12.12.15

திராவிட மாயை - 18


4.5.தமிழ்நாட்டைத் தற்குறிகள் நாடாக்கும் கருணாநிதியின் திட்டம்
         
தன்னை ஒடுக்கப்பட்ட அடிமட்டச் சாதியைச் சேர்ந்தவனென்று பொய் சொல்லி அரசியல் நடத்தும் கருணாநிதி தன் உடலில் ஓடும் பார்ப்பன - பார்ப்பனியக் குருதிக்குத் தகுந்தாற் போல் தமிழக மக்களைச் சாதிகளாக, உட்சாதிகளாக உடைக்கப் பயன்படும் ஒதுக்கீட்டை நுட்பமாகப் பயன்படுத்துவதிலும் வித்தகர். அது போல் சென்ற நூற்றாண்டில் வீறுபெற்று விடுதலை பெற்றவர்கள், இன்று போராடிக்கொண்டிருப்போர் ஆகியோரை ஓசையின்றி ஒடுக்குவதிலும் வெறியுடன் செயல்படுபவர்.

            பார்ப்பனியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று மக்களை எழுத்தறிவற்றவர்களாக்குவதும் அவர்களது தாய்மொழியை அழிப்பது அல்லது அயல்மொழிகளின் ஊடுருவலால் அதனை நடமாடும் பிணமாக்குவதும். இந்திய ஆட்சியாளர்கள் இந்தியப் பொருளியலை வல்லரசியத்தின் தொங்கு சதையாக்கி புதுப்பிக்க முடியா இயற்கை வளங்களை எல்லாம் ஏற்றுமதி செய்ததோடு நிறைவடையாமல் மனிதர்களையே ஏற்றுமதி செய்யும் வகையில் கல்வித்துறைக்கு மனித வள மேம்பாட்டுத்துறை என்று பெயரிட்டு மனித வள ஏற்றுமதி என்ற ஒரு பொருளியல் வகைத்திணையையும் அறிமுகம் செய்தனர். இதனோடு  ஒத்துச் செல்வதாக ஆங்கிலத்தை முதன்மையாகக் கொண்ட அயல்மொழிகளையும் ஆங்கில வாயில் படிப்புகளையும் உருவாக்குவது நடைமுறைக்கு வந்தது. ஆக இத்தகைய கல்வி நிலையங்களை உருவாக்குவது இன்றியமையாததாகியது. இதில் தனியார் எனப்படும் மக்களுடைமை நிறுவனங்கள் நுழைந்தன. இக் கல்விகளை அரசே மேற்கொண்டு செய்திருக்கலாம். ஆனால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற மாயமானைக் காட்டி எவ்விதமான உளைச்சலுமின்றி பெருமளவு பணத்தை மக்களிடமிருந்து கறக்கக் கிடைக்கும் வாய்ப்பை எவ்வாறு புறக்கணிப்பது? எனவே சாதிகள் பெயரில், சிறுபான்மையர் என்ற பெயரில், அறக்கட்டளைகள் என்ற பெயரில் எண்ணற்ற ஆங்கில வாயில் பள்ளிகள், மெட்ரிக் என்ற பதினமுறை பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவற்றுக்கு அரசின் ஒப்புதலைப் பெறும் சிக்கலான ஒரு நடைமுறையில் நயன்மைத் துறையினர், வழக்கறிஞர்கள், ஆட்சியாளர்கள் என்ற கூட்டணிக்கு நல்ல அறுவடை. அதுமட்டுமல்ல, கட்டணங்கள் என்றும் பிழைகள்(அபராதம்) என்ற பெயரிலும் மாணவர்களை இப் பள்ளிகள் கறந்துவிடுகின்றன. மக்களின் முறையீட்டின் பெயரில் தமிழீனத் தலைவர் அமைக்கும் கமிசன்கள்” (ஆணையம், தரகு என்ற இரு பொருட்களையும் தரும் இச் சொல் எத்தனை பொருத்தமாக அமைந்துள்ளது பாருங்கள்!) கட்டைப் பஞ்சாயம் பேசி, நடைமுறைப்படுத்த எண்ணாத விதிகளைப் பிறப்பித்துவிட்டுப் பைகளை நிரப்பித் தருகின்றன.

            நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காகத் தொடங்கியவை மழலையர் பள்ளிகள். அதற்கு அடுத்த கட்டமாக உருவானவை குழந்தைக் காப்பகங்கள். இவற்றில் முதலாமவற்றைத் தனியார் தொடங்கி நல்ல அறுவடை செய்கின்றனர். குழந்தைகள் காப்பகத்தை பால்வாடி, அங்கன்வாடி என்ற பெயர்களில் ரசே நடத்துகிறது.

            மழலையர் கல்விக்கு நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது போல் குழந்தைகள் உளவியல் அறிந்தவர்கள் ஆசிரியராக வேண்டும். குறைந்தது இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவராவது வேண்டும்.  ஆனால் தனியார் பள்ளிகளில் வெறும் பட்டப்படிப்பு படித்த பெண்களை மிகக் குறைந்த சம்பளத்தில் அமர்த்துகிறார்கள்.

            அது மட்டுமல்ல, உயர்நிலை, மேனிலைப் பள்ளி மட்டங்களில் கூட உரிய தகுதியுடைய ஆசிரியர்கள் அவர்களுக்குரிய சம்பளத்தில் அமர்த்தப்படுவதில்லை. மாணவர்கள் தனிப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பள்ளி நேரத்துக்கு மேல் பள்ளிகளில் பிடித்து வைத்து அங்குள்ள ஆசிரியர்களைக் கொண்டே பாடங்கள் நடத்தி அதற்கென்று கட்டணமும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கு அதற்கென்று கூடுதல் சம்பளமோ படியோ கொடுப்பதில்லை. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள சூழலில் படிக்கும் மாணவர்கள் இந்தச் சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களோடு தேர்வுகளில் போட்டியிடும் அளவுக்குத் திறனை வெளிப்படுத்துகிறார்கள், அதாவது ஏழை மாணவர்கள் இயற்கையான திறன்களுடன் தங்கள் எதிர்காலம் ஒளிபெற வேண்டும் என்ற ஊக்கத்துடன் உழைத்துப் படிக்கிறார்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

            இதனைப் பொறுத்துக் கொள்ள முடியுமா பார்ப்பன - பார்ப்பனிய மரபில் வந்த கருணாநிதிக்கும் சென்ற தலைமுறையில் இன்றைய ஏழைகளின் நிலையில் இருந்து படித்து உயர்நிலை எய்தி  பார்ப்பனிய மனப்பான்மைக்குள் நுழைந்துவிட்ட அதிகார வகுப்புக்கும். எனவே ஐந்து வகுப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிக்கு ஒரே ஆசிரியர் கொண்ட ஓராசிரியர் பள்ளிகளை உருவாக்கியும் ஓய்வுபெற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் அவற்றையும் ஓராசிரியர் பள்ளி நிலைக்குத் தாழ்த்தியும் அரசுப் பள்ளிகளின் செயல்திறனை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதனோடு, அதுவரை ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என்றிருந்ததை தமிழீனத் தலைவர் 1:40 என்று பாதியாகக் குறைத்தார். அதை 1:60 என்று குறைக்க முயன்ற செயலலிதா கடும் எதிர்ப்பால் நிறுத்தி வைத்தார். இந்தத் தனியார் பள்ளிகளாயினும் அரசுப் பள்ளிகளாயினும் மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்பதற்கு எதிராக குறைவான ஆசிரியர் - மாணவர் விகிதத்துடன் மாணவர்களின் அகவைக்கு மிஞ்சிய பாடச் சுமையைக் கொண்ட பாடமுறையைச் சுமத்தியுள்ளன. அது மட்டுமல்ல, அன்றாடம் நடக்க வேண்டிய பாட வகுப்புகளின் நேரப் பட்டியலை(Time table) பின்பற்றாமல், தங்கள் விருப்பத்துக்குப் பாடங்களை நடத்துகின்றன. எனவே அனைத்துப் பாடநூல்களையும் வழிகாட்டிகளையும் அவற்றுக்குரிய குறிப்பேடுகளையும் கொண்டுவருவதைக் கட்டாயமாக்கியுள்ளன. இதனால் பேருந்துகளில் இம் மாணவர்கள் சுமக்க இயலாமல் முதுகு வளையக் கொண்டுவரும் புத்தகச் சுமைகள் மனிதர்களை விட மிகுதியான இடத்தை அடைப்பவையாக மாறிவிட்டன. ஒட்டுமொத்தப் பயன் நம் மாணவர்கள் பாடப் புத்தகத்தின் ஒரு பத்தியைக் கூட முழுமையாக மனதில் வாங்கிக் கொள்ளாமல் கேள்வி வங்கியில் தரப்படும் வினா - விடைகளை விழுங்கிக் கக்கும் பிட்டுக் குழல்களாகவும் புறநிலை(Objective)க் கேள்விகள் எனப்படும் சூதாட்டத்தை நம்பித் தேறியவர்களாகவும் வெளிவருகின்றனர்.

            அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தோடு களமிறங்கிய பனியா - பார்சி நடுவரசு ஒதுக்கிய பணத்தில் கொஞ்சத்தை தொகுப்பூதியத்தில் ஒப்பந்தமுறை ஆசிரியர்களை அமர்த்தியும் பள்ளியின் தேவையைக் கருத்தில் கொள்ளாமல் பள்ளி வளாகத்தில் கிடைக்கும் இட வசதியைப் பயன்படுத்திக் கட்டடங்களைக் கட்டியும் சுற்றுச் சுவர்கள் எழுப்பியும் பெருமளவு தொகையை ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகளென்று போக்குவரத்திலும் சாப்பாட்டுக்கும் என்று செலவு காட்டியும் அழித்தனர். இந்தக் கட்டுமானப் பணிகளை, பள்ளிக் கட்டுமானங்களை மேற்கொள்ளும் பொதுப் பணித்துறையிடம் ஒப்படைக்காமல் கட்டுமான நுட்பம் அறியாத தலைமை ஆசிரியர்களின் தலையில் கட்டிவிடுகின்றனர்.

            அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகையான கல்வி வழங்குதல் என்ற முழக்கத்துடன் சமச்சீர் கல்வி என்று கூறி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு முன்னாள் பல்கலைக் கழக துணைவேந்தரைக் கொண்டு ஓராள் ஆணையம் ஒன்றை அமைத்து ஊரெல்லாம் சுற்ற வைத்துப் பேரிகை கொட்டினர். இறுதியில் இ.ஆ.ப. அலுவலர் ஒருவரைக் கொண்டு ஒரு வழிகாட்டி நெறியை உருவாக்கி ஒருதலையாக செயல்முறைக் கல்வி என்று ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் ஏதோ அட்டைகளை வைத்து குழந்தைகள் மனப்படம் வரைதல் என்று ஏதேதோ குழப்புகின்றனர். மூன்றாம் வகுப்பு வரை எழுத்து சொல்லிக் கொடுக்கப்பட மாட்டாது. 8ஆம் வகுப்புவரை தேர்வு கிடையாது. அதாவது குறைந்தது 13 அகவை அடையும் போது தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எழுதப்படிக்கவும் தெரியாமல் எந்தச் செயல்திறனும் இல்லாமல் முடமாக்கப்பட்டவையாய் இருக்கும். ஆங்கிலக் கொடுங்கோலர்கள் தென்னாப்பிரிக்காவிலும் சிம்பாபுவேயிலும் கறுப்பினக் குழந்தைகளுக்கு கைகால் மூட்டுகளில் பூண்கள் மாட்டி முடமாக்கியதை விடவும் கேடுபயக்கும் முறையாகும் இது. இந்தப் புதிய “கல்வி(யில்லா)த் திட்டத்”தை மாநில அரசுப் பள்ளிகள் பின்பற்ற  வேண்டும் என்பது இதில் சிறப்பாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, ஆட்சியாளர் கும்பலும் அவர்களுக்கு வேண்டியவர்களும் நடத்தும் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழைக் குழந்தைகள், பயனற்ற அரசுப் பள்ளியில் படிப்பதைத் தவிர்த்து உடலுழைப்பாவது அப் பருவத்தில் கற்றுக்கொள்ளலாம் என்று இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல் ஏன், 1950க்கு முன்பிருந்ததைப் போல் தற்குறிகளாகவே (தன் குறியாகிய கைநாட்டு இடுபவர்களாகவே விளக்கம் - திரு.வெள்ளுவன்) இருந்து விடலாம் என முடிவு செய்வது தவிர்க்க முடியாது.

            அது போல், வெளிநாடுகளில் இலக்கக் கணக்கில் சம்பளம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் காடு - காணிகளை, நில - புலங்களை, வீடு - மனைகளை விற்று கடன் உடன் வாங்கிப் பிள்ளைகளை உயர்படிப்புகள் படிக்க வைக்கின்றனர் வாய்க்கும் வயிற்றுக்குமாக வாழும் பெரும்பாலான பெற்றோர். இப் பிள்ளைகளில் பெரும்பாலோர் படித்து வளாக நேர்காணல்களில் புறக்கணிக்கப்பட்டு சென்னை, வெங்காலூர் போன்ற பெரும் புலனத் தொழில்நுட்ப நடுவங்களுக்குச் சென்று அங்கு பிழைக்க வந்திருக்கும் நண்பர் ஒருவரது அருளில் உண்டு படுத்து வேலை தேடிக் களைத்து கிடைத்த வேலையைப் பார்த்து, வேறெதுவும் செய்யத் தோன்றாமல் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அல்லது ஊருக்குத் திரும்பி தெருச்சுற்றுவதாக புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு  தலைமுறை அடுத்த தலைமுறையில் தன் குழந்தைகளின் கல்வி குறித்து என்ன நிலை எடுக்கப் போகிறது? பள்ளிப் படிப்பே வேண்டாம், ஏதாவது கூலித் தொழில் செய்து பிள்ளைகள் பிழைக்கட்டும் என்று விட்டு விடப் போகிறார்களா? இது போன்ற போக்கற்ற நிலைக்குக் கல்வியைக் கொண்டு வந்துவிட்டதில் கருணாநிதிக்கு முகாமையான பங்குண்டு. பிற மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் கல்வி பெற்றோர் விகிதம் தமிழ்நாட்டை விட மிகக் குறைவு. எனவே கல்வி குறித்த இத்தகைய ஓர் எதிர்நிலை உணர்வு அம் மாநிலங்களை விடத் தமிழகத்தில் மிகுதியாக உருவாக வாய்ப்பிருக்கிறது.

            ஒரு பக்கம் புத்தகம் தேவையில்லாத ஒரு கல்வி முறையை உருவாக்கிச் செயற்படுத்தத் தொடங்கியும் அதே பள்ளிகளுக்கு பாடநூல் நிறுவனத்தின் மூலம் பாட நூல்களைப் பள்ளிகளுக்கு விடுத்துக் கொண்டிருக்கிறது வித்தகரின் அரசு. அதில் பார்க்க வேண்டிய துட்டைப் பார்த்துவிடலாமல்லவா?

            இந்த சமச்சீர் கல்வியைக் அரசுப் பள்ளிகள் தவிர்த்த பிற பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமில்லை. எனவே அப் பள்ளிகளில் தம் குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்பும் பெற்றோர் எப்பாடு பட்டாவது ஆட்சியாளர்களும் அவர்களுக்கு வேண்டியவர்களும் நடத்தும் தனியார் பள்ளிகளுக்காகத் தங்கள் பிள்ளைகளை விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

            இவ்வாறு அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பை அழித்து தான் சார்ந்த கும்பலுக்குப் பணம் குவிக்கும் இன்னொரு துறையாகக் கல்வித் துறையைச் சீரழித்தவர் தமிழீனத் தலைவர், உலகின் ஒப்பற்ற ஊழல் வித்தகர் கருணாநிதியாகும்.

0 மறுமொழிகள்: