27.11.15

இராமர் பாலப் பூச்சாண்டி - 8


பின்னுரையாக….

            பாம்பன் பாலத்தின் அடியில் இப்போது படகுகளும் சிறு கப்பல்களும் செல்லும் பாதையை விரித்து ஆழ்த்தி இரு பக்கங்களிலும் உள்ள பாலத் தூணங்களையும் தொங்கு பாலத்தையும் மாற்றி ஒரு மாற்றுத் தடத்தை உருவாக்கி கால்வாய்ப் பணியைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர் பா.ச.க.வினர். இன்னும் ஒன்றேகால் ஆண்டுக்குள் அதாவது 2016இல் நடைபெற இருக்கும் தமிழக ச.ம. தேர்தலைக் குறிவைத்துத்தான் தமிழின் மீதும் தமிழகத்தின் மீதும் பா.ச.க.வினருக்கு வந்திருக்கும் இந்த திடீர்ப் பாசமும் கரிசனையும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களல்ல தமிழக மக்களும் பொழுது விடிந்தால் பொழுது வீழ்ந்தால் உயிர் - உடைமை இழப்புகளை எதிர்பார்த்துப் பதைத்து நிற்கும் தமிழக மீனவர்களும். ஆனால் முதல்வர் நாற்காலிக்காக வாயைப் பிளந்து காத்திருக்கும் குமரி அனந்தன் மகளைப் புறந்தள்ளி தெலிங்கானாவிலிருந்து பா.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுவில் அமைச்சராக்கப்பட்டிருக்கும் நிர்மலா சீதாராமனை பா.ச.க.வின் தமிழக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது. ஆமாம், தலைமை அமைச்சருக்கென்றோ முதல்வருக்கென்றோ வேட்பாளரை முன்னிறுத்துவது இந்திய அரசியல் சட்ட அடிப்படைக்கு முரணில்லையா?

            தமிழகத்துக்கென்று திட்டங்களை அறிவிப்பதும் ஆயத்தப் பணம் ஒதுக்குவதும் பின்னர் பிற மாநிலத்தவரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஓசைப்படாமல் அங்கு செயற்படுத்துவதும் அல்லது கிடப்பில் போடுவதும் கைவிடுவதும் தமிழக, நடு ஆட்சியாளர்களின் வழக்கம் என்பது தமிழக மக்கள், குறிப்பாக கடலோர மக்கள் அறிந்துள்ள நடப்புகள். குறிப்பாக குளச்சல் துறைமுகம், சேதுக் கால்வாய் எனப்படும் தமிழன் கால்வாய், குமரி மாவட்டத்தில் நடுவரசின் விளையாட்டுத் துறைத் திட்டம் போன்றவற்றை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதனால்தான் நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம், நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்றே கிடைக்கும் களாக்காய் நமக்குப் போதும். பொய்யும் போலியுமான காரணங்களையும் கூறி மக்களின் மதவுணர்வுகளைத் தூண்டும் முயற்சியாக பா.ச.க.வும் அதை எதிர்கொள்ள வேறு வழியின்றியும் கருணாநிதி பெயரைத் தட்டிச்சென்று விடக்கூடாது என்று செயலலிதாவும் இல்லாத இராமர் பாலத்தைப் பிடித்துத் தொங்க கொழும்புத் துறைமுகமும் விழிஞம் துறைமுகமும் கொடுத்த அழுத்தத்தால் கருணாநிதி உட்பட அனைவரும் வாயடைத்துக்கொள்ள நின்று போன தமிழன் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற விட்டுக்கொடுப்பில்லாப் போராட்டத்தை இன்றே இப்பொழுதே தொடங்குவோம். அதையும் தமிழக மக்களின் பங்கு மூலதனத்தைக் கொண்டு நிறைவேற்றப் போராடுவோம். அந்த முதலீட்டுக்கு வருமான வரி விலக்கு கேட்டும் போராடுவோம். மீண்டும் முழங்குவோம்,
வருமான வரியை முற்றாக ஒழிப்போம்!
ஒன்றிணைவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
வெல்க தமிழ்!
                                                வளர்க தமிழகம்!                                                 
                                                                                                                              அன்புடன்
குமரிமைந்தன்
திருமங்கலம்,
13 – 12 - 2014

0 மறுமொழிகள்: