4.12.15

திராவிட மாயை - 8


வல்லரசியமும் முதலாளியமும்
            மேலே தொடர்வதற்கு முன் முதலாளியம் என்னும் பொருளியல் விளைப்புப் பாங்கு குறித்து விளக்குவது தேவையாகிறது.

            முதலாளியத்துக்கு முந்திய நிலக்கிழமைக் குமுகத்தில் நிலத்தில் நிலையாகப் பிணைக்கப்பட்டிருந்த கொத்தடிமையாக உழவன் இருந்தான். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தின் பயனாக நிலம் அவன் சொந்தமானது. அதனால் அதை அவன் விற்கவும் முடிந்தது. பணம் படைத்தவர்கள் அந் நிலங்களை வாங்கிப் பெரும் பண்ணைகளை அமைத்தனர்.(நம் நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் அந்த நிகழ்முறையைத் தடுக்கிறது). அவற்றில் நிலமற்ற உழவன் கூலித் தொழிலாளியானான், அல்லது வேலை தேடி நகரங்களுக்குச் சென்றான். பெரும் பண்ணைகளை அமைக்க குத்தகை உழவனை வல்லந்தமாக வெளியேற்றியதும் உண்டு.

            முன்பு தனி ஆட்களாகத் தத்தமக்குக் ஒதுக்கப்பட்ட நிலங்களில் பாடுபட்ட உழவர்கள் இப்போது பெரும் பண்ணைகளிலும் தொழிற்சாலைகளிலும் பலர் சேர்ந்து பணியாற்றினர். தங்களுக்குத் தேவையானவற்றைக் கூட்டாகச் சேர்ந்து கேட்பதற்கு இது தானே வழியமைத்தது.

            தொழில்நுட்பங்கள் மேன்மையுற மேன்மையுற விளைப்பு பெருகியது. விளைத்த பண்டங்களை விற்றால்தான் தொழில் தொடர்ந்து நடைபெறும். அப் பண்டங்களுக்கான சந்தையாகக் குடியேற்ற நாடுகள் எனப்படும் அடிமை நாடுகள் பயன்பட்டன. இவ்வாறு குடியேற்ற நாடுகள் என்ற புறக்காரணிக்கு முதலாளிய வளர்ச்சியின் தொடக்க காலத்தில் முதன்மையான பங்கு உண்டு. அதாவது முதலாளியம் வல்லரசியத்தின் ஒரு இன்றியமையாத காரணமும் விளைவுமாகத்தான் தோன்றியது. ஆனால் அதனுள்ளிருக்கும் அக முரண்பாடுகளிலிருந்தே வல்லரசியத்திலிருந்து அதை விடுவிக்கும் வழிமுறைகளும் தோன்றியுள்ளன.

            முதலாளிய விளைப்புப் பாங்கில் இடைவிடாமல் மேம்பட்டுக்கொண்டிருந்த தொழில்நுட்பத்தின் விளைவாகத் தொழிலாளியின் உழைப்பின் விளைதிறன் விரைந்து பெருகியது. ஆனால் அவன் பெறும் கூலியின் மதிப்போ அவனது உழைப்பு உருவாக்கிய பண்டங்களின் மதிப்பின் ஒரு மிகச் சிறு விகிதமே. எனவே பெரும்பான்மை மக்களைக் கூலி உழைப்பாளர்களாகக் கொண்ட ஒரு குமுகத்தில் முதலாளிய விளைப்பால் உருவாகும் பண்டங்களை வாங்க மக்களிடம் போதிய பணம் இருக்காது. எனவே பண்டங்கள் தேங்கும். பண்டங்கள் விற்றுமுதலாகாததால் பணமுடை ஏற்பட்டு முதலாளிகள் கதவடைப்பை நாடுவார்கள். தொழிலாளர்களின் வேலை இழப்பால் பண்டங்களின் விற்பனை மேலும் குறைந்து நிலைமை மேலும் சிக்கலாகும். ஒரு கட்டத்தில் நாடெங்கும் பண்டங்கள் வாங்குவாரின்றித் தேங்கிக் கிடக்க உலகெங்கும் மக்கள் செத்துக்கொண்டிருந்தார்கள். தேங்கிய பண்டங்கள் சிறு எண்ணிக்கைக் கொண்ட பணம்படைத்தவர்களின் நுகர்வால் சிறிது சிறிதாகக் கரையத் தொடங்க சிறுகச் சிறுக விளைப்பு மீண்டும் புத்துயிர் பெற்று மற்றுமொரு பொருளியல் நெருக்கடியை உருவாக்கும் உச்ச விளைப்புத் திறனை நோக்கிப் பாய்ந்துசெல்லும்.

            பொருளியல் நெருக்கடி எனும் இந்த நச்சுச் சுழல் 1930கள் வரை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை உலகை உலுக்கிக்கொண்டிருந்தது. இந்த நச்சுச் சுழற்சியைக் கண்டு அதிர்ந்த மார்க்சு அவற்றிலிருந்துதான் பொதுமை நோக்கிய பாட்டாளியப் புரட்சி வெடித்துக் கிளம்பும் என்று கணித்தார்.

            அவரது கணிப்பு பொய்யாகவில்லை. தொழில்துறையில் ம் நாட்டு அரசு தலையிடாது என்று பொதுமைக் கோட்பாளர்களை, குறிப்பாக சோவியத்தைப் பகடி பேசிக்கொண்டிருந்த அமெரிக்காவில் 1930களில் தோன்றிய பொருளியல் நெருக்கடியின் விளைவாக பொதுமை இயக்கம் வளரத் தொடங்கியது. ஆனால் அந்த நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான கோட்பாடு ஒன்று ஏற்கனவே உருவாகி இருந்தது. அதுதான் கெயின்சு உருவாக்கிய கோட்பாடு.

0 மறுமொழிகள்: