21.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 8


படமுடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும்:
            சாணார்களின் வரலாறு என்ற பெயரில் வழங்கும் பழங்கதைகளைப் பார்த்தோம். கடந்த இருநூறாண்டுகளில் அவர்கள் இருந்த இழிநிலையும் அதி‌‌லிருந்து மேலெழுந்து வர அவர்கள் நடத்திய போராட்டங்களையும் இன்றைய அவர்களது நிலையையும் பார்ப்போம்.

            சாணார்கள் செறிந்து வாழ்ந்த தென் தமிழகப் பகுதிகளில் இன்றைய நெல்லை, தூத்துக்குடிப் பகுதிகள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாயக்கர்களின் ஆளுகையின் கீழும் குமரி மாவட்டப் பகுதிகள் திருவிதாங்கூர் ஆட்சியின் கீழும் இருந்தன. இரு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு வகை ஒடுக்குமுறைகளுக்கு ஆளாயினர்.

            16ஆம் நூற்றாண்டில் தமிழகக் கடற்கரையில் அராபியர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி மீனவர் குடியிருப்‌புகளைச் சூறையாடியும் நெருப்பு வைத்தும் பெண்களைக் கற்பழித்தும் கொலைகள் செய்தும் கொடுமை புரிந்துவந்தனர். உள்நாட்டு அரசர்களோ தங்களுக்குள் ஆதிக்கப் போர்களில் ஈடுபட்டிருந்தனர். கடலில் செல்வோர் இழிகுலத்தார் என்று இருந்த நிலையில் அவர்கள் ஆயுதம் தாங்கவும் தடையிருந்தது. இந்தச் சூழலில் பிரான்சிசு சேவியர் என்ற துறவி முன்னர் தூத்துக்குடியில் ஒரே நாளில் 3000 மீனவர்கள் கிறித்துவத்துக்கு மாறினர். அவர்கள் போர்த்துக்கீசிய மன்னனின் குடிமக்களாக மாறி அவனுடைய ஆணைக்கு உட்பட வேண்டுமென்றும் அவ்வாறு உட்படுவாராயின் அரா‌பியர்களின் கொடுமைகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள படைக்கலன்களும் படைப் பாதுகாப்பும் தருவதாகவும் ‌‌வாக்களிக்கப்பட்டது.[1] இதனைத் தொடர்ந்து சாணார்களிலும் கணிசமானோர் பழங் கிறித்துவத்துக்கு(கத்தோலிக்கம்) மாறினர். ஆனால் இந்த மத மாற்றத்தினால் சாணார்கள் பெரும் பயன் எதனையும் அடையவில்லை. உண்மையான பயன் ஆங்கிலரோடு வந்த சமய ஊழியர்களால்தான் ‌‌‌கிடைத்தது. சீர்திருத்தக் கி‌‌‌‌‌றித்துவத்துக்கு மாறியவர்களுக்கு முதன்மையாக எழுத்தறிவு புகட்டப்பட்டது. அடித்தள மக்கள் எழுத்தறிவு பெறுவது தடை செய்யப்பட்டிருந்த ஒரு குமுகத்தில் சமய நூல்களை, குறிப்பாக வழிபாட்டுப் பாடல்களைப் படிப்பதற்கு எழுத்தறிவு தேவை என்று கூறிய ஒரு மதம் உண்மையில் புரட்சிகரமானதே. இந்தத் தேவையை நிறைவு செய்ய பழஞ்சவைக் கிறித்துவத்தைச் சேர்ந்த வீரமாமுனிவர் போன்றோர் தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களிலும் உரைநடை அமைப்பிலும் மாற்றங்கள் செய்து அகராதி போன்ற புதிய வசதிகளையும் செய்து வைத்‌‌திருந்தனர். மக்கள் தங்கள் மொழியிலேயே தம் வாய் மூலமே வழிபாட்டை உரைநடையிலும் பாடல்கள் மூலமும் நடத்துவதை வலியுறுத்தும் ஒரு சமயம் மக்களுக்குப் புரியாத மொழியில் அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் பூசாரியைத் தரகனாக நிறுத்தி வழிபாட்டைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தை விட எவ்வளவோ மேல். அதற்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காக அயல் மதங்களை நாம் நாடிச் செல்ல வேண்டுவதில்லை. நம் மதத்தையே மக்களாட்சி முறையில் மாற்றியமைக்க வேண்டுமென்பதுதான்.

            இந்தச் சூழலில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாணார் தன் மகனுக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் வைத்தார். அதனை அவ் வூர் நாடான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே மகனுக்கு முத்துக்குட்டி என்று வேறு பெயர் வைத்தார். ‌பின்னர் தென் திருவிதாங்கூரில் இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள தாமரைகுளம் பகுதிக்கு அவர்கள் வந்தனர்.

ஒரு மனிதனின் பெயர் உண்மையில் அம் மனிதனின் இயல்பை அல்லது உணர்வைக் காட்டுவதில்லை. பெயரை இட்ட பெற்றோரின் உணர்வைக் காட்டுவதே. அவ்வாறுதான் தன் மகனுக்கு முடிசூடும் பெருமாள் என்ற பெயரைச் சூட்டிய தந்தையின் உணர்வு, நாடான்கள் போன்று தாங்களும் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது என்று கொள்ளலாம். தந்தையின் இந்த உணர்வு மகனாகிய முத்துக்குட்டியிடம் வலிமையாகவே வளர்ந்தது. சாணார்களுக்குத் தங்கள் அடிமை நிலையி‌‌லிருந்து விடுதலை பெற்றுத் தருவதாக வாக்களித்ததால் அவர் கிறித்துவராகி கோட்டையடி எனும் ஊரில் கோயில் ஊழியராக(கோயில்பிள்ளையாக)ப் பணியாற்றினார் என்று கூறப்படுகிறது. (இந்தக் கூற்று உண்மையல்லவென்று புலவர் கு.பச்சைமால் போன்ற அடிகளாரின் பற்றாளர்கள் மறுக்கின்றனர்.)

            அப்போது அடிகளார் வாழ்ந்திருந்த திருவிதாங்கூர் நாட்டில் சாணர்களுக்கு மிக இழிவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன[2]. பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடையணிய, குடத்தை இடுப்பில் வைக்க, பொன்ம(உலோக)க் கலன்களைப் பயன்படுத்த, தாளிதச் சமையல் செய்ய என்பன போன்ற எண்ணற்ற தடைகள். அரசுக்கு ஓலைகள், கருப்புக்கட்டி போன்ற பண்டங்களை ஊழியமாகத் தர வேண்டும். அதிலும் இன்றைய குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளாகிய கல்குளம், விளவங்கோடு ஆகிய வட்டங்களில் சாணார்கள் நாயர்களின் கொத்தடிமைகளாக இருந்தனர். ஏரில் மாட்டுக்குப் பகரம் நிறைசூ‌‌லிகளான சாணார்ப் பெண்களைப் பூட்டி உழுத கொடுமைகள் கூட அப் பகுதியில் நடைபெற்றன. இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் பண்டங்களைப் பெற்றுத் தரவும் பொறுப்பானவர்கள் ஊர் நாடான்கள். எனவே நாடான்களுக்கும் சாணார்களுக்கும் முரண்பாடு இருந்தது. சாணார்களை ஒருங்கிணைத்துப் போர்ப் பாதையில் அழைத்துச் செல்ல முயன்றனர் கிறித்துவ மதகுருக்கள். அதனால் கலவரச் சூழல் வருமென்று அஞ்சிய திருவிதாங்கூர் மன்னர் தன் தலைநகரிலிருந்த ஆங்கில உடனுறை அதிகாரி(Resident) மூலம் சென்னை மா‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காண அரசிடம் முறையிட்டார். சென்னை ஆளுநர் மதகுருக்களைக் கட்டுப்படுத்தினார். இதைக் கண்ட முத்துக்குட்டி அடிகளார் கிறித்துவத்தை விட்டு ‌‌‌வெ‌ளியேறி தானே களத்தில் குதித்தார் என்று கூறப்படுகிறது. அவரது வரலாற்றைக் கூறுவதாகிய அகிலத் திரட்டு அம்மானை அவர் திருச்செந்தூர்க் கடலினுள் மூழ்கியிருந்து மூன்று நாள் தவமிருந்ததாகவும் அதனால் அவருக்குத் தெய்வீக ஆற்றல் வரப்பெற்றதாகவும் கூறுகிறது. அதே நேரத்தில் சிவகாசியின் பக்கத்திலுள்ள திருத்தங்கல் என்ற ஊரில் ஒரு பார்ப்பனரிடம் அவர் சில ஆண்டுகள் மாணவராக இருந்ததாக அவ் வூர்த் தலபுராணத்தில் இருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார்[3].

போராட்டக் களத்தில் குதித்த முத்துக்குட்டியடிகள் சாணார்கள் உ‌ட்பட 18 சாதிகளை இணைத்துப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச் சாதிகளை இணைப்பதற்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காக துவையல் பந்திகள் என்னும் சமபந்திகளை நடத்தினார். இவ்வாறு அவர் பந்திகள் நடத்திய இடங்கள் நிழல் தாங்கல்கள் என்ற பெயரில் இன்று குறி சொல்லும் நிலையங்களாகச் செயற்படுகின்றன[4].

            சாணார்களுக்கெதிராக அரசு நிகழ்த்திய கொடுமைகள் ஊர் நாடான்கள் மூலமாகவே நடைபெற்றதால் அவரது போராட்டம் நாடான்களுக்கு எதிராகவே இருந்தது. சாணார் எனப்படும் சான்றோர் குலமக்களை கொடுமைப்படுத்தும் அரசையும் அதன் முகவர்களாகிய ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடான்களையும் நீசர்கள் எனும் ஒரே சொல்லில் அவர் குறிப்பிடுகிறார். சாணார்களை எப்போதும் நாடான்கள் என்றோ நாடார்கள் என்றோ அவர் குறிப்பிடவில்லை. எதிர்காலத்தில் அவர்கள் நாட்டை ஆள்வார்கள் என்ற பொருளில் நாடாள்வார் என்றுதான் கூறியுள்ளார்.

            அடிகளின் போராட்டம் வேகம் பெற்றது. மீண்டும் கலவரச் சூழல் உருவானது. எனவே அவருடன் பேச்சு நடத்த திருவிதாங்கூர் மன்னர் அழைப்பு விடுத்தார். சீடர்கள் எனப்படும் தொண்டர்கள் பல்லக்கில் வைத்துச் சுமக்க அடிகள் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாமித்தோப்பிலிருந்து திருவனந்தபுரம் சென்றார். அங்கு மன்னருடன் பேச்சு நடத்தினார்[5].

            ஆங்கிலர்கள் பழைய மன்னர்களின் நாடுகளைச் சமத்தானங்களாக்கி அவர்களிடம் ஆள்வதற்கு ஒப்படைத்த போது சில கட்டுப்பாடுகளை விதித்தனர். பின்னடியின்றி மன்னர் இறந்து போனால் சமத்தானம் பேரரசோடு சேர்ந்து விடும். கலவரங்கள் ஏற்பட்டாலும் அதே நிலைதான். இந்த நிலைமையை மன்னர் அடிகளுக்கு விளக்கினார். ஏற்கனவே ஆங்கிலர் மீது வெறுப்புக்கொண்டிருந்த அடிகளார் அரசரின் கவலையைப் புரிந்துகொண்டு அவரோடு ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்[6]. கோயில் ஒன்றை உருவாக்கி அதில் புதிய வழிபாட்டு முறைகளைப் புகுத்தினார். ஆகமக் கோயில்களிலும் பொதுவாகவும் சாணார்களுக்கு மறுக்கப்பட்டிருந்த உ‌‌‌‌‌‌‌ரிமைகளை நுகரும் வகையில் அவற்றை அமைத்தார். பொதுவாகத் திருவிதாங்கூர் கோயில்களில் ஆண்கள் இடையில் மட்டும் ஆடை அணிந்து செல்ல வேண்டும். சாமி தோப்பில் அவர்கள் தலைப்பாகை அணிந்து செல்ல வேண்டும். சாணார்கள் தலைப்பாகை அணிவதற்கு அன்றிருந்த தடைக்கு மாற்றாக கோயிலினுள் மட்டும் இந்த ஏ‌ற்பாடு. ஆகமக் கோயில்களில் சாணார்கள் அன்று நுழைய முடியாது. பார்ப்பனர்களும் தேவதாசிகளும் தவிர்த்த எவரும் கருவறையினு‌ள் செல்ல முடியாது. ஆனால் சாமிதோப்பில் எவரும் கருவறை வரை செல்ல முடியும். பிற கோயில்களில் பயன்படுத்தப்படும் சூடம், சாம்பிராணி, அரளிப்பூ, குங்குமம், திருநீறு, சிறுதெய்வக் கோயில்களில், குறிப்பாக இயக்கி கோயில்களில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள் நெய் எனப்படும் சிவப்புக் குழம்பு போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது. மக்கள் வழிபாடு நடத்த தமிழில் பாடல்கள் யாக்கப்பட்டன. அவற்றை அவர்களே கூட்டாகப் பாடுவர். நெற்றியில் திருநீற்றுக்குப் பகரம் ஒருவகை வெண்ணிற மண்ணை இடித்துச் சலித்து நெடுநாமம் இடுவர். வழிபாட்டை முன்னின்று நடத்தும் கோயில் பணியாளர்கள் அடியவ‌‌‌‌‌‌‌ரின் நெற்றியில் தாமே நாமம் இடுவர். (ஆகமக் கோயில்களில் பார்ப்பனப் பூசாரிகள் எவரையும் தீண்டமாட்டார்). ஞாயிற்றுக் கிழமை வழிபாடு சிறப்பாகும்.

இத்தகைய ‌‌‌மாற்றங்களுடன் உருவான வழிபாட்டு முறையில் கிறித்துவத்தின் சில முற்போக்கு கூறுகள் இருந்தன. பத்மநாபதாசன் என்ற பெயரில் பத்மநாப‌னான கடவுளின் பேராளராக திருவிதாங்கூர் மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவ்வாறு மாலியர்களான(வைணவர்களான) அரசரை எதிர்த்த அடிகளார் தன்னைத் திருமாலின் ஒரு தோற்றரவாக(அவதாரமாக)க் கூறிக் கொண்டது ஒரு முரண்பாடு. அத்துடன் அரசனைக் காணச் சென்ற தன்னை அவர் சுண்ணாம்புக் காளவாயில் வைத்துச் சுட்டதாகவும், ஆனால் தான் அதனால் பாதிக்கப்படவில்லை எனவும் பு‌‌லிக் கூண்டில் புலியுடன் சேர்த்து அடைக்கப்பட்டதாகவும் புலி தன்னை வணங்கி மண்டியிட்டது எனவும் கூறியுள்ளார். இவை தான் செய்த அமைதி உடன்பாட்டை மறைப்பதற்காகக் கட்டிவிடப்பட்ட கற்பனைக் கதைகள் என்பதில் ஐயமில்லை. இதற்கு அவரது காலத்திலேயே எதிர்க் குரல்கள் கிளம்பாமல் போகவில்லை. அதன் ஒரு தடயம் அண்மையில் ‌‌‌வெ‌ளியாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. பொன்னீலன் அவர்களின் தாயார் திருமதி. அழகியநாயகி அம்மாள் தன்வரலாற்று நூல் ஒன்று எழுதியுள்ளார். தமிழகத்தில் ஒரு பெண் எழுதிய முதல் தன்வரலாற்றுப் நூல் அது. கவலை என்பது அதன் தலைப்பு. அதில் பொன்னீலனின் பூட்டன், அதாவது பாட்டனின் தந்தை முத்துக்குட்டி அடிகளுடன் இணைந்து செயற்பட்டார் என்றும் இடையில் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை தோன்றி அவரிடமிருந்து பி‌‌‌‌‌‌‌ரிந்து தன் சொந்த ஊரான மணிகட்டிப் பொட்டலில்(பொன்னீலனின் சொந்த ஊர் இதுதான்) தங்கள் குடும்பத் தெய்வமான முத்துமாலை அம்மன்(முத்தாரம்மன்) கோயிலில் வழிபாட்டைத் தொடங்கினார்; அண்டை ஊரிலுள்ள மக்கள் அக் கோயிலில் வழிபட்டனர்; பேயோட்டல், கணக்கு(குறி)ச் சொல்லல் முதலியன அவரால் நடத்தப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது. சாமித்தோப்பில் போல் இங்கும் அன்றாட வழிபாடுகள் நடைபெற்றன[7].

            சாமித்தோப்பில் தோன்றிய வழிபாட்டு முறை அய்யா வழி எனப்பட்டது. முத்துக்குட்டி அடிகளாரை அய்யா வைகுண்டர் என அழைத்தனர். இந்த வழிபாட்டு முறை விரிந்த அளவில் கடைப்பிடிக்கப்படவில்லை. அடிகளாரின் சீடர்கள் எனப்படும் தொண்டர்கள் தங்கள் ஊர்களில் நிழல் தாங்கல்கள் ஏற்படுத்தி வழிபாடுகள் நடத்தினர். அடிகளாரின் ஆணையின் பே‌‌‌‌‌‌‌ரில் அகிலத் திரட்டு அம்மானை என்ற பெயரில் ஒரு செய்யுள் நூல் அரிகோபாலர் என்ற அவரது தொண்டர் ஒருவரால் இயற்றப்பட்டது. வழிபாட்டுப் பாடல்களும் இயற்றப்பட்டன. அகிலத் திரட்டு அம்மானையில் சாணார்களின் வரலாறும் திருமாலின் தோற்றரவுகளும் கூறப்பட்டுள்ளன. அய்யா வைகுண்டரே அந்தத் தோற்றரவுகளுக்குப் பின் இறுதியாகத் தோன்றியவர் என்று நூல் கூறுகிறது. உலக இறுதி பற்‌‌‌‌‌றிய கூற்றுகளும் உள்ளன. சான்றோர் குல மக்களுக்கான அறிவுரைகளும் கூறப்பட்டுள்ளன.

            திருமணம், பூப்பெய்தல், சாவு முதலிய சடங்குகளில் சாமித்தோப்புப் பதி (கோயிலைப் பதி என்பதும் வீட்டைக் கூரை என்பதும் அய்யாவழி வழக்கு) அல்லது நிழல் தாங்கலிலிருந்து வருபவர் குருவாயிருந்து அகிலத் திரட்டு அம்மானையின் பொருத்தமான பகுதிகளையும் வழிபாட்டுப் பாடல்களையும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்வார். இறந்தோருக்கு அய்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யா வழியினர் பொதுவாகக் கல்லறை கட்டுவதில்லை, காரியம் அல்லது கருமாதி எனப்படும் 16ஆம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாள் சடங்கும் செய்வதில்லை. அன்று சாமித்தோப்புப் பதி அல்லது ஒரு நிழல் தாங்கலில் கஞ்சி வைத்துத் தருமம் செய்வது வழக்கம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மணமக்கள் தெற்கு நோக்கி அமர்த்தப்படுவர். கோயிலைச் சுற்றுவது ஆகமக் கோயில்களுக்கு மாறாக ஐந்து முறைகளாகும்.

            அடிகளார் வாழ்ந்த போது வடக்குப் பார்த்த ஒரு சிறு மண்டபத்தி‌‌லிருந்து அடியவர்க்கு அவராணையால் தோண்டப்பட்ட ஒரு ‌‌‌கிணற்று(முத்திரிக் கிணறு) நீரை(பதம்)யும் மண்ணையும் கொடுத்து நோய்களைத் தீர்த்தார் என்று கூறப்படுகிறது.

            ஏற்கனவே திருமணமாகிக் கணவனைப் பிரிந்த ஒரு பெண்ணுடன் அடிகளார் வாழ்ந்தார். முந்திய கணவன் மூலம் அப் பெண்ணுக்கு ஒரு மகனும் இருந்தான். அடிகள் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தார். ஆனால் அடியவர்களிடையில் அந்த வழக்கம் உருவாகவில்லை. சிறு தெய்வங்களை அவர் பேய்கள் என்றார். பேய்களைத் தான் எரித்து அழித்து விட்டதாகவும் எனவே அவற்றைப் பற்றி யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார். கன்னியாகுமரி‌‌‌‌‌‌‌‌‌யிலுள்ள குமரியம்மனைத் தான் திருமணம் பு‌‌‌‌‌‌‌ரிந்து விட்டதாவும் எனவே தன்னை வணங்கினால் அவளை வணங்கியதாகிவிடும் என்றும் அகிலத் திரட்டு அம்மானை மூலம் கூறுகிறார்.

            தனக்கு காணிக்கை, கைக்கூலி எதுவும் தேவையில்லை என்று கூறினார். ஆனால் அவர் அமர்ந்திருந்த வடக்கு வாயிலில் அடியவர்களுக்கு அன்றாடம் இரு முறை அன்னப் பால் எனப்படும் கஞ்சி ஊற்றப்பட்டது. அதற்காக அடியவர்கள் வடக்கு வாயில் தருமத்துக்காகவென்று நெல், அரிசி, பழம், காய்கறிகள், தேங்காய் என்று எண்ணற்ற பொருட்களையும் பணத்தையும் காணிக்கை செலுத்தினர்.

            அடிகளார் இயற்கை எய்திய பின் அவரது கல்லறை மீது கிழக்கு நோக்கி வடக்கு வாயில் மண்டபத்துக்குப் பின்புறம்(தெற்கே) ஆகமக் கோயில் வடிவில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளது போல் இங்கு அனைவரும் கருவறை வரை சென்று வழிபடலாம். கருவறையில் ஒரு வேலின் பின்னர் பொருத்தப்பட்ட ஒரு முக்கோணப் பலகையில் துணியைப் போர்த்திய வடிவம் உள்ளது. கொடியேற்றம், தேரோட்டம், ஊர்தி(வாகனம்) உலா என்று ஏற்பட்டன. ஆகமக் கோயில்களில் கொடிமரத்தைக் காக்கும் சுடலை கோயில் போன்ற ஒன்று சிப்பாய் மண்டபம் என்ற பெயரில் உண்டு. இவை அடிகளார் தேவையற்றவை என்று கூ‌‌‌‌‌றியவையாகும்.

            அடிகளார் மறைந்தவுடனே கோயிலின் உரிமைக்காக அடிகளாருடன் ‌‌வாழ்ந்த அம்மையாரின் மகனுக்கும் சீடர்கள் எனப்படும் தொண்டர்களுக்கும் பூசல்கள் உருவாகி வழக்கு மன்றம் வரை சென்றது. அந்த அம்மையார் நயமன்றம் ஏறித் தன் மகன் அடிக‌‌‌ளாருக்குப் பிறந்தவன் என்று கொடுத்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு, ஓர் இந்தியப் பெண் தன் குழந்தையின் தந்தை பற்றிப் பொய் சொல்லமாட்டார் என்று கூறி ஓர் ஆங்கில நயவர் அவர் சார்பாகத் தீர்ப்பளித்தார். இன்று அந்த அம்மையாரின் வழி வந்தவர்களே கோயிலின் அறங்காவலர்களாக உள்ளனர்[8]. வடக்கு வாயில் தர்மம் என்பது போக விளக்கெண்ணெய்க் காசு என்ற பெயரில் கோயிலில் காணிக்கையாகப் பணமும் பல்வேறு பொருட்களும் பெருமளவில் சேர்கின்றன. இதனால் கோயி‌‌லில் பெரும் செல்வம் சேர்ந்து‌‌விட்டது. அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அன்பு தேசம் என்ற ஓர் அரசியல் கட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியையே தோற்றுவித்துள்ளார். ஒரு கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான வருமான வரம்புக்கு மேல் சாமித்தோப்புப் பதியின் வருவாய் இருந்தாலும் நாடார் சாதியாரின் எதிர்ப்புக்கு அஞ்சித்தான் அதைத் தன் வசம் அரசு எடுத்துக் கொள்ள‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வில்லை[9]. அறங்காவலர்களுக்கிடையில் பெரும் பூசல் எதுவும் ஏற்பட்டால் போதும் அதைச் சாக்காக வைத்துக்கொண்டு கோ‌‌‌‌‌‌‌‌‌யிலைப் பிடுங்கி பார்ப்பனப் பூசாரியையும் சம‌‌‌‌‌‌‌‌‌‌ற்கிருத வழிபாட்டையும் உள் நுழைத்து விடுவர் இந்து சமய அறநிலையத் துறையினர். அரசியல் கட்சி தொடங்கியதன் நோக்கம் கூட இதை எதிர்நோக்கிய தற்காப்பாக இருக்கலாம்.


[1] வெள்ளையர்கள் வராவிட்டால் இந்தியா வல்லரசாக உயர்ந்திருக்கும், அதைக் கெடுத்துவிட்டார்கள் என்று சொல்லும் “சுதேசி விழிப்புணர்வு இயக்கத்”தின் குருமூர்த்தி, இங்கு ஆட்சியாளர்கள் போட்டுக்கொண்ட தெருச்சண்டைகளும் உழைக்கும் ‌பெரும்பான்மை மக்கள் மீதும் ‌தொழில் - வாணிக மக்கள் மீதும் நிக‌ழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளும்தாம் அயலவரை இங்கு ஈர்த்‌தன என்றும் அவ்வாறு அவர்கள் இங்கு காலூன்றவில்லையெனில் காட்டுவிலங்காண்டிகளின் தாக்குதலில் நாடு கற்காலத்தை நோக்கிச் சென்றிருக்கும் என்பதையும் அவர் தெரிந்தே மறைக்கிறார். இந்திய, இந்து சமயப் பண்பாட்டின் காவலர்களாகிய மேற்சாதியினர்தாம் வாணிகத்துக்கு வந்த வெள்ளையர்களுக்கு ஆளும் ஆசை காட்டி உலகில் முதன்முதல் ஐரோப்பியக் குடியேற்ற நாடு ஒன்றை அமைப்பதற்கு வழிகாட்டினர் என்பதும் அவர் அறியாததல்ல. இந்திய, இந்து சமயப் பண்பாடாகிய சாதியப் பண்பாட்டுக்குப் புகழாரம் ‌சூட்டும் இந்த ஏமாற்றுக்காரர் நாம் என்று‌ம் மீளா அடிமைகளாக வல்லரசு நாடுகளுக்குச் செல்வம் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தொழில் துறைகளில் நாம் மர‌புத் தொழில்நுட்பங்களையே பின்பற்ற வேண்டுமென்று கடும் பரப்புரை செய்து வருகிறார். வல்லரசுகளுடன் கைகோர்த்து வளர்ந்து வரும் மார்வாரிகளுக்குத் திரையாகச் செயற்படுகிறார். கோவை மாவட்டத்தில் வலுவாகக் காலூன்றி விட்ட அவர்களுக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் கோவை மாவட்டத்தையும் அடுத்து மதுரை மாவட்டத்தையும் குறிவைத்துச் செயற்படுகிறார்.
1 மார்த்தாண்ட வர்மன் எனப்படுபவன் தன் தாய்மாமனுக்குப் பின் தான் பட்டமேற முயன்ற போது அவனது போட்டியாளர்களான மன்னரின் மகன்களோடு நடைபெற்ற ‌நெடுநாள் சண்டையில் சாணார்களில் ஒரு சிலர் தவிர அவனுக்கு எதிர்ப்பக்கத்தில் நின்றனர்‌. இறுதியில் மார்த்தாண்ட வர்மன் வென்றதால் தோற்ற பக்கத்தை ஆத‌ரித்தவர்களைத் தண்டிக்கும் நடவடிக்கையாக இந்த ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. சாதிகளில் உயர்வு தாழ்வு என்பது பெரும்பாலான நேர்வுகளில் காட்டிக் கொடுப்போர் உயர்ந்த சா‌தியராவதும் எதிர்த்து நின்றோ‌‌ர் ஒடுக்கப்பட்டோர் ஆவதும்தான் என்ற எமது முடி‌வுக்கு இது ஒரு சான்று. குலோத்துங்கன் காலத்திலு‌ம் அரசுரிமை ப‌ற்றிய பூசலில் வெற்றி பெற்றவனுக்கு ‌எதி‌ர் வரிசையில் நின்றவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிகழ்ச்சியோடு இதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

[3] இது குறித்து நண்பர் பொன்னீலனிடம் கூறிய போது தன் தோழரும் திருத்தங்கல்லைச் சேர்ந்தவருமான நடராசன் மூலம் உசாவி இது பற்றி அறிந்து கூறுவதாகக் கூறியுள்ளார்.
[4] நிழல்தாங்கல் என்ற பெயரில் திருத்தங்கல் என்ற ஊர்ப் பெயருக்கும் தொடர்புண்டோ?
[5] இந்தக் கூற்றை நண்பர் பொன்னீலன் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைக் கட்டி இழுத்துச் சென்றதாக அவர் கூறுகிறார். ஆனால் அவர்களின் சீடர்கள் எனப்படும் அணுக்கத் தொண்டர்களின் குடும்பத்தினர் அவரைப் பல்லக்கில் கொண்டு சென்றதாகவே கூறுகின்றனர். இந் நூலாசிரியரின் தாய் வழிப்பாட்டியும் தாய் மாமன் ஒருவரின் மனைவியும் உடன்காட்டுவிளை என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு சீடரின் குடும்பத்தினரே. 
[6]1980களில் இயங்கிய தமிழக சமூக வரலாற்றுக் கழகத்தின் நிகழ்ச்சியொன்றில் புலவர் கு. பச்சைமால் அவர்கள் இந்த உடன்படிக்கை பற்றிக் கூறியதை திருவனந்தபுரம் அரசு ஆவணக் காப்பகத்தில் தான் பார்த்துள்ளதாக திரு‌.கேசவன் தம்பி அவர்கள் உறுதிப்படுத்தினார்.
[7]   முத்துக்குட்டடி அடிகளுக்கும் பொன்னீலன் பூட்டனாருக்கும் இடையில் உருவான முரண்பாடு என்னவென்று அவரைக் கேட்ட போது, தன் தாய் சொன்ன செய்திகளுக்கு மேல் தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது பற்றி தான் எதுவும் சிந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார். நடந்தவையாக நாம் அறியும் செய்திகளிலிருந்து சாணார்கள் உட்பட ஒடுக்கப்பட்ட 18 சாதிகளின் விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டம் தொடங்கிய முத்துக்குட்டியாரின் மீது நம்பிக்கை வைத்துக் களத்திலிறங்கிய பொன்னீலனின் பூட்டனார் அரசனைச் சந்தித்ததும் பாதை மாறி அவதார உருத்தாங்கி தன்னைக் கடவுளாக காட்டி திசை மாறியதைக் கண்டு வெறுப்புற்றும் வேணாட்டு அரசர்களின் மாலிய(வைணவ) வழிபாட்டைக் கடைப்பிடித்ததை எதிர்த்தும் சாணார்களின் அடிப்படைத் தெய்வமான முத்தாரம்மன் வழிபாட்டை வலுப்படுத்த முடிவு செய்திருக்கலாம். அவருடைய இந்த முயற்சி முத்துக்குட்டியாருடையதைப் போன்று மட்டுமல்ல அதற்கும் மேலேயும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புண்டு. ஆனால் பொன்னீலனின் தந்தையாரின் தலைமுறை அத்தகைய ஒரு இலக்கை எட்டுவதற்குப் பொருந்த வாய்க்கவில்லை என்பது அவரது தாயார் தரும் வராற்றுச் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. கோயில் பொறுப்பை எடுத்துக்கொண்ட பொன்னீலனின் பெரிய தந்தைக்கு அவரது துணைவியார் ஒத்துழைக்கவில்லை. ஆனால் பொன்னீலனின் தாயார் மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் அவருக்குத் துணைநின்றார். இது பொன்னீலனின் பெரியம்மைக்கும் தந்தைக்கும் பிடிக்கவில்லை. இது போன்ற ஓர் இடர்ப்பாட்டில் இந்தக் கோயில் நடைமுறை முடிவுக்கு வராமலிருந்திருந்தால் இன்று உவரி கோயிலுக்கு ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை இந்தக் கோயில் எய்தியிருக்க வாய்ப்பிருந்தது என்பது என் கருத்து.

     அது மட்டுமல்ல அவர் நடத்தியிதாகத் தெரிய வருகிற துவையல் பந்திகளில் அவர் ஒருங்கிணைக்க விரும்பிய 18 சாதியினரும் கணிசமான எண்ணிக்கையில் கலந்திருப்பராயின் அவர்களும் பொன்னீலனின் பூட்டனார் விலகிய பின் அவரை விட்டகன்றிருப்பர். ஒரு வேளை அடிகள் எதிர்பார்த்தது போல் அந்த 18 சாதியினர் கூட்டணி வாய்பாடு பலனளிக்காததால்தான் அவர் மன்னரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டாரா என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அவரது போராட்டம் வலுப்பெற்று தன் ஆட்சிக்கு, அதாவது ஒரு சமத்தானமாகத் தொடர்வதற்கு இடையூறாகி விடும் என்று அவர் அஞ்சியிருக்கத் தேவையில்லை. இதற்கு நமக்குக் கிடைக்கும் ஒரே விளக்கம் புலவர் கு.பச்சைமால் அவர்கள் குறிப்பிட்டது போல் ஆங்கில அரசின் அச்சுறுத்தல் இருப்பதாக அரசர் சுட்டிக்காட்டியதை எற்றுக்கொண்டு தன் போராட்டத் திட்டத்தைக் கைவிட்டதாகக் கொள்ள வேண்டும். வன்முறையை அவிழ்த்து விடுவதாக அரசர் மிரட்டியிருந்தால் அதனால் நாட்டில் உருவாகத்தக்க கலவரச் சூழல் கட்டாயம் ஆங்கிலரைத் தலையிட வைக்கும். அதனால் அதற்கும் வாய்ப்பில்லை. அல்லது அடிகளை தனிப்பட்ட முறையில் மிரட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.   
[8] இப்போதுள்ள அறங்காவலர்களுக்கு ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முந்திய ஒரு பெரியவர் தன் குடும்ப வட்டத்துக்கு வெளியே உள்ள ஒருவருக்குக் கோயிலின் உரிமையில் ஒரு பங்கைக் கொடுத்து ஆவணம் எழுதிவைத்தார். இவர் மறைந்த பின் இது வழக்கு மன்றம் சென்றது. எட்டாண்டுகளில் ஒருமுறை அவர் கோவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமை அளித்துத் தீர்ப்பானது. இதுவரை கோயிலிலிருந்து வந்த வருமானத்திலிருந்து கோயிலுக்கு எந்த பராமரிப்புப் பணியையோ அடியவர்களுக்குத் தேவையான வசதிகளையோ அறங்காவலர் குடும்பத்தினர் செய்தறியமாட்டார்கள். ஆனால் அவர்களைவிட ஏழையான இந்தப் புதியவர் கோயில் மேம்பாட்டுப் பணிகளையும் அடியவர்களுக்கான வசதிகளையும் செய்யும் நடைமுறையைத் தொடங்கிவைத்து அறங்காவலர் குடும்பத்தினரும் அதனைத் தொடரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், கோயில் நடைமுறைகள் இந்தப் புதியவரிடம் வரும் ஆண்டுகளில் மிகப் பெரும்பான்மை அடியவர்களும் அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது வீடுகளில் சந்தித்து தங்கள் காணிக்கைகளையும் நேர்ச்சைகளையும் அவர்களிடம் செலுத்தினார்கள் என்பதுதான்.
[9] இந்தச் சிக்கலுக்கு வேறொரு முகமும் உள்ளது. குமரி மாவட்டக் கலவரக் காலகட்டத்தில் அடிகளாரின் சீடர்கள் எனப்படும் தொண்டர்கள் வழியில் வந்த புலவர் கு.பச்சைமால் போன்றவர்கள், கோயில் அறங்காவலர் குடும்பத்தினர் கோயிலை நடத்தும் பாங்கு அடிகளார் வகுத்த நெறிமுறைகளுக்கு எதிரானது; பாலபிரசாபதி போன்றோர் இந்துவெறி இயக்கங்கனின் கையாட்களாகச் செயற்படுகின்றனர்; ஆனால் அய்யா வழி என்பது இந்துமத சாதிவெறிக்கு எதிராக அடிகளார் வைத்த ஒரு சமய வடிவமாகும் என்ற ஒரு நிலைப்பாட்டைப் பரப்பிவந்தனர். இப்போதோ பாலபிரசாபதி இந்து சமய அறநிலையத் துறை கோயிலைக் கைக்கொள்வதைத் தவிர்க்க அய்யாவழி இந்து சமயத்தின் ஒரு பிரிவல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்க எதிர்த் தரப்பினர் அது இந்து சமயத்தின் ஓர் உறுப்புதான் என்று கூறத் தலைப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. தங்களுக்குக் கோயிலில் இடமில்லாவிட்டாலும் தாழ்வில்லை அது எதிராளி கையைவிட்டுப் போய்விட வேண்டும் என்ற “மிக உயர்ந்த” நோக்கத்தில் இவர்கள் அண்மைக் காலங்களில் இந்து சமய வெறி நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளனராகத் தோன்றுகிறது. 

0 மறுமொழிகள்: