சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 12
நாடார்களின்
குமுக வளர்ச்சியின் அடையாளம் காமராசர்:
காமராசர் ஆட்சிக் காலத்தில் நாடார்கள் மேன்மையடைந்தனர் என்றோர் கருத்து உண்டு. அதில் ஓரளவு உண்மையிருக்கலாம். தொழில் வாணிகத் துறைகளில் நாடார் மகாசன சங்கம், அரசு அவ்வப்போது அறிவிக்கும் சலுகைகளைப் பற்றி உறுப்பினர்களுக்குத் தன் இதழான மகாசனம் மூலம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. அவற்றை இனங்கண்டு உறவு முறை அமைப்புகள் போன்றவற்றின் உதவியோடு அவர்கள் பயன்படுத்தினர். அது போல் கல்வி நிறுவனங்களை அமைப்பதிலும் நாடார்களுக்கு ஆர்வம் இருந்தது. அவற்றுக்கான ஆணை பெறுவதில் காமராசர் உதவியிருக்கலாம். அவரது ஊர்க்காரர்கள் சிலரும் அவரால் பயன்பெற்றிருக்கலாம். ஆனால் காமராசரின் பதவியால் உண்மையான பயனை நாடார்கள் அடைந்தது குமுகத் தளத்தில்தான். சென்னையில் நாடார்களைக் கட்டைத் தொட்டிக்காரர்கள் என்றுதான் அழைத்தனர். சென்னை நகரெங்கிலுமுள்ள கட்டைத் தொட்டிகள் எனப்படும் விறகுக் கடைகளில் மிகப் பெரும்பாலானவை நாடார்களாலேயே நடத்தப்பட்டன. காமராசர் முதலமைச்சரானதும் “கட்டை தொட்டிக்காரனெல்லாம் முதலமைச்சராகி விட்டான்” என்றுதான் பார்ப்பனர் போன்ற மேற்சாதியினர் ஏளனம் செய்தனர். அந்த ஏளனம் அவரது தொடர்ந்த வளர்ச்சியால் அகன்றது. ஒரு சாதியினர் என்ற அடிப்படையில் நாடார்களின் குமுக மதிப்பு உயர்ந்தது.
நேருவின் காலத்தில் நிதியமைச்சராயிருந்த மொரார்சி தேசாய் தங்கக் கட்டுப்பாடு போன்ற திட்டங்களால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார். அத்துடன் நடுவரசில் நேருவுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பதற்காக இரண்டாம் மட்டத் தலைவர்களுடன் மல்லுக்கு நின்று நெருக்கடிகளை உருவாக்கினார். இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள காமராசர் ஒரு திட்டத்தை முன்வைத்தார். பேரவைக் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் ஆட்சிப் பதவிகளை விட்டிறங்கிக் கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்பதே அந்தத் திட்டம்[1]. அதைக் காமராசர் திட்டம்(கே. பிளான்) என்றே கூறுவர். தன் திட்டத்திற்கேற்ப அவர் முதலமைச்சர் பதவியை விட்டிறங்கினார். அதன் பின்னர் பேரவைக் கட்சியின் இந்தியத் தலைவரானார். 1964இல் நேரு இறந்ததும் மொரார்சி தலைமையமைச்சராக முயன்றார். ஆனால் காமராசர் லால் பகதூர் சாத்திரியைத் தலைமையமைச்சராக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். மொரார்சி துணைத் தலைமையமைச்சரானார். 1966இல் லால் பகதூர் சாத்திரி இறந்ததும் மொரார்சி மீண்டும் தலைமையமைச்சர் பதவிக்கு முயன்றார். இம் முறை, நேருவின் மகளும் அகவையில் இளையவருமான இந்திரா காந்தியைத் தலைமையமைச்சராக்குவதில் காமராசர் வென்றார். இவ்வாறு ‘அரசர்களை உருவாக்குபவர்’ என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால் இதிலிருந்து அவரது அரசியல் வாழ்வின் இறங்குமுகம் தொடங்கியது.
1965 சனவரி 26ஆம் நாளிலிருந்து இந்தியே இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என்று லால் பகதூர் சாத்திரியின் தலைமையிலிருந்த நடுவரசு அறிவித்தது. அதை எதிர்த்து அந் நாளைத் துயர நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக தி.மு.க. அறிவித்தது. அன்று தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சரான பத்தவச்சலம் காவல்துறையினரைக் கொண்டு மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவினார். வன்முறை, துப்பாக்கிச் சூடு என்று தொடர்ந்த வெறியாட்டத்தில் வெகுண்ட மக்களே களத்தினுள் நேரடியாக இறங்கினர். பொறுப்பைத் தட்டிக் கழித்த தி.மு.க., இராசாசி, நடுவமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியம், ஓ.வி.அளகேசன் (இவர்கள் இருவரும் பதவி துறந்து நாடகமாடினர்)
ஆகியோர் மாணவர்களையும் பொதுமக்களையும் அமைதிப்படுத்தினர். இதனால் மக்களுக்குப் பேரவைக் கட்சி மீது வெறுப்பு ஏற்பட்டது. அடுத்து வந்த 1967 பொதுத் தேர்தலில் மாணவர்கள் தி.மு.க.வின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்தனர். நாம் முன்னரே குறிப்பிட்ட கொள்கையில்லாக் கூட்டணியுடன் பேரவைக் கட்சி மீது மக்களுக்கிருந்த வெறுப்பும் மாணவர்களின் உழைப்பும் தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமாயின. மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் நிகழ்த்திய காட்டுவிலங்குத்தனமான அடக்குமுறை பேரவைக் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கியதால், பத்தவச்சலம் தி.மு.க. தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்து பேரவைக் கட்சியைக் கவிழ்த்தார் என்று வெறுப்படைந்த பேரவைக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
1967 பொதுத் தேர்தலில் வழக்கமாக அவர் போட்டியிடும் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் தலைவராயிருந்த சீனுவாசன் என்பவரைக் காமராசருக்கு எதிராகத் தி.மு.க. நிறுத்தியது. அவரிடம் காமராசர் தோல்வியடைந்தார். பேரவைக் கட்சியும் ஆட்சியை இழந்தது.
அண்ணாத்துரை அமைத்த கொள்கையில்லாக் கூட்டணியில் எதிரிகளாகத் தோற்றமளித்த பொதுமைக் கட்சிகளும் ஆச்சாரியாரின் சுதந்திராக் கட்சியும் ஓரணியில் நின்றன. தன்னை ஒதுக்கி இழிவுபடுத்திய பேரவைக் கட்சியையும் அதனால் தூக்கி நிறுத்தப்பட்ட காமராசரையும் தன் அரசியல் வாழ்வின் போட்டியாளராகிய பெரியாரையும் பழிவாங்குவதற்காக ஆச்சாரியார் இந்த உத்தியை ஏற்றுக்கொண்டார். இதுவரை தி.மு.க.வினரால் ஆச்சாரியார் என்று ஏளனமாகப் பேசப்பட்டவரை இப்போது ‘மூதறிஞர் இராசாசி’ என்று மதிப்புடன் குறிப்பிட்டனர்.
தேர்தலில் தோல்வியுற்ற காமராசர் நாகர்கோயில் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நேசமணி இறந்ததால் உண்டான வெற்றிடத்தில் போட்டியிட முன்வந்தார். இந்தியத் தலைவராக இருந்தவர் மாநிலத் தலைவராகக் கூட ஆக முடியாமல் மாவட்டத் தலைவர் ஆகிவிட்டார் என்று அவரது எதிரிகள் நகையாடினர்.
பெண்தானே, இளையவர்தானே என்று நினைத்த பேரவைக் கட்சியின் மூத்த தலைவர்கள் தன் ஆட்சியில் தலையிடுவதை இந்திரா காந்தி விரும்பவில்லை[2]. இதற்கு ஒரு முடிவுகட்ட குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் அதிகாரம் பெற்ற வேட்பாளரான சஞ்சீவ
ரெட்டியை எதிர்த்து வி.வி.கிரி என்பவரைத் தானே நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். அத்துடன் இந்தியக் குடியரசு உருவான காலத்தில் தங்கள் ஆட்சியுரிமையை இந்திய ஒன்றியத்துக்கு மாற்றித் தருவதற்குக் கைம்மாறாக முன்னாள் மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை முற்றாக ஒழித்தார். வங்கிகளை அரசுடைமையாக்கினார். இவை போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்களிடையில் தன் செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொண்டார். இந்தத் திட்டங்களையும் இந்திராவையும் எதிர்த்த காமராசர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் செல்வாக்கிழந்தனர். பேரவைக் கட்சி இரண்டாக உடைந்தது. மூத்த தலைவர்களின் பிரிவு நிறுவனப் பேரவை (பழைய பேரவை என்றும் கூறப்படும் ‘காங்கிரசு-ஓ’) என்றும் இந்திரா தலைமையிலான பிரிவு இந்திராப் பேரவை என்றும் பெயர் பெற்றன. இருப்பினும் தமிழகத்தைப் பொறுத்தவரை காமராசரின் செல்வாக்கினால் நிறுவனப் பேரவைக் கட்சி வலுவாகவே இருந்தது.
1969இல் பேரவைக் கட்சியில் ஏற்பட்ட பிளவால் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையின்றி தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளின் அருளை நம்பியே இந்திரா காந்தி ஆட்சி நடத்த வேண்டியிருந்தது. இந்திராவின் ‘முற்போக்குத் திட்டங்களை’ ஆதரித்ததால் மக்களின் பரிவைப் பெற்றுவிட்ட தன்னை நம்பியே இந்திரா ஆட்சி நடத்த வேண்டியிருந்ததால் கருணாநிதி ஓரளவு ஆணவத்துடன் நடந்து கொண்டார்[3]. எனவே பாராளுமன்றத்தில் அறுதிப்
பெரும்பான்மை பெறவேண்டி இந்திரா பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த முன்வந்தார். பழைய பேரவைக் கட்சியைப் பற்றிய அச்சத்தாலும் தன் ஆட்சி மீது மக்களின் மதிப்பீடு என்னவென்று தெரியாத குழப்பத்தினாலும் இந்திரா பேரவைக் கட்சியுடன் பாராளுமன்றத்தில் ஒத்துழைத்ததால் ஏற்பட்ட நெருக்கத்தினாலும் கருணாநிதி அக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் வைத்தார். இந்திராவுக்குப் பாராளுமன்றப் பெரும்பான்மைதான் அன்றைய தேவை. அதனால் பாராளுமன்றத் தொகுதிகளை இந்திரா பேரவைக் கட்சிக்கும் சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க.வுக்குமாக ஒதுக்கிக்கொண்டனர். தமிழக வரலாற்றில் 183 உறுப்பினர்களுடன் (78% பெரும்பான்மை) கருணாநிதி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். மக்களின் இந்த ஒப்பற்ற ஆதரவோடு வெற்றி பெற்ற கருணாநிதி அதனைக் கொண்டு தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் நன்மை தரும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. தானும் தன் குடும்பத்தினரும் கட்சியினரும் ஊழல் செய்து செல்வம் குவிக்கவே இந்த ஆதரவைப் பயன்படுத்தினார். அதுவரை தி.மு.க.வுக்கு இல்லாதிருந்த தலைவர் பதவியை உருவாக்கித் தான் அதில் அமர்ந்து கொண்டார். இப்போது அவருக்கு ஒரே அறைகூவலாக இருந்தவர் திரை நடிகராக இருந்த ம.கோ.இரா.தான். கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுவார் என்று இவரைக் கருணாநிதிதான் கட்சிக்குள் கொண்டுவந்தார். தி.மு.க.வின் வளர்ச்சியிலும் தேர்தல் வெற்றிகளிலும் இவருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அவரது பெயரால் இயங்கிய சுவைஞர்(ரசிகர்) மன்றங்கள் தி.மு.க. அமைப்பில் குறிப்பிடத்தக்க செல்வாக்குப் பெற்றிருந்தன. இம்
மன்றங்கள் ம.கோ.இரா. மூலம் அந்தந்தப் பகுதிகளிலுள்ள தனியாள் மற்றும் பொதுச் சிக்கல்களைத் தீர்த்துவந்தன. இந்தத் தனிச் செல்வாக்கை உடைக்க எண்ணிய கருணாநிதி தன் மகன் முத்துவைத் திரைப்பட நடிகராக்கித் தானே படமெடுத்து ஓடவிட்டு அவர் பெயரில் சுவைஞர் மன்றங்களும் அமைக்கத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக ம.கோ.இரா. மன்றங்களையே முத்து மன்றங்களாக மாற்ற முனைந்தார். இந்த நடவடிக்கை கருணாநிதிக்கும் ம.கோ.இரா.வுக்கும் வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்தது. கருணாநிதி கட்சிப் பணத்திலும் ஆட்சியிலும் ஊழல் செய்வதாக ம.கோ.இரா. குற்றம் சாட்டிப் பரப்பத் தொடங்கினார். கட்சியிலிருந்து வெளியேற்றபட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார். இந்திரா காந்தியிடம் கருணாநிதி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அடங்கிய ஒரு பட்டியலை அளித்தார். 1975 இல் இந்திரா காந்தி பிறப்பித்த ‘நெருக்கடி நிலைக்’ காலத்தில் மாநிலக் கட்சிகள் தடைசெய்யப்படும் என்ற அச்சத்தில் தன் கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொண்டார்.
இந்தக் காலகட்டத்தில்தான் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்த போது கருணாநிதி அதற்கு இசைவு கூறினார். காவிரி நீருரிமை தொடர்பாகத் தஞ்சை உழவர்கள் தொடுத்திருந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக்கொண்டது. பின்னர் இந்திரா காந்தி விருப்பத்திற்கிணங்கி அவ்
வழக்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு காவிரி நீரின் உரிமை தமிழக மக்களை விட்டு எட்டாத் தொலைவுக்குப் போகக் காரணமாயிருந்தார். கருணாநிதி காலத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களை வைத்து மிரட்டி அவரை இந்திரா காந்தி தன் விருப்பங்களுக்கு இணங்க வைத்திருக்கலாம். மொத்தத்தில் திராவிடக் கட்சிகளின் ஊழல்களினால் தமிழகம் இழந்தவை கணக்கிலடங்கா. ஆனால் ஆண்டவர்கள் கொழுத்தனர்.
அ.தி.மு.க. உருவான
நேரத்தில் அது பற்றிக் காமராசரிடம் கருத்துக் கேட்ட போது தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்ற புகழ் பெற்ற கூற்றை எடுத்துரைத்தார். கருணாநிதி இந்திரா கூட்டுறவாலும் பதவிநாடிகள் தன்னை விட்டு ஓடிவிட்டதாலும் மனம் நொந்திருந்த காமராசர் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட சில மாதங்களில் இயற்கை எய்தினார்.
காமராசர் தன் ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை மூலமும் தொழில் வளர்ச்சி மூலமும் நன்மைகள் பல செய்திருந்தாலும் குமரி மாவட்டத்தைப் பொறுத்த வரை அவரது ஒட்டுமொத்தமான நடவடிக்கை தீங்கையே விளைவித்துள்ளது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கான பேச்சின் போது 9க்கு 4½ வட்டங்களை ஏற்றுக்கொண்டதைப் பற்றி முன்பே கூறினோம். அத்துடன் கன்னியாகுமரியில் இருக்கும் அரசு விருந்தினர் வளமனையையும் தக்கலையில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனையையும் கேரளத்துக்கு விட்டுக்கொடுத்தார். அவரும் அவரது அமைச்சரவைத் தோழர்களும் குமரி மாவட்டம் தமிழகத்தோடு சேர்வதை விரும்பவில்லை. திருவிதாங்கூரில் ஆள்வினைத் துறைகள் ஓரளவு மக்களாட்சிப் பண்புடன் திகழ்ந்தன. உயரதிகாரிகள் தம் கீழ்நிலை அலுவலர்களைத் தமிழகத்தில் போல் அடிமைகளாக நடத்துவதில்லை. ஓரளவு மதிப்புடன் நடத்தினர். அவர்கள் தங்கள் கருத்துகளை அஞ்சாமல் எடுத்துச் சொல்லும் வாய்ப்பு பெற்றிருந்தனர். கட்சி அமைப்புகளிலும் அவ்வாறுதான். இவை தமிழகத் தலைவர்களுக்குப் பிடிக்காதவை. குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 1 மைல் இடைவெளியில் உயர்நிலைப் பள்ளிகள் இருந்தது அவர்களது கண்களை உறுத்தியது. சிலவற்றை மூடிவிடலாம் என்று கூட ஒரு கட்டத்தில் நினைத்தனர். ஆனால் புதிய பள்ளிகள் திறப்பதைத் தவிர்ப்பதோடு நிறுத்திக்கொண்டனர். தமிழகத்தில் எழுத்தறிவைப் பெருக்குவதற்குக் காமராசர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் குமரி மாவட்டம் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும். குமரி மாவட்டத்திலிருந்த வருவாய்த்துறைக் கட்டமைப்பில் தமிழகத்தின் கணக்குப் பிள்ளை, மணியக்காரர் அமைப்பில் போல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. குமரி மாவட்டத்திலுள்ளோர் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் வேலை பார்ப்பது அழுக்காற்றை ஏற்படுத்தினாலும் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான பல்வேறு பணியிடங்களை நிரப்பக் குமரி மாவட்ட மக்கள் நெடுநாள் பயன்பட்டனர். அதே நேரத்தில் தமிழகத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளில் குமரி மாவட்டத்துக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை. நாடார்களைப் பொறுத்த வரை கல்வி வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களாயிருந்து முற்பட்டவர்களாக மாற்றப்பட்டதால் இழப்பெய்தினர். அதே நேரத்தில் தாராளமாக அன்றிருந்த வேலைவாய்ப்புகள் அதை ஈடு செய்தன என்று பார்த்தோம். ஆனால் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பைக் காமராசர் ஏற்படுத்தினார்.
1967 தேர்தலில் தோல்வியைத் தழுவிய காமராசர் அதே தேர்தலில் நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நேசமணி இறந்து விட அத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். நாடார்கள் நிரம்பிய அத் தொகுதியில் எளிதில் வெற்றி பெறலாம் என்றுதான் அங்கு போட்டியிட்டார். தமிழ் நாட்டில் அன்றிருந்த குமுகச் சூழலில் கீழ் மட்டத்திலிருந்த ஒரு சாதியில் தோன்றிப் படிப்படியாக இந்திய மட்டத்தில் உயர்ந்த ஒரு நிலையை அடைந்த காமராசர், ஒரு சட்டமன்றத் தேர்தலில் தோற்றுச் சிறிது பின்னடைவை எய்திய உடன் அதுவரை தான் வெளிப்படுத்தி வந்த இந்தியத் தேசியக் கண்ணோட்டம் என்பதை வீசியெறிந்துவிட்டு ஒரு சாதித் தலைவராகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டது அவரது அரசியல் வாழ்வில் பெரும் களங்கமாகிவிட்டது மட்டுமல்ல, குமரி மாவட்ட நாடார்களுக்கு மட்டுமல்ல குமரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் கண்ணுக்கும் கருத்துக்கும் எளிதில் புலப்படாத ஒரு தீங்கையும் விளைத்தது.
குமரி மாவட்டத்தில் உள்ள குடிமக்களின் விகிதத்தை நாடார்கள் 51, பிற சாதியினர் 49 என்று கூறுவர். அதாவது நாடர்களும் பிற சாதியினரும் ஏறக்குறைய சம எண்ணிக்கையினர். எனவே இன்று
வரை அங்குள்ள முதன்மை முரண்பாடு நாடார்கள் ஒரு பக்கத்திலும் பிறரெல்லாம் எதிர்ப் பக்கத்திலும் என்பதாகும். அதிலும் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வளர்ச்சியின்றி இருந்த மக்கள் அத் தளைகளிலிருந்து விடுபட்டு விரைந்து மேலேறி வந்தது இது வரை தங்களுக்கிருந்த வளங்கள், வாய்ப்புகளில் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்றஞ்சிய மேற்சாதியினர் ஒன்று திரண்டு நின்றனர். இந்தச் சூழலில் திருவிதாங்கூர்த் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்ற போராட்டத்தில் மேற்சாதிகளிலுள்ள மேல் மட்டத்தினர் சிலர் ஒதுங்கியும் எதிர்நிலை கொண்டும் நின்றதையும் மீறி சாதி வரம்பு கடந்த ஓர் ஒற்றுமையுணர்வு வெளிப்பட்டது. மாணவர்களிடையிலும் தேர்தல்களிலும் இது தெளிவாக வெளிப்பட்டது. தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைக்கப்பட்டவுடன் பழைய வரலாற்றை மறந்துவிட்டு எதிர்நிலை கொண்டிருந்த பேரவைக் கட்சியில் தி.த.நா.கா.கட்சி கலந்ததுடன் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களைத் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தையும் கைவிட்டதும் அக் கட்சித் தலைவர்கள் பால் ஒரு மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தன. அப்போதுதான் தமிழகத்திலும் குமரி மாவட்டத்திலும் வளர்ந்து வந்த தி.மு.க. குமரி மாவட்டப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் செயற்பட்டதால் அதன்பால் நாடார்களும் பிற சாதியினரும் ஒருப்போல் ஈர்க்கப்பட்டனர். அதாவது குமரி மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முதலாக சாதியை மீறிய ஓர் அரசியல் உணர்வு அரும்பியிருந்தது. அதனை முளையிலேயே கருக்கிவிட்டது காமராசரின் நுழைவு. நாடார்களில் படித்தோரும் படியாதோரும் “நம் ஆள், பெரியவர், நம்மை நம்பி நிற்கிறார், அவரைக் கைவிடக் கூடாது” என்ற ஒரு நிலைப்பாடு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களிடம் அப்போதுதான் அரும்பியிருந்த அரசியல் சிந்தனைகள், பரந்த உலகப் பார்வை போன்ற அனைத்தும் பிடுங்கி எறியப்பட்டன. சாதி சார்ந்ததும் காலங்கடந்து போனதும் கோட்பாடுகள் என்று எதுவுமின்றி செத்துப்போன தலைவர்களின் பெருமை பேசி அரசியல் நடத்துகிற, சாதி சார்ந்த குறுகிய எல்லைக்குள் அவர்கள் மீண்டும் அடைக்கப்பட்டனர். அதன் எதிர்வினையாக மேற்சாதியினரிடம் இளக்கம் பெற்ற சாதியுணர்வு மீண்டும் இறுக்கம் பெற்றது. இளையோர் -
முதியோர், படித்தோர் - படியாதோர் என்ற பாகுபாடின்றி வெறி பிடித்து “எங்க ராசா
காமராசா” என்று முழங்கிக் குமரி மாவட்டத்தின் மூலைமுடுக்கெல்லாம் சாதிவெறியைக்
குமரி மாவட்ட நாடார் பெருமக்கள் விதைத்த அருவருப்பான, வெறுப்பூட்டும், கசப்பூட்டும்
அச்சமூட்டும் காட்சியை மனக்கண்ணிலிருந்து ஏறக்குறைய 40
ஆண்டுகளாகியும் அகற்ற முடியவில்லை.
காமராசரின் அரசியல் அணுகலே சாதி சார்ந்ததாகத்தான் இருந்தது. தேர்தல்களில் தொகுதிகளில் பெரும்பான்மையாகவுள்ள சாதியைச் சேர்ந்தவரையே வேட்பாளராகத் தேர்வு செய்யும் நடைமுறையைத் தொடங்கிவைத்தவரே காமராசர்தான். இதைச் சுட்டிக்காட்டிக் குறைகூறி வளர்ந்த தி.மு.க அந்தப் போக்கையே வளர்த்து அதன் எல்லை வரை கொண்டு சென்றுள்ளது. அதே நேரத்தில் தெலுங்கு நாயக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட விருதுநகர்த் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த காமராசருக்கு அன்றைய தேர்தல்களைச் சாதியை விடக் கட்சியும் கொள்கைகளுமே முடிவு செய்தன என்ற உண்மை புரியாமல் போனது வரலாற்று அவலமே. அந்த மேம்பட்ட ஓர் உணர்வு நிலையைத் தமிழகத்திலிருந்து அழித்துக் கொள்கை வழியிலான அரசியலைச் சாதி வழியிலான அரசியலாக்கி அதில் தானும் அழிந்தார்
காமராசர். இந்த வகையில் காமராசரின் மேல் ஏற்றிக் கூறப்படும் பெருமை பொய்ம்மையாகிப் போகிறது.
அய்யாவழியும்
அம்மாவழியும் பெரியசாமியும்:
அய்யாவழி வழிபாட்டைப் பற்றி மேலும் சில செய்திகளை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும். அடிகள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் கூட அவர் புகுத்திய வழிபாட்டுமுறைக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இல்லை. அவரிடமிருந்து பிரிந்து மணிகட்டிப் பொட்டலில் முத்துமாலையம்மன் கோயில் வழிபாட்டை நிறுவி பேய் ஓட்டுதல், நோய் தீர்த்தல் போன்ற பணிகளைச் செய்து வந்த பொன்னீலனின் பூட்டனார் நிறுவிய வழிபாட்டு முறையும் பரவலாகவில்லை. அதே ஊரில் இருந்த பொன்னீலனின் உறவினர் வழிபட்ட சிவன் கோவிலில் பல ஊர் நாடான்கள் வழிபட்டாலும் அதுவும் பரவலான வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் நெல்லை மாவட்டத்தைச் சோந்த உவரியிலிருக்கும் சுயம்புலிங்க சாமி கோயில் இவர்களைப் பெரிதும் ஈர்த்தது. இந்தச் சுயம்புலிங்கசாமி கோயிலை முருகன் கோயிலென்றும் கூறுவர், பெரியசாமிக்
கோயில் என்று சொல்வதும் உண்டு. இந்தக் கோயில் பற்றிய வரலாறு சுவையானது. ஓர் ஆயர்குலப் பெண் தலையில் தயிர்க்
குடத்துடன் சென்ற போது கடற்கரையில் படர்ந்திருக்கும் கடம்பாக் கொடி(அடப்பன் கொடி) ஒன்று அவள் காலை இடறிவிட அவள் கீழே விழுந்து குடம் உடைந்து தயிர் வீணானது. தொடர்ந்த நாட்களிலும் இது நடந்ததால் அவள் தன் வீட்டு ஆண்களிடம் சொல்ல அவர்கள் போய் அந்தக் கடம்பாக் கொடியை அறுத்தனர். அதிலிருந்து குருதி வழிந்தது. திகைத்துப் போய் மண்ணைத் தோண்டிப் பார்த்தனர். உள்ளே ஒரு சிவலிங்கம் இருந்தது. அக்கம் பக்கத்தில்
இருந்தவர்கள் அதில் ஓர் ஓலைப் புரையைக் கட்டி ஒரு சாணாரைப் பூசாரியாக்கினர். அந்தக் கோயில் வளர்ச்சியடைந்து பின்னர் ஆகம வழிபாட்டுக்கு மாறியது. இப்போது குருக்கள்(பண்டாரம்) பூசாரிகளாக உள்ளனர்.
தமிழகத்தில் இந்தக் கதை போன்று எண்ணற்ற கோயில்களின் கதைகள் உள்ளன. பெரும்பாலும் வண்ணார், நாவிதர், சாணார், ஆயர் போன்ற ‘கீழ்ச்சாதிகள்’ எனப்படும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருடன் இக் கோயில்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. முகம்மதியம், கிறித்துவம் போன்ற வெளிச்
சமயங்கள் இங்கு ஊடுருவிய போது பெருமளவில் கீழ்ச்சாதியினர் அவற்றுக்கு மாற முற்பட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திக் கவரவே இத்தகைய கதைகளுடன் கோயில்கள் அமைக்கப்பட்டன. புத்த, அம்மணங்களுக்கு எதிராகச் சிவனியத்தை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட அப்பர், சம்பந்தர் போன்றோர் சிவன் புதருக்குள் இருந்து அழைத்தார் என்று பாட்டுப் பாடி அங்கெல்லாம் கோயில்களை அமைத்த வரலாறு நமக்குள்ளது. இவ்வாறு பார்த்தால் தமிழகத்திலுள்ள ஆகமக் கோயில்களில் இத்தகைய வரலாறுடையவை 90 நூற்றுமேனிக்குக் குறையாது என்று உறுதியாகக் கூற முடியும்.
உவரி கோயில் குமரி மாவட்ட மக்களிடையில் செல்வாக்குப் பெற்றதற்கும் ஒரு கதை உண்டு. குமரி மாவட்டத்தில் குளச்சல் பக்கத்தில் ஒரு பெண் திருமணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்ற சில நாட்களில் அவளிடம் தொழுநோயின் அறிகுறிகள் தோன்றின. எனவே அவளை வீட்டுக்கு வெளியே மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்தனர். ஒருநாள் அவள் அங்கிருந்து வெளியேறி கடற்கரையில் கால் சென்ற வழியில் கிழக்கு நோக்கிச் சென்றாள். இறுதியில் உவரி கோயிலை அடைந்து அங்கேயே தங்கினாள். நாளடைவில் அவளது நோய் குணமாகிப் பழைய நிலையை அடைந்தாள். பின்னர் வாணிகம் தொடர்பாக அவள் ஊரிலிருந்து உவரிக்கு வந்த சிலர் கோயிலில் அவளைக் கண்டு அவளிடம் நடந்தவற்றை அறிந்து ஊரில் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அச் செய்தி பரவிக் குமரி மாவட்டத்தின் கிழக்குப் பாதியைப் பற்றிக் கொண்டது.
உவரி கோயிலுக்கு முதலில் சென்றவர்கள் ஊர் நாடான்கள்தான் என்று தெரிகிறது. இன்றும் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று(இது மாதாந்தம் எனப்படும்) உவரிக்குக் குடும்பத்தோடு சென்று வழிபடும் பழக்கம் பழைய நாடான் குடும்பத்தினர் பலரிடம் உண்டு. பிறர் வைகாசி மாத வெள்ளுவா(பவுர்ணமி)வான விசாகத்தன்றுதான் செல்கின்றனர். விசாகத்தன்று இந்தப் பகுதிகளில் கிட்டத்தட்ட முழு ஊருமே திரண்டு செல்கின்றனர்.
இப்போது குமரி மாவட்டத்தில் வழக்கிலிருக்கும், வழக்கொழிந்து கொண்டிருக்கும் வழிபாட்டு முறைகளைப் பார்ப்போம். ‘கீழ்ச்சாதியா’ருக்கு உரிய கோயில்களில் கொடையெனும் திருவிழாவின் இறுதியில் ஆடு அல்லது பன்றியைப் பலியிட்டு அவற்றின் குருதியையும் ஈரல் முதலியவற்றையும் பச்சையாகச் சாமி கொண்டாடுவோர்[4] உண்பர். பின்னர் இறைச்சியைச் சமைத்துச் சோற்றுடன் தெய்வத்துக்குப் படைத்து ஊராருக்குப் பகிர்ந்தளிப்பர். நேர்ச்சை செய்வோர் பலியிட்ட உயிரின் இறைச்சியைத் தத்தம் வீடுகளுக்குக் கொண்டு சென்று சமைத்து உண்டது போக எஞ்சியதில் உறவினர்களுக்கும் கொடுத்து மிஞ்சியதை உப்புக் கண்டம் போட்டு வைத்துக்கொள்வர். இக்
கோயில்களில் பூசாரியும் சாமி கொண்டாடியும் மட்டும் கொடை தொடங்கி முடியும் வரை புலாலுணவைத் தவிர்ப்பர். பால்குடம், மாவிளக்கு ஆகியவை எடுப்பதற்கு நேர்ச்சை செய்வோர் ஒரு கிழமை அல்லது ஒரு மண்டலம் (41நாட்கள்)புலாலுணவைத் தவிர்த்து நோற்பதுண்டு.
மணிகட்டிப் பொட்டலில் இரு குடும்பங்களில் உள்ள சிவன் மற்றும் முத்தாலம்மன் கோயில்களில் கோயிலின் உள்ளே புலால் படைப்பதில்லை, வெளியில் படைக்கப்படுகிறது. இரு கோயில் பூசாரிகளும் புலால் உண்பதில்லை. இப் பூசாரிகள், பழைய மரபில் கூறுவதாயின் நாடான்கள்; வெளியில் படையல் வைப்போர் சாணார்கள். ஆனால் பூசாரி இரு படையல்களுக்கும் பூசை செய்வார். இது போன்று கோயிலுக்கு உள்ளே உள்ள உயர் சாதியினர் புலாலின்றிப் படையல் வைப்பதும் வெளியே ‘கீழ்ச் சாதியினர்’ பலியிட்டுப் படையல் வைப்பதும் தென்தமிழ் நாட்டில் பல ஊர்களில் நடைமுறையிலிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பழைய நாடான்களுக்கும் பிள்ளையார், சிவன் அல்லது முருகன் கோயில் குடும்பக் கோயிலாக உள்ளது. அவர்கள் புலாலுணவினராயிருந்தால் குருக்கள் எனப்படும் பூசாரியரை அமர்த்தியிருப்பர். புலாலுணவைத் தவிர்ப்பவர்களாயிருந்தால் அவர்களே பூசை செய்வர். முன்பு பார்ப்பனர் நாடான்களுக்கும் சாணான்களுக்கும் புரோகிதம் பூசை முதலியவற்றைச் செய்ய மறுத்ததால் இந்தக் குருக்கள் உருவாயினர்.
நம் நாட்டில் கோயில்களில் உயிர்ப்பலியிடுவதற்கு ஒரு குமுகப் பொருளியல் அடித்தளம் உள்ளது. ஊர்ப்புறங்களில் முன்பு கசாப்புக் கடைகள் கிடையா. எனவே ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் இறைச்சி உண்பதற்கு வழியில்லை. கோயில் கொடைகளின் போது பலியிடும் விலங்குகள், பறவைகளின் இறைச்சி அத்
தேவையை ஈடு செய்கிறது. அது தவிர பொங்கல் தீபாவளி போன்ற திருநாட்களில் சிலர் கசாப்புக்கடை வைப்பதுண்டு. அல்லது சிலர் ஒன்று கூடி ஓர் ஆட்டை வாங்கி அறுத்துக் கூறு போட்டுக் கொள்வதுண்டு. திருமணத்தின் பின் 7ஆம் நாள், 14ஆம் நாள் ஆகிய சடங்குகளின் போது மணமகன் வீட்டாருக்குக் கொடுக்கப்படும் இறைச்சி விருந்தில் பெரும்பாலும் கோழி இறைச்சியையே பயன்படுத்துகிறார்கள், ஏனென்றால் ஒரு முழு ஆட்டின் இறைச்சி அதற்குத் தேவைப்படாது. கோழியைக் கூட இயல்பான நாட்களில் அறுப்பதில்லை. முதலில் அதைக் கொன்று அறுப்பதற்குக் கொஞ்சம் பயிற்சி தேவை. பிறரிடம் அப் பணியைக் கொடுப்பதைப் பெரும்பாலோர் விரும்புவதில்லை. (முகம்மதியர்களிடையில் பள்ளிவாசல் லெப்பையை வைத்து அறுக்கும் பழக்கம் இருப்பதால் அவர்களுக்கு இதில் சிக்கலில்லை.) இப்போது இறைச்சிக் கோழிக் கடைகள் வந்த பின் அவற்றை
கடை வைத்திருப்போரே அறுப்பதுடன் நமக்குத் தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம் என்றிருப்பதால் கோயில்களில் பலியிட வேண்டுமென்பதில்லை. அத்துடன் தெய்வத்தின் சினத்தைத் தணிக்கவென்று சிறப்புப் பூசைகளும் பலி நேர்ச்சைளும் செய்யப்படுவதே சென்ற நூற்றாண்டுகளில் அடிக்கடி மக்களைத் தாக்கிய அம்மை நோய், வாந்திபேதி போன்ற கொள்ளை நோய்களும் பிற நோய்களும் தெய்வத்தின் சினத்தின் விளைவென்றும் அதனைத் தணிக்க இது போன்ற வழிபாடுகள் தேவையென்றும் மக்கள் கருதியதால்தான். அத்துடன் இன்றுள்ள மின் விளக்குகள் இல்லாத காலத்தில் சிறு தெய்வத் கோயில்கள் அல்லது அவை இருப்பதாகக் கருதப்படும் மரங்கள், கட்டடங்கள், பீடங்கள் ஆகியவற்றை இரவு நேரங்களில், பல வேளைகளில் பகல் நேரங்களில் கூட, கடந்து செல்வோருக்கு ஏற்படும் அச்சத்தினால் கூட நோய்கள் வருவதுண்டு. இந் நேரங்களில் ஊரார் சேர்ந்தோ தனியாட்களோ பலியிட்டு வழிபாடுகள் நடத்தி வந்தனர்.
உயிர்ப் பலிகள் பண்டை நாட்களில் இன்றைய ‘பெருந்தெய்வங்கள்’ எனப்படுபவற்றுக்கும் கொடுக்கப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் இயற்றியதாகக் கருதப்படும் திருமுருகாற்றுப்
படையில் முருகனுக்கு உயிர்ப்பலியிட்டது கூறப்பட்டுள்ளது. ஆகமக் கோயில்கள் அனைத்திலும் கருவறை வாயிலுக்கு
நேரே கொடிமரத்துக்கு முன்பு பலி பீடங்கள் இருப்பதும் பல கோயில்களில் ஆடுகள், கோழிகள் நேர்ச்சையாக வழங்கப்படுவதும் அவை ஏலத்தில் விற்கப்படுவதும் உயிர்ப்
பலி ஒரு காலத்தில் அத்
தெய்வத்துக்குக் கொடுக்கப்பட்டதன் மறுக்க முடியாத வரலாற்று எச்சமாகும். பின்னர் புத்த,
அம்மண சமயங்களின் தாக்கத்தால் அவற்றில் உயிர்ப் பலி தவிர்க்கப்பட்டது. புலாலுண்ணாமை பெரிய அறமாகவும் சாதியுயர்வுக்கான அடையாளமாகவும் மாறியது. இந்தக் கருத்தோட்டம் கீழ்நிலை வரை ஊடுருவி ‘சிறு தெய்வக்’ கோயில்களில் பூசை செய்வோரும் பணியாட்களும் நேர்த்திக்
கடன் செலுத்துவோரும் புலாலுண்ணாமையைக் கடைப்பிடிக்கும் மரபு ஏற்பட்டது.
தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுப்பது உலகமெலாம் ஒரு காலத்தில் நிலவிய பழக்கம்தான். மேற்காசியாவில் பினீசியர் போன்ற பழம் நாகரிகங்களில் தமக்குப் பிறக்கும் மூத்த மகனையே பலி கொடுத்தனர். யூத மறைநூலான விவிலியத்திலும் குரானிலும் வேதங்களிலும் கூட இதற்குச் சான்றுகள் உள்ளன[5]. யூதர்களின் நெறிமுறைகளை வரையறுத்த மோசே தெய்வத்துக்குப் பலியிட வேண்டிய கால்நடைகளின் தன்மை பற்றி அறியுறுத்தியுள்ளார்.
அவை ‘வடுப்படாதவை’யாக இருக்கவேண்டும் என்று. (எது
நடந்தாலும் “எல்லாம் நன்மைக்கே” என்று சொல்லும் பழக்கமுடைய
அமைச்சர் அரசனுக்குக் காயம்பட்டதும் அவ்வாறே சொல்ல
அரசன் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கிறான். வேட்டைக்குச் செல்லுமிடத்தில் காட்டு மனிதர்களால் பிடிக்கப்பட்டு பலி கொடுக்க முற்படும் போது காயம்பட்ட, வடுப்பட்ட அரசனைக் காவு பெற முடியாது என்று பூசாரி விடுவிக்கிறான். மன்னன் திரும்பி வந்து அமைச்சரை விடுவிக்கிறான் என்பது நம்மூரில் குழந்தைகளுக்குப் பெரியவர்கள் சொல்லும் கதை.) பின்னர் தோன்றிய சமயங்களான கிறித்துவமும் முகம்மதியமும் கடவுளுக்கு உயிர்ப் பலி இடுவதைத் தடைசெய்துவிட்டன. இது கடவுள் பற்றிய மனிதக் கண்ணோட்டத்தில் ஒரு பெரும் முன்னேற்றம் என்றே கூற வேண்டும். இருப்பினும் சில பழஞ்சவை(கத்தோலிக்க)க் கிறித்துவக் கோயில்களுக்கு வெளியிலும் தர்கா எனப்படும் முகம்மதிய
சமயப் பெரியோர் கல்லறைகளிலும் உயிர்ப்
பலிகள் தொடர்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் உயிர்ப் பலிகளைத் தவிர்ப்பதற்கான காரணம் முற்றிலும் பொருளியல் அடிப்படையிலானது. உணவுக்காக வளர்க்கப்பட்ட கால்நடைகள் - மாடுகள் உழவுக்கும் வண்டியிழுக்கவும் பால் வளத்துக்காகவும் பயன்பட்ட விளைப்புக் கருவிகளாக மாறிய புதிய அறிவியல்
- தொழில்நுட்பச் சூழலில் அவற்றை உயிர்ப் பலி வேள்வியிலிருந்து காப்பது என்ற தேவையின் அடிப்படையில்தான் வேள்வியையும் உயர்ப் பலியையும் கொல்லாமையையும் வலியுறுத்தும் புத்தமும் அம்மணமும் தோன்றின. அவை தம் தோற்றத்தின் அடிப்படையாகிய பொருளியல் எல்லையை விட்டு, புத்தத்தில் உணவுக்காக எந்த ஓர் உயிரையும் கொல்லக் கூடாது, தானே செத்ததை உண்ணலாம் என்றது. அதைப் பரிந்துரைத்த புத்தர் செத்த பன்றியை உண்டதால்தான் செத்தார். முகம்மதியம் தானே செத்ததைத் தின்னக் கூடாது என்கிறது. இந்த அடிப்படையில் இந்த அறிவுரை பகுத்தறிவுக்குப் பொருத்தமானது. அம்மணமோ காற்றிலுள்ள நுண்ணுயிரிகளைக் காப்பதென்ற பெயரில் வாயில் துணியைக் கட்டியும் பாதையில் உள்ள உயிரிகளைக் காப்பதென்ற பெயரில் மயிற்பீலியால் பாதையைப் பெருக்கியும் பூச்சிகள் இறந்து விடுமென்பதால் விளக்கேற்றாமல் இருட்டு வாழ்க்கை வாழ்ந்தும் பித்துக்குளித்தனத்தின் எல்லைக்கே சென்றது. அந்தப் பித்துக்குளித்தனத்தின் தொடர்ச்சியே இன்றைய ‘புலாலுண்ணாமை’ எனும் நம் மரபு. விலங்குணவாகிய மாட்டின் சாறாகிய பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றைச் சுவைத்துச் சுவைத்து
உண்டு கொண்டே சக்கையாகிய இறைச்சியை உண்ணும் ஏழைச் சாதியினரை அனைவரிலும் இழிந்த சாதியாக்கி வைத்திருக்கும் நம் இழிவுகூர் பண்பாட்டின் ‘பெருமை’ சொல்லத்தக்கதல்ல.
ஏசுநாதர் தன் இளமைக் காலத்தின் ஒரு பகுதியைச் சோர்தான் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஒரு குகையில் செயற்பட்ட ஒரு புத்த மடத்தில் கழித்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாக்கடல் சுவடிகள் (Dead Sea Scrolls) என்ற நூல் இது பற்றி விளக்கமாகக் கூறுகிறது. கடவுளுக்கு உயிர்ப்
பலி கூடாது என்ற மரபு அங்கிருந்துதான் அப்
பகுதியில் தோன்றிய கிறித்துவம், முகம்மதியம் ஆகிய இரு சமயங்களுக்கும் சென்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மனிதனின் உணவைப் பொறுத்த கொள்கையை தங்கள் புவியமைப்பு, தட்பவெப்ப நிலை, வேளாண்மை வளம் ஆகியவற்றின் அடிப்படையில் பகுத்தறிவுடன் அமைத்துக் கொண்டனர் அவர்கள்.
இந்த அடிப்படையில் நாடான்களின் குடும்பக் கோயில்கள் ஆகம முறையை நோக்கிய முதலடி என்றும் சாமித்தோப்புக் கோயிலை நடுவாகக் கொண்ட நிழல்தாங்கல்கள் எனப்படும் அய்யா வழிக் கோயில்கள் இரண்டாம் அடி என்றும் கொள்ள வேண்டும். இன்று நாடான்களின் கோயில்களுக்கு வெளியார் எவரும் செல்வதில்லை. பெரும்பாலும் குடும்ப வழிபாட்டினுள் அவை முடங்கிவிட்டன. அதே நேரத்தில் முன்னாள் சாணான்களின் சிறு
தெய்வக் கோயில்களில் நடைபெறும் கொடைவிழாக்கள் வெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளாகிவிட்டன. திருவிதாங்கூருடன் இருந்த காலத்திலேயே உயிர்ப்
பலி சட்டப்படி தடைசெய்யப்பட்டுவிட்டதாலும் முன் போல் கொள்ளை நோய்களின் அச்சுறுத்தல்கள் இல்லாமையாலும் மக்களுக்கு மருத்துவ வசதிகள் விரிவடைந்துவிட்டதாலும் அச்சத்தோடு தெய்வங்களை வழிபட்டு உயிர்ப் பலிகள் கொடுத்த காலம் மலையேறிவிட்டது. அதன் தொடர்ச்சியாக சுப்ரபாதம் முதலிய சமற்கிருதப் பாடல் ஒலிப்பேழைகளை ஓடவிட்டும் கோயில்களைச் சிறுகச் சிறுக ஆகமக் கோயில்களின் வடிவத்தில் விரிவுபடுத்தியும் குடமுழுக்குகள், ‘சம்ரோச்சணங்கள்’ நடத்தியும் அவை ஆகம வழிபாட்டை நோக்கி நகர்கின்றன. இதில் இந்து மத இயக்கங்கள் மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்துகின்றன.
அய்யாவழி வழிபாட்டைக் கடைப்பிடித்தவர்கள் மிகக் குறைவு;
அடிகளாரின் சீடர்கள், வடசேரி, கோட்டாறு, தாலியறுத்தான் சந்தை போன்றவற்றுக்குச்
செல்லும் வாணிகர்கள், அவர்களின் குடும்பத்தினர் என்ற வட்டத்துக்குள்ளேயே இந்த
வழிபாடு முடங்கிக் கிடந்தது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். அய்யா வழியினர்
நெற்றியில் இடும் வெள்ளை நாமத்தைப் பார்த்து முகத்துக்கு நேரேயே “என்ன நெற்றியில் கொக்கு பீச்சியிருக்கிறது?” என்று
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னால் கூட கேலி பேசினார்கள். சாமித்தோப்பு
திருவிழாவுக்கு வரும் கூட்டத்தில் பெரும் பகுதியினர் கூட நாம் ஏற்கனவே
குறிப்பிட்டுள்ளது போல மேற்கு வட்டங்களில் நாயர்கள் –
குறுப்புகளின் கொடுமைகளைப் பட்டறிந்த மக்கள்தாம்.
அப்படி கோயிலுக்கு வந்தவர்கள் கூட,
தம் சாதியினரின் இழிவுக்கு எதிராகப் போராடியவர் அல்லது அவரது நினைவாக நிறுவிய
கோயில் என்ற உணர்வோடு அங்கு செல்லவில்லை. வாழ்க்கையில் தங்களுக்குத்
தனிப்பட்டமுறையில் நேர்ந்துவிட்ட அல்லல்களைத் தீர்த்துவைக்கவோ அல்லது நலமான
வாழ்வைத் தரவோ சராசரித் தெய்வக் கோயில்களை நாடிச்செல்பவர்களைப் போன்றே சென்றனர்.
இருந்தாலும் அந்தக் காலகட்டத்து அய்யாவழியினர் சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தனர்.
பிற கோயில்களுக்குச் செல்வதை அவர்கள் தவிர்த்தனர். ஊரின் ஆட்சியின் நடுவமாக
விளங்கும் அம்மன்கோயில்களுக்குச் செல்வோர்கூட அக் கோயில்களிலிருந்து வரும்
பண்டங்களை உண்ணமாட்டார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் புலால் உண்பதில்லை.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
கோயில் நடைமுறைகளில் தனித்தன்மை பேணப்பட்டாலும் மக்களைப் பொறுத்தவரையில் சாமித்தோப்புத்
தெய்வம் மற்ற தெய்வங்களோடு பத்தோடு பதினொன்று, அவ்வளவுதான்.
ஆண்டுக்கு ஒருமுறை சாமித்தோப்பிலும்
நிழல்தாங்கல்கள் என்ற கணக்கு(குறி) சொல்லும் கோயில்களிலும் ஏடு வாசிப்பு
என்று ஏறக்குறைய 15 நாட்களுக்கு மேல் அகிலத் திரட்டு அம்மானையைப் படித்து
விளக்கம் சொல்வர். அதில் சாணார்களின் விடுதலைக்கு அடிகளார் நடத்திய போராட்டங்களை
விட அவர் மேற்கொண்டதாக அந் நூல் கூறும் தோற்றரவு(திருமால் அவதாரம்)க் கதைகளுக்கே
முதன்மை இருக்கும். ஆக, பொதுவாக, அய்யாவழி வழிபாடு என்பது எத்தகைய திட்டவட்டமான
குறிக்கோளுமற்ற ஒரு குழு வழிபாடாகத்தான் நிலவுகிறது.
வடசேரி, கோட்டாறு, தாலியறுத்தான்
சந்தைகளில் போல் அண்மைக் காலத்தில் சென்னையில் நாடார்களுக்கிடையில் அய்யாவழி
செல்வாக்குப் பெற்றுவருவதாகத் தெரிகிறது. இப்போதைய அரசியல் தலைவர் ஒருவரின்
தோழியாக அறியப்படும் ஒருவரைச் சார்ந்தவர்கள் தமிழக மக்களின் நிறுவனங்களைப் பிடுங்க
மேற்கொள்ளும் முயற்சிகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் தங்களை
ஒருங்கிணைக்கும் ஓர் அரங்கமாக இந்த வழிபாட்டு முறையை அவர்கள்
தேர்ந்தெடுத்திருக்கின்றனர் போலும்.
நெல்லை மாவட்டத்தில்
வட்டிக்காரர்களிடமிருந்து தங்கள் சிறு வாணிக நிறுவனங்களைக் காப்பதற்காக
நாடார்களுக்கு காரத்தே செல்வின் என்ற மனிதர் உதவினார். சென்னையில்
ஒரு வழிபாட்டு அரங்கத்தை அதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு
வழிபாட்டுமுறை என்பதற்கு மேல் அவர்களது பொருளியல் நடவடிக்கைகளுக்குக் கொள்கை,
கோட்பாட்டு அல்லது கட்டமைப்பு வகையில் எந்த பங்களிப்பையும் தரவில்லை என்றே
தெரிகிறது. அதாவது அங்கு பூசகர்களின் கையே ஓங்கி நிற்கிறது.
இதற்கு அடிப்படைக் காரணமே அடிகளாரின்
அணுகல்தான் என்று கூறலாம். அதற்கு அடிப்படையாக அமைந்தது அவருக்குக் கல்வி
புகட்டியவராக, நாம் கேள்விப்பட்டது உண்மையானால், அந்தப் பார்ப்பனர் இவருள் புகுத்திய
அணுகலே காரணமாக இருக்க வேண்டும். சீடர்கள் எனப்படும் தொண்டர்கள் தன்னைப்
பல்லக்கில் வைத்துத் தூக்கிச்செல்ல தன்னை ஒரு மடத் தலைவர் போலவே அவர்
வடிவமைத்துக்கொண்டிருந்தார். தான் வகுத்த வழிபாட்டு முறையில் கிறித்துவத்தின் சில
கூறுகளைப் புகுத்திய அவர் தன் முன்னர் வருவோர் தலைப்பாகை அணிய வேண்டுமென்று
சொன்னாரே ஒழிய சட்டை அணிய வேண்டுமென்று சொல்லவில்லை. இன்றுகூட சாமித்தோப்பிலும்
நிழல் தாங்கல்களிலும் சட்டையின்றியும் முழங்கால் அளவுக்கு வேட்டி கட்டியும்தான்
அன்பர்கள் நுழைகின்றனர்.
கிறித்துவம் தன் கட்டினுள்
வந்தவர்களுக்குக் கல்வி அளித்தது, வேலை கொடுத்தது. அது பற்றி அடிகளார்
சிந்தித்ததாகவே தெரியவில்லை. மாறாக, பார்ப்பனிய வழியில் நின்று மக்களுக்குச் சோறு
போட்டார், அதற்குத்தான் ஏற்பாடு செய்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் பணி
என்பது மக்கள் கைகளில் திருவோட்டைத் தூக்கிக் கொடுப்பது என்பது அரசு
என்பதிலிருந்து அனைத்துத் துறை அறிவும் பெற்றோர் என்று அறியப்படுபவர் வரை
அனைவருக்கும் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அனைவரும் ‘மேலோர்’ முன் கையேந்துவோராக இருக்க வேண்டும் என்பது
போன்றே அய்யாவழி இன்று அமைந்திருக்கிறது. நாம் ஏற்கனவே
கூறியது போல நாராயணகுருவைப் போல் கல்வி கற்பிக்கவோ தொழில் வளர்க்கவோ அய்யா
வழிகாட்டியிருந்தால் அல்லது அய்யா வழியினர் வழிகாட்டியிருந்தால் நாடார்கள்
மட்டுமல்ல அவர்களைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள பணம் படைத்த, நிலம் படைத்த மக்கள்
அனைவரும் வளர்ச்சியடைந்து தமிழகமே மேனிலை அடைந்திருக்கும்.
இன்று அடிகளாரையும் அய்யாவழியையும்
தூக்கிப் பிடிப்போரில் மிகப் பெரும்பான்மையர் அன்று நெடுநாமத்தை “கொக்குப் பீய்ச்சியது” என்று கேலிபேசியோரின்
பிறங்கடைகளே. அவர்கள்தாம் கள்ளிறக்கும் போராட்டத்தில் ஆர்வம் காட்டுவோரில்
பெரும்பாலோர். இவர்கள் தங்களுக்குக் கேட்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்
ஒதுக்கீட்டால் பணம்படைத்தோரான இவர்களது பிறங்கடையினர்தாம் பயனடையப் போகிறார்கள்.
எந்த ஒதுக்கீடாக இருந்தாலும் முன்னுரிமையாக இருந்தாலும் சட்டம் வேண்டும்தான்.
ஆனால் பணம் கட்டாயம் வேண்டும். எனவே இன்றைய நிலையில் ஒதுக்கீடு என்பது, எந்த வகை
ஒதுக்கீடாக இருந்தாலும் காசுள்ளவர்களுக்குத்தான் பயன் தரும். எனவே தங்கள்
தலைவர்களின் முழக்கங்கள் பற்றி சராசரி நாடார்கள் மட்டுமல்ல அனைத்துச் சாதி
மக்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
[1] ஆட்சியில் தன் கட்டை மீறிய ஊழல்களின் இழிபெயர்களிலிருந்து
தப்புவதற்கான ஓர் உத்தியாகவும் அவரது இத் திட்டத்தைக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
[2] இவர்களுக்குள்
ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மோதல் அவரையோ கட்சியின் பிற மூத்த தலைவர்களையோ
அமைச்சரவையையோ கலக்காமலும் அவர்களுக்குச் சொல்லாமலும் அமெரிக்காவுடன் பேசி
உரூபாயின் மதிப்பை 57% குறைத்த இந்திராவின் செயல் குறித்துதான். இந்திராவுக்குப்
பெருந்தொகை கிடைத்திருக்கும். அவரை முனைப்பாக ஆதரித்த பொதுமைத் தோழர்களுக்கு?! நாணய மாற்று
விகிதங்கள் என்பவை ஏதோ இயற்கையான பொருளியல் விதிகளால் நிறுவப்படுகின்றன எனக் கூறும்
வல்லுநர்கள் இந்த உண்மைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
[4]“கொண்டாட்டம்” என்ற சொல் சாமி கொண்டாடுவதில் இருந்துதான் வந்ததோ? நெல்லை மாவட்டத்தில் சாமி கொண்டாடுபவரை “கோமரத்தாடி” என்பர். தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் வேலனாட்டம் குமராட்டம்(வேலன் = குமரன்) என்றாகி அது கௌமாரம் என்று சமற்கிருத வடிவம் பெற்று கெளமாரத்தாடி, கோமரத்தாடி என்று திரிந்திருக்கும்.
[5] நம்மிடையில்
நரபலி இருந்ததற்கு மறுக்க முடியாத சான்றாக, தென் மாவட்டங்களில் வணங்கப்படும் சுடலை
மாடன் கொடைவிழாவில் கணியான் எனப்படும் பெண் வேடமிட்ட கூத்தாடிகள் தங்கள்
கைகளைக் கீறி வடிக்கும் குருதி கலந்த சோற்றை உண்பதுடன் தெய்வங்கொண்டாடி
சுடுகாட்டுக்குச் சென்று எரியும் பிணத்தைத் தின்பதைக் கூறலாம். இந்த நரபலியைப் பெண்கள்
நிகழ்த்தினர் என்பதற்குக் கணியான்களின் பெண் வேடம் குறியீடாக நிற்கிறது.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக