4.12.15

திராவிட மாயை - 7


                                             அகமுரண்பாடும் புறமுரண்பாடும்
இனி நம் மீது குறைகூறுபவர்களின் கண்ணோட்டம் என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

            எம் மீது கூறப்படும் மேலே சுட்டிய குற்றச்சாட்டு கற்றறிந்தவர்களில் பெரும்பாலோரை இன்று பற்றியிருக்கும் மாவோயியம் எனப்படும் மூன்றாம் அணிக் கோட்பாட்டில் திளைத்தவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு என்று தோன்றுகிறது. 
           
அகமுரண்பாடுதான் எப்போதும் முதன்மையானது என்ற பாடம் இவர்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது. அது மாவோவின் பெயரில் ஊட்டப்பட்டுள்ளது. மார்க்சும் ஏங்கல்சும் உருவாக்கிய இயங்கியல் பற்றிய முடிவுகள் ஏங்கெல்சின் இயற்கையின் இயங்கியல் என்ற நூலில் உள்ளன. டூரிங் மறுப்பு என்ற நூலிலும் உள்ளது அதன் சாரம்.

            இயற்கை, குமுகம், மனித சிந்தனை ஆகியவை ஒன்றிணைய முடியாத எதிரிணைகளால் இயங்குகின்றன. காந்தத்தின் முனைகள், மின்சாரத்தின் நேர், எதிர் வீச்சுகள் போன்று ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்திருக்கவும் ஒன்றையொன்று அழிக்கவும் முடியாத பகையில்லா முரண்கள் அவை. (இந்த எதிரிணைகளை தன்னிலை - thesis , எதிர்நிலை - antithesis என்ற இரண்டாக வரையறுத்தார் மார்க்சு. ஆனால் நம் பல்கலைக் கழகங்களோ பிணைநிலை - synthesis என்ற ஒன்றைப் புகுத்தி மார்க்சியத்தைக் கொன்று அதன் பிணத்தைத் தன் மாணவர்களுக்கு ஊட்டுகிறது. எதிரிணைகள் ஒன்றையொன்று அகற்றும் என்ற மார்க்சிய நிலைப்பாட்டுக்கு மாறாக அவை ஒன்றுக்கொன்று இணங்கிச் செல்ல முடியும் என்று நம்பவைக்கின்றன.) 

            இடைவிடாத மாற்றமே அனைத்தினதும் இருப்புநிலை. இயற்கையில் மாற்றம் மட்டுமே மாறாதது என்பது ஒட்டுமொத்த  இயங்கியலின் சுருக்க வாய்பாடு.  

இயங்கியல் விதிகள்:
  1. ஒன்று மற்றொன்றை ஊடுருவுதல், அதாவது ஒன்று மற்றொன்றாக மாறுதல்,
  2. அளவு மாற்றம் பண்பு மாற்றம் ஆதல்,
  3. அகற்றுவது அகலல்
என்பவை.

1.       விறகை எரிப்பதற்கு முதலில் வெப்பத்தை நாம் வழங்குகிறோம். அடுத்து விறகே வெப்பத்தை வெளியிட்டு மேற்கொண்டு விறகை எரிக்கிறது. இங்கு காரணமாக இருந்த வெப்பம் காரியமாகிறது; காரியமாக இருந்த விறகு காரணமாகிறது. நெருப்பே காரணமும் காரியமாகவும் விறகே காரியமும் காரணமுமாகவும் இங்கு செயற்படுகின்றன. இதுபோல் பிற நிகழ்வுகளையும் நாம் அலச வேண்டும்.
2.       சிறார்கள் வளர்கிறார்கள். ஒரு கட்டம் வந்ததும் அவர்களிடம் அதுவரை இல்லாத மாற்றங்கள் காணப்படுகின்றன. குழந்தை என்ற நிலையிலிருந்து இளைஞன், இளம் பெண் என்ற மாற்றத்தை அடைகின்றனர். காய் முற்றியதும் ஒரு கட்டத்தில் பழமாகிறது. நீரை சூடாக்கினால் ஒரு மட்டம் வரை வெப்பநிலை உயர்கிறது. கொதிநிலை என்ற மட்டத்தை அடைந்த உடன் நீர் ஆவியாகிறது என்று அடுக்கலாம். இவைதாம் அளவு மாற்றம் பண்பு மாற்றமாவதற்கான எடுத்துக்காட்டுகள்.
3.       மேல் கூறியபடி குழந்தையை இளைஞன் அகற்றுகிறான். இளைஞனையும் முழு மனிதன் அகற்றுகிறான், அவனைக் கிழவன் அகற்றுகிறான் .

இந்த மூன்று நிலைகளுக்கும் நீரைக் கொதிக்க வைக்கும் நிகழ்முறையையும் பொருத்த முடியும். அவ்வாறே பிறவும். இதே விதிகளை மாவோ வேறு வடிவில் சொன்னார். இயங்கியல் எதிரிணைகளின் போராட்டத்தை முரண்பாடுகள் என்ற பெயரில் எடுத்துவைத்தார். முதன்மை முரண்பாடு, முதன்மை இல்லா முரண்பாடு என்று முரண்பாடுகள் விளங்குகின்றன. முதன்மை முரண்பாடாக இருப்பது முதன்மை இல்லா முரண்பாடாக மாறி முதன்மை இல்லா முரண்பாடு முதன்மை முரண்பாடாக வரலாம் அல்லது வேறொன்று முதன்மை முரண்பாடாக வரலாம் என்பது அது. இது ஏங்கல்சு எடுத்து வைத்தவற்றின் மாற்று வடிவம் தவிர வேறில்லை என்பது தெளிவு. இது சீனத்தின் மரபுக் கோட்பாடு என்று சொல்லி இதற்குக் கீழை மார்க்சியம் என்றும் பெயர் கொடுத்தனர். மார்க்சு சொன்னதற்குப் புறம்பாக ஏங்கல்சு எழுதிவிட்டார் என்றும் குற்றம் சாட்டினர். அதாவது தாலினுக்குப் பின் உலகப் பொதுமை இயக்கத்தின் தலைமைப் போட்டியில் சோவியத்துடன் ஏற்பட்ட பகைமையின் விளைவாக இல்லாத முரண்பாட்டை இருப்பதாகக் காட்டிய மாவோயின் செயல் இது என்று கூறலாம். இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் தூதர்களாக, ஊழல் செய்து பதவியிழந்த நிக்சனும் செயலாளர் கிசிங்கரும் மாவேவைச் சந்தித்து உருவானதுதான் மூன்றாம் அணி.

இங்கு மாவோவின் பெயரால் வைக்கப்படும் கோட்பாடு எப்போதும் அக முரண்பாடுதான் முதன்மையானது என்பதாகும். இது மேலே நாம் எடுத்துக் கூறிய மாவோவின் முரண்பாடுகள் பற்றிய கோட்பாட்டுக்கு மாறானது. இதற்கு அவர்கள் காட்டும் சான்று, முட்டையை அடைவைத்தால்தான் குஞ்சு வரும், கூழாங்கல்லை அடைவைத்தால் வராது என்பது.

இதைக் கூறியவர் மாவோவா அல்லவா என்பதல்ல, இது தவறான சான்று என்பதுதான் நிலை.

பெட்டை சேவலோடு சேர்ந்து முட்டை போடுவதும் உண்டு. சேவலுடன் சேராமல் குப்பைக் குளித்து முட்டையிடுவதும் உண்டு, இப்போது கிடைக்கும் வெள்ளைக் காலன்(ஒயிட் லெகான்) முட்டை போல. அம் முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்க முடியாது.

            அது மட்டுமல்ல, சேவலோடு சேர்ந்து இடும் முட்டை கூட அடை வைத்தால்தான் குஞ்சு பொரிக்கும். முட்டைக்கு மேலே கோழி படுத்து வெப்பம் எனும் புறவிசை செயல்பட வேண்டும். அது மட்டுமல்ல, கடும் வெப்பத்தைத் தொடர்ந்து திடீரெனக் குளிர்ந்து இடியுடன் மழை பொழியும் விடை(வைகாசி), கன்னி(புரட்டாசி) மாதங்களில் அடை வைத்தால் பல முட்டைகள் கூ(ழ்)முட்டைகளாவதும் உண்டு. ஆக, புற முரண்பாட்டின் இன்றியமையாமை இவற்றிலிருந்து புலப்படும்.

            20ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு மாபெரும் பொதுமைப் புரட்சிகளிலும் புற முரண்பாட்டுக்கு அக முரண்பாட்டை விட அதிகமான பங்கு உண்டு. முதல் உலகப் போரில் வல்லரசுகள் ஈடுபட்டிருந்த நிலையில், உருசியாவும் ஈடுபட்டிருந்தது. அதன் விளைவாக உள்நாட்டில் பஞ்சமும் வறுமையும் மிகுந்தன. போர் முனையிலுள்ள வீரர்களுக்கு உரிய வழங்கல்களைத் தர முடியாத சூழல் நிலவியது. எண்ணற்ற போர் வீரர்கள் களத்தைக் கைவிட்டு உள்நாட்டில் அலைந்து திரிந்தனர். அந்தப் பின்னணியில் லெனின் தலைமையில் அமைந்த போல்சுவிக் கட்சிக்குப் போட்டியான மென்சுவிக் கட்சி 1917 பிப்ருவரியில் புரட்சியை நடத்தி பதவியைப் பிடித்து அரச குடும்பத்தையும் அமைச்சர்களையும் சிறைப்பிடித்துக் கொன்றது. இது பிப்ருவரி புரட்சி எனப்படும்.
           
இது நிகழ்ந்த போது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். புரட்சியில் பங்கேற்பதற்காக அவர் அங்கிருந்து தொடர்வண்டி மூலம் திரும்புவதற்குச் செருமன் அரசு பாதுகாப்பளித்தது என்று வரலாறு கூறுகிறது. அவர் சென்று புரட்சி முற்றினால் உருசியாவின் போர் வலிமை குன்றுமே! இதனால் லெனினை செருமனியின் கைக்கூலி என்ற குற்றச்சாட்டும் எழுந்ததுண்டு. சுற்றி இருந்த வல்லரசுகள் போரில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்ததால் உருசியாவில் தலையிட முடியவில்லை. உலகப்போர் என்னும் புற முரண்பாடு வல்லரசுகள் உருசிய அரச குடும்ப ஆட்சியாளருக்கு உதவ முடியாமல் செய்தது என்ற வகையிலும் லெனின் உருசியாவுக்கு வர உதவியது என்ற வகையிலும் புரட்சிக்குப் பயனளித்துள்ளது.

            அதே நேரத்தில் நாடு திரும்பிய லெனின் புதிதாகப் பதவியேற்றவர்கள் வாக்களித்தது போல் அரசியலமைப்புப் பாராளுமன்றம் அமைக்கவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் அவற்றை நிறைவேற்ற வேண்டுகைகளையும் வைத்து அவற்றை நிறைவேற்றவில்லை யென்றால் மீண்டும் ஒரு புரட்சி தேவை என்று பரப்பல் செய்தார். இந்நிலையில் 1917ஆம் ஆண்டில் அக்தோபர் 24ஆம் நாள் இரவில் கிரெம்ளின் மாளிகையை வளைத்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சிறை வைத்தனர் லெனின் தோழர்கள்.

            25ஆம் நாள் காலையில் உருசியாவின் அனைத்துச் சோவியத்துகளின்[1] மாநாடு நடக்க இருந்தது. பேராளர்கள் உருசியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருந்து அடுத்த நாள் மாநாட்டுக்காக வந்து சேர்ந்துவிட்டனர். போல்சுவிக் கட்சியினர் கேட்பதுபோல் இன்னொரு புரட்சி தேவையா என்பதை முடிவு செய்வதற்காகவே அந்த மாநாடு கூட்டப்பட்டது. சோவியத்துகள் பெரும்பாலும் மென்சுவிக்குகளின் பிடியிலிருந்தன.[2]

            தன்னைச் சிறைப்பிடிப்பதற்காக அரசு ஏவியிருந்த காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அரங்கினுள் உழவர்களின் பேராளர் அட்டையுடன் நுழைந்த லெனின் இரவே புரட்சி முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இரண்டாம் புரட்சி தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி, இப் புரட்சியை நாடு முழுவதும் விரிவாக்குவது எப்படி என்பதுதான் என்றிருந்த நிலைமையை விளக்கினார். பேராளர்கள் புரட்சியைத் தத்தம் பகுதிகளில் நடத்துவதற்கான அறிவுரைகளுடன் திரும்பினர். இதுதான் அக்தோபர் புரட்சி எனப்படுவது.

            லெனின் கூறிய புகழ்பெற்ற கூற்று 24ஆம் நாள் இரவு வரும் முன் புரட்சி நடந்தால் பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிடுவர். 25ஆம் நாள் விடிந்துவிட்டால் மாநாடு தொடங்கிவிடும். நம் செயல் அங்கு எடுக்கும் முடிவுக்கு மாறானதாகிவிடும். அதனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே 24ஆம் நாள் இரவுதான் பொருத்தமானது என்பது.

            படையிலிருந்து திரும்பிய போர் வீரர்கள் லெனினோடு சேர்ந்துகொண்டனர், ஏனென்றால் வாக்களித்தபடி பிப்ருவரியில் தோன்றிய புதிய அரசு போரிலிருந்து பின்வாங்கவில்லை. தத்தம் பகுதிக்குத் திரும்பிய சோவியத்துகளின் தலைவர்கள் அங்கெல்லாம் வீறார்ப்புடன் புரட்சியில் ஈடுபட்டு வெற்றியை ஈட்டினர். இதனால் இப் புரட்சியை ஆட்சிக் கவிழ்ப்பும் புரட்சியும் கலந்த ஓர் சிறப்பு நிகழ்வு என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.
           
இங்கு சார் ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வும் ஒடுக்குதலுக்குள்ளான தேசியங்களின் குமுறலும் அக முரண்பாடுகளும் உலகப் போரில் வல்லரசுகள் தங்கள் கவனத்தைப் பதித்திருந்ததும் உருசிய அரசு அப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதும் புற முரண்பாடுகளும் ஆகச் செயற்பட்டன. அக முரண்பாடு முற்போக்கான முடிவை, அதாவது புரட்சிகர மக்களின் வெற்றியை எய்துவதற்கு அதாவது மக்களின் தேசியக் கனவுகள் நிறைவேறும் திசையில் நகர்வதற்குப்                                                                                                         புற முரண்பாட்டின் இன்றி அமையாமை இங்கு குறித்துக்கொள்ளத்தக்கது.

            சீனத்தைப் பொறுத்தவரை அங்கு பொதுமைக் கட்சியை அமைத்துக் கொடுத்ததே சோவியத் உருசியாதான். அக் கட்சி படைகொண்டு சில சிற்றரசுப் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த போது உருசியப் பாணி சோவியத்துகளையே அமைத்தனர். சோவியத் உருசியாவைச் சார்ந்து இயங்குவதை எதிர்த்துத்தான் மாவோ தலைமைப் பதவியைப் பிடித்தார். ஆக, அவர் தலைமைப் பதவியைப் பிடித்ததும் ஒரு புற முரண்பாட்டைப் பயன்படுத்தித்தான். ஆனால் தாலின் இறக்கும் வரை அவர் சோவியத்து உருசியாவைச் சார்ந்தே தன் புரட்சியை அமெரிக்க அணியின் தாக்குதலிலிருந்து காத்துக்கொண்டார். அவருடைய நெடும்பயணம் அருஞ்செயல் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த நெடுஞ்செல்கையாலும் ஒன்றிய(ஐக்கிய) முன்னணி என்று தோழர்கள் புகழ்ந்து பேசும், சியாங்கே சேக் உடன் வலுக்கட்டாயமான கூட்டணியைக் கட்டியும் சப்பானியர்களை அவரால் வெல்ல முடியவில்லை. சப்பானில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசிய பின் அடிபணிந்த சப்பான் தானாகவேதான் சீனத்திலிருந்து வெளியேறியது. அமெரிக்காவின் பின்னணியுடன் சியாங்கே சேக் மாவோவின் அரசைத் தாக்கிய போது சோவியத்தின் படைத்துணை உட்பட்ட அனைத்துத் துறை உதவிகளும் இல்லாமல் அதை எதிர்த்து நின்றிருக்க முடியாது, ஏனென்றால் அப்போது இரண்டாம் உலகப் போரும் முடிந்துவிட்டது. போருக்குப் பின் அமெரிக்கா கூடுதல் வலுவுடனும் விளங்கியது. சீனத்தைப் பொறுத்தவரை புற முரண்பாடுகள்தாம் முதமைப் பங்கு ஏற்றன. அக முரண்பாடு என்பது பதவியைக் கைப்பற்றுவதாகத்தான் முடிந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், புரட்சி"க்கு முன்னும் பின் இன்றுவரையும் சீனத்தில் புற விசைகளின் கைகள்தாம் மேலோங்கி நிற்கின்றன.

            ஆங்கிலருக்கு முந்திய இந்தியாவில், நிலப்பரப்பு முழுவதற்குமான ஒரு பேரரசு இல்லை. தனித்தனி அரசர்கள் பல்வேறு பகுதிகளை ஆண்டுவந்தனர். சீனத்தில் ஒரு பேரரசர் இருந்தார். அவரை அடையாளத் தலைவர் போல் வைத்துக்கொண்டு தன்னாட்சியுடைய எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. இந்தியாவில் ஆங்கிலர் அனைத்து அரசர்களையும் வென்று ஒரே நடுவரசை உருவாக்கினர். ஆனால் சீனத்தில் போர்ச்சுக்கீசியர் தொடங்கி ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சிறப்புச் செல்வாக்கு மண்டலங்களை அமைத்திருந்தன(இன்றைய சிறப்புப் பொருளியல் மண்டலங்களைப் போன்றவை அவை. அங்கும் இவற்றைப் போலவே உள்நாட்டுச் சட்டங்கள் செல்லா. மண்டலங்களை அமைத்திருந்த நாடுகளின் சட்டங்கள்தாம் செல்லும். 19ஆம் நூற்றாண்டில் சீனத்தின் நுகர்வில் 25 நூற்றுமேனி சப்பானிலிருந்து இறக்குமதியான பண்டங்கள். 20ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதே நிலை. 19ஆம் நூற்றாண்டில் எந்த எந்த நிலைமைகளை எதிர்த்துப் போராடினார்களோ அவற்றையே இன்று வளர்ச்சியின் அடையாளம் என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். என்னே வரலாற்று விந்தை!) இவ்வாறு செல்வாக்கு மண்டலங்களை அமைப்பது போதாது, முழு நாட்டிலும் தொழில் - வாணிகம் செய்வதற்கு எல்லா நாடுகளுக்கும் உரிமை வேண்டும் என்று, காலங்கடந்து நுழைந்த அமெரிக்கா வேண்டுகை வைத்து அதனை அனைத்து நாடுகளும் பெற்றன. இதனை திறந்த வாயில் கொள்கை(Open door policy) என்பர்.

            இந்தியாவில் ஆங்கில அரசு செய்ததைப் போல் சீனத்தில் பல்வேறு சிற்றரசுகளை இணைத்து ஒரே அரசின் கீழ் யாரும் கொண்டுவரவில்லை. இந்தியாவில் பல்வேறு அரசதானிகள் தன்னாட்சியுடன் செயல்பட்டாலும் அவை நடுவரசுக்கு இணையாகவும் மேலாகவும் கல்வி, தொழில் வளர்ச்சிகள் பெற்று ஒரு விடுதலைப் போரை ஒன்றிணைந்து நடத்தும் விழிப்புணர்வை அங்குள்ள குடிமக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெற்றுவிட்டனர். சீனத்தில் அந்த வளர்ச்சி நிலை உருவாவதற்கான கால இடைவெளி கிடைக்கவில்லை. புரட்சியின் பின்னரே அந்த காலம் அமைந்தது. இந்தியாவில் காந்தியம் செய்த கேட்டை சீனத்தில் பொதுமையியம் செய்தது. இவ்வாறு புற முரண்பாடுகளின் முதன்மைப் பங்கினால் ஆட்சியில் அமர்ந்த மாவோவின் பெயரால் கூறப்படும் அக முரண்பாடுதான் எப்போதும் முதன்மையானது என்ற கோட்பாட்டை அவர்தான் உருவாக்கினார் என்பது பொருந்தி வரவில்லை. அவ்வாறு அவர் உருவாக்கியிருந்தால் அவரது சிந்தனைத் தெளிவை அல்லது நேர்மையை ஏற்றுக்கொள்வது இயலாமல் போகும். சோவியத் - சீன முரண்பாட்டின் உள்ளே புகுந்த அமெரிக்காவின் நடுவண் ஒற்று நிறுவனம் ந.ஒ.இ. - (சி.ஐ.ஏ.)யின் புனைவாகத்தான் இக்கோட்பாடு இருக்க முடியும். அதனால்தான் தமிழகத்திலும் பிற தேசியங்களிலும் உள்ள மாவோயியம் சார்ந்த தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் புறத்திலிருந்து நிகழும் பொருளியல் சுரண்டல்தான் தேசிய ஒடுக்குமுறையின் சாரம் என்பது தங்கள் மூளையில் பதியாமல், சுரண்டல் என்றாலே முதலாளியச் சுரண்டல்தான்; முதலிடுதல் என்பதே சுரண்டலுக்கான ஒரு வகைதுறை, எனவே பொருளியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் தேசியத்தைச் சேர்ந்த முதலாளிகளுக்கு எதிராக அங்குள்ள பாட்டாளியர் போராடுவது. அது தேசிய மக்களைப் பகைக் குழுக்களாகப் பிளவுபடுத்திவிடும்; எனவே மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கான போராட்டம்தான் தேசியப் போராட்டத்தின் கருவாக இருக்கும் என்று கருதுகிறார்கள் என்பது எம் மீது வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தெரிகிறது.

            மேலே தொடரும் முன் பண்பாட்டைக் காப்பதற்காகத் தேசியப் போராட்டம் நடத்துகிறோம் என்று கிளம்பியிருக்கும் தோழர்களை, அவர்கள் காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் எவையெவை என்று பட்டியலிட முடியுமா என்று கேட்கிறேன். உணவின் அடிப்படையில் மனிதர்களை மேல் கீழ் (புல்லுணவு × புலாலுணவு) என்று இருப்பதையா? வருண அடிப்படையில் அமைந்த, மரக்கட்டையில் பொம்மையை வைத்து தேர்த் திருவிழா நடத்தும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பரத்தமைத் தொழிற்கூடமாக இருந்த ஆகம வழிபாட்டையா அல்லது சாதி அடிப்படையில் அமைந்த ஊர்க் கோயில் வழிபாட்டையா? பல பெண்டாட்டிகளையும் எண்ணற்ற வைப்பாட்டிகளையும் வைத்துக் கொள்ளும் ஆடவன், பருவப் பெண் சன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தாள் என்பதற்காக அவளை உயிரோடு புதைத்தான் என்று தலைமுறைப் பெருமை பேசும் ஆண் பெண் உறவையா? தாம் அணியும் ஆடை அணிகலன்களுக்கு இணையாக எளியோர் அணியத் தடை செய்ததையா? திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று கூறுவதற்கு முன் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்றும் பார்ப்பான் தன் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் என்றும் தொழிலாலும் பிறப்பாலும் ஏற்றத்தாழ்வு கற்பித்த வள்ளுவரின் பண்பாட்டையா? திருவுடை மன்னனைக் காணின் திருமாலைக் கண்டேன் என்ற ஆழ்வார் அரசனைக் கடவுளாக வணங்கியதைப் போல் இன்றும் ஆட்சியாளரின் காலில் விழுந்து வழிபடும் அரசியல் பண்பாட்டையா? பண்டைத் தொழில்நுட்பங்களை இன்றைய அறிவியல் வெளிச்சத்தில் ஆய்ந்து அவற்றை மேம்படுத்த உறுதியாக மறுத்து அயல் தொழில்நுட்பங்கள் நுழைய வழியமைத்துக் கொடுக்கும் தமிழ் மருத்துவர், இயற்கை உழவர்கள் போன்ற படித்தவர்களின் தரகுப் பண்பாட்டையா? பிழைப்புக்கு அயல் மொழியும் மேடைக்குத் தமிழும் என்று இரட்டை உருத்தாங்கும் நடிப்புப் பண்பாட்டையா? தான் வாழும் மண்ணில் வாழும் தம் தேசிய மக்களைச் சாதி அடிப்படையில் பகைவர்களாகப் பார்த்து, தமக்கும் தம் குடும்பத்துக்கும் மேன்மை தரும் என்ற தவறான கணிப்பில் சாதி அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் அயல் மண்ணில் துணை தேடித் திரியும் சாதிய, சமயத் தன்னலப் பண்பாட்டையா? இவற்றில் எந்தப் பண்பாட்டைக் காக்க தோழர்களே தேசியப் போராட்டம் பற்றிப் பேசுகிறீர்கள்?

            அழித்தொழிக்க வேண்டிய இந்த இழிவுகூர்ப் பண்பாடுகள் அன்றி தமிழர்களிடத்தில் காப்பாற்ற எந்தப் பண்பாடு இருக்கிறது? இவற்றை அழித்துவிட்டு, நம் மரபில், நம் கண்களுக்கும் கருத்துக்கும் எட்டாமல் புதைந்தும் புதையாமலும் கிடக்கும் எண்ணற்ற அறிவியல் - தொழில்நுட்ப, குமுகியல், வரலாற்றியல் செல்வங்களை மீட்டு வளர்த்து உலகில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு, இன்றைய நிலக்கிழமைப் பொருளியல் - குமுகியல் அடிப்படையைத் தகர்த்து உள்ளிருந்தே உருவாகும் தேசிய முதலாளியப் புரட்சி ஒன்றேதான் வழி என்பதைத் தோழர்கள் உணர்வார்களா?                      

            மார்க்சைப் பொறுத்தவரை பாட்டாளியே எங்கும் எப்போதும் புரட்சிகரமானவன் என்று வைத்த முழக்கம் அவர் முன்வைத்த இயங்கியலுக்கு முரணானது. எனவே எல்லா நாடுகளும் அவை எந்தப் பொருளியல் வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தாலும் நேரடியாகப் பொதுமையியத்தினுள் நுழைவது என்ற குறிக்கோள் மார்க்சியம் என்ற மெய்யியலுக்கு எதிரானது.

            லெனின் 1905இல் எழுதிய உருசிய நிகர்மை மக்களாட்சியியத்தின் இரு போர்த்தந்திரங்கள் (Two Strategies of Russian Social Democracy) என்ற நூலில் இனி நடக்கவிருக்கும் மக்களாட்சிப் புரட்சியால் முதலாளியர்தாம் பயன் பெறுவர். ஆனால் அதன் மூலம் பாட்டாளிகளுக்கு மக்களாட்சி உரிமைகள் கிடைக்கும்; அது அடுத்துவரும் பொதுமைப் புரட்சிக்கு அவர்களுக்கு உதவும். இந்த வகையில் இறுதிவரை பாட்டாளியர் நிலையான புரட்சிகர வகுப்பாயிருப்பர். ஆனால் மக்களாட்சிப் புரட்சியில் புரட்சிகரப் பங்கு ஏற்கும் முதலாளியர் பொதுமைப் புரட்சியை எதிர்ப்பர். அதனால் அவர்களும் அவர்களுக்கு முன்பிருந்த அடிமை உடைமையாளர்கள், நிலக்கிழார்கள் போன்றவர்களும் நிலையில்லா புரட்சிகர வகுப்பினர் என்றெல்லாம் வரையறுத்தார்.

அவர் விளக்கிய இந்த மக்களாட்சிப் புரட்சியை, பாட்டாளியரின் முன்னோடிப் படையான பொதுமைக் கட்சியின் தலைமையிலான புதியவகை மக்களாட்சிப் புரட்சி என்றார். அதுதான் பின்னாளில் மாவோவின் பெயரில் புதிய மக்களாட்சி (புதிய சனநாயகம்) என்ற சொல்லுக்கு வழிகாட்டியாக இருந்தது. லெனின் அத்தகைய புரட்சித் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார். மாவோயியர்களுக்கு அச் சொல்தான் தெரியுமே ஒழிய அதன் உள்ளடக்கம் தெரியாது.

லெனினோ 1913இல் நிகர்மைப் புரட்சி பற்றி பேசினார். பொதுமையியக் கோட்பாட்டை மக்களுக்கும் தொண்டர்களுக்கும் ஊட்டி வளர்த்த இயக்கத்தால் கட்டுண்டவராக அவர் மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது.


[1] நம் பஞ்சாயங்களுக்கு இணையானவை, தோல்வியில் முடிந்த 1905ஆம் ஆண்டுப் புரட்சியின் போது தொடங்கப்பட்ட இவற்றைப் பின்னர்  பொதுமைக் கட்சிகள் வளர்த்தெடுத்தன.
[2] போல்சுவிக் என்பது பெரும்பான்மை என்றும் மென்சுவிக் என்பது சிறுபான்மை எனவும் பொருள்பட்டாலும் உண்மையில் போல்சுவிக் கட்சியின் உறுப்பினர்கள் மிகக் குறைவு. பிற்காலத்தில் லெனின்கிராடு என அழைக்கப்பட்ட பீட்டர்பர்க்கு அல்லது பெட்ரோகிராடில்தான் போல்சுவிக்குகள் கொஞ்சம் வலிமையாக இருந்தார்கள். கட்சி இரண்டாக உடைவை எதிர்கொண்ட மாநாட்டில்(1905) பேராளர்களில் பெரும்பான்மையினர் சார்ந்திருந்த பிரிவு பெரும்பான்மை எனவும் மற்றது சிறுபான்மை எனவும் அழைக்கப்பட்டதால் இந்தக் குழப்பம்.

0 மறுமொழிகள்: