4.12.15

திராவிட மாயை - 10



                                                            சில கேள்விகள்:
கேள்வி:1. மேலேயுள்ள மார்க்சின் முதல் மேற்கோளில் குறிப்பிட்டுள்ள பேற்றுக்காலத் துடிப்புகளைக் குறைத்து காலநீட்சியைக் குறுக்க முடியும் என்பதன் பொருள் என்ன?

            சொந்தமாக இருந்த நிலத்தை விற்றோ அல்லது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டோ பிழைப்புக்கான அடிப்படையை இழந்த உழவன், பெரும் தொழில்களின் பெருங்கொண்ட விளைப்பின் விளைவாகத் தன் சொந்தத் தொழில் நசிவுற்றதனால் பட்டினியை எதிர்கொள்ளும் தொழிலாளி போன்று குமுகத்தில் உருவாகும் நெருக்கடிகளைத்தான் மார்க்சு பேற்றுக்காலத் துடிப்புகள் என்றார். அவ்வாறு வேலை இழந்து பட்டினிக்கு ஆளாகத்தக்க மக்களுக்கு அவர்களது அகவைக்கு ஏற்றாற்போல் புதிய தொழில்களில் பயிற்சி அளித்தும் ஓய்வூதியம் போன்ற மறுவாழ்வு ஏற்பாடுகள் மூலமும் விடிவு காண முடியும். மார்க்சு காலத்திலேயே இத்தகைய கருத்தோட்டங்கள் உருவாகியிருக்க வேண்டும். இப்போது ஒ.நா. அவை போன்ற அமைப்புகள் இதற்கேற்ற வழிமுறைகளை வகுத்திருக்கின்றன.

            குத்தகை நிலைப்பு என்ற நோக்கத்தை உள்ளே கொண்டுள்ள, ஆனால் குத்தகை ஒழிப்புச் சட்டம் என்ற பெயர் கொண்ட நம் மாநிலச் சட்டத்தில் கூட குத்தகை உழவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்துக்கு அரசு ஈடு வழங்க வகை செய்திருக்கிறது. (ஆனால் நிலச் சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டு அதனால் பலனில்லாமல் செய்துவிட்டதே!)

நர்மதை அணைத் திட்டத்தை எதிர்த்து, மலைவாழ் மக்களின் வாழ்வு அடிப்படையும் பண்பாட்டுச் சிறப்பும் குலைந்துவிடும் என்று நீண்ட நெடும் போராட்டம் நடத்திய நந்தன் பகுகுணா என்பவர் உலக வங்கியில் கடன் பெற்று அம்மக்களுக்கு சமவெளியில் மறுவாழ்வுத் திட்டங்களுடன் குடியிருப்புகள் அமைத்துத்தரப்படும் என்ற வாக்குறுதியைப் பெற்றுத் தன் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைக் கைவிட்டார். அந்த அணைத் திட்டமே உலக வங்கிக் கடனில்தான் நிறைவேறுகிறது என்ற உண்மை நம் அறப்போராட்ட வீரரின் முகத்திரையைக் கிழித்துவிட்டது என்பது வேறு கதை!

தமிழக நீர்வள மேலாண்மைத் துறை(நம் நாட்டுப் பாசனத் துறைக்கு அமெரிக்கா சூட்டியுள்ள புதிய பெயர் இது) மேற்கொண்ட ஓர் அணைத் திட்டத்தில் கையகப்படுத்திய நிலங்களின் உடைமையாளர்களுக்கு மறுவாழ்வுக்கு உரிய ஒதுக்கீடு(முன்னொதுக்கம்) செய்யத் தவறிய பொறியாளர்களைத் தண்டிக்குமாறு அத் திட்டத்துக்குக் கடன் வழங்கிய உலக வங்கி நம் தமிழ்நாட்டரசுக்கு ஆணையிட நம் அரசு அவர்களைத் தேடிப்பிடித்துத் தண்டித்தது உண்மை நிகழ்வு. ஆனால் மேலே நாம் விளக்கியுள்ள பற்றாக்குறைப் பணமுறை உத்தியினால் எவரிடமும் கடன் பெறாமலும் யாருக்கும் நம் இறைமையை அடகு வைக்காமலும் பேற்றுக்காலத் துடிப்புகளைத் தணிக்கவும் முடியும், காலநீட்சியைக் குறுக்கவும் முடியும்.

கேள்வி 2: தேசிய முதலாளியர் தமக்கு வேண்டிய உறுதியான ஒரு சந்தைக்காகத் தேசிய உரிமைப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பார்கள் என்றால் அவ்வாறு கிடைக்கும் உரிமைகளின் பயன் அத் தேசியத்தின் சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்குமா?

            இக் கேள்விக்கான விடையில்தான் தேசியப் போராட்டத்தின் இயங்கியலே அடங்கியிருக்கிறது. தேசிய ஒடுக்கலை முதலில் உணரும் வாய்ப்புள்ள அக் குமுகத்தின் மிக மேலடுக்கினரே தேசியப் போராட்டத்தின் விதையை ஊன்றுகின்றனர் என்று மேலே கூறினோம். தமிழகத்தைப் பொறுத்தவரை அதனை வெள்ளையர் வருகைக்கு முன் ஆண்ட தெலுங்கு, கன்னட, மராட்டியர் ஆட்சிகளின் போது இங்கு குடியேறிய பார்ப்பனர்களின் இழிவுபடுத்தலுக்கு எதிராகத் தமிழை உயர்த்திப் பிடிப்பதில் முன்னணியில் நின்றவர்கள் தமிழ்ப் பார்ப்பனர்களே.

            தேசியப் போராட்டத்தின் விதையை ஊன்றும் அம் மேலடுக்கினர் தமக்குக் கீழேயுள்ள மக்கள் விழிப்புற்றுத் திரளத் தொடங்கியதுமே தான் எதிர்த்த எதிரணி அளிக்க ஆயத்தமாக உள்ள சலுகைகளை ஏற்றுக்கொண்டு எதிரணியுடன் சேர்ந்துகொள்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை கீழடுக்கினர் அமைத்த அணியான நயன்மைக் கட்சி அன்றைய நிலையில் விதிவிலக்கு என்னும் அளவுக்கு மிக வலிமையான ஒன்று. இந்தியாவைப் பொறுத்தவரை சாதி அடுக்கும் பொருளியல் அடுக்கும் இணங்கியும் பிணங்கியும் வருபவை என்ற அடிப்படையில் மொழி அடிப்படையில் தமக்கும் பிறமொழிப் பார்ப்பனர்களுக்கும் உற்ற முரண்பாட்டைவிட தமக்கும் தமக்குக் கீழேயுள்ள சாதியினரின் மாபெரும் அறைகூவல் புறக்கணிக்கத்தக்கதல்ல என்பதனால் தமிழ் பேசும் தமிழகப் பார்ப்பனர்கள் எதிரணிக்குள் அடங்கிப்போனார்கள்.

            நயன்மைக் கட்சியின் வரலாறு காந்தியின் மூலம் ஆங்கில அரசு இயக்கிய இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னால் காலங்கடந்த ஒன்றாகிவிட்டது. எனவே அதைச் சார்ந்து நின்ற தமிழகப் பொருளியல் நலக் குழுக்கள் பேரவைக் கட்சியே தங்களுக்குப் பாதுகாப்பான கூடாரம் என்று அங்கு இடம்பெயர்ந்துவிட்டன. குறிப்பாக, தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெருந்தொழில் சாதியரான நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தன்னைப் போலவே பனியா எனப்படும் வாணிகக் குழுவினர் என்ற அடிப்படையில் காந்தி அழைப்பு விடுக்க, அவர்களுடன் கமுக்கமான ஓர் உடன்பாட்டின்படி தங்களைப் பனியாக்களுக்கு அடிப்படுத்திக்கொண்டனர். நயன்மைக் கட்சியிலிருந்து காந்தியின் அரசு பொறுக்கி எடுத்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் பனியாக்களுக்கு இந்தியப் பொருளியல் என்றும் முற்றுரிமை ஆவதற்கான அடிப்படைகளை அமைத்துக்கொடுத்தார். (இதன் தடயங்களை அண்ணாத்துரையின் பணத்தோட்டம் நூலில் காணலாம்.) 

            அடுத்த கட்டமாக நயன்மைக் கட்சி பெரியார் கைகளுக்குள் தன்மான இயக்கமாக மாறியபின் கட்சி முற்றிலும் தன் பிடிக்குள் வரவேண்டும் என்ற மறைமுகமான நோக்கத்துடன் மிகத் திறமையாகக் காய்களை நகர்த்தி நேர்மையும் குமுகியல், பொருளியல் வளர்ச்சி ஆகியவை பற்றி முற்போக்கு நோக்கமும் கொண்ட தனிமங்களை அப்புறப்படுத்தினார். அவரது இயக்கம் உருவாக்கிக் கொடுத்திருக்கும் வறண்ட களத்தில் தப்பித் தவறி உருவாகும் தேசியப் பொருளியல் விசைகளை வல்லரசிய, பொதுமையிய, இந்திய அரசக் கூட்டமைப்பு தொடர்ந்து கருவறுத்து வருகிறது. தமிழ்த் தேசியப் போராட்டம் இன்று பூணூல் அணியாத பார்ப்பனர்களும் நடுவரசுக்கு முன்னுரிமையுடன், குறைந்தது மாநில அரசு அளவிலாவது பணி நிறைவு பெற்ற பின் தனக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வல்லரசு நாடு ஒன்றில் தன் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்காகத் தமிழ்த் தேசியம் பேசுவோரும் ஆன ஒரு கூட்டத்தின் முழக்கமாகத் தேய்ந்து போய்விட்டது. அவர்களோடு கருணாநிதியுடனும் அமெரிக்க உளவு நிறுவனத்திடமும் தொடர்பு வைத்திருப்போர் இரண்டறக் கலந்து நிற்கிறார்கள்.

            காலம் இப்படியே உறைந்துவிடப்போவதில்லை. அது இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழைகளில் மண்ணுள் மறைந்துகிடக்கும் விதைகள் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை இனம்காண நாம் முயலவில்லை என்பதுதான் குறை.

            குத்தகை ஒழிப்புச் சட்டத்தின் பயன்களை உழவனுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகப் பெரும் உடைமையாளர்கள் அடியாள்களைப் பயன்படுத்த முனைந்ததை எதிர்கொள்ள உழவர்கள் ஊருக்கு ஊர் சங்கங்களை அமைத்துள்ளனர். அவற்றின் மூலம் கட்டப் பஞ்சாயம் பேசியும் வட்டிக்கு விட்டும் உண்மையான உழைப்பாலும் தாழ்த்தப்பட்டோரில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பணம் படைத்தோர் உள்ளனர். சராயம், வட்டி என்று பணம் குவித்தோர் பிற்படுத்தப்பட்டோரில் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அயல்பணியாளர் என்று ஒரு பெரும் கூட்டம் பணக்குவியலில் புரள்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் வல்லரசுகள் குவிக்கும் நுகர்வுகளில் கரைத்தது போக வளமனைகளைக் கட்டி மலைகளையும் காடுகளையும் அழிக்கிறது இந்த மொத்தக் கும்பலும். ஏற்கனவே பேயாக வளர்ந்து நிற்கும் மதவெறியில் சமய நிகழ்ச்சிகளில் பணத்தைக் கரைத்து வெறிக்கு வெறியூட்டிக்கொண்டிருக்கிறது. இதன் ஊடே அயல் பணிக்கென்று சென்று உலகை உலுக்கும் பொருளியல் நெருக்கடியால் திரும்ப வந்த கூட்டம் கிடைத்தவை அனைத்தையும் ஊதாரியிலும் வளமனைகளிலும் அழித்துவிட்டதை நினைத்து மனம் குமுறி நிற்கிறது. கிடைத்த அனைத்தையும் விற்று உயர்கல்வி கற்ற மக்கள் வேலை வாய்ப்புகள் வற்றண்டுபோனது கண்டு வெதும்பி நிற்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் நடப்பவை நேற்று வரை தாம் நம்பிவந்த கோட்பாடுகளின் தரம், தாம் பின்தொடர்ந்து சென்ற தலைவர்களின் தகுதி போன்றவை பற்றிய வலிமையான கேள்விகளை எழுப்பி ஆழமான தேடல்களை நோக்கி நேர்மையான நெஞ்சங்களை அலைய வைத்துள்ளன. இவை நேற்றைய மழையில் இன்று வெடித்துநிற்கும் முளைகள். இந்த முளைகளைப் பாதுகாப்பாக வளர்த்தெடுக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தை அதன் அடுத்த கட்டமான பொருளியல் உரிமைப் போராட்டக் கட்டத்தினுள் இட்டுச்செல்ல வேண்டும்.

            இப்போதுதான் நாம் எடுத்துக்கொண்ட அடிப்படைக் கேள்வி வருகிறது. முதலாளியப் புரட்சிக்கான போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து நின்று போராடி வெற்றிபெற்ற பின் முன்பு நடைபெற்றதுபோல் முதலாளிய வகுப்பு தேசிய எதிரிகளுடன் இணக்கம் கண்டு ஏமாற்றினால் என்ன செய்வது?

            அது அவ்வாறு செய்யும் வாய்ப்புகள் மிகுதி என்பதே நம் விடையும்.

            அதைத் தவிர்ப்பது எவ்வாறு?

            பொருளியல் உரிமைப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்பு ஒரு முதலாளிய அமைப்பாக இருக்காது. மார்க்சியத்தை  வளர்ச்சிக் கோட்பாடாக இனங்கண்டு அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களை நோக்கிக் குமுகத்தை இட்டுச்செல்லும் மார்க்சிய இயக்கமாக இருக்கும். அவ்வியக்கம் இந்த செயல் திட்டத்தை அனைவருக்கும் பரப்புரை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும். இயக்கம் தடம் மாறினால் அதனைத் திருத்துவதும் திருந்தாவிட்டால் அதனை அகற்றிவிட்டுத் தகுந்த புதிய ஒன்றை உருவாக்குவதும் மக்கள் திரளின் பொறுப்பு. தலைமை இயக்கம் - மக்கள் திரள் என்பவற்றின் இடையிலான இயங்கியல் உறவுதான் வரலாற்று இயக்கமாக வெளிப்படுகிறது. அந்த உறவு சரியாக அமையாததுதான் தமிழகத்தின் இன்றைய நிலைக்குக் காரணம்.

மீண்டும் இதே தவறு நடந்துவிடுமோ என்று அஞ்சியோ தயங்கியோ நாம் செயலற்று இருக்க முடியாது. அப்படிச் செயலற்று நாம் இருந்தாலும் இயற்கையும் குமுகமும் இடைவிடாமல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். அதனோடு சேர்ந்து நாமும் இயங்கினால்தான் நம் குறிக்கோள்களை எய்தும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இல்லை என்றால் எதிர்காலம் என்றுமே நம் கைகளுக்குக் கிட்டாமல் போய்விடும்.

கேள்வி 3: ஒதுக்கீடு என்பது முற்றிலும் தவறான ஒன்றா?

            ஒதுக்கீடு தவறான ஒன்றல்ல. ஆனால் அது என்றுமே நிலையான ஒரு தீர்வாக அமைய முடியாது என்பதுதான் எமது நிலைப்பாடு.

தமிழகத்தைப் பொறுத்தவரை கல்விக்கும் அரச ஊழியத்துக்கும் திட்டவட்டமான ஒரு ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. அது சாதி அடிப்படையில் அமைந்தது. நாம் மேலே ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் அங்கிருந்த தேவதாசிப் பெண்களைப் பயன்படுத்தி இந்த ஒதுக்கீட்டைத் தக்கவைத்துக்கொண்டனர். மேலே மற்றோரிடத்தில் குறிப்பிட்டுள்ளபடி அம் மேல்மட்டத்தினரிடையில் உருவான முரண்பாடுகளிலிருந்து இன்றைய இந்த ஒதுக்கீட்டு வேண்டுகை வெளிப்பட்டது. அது அந்தக் காலகட்டத்தில் ஐயத்திற்கிடமின்றி மிகப் புரட்சிகரமான ஒன்றே. அந்தக் காலகட்டத்தில் குமுகத்தில் முகிழ்த்து எழுந்த இந்தப் புரட்சிச் சூழல் குமுகத்தின் அனைத்துக் கூறுகளையும் முழுமையாக ஆட்கொண்டது என்பதிலும் ஐயமில்லை.

ஆனால் பின்னாளில், குறிப்பாகக் காமராசர் ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றுக்கும் ஒதுக்கீட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதிதாக நடைமுறைக்கு வந்த ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றத் தேவைப்பட்ட ஊழியர் படை, அதனை உருவாக்கத் தேவையான ஒரு மாபெரும் கல்விக் கட்டமைப்பு என்ற தொடர் தேவைகளால் எட்டாம் வகுப்பை எட்டிய எல்லோருக்கும் ஏதாவது ஓர் அரசு அல்லது அரசுசார் நிறுவன வேலை உறுதி என்பது உறுதியாயிற்று. பதவி உயர்வுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிமூப்புப் பட்டியல் உருவாக்க மட்டுமே ஒதுக்கீட்டு உரிமை அன்றைய நிலையில் பயன்பட்டது,

பார்ப்பனர்களுக்கு எதிராக இவ் வொதுக்கீட்டை முன்னெடுத்துவைத்த பார்ப்பனரல்லா மேற்சாதியினர் உட்பட்ட முற்படுத்தப்பட்டவர்கள் என்ற சாதிக் குழுவினருக்கு இதில் பாதிப்பு இருந்தது உண்மைதான். ஆனால் விரிவடைந்த நடுவரசுப் பணிகளுடன் அரசுடைமை ஆன காப்பீட்டுக் கழகங்கள், வங்கிகள் போன்றவை அவர்களுக்குத் தேவைக்கு மிஞ்சிய வேலைவாய்ப்புகளைக் கொடுத்தன. அரசுப் பணிகளுக்குள்ள குமுக மதிப்பு இல்லை என்றாலும் சம்பளத்தில் சோடையில்லை.

இப்படி என்ன வகை திறமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிறர் பொறாமைப்படத்தக்க ஓர் அரசுப்பணி வாய்ப்பை அந்தக் காலத்தில் பெற்று பணிநிறைவு அடைந்த கூட்டம்தான் இன்று பூணூல் அணியாத பார்ப்பனர்களாகவும் பணிக்காலத்தில் தாம் செய்த ஊழல்கள், தில்லுமுல்லுகளின் விளைவுகளிலிருந்து தானும் தன் பின்னடியினரும் தப்பிப் பிழைக்கவே நாளொரு கோயிலும் பொழுதொரு திருத்தலமுமாக அலைந்தும் கடவுளின் தோற்றரவு என்று கண்டவன் காலிலெல்லாம் விழுந்தும் வரும் தலைமுறையினரின் பண்பாட்டு மட்டத்தைப் படுபள்ளத்தில் தள்ளிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள்தாம் ஒதுக்கீட்டுக் குரலெழுப்பி அரசியல்வாணர்கள் மக்களுக்குச் சாதி வெறியூட்ட வழிவகுத்துக் கொடுப்பவர்கள். 

கல்வி தொடர்பான காமராசரின் நடவடிக்கைகளும் இந்த வெளிச்சத்தில் பார்க்கும் போது ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள எடுக்கப்பட்டவையாகச் சுருங்கிப்போக வாய்ப்புண்டு. இன்று திரும்பிப் பார்க்கும் போது அவரது இயக்கம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கியதல்ல என்பது புலப்படும். பள்ளி தொடங்குவதற்கு ஊரார் தரும் நன்கொடைக்கு ஏற்பவே அரசு பணம் (Matching grant) வழங்கும் என்று அப்போது வகுக்கப்பட்ட திட்டத்துக்கு, ஊரிலுள்ள மேற்குடியினர், மேட்டுக்குடியினர் விரும்பினால் அவ்வூருக்கு ஓர் அரசுப் பள்ளி வரும் என்றுதானே பொருள்?

ஆக, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற குறிக்கோளைத் தமிழக அரசியல் சூழலில் யாரும் என்றும் முன்வைக்கவில்லை.

            ஒதுக்கீட்டுமுறை உயிர்காப்பு மருத்துவம் போன்ற ஒரு நெருக்கடி கால நடவடிக்கை. எப்போதும் கடைப்பிடிக்கும் ஒன்றாக அதை வைத்திருப்பது குமுகத்துக்குப் பெரும் கேடு விளைக்கும். இந்த உண்மையைத் தமிழகத்தின் இன்றைய சூழல் மிகத் தெளிவாக விளக்குகிறது.

            நாம் மேலே விளக்கிய வளமிக்க காலம் ஒரு முடிவுக்கு வந்தது. சாதிப் போட்டிகளும் உருவாயின. பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்குமான முரண்பாடு கல்லூரிகளில் மாணவர்களின் கொலை வரை சென்றது.

            அடுத்த கட்டமாக, ஒதுக்கீட்டை அடிப்படையாக வைத்து அரசியல் தலைவர்களும் உருவாயினர். பெரிய கட்சிகளுடன் கூட்டுவைத்து அமைச்சர் பதவிகளையும் பெற்றனர், பெறுகின்றனர். சிலர் தங்களிடம் இருக்கும் வாக்கு வங்கியை விலைக்கும் விற்கின்றனர்.

            இது இப்படி என்றால் இன்னொரு பக்கம் ஒதுக்கீட்டுக்காகத் தங்கள் சாதியினர் எண்ணிக்கையை மிகுத்துக்காட்டுவதற்காக அயல் மாநிலங்களில் உறவுகளைத் தேடிப்பிடிக்கின்றனர். இதனை முதலில் தொடங்கிவைத்தவர்கள் நாம் அறிந்தவரை கோனார்கள் எனப்படும் ஆயர்கள். இவர்கள் யாதவர்கள் எனப்படும் வட இந்திய மக்கள் குழுவினருடன் தங்களை இணைத்துத் தம் சாதிப்பெயரையும் மாற்றிக்கொண்டார்கள். நாடார்கள் இந்தப் பணியை இப்போது தொடங்கியுள்ளனர். காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர விலங்குத்தனமாக மறுத்ததோடு தமிழகத்துக்கு எதிரான உணர்வைக் கன்னட மக்களின் நெஞ்சங்களில் வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றிய பங்காரப்பாவைத் தம் சாதியைச் சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவதோடு அந்த ஆளைத் தங்கள் சாதி மாநாடுகளில் இருமுறை தலைமைதாங்கவும் வைத்துள்ளனர். பெரியாற்று நீர் தொடர்பாக அரக்க மனத்துடன் செயற்பட்ட அச்சுதானந்தனையும் அதே போல் உரிமை கொண்டாடிப் பெருமைப்படுத்துகின்றனர். இப்படி ஒவ்வோரு சாதியினரையும் சுரணை இழந்து செயற்பட வைத்துள்ளது இந்த ஒதுக்கீட்டு நோய்.

            இவ்வாறு முற்றிலும் மண்ணுணர்வு இழந்து தமிழகத்திலுள்ள தங்கள் வேர்களை மனத்தளவில் தமிழக மக்கள் பறிகொடுத்த இந்த நிகழ்முறைக்கு, ஈழம் தொடர்பான அவர்களது நடத்தையில், அதாவது அவர்களது செயலற்ற நிலைக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இதே மனநிலை தமிழகத்தினுள் ஊடுருவும் அயல்விசைகள் குறித்தும் இன்று செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் வாழும் தமிழக மக்களாகிய பிற சாதி, சமய, மொழிக் குழுவினர்தாம் முதல் எதிரிகள். ஊடுருவும் அயலவர்கள் இந்த முதல் எதிரிகளின் எதிரிகள், எனவே நண்பர்கள். அக முரண்பாடுகள்தாம் முதன்மையானவை என்றுதானே மாவோ கூறியிருக்கிறார். சரிதானே தோழர்களே!

            இவ்வாறு மக்கள் பிளவுண்டு மண்ணுணர்வைப் பறிகொடுத்து நிற்பது ஆட்சியாளர்களுக்கு எத்தனையோ விதங்களில் பயன்படும். மக்கள் பிளவுண்டு தமக்குள் அடித்துக்கொண்டு கிடந்தால்தானே தாங்கள் செய்யும் கயமைகளைக் கண்டுகொள்ளாதது மட்டுமின்றி தங்கள் பிணக்குகளைத் தீர்த்துவைக்கக் கேட்டுக் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்;  மண்ணுணர்வு இழந்து நாட்டை யார் எப்படிக் கொள்ளை அடித்தாலும் அண்டை வீட்டில் வாழும் தமிழ்நாட்டானை அயலவன் அடித்து உதைத்துக் கொன்றாலும் கண்டுகொள்ளாமல் அயல் மண்ணில் தன் உறவினர்களைத் தேடி அலைவார்கள். எனவே கருணாநிதி போன்ற திறமையான அரசியல்வாணர்கள் எத்தனை முடியுமோ அத்தனை வகைகளில் மக்கள் குழுக்கள் இடையில் பகைமையை மூட்டி ஊட்டி வளர்க்கிறார்கள். அத்துடன் அரசிடம் சம்பளம் பெறுவோர்க்கு சராசரி குடிமகன் கனவிலும் நினைக்க முடியாத சம்பளத்தையும் எண்ணற்ற சலுகைகளையும் வழங்கி அரசுப் பணியின், அதன் மூலம் ஒதுக்கீட்டுமுறையின் வலிமையை ஊதிப்பெருக்கி சாதிப் பகைமையை வகைதொகை இன்றி வளர்த்துவைத்துள்ளனர்.  

            அப்படியானால் நம் தலைவர்கள் என்னதான் செய்திருக்க வேண்டும்? இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒதுக்கீட்டு வேண்டுகை வைத்த போதே அல்லது அது ஏற்கப்பட்ட போதே அதன் தற்காலிகத் தன்மையைப் புரிந்துகொண்டு அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற வேண்டுகையையும் அதற்குரிய செயல்திட்டத்தையும் முன்வைத்திருக்க வேண்டும். முதலில் செய்தவர்களுக்காவது இதில் முன் பட்டறிவு இல்லை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் பின்னர் சாதி மோதலாக முற்றி மாணவர்களிடையில் கொலைவெறி ஆன போதாவது அப்போது வாழ்ந்த தலைவர்கள் இது பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். எவரும் அதைச் செய்யவில்லை. அவர்கள் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இவர்களுடைய இலக்கு குமுக மேம்பாடல்ல, நாட்டைக் கொள்ளையடிப்பதும் கொள்ளையடிப்பவர்களோடு பங்குபோட்டுக்கொள்வதும்தாம்.

நாம் வைக்கும் தீர்வு என்ன?
1.  கல்விக்கும் அரசு வேலைவாய்ப்புக்கும் உள்ள தொடர்பை உடைக்க வேண்டும். குடி உரிமை பெறுவதற்கு குறிப்பிட்ட கல்வியைத் தகுதியாக்க வேண்டும்.       
2. எழுத்தறிவுடன் களச்செயலறிவு இணைந்த கல்வி வேண்டும்.
3. கல்வியில் ஒரு குறிப்பிட்ட கட்டம் முடிந்ததும் தனக்கு விருப்பமான ஒரு பணியில் ஒரு குறிப்பிட்ட    காலம் பணியாற்றி அந்தப் பட்டறிவுடன் நுழைவுத் தேர்வு எழுதிக் கல்வியைத் தொடர வேண்டும்.    இவ்வாறு ஒவ்வொரு கல்விக் கட்டமும் பணிக்காலங்களைத் தொடர்பவையாய் இருக்க வேண்டும். இன்று போல் வெறும் எழுத்தறிவை மட்டும் வைத்துக்கொண்டு எந்தச் சான்றிதழோ பட்டயமோ பட்டமோ பெற முடியாத நிலை வேண்டும்.
4. அரசுப் பணிகளுக்கான சம்பளங்களுக்கும் சலுகைகளுக்கும் குமுகத்தில் நடைமுறையில்   இருப்பவற்றுக்கும் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது.
5. அரசின் பொறுப்புகளை இயன்ற வகையில் எல்லாம் குறைத்துவிட்டு மக்களின் பங்களிப்பை மிகுக்க
    வேண்டும். அதன் மூலம் அரசுப்பணிக்கு இருக்கும் மட்டுமீறிய மதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர    வேண்டும்.    மொத்தத்தில் மக்களுக்குக் கல்வி அளிப்பதில் குமுக வருவாயில் ஒரு கணிசமான பகுதியைச் செலவு செய்யத் தயங்கக் கூடாது. மக்களிடையிலுள்ள மிகச் சிறந்த மனித வளத்தைக் கல்வி கற்பிப்பதில் ஈடுபடுத்துவது சிறந்த ஓர் எதிர்காலத்தை அமைப்பதற்குத் தேவை.
6.         முதலாளிய விளைப்புமுறை பணிகளைப் பன்முகப்படுத்தி வேலைவாய்ப்புகளை மிகுத்து மக்களின்     வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். அடிப்படைக் கட்டமைப்புகள், குறிப்பாக கல்வித் துறை, இன்னும்     பல துறைகளிலும் நம் முன்னோரின் எய்தல்கள் பற்றிய ஆய்வுகளுக்கே தேவைப்படும் கணக்கில்லாத மனித வளம் என்று குறைந்தது நூறாண்டுக் காலத்துக்கான வேலைவாய்ப்பை இப்பொழுதே பட்டியலிட முடியும். எனவே தேசிய முதலாளியப் புரட்சிக்கு இட்டுச்செல்லும் பொருளியல் உரிமைப்  போராட்டத்துக்கு இப்பொழுதே ஆயத்தமாவோம்!

0 மறுமொழிகள்: