12.12.15

திராவிட மாயை - 30


தொடுப்பு – 5
தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்
முன்வைக்கும்
தமிழக மறுமலர்ச்சித் திட்டங்கள்
உடனடி மற்றும் நீண்டகாலத் திட்டங்களும்
உடனடியாக முன்வைக்கப்பட வேண்டிய முழக்கங்களும்

1.நீண்டகாலத் திட்டங்கள்:
அ. பொருளியல்

க . மூலதனம் :
1.         வருமானவரியை முற்றாக ஒழிக்க வேண்டும்.
  2.         10 கோடி உரூபாய்களும்[1] அதற்கு மேலும் மூலதனமுள்ள நிறுவனங்களுக்கு 49 நூற்றுமேனிக்கு மிகாமல் முனைவோரும் எஞ்சிதைப் பங்குப் பத்திரங்கள் மூலமாகவும்தான் மூலதனம் திரட்ட வேண்டும்.
 2.1.       பங்குப் பத்திர வெளியீட்டில் முகமதிப்புக்கு மேலே விலை நிறுவக் கூடாது.
 2.2.1.     பங்குகளின் மறுவிற்பனையும் மறுவாங்குதலும் அந்தந்த நிறுவனங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.
 2.2.2.     அவ்வாறு மறுவிற்னையாகும் விலைதான் அந் நிறுவனப் பங்குகளின் எதிர்கால முகமதிப்பாக இருக்கும். அந்த மதிப்பின் நூற்றுமேனியில்தான் ஈவுத்தொகை கணக்கிடப்பட வேண்டும்.
 2.2.3.     பங்குகளின் மறுவாங்குதலால் நிறுவனம் பண நெருக்கடிக்கு உள்ளாகாமல் தவிர்க்க மொத்த மூலதனத்தின் ஒரு பகுதியை காப்புப் பணமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதையும் மொத்த முதலீட்டினுள் கணக்கிட வேண்டும்.
2.3.       தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன்கள் மூலம் மூலதனம் திரட்டக் கூடாது. பங்குப் பத்திரங்கள் மூலம்தான் திரட்ட வேண்டும்.
2.4        நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு ஆதாயத்தில் ஒரு குறிப்பிட்ட நூற்றுமேனியை பங்கு பத்திரங்களாக வழங்க வேண்டும்.
3.1        தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலதனக் கடன் வழங்கக் கூடாது.
3.2.       சேமிப்பு, நடப்புக் கணக்குகள் பராமரித்தல், குறுகிய கால வைப்புகள், கேட்போலைகள், பட்டியல்கள் செல்லாக்குதல், ஊர்திக் கடன்கள், தனியார் வீடமைப்புக் கடன்கள், நகைக் கடன்கள், மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், அரசு மற்றும் உள்ளூராட்சிகளுக்குரிய கட்டணங்களை வாங்கிச் செலுத்துதல் என்ற எல்லைக்குள் அவற்றின் செயற்பாடுகளை அடக்க வேண்டும். தங்கள் இயல்புக்கேற்ப காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்களைச் செயற்படுத்தலாம்.

கா. அறிவியல் - தொழில்நுட்பம்:
1.                  ஒவ்வொரு வட்டத்துக்கும் ஓர் அறிவியல் - தொழில்நுட்பக் காப்புரிமை அலுவலகம் நிறுவ   வேண்டும்.
                காப்புரிமை கேட்டு வரும் வேண்டுகைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும்.
2.                   முதலில் செய்பொருள் அல்லது செய்பணி காப்புரிமம் வழங்கிவிட்டு வழங்கிய நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் செய்முறைக் காப்புரிமம் வழங்கிவிட வேணடும்.
3.                   உள்நாட்டில் காப்புரிமம் பெற்ற தொழில்நுட்பம் இருந்தால் அதே செய்பொருள் அல்லது செய்முறைக்கு தொழில்முனைவோர் வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யக் கூடாது. ஏற்கனவே இறக்குமதியான தொழில்நூட்பம் இருந்தால் அதைக் கைவிட வேண்டும்.

கி. மூலப்பொருள்களும் செய்பொருள்களும்:

1.                    புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களையும் மூலப் பொருள்களையும் அவற்றிலிருந்து செய்யப்படும் பண்டங்களையும் ஏற்றுமதி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.
2.                    நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள், அவற்றின் அளவு, இறக்குமதியாகும் பொருட்கள், அவற்றின் அளவு ஆகியவை பற்றிய ஒரு முழுமையான வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஒரே பொருள் ஒரே நேரத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆனால் அதன் சராசரி நிகர ஏற்றுமதி - இறக்குமதியை முடிவு செய்து அந்த எல்லைக்குள் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
3.                    இறக்குமதியைத் தேவையாக்கும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தும் தொழில்களில் அவற்றுக்கு மாற்றாக உள்நாட்டில் கிடைக்கும் மூலப் பொருள்களிலிருந்து நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தொழில்நுட்பங்களுக்கு எல்லா வகை ஊக்குவிப்புகளையும் வழங்க வேண்டும். மூலப் பொருள் இறக்குமதியைத் தேவையாக்கும் தொழில்நுட்பங்களை ஒரு காலவரையறைக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
4.                    மீண்டும் கிடைக்கத்தக்க மூலப் பொருட்களிலும் முதல் தரம் நம் மக்களின் நுகர்வுக்கு மேல் எஞ்சியிருந்தால்தான் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

கீ. பணப்புழக்கம்:
1.                   பணி சார்ந்த அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்கவும் பாராமரிக்கவும் பற்றாக்குறைப் பணமுறை(Deficit Financing) மூலம் பணத்தாள்களை வெளியிட்டு நிறைவேற்ற வேண்டும்.
2.                   உலக அளவில் வேறெந்த நாட்டின் நாணயத்துக்கும் சரிசமமாக நம் நாணய மதிப்பையும் கொண்டுவரும் நோக்கத்துடன் உடனடியாக நம் நாணய மதிப்பில் குறிப்பிடத்தக்க உயர்வை அடுத்த ஆண்டு வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் முன் அரசு அறிவிக்க வேண்டும்.
3.                   அழுக்கான அல்லது கிழிந்த பணத்தாள்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அல்லது வாடிக்கையாளரிடமிருந்து வாங்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.                   பணம் கொடுக்கல் வாங்கலில் பணம் கொடுத்தவரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
5.               வாக்குத்தத்தப் பத்திரத்தின் மீது கடன் கொடுப்போருக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
6.               வாக்குத்தத்தப் பத்திரத்தின் செல்லுப்படிக் காலம் 3 ஆண்டுகள்.
7.               எளிய வ‌ட்டியாயிருந்தால் ஆண்டுக்கு 12%க்கு(ஒரு வட்டி) மிகாமலும் கூட்டு வட்டியாயிருந்தால் 6%க்கு(அரை வ‌ட்டிக்கு) மிகாமலும் ‌இருக்க வேண்டும்..
8.                   ஈட்டுக் கடனுக்கு கூட்டுவ‌ட்டியில் கடன் வழங்குவது தடை செய்யப்படும்.


ஆ. நிலவுடமையும் வேளாண்மையும்
க. நிலவுடமை:
1.         நிலவுச்சவரம்பை உடனடியாகக் கைவிட வேண்டும்.
2.         குத்தகைப் பயிர் முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். குத்தகையிலிருக்கும் நிலத்தில் குத்கையாளரின் பங்காகிய 40%க்குச் சமமான மதிப்பை அல்லது நிலத்தை அவருக்கு வழங்கிவிட்டு மீதியை உடமையாளர் சொந்தப் பயிரிட வேண்டும், இல்லையாயின் விற்றுவிட வேண்டும். அல்லது 60% மதிப்பைக் குத்தகையாளரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவருக்கு முழு நிலத்தையும் கொடுத்துவிட வேண்டும். அல்லது மொத்த நிலத்தையும் விற்று 60 - 40 என்று பங்கிட்டுக் கொள்ள வேண்டும். மழை பொய்த்தல் போன்ற இயற்கையான காரணங்கள் இன்றி ஓராண்டுக்கு மேல் நிலத்தைத் தரிசாகப் போட்டால் அரசு பறித்து ஏலத்தில் விற்றுப் பணத்தை உடைமையாளருக்குக் கொடுத்து விட வேண்டும்.
3.         நிலங்களுக்குப் பட்டயம் வழங்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். உரிமை மாற்றத்துக்கு விலை அல்லது நன்கொடை ஆவணமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
4.         பிறர் நிலத்தை அவரறியாமலோ, வேலிகளை அல்லது எல்லைகளை நகர்த்தியோ பயன்படுத்துவோரை அல்லது அகப்படுத்துவோரைத் திருடர்கள் என்று கருதித் தண்டிக்க வேண்டும்.
5.         தன் தந்தை அல்லது முப்பாட்டனார் சொத்தில் தன் மக்களுக்கு இயற்கையாகவே இருக்கும் உரிமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தான் எந்த விதமான பங்கீட்டு ஆவணமும் ஏற்படுத்தாமல் இறந்துவிட்டால் மட்டும் தனது மக்களுக்கு அனைத்துச் சொத்துகளிலும் சம உரிமை வேண்டும்.
6.       நில மறு அளவு என்ற பெயரில் உள்ளூர் உசாவல் என்று சொல்லி விலை அல்லது நன்கொடை அல்லது பாகப்பிரிவினை ஆவணங்களுக்கு மாறாக விருப்பம் போல் நில அளவைத் துறையினர் உரிமையை மாற்றுதல் நிறுத்தப்பட வேண்டும்.
7.         உரிமை மாற்று ஆவணம் பதிவலுவலகத்தில் பதிவானதிலிருந்து அதற்குத் தேவைப்படும் உட்பிரிவு, நில அளவை, வரைபடத்தில் திருத்தம், பட்டயம் மாற்றம் முதலிய அனைத்தையுமே ஆவணம் பதியப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் பதிவுத்துறை செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில் பொறுப்பான பதிவுத் துறை அலுவலர் சொத்தைப் பெற்றுக் கொண்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
8.         வங்கிகள் நிலத்தின் மீது கடன் கொடுத்தால் அதற்கான ஆவணம் பதிவலுவலகத்தில் முறைப்படி பதியப்பட்டு வில்லங்கத்தில் காட்டப்பட வேண்டும்.
9.         து போல் வழக்கு மன்றங்களின் தீர்ப்பினால் நிலவுடைமையில் ஏற்படும் பாதிப்புகளையும் வழக்கு மன்றங்கள் பதிவு அலுவலகங்களில் வில்லங்கமாகப் பதிவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10.        வில்லங்கச் சான்று வழங்கும் போது அதில் தவறிருந்தால் அதற்கான இழப்பீட்டை அதற்குப் பொறுப்பான அலுவலர் வழங்க வேண்டும். வங்கி அல்லது நயமன்றம் உரிய காலத்தில் செய்தி தெரிவிக்காததால் தவறு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பான வங்கி அல்லது நயமன்ற அலுவலர் இழப்பீடு வழங்க வேண்டும்.
11.        நிலத்திற்கு பத்திர மதிப்பைக் கணக்கிடுவதற்கு வழிகாட்டி மதிப்பு நிறுவும் அதிகாரத்தை அரசு கைவிட வேண்டும்.
12.        ஒரு அசையாச் சொத்தை விற்பனை செய்யும், அடமானம் அல்லது ஒற்றிவைக்கும் தொகையின் மதிப்பு, அச் சொத்தை வாங்கிய தொகை அதை வாங்கிய காலத்தின் பண மதிப்பில் ஒப்பிட குறிப்பிடத்தக்க அளவு இருந்தால் சொத்தை வாங்கிய ஆவணத்துக்கான கூடுதல் பத்திர மதிப்பை அடமானம் அல்லது ஒற்றிவைப்பவர் பதிவு அலுவலகத்துக்குச் செலுத்த வேண்டும்.

கா. வேளாண்மை:
1.                   ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைகள் அமைக்க இயன்ற வகையிலெல்லாம் அரசு உதவ வேண்டும்.
2.         நெற்கதிரை சாலைகளில் போட்டுப் போரடிப்பதைத் தடைசெய்து நெற்களங்களை அமைத்து அவற்றைப் பராமரிக்க முன்வருவோருக்கு அரசு ஊக்கம் அளிக்க வேண்டும்.
3.         வேளாண் விளைபொருள் வாணிகத்தில் உரிமம் பெற்ற வாணிகர் முறையைக் கைவிட வேண்டும். ஆர்வமுள்ள எவரும் அவற்றை வாங்கவும் விற்கவும் உரிமை வேண்டும்.
4.         நெல், அரிசி நடமாட்டத்துக்கும் இருப்பு வைப்பதற்கும் உள்ள அனைத்துத் தடைகளையும் உடனடியாக நீக்க வேண்டும்.
5.         பங்கீட்டுக் கடைகளை அரசு உடனடியாக மூட வேண்டும். எந்தப் பொருளுக்கும் இன்று தட்டுப்பாடு இல்லை. ஏற்றுமதி இறக்குமதியைக் கட்டுப்படுத்தி முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்தினால் மக்களின் வாங்குதிறனுக்குள் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்.
6.         விளைபொருட்களான பழங்கள், காய்கறிகளைச் சிப்பமிடவும் கடவவும் சிறந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றைச் சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
7.         உடனடித் தேவைக்கு மிஞ்சிய காய்கறிகளையும் பழங்களையும் பக்குவப்படுத்தும் தொழிலகங்களை அமைப்போருக்கு அனைத்று வகை ஊக்குவிப்புகளும் வழங்க வேண்டும்.
8.         வேளாண்மையிலும் நீர் மேலாண்மையிலும் புதிய முறைகளைப் பயன்படுத்தும் தனியாருக்கும் பண்ணைகளுக்கும் அனைத்து ஊக்குவிப்புகளையும் வழங்க வேண்டும்.
9.         பெரும் கால்நடைப் பண்ணைகளையும் பால் பண்ணைகளையும் உருவாக்குவதற்கு வேளாண்மைக்குப் பொருந்தாத தரிசு நிலங்களை அரசு விலைக்கு வாங்கி குத்தகை அடிப்படையில் அல்லது தவணை முறையில் பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
10.        ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றுக்கும் பொதுவாக, புலாலுணவுக்கு எதிராகப் பரப்பப்படும் தவறான கருத்துகளை முறியடித்து உடல் வலிவுக்கும் பொலிவுக்கும் அவற்றின் எளிமையையும் இன்றியமையாமையையும் எடுத்துரைத்து அவற்றின் நுகர்வைப் பரவலாக்க வேண்டும்.
11.        நெய் போன்ற பால்படு பொருட்களை குசராத்து அமுல் நிறுவனத்துக்கு மிக மலிவான விலையில் விற்பதை மாநிலப் பால் பண்ணை நிறுத்தி அவற்றைத் தமிழக மக்களுக்கு தானே நேரடியாக விற்க வேண்டும்.
12.        வேளாண் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள், கோழிப் பண்ணைகள், மீன்பிடிப்பு போன்ற அனைத்தையும் தொழில் முதலீட்டுக்கு நிறுவிய வரையளவுகளின் அடிப்படையில் பங்கு மூலதனத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

இ.தொழில் வளர்ச்சி
1.         புதிய தொழில்களுக்கு ஒப்புதலளிக்கும் அதிகாரம் ஒன்றிய அலுவலகங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
1.                 தொழிற்சாலைகள் அமைப்பதற்கான விதிமுறைகளை வகுத்து அவற்றிற்கிசைய முன் ஓப்புதல் பெறாமலே தொழில் தொடங்க உரிமை வழங்க வேண்டும்.
2.                 தொடங்கிய தொழில்களைப் பின்னாய்வு செய்து தேவையான மாற்றங்களைப் பரிந்துரைத்துச் சீர் செய்ய வேண்டியது இவ் வலுவலகத்தின் பணி.
3.                 அறிவுரைப்படி சீர்செய்யத் தவறினாலோ, சீர் செய்ய முடியாதபடி தொழிலகம் அமைக்கப்பட்டிருந்தாலோ அவற்றை மூடிவிட நடவடிக்கை எடுக்கலாம்.

. ஆற்றல்
1.         மின்னாற்றல் தேவைக்காகக் கன்னெய்யத்தை இறக்குமதி செய்வதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
2.         பெரும் தொழிலகங்களில் வாங்கப்படுகிற மின்னாக்கிகளுக்குத் தமிழக அரசு 80 நூற்றுமேனி மானியம் வழங்கிதைப் போல் நாட்டில் தாராளமாகக் கிடைக்கும் வெய்யிலையும் உலகிலேயே தமிழகத்தில்தான் மிகுதியாகக் கிடைக்கிறதெனப்படும் அளமியத்தையும் பயன்படுத்திக் கதிரவ ஆற்றலை மிகப் பெருமளவில் பயன்படுத்துவதற்கு 95 நூற்றுமேனி மானியம் வழங்க வேண்டும்.
3.         பெரும் கால்நடைப் பண்ணைகளிலிருந்று கிடைக்கும் சாணத்திலிருந்று ஆற்றலையும் உரத்தையும் பெறலாம்.
4.         ஆகாயத் தாமரையைப் பயன்படுத்தி சாணத்தைப் போல் ஆற்றலையும் உரத்தையும் பெற வேண்டும். அதைக் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்த முடியும். ¾ ஏக்கரில் நாளொன்றுக்கு ஒரு தன் ஆகாயத் தாமரையைப் பெற முடியும்.
5.         கடற்கரையில் நிலத்திலுள்ள பள்ளங்களில் கடல்நீரைத் திறந்துவிட்டால் ஏற்றவற்றங்களின் போது மின்னாக்க முடியும். அதற்காகப் பள்ளங்ளை உருவாக்கவும் செய்யலாம். ஆறுகளிலும் கால்வாய்களிலும் பாயும் நீரினுள் ஆங்காங்கே மின்னாக்கிகளை நிறுவலாம்.
6.         கடலினுள் காற்று மின்னாக்கிகளை நிறுவ முடியும்.
7.         சேதுப் பாலம் கட்டினால் அதன் தூண்களின் மீது இரு முனைகளிலும் காற்றாலைகள் நிறுவலாம்.
8.         மிதவைகளையும் நெம்பிகளையும் பயன்படுத்தி கடலலைகளிலிருந்து கடற்ரை நெடுகிலும் மின்னாக்கலாம்.
                 இவ்வாறு சூழல் மாசின்றி நம் ஆற்றல் தேவைகளை முழுமையாக நிறைவேற்றலாம்.

உ. கல்வி
உடனடித் திட்டம்:
            கல்வி - வேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டுக்காகப் போராடப் மிகப் பெரும் வலிமையுள்ள தலைவர்கள் களத்திலுள்ளனர். ஆனால் ஏழை மக்களின் எழுத்தறிவு இன்று கேள்விக் குறியாகியுள்ளது. எனவே,
1.         10ஆம் வகுப்பு வரையுள்ள படிப்பை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். அரசின் பொறுப்பில் இல்லாத உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தையும் அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.         தொடக்கப்பள்ளிகளில் உள்ள ஓராசிரியர் பள்ளிகள் அனைத்துக்கும் குறைந்தது 5 ஆசிரியர்களாவது வரும் வகையில் புதிய ஆசிரியர்களை அமர்த்த வேண்டும்.
3.         1947இல் இன்றைய குமரி மாவட்டப் பகுதிகள் திருவிதாங்கூர் சமத்தானத்தில் இருந்த போது சர்.சி.பி. இராசாமி ஐயர் மேற்கொண்ட கீழ்வரும் நடவடிக்கைகளை முன்னோடியாகக் கொண்டு,
3.1        கோடை விடுமுறைக் காலத்தில் தொடக்கப் பள்ளியைச் சுற்றியுள்ள ஊர்களில் பள்ளிக்குச் செல்லும் அகவையுள்ள சிறார்களைத் தங்கள் பள்ளிக்கு விடுக்குமாறு பெற்றோர்களை வற்புறுத்த             வேண்டும். அப்படிச் செய்யாதவர்ளை, குடும்ப அட்டையை முடக்குதல் போன்ற நெருக்கடிகளைக் கொடுத்து இணங்க வைக்க வேண்டும்.
3.2.       இருக்கின்ற பள்ளிக் கட்டடங்கள் போதவில்லையானால் முற்பகல் 3 பிற்பகல் 3 மணி நேரம் என்று பிரித்து இரு முறைகளில் காலையில் 1, 2 மாலையில் 3,4,5 ஆகிய வகுப்புகளை நடத்தலாம். பின்னர் கட்டடங்கள் கட்டிக் கூடுதல் ஆசிரியர்கள் அமர்த்தி இப்போதைய நடைமுறையைத் தொடரலாம்.
4.1.       ஒவ்வொரு பள்ளிக்கும் ஆட்சி எல்லை நிறுவி அதற்குள் உள்ள மாணவர்களை வெளியேயுள்ள பள்ளிகளில் சேர்ப்பதைத் தடை செய்ய வேண்டும்.
4.2        பள்ளிகளின் தரத்தைக் கண்காணிக்க அந்தந்தப் பள்ளியில் அவ்வப்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கல்விக் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
5.         ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என்பதை மீட்க வேண்டும்.
6.         தமிழகத்தினுள் அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே இருக்க வேண்டும். பிற மொழிகளை அவ்வம்மொழிப் பாடத்துக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். வெளிநாடு செல்லத் தேர்தெடுக்கப்படுபவர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் நிறுவனமே தேவையான மொழிப் பயிற்சியைக் கொடுத்துக் கொள்ளட்டும்.
7.         கல்வியில் செய்முறைப் பயிற்சியும் படிப்பும் மாறி மாறி வரும் வகையில் 10 ஆம் வகுப்பு முடிந்த பின் 2 ஆண்டுகள் ஏதோவொரு வேலை பார்த்து அந்தப் பட்டறிவின் அடிப்படையில் தான் விரும்பும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நுழைவு எழுதி பட்டப் படிப்பு முடிக்க வேண்டும். மீண்டும் ஒர் 2 ஆண்டுகள் வேலை பார்த்து அதன் அடிப்படையில் மீண்டும் நுழைவு எழுதி பட்டப் படிப்பினுள் நுழையலாம். இது போல் முதுநிலை, பண்டிதப் படிப்புகளுக்கும் பயிற்சிக் காலம் நிறுவ வேண்டும். இதைப் பொறியியல், மருத்துவம், கல்வி என்று எல்லாத் துறைக்கும் கையாள வேண்டும். வெறும் எழுத்தறிவோடு அமைச்சுப் பணியாளர் என்று தேவையில்லை. அந்தந்தத் துறை அறிவுடையோரையே மாறி மாறி எழுத்தர் பணியிலும் செய்முறை அல்லது களப் பணியிலும் அமர்த்திக்கொள்ள வேண்டும்.
8.         ஆசிரியர்ளை கற்பித்தல் தவிர கணக்கெடுத்தல் போன்ற பிற எந்தப் பணிக்கும் திருப்பிவிடக் கூடாது.
9.         மனப்பாடம், எழுதுமுறைத் தேர்வு போன்றவற்றுக்கு 30 நூற்றுமேனியையும் உடலுழைப்புத் திறனுக்கு 30 நூற்றுமேனியையும் ஒதுக்கிவிட்டு எஞ்சிய 40 நூற்றுமேனியையும் விளையாட்டு, கைவன்மை, ஒவியம், இசை போன்ற திறன்களுக்கு ஒதுக்க வேண்டும்.
            மொத்தத்தில் கல்வித்துறை என்பது எழுத்தறிவிப்புடன் கூடிய ஒரு விரிவான தொழிற்கல்விக் கட்டமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.
10.        உயர்நிலைப் பள்ளி வரை அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது நடைமுறைக்கு வரும் போது சாதி சமய வேறுபாடின்றி அனைவருக்கும் அடிப்படைக் கல்வி கிடைத்து விடுவதால் குறிப்பிட்ட ஒரு சாதிப் பிரிவினருக்கென்றோ சிறுபான்மையினருக்கென்றோ பள்ளிகள் இயங்க வேண்டிய தேவை இருக்காது. எல்லா வட்டாரத்திலும் அவ்வவ்வட்டாரத்து மக்களுக்கு என்று ஒரு பள்ளி இருக்குமாதலால் சிறப்புப் பள்ளிகள் தேவைப்படா.
11.        13 அகவை அல்லது குழந்தைகள் என்ற வகைப்பாட்டுக்கு ஏற்றதென்று அரசு நிறுவும் அகவை எய்தாதவர்களின் உழைப்பை நம்பியே குடும்பங்கள் நடத்த வேண்டிய சூழலில் வாழ்பவர்களுக்கு பகுதிநேரக் கல்வி வழங்குவதற்கு இப்போதைய “அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு” ஒதுக்கப்படும் தொகை முழுவதையும் திருப்பி விட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தி அவர்களது குடும்பத்தினரை வாழவைக்கும் தொழில் நிறுவனங்களைப் பாராட்ட வேண்டும். தம் குழந்தைகளைப் பேண இயலாப் பெற்றோரின் முழுக் குடியுரிமையைப் பறித்துவிட வேண்டும்.

 நீண்ட காலத் திட்டம்:
          கல்வி என்பது எழுத்தறிவு மட்டுமல்ல. ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்து பெற்றோர், மற்றோர், சுற்றியிருக்கும் இயற்கை ஆகியவை தொடங்கி தன் இறுதி நாள் வரை அறிந்துகொள்ளும் அனைத்தும் கல்வி எனும் வகைப்பாட்டினுள் அமைவனவே. அதே நேரத்தில் முன்னோரின் அறிவையும் பட்டறிவையும் நாமும் அவற்றையும் நம் பட்டறிவையும் நம்மைத் தொடர்வோரும் முறைப்படி அறிந்து கொள்ள உதவுவதே எழுத்தறிவு எனும் ஏட்டுக் கல்வியாகும். ஆனால் இந்த எழுத்தறிவை ஆலயங்களில் மந்திரங்கள் ஓதவும் ஆட்சியாளர்  ஆள்வினையை நெறிப்படுத்தவும் மட்டுமே உதவுவதாக இடைக் காலத்தில் ஆட்சியாளர் – பூசகர் கூட்டணி குறுக்கிவிட்டது. அதையும் மீறி மக்கள் எழுத்தறிவு பெற்றுவிட்ட நிலையில் சமற்கிருதம் போன்ற செயற்கை மொழிகளை உருவாக்கியும் வைத்தது. அடித்தள மக்கள் எழுத்தறிவு பெறுவதைச் சட்டம் போட்டுத் தடுக்கவும் முனைந்தது.
         
            ஆள்வினையாளர்கள் - பூசகத் துறையினர் மட்டுமே மதிப்பியல் வாழ்வினர், பிறர் குறிப்பாக உடலுழைப்பாளர், தொழில் முனைவோர், வாணிகர் போன்றோர் இழிசினர்கள் என்ற கண்ணோட்டம் நம் குமுகத்தில் வேர் கொண்டுள்ளது. மரபுவழித் தொழில்கள் சாதியடிப்படையில் அமைய, அவற்றுக்கு எழுத்தறிவு தேவையற்றதாக மாறிவிட்டது. இந்த நிலையை மாற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் முயன்றபோது தொழில்கள், வாணிகம், உடலுழைப்புப் பணிகளை விட்டு வெள்ளை வேட்டி ஒட்டுண்ணி வாழ்க்கையே எழுத்தறிவின் நோக்கம் என்ற அடிப்படைச் சிந்தனை மேலும் உரம் பெற்றது. இப்போது “கல்வி” என்ற பெயரில் எழுத்தறிவு பெறுவோர் பொருளியல் சார்ந்த எந்தவொரு உழைப்புக்கும் தகுதியற்றவராக குமுகப் பதராக மாறி நிற்கின்றனர். இது எழுத்தறிவே தேவையில்லை என்ற, ஓர் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த மனநிலையை நோக்கி மக்களை இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் செயலறிவே எழுத்தறிவின் அடிப்படை என்ற கோட்பாட்டில் ஒரு கல்வித் திட்டம் தரப்படுகிறது.

1.         நிலங்களை 250 முதல் 500 ஏக்கர்கள் வரை பரப்புள்ள ஒருங்கிணைந்த பண்ணைகளாக, பங்கு மூலதனத்தில் உருவாக்க வேண்டும். அங்கு பணியாற்றுவோர் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பண்ணைகளுக்குள் வாழ வேண்டும்.

2.         அப் பண்ணைகளில் கிடைக்கும் நீர்வளத்துக்கேற்ற பயிர்களை வளர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்பு முகாமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும். அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழுவங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும். பண்ணையில் வளர்க்கப்படும் பயிர்களின் கழிவுகள் மாட்டுத் தீவனமாக அமைந்தால் குறைபடும் மாட்டுத் தீவனத்தைப் பண்ணையிலேயே வளர்க்க வேண்டும். மாட்டுச் சாணத்திலிருந்து எரிவளி எடுத்த பின் அதனை உரமாகப் பயன்படுத்த வேண்டும். மாட்டு மோளைப் பயன்படுத்தி இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் உருவாக்கலாம். கதிரவ மின்சாரம் உட்பட காற்று, கழிவுகள் ஆகியவற்றிலிருந்து பல்வேறு எரியாற்றல்களைப் பெறலாம். சிறுவகை உழுவுந்து போன்றவற்றை இந்த ஆற்றல்களிலிருந்து பெறும் மின்சாரத்தைக் கொண்டு இயக்கலாம்.

            ஒவ்வொரு பண்ணையிலும் அவற்றின் இடுநிலையைக் கருத்தில் கொண்டு மிக உயர்ந்த பகுதியில் அல்லது தாழ்ந்த பகுதியில் ஒரு குளம் அமைத்து மழைநீரைத் திரட்டி அதனை நிலத்தினுள் கசியவிட வேண்டும். துளைக் கிணறுகளை அதற்காகப் பயன்படுத்தலாம்.

            பண்ணை ஒவ்வொன்றிலும் அதன் பரப்பில் குறைந்தது 10 நூற்றுமேனி பரப்புக்குக் காடு  வளர்க்க வேண்டும். மழையைப் பரவலாக்கவும் பெய்த மழை நீரைத் தாங்கி மண் அரிப்பைத் தவிர்த்து நிலத்தினுள் இறங்கச் செய்வதுடன் தட்பவெப்ப ஏற்றத் தாழ்வைச் சமநிலைப்படுத்துவதற்கு அது உதவும். பண்ணையில் வளரும் ஆடு, மாடுகளுக்குத் தீவனத் தேவைகளுக்கு காட்டில் பொருத்தமான தழைகளையும் இக் காட்டிலிருந்து பெறலாம். இக் காடுகளுக்கு வேலியிட்டு அவற்றுள் மான் போன்ற இறைச்சி விலங்குகளை வளர்த்து அறுவடை செய்யலாம். பக்கத்துப் பண்ணைகள் இணைந்து தத்தம் பண்ணைக்குரிய காடுகளை ஒன்றையொன்று தொடுமாறு அமைத்தால் அத் தொகுதியின் பயன்பாடு பல மடங்கு மேம்படும்.

            பண்ணையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பயிர் வகைகளுக்குத் தேவையான நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் உத்திகளைக் கையாள வேண்டும். எடுத்துக்காட்டாக நெல் வேளாண்மையில் காய்ச்சல் - பாய்ச்சல் எனும் உத்தியில் அவ்வப்போது பயிருக்குத் தீங்கு தராத பருவங்களில் தண்ணீரைப் பாய்ச்சாமல் வயலில் நீரை வற்றவிட்டு அதன்மூலம் மண்ணுக்குத் தேவையான காற்றூட்டம் கிடைக்கவும் அளவு மீறிய நீரால் வயலுக்கு இடும் உரச்சத்துகள் மண்ணினுள் இறங்கிச்சென்றுவிடாமலும் செய்தால் நீர்த் தேவை 40% குறையும், கண்டுமுதல் 60% வரை பெருகும் என்பது பட்டறிவு. அத்துடன் நீர்ப் பாய்ச்சலை கணினி மூலம் கட்டுப்படுத்தியும் சிக்கனம் பெறலாம். இவை எல்லாம் அந்த வட்டாரத்து அடிமண் நீர் மட்டத்தை(நீர்ப் பலகையை) உயர்த்தும்.

            இவ்வாறு பல பண்ணைகள் கொண்ட ஒரு பரப்பில் பல்வேறு வேளாண் கருவிகளைப் பராமரிக்கப் பணிமனைகள் வேண்டும்.

            விளைபொருட்களை அப்படியே சந்தைக்குக் கொண்டு செல்லாமல் முடிந்த, பகுதி முடிந்த பண்டங்களாக மாற்றினால் அவற்றுக்கு நல்ல சந்தை கிடைக்கும், பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும். இவற்றுக்கான கருவிகளைப் பராமரிக்கவும் பணிமனைகள் தேவைப்படும்.

3.         இந்தப் பண்ணைகளையும் துணைத் தொழில்களையும் அடிப்படையாகக் கொண்டு  குழந்தைகளுக்குக் களத்தில் இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்கள், செய்முறைகள்  பற்றிய புலனறிவை வளர்த்து அதன் அடிப்படையில் எழுத்தறிவைப் புகட்ட வேண்டும். பண்ணைகளில் வாழும் மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் நிலையில் குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளிகள் போன்றவற்றில் பணியாற்ற குழந்தைகள் உளவியலில் தேர்ச்சி பெற்றவர்களை அமர்த்த வேண்டும். இதற்காக, தோதான எண்ணிக்கையில் பண்ணைகளைத் தொகுத்து ஓர் ஒன்றியாக்க வேண்டும். அவ் வொன்றியில் உள்ள குழந்தைகளுக்கு குழந்தை காப்பக அமைப்பிலான ஒரு நடுவத்தை அமைக்க வேண்டும். அதில் குழந்தைகளின் விளையாட்டு, கூட்டு நடவடிக்கைகள் போன்றவற்றை நோட்டமிட்டு அவர்களது இயற்கையிலமைந்த திறன்களையும் குணநலன்களையும் புரிந்துகொள்ள வேண்டும். எழுத்தறிவை உடலுழைப்பிலிருந்து பிரித்துவைத்து கல்வியற்ற எழுத்தறிவாகக் குறுக்கப்பட்டிருக்கும் இன்றைய படிப்புத் துறையைத் தூக்கியெறிந்து அதன் இடத்தில் உடலுழைப்பாகிய செயற்பாடு மூலம் இயற்கையையும் குமுகத்தையும் உடலையும் உள்ளத்தையும் அறிந்து அதன் அடிப்படையில் எழுத்தறிவுடனான கல்வி முழுமையை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கான மேலே விளக்கியுள்ள அடிப்படையிலான பண்ணைகளின் தொகுதிகளில் பொருத்தமான எண்ணிக்கையுள்ளவற்றை இரண்டாம் நிலை ஒன்றியாகக் கொண்டு மழலையர்கள் பள்ளி தொடங்கி தொடக்கக் கல்வியை வழங்க வேண்டும். நடுநிலைக் கல்விக்கு இத்தகைய ஒன்றிகளின் ஒரு மூன்றாம் நிலைத் தொகுப்பை அடிப்படை அலகாகக் கொள்ள வேண்டும். இங்குள்ள பல்வேறு தொழில் சார்ந்த கள, செயற்பாட்டு அடிப்படையில் அமைந்த கல்வியையும் தாம் வாழும் நிலப்பகுதியின் புவியியல், வரலாறு, உடல் நலவியல் போன்றவற்றையும் அறிமுகப்படுத்த வேண்டும். இவை அனைத்திலும் ஒவ்வொரு மாணவனும் காட்டும் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு  உயர்நிலைக் கல்வியில் சேர்க்க வேண்டும்.

4.         இந்த மூன்றாம் நிலை அலகில் போக்குவரத்து, நகரமைப்பு, வாணிகம் போன்ற துறைகள் பரவலாக வளர்ச்சியுற்றிருக்கும். அவை சார்ந்த கல்வியின் செயற்பாட்டுப் பயிற்சிக் களமாக அத் தொழில் சார்ந்த அமைப்புகள் இருக்கும். இவ்வாறு செயற்பாட்டின் படிப்பாங்கின் மட்டத்திற்கேற்ற உயர் கல்வி அந்தந்த துறையின் செயற் களங்களைச் சார்ந்திருக்கும்.

5.         இந்தக் கல்விமுறையில் எழுத்துத் தேர்வு மட்டும் ஒரு மாணவனின் தகுதியை முடிவுசெய்வதாக இருக்காது. அவனது பல்வகைத் திறன்கள், மனச்சாய்வு, இறுதியில் அவனது உடலுழைப்பு ஆகியவை அவனது தேர்வை முடிவு செய்யும். பணியில் செயற்பாட்டுப் பிரிவில் பணியாற்றுவோர் ஓரளவாவது தேர்ச்சியுற்று உயர்ந்த ஆள்வினைத் திறனை வெளிப்படுத்துவோருக்கு அது சார்ந்த பணிகளை வழங்கலாம்.

6.        ஒவ்வொருவரும் தம் கருத்தை எழுத்தில் வெளிப்படுத்தவும் படிக்கவும் தேவையான எழுத்தறிவைக் கட்டாயம் பெற்றிருக்கச் செய்வது முகாமையானது. அதற்கென்று ஓர் அகவை வரம்பை நிறுவிக் கொள்ளலாம்.

7.        இவ்வாறு தனது கல்வி - செயற்பாடு ஆகியவற்றில் ஒவ்வொருவரும் காட்டும் திறமைகளின் அடிப்படையில் ஆள்வினைப் பணிகளுக்கான குடவோலைத் தேர்தல் முறையில் பங்கேற்பவர்களுக்கான தகுதித் தேர்வுக்கு ஆட்களை இனம் காணலாம்.

8.        கல்விக் காலத்தில் செயல்முறைப் பயிற்சியில் கூலி ஈட்டும் கட்டத்தை எட்டுவது வரை கல்வி இலவயமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் இதற்கும் ஓர் அகவை வரம்பை நிறுவ வேண்டும்.

.எல்லை மீட்பு
1.         1956 நவம்பர் 1 ஆம் நாள் செயலுக்கு வந்த மொழி‌வழி மாநில மறுசீரமைப்பின் போது கேரளம், ஆந்திரம், கன்னடம் போன்ற மாநிலங்களுக்குத் தமிழகம் இழந்த தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டையில் பாதி, நெய்யாற்றின் கரை, புத்தூர், சித்தூர், திருப்பதி, கோலார், கொள்ளேகாலம், வெங்காளூர் முதலிய பகுதிகள் ‌‌மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
2.         கேரள எல்லை‌யில் மலை முகட்டுக்கு அப்பாலுள்ள தமிழகப் பகுதியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீரைப் பாய வைத்த அணைக்கட்டுப் பகுதிகளை மீட்டு அவை மீண்டும் தமிழக எல்லைக்குள் வருமாறு ஆங்கிலேயர் ஆண்ட காலத்துக்கு முன்பே இருந்த எல்லைகள் மீட்கப்பட வேண்டும்.
3.         குமரி மாவட்டத்தினுள் கேரள அரசின் கட்டுப்பாட்டில் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ள பத்மநாபபுரம் கோட்டை, குமரிமுனையிலுள்ள விருந்தினர் வளமனை முதலியவற்றைத் திரும்பப்பெற வேண்டும்.

                                                      எ.குடிமை
(தொடுப்பு 4இல் பார்க்க)

ஏ. சட்டமும் நயன்மையும்
1.         இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும்.
2.         முழுத் தன்னாட்சியுள்ள மாநிலங்களின் கூட்டாட்சிக்குரியதாக புதிய அரசியல் சட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
3.         பாதுகாப்பு, பணம், அயல்நாட்டுறவு ஆகிய மூன்று தவிர பிறவனைத்திலும் அரசுடைமையை ஒழிக்க வேண்டும்.
4.1        நடுவணரசுக்கு ஏம வங்கி மட்டும் போதும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி மாநில வங்கிகள் வேண்டும்.
4.2.       பிற வங்கிப் பணிகள் அனைத்தும் அந்தந்த மாநிலத்தின் முழுக் குடியுரிமை பெற்றோரால் நடத்தப்பட வேண்டும்.
5.1        இப்போதிருக்கும் சட்டங்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.
5.2        உரிமையும் அதற்குத் தகுந்த கடமையுணர்வும் கொண்ட குடிமக்களுக்கு ஏற்றதாக விடுதலை பெற்ற இந்தியாவின் அனைத்துச் சட்டங்களையும் புதிதாக உருவாக்க வேண்டும்.
5.3        சட்டங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் மாநில மக்களின் தாய்மொழிகளிலும் இருக்க வேண்டும்.
5.4        வழக்கு மன்றங்களில் வழக்காட வரும் மக்களுக்கு நடுவர்களும் வழக்கு மன்ற ஊழியர்களும் முழு உரிமையுள்ள குடிமக்களுக்கு வழங்கும் மதிப்பை வழங்க வேண்டும். செருப்பணிதல் இருக்கைகளில் அமர்தல் ஆகியவற்றைத் தடுக்கக் கூடாது.
5.5.       வழக்குரைஞர்களும் நடுவர்களும் வழக்காட வந்திருப்பவர்களுக்குக் கேட்குமாறும் புரியுமாறும் தமிழ்மொழியில் தெளிவாகப் பேச வேண்டும்.
5.6.       வழக்கு மன்றத்தில் தெரிந்தே தவறான செய்திகளைக் கொடுக்கும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.7.       ஒரு வழக்கில் அதுவரை வெளிப்படாத ஒரு புதிய குற்றம் வழக்கு மன்றத்தில் வெளிப்படுமானால் அதற்குரிய வழக்கை உடனடியாகத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றமே மு‌ன்முயற்சி எடுக்க வேண்டும்.
5.8.       முதல் புலன் அறிக்கை பதியும் எழுத்தர் அல்லது மேல் முறையீடு செய்யும் அலுவலர் வேண்டுமென்றே வழக்கைத் தவறான பிரிவுகளின் கீழ் பதிந்திருப்பது தெரியவந்தால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளை குறிப்பிட்ட வழக்கில் எதிரிகளின் பட்டியலில் சேர்த்து விட வேண்டும்.
5.9.       பணம், பொருள் ஏமாற்று வழக்குகளில் குற்றவாளிக்கு வெறும் தண்டனையும் பிழையும் மட்டும் விதித்தால் போதாது. அவரிடமிருந்தோ அல்லது அவர் பொய்ப் பெயர்களில் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளிலிருந்தோ உரிய பணத்தை அல்லது பொருளை மீட்டு உரியவருக்குக் கொடுக்க வேண்டும்.
5.10.     எந்தவொரு வழக்கையும் மொத்தம் இரண்டு முறைகளுக்கு மேல் தள்ளிப் போடக் கூடாது. குறிப்பிட்ட ஆள் மருத்துவமனையிலிருந்தால் நடுவரே அங்கு சென்று உசாவ வேண்டும்.

ஐ. குடும்பம்
1.               குழந்தைகள் 13 அகவை அடைந்ததும் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் வகையில் பகுதி நேரப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்க வேண்டும்.
2.               18 அகவை அடைந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்வதைத் தடை செய்யும் பெற்றோரும் பிறரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
3.               காதலித்ததற்காகக் கொலை செய்வோருக்குத் தவறாது மரண தண்டளை வழங்க வேண்டும்.
4.                   குழந்தைப் பருவம் முடியும் வரை(13அகவை) குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோரின் கடமை. அவ்வாறு செய்யாதவர்களுக்கு முழுக் குடியுரிமை வழங்கப்படாது.
5.               பெற்றோரின் முதுமைக் காலத்தில் குழந்தைகள் அவர்களைப் பேண வேண்டியதில்லை. அவரவரும் தம் ஈட்டத்தில் ஒரு பகுதியை அதற்கென்று ஒதுக்கி வைக்க வேண்டும்.
6.               மூத்த குடிமக்கள் வாழ்வதற்கென்று தேவைப்படும் எண்ணிக்கையில் கட்டண அடிப்படையில் இயங்கும் முத்த குடிமக்கள் வளாகங்களை நிறுவ முன்வருவோரை ஊக்க வேண்டும். அவற்றின் நடைமுறைகளைக் கண்காணிக்கவென்று வலுவான முறையீட்டு - கண்காணிப்பு அமைப்புகளை உரிய இடங்களில் நிறுவ வேண்டும்.

ஒ. நிலப் பயன்பாடு
1.               குறைந்த நீரையும் புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையில் மிகுந்த விளைச்சலைப் பெற்று வேளாண் பயன்பாட்டுக்குத் தேவையான நிலப் பரப்பைக் குறைக்க வேண்டும்.
2.               தரிசு நிலங்களில் கால்நடைப் பண்ணைகளை அமைத்து திறந்தவெளி மேய்ச்சலைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும்.
3.               எஞ்சிய எல்லா நிலங்களிலும் காற்றின் ஈரத்தை உறிஞ்சும் சவுக்கு, நீலகிரி வேலிகாத்தான் போன்றவற்றைத் தவிர்த்து உள்நாட்டு மரங்களாகிய பூவரசு, வேம்பு, வாகை, தேக்கு, தோதகத்தி(தோலகற்றி - தோல் தவிர மரக் கழிவு இல்லாதது), போன்ற தடி மரங்களையும் சந்தனம், மா, பலா போன்ற பயன் மரங்களையும் விறகுக்குப் பயன்படும் நாட்டு உடை, மஞ்சளத்தி போன்ற நாட்டு மரங்களையும் வளர்ப்போருக்கு அனைத்து ஊக்குவிப்புகளையும் வழங்க வேண்டும்.
3.1               சவுக்கு, நீலகிரி, வேலிகாத்தான் போன்ற மரங்கள் அனைத்தையும் ஒரு கால வரையறை வகுத்து அதற்குள் வெட்டி அகற்ற வேண்டும்.
3.2           ஓராண்டுக்கு மேல் தரிசாகக் கிடக்கும் நிலங்களை அரசு ஏலத்தில் விற்று வருவாயை உரிமையாளரிடம் ஒப்படைக்கும்.
4.               சந்தனம், தோதகத்தி போன்ற மரங்களை உள்நாட்டு மக்கள் பயன்படுத்துவதற்கு இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.
5.               மலைகளில் வாழும் மலை வாழ் மக்களைச் சமநிலத்தில் குடியமர்த்தி அவர்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் வழங்கி பிற மக்களுக்கு இணையாக மேம்படுத்த வேண்டும்.
6.               காவற் காடுகளுக்குள் மரங்களை வெட்டவோ பிற வளங்களை அறுவடை செய்வதோ கூடாது.
7.               கான் வளங்களை பசுமைக் குடில்கள் போன்ற புதிய உத்திளைப் பயன்படுத்தி காவற்காடுகளுக்கு வெளியில் வளர்க்க வேண்டும்.
8.               கான் பகுதிக்குள் எந்தக் குடியிருப்பும் கூடாது.
9.               மலைகளில் கல்லுடைப்பதைத் தடைசெய்ய வேண்டும். ஏற்கெனவே உடைத்த மலைகளில் மட்காத குப்பைகளைக் கொட்டி மலைகளை மீட்டு இயற்கைச் சமநிலையைப் பேண வேண்டும்.
10.           கற்பொருட்களை நிலத்தடியிலிருந்து எடுக்கலாம். கற்பொருளுக்கு புதுப்பிக்கத் தக்க மாற்றுப்பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இன்றைய தரிசு நிலங்களில் மரம் வளர்த்தால் இரும்புக்கும் கல்லுக்கும் பகரம் மரமாகிய புதுப்பிக்கத் தக்க பொருளையே பெருமளவில் பயன்படுத்த முடியும்.

. நகரமைப்பு
1.         நகரமைப்பு விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். தவறு செய்பவர்களையும் அதனைத் தடுக்காமலிருக்கும் அதிகாரிகளையும் தண்டிப்பதோடு அவர்களிடமிருந்து இழப்பீடும் பெற வேண்டும்.
2.         சாலைகளையோ தெருக்களையோ நோக்கி வீடுகளோ பிற கட்டடங்களோ கட்டுவது தடுக்கப்பட வேண்டும். தகுந்த வெளிச்செல்வழியுள்ள, போதிய ஊர்தி நிறுத்தும் இடங்களுள்ள வளாகங்களிலேயே அனைத்தும் அமைய வேண்டும்.
3.         அடுக்கு மாடிகளாகவே குடியிருப்புகளையும் கடைகளையும் பிற கட்டடங்களையும் அமைக்க வேண்டும்.
4.         தேவையான பரப்பில் காலியிடங்களை விட்டு அவற்றில் நிழல் மரங்களை வளர்க்க வேண்டும்.
5.         பழைய நகரங்களில் மாற்றம் செய்வதை விட புதிய தொழில் கட்மைப்புகளை உருவாக்கி அருகே புதிய நகரங்களை உருவாக்குதல் வேண்டும்.

. இருப்புப் பாதை - சாலை
1.         நாட்டிலுள்ள இருப்புப் பாதை அனைத்தையும் இரட்டைக்குக் குறையாத தடமுள்ள பாதைகளாக மாற்ற வேண்டும். முன்பதிவு இன்றி மக்களுக்கு அவற்றில் இடம் கிடைக்கும் எண்ணிக்கையில் தொடர்வண்டிகளை இயக்க வேண்டும்.
2.         நாட்டிலுள்ள இயற்கை வளங்களின் கிடைப்பிடங்கள், அவற்றிற்கேற்ப தொழிற் கட்டமைப்புகள், அவை சார்ந்த நகர்கள், அவற்றை இணைக்கும் நேர்கோட்டிலமைந்த சாலைகளால் நாடு முழுவதையும் இணைக்க வேண்டும்.
3.         சாலைகள் குறுக்கிடுமிடங்களில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அனைத்திடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
4.         தோட்டங்களுக்கும் தோப்புகளுக்கும் செல்லும் சிறு சாலைகள் நீங்கலாக அனைத்துச் சாலைகளுக்கும் நடமாட்டப் பாதையின் அகலம் 40 அடிகளுக்கும் குறையக் கூடாது.
5.         சாலைகளில் மின் விளக்குகளுக்கன்றி வேறு தூண்களோ தடங்கல்களோ இருக்கக் கூடாது.
6.         மின்சாரம், தொலைபேசி, குடிநீர்க் குழாய், எரிவளிக் குழாய் போன்ற அனைத்தும் ஓர் ஓரத்திலும் கழிவுநீர் மற்றோர் ஓரத்திலும் சாலையின் அடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதைகளினுள் கொண்டுசெல்லப்பட வேண்டும். இணைப்புகள் கொடுப்பதற்காக சாலைகளை ஒருபோதும் தோண்டக் கூடாது.
7.         தெருக்கள் தவிர வேறு எந்தச் சாலையிலும் 500 மீற்றர் தொலைவுக்குள் எந்தவிதக் கட்டுமானமும் இருக்கக் கூடாது. அந்தக் காலியிடத்தில் வயல் இல்லாத இடங்களில் பயன்மரம் அல்லது தடிமரக் காடுகளை வளர்க்க வேண்டும்.

அ.அ. கடற்கரை
1.                   கடற்கரைகளிலிருந்து குடியிருப்புகளையும் கட்டடங்களையும் அகற்ற வேண்டும்.
2.               கடற்கரையின் உயர் ஓத மட்டக் கோட்டிலிருந்து 50 ‌மீற்றருக்குக் குறையாத தொலைவில் கடற்கரை நெடுகிலும் தேரியை உருவாக்க வேண்டும். கு‌றைந்தது 10 மீற்றர் உயரம் தேரி இருக்க வேண்டும். அதன் உச்சியில் ஒரு நால்வழிப் பாதை அமைக்க வேண்டும். இரண்டு சாய்வுகளிலும் கடலோர நிலைத்திணைகளை வளர்க்க வேண்டும்.
3.               தேரிச் சாய்வுக்கு வெளியே உள்ள இரு பகுதிகளிலும் வேலியிட்டு காப்புக் காடுகளை வளர்க்க வேண்டும்.
4.               தேரிக்கு வெளியே வேண்டிய இடைவெளி விட்டு உள்நாட்டு நாவிக வாய்க்கால் தோண்ட வேண்டும். தாழ் ஓத மட்டத்துக்குக் கீழே சராசரி அளவுள்ள இரண்டு படகுகள் செல்லுமளவு நாவிக வாய்க்காலின் அகலமும் ஆழமும் இருக்க வேண்டும்.
5.               ஆறுகள் ‌உள்நாட்டு நாவிக வாய்க்காலைக் கடக்குமிடங்களில் கடலிலிருந்து ஆறுகள் வழி கப்பல்கள் வாய்க்காலினுள் நுழைந்து திரும்பும் வகையில் தேவையான அளவு வாய்க்காலை விரிவுபடுத்தி தோதான இடத்தில் மீன்பிடி துறைமுகங்களோ வாணிகத் துறைமுகங்களோ அமைக்க வேண்டும்.
6.               ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் பெய்யும் மழைநீர் கடலினுள் ‌செல்வதற்கு உரிய இடத்தைத் தெர்ந்தெடுத்து அதில் இயற்கையாக அமைந்த அல்லது செயற்கையான காயல்களினுள் மழை நீரை விழ வைத்து, நாவிக வாய்க்காலில் உயர் ஒத மட்டத்திற்கு மேல் உச்சி மட்டத்‌தையுடைய கலிங்குகள் வழியாக நீரை வாய்க்‌கால் மூலம் கடலுக்குள் பாய விட வேண்டும்.
7.               ‌மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்பும் சென்று திரும்பிய பின்பும் தேவையானால் தங்குவதற்கு தங்கறைகளும் வலை உலர்த்து தளங்களும் வலை பழுது பார்க்கும் இடங்களும் வலை, படகு, இயக்கிகள், பிற மீன்பிடி கருவிகளை வைத்துப் பாதுகாக்கும் பாதுகாப்பு அ‌றைகளும் மீன் உலர்த்து தளங்களும்‌ மீனை வகைபி‌‌ரி‌த்துப் பாதுகாக்கும் ஏமக் கிடங்குகளும் படகுகளையும் பிற கருவிகளையும் பழுது பார்க்கும் பணிமனைகளும் கழிவறைகளும் குளியறைகளும் உணவகங்களும் பொழுதுபோக்குக் கூடங்களும் விளையாட்டரங்கங்களும் மருத்துவமனையும் மீன்பிடிப் பயிற்சி நிலையங்களும் ஊர்தி நிறுத்துமிடங்களும் கொண்டவையாய் மீன்பிடி துறைமுகங்கள் இருக்கும்.
8.               கட்டுமரங்கள் ஒழிக்கப்படும். கட்டுமர மீன்பிடித் தொழிலாளர்களின் அகவைக்கேற்ப உரிய பயிற்சிகள் கொடுத்து மீன்‌பிடித்தல், வலை பழுதுபார்த்தல், ‌மீன் வகைப்படுத்தல் என்று அவரவர் ஆர்வ‌த்துக்கேற்பப் பயிற்சியளிக்கப்படும்.
9.               படகுப் போட்டிகள், அலை விளையாட்டுகள் என்று அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் கடற்கரைகளில் ஏற்பாடு செய்யப்படும்.
10.           வார இறுதிகளைச் செலவிடவும் சுற்றுலாவுக்காகவும் தேரியிலிருந்து கடலை நோக்கிய மணற்பரப்பில் தனி இடங்கள் ஒதுக்கப்படும். அவற்றில் இடம் பெறும் கடை முதலியவை தற்காலிகக் கட்டுமானங்களாகவே இருக்கும்.
11.           தமிழகத்தின் கடற்கரையை ஒட்டி கடலினுள் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு கப்பல் போக்குவரத்துத் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் ஒரு கப்பலோடை உருவாக்கப்படும். தேவையானால் தோதான இடங்களில் கடலினுள்ளேயே துறைமுகங்களை ஏற்படுத்தலாம்.

அ.ஆ. ஆள்வினை அமைப்பும் தேர்தலும்
(தொடுப்பு 4இல் பார்க்க)
உடனடி முன்வைக்க வேண்டிய முழக்கங்கள்:

1.         வருமானவரியை ஒழிக்க வேண்டும்.
2.         முழு மதுவிலக்கு வேண்டும்.
3.         பள்ளிக் கல்வி முழுவதும் மாநில அரசின் பொறுப்பிலிருக்க வேண்டும்.
4.         மொழிப் பாடங்கள் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழில் இருக்க வேண்டும்.
5.         தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
6.         1:20 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்தை மீட்க வேண்டும்.
7.         ஆண்டுக்கு 12%க்கு மிகாத வட்டியுடன் பணம் கடன் கொடுக்கும் பொதுமக்களின் பணத்துக்குச் சட்டப்பாதுகாப்புடன் கடன் பணத்தை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு சட்டத்தில் வகை செய்ய வேண்டும். கடன் கொடுப்பவருக்கு சட்டத்தில் முன்னுரிமை தர வேண்டும்.
8.         உரிமை மாற்று ஆவணமின்றிப் பட்டா வழங்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். பட்டா வழங்கும் அதிகாரத்தை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். உரிமை மாற்று ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்குவதைப் பதிவுத் துறைப் பொறுப்பில் விட வேண்டும்.
9.         பத்திரப் பதிவுக்கு வழிகாட்டி மதிப்பு நிறுவும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.
10.        பத்துக் கோடி உரூபாய்களுக்கு மேற்படும் முதலீடுகளில் 51%க்குக் குறையாத தொகையைப் பங்கு மூலதனமாகத் திரட்ட வேண்டும்.
11.        பங்குச் சந்தைகளை ஒழிக்க வேண்டும். பங்குகளின் மறுவிற்பனை அந்தந்த நிறுவனத்தின் வழியாகத் தான் நடை பெற வேண்டும். மறுவிற்பனை விலையை நிறுவனமே முடிவு செய்ய வேண்டும். அது தான் பங்குப் பத்திரத்தின் முகமதிப்பாக இருக்கும். அதன் நூற்றுமேனியில் தான் ஈவுத்தொகை வழங்க வேண்டும்.
12.        ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு அறிவியல் - தொழில்நுட்பக் காப்புரிமைப் பதிவு அலுவலகம் வேண்டும்.
13.        டாலரின் நாணய மாற்று மதிப்பை உரூ. 30/- ஆக உடனடியாகக் குறைக்க வேண்டும். அதற்கேற்ப பிற அயல் நாணய மதிப்புகளையும் மாற்றியமைக்க வேண்டும்.
14.        உள்நாட்டில் கிடைக்கும் பண்டங்களைத் தேவைக்கு மேல் இறக்குமதி செய்து உள்நாட்டு வேளாண்மையையும் தொழிலையும் அழிப்பதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
15.        நில உச்சவரம்பைக் கைவிட வேண்டும்.
16.        60க்கு 40 வாய்ப்பாட்டைக் கையாண்டு குத்தகைப் பயிர்முறைக்கு முடிவுகட்ட வேண்டும்.
17.        கோயில் சொத்துகளிலும் இதே நடைமுறையைக் கையாண்டு கோயிலுக்கு வரும் 60% சொத்துகளை உரியமுறையில் விற்றுப் பணத்தை வங்கியில் இட்டு வட்டியைக் கோயில் பராமரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஒருங்கிணைந்த பண்ணைகளை அமைத்து வருமானத்தைக் கொண்டு அந்தந்தக் கோயிலைப் பராமரிக்கலாம்.
18.        கோயில்களுக்கு அரசு எந்த வடிவிலும் பொருளியல் உதவிகள் செய்யக் கூடாது. அவற்றைப் பராமரிப்பது இறையடியவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
19.        மத நிறுவனங்களுக்கும் கோயில்களுக்கும் மாநிலத்துக்கு வெளியிலிருந்து பொருளியல் உதவிகள் தடைசெய்யப்படும்.
20.        உரிமம் பெற்ற நெல் - அரிசி வாணிகர் முறையை ஒழித்து நெல் - அரிசி வாணிகத்தை அனைவருக்கும் திறந்துவிட வேண்டும். நெல் - அரிசி நடமாட்டக் கட்டுப்பாடுகள், இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் கைவிட வேண்டும்.
21.        மின்னாக்கிகளுக்கு 80% கொடுத்தது போல் 95% மானியத்தில் கதிரவ அடுப்பு, கதிரவ மின்விளக்குகள் வழங்க வேண்டும்.
22.        மாநிலங்கள் சீரமைப்பின் போது தமிழகத்துக்கு உரிமைப்பட்ட திருவிதாங்கூரிலிருந்து தேவிகுளம், பீருமேடு உட்பட 4½ வட்டங்கள், ஆந்திராவிலிருந்து புத்தூர், சித்தூர், திருப்பதி, கர்நாடகத்திலிருந்து கோலார், கொள்ளேகாலம், வெங்காலூர் ஆகியவற்றை மீட்க வேண்டும்.
23.        எந்த விளக்கமுமின்றி இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு அதனைத் தமிழ்நாட்டின் பகுதியாக்க வேண்டும்.
24.        மாநில எல்லைக்கு அப்பாலுள்ளவர்கள் தமிழ் நாட்டினுள் நிலம் வாங்குவதையும் முதலிடுவதையும் தடை செய்ய வேண்டும்.
25.        தமிழகத்திலும் புதுச்சேரியிலும் உருவாகும் மின்னாற்றல் அவ்விரு மாநிலங்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும்.
26.        தொழில்கள் தொடங்குவதற்கான விதிமுறைகளை எளிமைப் படுத்தி மாநில மக்கள் மாநில எல்லைக்குள் புதிய தொழில்களை தங்குதடையின்றி தொடங்க வகை செய்ய வேண்டும். தொழில் தொடங்க இசைவு வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு வழங்கப் பட வேண்டும்.         
27.        1956 நவம்பர் 1 ஆம் நாளன்று இன்றைய தமிழகத்தில் வாழ்ந்திருந்தோருக்கும் அவர்களுடைய வழிவந்தோரில் தமிழ் நாட்டினுள் வாழ்ந்திருப்போருக்கும் மட்டுமே முழுக் குடியுரிமை உண்டு.(தமிழகத்துக்கு உரிய ஆனால் 1-11-1956ல் பறிக்கப்பட்ட பகுதிகளைப் பொறுத்தும் இதே வரையறை பொருந்தும்.)
28.        அவர்களைத் திருமணம் செய்ததன் மூலம் இங்கு குடியேறி வாழ்பவர்களுக்கும் அவர்களின் வழி வந்தோரில் இங்கு வாழ்வோருக்கும் மட்டுமே முழுக் குடியுரிமை உண்டு.
29.        முழுக் குடியுரிமை பெறாதவர்கள் தமிழகத்தினுள் அசையாச் சொத்துகளில் முதலிட முடியாது. தொழில்களிலும், பங்குகளிலும் முதலிட முடியாது, வாணிகத்திலும் ஈடுபட முடியாது.
30.        இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும்.
31.        முழுத் தன்னாட்சியுள்ள மாநிலங்களின் கூட்டாட்சிக்குரியதாக புதிய அரசியல் சட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
32.        சேதுக் கால்வாய்த் திட்டத்தை எந்தக் காலத்தாழ்ச்சியுமின்றி உடனடியாக நிறைவேற்றி முடிக்க வேண்டும்.
33.        சேதுக் கால்வாயில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறின்றி சேதுப்பாலத் திட்டத்தையும்உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

உடனடி முன்வைக்க வேண்டிய முழக்கங்கள் குறித்த விளக்கங்கள்:

1.   வருமானவரியை ஒழிக்க வேண்டும்.
      பணம் மூலதனமாக மாறுவதைத் தடுக்கிறது - ஆடம்பரத்தில் திருமணம் சீர்வரிசை என்று திருப்பிவிடப்பட்டு ஏழை மக்களின் வாழ்வைச் சிதைக்கிறது - பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் நிலம் மனைகளாக்கப்பட்டு வேளாண்மையிலிருந்து விடுவிக்கப்படுகிறது - விதி விலக்குகளின் அடிப்படையில் பெருமளவில் பணத்தை ஆட்சியாளர்களின் கைகளில் கொண்டு சேர்க்கிறது - கோயில்கள் போன்ற விளைப்பு சாராத வகையில் பணத்தை வீணடிக்கிறது - வேட்டை என்ற பெயரில் பகற் கொள்ளையர்கள் போல் கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து பேழைகளை உடைத்து படுக்கைகளைக் கிழித்து சுவர், தளங்களை உடைத்துப் பேயாட்டம் ஆடி மக்களின் தனி வாழ்வுரிமையைப் பறிக்கிறது.  பனியா - பார்சி - வல்லரசியர்களின் தொழிற் போட்டியிலிருந்து அகற்றுவதற்காக ஒரே நேரத்தில் ஒரு தொழில் சார்ந்த நிறுவனங்களை வேட்டையாடி அவற்றின் மூலதனத்தை முடக்கி அழிக்கிறது ஆட்சியாளர்கள் மீது பணம் படைத்த அனைவருக்கும் அச்சவுணர்வு ஏற்படுத்தி அவர்களின் மன அமைதியைக் கெடுத்து குருதிக் கொதிப்பு, நீரழிவு போன்ற எண்ணற்ற நோய்களுக்குக் காரணமாகிறது - பண்டப் படைப்பு, வாணிகத்தில் ஈடுபட்டிருப்போரிடத்தில் நிலையான பதற்றவுணர்வை ஏற்படுத்தி வளர்ச்சி, மேம்பாடு பற்றிய சிந்தனை உருவாகாமல் செய்கிறது - எதிர்க்கட்சி அரசியலாளர்களைப் பழிவாங்கவும் தன் கட்சியினரை மிரட்டவும் பயன்படுகிறது - ஊழல் பணத்தை சட்டத்துக்குட்பட்டதாக்க அரசியல்வாணர்களுக்குப் பயன்படுகிறது - நிதி நிறுவனங்கள் வீழ்ந்ததற்கு ரிசர்வ் வங்கியும் வருமான வரித்துறையும் காரணங்கள்.
      இவ்வளவுக்கும் வரவு - செலவுத் திட்டத்தில் வருமான வரியின் மிகப்பெரும் பங்கு வெறும் 7% தான் அதிலும் பெரும்பகுதி கணக்கில் சரிக்கட்டக் கூடிய வரவுதான்.        
2. முழு மதுவிலக்கு வேண்டும்.
      அரசுக்கு வருமானம் என்ற பெயரில் நடைபெறும் அரசு சாராய வாணிகம் உழைக்கும் மக்களின் வருமானத்தை உறிஞ்சிவிட்டு உழவனைக் கசக்கிப் பறித்த அரிசியை மலிவு விலையில் வாங்கி மறு விலைக்கு விற்க அவர்களை வரிசையில் காக்க வைக்கிறது - கூலி கூடியும் உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை- ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஆதாயம் - ஆச்சாரியார் காலத்தில் மதுக்கடை வருவாய் இழப்பை ஈடுசெய்யவெனப் புகுத்திய விற்பனைவரி இன்றும் தொடர்வதால் வருவாய்க்கென்று மதுக்கடைகளைத் திறந்ததாகக் கூறுவது பொய்.
3. பள்ளிக் கல்வி முழுவதும் மாநில அரசின் பொறுப்பிலிருக்க வேண்டும்.
      ஏழைகளுக்கு ஆசிரியரில்லாத பள்ளிகளில் கல்வி - நடுவணரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு என்ற பெயரில் இந்தியைப் பாட மொழியாகக் கொண்ட நடுவணரசுப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள், சமய நிறுவனப் பள்ளிகள், அரசு உதவி பெற்ற தனியார்ப் பள்ளிகள் என்று இத்தனை ஏற்றத் தாழ்வுகள் பள்ளிக் கல்வியில் தேவையில்லை.
4.   மொழிப் பாடங்கள் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழில் இருக்க வேண்டும்.
5.   தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
6. 1:20 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை மீட்க வேண்டும்.
7. ஆண்டுக்கு 12%க்கு மிகாத வட்டியுடன் பணம் கடன் கொடுக்கும் பொதுமக்களின் பணத்துக்குச் சட்டப்பாதுகாப்புடன் கடன் பணத்தை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு சட்டத்தில் வகை செய்ய வேண்டும். கடன் கொடுப்பவருக்கு சட்டத்தில் முன்னுரிமை தர வேண்டும்.
      நெருக்கடி நிலையில் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிச் சட்டத்தின் பின்னர் முறையான வாக்குத்தத்தப் பத்திரக் கடன், ஈட்டுக்கடன் முதலியவை செயலிழந்தன. அங்குதான் கந்து வட்டி செல்வாக்குப் பெற்றது. கடன் வாங்குவோருக்கே சட்டத்தில் சலுகைகள் உள்ளன. அதை மாற்றி கடன் வழங்குவோருக்கு முன்னுரிமை வேண்டும். பண நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததற்கு இது ஒரு காரணம்.
8. உரிமை மாற்று ஆவணமின்றி பட்டா வழங்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். பட்டா வழங்கும் அதிகாரத்தை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். உரிமை மாற்று ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்குவதைப் பதிவுத் துறைப் பொறுப்பில் விட வேண்டும்.
      உடைமையாளருக்குத் தெரியாமல் நிலங்களின் பட்டயப் பெயர்கள் மாற்றப்படுகின்றன. அனுபவ பாத்தியதை என்ற பெயரில் நிலத் திருடர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பொறுப்பு வழங்காததால் தெரிந்தே பதிவுத் துறையினர் உடைமை நிலைமைக்குப் புறம்பான ஆவணங்களைப் பதிகிறார்கள். நாட்டிலுள்ள உரிமையியல் வழக்குகளில் ஏறக்குறைய எல்லாமே ஆவணத்துக்கும் பட்டாவுக்குமுள்ள முரண்பாடு தொடர்பானவையே. வில்லங்கத்தில் தவறிருந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்ற விதியை அகற்ற வேண்டும்.
9. பத்திரப் பதிவுக்கு வழிகாட்டி மதிப்பு நிறுவும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.
       அருவெறுப்பூட்டும் இந்த நடைமுறையின் நோக்கம் ஆட்சியாளர்களுக்கு ஊழல் பணம் சேர்ப்பதே.
10. பத்து கோடி உரூபாய்களுக்கு மேற்படும் முதலீடுகளில் 51%க்குக் குறையாத தொகையைப் பங்கு முலதனமாகத் திரட்ட வேண்டும்.
      சராசரி குடிமகனும் தனது வருவாய் எல்லைக்குள் பெருந்தொழில் நடைமுறையில் பங்கேற்க வேண்டும் - அதனால் உள்நாட்டு முதலீடும் மக்களின் சேமிப்பும் பெருகும் - ஊதாரிப் பண்பாடு மட்டுப்படும் - பங்கு முதலாளி என்ற வகையில் விளைப்புச் செயல்முறை பற்றிய பட்டறிவு கிடைக்கும் - ஆட்சியாளரின் செயற்பாடுகளை நோட்டமிடும் திறன் வளரும்.
11. பங்குச் சந்தைகளை ஒழிக்க வேண்டும். பங்குகளின் மறுவிற்பனை அந்தந்த நிறுவனத்தின் வழியாகத் தான் நடைபெற வேண்டும் - மறுவிற்பனை விலையை நிறுவனமே முடிவு செய்ய வேண்டும் - அது தான் அந்நிறுவனத்தின் எதிர்காலப் பங்கு பத்திர முகமதிப்பாக இருக்கும் - அதன் நூற்றுமேனியில் தான் ஈவுத்தொகை வழங்க வேண்டும்.
      பங்குச் சந்தையில் புரளும் பணத்தில் ஒரு தம்பிடி கூட ஆக்கமான முதலீடாவதில்லை - அது உலகளாவிய ஆட்சியாளர்களின் ஒரு சூதாட்டமே - பங்குப் பத்திரத்தின் சந்தை விலை எதுவாயினும் ஈவு முகமதிப்புக்கே. மறுவிற்பனை நடைபெறாத நிறுவனங்களை எளிதாகப் பிறர் கைக்கொள்வது தவிர்க்கப்படும்.
12. ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு அறிவியல் - தொழில்நுட்பக் காப்புரிமப் பதிவு அலுவலகம் வேண்டும்.
13. டாலரின் நாணய மாற்று மதிப்பை உரூ. 30/- ஆக உடனடியாகக் குறைக்க வேண்டும். அதற்கேற்ப பிற அயல் நாணய மதிப்புகளையும் மாற்றியமைக்க வேண்டும்.
      உள்நாட்டுச் சந்தை விரிவடையும் - மக்களின் வாங்குதிறனும் வாழ்க்கைத் தரமும் உயரும் - வெளிநாட்டுக் கடன்களை குறைவான ரூபாய் மதிப்பிலேயே செலுத்திவிடலாம் - ஏற்றுமதி இறக்குமதி மட்டுப்படும்.
14. உள்நாட்டில் கிடைக்கும் பண்டங்களைத் தேவைக்கு மேல் இறக்குமதி செய்து உள்நாட்டு வேளாண்மையையும் தொழிலையும் அழிப்பதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
15. நில உச்சவரம்பைக் கைவிட வேண்டும்.
      துண்டு - துக்காணி நிலங்கள் உழவர்களை வாழவும் சாகவும் முடியாத நிலையில் அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளி வேளாண் விளைதிறனை படுபாதலத்துக்குக் கொண்டுசென்றுள்ளது - உழவர்கள் வலிமை இழந்ததனாலேயே காவிரி நீர்ச் சிக்கலில் அவர்கள் குரல் உரத்தொலிக்கவில்லை - நில உச்ச வரம்பில் விதிவிலக்குகள் உள்நாட்டு நுகர்வுக்கான விளைச்சலை அழித்து வெளியாருக்குத் தேவைப்படும் விளைச்சலுக்காக நம் நிலங்களைத் திருப்பும் நோக்கம் கொண்டவை - இச்சட்டத்தைக் காட்டித்தான் நம் பொதுமை அட்டைப் புலிகள் உழவர்களை உருக்குலைத்துக்கொண்டிருக்கின்றனர்.
16.     60க்கு 40 வாய்பாட்டைக் கையாண்டு குத்தகைப் பயிர்முறைக்கு முடிவுகட்ட வேண்டும்.
      குத்தகை ஒழிப்பு- சொந்த வேளாண்மை பெரும் பண்ணைகள் அமைய வாய்ப்பு - வேளாண் தொழிலில் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு - இடுபொருள் இன்றி எடு பொருள் - உழவர்களுக்கு வேலை நேரம் முடிந்ததும் விடுதலை - பல முனைத் தொழில் வளர்ச்சி - தொழில் நுட்ப வளர்ச்சி - சிறந்த மூலப்பொருள் மற்றும் கழிவு மேலாண்மை - ஆற்றல் உருவாக்கல் இன்ன பிற.
17. கோயில் சொத்துகளிலும் இதே நடைமுறையைக் கையாண்டு கோயிலுக்கு வரும் 60% சொத்துகளை உரியமுறையில் விற்றுப் பணத்தை வங்கியில் இட்டு வட்டியைக் கோயில் பராமரிப்புக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஒருங்கிணைந்த பண்ணைகளை அமைத்து வருமானத்தைக் கொண்டு அந்தந்தக் கோயிலைப் பராமரிக்கலாம்.
18. கோயில்களுக்கு அரசு எந்த வடிவிலும் பொருளியல் உதவிகள் செய்யக் கூடாது. அவற்றைப் பராமரிப்பது இறையடியவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
19.     மத நிறுவனங்களுக்கும் கோயில்களுக்கும் மாநிலத்துக்கு வெளியிலிருந்து பொருளியல் உதவிகள் தடைசெய்யப்படும்.
     காலங்காலமாகக் கோயில்கள் அரசியல் களங்களாகச் செயற்பட்டு வந்துள்ளன - அயலவரின் ஊடுருவலை இது எளிதாக்கியுள்ளது- எனவே இந்த ஏற்பாடு.
20. உரிமம் பெற்ற நெல் அரிசி வாணிகர் முறையை ஒழித்து நெல் அரிசி வாணிகத்தை அனைவருக்கும் திறந்துவிட வேண்டும். நெல், அரிசி நடமாட்டக் கட்டுப்பாடுகள், இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் கைவிட வேண்டும்.
      உரிமம் பெற்ற வாணிகன் விருப்பம் போல் விலையைக் குறைத்து உழவனின் குருதியைக் குடிக்க முடிகிறது - உழவனுக்கென்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடமென்றும் கிடங்கு என்றும் அமைத்து அதில் உழவனின் பெயரில் உரிமம் பெற்ற வாணிகன் மட்டும் பல ஆதாயங்களைப் பெற்று உழவனை அதிக வலிமையுடன் கொள்ளையடிக்க முடிகிறது.               
21. மின்னாக்கிகளுக்கு 80% கொடுத்தது போல் 95% மானியத்தில் கதிரவ அடுப்பு, கதிரவ மின்விளக்குகள் வழங்க வேண்டும்.
22. மாநிலங்கள் சீரமைப்பின் போது தமிழகத்துக்கு உரிமைப்பட்ட திருவிதாங்கூரிலிருந்து 4½ வட்டங்கள், ஆந்திராவிலிருந்து புத்தூர், சித்தூர், திருப்பதி, கர்நாடகத்திலிருந்து கோலார், கொள்ளேகாலம், வெங்காலூர் ஆகியவற்றை மீட்க வேண்டும்.
     பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற ஆறுகளின் நீர் பற்றிய சிக்கலுக்கும் நம்மிடமிருந்து அண்டை மாநிலங்கள் கவர்ந்துகொண்ட நிலப்பரப்புகளுக்கும் நேரடித் தொடர்புள்ளது - இந்நிலப்பரப்புகளில் தமிழ் மக்கள்தாம் பெரும்பான்மையராக உள்ளனர்.
23. எந்த விளக்கமுமின்றி இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு அதனைத் தமிழ்நாட்டின் பகுதியாக்க வேண்டும்.
      திரிகோணமலையில் ஒரு வானொலி ஒலிபரப்பு நிலையம் நிறுவுவதற்காக அமெரிக்கா இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்ய இருந்ததைத் தடுக்க உருசியாவின் நெருக்குதலினால் இந்திரா கச்சத்தீவை இலங்கைக்கு நன்(?)கொடையாகக் கொடுத்தார். தமிழீனத் தலைவர் மீது ஏற்கனவே இருந்த ஊழல் குற்றச்சாட்டுகளால் ஐயா பணிந்துபோக வேண்டியதாயிற்று என்றுகூடச் சொல்ல முடியாது. வெட்ட வேண்டியதை வெட்டினால் ஐயா எதை வேண்டுமாலும் செய்வார். அந்தக் காலகட்டத்தில்தான் அம்மையாரின் வேண்டுகோளுக்கு” “இரங்கி அண்ணன் காவிரிப் பரப்பு உழவர்கள் போட்டிருந்த உச்ச நயமன்ற வழக்குகளைப் பின்வாங்க வைத்து தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கையும் திரும்பப் பெற்றார். பெண்டாட்டி, தப்பு தப்பு, தனக்குக் கீழே உள்ளவன் ஒழுக்கங்கெட்டவனாயிருந்தால் அவனைக் கைப்பிடியில் வைத்துக்கொளவதற்கு எவ்வளவு தோது பார்த்தீர்களா! இவை தவிர அம்மையார் ஏதாவது வெட்டியிருப்பாரா என்றா கேட்கிறீர்கள்? இல்லாமலா அவ்வளவு உதைக்குப் பின்னும் நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று வாயெல்லாம் வழக்கம்போல் பல்லாக இளித்திருப்பார்!                      
24. மாநில எல்லைக்கு அப்பாலுள்ளவர்கள் தமிழ் நாட்டினுள் நிலம் வாங்குவதையும் முதலிடுவதையும் தடை செய்ய வேண்டும்.
 நபார்டு வங்கியுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு பெருந்தொகையைக் கடனாகப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டில் நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கடனை வாங்கிய பின் எதுவுமே செய்யாமல் அதை வாராக் கடனாக அறிவித்து அந் நிலங்களை முடக்கிப் போட்டுள்ளனர் அண்டை மாநிலத்தார். வங்கிகளை அரசுடைமை ஆக்கியதால் வங்கிகள் கவிழ்வதால் மக்களுக்கு ஏற்படும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்று தத்துவம் பேசும் பொதுமைத் தோழர்களே, மக்களின் பணம் கொள்ளை போவது மட்டுமல்ல அதற்காகத் தமிழக விளைநிலங்கள் பாழடிக்கப்படுகின்றனவே அது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் கூட்டாளிகளான அரசியல்வாணர்களும் அதிகாரிகளும் கூட்டுச்சேர்ந்து வாராக் கடன் என்ற பெயரில் அடித்த கொள்ளைக்கு நாளுக்கொரு வங்கி கவிழ்ந்தாலும் ஈடாகாதே! வங்கி கவிழ்வது அனைவருக்கும் தெரிய நடப்பது, ஆனால் உங்கள் கூட்டாளிகள் அடிக்கிற கொள்ளையோ தோலிருக்கச் சுளை முழுங்கும் செயல். வங்கி கவிழ்ந்தால் அதில் பணம் போட்டவர்க்கு மட்டும் தான் இழப்பு. உங்கள் கூட்டாளிகள் அடிக்கும் கொள்ளையோ நீங்கள் யாருக்கு மண்ணுலகில் விண்ணுவக இன்பங்களை வாரி வழங்குவதற்காகப் பிறவி எடுத்திருப்பதாகப் பறையறைந்துகொண்டிருக்கிறீர்களோ அந்தப் பாட்டாளி குருதியைச் சிந்தி உழைக்கிறானே அவன் தன் கையால் மறைமுக வரியாகவேனும் மறைமுகமாகத் தன் உழைப்பைச் சுரண்டிய உடைமை மற்றும் ஒட்டுண்ணி வகுப்புகள் செலுத்தும் பலதிறப்பட்ட வரிகளாகவும் ஆளுவோர் கைக்குப் போய்ச்சேரும் அவனுடைய உழைப்பின் பயன்தானே! வெளிப்படையாகத் தோன்றவில்லை என்பதற்காக நீங்கள் எவ்வளவு வெண்டுமானாலும் நாக்கை நீட்டுவீர்களோ? பொய்களைச் சொல்லி நெடுநாள் எவரையும் ஏய்க்க முடியாது தோழர்களே!  
25. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் உருவாகும் மின் ஆற்றல் அனைத்தும் அவ்விரு மாநிலங்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும்.
      தென்னக மின் கிராதி இணைப்பு என்ற பெயரில் தமிழக எல்லையினுள் உருவாகும் மின்னாற்றலில் பெரும்பகுதி கேரள, ஆந்திர, கர்னாடக மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளது. அது போக அண்டை மாநில மக்களோடு நல்லுறவைப் பேணுவதற்காக தமிழகத்துக்கென்று ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து கூட தங்கள் அப்பன் தேட்டத்தை அள்ளிக்கொடுப்பது போல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தை ஆளவந்த அண்ணனும் அம்மையும். அண்டை மாநிங்களுடனான நல்லுறவு ஆற்றுநீர், மின்னாற்றல் தவிர வேறு எந்தெந்த வடிவங்களில் அல்லது அளவுகளில் பேணப்படுகிறது என்பது வேண்டுமானால் நமக்குத் தெரியாமலிருக்கலாம், எவ்வாறு பேணப்படுகிறது என்பது நமக்குத் தெரியாதா என்ன!
26. தொழில்கள் தொடங்குவதற்கான விதிமுறைகளை எளிமைப் படுத்தி மாநில மக்கள் மாநில எல்லைக்குள் புதிய தொழில்களை தங்குதடையின்றி தொடங்க வகை செய்ய வேண்டும். தொழில் தொடங்க இசைவு வழங்கும் அதிகாரம் ஊராட்சி ஒன்றியங்களிடம் இருக்கும்.
27. 1956 நவம்பர் 1 ஆம் நாளன்று இன்றைய தமிழகத்தில் வாழ்ந்திருந்தோருக்கும் அவர்களுடைய வழிவந்தோரில் தமிழ் நாட்டினுள் வாழ்ந்திருப்போருக்கும் மட்டுமே முழுக் குடியுரிமை உண்டு.
28. அவர்களைத் திருமணம் செய்ததன் மூலம் இங்கு குடியேறி வாழ்பவர்களுக்கும் அவர்களின் வழி வந்தோரில் இங்கு வாழ்வோருக்கும் மட்டுமே முழுக் குடியுரிமை உண்டு.
29. முழுக் குடியுரிமை பெறாதவர்கள் தமிழகத்தினுள் அசையாச் சொத்துகளில் முதலிட முடியாது. தொழில்களிலும், பங்குகளிலும் முதலிட முடியாது, வாணிகத்திலும் ஈடுபட முடியாது.
30. இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும்.
31. முழுத் தன்னாட்சியுள்ள மாநிலங்களின் கூட்டாட்சிக்குரியதாக புதிய அரசியல் சட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
32. சேதுக் கால்வாய்த் திட்டம் எனப்படும் தமிழன் கால்வாய்த் திட்டத்தை எந்தக் காலத்தாழ்ச்சியுமின்றி உடனடியாக நிறைவேற்றி முடிக்க வேண்டும்.
      இக் கால்வாயை எதிர்ப்பவர்கள், இலங்கை அரசு, கேரள அரசு, அமெரிக்கா ஆகியவற்றின் நலன்களை அறிந்தும் அறியாமலும் மனதில் தாங்கியவர்களே. உலகம் மனிதனால் நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சிறுமாற்றத்தின் விளைவுகளுக்கேற்ப இயற்கையே தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். நாமும் உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். உண்மையில் நலம் தரும் மாற்றங்கள் கடல் பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகக் கடற்கரை முழுவதையும், ஏன் இந்திய கடற்கரை முழுவதையும் கூட இணைக்கும் ஒரு கடற்பாதை பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் எளிய சிக்கனமான மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கும் சுற்றுலாத் தேவைகளுக்கும் இன்றியமையாதது.
33.   தமிழன் கால்வாயில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறின்றி தமிழன் பாலத் திட்டத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
 இந்தத் திட்டம் மறவன்புலவு க.சச்சிதானந்தம், ஈழத்துக் கடலியல் பொறியாளர் வரதீசுவரன் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. கால்வாய் தோண்டும்போது கிடைக்கும் கல்லையே பாலம் கட்டுவதற்குப் பயன்படுத்தலாம் என்கின்றனர். பாலத்தூண்களில் காற்றாடிகளை நிறுவி மின்னாக்கமும் இயலுமென்கின்றனர்.


∗ ∗ ∗ ∗ ∗


[1] உரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கேற்ப இந்த குறைந்தபக்க முதலீட்டு வரம்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.

0 மறுமொழிகள்: