7.1.08

தமிழ்த் தேசியம் ... 25

மனந்திறந்து... 15

குணாவின் ″திராவிட″ எதிர்ப்பு, அதாவது தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் மக்கள் மீதான எதிர்ப்பை ஓரளவுக்கு மேல் பெருஞ்சித்திரனாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இறுதி நாட்களில் குணாவின் கோட்பாட்டை அவர் எதிர்த்தார் என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் திருமண உறவுகளில் இரு தலைமுறைகளில் பிறமொழியாளர் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதும் காரணமாகலாம். இதில் வியப்பதற்கொன்றுமில்லை. தனித்தமிழ் இயக்கத்தில் தெலுங்கையும் கன்னடத்தையும் தாய்மொழியாகக் கொண்ட தமிழக மக்கள் ஆற்றியுள்ள தொண்டைப் பெருஞ்சித்திரனாரைத் தவிர வேறெவர் முழுமையாக உணர்ந்திருக்க முடியும்? தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தில் தமிழ் மொழியை ஒரு தேசிய அடையாளமாகக் கொண்டு இவர்களெல்லாம் இயங்கினர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. இன்று அந்தத் தேசியப் போராட்டம் தொய்வடைந்து திசைமாறிப் போனதால் அம்மக்களும் தடம் மாறி நிற்கின்றனர்.

தமிழகத்தின் உட்பகுதியிலும் எல்லைகளிலும் வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் கொஞ்ச காலமேனும் பிற மக்கள் மீது அரசியல் வழி ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அந்த ஆதிக்கவுணர்வு இன்றும் தொடர்கிறது. தமிழ் பேசும் மக்களிடையில் நிலவும் சாதி சார்ந்த ஆதிக்க உணர்வுக்கு ஒப்பானதாக இதைச் சொல்லலாமாயினும் மொழி அடிப்படையில் சாதி ஆதிக்கத்தை விட இது கூடுதல் வலிவுடையதுதான். அது போன்றே முகம்மதிய, கிறித்துவ சமயங்களைச் சார்ந்த ஆதிக்க உணர்வும். இவற்றையும் எதிர்க்க வேண்டியது தான். ஆனால் அது நம் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த முகாமையான உள்முரண்பாடு ஒரு தீர்வை எய்தும்.

குணாவின் நடைமுறை இந்த வகையில் திசைதவறிப் போய்விட்டதாகத் தெரிகிறது. கர்நாடகத் தமிழர் சிக்கல் முற்றத் தொடங்கிய காலத்தில் அவரிடம் இது பற்றி நான் பேசியிருக்கிறேன். அப்போது, வெங்காலூருக்கு வெளியே கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் வாழ்கிறார்களா என்று கேட்டேன். மாநிலம் முழுவதும் உழுதொழிலாளர்களாக நிறையப்பேர் இருப்பதாக அவர் கூறினார். ஏன் அவர்களையும் இணைத்துக்கொண்டு நீங்கள் போராடக்கூடாது என்று கேட்ட போது ″அது எங்கள் வேலையில்லை″ எனப் பட்டென்று அவர் கூறியதைக் கேட்க எனக்கு அதிர்ச்சியாயிருந்தது.

வெங்காலூர்த் தமிழர் சிக்கலையும் ஈழத்தமிழர் சிக்கலையும் திருவிதாங்கூர்த் தமிழ் மக்கள் சிக்கலையும் ஒப்பிட்டுக் குணாவுக்கு ஒரு மடல் எழுதினேன். திருவிதாங்கூரில் மலையாளம் ஆட்சிமொழி. குமரி மாவட்டப் பகுதியில் கட்டாய இலவயக் கல்வி மூலம் ஏறக்குறைய எல்லோரும் தமிழ் வழியில் எழுத்தறிவு பெற்று வந்தனர். எனவே வேலைவாய்ப்புக்குத் தமிழகத்தோடு இணைவது ஒன்றே தான் வழி என்ற உள்ளுணர்வின் உந்தலில் தான் அவர்கள் உரிய வேளையில் போராடி ஓர் அரைகுறை வெற்றியையாவது பெற்றார்கள். ஈழத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாயிருந்ததாலும் ஆங்கிலம் படித்த தமிழ் மேட்டுக்குடியினரே இலங்கை முழுவதும் மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளிலும் பெரும் பதவிகளில் இருந்ததாலும் அவர்கள் ஆங்கிலர் அகன்ற பின்னரும் இந்நிலை தொடரும் என்ற மிதப்பில் தமிழர்களின் உரிமைகளைக் காக்க உரிய வகையில் முயலவில்லை என்பது மட்டுமல்ல தங்களுக்கு உற்ற துணையாய் விளங்கத்தக்க ″இந்திய″மரபுவழித் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்கக் காரணமாயிருந்து தம் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டனர். இறுதியில் தரப்படுத்தல் என்ற நேரடித் தாக்குதல் வரவில்லையெனில் இன்றைய போர் உருவாகியிருக்க முடியாது. அது போல் கர்நாடகத்திலும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. வெங்காலூர் மற்றும் தங்க வயல் தமிழர்கள் நல்ல பதவிகளில் இருந்தனர். மாநிலச் சீரமைப்புக்குப் பின்னும் அதே நிலை நீடிக்கும் என்ற மிதப்பில் வெங்காலூர் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் இருந்துவிட்டனர். வெங்காலூரில் பெருகிவந்த கன்னடக் குடியேற்றத்தையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்று சிறுபான்மை நிலையை எய்திவிட்ட பின் தமிழகத்தோடு இணைக்கக் கேட்பதும் பயன்தராது. எனவே மாநிலத்திலுள்ள தமிழர்களை அணிதிரட்டி கர்னாடகத் தேசியப் போராட்டத்தின் மூலம் மொழிச் சிறுபான்மையர் உரிமைகளைக் காத்துக் கொள்வதே சிறந்த தீர்வு என்று நான் எழுதினேன். இந்திய மாநிலங்களின் தேசிய உரிமைப் போராட்டக் கோட்பாட்டை அவர் வலியுறுத்தி வந்த நேரம் அது.

முகம்மதியத்துக்கும் கிறித்துவத்துக்கும் தமிழக ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறியமை புரட்சிகரமான நடவடிக்கைகள், இன்றும் மதமாற்றம் அத்தகைய புரட்சிப் பங்கை ஆற்ற முடியும் என்று ஒரு நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார். மதமாற்றத்தை முதன்முதலில் ஏற்றுக் கொண்டவர்கள் மேட்டுக்குடியினர்தாம். மதத்தைக் கொண்டுவந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் முன்பும் கைப்பற்றிய பின்பும் தங்கள் பிடியை வலுப்படுத்திக் கொள்ளத்தான் ஒடுக்கப்பட்ட மக்களை மதம் மாற்றினர். உண்மையில் நம் மக்களிடையில் உள்ள சாதிய ஒடுக்குமுறையினால் நாம் வலுவிழந்து அயலார் முன் வீழ்ந்நு விட்டதால் ஏற்பட்ட மாறாத வடுக்களே, சீழும் குருதியுமாகப் பொங்கி வழிந்து நம் உள்ளாற்றலை உருக்கி அழிக்கும் புண்களே அயல் சமயங்களாக நம் மக்களிடையில் நிலவுகின்றன. நம் தேசிய உரிமைப் போராட்டத்தின் ஊடாக நம் மெலிவுக்குக் காரணமான சாதியக் கொடுமையை ஒழித்து இந்த அயல் சமயத் தொடர்புகளை உதறித்தள்ள வேண்டுமென்று நான் எழுதினேன்.

இவையனைத்தும் குணாவுக்குப் பிடிக்கவில்லை போலும். மறுப்பு மடல்கள் என்று எப்போதும் அவர் எனக்கு எழுதியதில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் எனக்கு மடல் எழுதுவதையே நிறுத்திவிட்டார். தான் எழுதிய நூற்படிகளை விடுப்பதையும் நிறுத்திவிட்டார். ஆனால் நான் எழுதும் கட்டுரைகளில் அவர் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் கருதுவனவற்றை வழக்கம் போல் அவருக்கு விடுத்துவந்தேன். சில மடல்களும் எழுதினேன். திராவிடத்தால் வீழ்ந்தோம் நூற்படியை எனக்கு விடுத்ததுதான் நெடுநாட்களுக்குப் பின் அவரிடமிருந்து எனக்கு வந்த ″தொடர்பு″. திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் என் கட்டுரையை மேற்கோள் காட்டியது பெரியார் மீது தான் வைக்கும் திறனாய்வு குறித்து என்னை ஒரு கவசமாகக் கருதித்தான் என்று நினைக்கிறேன்.

குணா வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெறுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததுண்டு. பஃறுளி முதல் வையை வரை நூல் வெளியீட்டிலும் அத்தகைய பணம் பயன்பட்டிருப்பதாகத் தெரிகிறது. குணா இக்குற்றச்சாட்டை மறுப்பதில்லை. தமிழகத் தேசிய விடுதலைக்கு எத்தகைய உதவி கிடைத்தாலும் ஏற்பதில் தவறில்லை என்பது அவரது கருத்து. ஆனால் தேசிய விடுதலைப் போர்களுக்குத் தடங்கலாக ஏதோவொரு வழியில் அவரது அணுகல்கள் உதவும் என்ற நம்பிக்கையில்லாமல் இந்த உதவிகள் கிடைக்கா.

குணா உணர்ச்சி வேகம் மிக்கவர். தமிழகத் தேசிய விடுதலையை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற துடிப்பு, வெறி அவருக்கு இருந்தது. நாடார்கள் தமிழகத் தேசிய முதலாளிகள் என்ற எண்ணத்தில் பணம் படைத்த நாடார்களை அணிதிரட்ட முடியுமா என்று ஒருமுறை கேட்டார். இவை போன்ற முயற்சிகள் வெற்றிபெறாத பதற்றத்தில் அவர் இருந்தபோதுதான் கர்நாடகத் தமிழர்களின் இன்னல்கள் அவரை நிலைதடுமாற வைத்தன. இன்று, தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற ஓர்மையை அவர் இழந்து நிற்பதாக எனக்குப் படுகிறது.

பதற்றத்தில் அவர் மேற்கொண்டுள்ள அணுகல் கர்னாடகத் தமிழர்களுக்கோ தமிழக மக்களுக்கோ நன்மை தருவதாக இல்லை. கர்நாடகத் தமிழர்கள், குறிப்பாக வெங்காலூர்த் தமிழர்கள் தாங்கள் இழந்துவிட்ட பெரும்பான்மையை மீட்க முடியுமா?[1] மீட்டுத் தங்கள் நிலப்பரப்பைத் தமிழகத்துடன் இணைக்க முடியுமா? அவ்வாறு மீட்க வழியிருந்தால் அதை எவ்வாறு திட்டமிடுவது? மீட்க வழியில்லையாயின் கர்னாடக மாநிலத்தினுள் தங்கள் உரிமைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? அதற்கு மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் துணையை அல்லது தமிழக மக்களின் துணையை எவ்வாறு பெறுவது? தமிழக மக்களோடு கர்னாடக மக்கள் எவ்வாறு உறவு கொள்வது? அந்த உறவு எப்போதும் ஒரே சீராக இருக்குமா? காவிரி நீர்ச் சிக்கல் போன்று இரு மாநிலங்களுக்கும் இடையிலான சிக்கல்கள் மேலெழுந்து வரும்போது கர்நாடகத் தமிழர் இவ்விரு மாநிலங்களில் எம்மாநிலத்து நலன் சார்ந்து நிற்பது அவர்களது நலன்களுக்கு உகந்தது? அது போன்ற சமயங்களில் தமிழக மக்களுக்கும் கர்நாடகத் தமிழர்களுக்கும் இடையிலான உறவில் மாற்றம் நிகழாதா? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.

குணா சொன்னவற்றில், தமிழக மக்களுக்கும் கர்நாடகத் தமிழர்களுக்கும் திராவிட இயக்கம் இரண்டகம் செய்து விட்டது என்ற கருத்து சரிதான். அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் கூறாமல் கர்னாடக மாநிலம் தமிழர்களின் நிலமாக இருந்தது என்ற ஆய்வினுள் புகுந்துவிட்டார். வரலாறு தேவைதான். அப்போதுதான் தங்கள் உரிமைப் போராட்டத்துக்கான ஞாயத்தை அம்மக்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கருநாடகத்துக்கான அதே ஆய்வைத் தமிழகத்தினுள் புகுத்தும்போது சிக்கல்கள் வருகின்றன. இங்கு தமிழ் பேசுவோரும் பிறரும் இணைந்து நின்று போராட வேண்டிய தேசியத் தேவை உள்ளது. நிலவுகின்ற ஆதிக்கங்களை ஒழிக்க வேண்டிய ஒரு போராட்டத்தை அதனூடாகவே நடத்த வேண்டியுள்ளது. ஆனால் குணாவின் அணுகலைப் பிடித்துக்கொண்டு இங்கு ஏற்கனவே மக்கள் மீது ஆதிக்கம் செலுத்திவரும் சில தமிழ் பேசும் குழுக்கள் தங்கள் சாதி ஆதிக்கத்தை மறைத்து மக்களைத் திசை திருப்ப முயல்வதுடன் தமிழகத் தேசிய உரிமைப் போராட்டத்தைத் திசைதிருப்பி தேசிய மக்களிடையில் மொழி அடிப்படையிலான கலவரமாக மாற்ற முயல்கின்றன. முன்பு ஆரிய ″இன″க் கோட்பாட்டை வைத்து பெரியார் தமிழகத் தேசியப் போராட்டத்தை எப்படி திசைதிருப்பினாரோ, எப்படி அவர் முதுகின் பின்னே மறைந்து நின்று பார்ப்பனரில்லா மேல்சாதியினர் தங்கள் சாதிவெறிக்கு ஆரியச் சூழ்ச்சிதான் காரணமென்று கதையளந்தார்களோ அதுபோல இன்று பிற்பட்ட சாதிகளைச் சார்ந்த சில சாதிவெறியர்களுக்குத் தங்கள் சாதிவெறிக்கு வந்தேறி திராவிடரின் சூழ்ச்சிதான் காரணம் என்று சொல்வதற்கு வரலாற்று- கோட்பாட்டுத் துணைநின்று தமிழகத் தேசியப் போராட்டத்தைத் திசைதிருப்புகிறார் குணா. அன்று ஒரு கூட்டம் ஆரியர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறியது; இன்று இன்னொரு கூட்டம் திராவிடர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறது. இந்த இரு கூட்டங்களும்தாம் உண்மையில் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அத்துடன் தமிழர்கள் எவரிடமும் எளிதில் ஏமாந்துவிடுபவர்கள் என்று அவர்களை நகையாடும் நோக்கமும் கொண்டவை. தோழர் குணா இந்த உண்மைகளை உணர்ந்திருக்கிறாரோ இல்லையோ நமக்குத் தெரியாது பெரியாரைக் குறைகூறிக் கொண்டு அவர் செய்த அதே இரண்டகத்தை அல்லது கேட்டை இவரும் செய்கிறார் என்பது மட்டும் உறுதி.

ஒரு தேசியத்தின் மீது அயல்விசைகள் தொடுக்கும் தாக்குதல்களை அத்தேசியத்தின் உச்சியிலுள்ள குழுக்களே முதன்முதலில் உணர்கின்றன. அவ்வாறு தான் தமிழ் பேசும் பார்ப்பனர்கள் வரலாற்று ஆய்வு மூலம் தமிழ்த் தேசிய உணர்வுக்கு அடியெடுத்துக் கொடுத்தனர். அதைப் பின்பற்றிக் கீழேயுள்ள விசைகள் அணிதிரளும்போது மேலடுக்கு தன் ஆதிக்க நிலையைப் பேணிக் கொள்வதற்காக எதிரிகளுடன் இணக்கம் காணுகின்றன. ஆனால் அங்குள்ள புரட்சிகரத் தனிமங்கள் தம் குறிக்கோளில் உறுதியாக நின்று கீழ் அடுக்குகளின் செயற்பாடுகளை முன் நோக்கி நகர்த்துகின்றன. எதிரிகளுடன் இணைந்துவிட்ட பிற்போக்கு விசைகளின் ஆற்றலைச் சமன் செய்கின்றன. இவ்வாறு பார்ப்பனர்களிடையிலிருந்து கிடைத்திருக்கத்தக்க புரட்சிகரத் தனிமங்கள் பெரியாரின் திட்டமிட்ட முரட்டுத்தனமான பார்ப்பன எதிர்ப்பால் செயலிழந்து போயின அல்லது பார்ப்பனப் பிற்போக்கோடு சேர்ந்து தேசிய இயக்கத்துக்குத் தீங்கு செய்தன. தமிழகத்திலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் பார்ப்பனர்களின் அடுத்த அடுக்கிலிருந்தனர். அதனால் அவர்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயற்படுவது இயல்பே. அதனால்தான் அவர்களது துணையுடன் பார்ப்பன எதிர்ப்பை எளிதாக பெரியாரால் செய்ய முடிந்தது. அவர்களுக்குக் கீழடுக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் அரசியல் அரங்கினுள் செல்வாக்குப் பெறும் நிலையில் அவர்களும் எதிரணியில் சேர்வது இயல்பே. ஆனால் அவர்களிடையிலுள்ள புரட்சிகரத் தனிமங்கள் புதிதாக நுழைந்துள்ள கீழடுக்கினருடன் இணைந்து நின்று தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதுடன் எதிரணியில் இணைந்து விட்ட தம் வகுப்பினரின் எதிர்ப்பைச் சமன் செய்ய முடியும். இந்த வாய்ப்பை குணாவின் அணுகலால் நாம் இழந்து அவர்கள் அந்த பிற்போக்கினருடன் கூட்டுச் சேர்ந்துவிடும் பேரிடர் உள்ளது.

நானறிந்த வரை குணா ஒரு நேர்மையாளர், அதாவது தான் உறுதியாக நம்புவதையே பேசுபவர், எழுதுபவர்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இயல்புடையவரல்லர் என்பது என் கருத்து. தன்னுடைய பதற்றமான அணுகலைக் கைவிட்டுத் தன் சிந்தனையாற்றலுக்கு முழு வாய்ப்புக் கொடுப்பாராயின் கர்நாடகத் தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் அவரது பணி ஒரு மாபெரும் கொடையாக அமையும்.

குணாவுடன் பழகியதிலிருந்து நான் தெரிந்து கொண்டது அவர் சில வகைகளில் நிலக்கிழழைக் கண்ணோட்டமுடையவர் என்பது. தமிழ்ப் பண்பாடென்ற பெயரில் தமிழகத்தில் நிலவும் நிலக்கிழமைப் பண்பாடாகிய வெள்ளாளப் பண்பாட்டைக் குறைசொல்வதை அவர் விரும்புவதில்லை. ″ஒழுக்கம்″ என்ற பெயரில் அவர் பெண்ணுரிமைக் கோட்பாடுகளைப் புறக்கணிப்பவர். இது போன்ற நிலைப்பாடு அவரது அண்மைக்கால ஆய்வுகளிலும், குறிப்பாக வள்ளுவத்தின் வீழ்ச்சியிலும் காணக்கிடக்கிறது. தமிழகத்தின் அறிவியல் குறிப்பாக வானியல் வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட சாதியினரே காரணம் என்பது அத்தகைய கண்ணோட்டத்திலிருந்தே வந்துள்ளது. எந்தவோர் அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு குறிப்பிட்ட மக்கட் குழுவினரிடமிருந்து தான் தோன்றின என்பது சரியான அணுகலாகாது. ஒரு குழுவினர் அந்த அறிவியல் – தொழில்நுட்பங்களை ஒரு கட்டத்தில் கையாண்டனர் என்பது சரியாயிருக்கலாம். அது தொழிலடிப்படையிலமைந்த சாதியத்தின் இயல்பு. அத்தகைய சாதிகளாக மக்கள் உறைந்து போவது நீடித்த அறிவியல் - தொழில்நுட்பம், விளைப்புப்பாங்கு ஆகியவற்றில் தேக்கத்தின் விளைவு. அத்துடன் நம் நாட்டில் சாதியமைப்பு வெறும் தொழிலடிப்படையில் மட்டும் அமைந்திருக்கவில்லை. அதில் அரசியல் ஆதிக்கத்தின் பங்குதான் மிகுதி. அது மட்டுமல்ல, சாதிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. சாதிப் பெயர்கள் தொடர மக்கள் மாறிக்கொண்டே வந்திருக்கிறார்கள். மக்கள் தொடர சாதிப் பெயர்கள் மாறியிருக்கின்றன. முன்பிருந்த சாதிப் பெயர்கள் மறைந்துள்ளன, புதியவை தோன்றியுள்ளன. இந்த உண்மைகள் குணா அறிந்தவை தாம். அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட சாதிதான் தமிழக வானியலை உருவாக்கியது என்ற குணாவின் கூற்று சிவனிய வேளாளர்கள் தாம் உண்மையான தமிழர்கள் எனும் மறைமலையடிகளின் நிலைப்பாட்டை ஒத்துள்ளது. கர்னாடகத்தில் வெங்காலூருக்கும் தங்கவயலுக்கும் வெளியிலுள்ள தமிழர்களைப் புறக்கணிக்கும் குணாவின் போக்கும் அவரது நிலக்கிழமைக் கண்ணோட்டத்தின் விளைவுதான். திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலில் சக்கிலியர்களை மொழியின் அடிப்படையில் எதிரிகளாகத் காட்டியுள்ளது குணாவின் முதல் வீழ்ச்சி என்றால் வள்ளுவத்தின் வீழ்ச்சி இன்னொரு வீழ்ச்சி என்று கூறலாம்.

தமிழர்களின் பண்பாட்டுப் பிழைகளை, அதாவது சாதிகள், பெண்ணடிமைத்தனம், மக்களை இழிவுபடுத்தி அவர்களை உறிஞ்சிச் சாகடிக்கும் சமய அமைப்பு ஆகியவற்றைத் திறனாய்ந்து அவற்றைத் தூக்கியெறிந்து நமக்கு வலுவூட்டிக்கொள்ள வேண்டும் என்ற என் கருத்துகள் தமிழக மக்களின் ஒற்றுமைக்கு வேட்டுவைத்துவிடும், உள்ள உறுதியைக் குலைத்துவிடும், தன்னம்பிக்கையை அழித்துவிடும், எதிரிகள் முன் நம்மைத் தலைகுனிய வைத்துவிடும், அவர்கள் நம்மை இழிவாகவும் எளிதாகவும் கருத இடம் கொடுத்துவிடும் என்று குணாவும் அவரது ஆதரவாளர்களும் வாதிடுகின்றனர். நம்மிடமுள்ள இத்தீங்குகளுக்குக் காரணம் என்று பார்ப்பனர்களை, அதாவது ″ஆரியர்களை″ வைத்திருந்த இடத்தில் இப்போது திராவிடர்களைக் கொண்டு நிறுத்துகிறார்கள் அவர்கள். ஆனால் இந்தப் பண்பாட்டுக் கூறுகள் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே தமிழர்களிடையில் ஊறிப் போனவை என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. இவ்வாறு நம்மோடு, நம் குருதியோடு, பண்பாட்டோடு மண்ணோடு மண்ணாக நெடுங்காலம் நிலைத்து நின்று இறுகிப்போன இத்தீமைகளை அகற்றிவிடப் பெரும் முயற்சியும் கடும் உழைப்பும் நின்று நிலைத்துப் போராடும் உறுதியும் தேவைப்படுகிறது. அதற்கு மாறாக இலக்கையே திசை திருப்பி நமக்குள் மறைந்திருக்கும் எதிரியை, நம் நிழலைக் கற்பனை எதிரியாக்கி நம் முன் நிறுத்தி அதற்குப் புதுப்புதுப் பெயர்களிட்டுச் சண்டையிடுவதைப் போன்ற கேடு வேறு என்ன இருக்க முடியும்? இவ்வாறு குறிதவறிப் போராடிப் போராடி நாம் நாளுக்கு நாள் நலிந்து மெலிந்து போகிறோம். நம் மீது புதிய புதிய எதிரிகள் ஆதிக்கம் செலுத்த வருகிறார்கள்.

குணாவின் படைப்புகளில் ஓர் அடிப்படைக் குறைபாடு இருப்பதைப் பலரும் உணர்ந்துள்ளனர். அதாவது மிகச் செறிவாக அவர் கொடுக்கும் சான்றுகளை நிரல்படுத்தித் தன் கருத்தை அவர் தெளிவுபடுத்துவதில்லை என்பதாகும் அது. மேற்கோள்களின் அல்லது சான்றுகளின் தொகுப்பாக ஒவ்வொரு மேற்கோளின் நோக்கம் என்ன என்பதைக்கூட இனம்காண முடியாமல் ஆசிரியர் சொல்ல வருவது மேற்கோள்களினுள் அமுங்கிப்போய்விடுவதுதான் இந்தக் குறைபாடு. தமிழர் மெய்யியிலில் தொடங்கிய இந்தப் போக்கு வள்ளுவத்தின் வீழ்ச்சியில் பெருவளர்ச்சி பெற்றுள்ளது. மலைக்க வைக்கும் அளவுக்கு மேற்கோள்களையும் சான்றுகளையும் திரட்டும் அவர் அவற்றை நிரல்படுத்தி தான் சொல்லவரும் கருத்தைத் திட்டவட்டமாக வெளியிட்டால் அவரது உழைப்பின் பயன் தமிழக மக்களுக்கு முழுமையாகக் கிடைத்திருக்கும்.

ஆரியர் என்று ஓர் இனம் இருந்ததில்லை என்ற என் கருத்தைச் சில காலம் எற்றுக்கொண்டவர் குணா. பின்னர் ஒரு கால கட்டத்தில் அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து வெளிப்படையாக மாறவில்லையாயினும் நழுவுகிறார். திராவிடர்தாம், (அதாவது ஆந்திரரும் கன்னடரும்) ஆரியர்கள் என்று ஆரியர் யார் என்ற கட்டுரைத் தொடரில் குறிப்பிடுகிறார். வள்ளுவத்தின் வீழ்ச்சியில் பேரா. நெடுஞ்செழியன் அவர்களின், இருக்குவேதம் தமிழர்களின் பஞ்சாங்கம் போல் இருக்கிறது என்ற கூற்றைச் சுட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார். அந்நூலில் அவர் செலவிட்டுள்ள உழைப்பை முறைப்படி நெறிப்படுத்தியிருந்தால் தமிழர்களின் பண்டை வானியல் செய்திகளை நிரல்படுத்திக் கூறும் ஒரு கையேடாக அது மலர்ந்திருக்கும். வேதங்கள், தொன்மங்கள் மற்றும் சமற்கிருத நூற்களில் பதுங்கிக் கிடக்கும் தமிழர்களின் வரலாற்றையும் அறிவியல் - தொழில்நுட்பங்களையும் தேடிப்பிடித்து மீட்க வேண்டும் என்ற ஊக்கம் படிப்போருக்கு ஏற்பட்டிருக்கும்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] காவிரி நீர்வரத்து குறைந்ததால் வேலையிழந்த கர்நாடக எல்லை சார்ந்த தமிழக மாவட்டங்களிலுள்ள தமிழக மக்கள் இப்போது வெங்காலூரில் குவிந்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது. கன்னட வெறியர்களின் செயல்களின் விளைவு அதற்கு எதிர்விளைவுகளுக்கு அடிப்படையை உருவாக்கிவிட்ட இயங்கியல் செயற்பாட்டைப் பார்க்கிறோம் இங்கு. வெங்காலூர்த் தமிழர் தலைவர்கள் இதை எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

6.1.08

தமிழ்த் தேசியம் ... 24

மனந்திறந்து... 14

இந்த முன்னுரையை முடிக்கும் முன் குணாவுக்கும் எனக்கும் உள்ள இன்றைய உறவு நிலையையும் அவர் பற்றிய என் உணர்வு நிலையையும் கூறுவது இன்றியமையாதது என்று கருதுகிறேன். நாங்களிருவரும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்ற எண்ணம் இன்னும் பலருக்கு இருக்கிறது. குணாவின் திராவிடத்தல் வீழ்ந்தோம் பற்றிய குறிப்புகள் என்ற என் திறனாய்வு நூலைப் படித்த பேரா.தொ. பரமசிவம் கூட குணாவின் கருத்தோட்டத்தை ஒட்டி நான் எழுதியுள்ளதாகக் கூறினார். எனவே எங்களிடையில் உள்ள உறவுமுறையைத் திட்டவட்டமாக வெளிப்படுத்த வேண்டியவனாக உள்ளேன்.

நான் அவரை அறிந்த போது அவர் தமிழ் மீதும் தமிழகம் மீதும் தமிழ்ப்பண்பாடு மீதும் அசைக்க முடியாத பற்றுடைய மார்க்சிய - மாவோயியக் கோட்பாட்டுச் சிந்தனையாளராக அவரை மதித்தேன். அதற்கு முந்திய அவரது அரசியல் வரலாறு எனக்குத் தெளிவாகத் தெரியாது. ″நெருக்கடி நிலை″க் காலத்தில் நக்சலிய இயக்கத்தில் ஈடுபட்டதற்காக ″மிசா″ சிறையில் இருந்தார் என்பது தெரியும். அப்போதுதான் தமிழர் மெய்யியல் என்ற சிறந்த நூலை அவர் எழுதினார். அதற்கு முன் நான் படித்தது மார்க்சிய இயங்கியல் எனும் நூலை. இயக்கவியில் என்றிருந்த மொழிபெயர்ப்பை இயங்கியல் என்று திருத்தி இன்று முழுப்பயன்பாட்டுக்கு வரக் காரணமாயிருந்தவரும் அவரே. தன் கருத்துகள் நூல் வடிவில் வெளிவருவதற்கும் இயக்கமாகச் செயற்படவும் உருவாக்கிய தமிழக ஆய்வரண் என்ற அமைப்பை அவர் உருவாக்கியிருந்தார். அதன் மூலம் தான் பஃறுளி முதல் வையை வரை, விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற என் படைப்புகளை அவர் வெளியிட்டார் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். தமிழகத் தேசிய விடுதலை குறித்தும் தமிழகப் பொருளியல் விடுதலை குறித்தும் சாதி அமைப்பு குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். தேசிய விடுதலை பற்றிய ″மார்க்சியர்களின்″ இரண்டுங்கெட்டான் நிலைப்பாடுகளைக் கடுமையாக எதிர்த்து மார்க்சியக் கூடாரங்களில் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்திய பெருமை அவருக்கே உரியதாகும். ஆசிய நாடுகளில் முதலாளியம் வளர்ச்சியடைய முடியாது என்ற பொருள்படும் மார்க்சின் ″ஆசியப் பாங்கு″க் கோட்பாட்டை மறுத்து தமிழகத்தில் தொல்காப்பியக் காலந்தொட்டு நிலக்கிழமைப் பொருளியல் வேர் கொண்டு விட்டதென்று நிலைநாட்ட ஆசியப் பாங்கு(Asiatic Mode) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். கந்துவட்டி மூலதனம் தொழில் மூலதனமாக வளர முடியாது என்று எங்கோ ஓரிடத்தில் மார்க்சு கூறியதை ஏற்றும் ஓரிடத்தில் அவர் எழுதியிருக்கிறார். யூதர்களின் கந்து வட்டி மூலதனம் தொழில் மூலதனமாக வளர்ந்து செருமானியருக்கெதிராக நின்றதால்தான் இட்லர் அவர்களை அழிக்க முயன்றான் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டி நம் நாட்டில் கந்துவட்டி மூலதனம் மட்டுமல்ல தேசியங்களின் அனைத்து வகைச் செல்வத் திரட்சிகளும் தொழில் மூலதனமாக மாற முடியாமல் ஆட்சியாளர்களின் கெடுபிடிகளும் ″மார்க்சியர்″ - மார்வாரிகளின் கூட்டணியும் தடுத்துள்ளன என்ற உண்மையை அவருக்கு நான் எழுதினேன். பாட்டாளியக் கோட்பாட்டின் மீது அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது, இன்றும் அது இருப்பதாகத் தோன்றுகிறது.

இப்படி இருந்தவர் திடீரென்று வேறு ஒரு திசைக்குத் திரும்பினார். அதன் பின்னணி வெங்காலூர்த் தமிழர்கள் மீது கன்னட வெறியர்களும் கர்நாடக அரசும் நிகழ்த்திய வன்முறைக் கொடுமைகள் தாம். இந்தச் சூழ்நிலையில் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் உள்ள திராவிடக் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் நடந்துகொண்ட முறை குணாவுக்கு வெறுப்பூட்டியது. எனவே அவர் திராவிடக் கோட்பாட்டைப் பற்றி மறு ஆய்வு செய்யத் தொடங்கினார். திராவிட இயக்கத்தில் முன்னாள் சென்னை மாகாணத்திலும் இன்றைய தமிழகத்திலும் உள்ள தலைவர்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களின், குறிப்பாகத் தெலுங்கர்களின் ஆதிக்கம் இருப்பதைக் கண்டார். அதே போன்று இன்று கர்னாடகத்தில் அங்குள்ள தெலுங்கர்கள் தமிழர்களுக்கெதிராக அங்குள்ள கன்னடர்களுடன் சேர்ந்து நிற்பதையும் கண்டார். பெரியார் தன் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்று பெயர் வைப்பதில் பிடிவாதமாக இருந்ததை அறிந்தார். எனவே திராவிடக் கோட்பாட்டை உடைப்பது தமிழ்த் தேசிய நலன்களுக்கு இன்றியமையாதது என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு வந்தார். எனவே திராவிடத் தேசியக் கோட்பாட்டைத் தகர்க்கத் தொடங்கினார். அதன் தொடக்கமாகச் சில கட்டுரைகளும் இந்தியத் தேசியமும் திராவிடத் தேசியமும் போன்ற நூல்களும் வெளிவந்தன. தொடக்கத்தில் அவரது கட்டுரைகளைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தமிழ் நிலம் இதழில் வெளியிட்டார். அவ்வாறு வெளியிட்டதற்கும் ஒரு சிறு வரலாற்றுப் பின்புலம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

பாவாணரும் அவரது தனித்தமிழ்க் கோட்பாடும் சொல்லாய்வுக் கட்டுரைகளும் பரவலான ஈர்ப்பைப் பெறுவதற்குப் பெருஞ்சித்திரனார் தென்மொழி இதழ் மூலம் பெரும்பங்காற்றியுள்ளார். பாவாணரது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்துக்கு தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த ஆதரவும் கொடுக்காத நிலையில் அதைப் பற்றாளர்களின் ஒத்துழைப்புடன் பங்கு முயற்சி மூலம் மேற்கொள்ளும் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்தியவரும் அவரே. இறுதியில் பெரு முயற்சிகளுக்குப் பின் அரசு சார்பில் இத்திட்டத்தை மேற்கொள்வதற்குக் கருணாநிதி அரைமனதுடன் இசைந்தார். திருவாரூரில் இயற்றமிழ் பயிற்றகம் மூலம் ஆசிரியர்களுக்கும் பிறருக்கும் தமிழ்ப் புலவர் தேர்வுப் பயிற்சியளித்தும் இலக்கண நூல்கள் யாத்தும் தமிழ்ப் பணியாற்றி வந்த பாவாணர் பின்பற்றாளர் புலவர் த.சரவணத் தமிழன் திருவாரூரில் திரு.வி.க.வுக்கு நிறுவியிருந்த மார்பளவுச் சிலை திறப்பின் போது அவர் வலியுறுத்தியதன் அடிப்படையில் விழாவில் உரையாற்றிய குன்றக்குடி அடிகளார், மேடையிலிருந்த கருணாநிதியை நோக்கி, இதைக் கூட செய்யவில்லையானால் நீங்கள் விளங்கமாட்டீர்கள் என்று சாவமிட்டதன் பின் அதே மேடையில் அறிவிக்கப்பட்டு வேண்டாத பிள்ளையாய் வாழ்ந்த அத்துறையில் பாவணர் தன் பணியைத் தொடர்ந்தார்.[1] இந்நிலையில் பாவாணரின் இறுதி நாட்களில் பெருஞ்சித்திரனார் அவர் மீது குறைகள் கூறத் தொடங்கினார். செ.சொ.பி. அகரமுதலி உருவாக்குவதை விட வீடு கட்டுவதில் அதிகக் கவனம் செலுத்துகிறார் என்றார். அது ஓரளவு உண்மை தான். இறைவன் தன்னை இந்தச் சொ.பி.அகரமுதலியை உருவாக்குவதற்காகவே படைத்துள்ளான்; அதை முடிக்குமுன் தன்னைச் சாகவிடமாட்டான் என்ற அசைக்க முடியாத மூடநம்பிக்கையை அவரே பலமுறை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் பெருஞ்சித்திரனார் அக்காரணத்தால் மட்டும் இந்நிலையை எடுத்தாரா என்று உறுதியாகக் கூற முடியவில்லை, ஏனென்றால் பாவாணர் காலமானதும் பெருஞ்சித்திரனார் ஒரு படி மேலே சென்று, பாவாணரின் சொல்லியல் ஆய்வு முறை தனக்கு உடன்பாடில்லை, அவர் வேர்ச் சொற்களை மனிதன் படைத்தான் என்றதாகவும் தான் அவை தாமே தோன்றின என்பதாகவும் கூறினார். யாரோடும் யாருக்கும் கருத்து முரண்படும் உரிமை உண்டு. ஆனால் முரண்படும் கருத்து எதிர்க்கருத்துக்கு மேம்பட்டதாயில்லாவிட்டாலும் இணையாகவாவது இருக்க வேண்டும். பெருஞ்சித்திரனாரின் கருத்து பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒன்று. எனவே அவரது நிலைப்பாட்டைக் கண்டித்து வெங்காலூரிலிருந்து வெளிவந்த மீட்போலை என்ற இதழில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை வெளிவருவதற்கு குணாவின் தூண்டுதல் உண்டு. அதே நேரத்தில் பாவாணருக்குப் பின் செ.சொ.பி.அகரமுதலித் திட்டத்தின் பொறுப்பு இயக்குநராக அதுவரை பாவாணரின் கீழ்ப் பணியாற்றி வந்த பேரா.இரா.மதிவாணன் அமர்த்தப்பட்டார். அவர் அப்பணிக்குத் தகுந்தவரல்ல என்று தென்மொழி வாயிலாகப் பெருஞ்சித்திரனார் கூறத் தொடங்கினார். பாவாணர் தன்னைத்தான் தனக்குப் பின் இயக்குநராக அமர்த்த வேண்டுமென்று விரும்பினார் என்று மதிவாணன் எதிர்வழக்காடினார். பெருஞ்சித்திரனார் அந்தப் பதவியில் தான் அமர விரும்பினார் என்று எண்ணத் தோன்றியது. அதே நேரத்தில் பெருஞ்சித்திரனாரின் மருமகனான ப.அருளி அவர்கள் தமிழறிஞர் ந.சுப்புரெட்டியார் தலைமையில் சொற்பிறப்பியல் ஆய்வுச் சொற்பொழிவுத் தொடர் ஒன்று நடத்தினார். சுப்புரெட்டியார் நானறிந்த வரையில் தனித்தமிழ்க் கொள்கையையோ பாவாணரின் மொழி ஆய்வு அணுகலையோ ஏற்றுக்கொள்ளாதவர். நான் இதனைச் சுட்டிக்காட்டி செ.சொ.பி.அகரமுதலித் திட்டத்துக்கு இயக்குநர் பதவிக்குத் தானோ அருளியோ வரவேண்டுமென்று விரும்பினால் தென்மொழி அன்பர்களைக் கூட்டி ஒரு தீர்மானம் போட்டு விடுத்தால் அப்போதைய முதல்வர் ம.கோ.இரா. வாக்கு வங்கிக்காகக் கட்டாயம் அதை ஏற்பார்; அதை விடுத்து எதிரி முகாமில் அடைக்கலம் புகுவது முறையல்ல என்று திரு.ப.அருளிக்கு எழுதினேன். பெருஞ்சித்திரனாருக்கு இது குறித்து ஏதாவது எழுதினேனா என்பது நினைவில்லை. ஆனால் அருளி தன் சொற்பிறப்பியல் ஆய்வுத் திறனைப் பாருங்கள் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப எழுதினார். இந்த வகையில் எங்களிடையில் ஒரு சிறு மடல்வழிப் போர் நடைபெற்றது.

பெருஞ்சித்திரனாருக்குத் தொண்டர்களை அணிதிரட்டிப் போரிடும் எண்ணமோ அதில் நம்பிக்கையோ, அந்தத் திறனோ இருந்ததில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான் அவர் இறுதிவரை கருணாநிதியை நோக்கிக் கெஞ்சுவதும் மன்றாடுவதும் வேண்டுகோள் விடுப்பதும் மிஞ்சிப் போனால் எச்சரிக்கை விடுப்பதும் சாவம் கொடுப்பதுமாகத் தன் காலத்தை முடித்துக் கொண்டார். அதனால்தான் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஏறக்குறைய ஓரிலக்கம் நெஞ்சங்களைத் தன் வாழ்நாளில் ஒரேயொரு போராட்டத்திலாவது முறையாக அவர் ஈடுபடுத்தவில்லை.

பேரா.இரா. மதிவாணன் வீரசிவனிய வகுப்பைச் சேர்ந்தவர். கன்னடத்தை வீட்டுமொழியாகக் கொண்டவர். இருப்பினும் தமிழ் மீது அவர் வைத்திருந்த நேயமும் பற்றும் ஐயத்திற்கப்பாற்பட்டவை என்பது என் கருத்து. ஒரு கிரேக்க நாடகத்தில் இடம் பெற்றிருந்த சில உரையாடல்கள் கன்னட மொழியிலமைந்தவை என்ற ஒரு கன்னட மொழியறிஞரின் கருத்தை மறுத்து அவை தமிழ் மொழி உரையாடல்கள் என்று விளக்கி, கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல் என்ற தன் நூலில் காட்டியவர். சொற்பிறப்பியலாய்வு குறித்தவரையில் அவர் பாவாணரின் இடத்தைப் பிடிக்கத் தகுந்தவர் என்றும் என்னால் கூற முடியவில்லை. அவர் அப்பதவியில் இறுதி வரை அமர்ந்திருந்தது பெருஞ்சித்திரனாரின் அணுகல் பிழையால் தான் என்பது என் கருத்து.

பேரா.மதிவாணனிடம் சொல்லாய்வுக்கும் அகராதித் தொகுப்புக்கும் பொருந்தாத ஓர் அணுகலை நான் கண்டேன். செந்தமிழ்ச் செல்வி இதழில் அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை தொடர்பாக தமிழில் மக்கள் வழக்கிலிருக்கும் பெண்ணுறுப்பைக் குறிக்கும் சொல்லொன்றைக் குறிப்பிட்டு அது பற்றி அவருக்கு மடல் எழுதினேன். பல நாள் எங்களுக்கிடையிலிருந்த மடல் தொடர்பை அன்றிலிருந்து அவர் நிறுத்திக் கொண்டார். ஒரு சொல்லாய்வாளனுக்கும் அகராதி தொகுப்பாளனுக்கும் எந்தச் சொல்லும் தீண்டத்தகாததாய் இருக்க முடியாது, இருக்கக் கூடாது. எவ்வாறு ஒரு மனிதன் அல்லது விலங்கின் எந்த ஒரு நோயையோ அல்லது உறுப்பையோ தீண்டத்தகாதது என்று ஒரு மருத்துவன் ஒதுக்க முடியாதோ, ஒதுக்கக் கூடாதோ அதைப் போன்றது தான் இதுவும். அவையல் கிளவி, இடக்கர் அடக்கல், கொச்சை வழக்கு, ″கெட்ட வார்த்தை″ என்று எந்தச் சொல்லையும் அவன் ஒதுக்கக் கூடாது. ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் உள்ள விரிவான அகராதிகளில் மக்களிடம் புழங்கும் அனைத்துக் ″கொச்சை″ச் சொற்களும் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும். ஆனால் இந்த வகையில் தமிழ் அகராதித் தொகுப்பாளர்களிடமும் சொல்லாய்வாளர்களிடமும் இந்த அடிப்படைக் குறைபாடு இருக்கிறது. பாவாணரிடம் இந்தக் குறைபாடு இருந்ததா என்று உறுதியாக என்னால் கூற முடியவில்லை; ஏனென்றால் அவரவது அனைத்துப் படைப்புகளையும் படிக்க எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் அவருக்கும் தமிழக வரலாற்று அணுகலைப் பொறுத்த வரையில் ஒரு மேல்தட்டு நடுத்தர வகுப்பு மனப்பான்மை, அதாவது வெள்ளாளக்கட்டு எனப்படும் பூணூல் கழித்த பார்ப்பனியக் கண்ணோட்டம் இருந்தது. ஆயினும் அவரது இந்தக் கண்ணோட்டமோ அல்லது சமயம் சார்ந்த மூடநம்பிக்கையோ அவரது சொல்லாய்வுத் திறன் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது என் கணிப்பு. நானறிந்தவரையில் பாவாணரை அடுத்துத் தமிழ்ச் சொற்பிறப்பாய்வில் ஆற்றல் மிக்கவராக நான் கண்டது புலவர் இளங்குமரனைத்தான். தனக்குப் பிறமொழி அறிவு (ஆங்கிலம்) போதவில்லை என்றோ என்னவோ அவர் அப்பணியைத் தொடரவில்லை. அவர் இன்று திருக்குறள் தவச்சாலை நிறுவித் தன் கவனத்தை அத்திசையில் திருப்பியிருப்பது தமிழ்ச் சொல்லாய்வுக்கு ஒர் இழப்பென்று நான் கருதுகிறேன். திரு.ப.அருளி அவர்களைப் பொறுத்தவரை தொடக்கத்தில் அவரிடம் முனைப்பாகத் தெரிந்தது சொல்லாய்வுத் திறனை விட ஆரவாரமிக்க ஒரு நடை. ஆழமான ஆய்வுக்குப் புறம்பானது அது என்பது என் கருத்து. ஆய்வும் அவ்வளவு சிறப்பாகப் படவில்லை. தொடர்ந்து அவரது படைப்புகளை நான் படிக்கவில்லை. பாவாணரின் வாழ்நாளில் பெருஞ்சித்திரனார் அருளிக்கு அகர முதலித் திட்டத்தில் இடம் கேட்டிருக்கக் கூடுமோ அதற்கு அவர் இசையாததால் தான் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதோ என்ற ஐயம் எனக்கு இதை எழுதும் போது ஏற்படுகிறது.

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பேரா. மதிவாணன் மீது ஏற்பட்ட மனத்தாங்கலால் தான் பெருஞ்சித்திரனார் குணாவின் கட்டுரைகளுக்குத் தன் இதழில் இடமளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இவற்றையெல்லாம் நான் விரித்துச் சொல்லும் நோக்கம் என்னவென்றால் தமிழகத்தில் பல்வேறு வரலாறுகளை எழுதுவோர் அவற்றில் இடம்பெறும் பெருமக்களின் ″மறுபக்கங்″களைக் காட்டுவதில்லை. அதனால் ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வில் உண்மையான கொள்கைப் பிழை, கோட்பாட்டுப் பிழைகள் எவையெவை அவற்றில் தனிமனிதப் பிழைகளின் பங்கு என்ன எனப் பின்வரும் தலைமுறைகளுக்குத் தெரியாமல் போகிறது. அதனால் பிழைகள் ஒன்றன் மீதொன்றாகச் சுமையேறிக் குமுகத்தைத் தலைத்தூக்க முடியாமல் செய்துவிடுகின்றன. இன்றைய தமிழக இலக்கியப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் சமகால வரலாற்றுக் குமுக நிகழ்வுகளைப் படம்பிடிக்காதது[2] போல் வரலாற்று வரைவிலும் ஒன்றேல் தலைவர்களைக் கடவுள்களாகவும் இயக்கங்களைச் சமயங்களாகவும் கொண்டாடுகின்றனர் அன்றேல் முற்றிலும் இருட்டடிப்புச் செய்கின்றனர். இதனால் தமிழக மக்களிடம் இயல்பாகவே ஒரு குறைபாடு, அறிவின்மை, அடிமை மனப்பான்மை, கோழைக்குணம், உணர்வின்மை போன்றவை இருப்பதாக அவர்களே தங்களைத் தாழ்த்தி மதிக்கக்கூடும். இன்றைக்கே அத்தகைய ஓர் உணர்வு பலருக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது. 1965 இந்திப் போராட்டத்தை மாணவர்களிடமிருந்து பொதுமக்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டபோது ஓடி ஒளிந்து தமிழக மக்களின் நலன்களைக் காட்டிக்கொடுத்த அண்ணாத்துரை - கருணாநிதி கும்பல் ஆட்சிக்கட்டில் ஏறுவதற்கு மட்டும் அதனைப் பயன்படுத்திக்கொண்ட கயமையையும் உரிமைகளைக் காக்கவென்று அணிதிரண்ட தமிழக உழவர்களின் போராட்டத்தினுள் நுழைந்து போராட்டம் வெற்றி இலக்கை நெருங்கிவந்த நேரத்தில் அவர்களை பணக்கார உழவர்கள் என்றும் சிறு - குறு உழவர்கள் என்றும் பிரித்து போராட்டத்தைச் சிதறடித்து அமெரிக்க வல்லரசிய ஒற்றனான நக்சலியப் பிரிவுத் தலைவன் வினோத் மிசிராவின் கூலிப்படையாகிய நக்சலியக் குழுக்களையும் அதுபோலவே தமிழகத் தேசிய இயக்கத்தினுள் புகுந்தும் ஊடுருவியும் வல்லரசியம் வகுத்துத்தரும் பல்வேறு உத்திகளையும் கையாண்டு தமிழகத் தேசிய முதலாளியப் புரட்சி நோக்கி தமிழக மக்களின் கவனம் சென்றுவிடாமல் திசைதிருப்பும் பிற மாவோயியக் குழுக்களையும்[3] திராவிட இயக்கத்தினுள் கொள்கைப்பிடிப்பு, நேர்மை, நாணயம் போன்ற தன்மைகளைக் கொண்டிருந்தோரை பொறுக்கிகளாக்கி அப்படி ஆக மறுத்தோரை ஒதுக்கி ஒழித்து தன் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் ஒரு நிறுவனமாக அந்த இயக்கத்தை சிதைத்ததுமின்றி புதிதாகத் தோன்றும் இயக்கங்களிலும் ஊடுருவி அங்கிருந்தும் தனக்கேற்றவகையில் அணிசேர்த்துவரும் கருணாநிதியின் செயல்களையும் அந்த நிகழ்முறையில் உருவான ம.கோ.இரா., செயலலிதா, இராமதாசு, வைக்கோ, நெடுமாறன்[4] போன்றோரின் உண்மையான முகங்களையும் ஒவ்வொரு இயக்கத்தின் அல்லது பெருமக்களின் பொதுவாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் சமகாலத்தவரும் வரும் தலைமுறையினரும் தெளிவாக அறிந்து இந்தச் சூழலுக்கேற்ற வருங்கால உத்திகளை வகுத்துக்கொள்ளும் வகையில் வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறேன்.

அத்துடன் நம் மக்கள் சாதிகளாகப் பிரிந்து நிற்பதற்கு நிகராக இயக்க வரலாற்றையும் சாதிக் கொன்றாகப் பிய்த்தெடுக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. நாடாரான ப-ர்.பு.இராசதுரை, சுயமரியாதை இயக்கத்தில் நாடார்களின் பங்கு என்ற நூலில் நாடார்களைப் பற்றி மட்டும் கூறுகிறார். அதில் ஈ.வெ.ரா.வுக்கும் கி.ஆ.பெ.விசுவநாதத்துக்கும் நடந்த மோதலை ஊ.பு.அ.சவுந்திரபாண்டியன் தீர்த்து வைத்தார் என்று கூறுகிறார். ஆனால் அந்தப் பூசல் என்னவென்று அவர் கூறவில்லை. திராவிட இயக்கமும் வெள்ளாளரும் என்ற நூலில் வெள்ளாளர்களைப் பற்றிப் பேசுவதால் இதை விளக்கவில்லை என்று கூறி நூலாசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி விட்டுவிடுகிறார். ஆக, தமிழக மக்களுக்கு உண்மையான முழு வரலாறுகளை அறியும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதைச் சொல்வதற்காக நான் தொடர்ச்சிகளை விட்டுத் தடம் மாறி நடைபோட்டமைக்கு என்னைப் பொறுத்தருள்க.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] இந்ததச் செய்தியைப் புலவர் த.ச. தமிழன் என்னுடன் நேருரையாடலின் போது கூறினார்.

[2] 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு இலக்கியம் எதுவும் தமிழில் படைக்கப்படவில்லை என்ற குறையை ப-ர்.க.ப.அறவாணன் ஒரு மேடைப்பேச்சின்போது குறிப்பிட்டார்.

[3] உருசியாவின் தாலின் காலமான பின் உலகப் பொதுமை இயக்கத்தின் தலைமை தனக்கே கிடைக்கும் என்று மாவோ கண்டுவந்த கனவைக் குருச்சேவ் கலைத்ததால் மாவோவுக்கும் உருசியாவுக்கும் உருவான பகை, குருச்சேவ் தாலின் மீது அளவுமீறிச் சேற்றைவாரி இறைத்ததால் உலகப் பொதுமை இயக்கத்தினரில் கணிசமான ஒரு பகுதியினர் உருசியாவுக்கு எதிராக மாறியது என்ற ஒரு சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கா சீனத்தோடு நட்பை வளர்த்துக்கொண்டது. மாவோவின் சிந்தனைகள் என்ற பெயரில் பணக்காரர்கள் நிறைந்த இந்தியா போன்ற, ஆனால் பொதுமை, நிகர்மை இயக்கங்களால் திட்டமிட்டு நிலக்கிழமைப் பொருளியல் கட்டத்திலிருந்து முதலாளியக் கட்டத்தினுள் நுழையாமல் தடுத்துநிறுத்தப்பட்ட ″ஏழை″நாடுகளின் எதிர்காலமான நாட்டுப்பற்றும் நேர்மையும் துணிவும் போராட்ட உணர்வும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி அவர்கள் நாடுகளில் அரைநிலக்கிழமையியமும் அரைமுதலாளியமும் நிலவுகின்றன; எனவே ஊர்ப்புறங்களிலும் நகரங்களிலும் உள்ள பணக்காரர்களை ″அழித்தொழித்தால்″தான் அங்கெல்லாம் பொதுமைக் குமுகம் மலரும் என்று உருவேற்றி அவர்கள் கைகளில் துப்பாக்கிகளைக் கொடுத்துச் சந்தியில் கொண்டுவந்து நிறுத்தியது அமெரிக்க உளவு முகவம். நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ″ஏழை″நாடுகளின் காவல்துறைகளும் படைகளும் அந்நாடுகளின் எதிர்கால நம்பிக்கைகளாக மலர்ந்திருக்க வேண்டிய அம்மலர்களை காக்கை குருவிகளைப் போல் அழித்தொழித்தன. இந்த இழப்பு மொத்தத்தில் பல பத்திலக்கங்கள் இருக்கும். இலங்கையில் மட்டும் இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் துணையோடு வேட்டையாடப்பட்ட சிங்கள இளைஞர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலக்கத்தைத் தாண்டும்.

இன்னொருபுறம் அறிவுத்துறையில் திறனுள்ள இளைஞர்ளை இனங்கண்டு தாளிகைகள் நடத்த உதவியது உளவு நிறுவனம். பல இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒரு பிடிநிலையை உருவாக்கவேண்டிய பருவத்தில் நாட்டுக்கு ஒவ்வாத கருத்துகளைப் பேசியும் இதழ் நடத்தியும் அண்டையிலுள்ள செல்வாக்குள்ள மக்களைப் பகைத்து குமுகத்திலிருந்து அயற்பட்டு நின்றனர். இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் உளவு நிறுவனம் தன் உதவியை நிறுத்திவிட்டு இயன்றால் இதழையும் இயக்கத்தையும் நீங்களே நடத்திக்கொள்ளுங்கள் என்று நட்டாற்றில் விட்டுவிட்டது. உளவு நிறுவனம் அளித்த உதவியை நம்பி மணம் செய்து பிள்ளைகுட்டியென்றான பின் இப்போது என்ன செய்வது? இப்போது அதே உளவு நிறுவனமே மாற்றுவழியையும் காட்டியது. அதுதான் ″தன்னார்வத் தொண்டு″. இன்னொன்று, திட்டங்கள் என்ற பெயரில் நூல்கள் எழுதுவது. இதற்குச் சான்றாக எசு.வி.இராசதுரையைக் கூறலாம். இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி, தொண்டு என்ற பெயரில் அமெரிக்கா நம் நாட்டு மக்கள் மனதில் விதைக்க விரும்பும் தவறான கருத்துகளை விதைப்பதும் அவர்களை இந்நிறுவனங்கள் மூலம் தன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதும். அறிவுத்தளத்தில் குமுகத்தில் தங்களைச் சிந்திக்கத் தெரிந்தோர் என்று கருதிக்கொண்டிருப்போரின் சிந்தைகளில் தான் விரும்பும் கருத்துகளை விதைப்பது. தமிழகத்தின் எல்லைக்குள் செயற்படும் இத்தகையோர் தமிழ்த் தேசியம் பேசுவதுதான் நாம் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.

ஆயுதம் தாங்கி அழித்தொழிப்பில் ஈடுபட்டார்கள் என்றோ கைக்குண்டு, நாட்டுத் துப்பாக்கி போன்றவற்றைச் செய்தார்கள் என்றோ குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை அமெரிக்க உளவு நிறுவனத்தின் இன்னொரு படைப்பான குடிமை உரிமைகளுக்கான மக்கள் பேரவை(பி.யு.சி.எல்.) மூலம் தாங்கள் இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்ற உறுதிமொழியை எழுதிவாங்கி பிணையில் வெளியேவிட்டு அவர்களைத் தமிழ்த் தேசியம் பேசவிட்டிருக்கின்றனர். புலவர் கலியபெருமாள், தியாகு போன்றவர்கள் இவ்வகையினர். தமிழ்த் தேசியம் பேசுகின்ற எசு.வி.இராசதுரை எனப்படும் க.மனோகரன், பேரா.கல்யாணி போன்றவர்கள் கு.உ.ம.பே.யின் செயல்மறவர்கள். தியாகு தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நடத்துவதால் ″தமிழ்த் தேசியர்″களால் மிகவும் போற்றப்படுபவர். இதில் என்ன தவறு என்று பலரும் நினைக்கக் கூடும். அதற்கு விடை காணும் முன் நாம் சிறிது சீன வரலாற்றினுள் சென்றுவர வேண்டும்.

1960களில் திடீரென்று ஒருநாள் மா சே துங், சீனப் பண்பாடு சீரழிந்துவிட்டது; பண்பாட்டு எதிரிகளைக் களையெடுக்கவேண்டும் என்று ஓர் இயக்கம் தொடங்கினார். உடனே ″பண்பாட்டுப் புரட்சி″ அறிவிக்கப்பட்டு மாபெரும் ″களையடுப்பு″ வெறியாட்டம் அரங்கேறியது. (இது பற்றிய கூடுதல் செய்திகளுக்கு, பார்க்க ஆசிரியரின் மார்க்சியம் - ஒரு பட்டறிவுப் பார்வை, வேங்கை பதிப்பகம், மதுரை, 2000.) உடனே இங்குள்ள தோழர்களும் பண்பாட்டுப் புரட்சி மந்திரத்தை உருப்போடத் தொடங்கிவிட்டனர். வெறும் பொருளியல் நடவடிக்கைகளால், அதாவது பொருளியலியம்(Economism) எனப்படும் கம்யூன்கள் எனப்படும் குமியங்களை நிறுவி அவற்றின் கீழ் நிலங்களையும் தொழில்களையும் கொண்டுவருவதால் (ஏழை நாடுகளில் கூலி உயர்வு, பிற சலுகைகளுக்கான போராட்டம்)மட்டும் பொதுமைக் குமுகத்தை அமைத்துவிட முடியாதாம்; பழைய பண்பாட்டைத் தூக்கிப் பிடிப்போரான மா சே துங்கின் அரசியல் எதிரிகளையும் ஒழித்தாக வேண்டுமாம். இது வல்லரசியத்துக்கு மிகத் தேவையான, மிக வாய்ப்பான ஒரு முழக்கமாகும். நிலக்கிழமைப் பொருளியலிலிருந்து முதலாளியத்தினுள் சென்று பின்னர் பொதுமைக்குள் நுழையாமல் நேரடியாகப் பொதுமைக் குமுகத்தினுள் நுழையத் திட்டமிட்டது தான் பொதுமைக் கட்சிகள் ஆண்ட நாடுகளின் சீரழிவுக்குக் காரணம் என்ற உண்மையான காரணம் மறைக்கப்பட்டு பண்பாட்டுக் கோளாறுதான் ஏழைநாட்டு மக்களின் துயரங்களுக்கெல்லாம் காரணம்; எனவே தோழர்களே பண்பாட்டுப் புரட்சி செய்ய வாருங்கள் என்ற அறைகூவலுடன் அமெரிக்கா பணத்தை அள்ளியிறைத்துக்கொண்டிருக்கிறது. எனவே தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்துவது தமிழ் தேசிய விடுதலைக்கு இன்றியமையாத பணி என்று தியாகு போன்ற தமிழ்த் தேசிய மறவர்கள் நம்புகிறார்கள் போலும், அல்லது பிறரை நம்பவைக்கிறார்கள் போலும். பொருளியல் விடுதலை என்ற உண்மையான சிக்கலிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவது வல்லரசுகளுக்கு மட்டுமல்ல நம்மை நேரடியாகச் சுரண்டும் மார்வாரிகள் போன்ற உள்நாட்டு விசைகளுக்கும் இன்றியமையாத ஒரு தேவைதானே! அதனால்தான் போலும் தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்தும் ஒருவருக்கு, அவர் பெயர் சரியாக நினைவில்லை, பெயர் தெரியாதவர்களும் மார்வாரிகளின் பெயரையொத்த பெயர் கொண்ட, ஆனால் பள்ளி நடத்துபவருக்கு அடையாளம் தெரியாதவர்களும் இலக்கக் கணக்கில் பணத்தை நன்கொடையாக அள்ளிவிடுகிறார்கள். மார்வாரிகளும் இரா.சே.ச.வினரும்(ஆர்.எசு.எசு.) நேரடியாகவே தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நடதுகிறார்கள் என்ற தாளிகைச் செய்திகள் தாய்த் தமிழ்ப் பள்ளிகளை அமைப்பதே தமிழ்த் தேசியப் போராட்டம் என்று கூறுகிறவர்களின் ஏமாற்றைக் காட்டப் போதுமானது. தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ″பண்பாட்டு விடுதலை″யை ஒரு முகாமையான களமாகக் காட்டுகிறவர்களின் உண்மை உருவை அறியவேண்டுமாயின் பண்பாட்டுத் தேசியம் என்ற பெயரில் சோவியத்துப் புரட்சிக்கு முன்பு அங்குஎழுப்பப்பட்ட முழக்கத்தைக் கண்டித்து லெனின் எழுதியிருப்பவற்றைப் படித்துப் பாருங்கள்.

[4] இப்போது தொல்.திருமாவளவனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியம் ... 23

மனந்திறந்து... 13

தமிழ்த் தேசியம் என்று அறியப்படும் களத்தில் ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்களிடம் என் பட்டறிவையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழகச் சமூக வரலாறு - வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற என் நூலைப் படித்து என்னை முதலில் தொடர்பு கொண்டவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சியார்சு விருமாண்டி என்பவர். வினாப்படிவத்தின் அடிப்படையில் செய்திகள் திரட்ட இருப்பதாகவும் அது பற்றி விளக்க வேண்டுமென்றும் கேட்டார். அவர் குடியிருந்த வையை அணைப்பகுதிக்கு இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன். அங்கு அவரிடம் பணிபுரியும் ஊக்குவிப்பாளர்கள் என்போருக்கும் விளக்குமாறு கேட்டுக்கொண்டார். அடுத்த முறை அவர்கள் சில செய்திகளைத் திரட்டி வந்திருந்தனர். அவர் ஏற்கனவே திரட்டி வைத்த செய்திகளிலிருந்து எனக்குத் தெரியவந்தது, அந்த வட்டாரத்திலுள்ள ஊர்களின் சாதி - சமய அமைப்பு, பொருளியல் அமைப்பு, தொழில்கள், இயற்கை வளங்கள், மக்கள் தொகை, கால்நடைச் செல்வம் என்று அனைத்துச் செய்திகளையும் திரட்டி ″உதவி″ வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விடுக்கின்றனர். எந்த வகை உதவி, எவ்வளவு உதவி தேவை என்பதை முடிவு செய்ய இந்தச் செய்திகள் தேவைப்படுவதாக அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தொலைதூர நாட்டில் இருந்துகொண்டே தமிழகத்தில் அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் ஒரு சாதி அல்லது சமய மோதலைத் தூண்டி விடலாம், எந்தத் தொழிலை முடக்கலாம், எந்த மூலப் பொருளைக் கொள்ளையடிக்கலாம் என்று திட்டமிட முடியும். இது போன்ற செய்திகள் இறுதியில் பெரும்பாலும் அமெரிக்க அயலுறவுத் துறையைச் சென்றடைகின்றன. அவற்றை வைத்து நம் நாட்டுக்கு அல்லது மாநிலத்துகுரிய ″வளர்ச்சி உத்தியை″ அவர்கள் வகுக்கிறார்கள். இந்த உண்மையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த இலத்தீன் அமெரிக்காவில் குமுக மாற்றங்கள் என்ற ஆங்கில நூலைப் படித்ததிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. திறன்மிக்க மாந்தநூல், குமுகவியல் வல்லுநர்களைக் கொண்டு ஏழை நாடுகளான தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டு அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அந்நூல் அமைந்திருந்தது. அந்நாடுகளின் ″வளர்ச்சிக்கு″ அமெரிக்கா அதுவரை செய்திருந்த ″உதவிகள்″, அவற்றால் அந்த நாடுகளில் ஏற்பட்டிருந்த குமுக மாற்றங்கள், அந்த மாற்றங்கள் அமெரிக்க நலன்களுக்கு உகந்தனவா, அல்லவா? உகந்தனவாயின் இன்று மாறியுள்ள புதிய சூழ்நிலையில் அந்த ″உதவி″ உத்தியில் தேவைப்படும் மாற்றங்கள் யாவை? அல்லவாயின் எந்தப் புதிய உத்தியை வகுக்க வேண்டும் என்பன போன்ற கருத்துரைகளைக் கூறுவது தான் அந்த நூலின் நோக்கம். ஒரு நாட்டில் நடுத்தர வகுப்பை விரிவுபடுத்தி வலுப்படுத்திவிட்டால் அங்கு ″புரட்சிகள்″, அதாவது தங்களால் கணித்தறிய முடியாத அல்லது தங்கள் நலனுக்கு எதிரான திடீர்த் தலைகீழ் மாற்றங்கள் நிகழாது என்ற அடிப்படையிலும் அந்த ஆய்வின் அணுகல் அமைந்திருந்தது. தன் அருகிலிருப்பதால் தன் விருப்பம் போல் ஆட்சிகளை எளிதில் மாற்றிக்கொள்ள வசதியாயிருக்கும் இந்தத் தென்னமெரிக்க நாடுகளிலும் தன் கட்டுப்பாட்டிலிருக்கும் பிலிப்பைன்சு போன்ற நாடுகளிலும் கையாண்டு கள ஆய்வு செய்து பார்த்த பின்னர் தான் அமெரிக்கா ஏழை நாடுகளுக்கான உலகளாவிய ″உதவி உத்திகளை″ வகுக்கிறது என்பது நான் பொதுவாக அறிந்துகொண்ட உண்மை.

இதுபோன்ற தேவைக்குத் தான் ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்கள் பயன்படுகின்றன என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் வையை அணைப் பகுதியில் இறுதியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி மிகப் பெரும் திருவிழாப் போல நடந்தது. பல்லாயிரம் எண்ணிக்கையில் ஊர்ப்புறத்துப் பெண்களைத் திரட்டி ஒரு நிகழ்ச்சியை அவர் நடத்திக் காட்டினார். வெளிநாட்டுப் பணம் நம் நாட்டில் என்னவெல்லாம் செய்ய முடியும்? நம் மக்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அயலார்கள் நினைத்தபடி அவர்களை ஆட்டிவைக்க முடியும் என்ற இந்தப் பட்டறிவு என்னை மலைக்க வைத்துத் திகைக்க வைத்துத் திடுக்கிட வைத்தது. அத்துடன் அவருக்கும் எனக்குமிருந்த தொடர்பு விட்டுப்போனது. தொடர்ந்து அவர் செயல்பட்டாரா என்பது தெரியவில்லை. அண்மையில் கந்துவட்டியை எதிர்த்து ஓர் இயக்கம் நடத்துவது குறித்த அறிக்கை ஒன்று அவரிடமிருந்து வந்துள்ளது.[1]

இந்தப் பட்டறிவின் போது தான் வினாப்பட்டியலின் அடிப்படையில் திரட்டப்பட்ட செய்திகள் எனக்குக் கிடைத்தன. செய்தி திரட்டியவர்கள் பல செய்திகள் தமக்கே தெரியும் என்ற எண்ணத்தில் தாங்களாகவே நிரப்பிக் கொண்டுவந்தனர். அவர்களைச் சில குறுக்குக் கேள்விகள் கேட்ட போது தான் தாங்கள் பொதுவாக நம்புவதற்கு மாறான செய்திகள் இருப்பது அவர்களுக்கே உறைத்தது. வினாப்பட்டியலின் அடிப்படையில் செய்தி திரட்டுவோருக்கு விரிவான பயிற்சியும் வகுப்புகளும் இன்றியமையாதவை என்பது புரிந்தது. அத்துடன் இந்தப் பணி எவ்வளவு மாபெரும் பரிமாணம் கொண்டது என்று ஏற்கனவே நான் அறிந்திருந்த கருத்து உறுதியானது. ஒரு மாபெரும் மக்களியக்கப் பின்னணியில் தங்கள் வாழ்நாளை இந்த ஆய்வுக்கென்றே காணிக்கையாக்கிவிட்ட ஒரு தொண்டர்படையால் தான் இந்த மலைப்பூட்டும் பணியை நிறைவேற்ற முடியும்.

″தொண்டு″ நிறுவனங்களுடனான என்னுடைய குறிப்பிடத்தக்க இன்னொரு பட்டறிவு மதுரையிலுள்ள இறையியல் கல்லூரியில் ஏற்பட்டது. மதுரை இறையியல் கல்லூரி தென்னிந்தியத் திருச்சபை எனும் சீர்த்திருத்தக் கிறித்துவப் பிரிவின் சமய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனமாகும். ஒரு சமயத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்களின் ஒருங்கிணைப்பகமாக அது செயற்பட்டது. இப்போது அந்த ஒருக்கிணைப்புப் பணியில் மிகப் பெரும் பகுதியை அரசே எடுத்துக்கொண்டுவிட்டது. அந்த இறையியல் கல்லூரியில் பணியாற்றுவோரில் ஒருவர் தியாபிலசு அப்பாவு. அவர் பரட்டைச் சாமியார் என்றோரு பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். அந்நேரத்தில் வெளிவந்திருந்த பதினாறு வயதினிலே என்ற திரைப்படத்தில் ரசனிகாந்த் ஏற்றிருந்த போக்கிரிக் கதைமாந்தனின் பெயர் பரட்டை. கலை - இலக்கியங்கள் மூலம் மக்களுக்கு ″விழிப்பூட்டுவது″ என்ற பெயரில் இந்தக் கவர்ச்சிப் பெயரை அவர் சூடிக் கொண்டார். அவர் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார். கழக(சங்க) இலக்கியங்கள், தொல்காப்பியம் ஆகியவற்றின் காலத்தை நிறுவுவதற்கான கருத்தரங்காக அது அறிவிக்கப்பட்டது. ஏதோ சில கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் உள்ள சில சொல்லாட்சிகளை வைத்துக் கழக இலக்கியங்களும் தொல்காப்பியமும் கி.பி.10ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியவை என்று முடிவு செய்யலாமா என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்தது. கருத்தரங்கின் நோக்கம் பற்றி நான் கேள்வி கேட்டுச் சண்டையிட்டேன். ஆனால் அங்கு வந்திருந்த பிற அறிஞர் பெருமக்கள் எந்தப் பதட்டமும் பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தனர். தமிழ், தமிழ்த் தேசியம் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்கள் என்று அறியப்பட்டோரும் மார்க்சியச் சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்டோரும் அங்கு இருந்தனர். அவர்களில் க.ப. அறவாணனார் தான் திரும்பிச் செல்வதற்கான முதல் வகுப்புத் தொடர்வண்டிப் பயணச் சீட்டுக்காக அதிகாரத்துடன் ஆணையிட்டது கண்டு நான் வியந்து வாயடைத்துப்போனேன். இத்தகைய ″தன்னார்வ″ அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்கள் தரும் பணத்திற்குப் பற்றுச்சீட்டுகளில் ஒட்டிக் கையொப்பமிடுவதற்கென்று கையில் வருவாய் முத்திரை வில்லைகளுடன் அலையும் ஓர் அறிஞர் திருக்கூட்டத்தை அங்கு கண்டு நான் அதிர்ந்தேன். இவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டவர் போல் கருத்தரங்கு மேடைகளில் மோதிக்கொள்வர். ஆனால் அது நாடக மேடையில் நடிகர்கள் போடும் சண்டையைப் போன்றது தான் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இறையியல் கல்லூரி வளாகத்தில் பணிபுரியும் சில இளைஞர்களோடு நான் பேசிப்பார்த்ததில் ஓர் உண்மையைத் தெரிந்து கொண்டேன். தமிழகத்திலுள்ள தலைசிறந்த, அறிவுத்திறனும் ஆற்றலும் கொண்ட இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து எந்தச் சூழ்நிலையையும் கேள்வியையும் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்குப் பயிற்சியளித்து வைத்துள்ளனர். நம் நாட்டு வளர்ச்சிநிலைக்குப் பொருந்தாத கல்வி முறையும் உயர்கல்வி அமைப்பும் அதற்கு ஈடுகொடுக்கத்தக்க வேலைவாய்ப்பின்மையும் இந்த ஆற்றல் மிக்க இளைஞர்களை அயல் விசைகளுக்குப் பணியாற்றுவதற்கு உள்நாட்டிலும் துரத்துகின்றன, வெளிநாடுகளுக்கும் துரத்துகின்றன.

இந்த இளைஞர்களுக்கு ″மார்க்சியம்″ அதாவது பாட்டாளியக் கோட்பாடு கற்பிக்கப்படுகிறது. அதனை அவர்கள் மக்களிடையில் பரப்புகிறார்கள். திருமண்டலங்களின்(டயோசிசன்களின்) மூலமாகவும் இந்தக் கருத்தைப் பரப்புகிறார்கள். உள்நாட்டில் மூலதனம், பணம் வைத்திருப்போர், அவர்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் கருத்தை உருவாக்குவது தான் இதன் நோக்கம். வெளியிலிருந்து கொட்டும் மூலதனத்தையும் தொழில்களையும் தடுத்து நிறுத்த இம்மக்களால் எதுவும் செய்ய முடியாது என்பது இதன் மறுபக்கம். கலை இலக்கியத்தால் குமுக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற பொய்ம்மையைப் பரப்பிக் கலைஞர்களை உருவாக்கிக் கலை நிகழ்ச்சிகளையும் இவர்கள் நடத்துகிறார்கள். மார்க்சியம் என்ற பெயரில் பாட்டாளியக் கோட்பாட்டையும் மாவோயியத்தின் பண்பாட்டுப் புரட்சி என்ற பெயரில் வெறும் கலை இலக்கிய முயற்சிகளையும் புரட்சிகரமானவை என நம்பும், வெளியிலுள்ள, முற்போக்கு, குமுக மாற்றம் ஆகியவற்றில் நாட்டமுள்ள இளைஞர்களையும் இவர்களால் எளிதில் வயப்படுத்திவிட முடிகிறது.

இவையன்றி, திடீரென்று புதுப்புதுப் பெயர்களில் தற்காலிகக் கூடாரங்கள் போன்ற அமைப்புகள் தோன்றி மறையும். தமிழகம், தமிழ்த் தேசியம் தொடர்பான ஒரு தலைப்பு பற்றிக் கருத்தரங்குகளும் மாநாடுகளும் நடத்திவிட்டுக் கலைந்து போகும். அவர்கள் வலியுறுத்திக் கேட்பது பேச்சாளர்கள் தங்கள் உரையைக் கட்டுரையாகச் ″செழுமைப்படுத்தி″க் கொடுக்க வேண்டுமென்பது. அவற்றை அச்சிட்டு வெளியிடுவதாகக் கூறுவார்கள். கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வெளியிடுவதாகக் கூறுவோரும் உண்டு. கட்டுரை எழுதாதவருடைய உரை ஒலிப்பேழையில் பதிவு செய்யப்படும். நிகழ்ச்சி நடத்துவோர் தாம் பெறும் பணத்துக்கு ஈடாக இக்கட்டுரைகளையும் ஒலிப் பேழைகளையும் கொடுப்பர். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பண உதவி செய்து அவற்றைப் பெறுவோரின் நோக்கம் நம் நாட்டில் ஒவ்வொரு துறை குறித்தும் அவ்வப்போது நிலவும் சிந்தனை ஒட்டங்களை அறிந்து அவற்றுக்கேற்பத் தங்கள் உத்திகளை மாற்றியமைத்துக் கொள்வது தான். நானறிந்த வரையில் இத்தகைய கருத்தரங்குக் கட்டுரைத் தொகுப்புகள் பொது விற்பனைக்கு வந்ததில்லை.[2]

இவை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தாலும் நான் கலந்து கொள்வதில்லை. ஒரு முறை மதுரையில் தமிழ்த் தேசியம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பெயர் கொடுத்துவிட்டு இறுதியில் செல்லாமலே இருந்து விட்டேன். என் இசைவைப் பெற்றுச் சென்ற பேரா.தொ.பரமசிவம் அவர்களுக்கு மிக வருத்தம்.

இறுதியாக நான் கலந்து கொண்ட இத்தகைய கருத்தரங்கு தமிழகப் பொருளியல் தற்சார்பை நோக்கி .... பெயரில் முகிழ் என்று அழைக்கப்பட்ட தற்காலிக அமைப்பு மதுரையில் நடத்தியதாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அழைப்புக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றும் அவர்கள் பொய்முகத்தை அவர்கள் கண்ணெதிரிலேயே உரித்துக்காட்ட வேண்டும் எனவும் எண்ணியே கலந்துகொண்டேன். கருத்தரங்கில் இயற்கை வேளாண்மை பற்றிப் பேசிய கோ. நம்மாழ்வார் அசோசுப் பைரில்லமும் உயிரித் தொழில்நுட்பங்களும் மண்புழுத் தொழில்நுட்பமும்[3] நம் மரபுத் தொழில்நுட்பங்கள் என்றார். அவை நமக்குரியனவையல்ல; அண்மையில் பிறர் புகுத்தியவை என்று சுட்டிக் காட்டி நாமே புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டுமேயோழிய அயலார் தொழில்நுட்பங்களை நம் மரபுத் தொழில்நுட்பங்கள் என்று பொய் கூறி அவற்றுக்கு நாம் உரிமக் கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கக் கூடாது என்றும் நம்மிடம் அனைத்துமே உள்ளன என்ற தவறான கருத்தை இளைஞர்கள் மனதில் விதைத்து அவர்களைச் செயலறச் செய்வது தவறு என்றும் இடித்துரைத்தேன். அவர் எந்த மறுமொழியும் மறுப்புரையும் கூறவில்லை. சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிப் பேசியவர்களிடம் அதற்குத் தீர்வு கூறுங்கள் என்று கேட்ட போது நிகழ்ச்சியின் முடிவில் கூறப்படும் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் கூறவில்லை. பார்வையாளர் ஒருவர் கலந்துரையாடலின் போது தான் கருவிகளையே வெறுப்பதாகக் கூறினார். உங்கள் உணர்வுகள் நேர்மையாயிருந்தால் திரும்பிச் செல்லும் போது நடந்து தான் செல்ல வேண்டியிருக்கும், ஏனென்றால் கட்டை வண்டி கூட ஒரு கருவிதான் என்றேன். இவ்வாறு தமிழகப் பொருளியல் தற்சார்பு என்ற பெயரில் அதற்கு எதிரான கருத்துகளையே பெரும்பாலோர் முன்வைத்தனர். அவற்றை அவ்வப்போதே மறுத்தேன்.

எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட தலைப்பு தமிழகப் பொருளியலில் தரகு வாணிகர்களின் பங்கு என்பதாகும். அது தமிழகத்தில் தேசிய முதலாளியம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தும் தலைப்பு என்பதால் உலக வாணிகமும் உள்நாட்டுத் தரகர்களும் என்று தலைப்பை மாற்றுமாறு எழுதினேன். ஆனால் நிகழ்ச்சி நிரலில் இந்த மாற்றம் இடம் பெறவில்லை. ஒவ்வோரு பேச்சாளரும் பேசி முடித்த பின் என் எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு என் உரைமுறை வந்தபோது உலக வாணிக வரலாற்றையும் அது உலக நாடுகளிலுள்ள அடித்தள மக்களைச் சுரண்டி உலகளாவிய ஒரு மேட்டுக்குடியினருக்கு பணிபுரிந்து வந்துள்ளதையும் விளக்கிவிட்டு அதை முறியடிப்பதற்குத் தேசிய முதலாளியப் புரட்சி தான் தீர்வு என்று கூறினேன். பாட்டாளியக் கோட்பாட்டாளரும் பல்வேறு சிக்கல்களை எடுத்துவைத்துச் செயற்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தாம் அயல்விசைகளின் நலனுக்குப் பாடுபடும் உள்நாட்டுத் தரகர்கள் என்று கூறினேன். அதையே விரிவாக்கி நீண்ட கட்டுரை எழுதி விடுத்தேன். இதில் பல்வேறு ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்களின் செயற்பாடுகளை விரிவாகக் காட்டியிருந்தேன். அந்தக் கட்டுரைத் தொகுப்பு இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. என் கட்டுரையையும், ″இன்று தமிழகத்தில் நிலவும் சிந்தனையோட்டங்களில் ஒன்று″ என்று இத்தகைய கருத்தரங்குகளின் பின்னணியிலுள்ளோர் பயன்படுத்தும் வாய்ப்புள்ளதையும் மறுப்பதற்கில்லை.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] இதன் பின்னர் அவர் அழைப்பின் பேரில் நானும் தோழர் வெள்ளுவனும் ஒருமுறை அவரை வையை அணையில் சந்தித்து உரையாடினோம். அவர் சாதியரான பிரான்மலை (பிறமலை)க் கள்ளர்களிடம் கந்து வட்டி மூலம் திரண்டுள்ளதாக அவர் குறிப்பிட்ட கோடிகோடியான பணத்திரட்சியை அவர்கள் முதலீட்டுக்காகத் திருப்பமாட்டார்கள் என்று அவர் விடப்பிடியாகக் கூறிவிட்டார். அதே நேரத்தில் கந்துவட்டிக்கு எதிராக அவர் நடத்தும் இயக்கத்தின் மூலம் வட்டி கொடுத்த தன் சாதியினருக்கும் கடன் பெற்றோருக்கும் ″கட்டப் பஞ்சாயம்″ நடத்தி அவர் காலங்கழிப்பதாக எனக்குப் புரிந்தது. அவரது ″கந்து வட்டி எதிர்ப்பியக்கத்″தின் பின்னணியில் ஒரு மார்வாரி இருப்பதாகவும் எனக்குப்பட்டது. ஒரு சுவரொட்டியிலிருந்த ஒருவரின் பெயர் பற்றிக் கேட்டபோது நேரடியாக விடை சொல்லாமல் அவர் மழுப்பினார். இந்திரா காந்தியின் கடன் தள்ளுபடிச் சட்டத்தினால் முறையான வட்டித்தொழிலிலிருந்து நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அகன்ற இடத்தில் அவர்களது அடியாட்களாக அதுவரை செயற்பட்ட முக்குலத்தோர் சட்டத்துக்குப் புறம்பான கந்துவட்டித் தொழிலில் நுழைந்தனர். இப்போது அவர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தையும் கைப்பற்ற சியார்சு வருமாண்டியைக் கருவியாக்குகிறார்களோ மார்வாரிகள் என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. இன்னொரு புறம் தங்கள் சாதியினரான பிறமலைக் கள்ளர்கள் தொடர்ந்து அயல் படையெடுப்புகளை எதிர்த்து வந்தவர் என்றும் வறுமையில் வாடும் அவர்களுக்கு கஞ்சா வளர்க்க உரிமை கேட்டு அவர்களைத் திரட்டிப் போராடப் போவதாகவும் கூடக் கூறினார்.

[2] பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகனார் திரு.பொழிலன் அண்மையில் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கும் தமிழக அரசியல் ஆய்வு நடுவம் என்ற அமைப்பின் செயல்பாடு பற்றிய அவரது விளக்கம் இத்தகையதே. காலமுறையில் கருத்தரங்குகள் நடத்தி கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுவர். ஆனால் பல்வேறு கருத்துகளிலிருந்து தமிழக மேம்பாட்டுக்கான தங்கள் கருத்தை எடுத்துவைக்கவோ அலசவோ செய்யப்போவதில்லை. படிப்போரின் முடிவுக்கே அதை விட்டுவிடுவர். தொகுப்பை வெளியிடுவது தான் பிறரிடமிருந்து இங்கு வேறுபாடு.

[3] எல்லா நாட்டு மண்ணிலும் இருப்பது போல் நம் நாட்டு மண்ணிலும் மண்புழு(குமரி மாவட்டத்தில் முன்பு நிலப்புழு என்றும் கூறுவர்) உண்டு. ஆனால் அதை நாம் நிலவளத்தை உருவாக்கும் ஒரு ஊக்கியாகக் கருதிச் செயற்பட்டதில்லை. காசு வாங்கிக்கொண்டு வாத்துகளை மேயவிட்டு அழித்தது தான் நாம் செய்தது.