12.12.15

திராவிட மாயை - 21


4.8.தமிழீனத் தலைவரின் மாபெரும் காப்புப்ப(பா)ணி

            ஈழ மக்களின் மாபெரும் படுகொலையில் தமிழீனத் தலைவரின் பங்கை மறைத்து பேரவைக் கட்சியை மட்டும் கருணாநிதியின் கைக்கூலிக் கும்பல் குற்றம் சாட்டி வருகிறது. உண்மையில் கருணாநிதியின் பழிவாங்கல் உணர்வு இதில் முதன்மைப் பங்கு ஆற்றியிருக்கிறது. இராசீவ் கொலைக்குப் பழிவாங்கினார்கள் என்ற விளக்கம் உண்மையல்ல. நடந்தவற்றை அலசும் போது இந்திரா, இராசீவ் இருவரின் கொலைகளும் அரண்மனைக் கொலைகள். இரண்டாவதில் விடுதலைப் புலிகளுக்குப் பங்கிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இன்னொரு நிகழ்ச்சியை நினைவுபடுத்துவோம்.

            ம. கோ. இரா. ஈழத்தில் பிறந்தவர். பெரியாரைப் போல் குழந்தை இல்லாத அவர் பெரியாரைப் போலன்றி தனக்கென்று இருந்த சொத்துகளைத் தகுந்தவர்கள் கைகளில் அறநிலையங்கள் மூலம் ஒப்படைத்துச் சென்றவர். ஏழ்மை நிறைந்த தன் சிறு அகவையில் உதவியவர்களைத் தன்  இறுதிக் காலத்தில் சென்று பார்த்து நன்றி கூறியவர். அரசியலுக்காகச் செய்த ஊழல்களும், செய்யாதவைகளும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இருந்தாலும் பொதுவாக அவரது செயல்களை நல்லவை என்று கூறலாம். அவர், விடுதலைப் புலித் தலைமையின் சிறப்பை மதிப்பிட்டு வெளிக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல கோடி உரூபாய்களை வழங்கியவர். இதற்குள் உமாமகேசுவரன் எனும் பிளாட் முகுந்தனைப் பிடித்துக்கொண்டு பேரவைக் கட்சியினரும் பத்மநாபனின் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கையைப் பிடித்துக் கொண்டு இந்திய மார்க்சியக் கட்சியின் போலிகளும் என்று தமிழகத்தினுள் வகைவகையாகக் களத்தில் இறங்கினர். கி. வீரமணிக்கு விடுதலைப் புலிகள்.

            ம.கோ.இரா. இப்படிச் செய்ததும் கருணாநிதி டெலோ எனும் தமிழ் ஈழ விடுதலை அமைப்பின் சபாரத்தினத்தைப் பிடித்து டெசோ(தமிழ் ஈழ ஆதரவு அமைப்பு) என்ற ஒன்றை உருவாக்கினார். இதற்கிடையில் ஈழத்தில் போட்டி இயக்கங்களை அகற்றும் விடுதலைப் புலிகளின் திட்டத்தில் சபாரத்தினம் கொல்லப்பட்டார். பிரபாகரனைக் கொல்லும் திட்டம் செயல்படும் முன்னர் அவர் முந்திக்கொண்டார் என்றும் ஒரு செய்தி அண்மையில் வெளியாகியுள்ளது. இது கருணாநிதிக்குப் பெரும் வெறியை உண்டாக்கியது. தொடர்ந்த ஆண்டுகளில், ம.கோ.இரா.விடம் தேர்தலில் தான் தொடர்ந்து தோற்றதற்கு, ஈழ ஆதரவு அமைப்பு என்று ஒன்று தனக்கு இல்லாததும் ஒரு முகாமையான காரணம் என்று நினைத்தாரா அல்லது தமிழீனத் தலைவரான தம் ஆதரவு பெற்ற ஒரு தலைவனைக் கொல்வதா என்ற அகந்தையா தெரியவில்லை, கருணாநிதி விடுதலைப் புலித் தலைமையைப் பழிவாங்கக் காத்திருந்தார். 2009இல் நல்வாய்ப்பு கிட்டியது. அதைப் புரிந்துகொண்ட இந்தியத் தலைமை, நாராயணனையும் சிவசங்கர மேனனையும் அறிவுரை பெறவும் உளவு கேட்கவும் ஒவ்வொரு நடவடிக்கையின் முன்னும் பின்னும் கருணாநிதியிடம் விடுத்தது. கருணாநிதி கோதர யுத்தம் என்ற சொல் மூலம் தன் சினவெறியை மறக்காமல் கக்கிக்கொண்டிருந்தார். உண்மையான பழிவாங்கல் கருணாநிதியுடையதுதான்.

            ஆனால் இந்தப் பழிவாங்கல் மட்டும் செயல்படவில்லை. தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடலில் இருக்கும் கணக்கற்ற எண்ணெய் வளத்துக்காக இந்திய பனியா பார்சி - இத்தாலியக் கும்பலும் ப.சிதம்பரம் போன்ற அவர்களுடைய சுற்றத்தாரும்(பரிவாரங்களும்) பா.ச.க.வினரும்(இராமர் பாலம் கதையெல்லாம் இதற்குத்தானே ஐயா) நம் தமிழீனத் தலைவரின் குடும்பமும் முன்பதிவு கொண்டுள்ளன. ஈழத் தமிழர் நிலங்களில் இயற்கை வேளாண்மை செய்து வல்லரசுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அங்குள்ள நிலங்களைச் சிங்களப் போலிகள் பெயரில் நம்மவர்கள் வாங்கியாயிற்றாம். இங்குள்ள இயற்கை வேளாண்மை வல்லுநர்களை அங்கே இறக்குமதி செய்யப் போகிறார்களாம். தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு மின்சாரம்(இலவயமா என்று தெரியவில்லை, இருக்கலாம். அவர்கள் செய்த எதை நாம் தட்டியோ, தட்டாமலோ கேட்டிருக்கிறோம்?) வழங்கக் கம்பி வடம் கடலடியில் போடப்போகிறார்களாம். நம் மீனவர்களைத் தடுத்து நிறுத்த இது கடலோரக் காவல் படையை விட மிக உதவியாக இருக்கும்.

            இந்த எண்ணெய் வளம் பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்பே அரபு நாட்டினர் அறிந்திருந்தனராம். அதனாலேயே ஈழத்திலுள்ள முகம்மதியத் தலைமையைக் கையில் போட்டுக் கொண்டு தமிழர்களைப் பிளவுபடுத்தும் உத்தியை அரேபிய  ஆட்சியாளர்கள் கையாண்டனர் என்பதும் ஓர் அண்மைக் காலச் செய்தி.

0 மறுமொழிகள்: