28.12.15

சாதி வரலாறுகளின் ஒரு பதம் - நாடார்களின் வரலாறு - 11


மடைதிறந்த வாய்ப்புகள்:
            குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தவுடன் அங்கு பள்ளியிறுதியும் பட்டப் படிப்பும் முடித்து ‌‌‌வெ‌ளிவந்த ஏறக்குறைய அனைவருக்கும் வேலை கிடைத்தது. கல்வியில் பின் தங்‌‌‌கியிருந்த தமிழகத்தில் அப்போது தொடங்கியிருந்த ஐந்தாண்டுத் திட்டப் பணிகள், கல்வி வளர்ச்சிப் பணிகள் மூலம் தாராளமான வேலைவாய்ப்புகள் கிடைத்தன. அவற்றால் பயனடைந்தவர்கள் நாடார்களை விட மேற்சாதியினரே மிகுதி. ஏனென்றால் ஏழ்மை காரணமாக நாடார்களில் பள்ளியிறுதி கூட முடிக்க இயலாதோர் எண்ணற்றோர் இருந்தனர். அத்துடன் திருவிதாங்கூரில் கல்வியிலும் வேலை ‌‌வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோராக வகைப்படுத்தப்பட்டிருந்த குமரி மாவட்ட நாடார்கள் தமிழகத்தில் கல்வியில் முற்பட்டவர்களாகவும் வேலைவாய்ப்பில் ‌பிற்பட்டவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். இதனால் கொள்கையளவில் குமரி மாவட்ட நாடார்களுக்குத் தமிழகத்துடன் இணைந்ததால் இழப்புதான் ஏற்பட்டது. ஆனால் இந்தச் சிக்கல்களெல்லாம் உணரப்படாத அளவுக்கு வேலைவாய்ப்புகள் இருந்தன.

            குமரி மாவட்டத்தில் தொடக்கத்தில் இருந்தது காட் கி‌‌‌‌‌றித்துவக் கல்லூரி என்ற ஒரேயொரு கல்லூ‌‌‌‌‌‌‌ரியே. இங்கு கிறித்துவர்களுக்கே முன்னுரிமை இருந்தது. எனவே இந்து சமயத்தவருக்கென்று ஒரு கல்லூரி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நாடார்களின் முகாமையான பங்களிப்பு இருந்தது. ஆனால் அம் முயற்சி வெற்றி பெற்று தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி அமைந்த போது (இது குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைவதற்கு முன்பே தொடங்கப்பட்டது) அதன் ஆட்சிக் குழுவில் நாடாரல்லாத மேற்சாதியினர் ஆதிக்கம் பெற்றுவிட்டனர். அதனால் கல்லூரிப் படிப்பிலும் ஆசிரியர் வேலைவாய்ப்பிலும் நாடார்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் பின்னால் தொடங்கப்பட்ட இலட்சுமிபுரம் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை இந்தக் குறைபாட்டை ஓரளவு நிறைவு செய்தன. ஆனால் இதற்குள் கல்வி பெறும் வாய்ப்புகள் வளர்ந்த அதே விகிதத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்தன. எனவே அதுவரை தோன்றாத போட்டியுணர்வுகள் தலைகாட்டின.

ஆச்சாரியார் x காமராசர்:
            இந் நேரத்தில் ஏற்கனவே கொடிகட்டிப் பறந்த தி..நா.கா. இந்‌‌தியத் தேசியப் பேரவைக் கட்சியுடன் இணைந்த பின் நடந்த தேர்தல்களில் இந்தியத் தேசியப் பேரவைக் கட்சிதான் வென்றுவந்தது. அதே நேரத்தில் தி.மு.. தமிழகத்தில் போல் குமரி மாவட்டத்திலும் செல்வாக்குப் பெற்று வந்தது. இதற்கு முகாமையான காரணங்கள், குமரி மாவட்டம் தமிழகத்தில் இணைவதற்கான போராட்டத்தை ஆதரித்து அதில் அக் கட்சி ஈடுபட்டதும் அப் போராட்டத்தை அடிப்படையில் எதிர்த்து வந்த பேரவைக் கட்சியுடன் தன்னைக் கரைத்துக் கொண்ட தி..நா.கா.வின் தலைவர்களின் செல்வாக்கு மங்கத் தொடங்கியிருந்ததுமாகும். இவ்வாறு புதிதாக வளர்ச்சியடைந்த தி.மு.. அணிகளில் நாடார்களும் வெள்‌‌‌ளாளர்களை முதன்மையாகக் கொண்ட பிற சாதியினரும் தங்களுக்கிடையில் பொதுவாக நிலவி வந்த வேறுபாடுகளை மறந்து நெருங்கிவரத் தொடங்கியிருந்தனர். இந்தக் கட்டத்தில் 1967இல் தி.மு.. மாபெரும் வெற்றி பெற்று தமிழக ஆட்சியைக் கைப்பற்றியது. அத்துடன் கொள்கையில்லாக் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் அலங்கோலத்தை இந்திய அரசியலில் அறிமுகப்படுத்தினார் பேரறிஞர் அண்ணாத்துரை. விடுதலை பெற்ற இந்தியா‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வின் வரலாற்றில் அரசியல் அரங்கில் புகுந்த அருவருப்பூட்டும் நடைமுறைகளுக்குத் தமிழகம் முன்னோடியாய் இருந்திருப்பது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஓர் உண்மை[1]. 1952 தேர்தல் முடிந்த போது பேரவைக் கட்சியை விட பொதுமைக் கட்சியினர் கூடுதல் இடங்களைக் கைப்பற்‌‌‌‌‌றியிருந்தனர். ஆனால் நேரு உட்பட தேசியத் தலைவர்களும் காமராசர் போன்ற த‌மிழகத் தலைவர்களும் பொதுமைக் கட்சி ஆட்சியமைப்பதை விரும்பவில்லை. எனவே அரசியலில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாணக்கியர் என்று புகழப்படுபவரும் இராசாசி எனப்படுபவருமான சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியாரை[2] ஆட்சியமைக்கக் கேட்டுக்கொண்டனர்[3]. அவர் சில சிறு கட்சித் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கையூட்டாகக் கொடுத்து அக் கட்சிகளைப் பேரவைக் கட்சியுடன் இணைத்து ஆட்சியமைத்து முதலமைச்சரானார்[4]. நேர்மைக்குப் புறம்பான சாணக்கியத்தில் வல்லவர் என்று புகழும் அதே வாய்கள் அவரை அரசியலில் அறத்தைக் கடைப்பிடித்த தலைவர் என்றும் புகழ்கின்றன. படித்த நம் மக்களின் சிந்தனைகளிலுள்ள முரண்பாடுகள்தாம் எத்தனை![5]

            ஆச்சாரியாரின் வாழ்க்கை ஆழமான சாதியுணர்வும் கூர்மையான சிந்தனைத் திறனும் பிறர் விரும்பாத கருத்தைக் கூடத் துணிந்து கூறும் துணிவும் சிறந்த ஆள்வினைக் கோட்பாடுகளும் நிறைந்த பதவி அவாவும் கொண்டது. பொதுமைக் கட்சியே தனது முதல் எதிரி என்று அறிவித்தாலும் தன் சாதி சார்ந்த அக் கட்சித் தலைவரின் மறைமுக ஒத்துழைப்பால் முதலமைச்சர் பதவியைப் பிடித்தவர்; ஐந்தொழிற் கொல்லர்கள் ஆச்சாரி என்ற சாதிப்பட்டத்தைச் சூட்ட முற்பட்ட போது அதற்குத் தடைவிதித்துப் பார்ப்பனர்கள் மட்டுமே அப் பட்டத்தைத் தாங்கும் உரிமை பெற்றவர் என்று ஆணை பிறப்பித்து எதிர்ப்புகளுக்கும் கலவரங்களுக்கும் காரணமாகி அவ் வாணையைத் திரும்பப் பெற்றவர்; பாக்கித்தானைப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்றும் காசுமீரத்தைத் தனியாக விட்டுவிட வேண்டுமென்றும் கருத்துக் கூறித் தன் கட்சியினரையும் பிறரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர். அவர் கூறியது போலவே பாக்கித்தானம் பிரிந்தது[6]. ஆச்சாரியாரின் ஆள்வினைத் ‌‌திறனுக்குச் சான்றாக அரசியலாளர்களின் தலையீடுகளுக்கு இடமின்றி ஆட்சி நடத்தினார் என்பதைக் கூறுவர். ஆனால் அதில் கூட, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பேரவைக் கட்சித் தலைவர்கள், செல்வாக்கு மிக்க பிற கட்சித் தலைவர்கள் மூலம் வரும் பரிந்துரைகளைப் புறக்கணித்து அரசுப் பதவிகளில் அன்று எங்கும் நிறைந்திருந்த தன் சாதியினருக்கு இருக்கும் முதன்மை இடம் பறிபோகாமல் அனைத்துப் பலன்களையும் இடங்களையும் தொடர்ந்து எய்த வேண்டும் என்ற மறைமுகமான வெறியே அடிப்படையாகும்.
            இந்தியா விடுதலை அடைந்ததும் ஆங்கிலரின் இறுதித் துணையரையராய் (வைசிராயாய்) இருந்த மவுண்ட்பேட்டன் துரைமகனாரிடமிருந்து ஆட்சியைப் பெற்றுக்கொண்ட முதல் இந்தியத் தலைமை ஆளுநர்(கவர்னர் செனரல்) என்ற பெருமையை ஆச்சாரியார் பெற்றார். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்ட போது அதன் முதல் குடியரசுத் தலைவராக அவரே தொடர்வார் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக வடவரான இராசேந்திரப் பிரசாத் அமர்த்தப்பட்டார். மனம் கசந்த ஆச்சா‌‌‌‌‌‌‌ரியார் வடவர் எதிர்ப்பு, திராவிட நாட்டுப் பிரிவினை ஆகியவற்றைப் பேசி வந்த பெரியாருக்கு உரூ 5000/-த்தை செமினி திரைப்பட நிறுவனம், ஆனந்தவிகடன் இதழ் ஆகியவற்றின் உரிமையாளர் எசு.எசு.வாசன் மூலம் அனுப்பித் தன்னைப் புறக்கணித்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்துமாறு கேட்டுக் கொண்டார்[7]. பணத்தைப் பெற்றுக் கொண்ட பெரியார் போராட்டம் எதையும் நடத்தவில்லை. இந்த நிலை‌‌‌‌‌‌‌‌‌யில்தான் தன்னைத் தேடிவந்த முதலமைச்சர் பதவியை ஆச்சாரியார் ஏற்றுக்கொண்டார். நாட்டின் மிக உயர்நத பதவியில் இருந்தவர் என்ற நிலையில் அவர் ஒதுங்கி இருக்கவில்லை. இது அவரது பதவிப் பித்துக்கு எடுத்துக்காட்டு.

            திராவிட இயக்கத்தின் தலைமையை ஏற்ற பின் அதன் மூல இயக்கமான நயன்மைக் கட்சியின் பிற முழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டுப் பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் ஏற்றுக் கொண்டதோடு பார்ப்பனர்களின் இரு நிலைக்களன்களில் (பூசகர் தொழில், அரசுப் பதவி) ஒன்றான கோயில்களையும் அதாவது கடவுளையும் எதிர்ப்பதென்ற புதிய ஒன்றையும் சேர்த்துக் கொண்டதற்கு பெ‌‌‌‌‌‌‌ரியார் - ஆச்சாரியர் இடையிலிருந்த தனிப்பட்ட போட்டியே காரணம் என்று துணிந்து கூறலாம். தாங்கள் உயிர் நண்பர்கள் என்று வேறு கூறித் த‌மிழகத்தையும் உலகத்தையும் அவர்கள் ஏமாற்றியும் வந்தனர்.

            பெரியார் ஈரோடையிலும் ஆச்சாரியார் அண்மையிலுள்ள சேலத்திலும் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் பேரவைக் கட்சியிலும் இந்திய விடுதலைப் போராட்டங்களிலும் முனைப்பாகப் பாடுபட்டவர்கள். இருவரும் முறையே ஈரோடை., சேலம் நகராட்சிகளின் தலைவர்களாக இருந்தவர்கள். ஆச்சாரியார் கல்லூரிப் படிப்புடன் பார்ப்பனராகவும் இருந்ததால் மேலிடத்தில் செல்வாக்குடன் இருந்தார். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாதி வெறியினால் பெரியாரையும் அவரைச் சார்ந்தோரையும் அவர் புறக்கணித்திருப்பதும் இயல்பே. இவர்களிடையிலுள்ள தனிப்பட்ட புகைச்சலே அன்றைய குமுகியல் சூழலில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிக்கலாகவும் ஆரியர் - திராவிடர் போ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராட்டமாகவும் வடிவம் பெற்று வளர்ந்தது என்று கூற முடியும்.

            இந்தச் சூழ்நிலையில் 1938 இல் வெள்ளையராட்சி புகுத்திய புதிய அரசியல் அமைப்புப்படி நடந்த தேர்தலில் பேரவைக் கட்சி வென்றது. அப்போது தொண்டர்களிடையில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த சத்தியமுர்த்தி என்ற பார்ப்பனர் (இவர் ஐயர், ஆச்சாரியார் ஐயங்கார்) தமிழகப் பேரவைக் கட்சியின் தலைவராக இருந்தார். அவருக்கும் ஆச்சாரியாருக்கும் ஏற்பட்ட பதவிப் போட்டியில் மேலிடத் தலையீட்டின் பே‌‌‌‌‌‌‌ரில் ஆச்சாரியார் முதலமைச்சரானார். பேரவைக் கட்சியின் இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற திட்டத்தின்படி அவர் இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்கினார். தகுந்த நேரத்தை எதிர்ப்பார்த்திருந்த பெரியார் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தித் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உரு‌‌வாக்கினார். இதற்கிடையில் 1939ஆம் ஆண்டு மாநிலங்கள் அனைத்திலும் கட்சி பதவி விலக வேண்டும் என்ற பேரவைக் கட்சி தீர்மானப்படி ஆச்சாரியாரும் பதவி விலகினார்.

            1940இல் நடந்த தமிழ்நாடு பேரவைக் கட்சி அவைத் தலைவர் பதவிக்கு ஆச்சாரியார் போட்டியிட்டார். மே‌‌லிடத் தலைமையின் ஆதரவு அவருக்கு இருந்தது. அதனால் அவரை விரும்பாத கட்சியின் பெருந்தலைகள் தங்களில் ஒருவரே நேரடியாகப் போட்டியிடத் துணியவில்லை. காந்தி முதலிய மேலிடத் தலைவர்களுக்குத் தாங்கள் அறிமுகமானவர்க‌‌‌ளாகையால் அவர்களது விருப்பத்துக்கு எதிராக ‌‌‌வெ‌ளிப்படையாகச் செயற்படத் தயங்கினர். எனவே காமராசரை ஆச்சா‌‌‌‌‌‌‌ரியாருக்கு எதிராக நிறுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கர் உட்பட பெருந்தலைவர்கள் எல்லாரும் அவருக்கு ஆதரவாக நின்றனர். காமராசரை முத்துராமலிங்கர் ஆதரித்தது அவரது சாதி சம நோக்கைக் காட்டுவதாகக் கூறுவர். உண்மையில் அதுவல்ல காரணம். தாங்கள் யாரையும் மதிக்காமல் மேலிடத் தலைவர்க‌ளிடமுள்ள செல்வாக்கினால் தலைக்கனம் பிடித்திருந்த ஆச்சாரியாரை வீழ்த்தத் தாம் நேரடியாகக் களத்தில் இறங்கத் தயங்கி இளைஞரும் இந்திய அளவில் ‌‌‌வெ‌ளியே தெரியாமலிருந்தவருமான காமராசரைக் ‌கொண்டு ஆச்சாரியாரை வீழ்த்துவதற்கான தந்திரமாகவே அந்த ஆதரவு தரப்பட்டது. ஆனால் காமராசர் தனக்குத் தரப்பட்ட பதவிக்குத் தேவையான திறமையுடன் செயற்பட்டார். 1952 தேர்தலில் தோல்வியுற்ற பேரவைக் கட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியை ஆச்சாரியாரின் தலைமையில் ஆட்சியமைக்கச் செய்ததிலும் காமராசரின் பங்கு உண்டு.

ஆச்சாரியார் + குலக்கல்வித் திட்டம் காமராசர்:

            1952இல் பதவிக்கு வந்த ஆச்சாரியார் தொடக்கக் கல்வியில் ஒரு புது முறையைப் புகுத்தினார். அந்தத் திட்டத்தின்படி தொடக்கப் பள்ளி மாணவர்கள் முற்பகலில் பள்ளியில் படிக்க வேண்டும், பிற்பகலில் தந்தையின் தொழிலைச் செய்ய வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்ததை உயர்வானதென்று கருதும் சிலர் இன்றும் இருக்கின்றனர். மிக மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு இது தொழில் சார்ந்த கல்வியின் ஒரு வடிவம் போல் தோன்றும். அப்படியாயின் இத் தொழிற் பயிற்சிகளைப் பள்ளி வளாகத்தினுள் கொண்டுவந்து அவற்றுக்குப் பாடத் திட்டங்களும் வகுத்திருக்க வேண்டும். படிப்படியாக நிறைவேற்றுவதென்ற அடிப்படையில் ஒரு திட்டத்தையாவது அவர் அறிவித்‌‌திருக்க வேண்டும். அப்படி எதையுமே செய்யாமல் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த பள்‌ளிகளில் அப்போதுதான் காலடி எடுத்துவைத்திருந்த அடிமட்டச் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களை அங்கொரு காலும் இங்கொரு காலுமாக நிறுத்தி அவர்களது எழுத்தறிவு வாய்ப்பைப் பறிப்பதாக இருந்தது இந்தக் கல்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வித் திட்டம். தந்தை தொழிலை மகன் செய்வதென்பது தொழிற்சாதிகளில் எ‌ளிதாக இருக்கலாம். புரோகிதம் மற்றும் பூசகம் செய்யும் பார்ப்பனர்களின் பிள்ளைகள் கூடத் தந்தை பணி செய்யும் போது உடனிருக்க முடியும். அலுவலகங்கள், நய மன்றங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பணி செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள் என்ன செய்வர்?

            இத் திட்டம் நடைமுறையிலிருந்த சில மாதங்களும் பள்ளிகள் பிற்பகலில் செயற்படவில்லை. இதன் மூலம் பிள்ளைகளின் நேரமும் ஆசிரியர்களுக்குக் கொடுத்த சம்பளமும் காலியாகக் கிடந்த பள்ளிக் கட்டடங்களின் பயனும் வீணாக்கப்பட்டன. மாறாக மாற்றுத் திட்டங்களை வகுத்து அவற்றைப் படிப்படியாகவாவது செயலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். புதிய திட்டம் நடைமுறைக்கு வராத பள்ளிகளில் அதுவரை பழைய நடைமுறையைத் தொடர்ந்திருக்க வேண்டும். தமிழகத்தைத் தொட்டுக் கிடக்கும் திரு‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌விதாங்கூரில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் சென்னை மாகாண ஆட்சி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாளர்களுடன் நெருக்கமான தொடர்புள்ளவருமான[8] சி.பி.இராமசாமி ஐயர் செயற்படுத்திய கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தி‌‌‌‌‌‌‌‌‌யிருக்கலாம். இராமசாமி ஐயரின் திட்டம் எழுத்தறிவைப் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆச்சாரியாரின் திட்டம் அதை அழிப்பதை நோக்கமாகக் கொண்டது.

காந்தியார் பரிந்துரைத்த ஆதாரக் கல்வியையாவது புகுத்தியிருக்கலாம். அது க‌ழிவறையைத் தூய்மைப்படுத்துவது உட்பட ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொரு மாணவனும் பிறரைச் சாராமல் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தும் ஒரு திட்டம். சாதி அடிப்படையிலான இழிவுகளுக்கு நிலைக்கள‌னான, உழைப்பு பற்றிய இழிவுணர்வை இளையோரிடமிருந்து அகற்றும் உயர்வான நோக்கமும் பயனும் அதற்கு உண்டு. இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஆச்சாரியாரின் கல்வித் திட்டத்தைத் திராவிட இயக்கத்தினர் கூறியவாறு குலக் கல்வித் திட்டம் என்பதை விட எழுத்தறிவு அழிப்புத் திட்டம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். பேரவைக் கட்சியிலுள்ள பல தலைவர்கள் உட்பட எதிர்க் கட்சியினர் இதனைச் சரியாகவே எதிர்த்தனர். எதிர்ப்பு வலுத்த போதும் ஆச்சாரியார் அணுவளவும் அசைந்து கொடுக்கவில்லை. போராட்டம் பெரும் வேகம் பெற்றதால் இறுதியில் பதவி விலகினார். அவருக்கு மாற்றாகக் காமராசர் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானார். இங்கும் ஆச்சாரியாரை ‌‌‌வெ‌ளிப்படையாக எதிர்த்துப் போட்டியிடத் துணியாத பேரவைக் கட்சியிலுள்ள பெருந்தலைகள்தாம் காமராசரை ஆதரித்தனர். படிப்பறிவு குறைந்தவரும் தங்களை விட இளையவருமான காம‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராசர் தமக்குத் கட்டுப்பட்டு நடப்பார் என்று அவர்கள் கருதியதுதான் காரணம் என்று கூறலாம். ஆச்சாரியாரின் நம்பிக்கைக்குரிய மாணவரும் படிப்பறிவு நிரம்பியவருமான சி.சுப்‌பிரமணியத்தின் முதலமைச்சர் ஆகும் முயற்சிக்குக் கட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சித் தலைவர்கள் ஆதரவு தர‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வில்லை. சட்டமன்ற உறுப்பினராயில்லாத காமராசர் பின்னர் குடியேற்றம்(குடியாத்தம்) தொகுதியிலிருந்து அனைத்துக் கட்சியின‌‌‌‌‌‌‌ரின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்‌டார்.

            ஆச்சாரியாரின் இந்த ஆட்சிக் காலத்தில் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நடைமுறைக்கு வந்த வீதமுறை(ரேசன்) வழங்கல் ஒழிக்கப்பட்டு மக்களுக்குப் பண்டங்கள் தாராளமாகக் கிடைக்கும் சூழ்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலை உருவானது. முழுமையான மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது. மதுவிலக்கினால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை விற்பனை வரியைப் புதிதாகப் புகுத்தியதன் மூலம் ஈடுசெய்தார்[9]. இடைக்கிழார்(சமீன்தார்) முறை ஒழிக்கப்பட்டது. இவை அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நல்ல திட்டங்களாகும்.

            காமராசர் தன் ஆட்சிக் காலத்தில் ஆற்றிய குறிப்பிடத்தக்க பணி பரவலாகத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கியதாகும். பெரியாரின் தொண்டரான நெ.து.சுந்தரவடிவேலு காமராசர் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்தார். காமராசரும் அவரும் இணைந்து பள்ளிச் சீரமைப்புத் திட்டம் என்ற ஒன்றை வகுத்தனர். ஆங்காங்கு மா‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாடுகள் கூட்டிப் பொதுமக்களிடமிருந்து நிலமும் பணமும் திரட்டிப் பள்ளிகள் தொடங்குவதற்குப் பயன்படுத்தினர். மக்களிடமிருந்து திரட்டப்படும் பணத்துக்குச் சமமாக அரசும் வழங்கும் திட்டத்தை(இன்றைய நமக்கு நாமே திட்டம் போன்று) அறி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வித்தனர். அவ்வாறு நன்கொடை திரட்ட முடியாத இடங்களில் திரட்டியதாகப் பொய்யாகவாவது கணக்குக் காட்டி அரசு ஒதுக்கும் பணத்தைப் பெற்றுத் திட்டங்களை நிறைவேற்றுமாறு தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்பட்டதாகக் குறை கூறுபவர்கள் உண்டு. இது போன்ற தவறான அல்லது பொய்யான செய்திகளை தருமாறு அரசு ஊழியர்கள் வற்புறுத்தப்படும் வழக்கம் நிலவுவது உண்மைதான். நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்களைத் தீட்டி அவற்றை நிறைவேற்றுவதற்காகப் பொய்யான செய்திகளைத் தருமாறு ஊழியர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக மானிய விலையில் உழுவுந்து(டிராக்டர்) வழங்குவதற்கான திட்டத்தில் விதிக்கப்படும் நெறிமுறைகளின்படி தகுதியுள்ளவர்கள் அதனை வாங்கும் நிலையிருக்க முடியாது. எனவே நெறிமுறைக்கேற்பப் பொய்யான ஆவணங்களை உண்டாக்கி அவற்றின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். அல்லது அமைச்சர் வரும் நாளில் உழுவுந்துகள் பயனா‌ளிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வண்டியை விழா மேடை முன் நிறுத்தி வழங்கும் விழா நடைபெறும். மானியத்தை அதிகாரிகளும் பயனாளிகளும் பகிர்ந்து கொள்வர். இந்தக் கவர்ச்சித் திட்டங்களின் கருவிலிருந்தே பெரும்பாலான ஊழல்கள் தோன்றுகின்றன. இந்தச் சீர‌ழிவைத் தொடங்கி வைத்தவர்கள் பேரவைக் கட்சி ஆட்சி‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌யாளர்கள்தாம். அத்துடன் குடும்பக் கட்டுப்பாடு அறுவைப் பண்டுவத்துக்கு மாதத்துக்கு இத்தனை ஆள் பிடிக்க வேண்டுமென்று பள்ளி ஆசிரியர்களுக்கு இலக்கு நிறுவி‌னார்கள், தவறினால் சம்பளத்தை நிறுத்தி வைத்தனர். இதற்கு ஆள் பிடிப்பது பற்றிய கவனத்தினாலும் செயற்பாட்டினாலும் கற்பிக்கும் பணியிலிருந்து அவர்களது கவனம் திசைதிருப்பப்பட்டது. இன்று பல ஆசி‌‌‌‌‌‌‌ரியர்கள் கற்பித்தல் பணியை ஒதுக்கிவைத்துவிட்டு வாணிகம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்களென்றால் அரசின் இந்தக் கொள்கைகளும் முகாமையான ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காரணமாகும். இந்தக் குறைபாடுகள் இருந்தாலும் காமராசர் காலத்திய கல்விப் பணி போற்றத்தக்கதுதான்.

            காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரமாகும். இராம‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாதபுரம் மாவட்டத்தில் ஒரு மறவர் சாதிப் பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் திருமணம் செய்தது தொடர்பாக நடைபெற்ற வழக்கின் போது இம்மானுவேல் சேகரன் என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர் நய மன்றத்தில் முத்துராமலிங்கரின் பக்கத்தில் அமர்ந்தார் என்பதற்காக அவர் திட்ட‌மிட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன, பெரும் கலவரம் உருவானது. பலர் உயிரிழந்தனர். கலவரத்தை அடக்க, காமராசரின் ஆணைப்படி மறவர்களில் பலரைக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காவல்துறையினர் கட்டிவைத்துச் சுட்டுக் கொன்றனர் என்று கூறப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் பரிவையும் ஆதரவையும் பெறுவதற்காகப் பேரவைக் கட்சியினரே தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளுக்குத் தீயிட்டுக் கலவரத்தைத் தூண்டிவிட்டனர் என்பது சிலரது கூற்று. இந்தக் கலவரம் தொடர்பாக முத்துராமலிங்கர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்து ‌‌‌வெ‌ளியே வந்த சில நாட்களில் இயற்கை எய்தினார். சிறை‌‌‌‌‌‌‌‌‌யிலிருந்த போது அவருக்குச் சிறுகச் சிறுக நஞ்சூட்டியதால்தான் அவர் இறந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுண்டு. இந்தப் புரளியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

            ‌‌‌வெ‌ளிப்படையாக வந்த இந்தச் செய்திகள், வதந்திகளின் பின்னணியில் அவ்வாறு ‌‌‌வெ‌ளிப்படையாகப் பேசப்படாத ஒரு முகாமையான நிகழ்ச்சி பற்றியும் ஒரு சிலர் கூறுகின்றனர். காமராசர் மீது கூறப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி மறவர் சாதியினருக்கு நாடார்கள் எதிரிகள்; எனவே நாடாரான காமராசரை முறியடிக்க தி.மு..வில் சேருங்கள் என்று மறவர் சாதி மக்களை தி.மு..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வில் சேர்ப்பதில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர்; அதிலிருந்துதான் மறவர் சாதியினர் முனைப்பான அரசியலில் ஈடுபட்டனர் என்பது அந்தச் செய்தி. வரலாற்றில் ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியல்வாணர்கள் மக்கள் குழுக்களிடையில் மூட்டிவிட்டுள்ள பகைமைகள் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இது ஒன்றும் வியப்பளிக்கும் ஒரு செய்தியல்ல.

            காமராசர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளிலும் தமிழகம் பெரும் வளர்ச்சி கண்டது. இதற்குக் காமராசர் மட்டும் காரணம் என்று கூற முடியாது. அப்போதுதான் நடைமுறைக்கு வந்த ஐந்தாண்டுத் திட்டங்களின் கீழ் பல புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக அரசியலில் விரைந்து முன்னேறிக் கொண்டிருந்த ‌‌தி.மு.. வைக் காட்டி நடுவணரசிலிருந்து காமராசர் பல திட்டங்களைத் தமிழகத்துக்கென்று பெற்றுவிட்டார். ஆச்சா‌‌‌‌‌‌‌ரியாரின் மாணவரான சி.சுப்பிரமணியம் பண அமைச்சராகவும் வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும் இடம்பெற்றிருந்த காமராசரின் ஆட்சி பல திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றியது.

            காமராசர் மேல் சொல்லப்படுகிற ஒரு குற்றச்சாட்டு, சென்னை மாகாணம் என்று இருந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றுவதற்காக உண்ணாநோன்பிருந்த சங்கரலிங்கனார் சாவுக்குக் காமராசர்தான் காரணம் என்பது. இ‌‌தில் ஓரளவுதான் உண்மை. ஏனென்றால், சங்கரலிங்கனார் தமிழ்நாடு பெயர் மாற்றத்தை மட்டும் முன்வைக்கவில்லை. உடனடியாக நிறைவேற்ற முடியாத வேறு பல வேண்டுகைகளையும் முன்வைத்தார். அவ் வேண்டுகைகள் பொதுமைக் கட்சியினர் அவர் மூலம் முன்வைத்தவை. எனவே தமிழ்நாடு பெயர் மாற்றம் வேண்டுகை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் அவர் நோன்பிருந்து உயிர் துறந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் சில காரணங்களால் அவரது குடும்பத்தினருக்கும் அவருக்கும் பிரிவும் பகையும் ஏற்பட்டு அவர் ‌‌வாழ்வை வெறுத்திருந்தார் என்று சாலினி இளந்திரையன் அவர்கள் மக்கள் செங்கோல் இதழின் சங்கரலிங்கனார் சிறப்பிதழில் எழுதிய கட்டுரையில் கூறும் செய்திகளி‌‌லிருந்து முடிவுகட்ட முடிகிறது. ஆனால் உடனடியாக நிறைவேற்றத்தக்கதாகிய மாநிலப் பெயர் மாற்ற வேண்டுகையைக் காமராசர் ஏற்றுக்கொண்டிருப்பாராயின் சங்கர‌‌லிங்கனாரின் பிற வேண்டுகைகள் பற்றிய உண்மை உலகுக்கு எட்டியிருக்கும். காமராசருக்கு இந்தப் பழிச்சொல் ஏற்பட்டிருக்காது. இந்த இடத்தில் காம‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ராசரின் இன்னொரு முகம் வெளிச்சத்துக்கு வருகிறது.

            காமராசர் தன் கட்சியாகிய பேரவைக் கட்சியை உயிராக மதித்தவர். அவருக்கிருந்ததாகக் கூறப்படும் நாட்டுப் பற்று பேரவைக் கட்சிப் பற்றுக்கு அடுத்துத்தான். சங்கரலிங்கனாரின் வேண்டுகை நிறைவேற்றப்பட்‌டால் அவருக்குப் பின்னணியிலிருந்த பொதுமைக் கட்சியினர் அதனால் ஆதாயம் அடைந்து விடக்கூடும் என்று கருதியது அவரது பிடிவாதத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரே ஊரையும் சாதியையும் சேர்ந்த இருவருக்குள் இருக்கும் இயல்பான காழ்ப்புணர்ச்சிகளும் காரணமாயிருக்கலாம்.

            பேரவைக் கட்சியின் மீதிருந்த வெறியினால் கட்சிமாறிகளையெல்லாம் உள்ளே இழுத்துப் போட்டுக்கொண்டு பெருமையளித்தார். அத்துடன் தன் கட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சியிலிருந்த பணம் படைத்தோரும் பிறரும் செய்த ஊழல்களையெல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை. அரசின் செயற்பாடுகளில் ஆளும் கட்சியினரின் தலையீடு எந்தக் கட்டுப்பாடுமில்லாது வளர்ந்தது அவரது காலத்தில்தான். தி.மு.. வளர்ச்சியடைந்ததிலும் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியதிலும் இந்த ஊழல், ஆட்சியில் தலையீடு போன்ற குற்றங்களை அவர்கள் சுட்டிக் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌காட்டியதற்கும் மக்கள் தங்கள் நேரடிப் பட்டறிவால் அந்தப் போக்கைக் கண்டு வெறுப்படைந்ததற்கும் பெரும் பங்கு உண்டு.


[1]முன்பும் கூட ஐரோப்பியர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுத்ததில் தமிழகம் முன்னோடியாக இருந்து இழிவைத்  தேடிக்கொண்டிருக்கிறது.
[2] இவரை ஆச்சாரியார்” என்று ஒரு நையாண்டி(நகையாடல்)க் குறிப்புடன் திராவிட இயக்கத்தினர் குறிப்பிட்டு வந்தனர்.    பிற்காலத்தில் அவரை மூதறிஞர் இராசாசி” என்று வாய் நிறைந்த மதிப்புடன் குறிப்பிட்டனர் தி.மு..வினர்.
[3] இந்தியாவின் அரசியல் - பொருளியல் - குமுகியல் நோக்காடுகளுக்கு முதல் தலைமையமைச்சராக இருந்த நேருதான் காரணம். சான்றுக்கு இது ஒன்று.
[4] ஆச்சாரியார் முதலமைச்சராவதற்காகப் பொதுமைக் கட்சித் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தி என்ற பார்ப்பனர் சாதியுணர்வால் மறைமுக ஒத்துழைப்பு நல்கினார் என்று குற்றம் சாட்டிய பெரியார் அதுவரை பொதுமைக் கட்சி அழைக்காமலே அதற்கு அளித்து வந்த தேர்தல் பரப்புப் பணியை நிறுத்திக்கொண்டார். பொதுமைக் கட்சி பார்ப்பனர் நலனைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதில் ஐயமில்லை.
[5] தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட ஆச்சாரியாரின் செயலைக் கொல்லைப் புறமாக நுழைதல் என்று குற்றம் சாட்டிய தி.மு.. பின்னர் 1967 தேர்தலில் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாதுரையை அதே முறையில் கொல்லைப்புறமாக அழைத்து வந்துதான் முதலமைச்சராக்கியது. பாராளுமன்றத் தொகுதியில் வென்றிருந்ததன் மூலம் அவரது தகுதி ஆச்சாரியாரை விட மேம்பட்டது என்றாலும் சட்டமன்ற உறுப்பினரல்லாத ஒருவர் அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவராவது மக்களாட்சியை இழிவுபடுத்துவதாகும். மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்த உறுப்பினர்கள் இருக்க மன்றத்துக்குத் தேர்வு செய்யப்படாத ஒருவரை வெளியிலிருந்து கொண்டு வந்து தலைமையமைச்சராகவோ, நடுவண் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ மாநில அமைச்சராகவோ அமர்த்துவது தேர்தலில் ஈடுபட்டு வாக்களித்த மக்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் மிகக் கொடுமையாக இழிவுபடுத்துவதாகும். இத்தகைய ஒரு நடைமுறையைப் பரிந்துரைக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் இழிவு மிக்க ஒன்றாகும்.
[6]பாக்கித்தானம் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு முகம்மதியர்களே காரணம் என்று பொதுவாக எல்லோராலும் நம்பப்படுகிறது. உண்மையில் பாக்கித்தானப் பிரிவு என்பதற்கு முன்னுரிமை வழங்கியோர் பேரவைக் கட்சியினரே. இந்தியாவில் பொருளியல் களத்தில் பெரும் போட்டியாளர்களாக அன்று இருந்தவர்கள் பனியாக்களும் முகம்மதியர்களுமே. காந்தியார் உட்பட பேரவைக் கட்சி பனியாக்களின் கைப்பிடிக்குள் இருந்தது. காந்தியும் ஒரு பனியாதானே! எனவே உள்நாட்டுப் பொருளியல் நடவடிக்கைகள் நடுவணரசின் கட்டுப்பாட்டில் இல்லாதவாறு மாநிலங்களின் ஒரு கூட்டமைப்பாக விடுதலை பெற்ற இந்தியா உருவாக வேண்டும்; அதற்குப் பேரவைக் கட்சி ஆயத்தமாக இல்லையெனில் பாக்கித்தானைத் தனியாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் முகம்மதலி சின்னாவின் நிலைப்பாடு. பனியாக்களின் பேரவைக் கட்சி பிரிவினையைத் தேர்ந்தெடுத்து உரிமைகளற்ற மாநிலங்களைக் கொண்ட ஒற்றையாட்சியுடைய இரு நாடுகளை உருவாக்கியது. இன்று இந்தியாவின் கீழுள்ள தேசியங்களின் மக்கள் பனியாக்களின் பொருளியல் ஆதிக்கத்தினுள்ளும் பாக்கித்தானிய மக்கள் பஞ்சாபி முகம்மதியர்களின் ஆதிக்கத்தினுள்ளும் சிறைப்பட்டுள்ளனர். இவ்வாறு இந்திய மற்றும் பாக்கித்தானிய ஒற்றையாட்சிகளின் முதன்மை நோக்கம் அனைத்துத் தேசியங்களின் மீதான பொருளியல் சுரண்டலே. இந்தப் பொருளியல் சுரண்டலுக்கு எதிரான பொருளியல் உரிமைப் போராட்டம் இந்திய ஒற்றையாட்சியின் அடிப்படையைத் தாக்கி அனைத்துத் தேசிய மக்களுக்கும் விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற உண்மை வெளிப்படுகிறது.
            காசுமீரம் அது இந்தியாவோடு இணைக்கப்பட்ட போது அதற்கு முழுமையான தன்னாட்சி அளிக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அதன் அதிகாரங்கள் படிப்படியாகப் பறிக்கப்பட்ட போதுதான் அங்கிருந்து விடுதலைக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. அத்துடன் காசுமீரத்தில் பாதியைப் பங்குபோட்டுக் கொண்ட பாக்கித்தான் முழுவதையும் தன்னோடு இணைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் விடுதலை இயக்கங்களுக்கு உதவியது. தன் நாட்டின் மக்கள் மீது அங்குள்ள பஞ்சாபியர் கொண்டுள்ள ஆதிக்கத்தை மறைக்கும் வகையில் காசுமீர விடுதலைப் போராட்டத்தை முகம்மதியர்களின் போராட்டமாக்கி மதவெறியை ஊட்டியது. இதை இந்தியாவும் ஊக்கியது. இந்தியாவிலும் பாக்கித்தானிலும் அடங்கிக் கிடக்கும் காசுமீரப் பகுதிகள் ஒன்றாகத் தனிக் காசுமீரம் உருவாக வேண்டுமென்று கேட்கும் இயக்கங்கள் அங்கு செல்வாக்குப் பெற்று வருகின்றன. அதனால்தான் வெளியில் கருத்து வேறுபாடு இருப்பது போல் நடந்து கொண்டே இந்திய, பாக்கித்தான் ஆட்சியாளர்கள் பேச்சுகள் நடத்தி வருகின்றனர். இறுதியில் காசுமீர மக்கள் இந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் புறங்கண்டு வெற்றி பெறப் போவது உறுதி.
[7] செயலலிதாவிடம் 5 இலக்கம் உரூபாய் பெற்றுக் கொண்டதற்காகத் தன்னைக் குறைகூறியவர்களுக்கு "மானமிகு" கி.வீரமணி அளித்த விடையில் இதைக் கூறியுள்ளார்.
[8] 1924 இல் காவிரியில் கல்லணைக்கு மேற்கிலிருக்கும் கோவிலடி என்ற இடத்தில் ஏற்பட்ட ஓர் உடைப்பின் விளைவாக வெள்ள நீரைக் கட்டுப்படுத்தவும் காவிரிப் பாசனத்தின் கீழ் கூடுதல் ஆயக்கட்டைக் கொண்டு வரவும் வகை செய்யும் மேட்டூர் அணைத் திட்டத்தை முன்வைத்தவர் சி.பி.இராமசாமி ஐயர். சென்னை அரசதானியின் அன்றைய ஆங்கில அரசு உடனே அதனைச் செயற்படுத்தியது.
[9] 1971 ஆகத்து 1 முதல் மதுவலக்கை “நிறுத்திவைத்த” கருணாநிதி, விற்பனை வரியை வைத்து ஆட்சியாளருக்கு பை நிரம்புவதை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. 

0 மறுமொழிகள்: