திராவிட மாயை - 22
5.பாராளுமன்ற மக்களாட்சி எனும் போலி மக்களாட்சி
ஐரோப்பிய உலகம் வளர்த்தெடுத்த மக்களாட்சி போலியான
ஒன்றாகும். உண்மையில் அது ஒரு குழுவாட்சியே(Oligarchy) ஆகும். இங்கு அரசியல் கட்சிகள் பதவியைப்
பிடிக்கவென்று போட்டி இடுகின்றன. நம்
நாட்டைப் பொறுத்தவரை:
1.
போட்டியிடும்
கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பளிக்க வேண்டும். அதற்கு இராசீவ் கொண்டுவந்த
வரையறையை அக்கட்சிகள் ஏற்றுத் தீர்மானம் இயற்றி ஆணையத்துக்கு விடுக்க வேண்டும்.
அவை:
1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
2. இந்திய ஒருமைப்பாடு
3. மதச் சார்பின்மை
4. நிகர்மைக் கோட்பாடு
5. அணிசேராமை.
இந்த வரையறைகள் சரியோ இல்லையோ இவற்றுக்கு வெளியிலும் கருத்துக்கொள்ள ஒவ்வொரு
குடிமகனுக்கும் உரிமை வேண்டும். அதை மறுக்கிறது இந்த வரையறை. இந்த வகையில் இங்கு
மக்களாட்சி நெறிமுறைகள், அதாவது கருத்துரிமை, மீறப்படுகிறது.
2.
கட்சிகள்
வேட்பாளரை, அவர் சாதி, இன, மொழி, பண வலிமை போன்ற அடிப்படைகளில் தேர்தலில் வெற்றி
பெறும் வாய்ப்புள்ளவரா என்ற கண்ணோட்டத்திலேயே தேர்ந்து களத்தில் நிறுத்துகின்றன.
3.
அவ்வாறு
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் சட்டமன்றம் அல்லது பாராளுமன்றத்தில்
வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் போது கட்சியின் கொரடா எனும் சட்டாம்பிள்ளை
பணிக்கும் வகையில்தான் செயற்பட முடியும். இல்லையென்றால் அவர் கட்சி தாவல்
குற்றத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுவார். அதாவது நாம் தேர்ந்தெடுக்கும்
உறுப்பினர்கள் நம் விருப்பத்துக்கு மட்டுமல்ல, தன் விருப்பத்திற்கு ஏற்கக் கூட
வாக்களிக்க முடியாது.
4.
மன்றத்தில்
வைக்கப்படும் ஏறக்குறைய அனைத்து சட்டவரைவுகளும் அந்தந்தத் துறைச் செயலகப்
பிரிவிலுள்ள அலுவலர்களால்தாம் வடிக்கப்படுகின்றன.
5.
எந்த
ஓர் அமைச்சருக்கும் நேரடியாக ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் கிடையாது. குடியரசுத்
தலைவர் அல்லது மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநரின் பெயரில் துறைச் செயலர்தான்
கையெழுத்திட முடியும். அது போன்றே பிற நாடுகளுடனும் நிறுவனங்களுடனும் செய்யப்படும்
ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளும்.
6.
மன்ற
உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இருக்கும் உண்மையான உரிமை அரசு அலுவலர்கள், நயவர்கள் ஆகியோருடன் கூட்டுச்
சேர்ந்து விருப்பம் போல் கொள்ளையடிக்கலாம். அதைத்தான் நம் ஆட்சியாளர்கள்
திறம்படச் செய்கிறார்கள்.
உண்மையில்
உலகையே ஆள்பவர்கள் நமக்கு வெளிப்படையாகத் தோன்றாமல் ஆனால் அஞ்சத்தக்க வலிமையுள்ள
படைத்துறையினர்தான். இவர்களை வெல்லும் வல்லமை ஒன்றிணைந்த மக்களின் கூட்டுச்
செயற்பாட்டுக்குத்தான் உண்டு. இந்தக் கூட்டுச் செயற்பாடு நடைமுறையாகக் கூடாது
என்பதற்காக ஆட்சியாளர்கள் மக்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவுச் சிதறல்களாகப் பிரித்து வைப்பது தங்கள் இருப்புக்குத் தேவை
என்பதை உணர்ந்து செயற்படுகிறார்கள். அவர்களுக்கு உதவுபவையாகவே நம் “தமிழ்”
இயக்கத்தினர், “தமிழ்த் தேசியர்”கள்,
வந்தேறி கோட்பாட்டினர், பல்வேறு வண்ணங்களில் செயல்படும் பொதுமைத் தோழர்கள் ஆகிய
அனைவரின் முழக்கங்களும் செயல்திட்டங்களும் அமைந்திருக்கின்றன.
மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆட்சி என்ற முழக்கத்தோடு
ஐரோப்பாவில் தோன்றிய ஆட்சிமுறை மன்னரின் இடத்தில் அரசியல் கட்சிகள், அதிகார
வகுப்பினர், காவல்துறை, நயமன்றம், நிலையான படை, அரசியல் தரகர்கள் என்ற ஒரு
குழுவாட்சியையே பாராளுமன்ற மக்களாட்சி என்ற பெயரில் நமக்குத் தந்துள்ளது.
முதலாளியத்திலிருந்து முகிழ்த்த இந்தக் குழுவாட்சிக்கு எதிரில் ஆளப்படுவோராக,
முதலாளியம் அமைத்துத் தந்த விழிப்புணர்வும் ஒருங்கிணைவும் கொண்ட பாட்டாளியர்
நின்று இக் குழுவாட்சியை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் ஐரோப்பாவில். அதே
நேரத்தில் இன்றும் குக்குலக் கட்டத்தைக் கூடத் தாண்டாத மலைவாழ் மக்களைப்
பெருமளவில் கொண்ட இந்தியாவிலும் பிற ஆசிய, தென்னமெரிக்க நாடுகளிலும் முற்றிலும்
குக்குல மக்களைக் கொண்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் குக்குலத்துக்குரிய ஒரு
மெய்யியலைக் கொண்ட முகம்மதிய நாடுகளிலும் முதலாளியத்துக்குரிய இந்தப் பாராளுமன்ற
மக்களாட்சி இந்த முரண்பாட்டினாலேயே அந் நாடுகளின் மக்களை முற்றிலும்
வலிமையற்றவர்களாக்கி ஐரோப்பிய, வட அமெரிக்க, ஜப்பானிய முதலாளிய நாடுகளுக்கு
முழு அடிமைகளாக்கி வைத்திருக்கிறது.
இந்தப் பாராளுமன்ற மக்களாட்சியில் ஆட்சியாளர் குறிப்பிடும்
ஒரு நாளில் ஓர் இடத்தில் அவர்கள்
அளிக்கும் ஒரு சீட்டில் ஒரு, ஒரேயொரு முத்திரையைப் பதிந்து அவர்கள் வைத்திருக்கும்
பெட்டியில் போடுவது அல்லது மறைவாக வைத்திருக்கும் ஒரு மின்னணுவியல் கருவியில் ஒரு
குமிழை அழுத்துவதுதான் வாக்களிக்கும் அகவையை எய்தி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற
ஒரு குடிமகனின் மக்களாட்சி உரிமை அல்லது மக்களாட்சிப் பங்கேற்பு. இதற்காக அவன் தன்
கை விரல்களில் ஒன்றை ஆட்சியாளர்கள் கறைப்படுத்த இடமளிக்க வேண்டும். இந்த ஒன்று
தவிர இந்த “மக்களாட்சி”யில் நடைபெறுவது அரசாட்சி,அதாவது அரசின்
ஆட்சிதான்.
இந்தப் பாராளுமன்ற “மக்களாட்சி”யில் தேர்தலில் ஒருவர் வெற்றி
பெற வேண்டுமானால் வேட்பு விருப்பம் தெரிவிப்பதற்கே ஒரு கணிசமான தொகை வைப்பாக வைக்க
வேண்டும். தேர்தலில் வெற்றிக்கு வாக்காளர்களிடையில் வேட்பாளர்களின் அறிமுகம்
இன்றியமையாதது. அதை எய்துவதற்குப் பெரும் தொகை செலவிட வேண்டும். எனவே எளிய மக்கள்
தேர்தலில் போட்டியிட முடியாது. கட்சிக்கோ தன் இருப்பை உறுதிப்படுத்தப் பெரும்
பணப்புழக்கம் தேவை. எனவே இதை எய்த அது நேர்மையற்ற வழிகளை கட்டாயம் நாடியாக
வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சி இருக்கையில் இடம்பெற்ற கட்சி ஆட்சியில் நடைபெறும்
ஊழல்களில் பங்கு கேட்கிறது. அதற்காகவே ஊழல்களைச் சுட்டிக் காட்டிப் பெரும்
கூக்குரலை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. த(லைமுறை).2 அலைக்கற்றை ஒதுக்கீட்டு
ஊழலை பாராளுமன்றக் கூட்டுக் குழு மூதலிக்க வேண்டுமென்று ஒரு பாராளுமன்றக் கூட்டுத்
தொடரையே எதிர்க் கட்சிகள் முடக்கி அடம் பிடித்து நிறைவேற்றியது இதற்கு ஒரு சிறந்த
எடுத்துக்காட்டு. ஊழல்களில் ஆளும் கட்சிக்கு முதற்பங்கு, பிற கட்சிகளுக்கு அவரவர்
உறுப்பினர் எண்ணிக்கை விகிதத்தில் பங்குகள் என்பதே எழுதப்படாத நடைமுறை.
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஆண்டு வ(ரவு) -
செ(லவு)த் திட்டப் பாராளுமன்ற அமர்வுக் காலம் முழுவதும் பொருத்தமற்றதாகக் கூட ஒரு
சில சிக்கல்களைக் கையில் எடுத்துக்கொண்டு அவையை முடக்கி விடுவர். ஆனால் எந்த
உரையாடலும் இன்றியே அத்தனை ஆண்டுகளிலும் பணச் சட்டவரைவுக்கு வாக்களித்து நிறைவேற்ற
வைத்துள்ளனர் உறுப்பினர்கள். இதன் பின்னணிதான் என்னவாக இருக்கும்?
வ-செ. திட்டத்தில் வரிக் குறைவுகள், நீக்கல்கள், மானியங்கள்
மூலம் “ஊக்குவிப்புகள்” பெற்றோரிடமிருந்தும் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரிகளில் குறைப்பு,
தடைகள் நீக்கம் ஆகியவற்றுக்கு அணுகுவோரிடமிருந்தும் கிடைக்கும் பணத்தில் தங்கள்
தங்கள் பங்குகள் கிடைப்பதற்கான இடைவெளியைக் கொடுப்பதற்கும், இந்தப் “பகரத்தில்” தங்கள் உரைகள் குழப்பத்தை
ஏற்படுத்திவிடாமல் இருக்கவும் இந்த உத்தி கையாளப்படுகிறது போலும்.
2010 - 11இன் இறுதிக் கூட்டத்தில் 23 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கிய
எதிர்க்கட்சிகளை அழைத்துப் பேசி அவர்கள் கேட்ட “பாராளுமன்ற கூட்டுக் குழு” அமைக்க இசைவு
தெரிவித்து வரும் வ-செ.திட்ட அமர்வில் அவை இணக்கமாக நடக்க ஒத்துழைப்பைப் பெற்றது
ஆளும் கட்சி. ஆனால் வ-செ.திட்ட அமர்வில் 2008ஆம் ஆண்டு முந்திய பாராளுமன்றத்தில்
இன்றைய ஆளும் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதில் கையூட்டு வழங்கப்பட்டது
என்ற ஒரு தாளிகைச் செய்தியைக் காட்டி தலைமையமைச்சர் பதவி விலக வேண்டும் என்று
கலகம் செய்து பாராளுமன்றத்தை முடக்க முயன்றது. அதற்கு ஓரிரு நாட்கள் முன்பு
ஏற்கனவே ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள தாமசு என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை
ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக அமர்த்தியதில் தான் முழுப் பொறுப்பை
ஏற்றுக்கொள்வதாக அவையில் தலைமை அமைச்சர் அறிவித்த போது இது போன்ற பதவி விலகலைக்
கேட்கவில்லை அந்தக் கட்சி.
இந் நிகழ்வுகள் மட்டுமல்ல, ஓர் அமர்வு முழுவதும் கலகம்
செய்து இறுதி நாளில் மாலை 6.00 மணிக்கு
மேல் 8.00 மணிக்குள் 300க்கு மேல் சட்டவரைவுகளைப் படிக்காமலே “நமது மேன்மைக்குரிய பாராளுமன்றம்”
நிறைவேற்றிய வியத்தகு நிகழ்ச்சிகளை நாடு கண்டுள்ளது. அதாவது, ஆட்சியாளர்களாகிய
ஆளும் கட்சியினரும் அதிகார வகுப்பும் சேர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை
நிறைவேற்றி அதனால் பயன்பெறும் குழுக்களிடமிருந்து பணம் பெற்றுத் தங்களுக்குப்
பங்கு தருவதற்கான கால இடைவெளியைப் பாராளுமன்றத்தில் ஏற்படுத்துவதற்காகவே இந்த
நாடகம் என்பது தவிர இதற்கு வேறு என்ன விளக்கம் தர முடியும்?
இவ்வாறு தங்களுக்கு விதிக்கப்பட்டவையாக அரசியல் சட்டம்
வகுத்துள்ள அடிப்படைக் கடமையை நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தைப் பகரம் பேசும்
சந்தையாக மாற்றுவதுடன் தன்னைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் மக்கள் அளித்த பதவியைக் காசு
கொடுக்கும் தனியாள்களுக்கும் குழுக்களுக்கும் பணிபுரிவதற்கும் தன் சொந்த நலன்களை
மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தும் நோக்கங்களை மட்டும் கொண்டு தேர்தல் களத்தில்
போட்டியிடும் ஒரு தேர்தல் முறையில் “நல்லவரைத்
தேர்ந்தெடுப்பதற்காகத் தவறாமல் வாக்களியுங்கள்”, “நல்லாட்சி அமைவதற்காக உங்கள் வாக்குகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்”, “அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதுதான் நல்லாட்சி
அமைய வழியமைக்கும்”, “தேர்தலில்
வாக்களிக்கும் மக்களாட்சிக் கடமையில் இருந்து பின்வாங்காதீர்கள்” என்று வாக்காளர்களை நோக்கி அறிவுறுத்தும் “அறிஞர்” பெருமக்களையும் “தேர்தலில்
வாக்களிக்கத் தவறுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்”
என்று கொதித்தெழும் “புரட்சி வீரர்களை”யும்
என்னவென்று சொல்ல?
இவ்வாறு ஊழல் செய்து கொழுப்பதற்கென்று ஒரு கயவாளிக்
கும்பலைத் தேர்தெடுக்க வாக்களிப்பதற்கென்று வருவாய்த் துறையினர் வெளியிடும்
வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து அதில் அவர்கள் செய்துள்ள குழறுபடிகளைச் சுட்டிக்
காட்டி, அவற்றைத் திருத்திவிட்டார்களா என்று அவர்கள் முன் சென்று கெஞ்சி கூத்தாடி,
அவர்கள் வழங்கும் உலகிலேயே நம்பத்தகாத ஓர் ஆவணமாகிய பிழைகள் மலிந்த வாக்காளர்
அட்டைகளைப் பெற்று அவற்றுடன் தேர்தல் நாளன்று வரிசையில் காத்துக் கிடந்து, சூழ
நிற்கும் காவல் துறையினர், கட்சிகளின் போக்கிரிகள், காவலர்கள், துணைப் படையினர் என்ற
காக்கி உடையணிந்தவர்கள் ஆகியோரைக் கண்டு பதற்றத்துடன்
தேர்தல் பணியாளர்கள் நம்மை எத்தர்கள் போன்றே கருதிக்
கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழியளித்து கைவிரல்களில் ஒன்றைக் கறைப்படுத்திக்
கொண்டு வாக்களித்துத்தான் ஆக வேண்டுமா?
நம் நாட்டில் வென்று ஆட்சியமைக்கும் கட்சியும் தோற்கும்
முதன்மை எதிர்க் கட்சியும் பெற்ற மொத்த வாக்குகளின் விகிதத்துக்கும் தேர்வுபெற்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை விகிதத்துக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. இன்று
போல் கூச்சலிட்டு மன்றத்தை முடக்காமல் அவை முறையாகச் செயல்பட்டால் இதனால்
மன்றத்தில் மக்களின் தேர்வுகளுக்கேற்ற விகிதத்தில் மன்றத்தில் கருத்து வெளிப்படும்
வாய்ப்பில்லாமல் போகிறது.
பல நாடுகளில் வழக்கிலிருக்கும் விகிதமுறைப் பகராளியம்(Porportional
Representation) மூலம் இந்தக் குறையை நீக்குவதற்குக் கூட நம்
ஆட்சியாளர்கள் அணியமாக இல்லை. இப்போதைய இந்த முறைதான்
இவர்களது எத்துவேலைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது போலும்.
வாக்களித்தோர் விகிதம் உயரும் வகையில் அனைவரும் வாக்களித்து
இவர்களது ஏமாற்று அரசியலை நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டோம் என்று அவர்களுக்குச்
சான்றிதழ் வழங்க வேண்டுமா? சென்ற பல தேர்தல்களில் வாக்களிப்பு நடந்த நாளின்
இறுதியில் வாக்களிப்பு விகிதம் 50 நூற்றுமேனிக்கு மேலும் கீழுமாக ஊசலாடும் ஒன்றாக
அறிவிப்பர். ஆனால் எண்ணிக்கை முடியும் போது அவ்விகிதம் எப்படியோ 60%
நூற்றுமேனியைத் தாண்டிவிடும்! திருமங்கலத்தில் மின்னணு வாக்குப்பதிவில் விகிதம்
90%த் தாண்டியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 70 நூற்றுமேனியைத் தாண்டியது.
உலகில் நம்மைவிடத் தொழில்நுட்பத்தில் பல படிகள் மேலே சென்றவர்கள் கூட மின்னணுவியல்
வாக்களிப்பின் நம்பகமின்மையை ஏற்றுக்கொண்டு சீட்டு முறையையே பின்பற்ற, நம்
ஆட்சியாளர்கள் மட்டும் மின்னணுவியல் வாக்குமுறையைக் கட்டிக்கொண்டு தொங்குவது
எதனால்? ஆக எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும் பாராளுமன்றத் தேர்தல்
உண்மையான மக்களாட்சியை நமக்குத் தராது.
இதற்கு மாற்று என்ன?
நாம் மேலே சுட்டியவாறு மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களின் கைகளை
முறுக்கி நமக்குத் தேவையானவற்றை முடித்துக்கொள்வதுதான் ஒரே
வழி. அதற்குத் தேவை மக்களிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான முழக்கங்களைத்
தவிர்த்து பெரும்பான்மை மக்களுக்கு நிலைத்த பயன்தரும் குறிக்கோள்களை முன்வைத்து
அவர்களை ஒருங்கிணைத்து போராட வைப்பதுதான்.
இது மக்களாட்சி என்ற பெயரில் இன்று நடக்கும் அரசு ஆட்சியை நெறிப்படுத்தும் ஒரே
வழியாகும்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக