்பதும் வேளாண்மை, வாணிகம், கைவினைத் தொழில்களில் ஈடுபடுவோர் இடங்கையினர் என்பதுமாகும். இடங்கையினருக்கு எந்த வித அரசியல் - குமுகியல் உரிமைகளும் ‌‌‌கிடையா. இன்றைய தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு நிகரான ஒடுக்குமுறை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. அந்தப் பிரிவைச் சேர்ந்த பொற்கொல்லர்களுக்குக் குலோத்துங்கன் ஊர்க் கணக்கர் பதவிகளை வழங்கினான். இது அவர்களுக்கும் அவனுக்கும் இருந்த மறைமுக உடன்பாட்டை வெளிப்படுத்துகிறது. அந் நூலுக்கு வலங்கையர் கதை என்ற பெயர் வைக்கப்பட்டதே இடங்கைப் பிரிவைச் சேர்ந்த ஒரு வகுப்பாருக்கு உண்மையான வலங்கைப் பிரிவான தமக்குள்ள உரிமைகள் வழங்கப்பட்டு தமக்குள்ள உரிமைகள் பிடுங்கப்பட்டன என்பதை வலியுறுத்தத்தான் என்று கொள்ள வேண்டியுள்ளது. கதையில் வரும் பொற்கொல்லன் மனைவி ஒரு குறியீடாக விளங்குகிறாள். பின்னர் விசயநகரப் பேரரசை உருவாக்கிய உடன்பிறந்தோரில் இளையவ‌னான புக்கன் காலத்தில் இப் பதவிகளிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டனர். புக்கன் விரும்பிய ஒரு பொற்கொல்லர் குலப் பெண்ணை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்க அவர்கள் மறுத்ததே இதற்குக் காரண‌‌‌மாகக் கூறப்படுகிறது.

            மக்களுக்கிடையில் வேறுபாடுகளை, பகைமையை வளர விடுவது தங்களுக்கு நல்லதென்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர்‌. தங்கள் குற்றங்க‌ளிலிருந்து அவர்களது கவனத்தைத் திருப்புவதற்கு இது உதவும் என்று ‌அவர்கள் கருது‌கிறார்கள். ஆனால் இவ்வாறு வஞ்சிகப்பட்டு ஏழ்மையுற்று மனக்குறை கொண்ட மக்களைப் பற்றிக் கொண்டு அயலவர் இங்கு நுழைவது காலங்காலமாக இங்கு நடைபெறும் இயற்பாடு.

            இன்றைய தமிழினக் காவலர்கள் என்னென்‌ன சாதியினர் அல்லது மதத்தினருக்கு ‌‌என்னென்ன நன்மைகள் செய்தேன் என்று பட்டியலிட்டுக் காட்டி பல்வேறு குழு மக்களிடையில் காழ்ப்புணர்ச்சியை வளர்த்து அவர்களது கவனத்தைத் ‌திருப்பி நாட்டு மக்களின் நலன்களை விற்று பல இலக்கம் கோடிகளைச் சுருட்டுவதை நாம் பார்க்கிறோம்.

            குலோத்துங்கன் பட்டமேறியதைச் சோழ நாட்டு மக்களும் நாடு முழுவதுமுள்ள அதிகாரிகளும் படைவீரர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை. கொஞ்ச காலம் ஓர் உள்நாட்டுக் கலகச் சூழல் நில‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வியது. எதிர்த்த மக்கள் ஒடுக்கப்பட்டனர், துரத்தப் பட்டனர். அதைத் தான் யானையைக் கொண்டு தலைகளை இடறியதையும் மற்றையோரை விரட்டியதையும் பற்றிய கதைப் பகுதி கூறுகிறது.

            இந்தக் கதை பற்றிய வேறொரு விளக்கத்தையும் அண்மையில் ஓர் இதழில் இராசுக்குமார் என்ற ஒருவர் பதிந்திருந்தார். சோழ நாட்டில் வேளாண்மையைப் பேரளவில் விரிவாக்கிய கரிகாலர்கள் காலத்தில் புன்செய் நிலங்கள் பெருமளவில் நன்செய்யாக மாற்றப்பட்டிருக்கும். அங்கே பனைத் தொழில் செய்துவந்த மக்கள் அந்த விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது இயல்பு. அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள அவர்களுடன் சோழ அரசர்கள் மேற்கொண்ட ஓர் அமைதி உடன்பாட்டை இக் கதை விளக்குகிறது. இந்த விளக்கம் சிறப்பாகவே உள்ளது. சோழர் படையை எதிர்த்து நின்ற இவர்களது போர்த்திறம் அவர்களில் இருந்து சோழப் படைக்கு ஆட்களைச் சேர்ப்பதில் முடிந்திருக்கும் என்று கொள்ளலாம். வன்மம் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் வர்ம ‘அடிமுறை’ மற்போரில் எதிரியை வீழ்த்துவதில் ஒப்பற்றது. பனை ஏறும் போது தவறி விழுபவருக்கு எலும்பு முறிவு உட்பட்ட விளைவுகளுக்கு தேவைப்பட்ட மருத்துவத்தின் மூலம் மனித உடலில் எலும்பு, நரம்பு ஆகியவற்றின் கட்டமைப்பை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு மிகுதி. நரம்புகளின் கட்டமைப்பின் அடிப்படையில் உடலைத் தாக்குவதன் மூலம் மரணம் உட்பட பல தீங்குகளை எதிரிக்கு விளைவிக்கலாம். நரம்பு கட்டமைப்பில் தற்செயலாக நேரும் தாக்குதல்களால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு மருத்துவமும் செய்யலாம். குமரி மாவட்டத்திலுள்ள ‘ஆசான்கள்’ எனப்படுவோர் இக் கலைகளில் வல்லவர்கள். இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் நாடார்களே[3]          

            பனையேறிகளின் பதனீர் இறக்கும் தொழிலில் பனம் பாளையைச் சீவப் பயன்படுத்தும் அரிவாளின் பெயர் பாளை அரிவாள். மட்டை, ஓலை, நார் முதலியவற்றை அறுப்பதற்கு மட்டை அரிவாள் என்று தனியாக வைத்திருப்பார்கள். (இவ் வரிவாள்களை வைப்பதற்கு அரிவாள் பெட்டி என்ற ஒன்றை தங்கள் இடையில் அணிந்திருக்கும் வார்ப்பட்டியில் தொங்கவிட்டிருப்பார்கள்)[4]. இந்தப் பாளை அரிவாள் முகம் மழிக்கும் கத்திக்கு இணையான கூர்மை உடையது. உள்ளூர் மோதல்களில் பாளை அரிவாளைப் பயன்படுத்துவோர் பக்கமே வெற்றி என்பது சென்ற நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில் நிலைமை.

            இத்தகைய ஒரு பின்னணியில், தன்னால் வெற்றி கொள்ள முடியாத சாணார்களைச் சோழ மன்னர்கள் தங்கள் படைத் துறையில் சேர்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

            அதே நேரத்தில் கரிகாலனை குறும்பர்களை அடக்கி தன் நாட்டை விட்டுத் துரத்தினவனாகக் கழக இலக்கியங்கள் கூறுகின்றன. இவர்கள் அரச அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் குழப்பம் விளைவித்தனர். இவர்கள் குறும்பு ஆடு எனப்படும் பள்ளையாடுகளை வளர்ப்பவர்கள். வேளாண்மைக்கு இவர்களது தொழில் கேடு விளைவிப்பது. இதுவே அரசுடனான அவர்களது மோதலுக்குக் காரணமாக இருக்கும்[5].  தமக்கு அடங்க மறுத்ததால் சோழ மன்னர்கள் அவர்களை நாட்டை விட்டுத் துரத்தினர். அவர்களில் ஒரு குழுவினர் சேர நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்; இன்று குறுப்புகள் என்ற பெயரில் நாயர்களின் அடியாட்களாக இருக்கின்றனர். ‘கிருட்ணவகை’ என்ற அவர்களுடைய அடைமொழி இவர்கள் மேய்ப்பவர்கள் என்பதை உறுதிப்படுத்தும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் குறும்பர்களின் மீதுள்ள வெறுப்புணர்வு ‘குறும்பு’ என்ற சொல்லின் வழி வெளிப்படுகிறது. வள்ளுவரும்,

                        பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
                        கொல்குறும்பும் இல்லது நாடு
என்று கூறியுள்ளார்.

            இது போன்ற ஒரு பின்னணியில் சாணார்கள் சோழர்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு அவர்களது படைத்துறைக்கு வலிமை சேர்த்ததை இக் கதை குறிப்பிடுகிறது என்ற விளக்கமும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே.

கள் - கள்ளர்?
            பனை ஏறிகளாகிய சாணார்கள் எவ்வாறு அரசனுக்கு நெருக்கமானவர்களாக அல்லது படைவீரர்களாக இருந்தனர் என்ற கேள்விக்கும் விடை காண வேண்டியுள்ளது. பனை ஏறுதல் கடினமான, வெறுக்கத்தக்க ஒரு பணி. முள் போன்ற சிராய்களை ‌‌‌வெ‌ளிப்புறத்தில் கொண்ட பனை மரத்தைக் கட்டிப் பிடித்து ஏறுவதால் உடலின் முன் பகுதி, கைகள், தொடைகள், கால்கள் போன்று பெரும் பகுதியும் காய்ப்பேறி அவ் வப்போது சீவியெடுக்க வேண்டுமளவில் மிக அருவருப்பான தோற்றத்தைத் தரும். பனையிலிருந்து தவறி விழுந்தால் உடல் முடமாகும் அல்லது இறக்க நேரிடும். எனவே இத் தொழிலில் ஈடுபடுவோர் அடிமைகளாக இருக்க வேண்டும், அல்லது பிழைக்க வேறு வ‌ழியற்ற வரண்ட பகுதிகளில் வாழ்வோராக இருக்க வேண்டும், அல்லது பனை ஏறுவது மிகுந்த வருவாய் தரும் தொழிலாக இருக்க வேண்டும். இந்த மூன்று காரணிகளும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறிடங்களில் மாறி மாறிச் செயற்பட்டிருக்க வேண்டும். கழக(சங்க)க் காலத்தில் மலைப் பகுதிகளை ஆண்ட நம் குறுநில மன்னர்கள் யானை மருப்பு(தந்தம்), மிளகு, அகில் போன்ற ஏற்றுமதி மதிப்பு மிக்க பண்டங்களை அவற்றைத் திரட்டித் தரும் மக்களுக்குக் கள்ளைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டதாகக் கழக இலக்கியங்கள் கூறுகின்றன[6]. கொற்கைத் துறைமுகத்தில் கள்ளைக் கொடுத்து முத்துக் குளிப்போரிடமிருந்து முத்துக்களைப் பாண்டியன் பெற்றான் என்றும் அவை கூறுகின்றன. அந்த வகையில் கள்ளிறக்குவோர் பெரும் செல்வம் பெற வாய்ப்புள்ளது[7]. எழுதுபொருளான பனையோலையின் பெருந்தேவையை இவர்கள்தாம் நிறைவேற்ற வேண்டும். பாய்கள், தடுக்குகள், பலவகைப் பெட்டிகள், முறங்கள், கூடைகள், கடகங்கள், பேழைகள் நார்க் கட்டில்கள் என்று எத்தனையோ பண்டங்களைச் செய்யத் தேவையான பனை ஓலைகளையும் நார்களையும் பனந்தும்புகளையும் இவர்கள்தாம் வழங்க வேண்டும். கூரை வேய்வதற்கு பனைவோலை மிக முகாமையான பொருள். இவையனைத்தும் கள்ளிறக்குவ‌‌தில் துணைத் தொழில்கள்.

            கள்ளுக்கு மாற்றாக மலைபடு பொருட்களைப் பெற்று ஏற்றுமதி செய்து செல்வச் செழிப்புற்ற குறுநில மன்னர்கள் மூவேந்தர்களுக்கிடையிலான போர்களில் ஏதோவொரு பக்கத்தில் சேர்ந்து வெற்றி தோல்வியை முடிவு செய்வோராக வளர்ந்தனர். இந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையை முடிவுக்குக் கொண்டுவர மூவேந்தர்களும் சேர்ந்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிற்றரசர்கள் அனைவரையும் ஒ‌ழித்தனர். இப்போது நெருக்கடிக்குள்ளான மலைவாழ் மக்கள் மூவேந்தர்களையும் தாக்கி அரசுகளைக் கைப்பற்றினர். களப்பிரர் படையெடுப்பு அல்லது எழுச்சி எனப்படுவது இதுதான். களப்பிரர் என்பதை கள்ளர் + பிறர் என்று கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். பல வரலாற்றாசிரியர்கள் கூறுவது போல் களப்பிரர்கள் ‌‌‌வெ‌ளியி‌‌லிருந்து வந்தவர்களென்றால் ஏறக்குறைய ஒரே நேரத்தில் மூவேந்தர்களையும் வீழ்த்தியிருக்க முடியாது. தமிழ்நாட்டின் வடகோடியிலிருந்து தென்கோடி வரைக்கும் நீண்டு கிடக்கும் மலைகளிலும் அவற்றின் அடிவாரத்தில் உள்ள முல்லை நிலங்களிலும் கள் தொழில் செய்து வந்த மக்களின் தலைமையில் உருவானவர்களே களப்பிரர்களாக இருக்க வேண்டும். த‌மிழகத்தின் வடக்கில் கலிங்கம் எனப்படும் ஒரிசாவிலிருந்து ஒற்றர்களாகத் தமிழக்தினுள் நுழைந்து மலைக் குகைகளில் அம்மண முனிவர்கள் என்ற பெயரில் மறைந்து வாழ்ந்து வந்தவர்கள் இவர்களை ஒருங்கிணைத்திருக்கும் ‌‌வாய்ப்புள்ளது. அம்மணர்கள் மீது ஆளுவோருக்கிருந்த வெறுப்பு சிலப்பதி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காரத்தின் கட்டுரை காதையில் தெளிவாக வெளிப்படுகிறது.

            கள் என்ற சொல்லிலிருந்து கள்ளர் என்ற பெயர் வந்திருக்க வேண்டும். வறட்சி மிகுந்த பகுதிகளில் வாழ்ந்த கள்ளிறக்கும் மக்கள் வழிப்பறியில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. எனவே கள்ளர் என்பதற்குத் திருடர் என்ற பொருளே இன்று பரவாக வழங்கப்படுகிறது.
           
சாணார்களைப் பற்றிய கதையில் ஏழு மாதர்களுக்குப் பிறந்த ஏழு மகன்களையும் காளி வளர்த்து வந்ததாகவும் அவர்களுக்கு வைத்திருந்த பாலை ஒரு பார்ப்பானும் அவன் மனைவியும் திருடிவிட்டதாகவும் அதனால் சினந்த காளி அவர்களை ஆண் - பெண் பனைகளாகச் சபித்ததாகவும் அப் பனைகளி‌‌லிருந்து பதனீராகிய பாலை எடுத்து உண்ணுமாறு அம் மகன்களை அவள் பணித்தாகவும் கதை கூறுகிறது. பனைகளை அவர்கள் வழிபடுவதுதான் கருப்பண சாமி வழிபாடாக மாறியுள்ளது. கரும்பனை சாமி கருப்பணசாமி. காரி எனப்படும் கரிய தெய்வமாகிய திருமால் வழிபாட்டுடன் இந்த வழிபாடும் சேர்ந்‌‌திருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் திருமாலிருஞ் சோலையாகிய அழகர் மலையில் இருக்கும் தெய்வத்துக்குக் கள்ளழகர் என்ற பெயர் இருப்பது கள்ளுக்கும் அத் தெய்வத்தை வழிபடும் கள்ளர்களுக்கும் இருக்கும் தொடர்பைப் புலப்படுத்தும். அக் கோயிலில் இருக்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயிலில் இருந்துதான் கள்ளழகர் கோயில் எனும் ஆகமக் கோயில் உருவான தடயங்கள் உள்ளன.

            நாடார்கள் குடியேறியுள்ள இடங்களில் அவர்கள் சிறப்பாக வழிபடுவது பத்திரகாளி அம்மனைத்தான். சாத்தூர், சிவகாசி, விருதுநகர் போன்ற நகர்களில் இதனைச் சிறப்பாகக் காணலாம். பத்திரகாளி என்பதற்கு ஓலையுள்ள கறுப்பி என்று பொருள் கொண்டால் அது பனையையே குறிப்பதைக் காணலாம். பத்திரம் ஓலை; காளம் கறுப்பு.

            களப்பிரர்கள் அயலார் என்பதற்கு அவர்கள் சம‌‌‌‌‌‌‌‌‌‌ற்கிருதத்தைப் பரவலாகப் பயன்படுத்தினர் என்பதைச் சான்றாகக் காட்டுகின்றனர். கழகக் கால இறுதியிலேயே அரண்மனையினுள் வேள்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விகள் மூலமும் கோயில்கள் மூலமும் சம‌‌‌‌‌‌‌‌‌‌ற்கிருதம் உறுதியான இடத்தைப் பிடித்துவிட்டதைக் கழக இலக்கியங்களும் சிலப்பதிகாரமும் தெளிவாகக் காட்டுகின்றன. இலக்கியத்தில் தாராளமாகச் சம‌‌‌‌‌‌‌‌‌‌ற்கிருதத்தைப் பயன்படுத்திய ஒரு சூழ்நிலையைக் காட்டுகிறது மணிமேகலை. அது மேலும் பரவலான நிலைதான் களப்பிரர்களிடமும் பல்லவர்களிடமும் நாம் காண்பது.

            ஓர் இருநூறு ஆண்டுகள் சென்ற பின் இன்றைய தமிழக அரசு ஆவணங்களில் சிலவற்றைப் பார்த்துவிட்டு, ஒருவர் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தை ஆங்கிலர் ஆண்டனர் என்று சொன்னால் எப்படியோ அப்படித்தான் இதுவும்.

            ஆட்சியாளர்களுக்கும் பூசகர்களுக்கும் மக்களுக்குப் புரியாத ஒரு மொழி வேண்டும். அவ்வளவுதான்!

            களப்பிரர் எழுச்சி மூலம் காவிரியின் வளமான மருத நிலத்தினுள் புகுந்த கள்ளர்கள் அங்கு தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர். ஏற்கனவே அங்கிருந்த மருத நில மக்களோடு மணவுறவுகளை ஏற்படுத்திக்கொண்டு போர்களில் அரசர்களுக்குத் துணையாக நின்று படை மானியங்களையும் பதவிகளையும் பெற்றுக்கொண்டு வேளாளர்க‌‌‌ளாயினர். தொடக்கத்தில் மா‌‌லியர்களாக இருந்த இவர்கள் ‌பின்னர் அம்மணர்களாகவும் பின்னர் சிவனிய எழுச்சியின் போது சிவனிய வெள்ளாளர்களாகவும் மாறினர். அதே கால கட்டத்தில் உருவான மாலிய எழுச்சியிலும் இவர்கள் கலந்து கொண்டு மாலியம் மருத நிலத்தில் பரவ வழி வகுத்தனர்[8]. அங்கும் ஆட்சி அலகுகளாக இருந்த நாடுகளின் தலைவர்க‌‌‌ளாக இருந்தவர்கள் நாட்டார் கள்ளர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த நாட்டார் கள்ளர்களில் குலோத்துங்கனை எதிர்த்தவர்கள் இடம்பெயர்ந்து மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டாரத்தில் குடியேறினர். அவர்கள் வழிவந்தவர்கள் இன்றும் அங்கு செறிந்து வாழ்கின்றனர். தமிழகத்தின் தென்கோடியில் சாணார்களாகக் குடியேறியவர்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வந்த சில நாட்டார் கள்ளர்களும் இருந்‌‌திருக்கக் கூடும். அவர்களிடமிருந்து இந்தக் கதை சாணார்களின் வரலாற்றில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

            கரிகாலனால் ஈழத்திலிருந்து பிடித்துவரப்பட்ட போர் வீரர்களில் காவிரிக்குக் கரையமைக்கும் அடிமைப் பணியைச் செய்ய மறுத்தவர்கள் துரத்தப்பட்டு அவர்கள் சேர ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாட்டுக்கு ஓடியிருக்க வேண்டும். அங்கு அவர்கள் தீயர் என்ற பெயரில் அடிமைகளாக்கப்பட்டுக் கள்ளிறக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். பணிந்து கரையமைப்புப் பணியில் ஈடுபட்டோர்தாம் இன்று தமிழகத்தில் இல்லத்துப் பிள்ளைமார் என்று அழைக்கப்படும் ஈழத்துப் பிள்ளைகளாக இருக்க வேண்டும். இந்த இரு நிகழ்ச்சிகளும் இணைந்துதான் வலங்கையர் கதையில் வரும் நிகழ்ச்சி புனையப்பட்டிருக்கும்.



[1]இராசராசனின் தமக்கை குந்தவை பல கோயில்களுக்குத் திருப்பணி செய்தாள். ஆ‌னால் பிறர் செய்தவற்றைக் கூடத் தான் செய்ததா‌கத் தன் பட்டம் அடிக்கும் இன்றைய தமிழி‌னத் தலைவர்கள் போலின்றி அக் கோயில்களில் இருந்த பழைய கல்வெட்டுகளைப் பாதுகாத்து திருப்பணி முடிந்த பின் மீண்டும் பொருத்தி வைத்தாள்‌ என்பது குறிப்பிடத்தக்கது).

[2] இவன் பிறந்ததும் இராசேந்திரன் மனைவியாகிய இவனது பாட்டி ... இவனுடைய உடற்குறிகள் சிலவற்றை உற்று நோக்கி இவன் சூரிய குலத்துக்கு அரசனாவான் எனக் கூறி மகிழ்ந்தாள் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. பார்க்க: தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே.பிள்ளை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1981 பக்.290
[3]வெங்காளூர் குணா எனும் ‘ஆய்வறிஞர்’ இந்த ஆசான்களை பறையரில் ஒரு பிரிவினரான வள்ளுவர்கள் என்கிறார். சாதி வரலாறுகளின் போலிமைக்கு இது ஒரு சான்று.
[4] இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் உயரமான சுவர்களில் தண்ணீர் குழாய் அமைத்தல், சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவோர் தமக்குத் தேவைப்படும் கருவிகளைத் தம் இடுப்பில் கட்டப்பட்டுள்ள வார்ப்பட்டியில் சொருகிச் சுவர்களில் ஏறுகின்றனர். ஆனால் நம் நாட்டுத் தொழிலாளர்கள் அது போன்ற ஒரு பழக்கத்தை இன்றுவரை கைக்கொள்ளவில்லை. பனையேறிகளின் இப் பழக்கம் இவர்களுக்கு முன்னோடியாகக் கொள்ளத்தக்கது.
[5] மேய்ப்பவர்களின் முல்லை நிலத் தெய்வத்தை வழிபடும் மாலியத்துக்கும் சிவனியத்துக்குமான முரண்பாட்டின் அடிப்படையே இதுதான்
[6] சங்ககால வாணிபம், மயிலை சீனி.வெங்கடசாமி
[7] அண்மையில் வெளியான The Dravidian Lineages - The Nadars - A Socio-Historical Study (M.Immanuel, Historical Research & Publication Trust, 137/ H-4, Bethel Nagar, Nagercoil, 629004, 2002, பக். 179-180  )என்ற நூலில் நம் வேதங்களில் இந்திரன் போன்ற தெய்வங்களுக்குப் படைக்கவும் வேள்விகளில் சொரியவும் பயன்பட்ட கள்ளின் தேவை கள்ளிறக்குவோரின் குமுக மதிப்பை உயர்த்தியிருக்கும் என்று அதன் ஆசிரியர் கூறுகிறார்.
[8] முல்லை நிலத் தெய்வத்தின் வளர்ச்சி நிலையான திருமாலின்  அடியவர்களான ஆழ்வார்களில் ஒருவர் கூட ஆயரோ குறும்பரோ இல்லை என்பதும் திருமாலிருஞ்சோலை, திருமலை போன்ற குறிஞ்சி நிலப்பகுதிகளிலன்றி விசயநகரத்தார் காலம் வரை முல்லை நிலத்தில் ஒரேயொரு திருமால் கோயில் கூட இருந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 மறுமொழிகள்: