குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 6
3. விளக்கேந்தியவன்
(தோரா. கி.மு. 50,00, 00)
முன்பு நாம் கண்டது போன்ற ஓர் அடர்ந்த காடு. ஆனால் இங்கு சேறும்
சகதியும் இல்லை. புவி நடுக்கோட்டுக் காடு போன்று
அவ்வளவு மழையில்லாத பகுதி, ஓங்கி வளர்ந்த பெரு மரங்களில் கொடிகள் பின்னிக்
கிடக்கின்றன. வானம் இருண்டு மழை வருவதற்கு அறிகுறிகள் காணப்படுகின்றன. மின்னல் ஒளி
கண்ணைப் பறிக்க இடியோசை காதைத் துளைத்துக்கொண்டிருக்கிறது.
இதோ ஓர் உறுமல். அதைத் தொடர்ந்து ஓர் அலறல் ஒலி நெருங்கி
வருகிறது. இப்போது பின்னங்கால் பிடரியில் பட ஓடிவரும் ஒரு மனித உருவம் தெரிகிறது. அவன் கால்களில் மலம் வடிந்த தடம் காணப்படுகிறது.
நாற்றமும் வீசுகிறது. தொடர்ந்து ஏறக்குறைய 20 பாகங்கள் தொலைவில் ஒரு
பெரும் வேங்கை உறுமலுடன் பாய்ந்து வருகிறது. மாந்தனின் ஓட்டம் தளர்ந்துவிட்டது.
நெடுந்தொலைவு ஓடியிருப்பான் போலும். இன்னும் இரண்டொரு நொடிகளில் வேங்கைக்கு
இரையாகப் போகிறான். ஆனால்...
திடீரென்று இதுவரை இல்லாத பெரும் ஒளியுடன் ஒரு மின்னலும் கிட்டத்தட்ட
அதே நேரத்தில் தலைமீது வானமே இடிந்து விழுவது போன்ற பேரோசையுடன் இடி மண்ணை முட்டுகின்றது. அம் மின்னலும்
இடி முழக்கமும் வேங்கையின் விரைவைச் சற்று தேக்குகின்றன. அதே
நேரத்தில் ஓடிக்கொண்டிருந்த மாந்தனின் தலைக்கு மேல் வளர்ந்து படர்ந்திருந்த ஒரு பெரு மரக்கிளை சடசடவென ஒடிந்து அவன் மீது விழுந்து அவனை மூடுகிறது.
கிளையின் ஒரு பக்கத்தில் நெருப்புப் பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது.
இடி இம் மரத்தின் மீதுதான் விழுந்தது போலும்!
பற்றி எரியும் கிளையின் அருகிலேயே நாம் முன்பு பார்த்த
மனிதன் கிடக்கிறான். நல்ல வேளை, அவன் உடல் மீது பெருங்கிளை ஒன்றும் விழவில்லை.
எனவே அவனுக்கு ஊறெதுவும் நேரவில்லை.
துரத்தி வந்த வேங்கை நெருப்பைக் கண்டதும் பின்வாங்கி
நின்றுகொண்டிருக்கிறது. கிளையினடியில் அகப்பட்ட மனிதன் மெல்ல எழுந்து அமர்கிறான்.
வேங்கை நிற்கும் பக்கம் பார்க்கிறான். கிளையை விட்டு வெளியே வந்தால் புலிக்கு
இரையாக வேண்டியதுதான். என்ன செய்வது? தன் கையைப் பார்க்கிறான். தன் ஒரு கை
நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் ஒரு சிறு கிளையின் எரியாத முனையைப் பிடித்துக்
கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அப்படியானால்... அப்படியானால்? நெருப்பு சுடாமலே
சுள்ளியைப் பிடித்து நெருப்பைக் கொண்டுசெல்லலாம்! புலியையும் பிற விலங்குகளையும் போலவே
நெருப்பென்றால் இதுவரை ஓடி ஒளிந்த மனிதன் இப்பொழுது புத்தறிவு பெற்றுவிட்டான்!
பெரும் கிளை வீழ்ந்த போது தாய்க்கிளையிலிருந்து ஏற்கனவே பெயர்ந்திருந்த அக் கிளையைக்
கையில் எளிதாய்ப் பெயர்த்தெடுத்துக்கொண்டு கிளையினடியிலிருந்து தயக்கத்துடனும்
நடுக்கத்துடனும் புலி நின்றிருந்த திசையைப் பார்த்துக் கொண்டே வெளியே மெல்ல வந்து
எழுந்து நிற்கிறான். புலியை நோக்கி நெருப்பையும் உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு நிற்பவன் போன்று
உடல் நடுங்க நின்றுகொண்டிருக்கிறான். மனிதன் கையில் நெருப்புடன் தன்னை நோக்கி
நிற்பதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நிற்கிறது புலி. பின்னர் மெதுவான ஓர்
உறுமலுடன் பின்வாங்கிச் செல்கின்றது. திரும்பிக் காட்டினுள் ஓடி மறைகிறது.
புலி காட்டினுள் மறைந்ததும் மனிதன் ஒரு மகிழ்ச்சிக்
கூச்சலுடன் துள்ளுகிறான். திரும்பி ஓடுகிறான். அதோ அவனைப் போன்ற மாந்தக் கூட்டம்,
ஒரு குகை வாயிலில் குழுமியிருக்கிறது. இவன் குரலைக் கேட்டுத் திரும்பியவர்கள் அவன்
கையில் நெருப்புடன் நிற்பதைக் கண்டு அச்சத்தாலும் வியப்பாலும் வாயைப் பிளந்து
நிற்கிறார்கள். அவர்களுக்கு வாய் ஒலிகளாலும் சாடைகளாலும் நடந்தவற்றை
விளக்குகிறான். வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த அவர்கள் அவனுடன் சேர்ந்து அவனைச்
சுற்றிச் சுற்றி வந்து ஆடுகிறார்கள். ஒரு புது ஏடு மாந்த வாழ்வில் புரட்டப்பட்டு
விட்டது.
மாந்த நாகரிகம் அவன் நெருப்பைக் கையாளத் தொடங்கிய பின்னரே
தொடங்கியது என்பது அறிஞர் கருத்து. ஆனால் நெருப்பு மாந்த வாழ்வில் எத்தகைய
மாற்றத்தை உண்டாக்கியது என்பது குறித்துத் தெளிவாக யாரும் கூறியதாகத் தெரியவில்லை.
நாற்கால் உயிரியாயிருந்த மாந்தன் பாம்பைப் பார்த்து
நிமிர்ந்து நிற்கத் தொடங்கிய பின்னர் விலங்குகளிடமிருந்து அதிக விரைவுடன் ஓடித்
தப்பித்துக் கொள்ள முடிந்தது. இருப்பினும் அவற்றைத் துரத்தத்தக்க ஒரு கருவி
இன்னும் கிடைக்கவில்லை. இன்னும் பெற்ற குழந்தைகளைப் போட்டுவிட்டுத் தாயும்
முதியோரையும் சூலிகளையும் விட்டுவிட்டு மற்றையோர் ஓடித் தப்பும் கையறுநிலைதான் இருந்தது. இன்று எந்த
விலங்கையும் தடுத்து நிறுத்தித் துரத்தத்தக்க ஓர் அரிய கருவி கிடைத்துவிட்டது.
உலகிலுள்ள அனைத்து உயிரிகளும் (அகல் விளக்கைச் சுற்றும் விட்டில் தவிர)
நெருப்பைக் கண்டு அஞ்சி ஓடும். வேட்டைக்காரரும் காட்டில் இரவில்
தங்க நேரும் பிறரும் இதனை நன்கறிவர். தம் அருகில் ஒரு நெருப்பு வளர்த்துக் காவல்
வைத்துவிட்டு அமைதியாக உறங்குவர்.
பாம்பினிடமிருந்து மாந்தன் அறிவு பெற்ற நிகழ்ச்சியை
விரித்துக் கூறும் யூதர் மறை நெருப்பைக் கைப்பற்றியது குறித்து எதுவும் கூறவில்லை.
ஆயின் கிரேக்கர்களிடம் ஒரு கதை நிலவுகிறது.
பிரமத்தியசு என்பவன் வானுலகத்தினின்று நெருப்பைத் திருடிக்கொண்டு வந்து மாந்தர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டானாம். எனவே கடவுளர் சினம் கொண்டு அவனை ஒரு பாறையில் பிணைத்துக் கழுகுகளைக் கொண்டு கொத்த வைத்துத் துன்புறுத்தினராம். பின்னர் கடவுளர்களில் சிலர் அவனுக்காகப் பரிந்துரைத்த பின்னர் அவன் விடுவிக்கப்பட்டானாம்.
பிரமத்தியசு என்பவன் வானுலகத்தினின்று நெருப்பைத் திருடிக்கொண்டு வந்து மாந்தர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டானாம். எனவே கடவுளர் சினம் கொண்டு அவனை ஒரு பாறையில் பிணைத்துக் கழுகுகளைக் கொண்டு கொத்த வைத்துத் துன்புறுத்தினராம். பின்னர் கடவுளர்களில் சிலர் அவனுக்காகப் பரிந்துரைத்த பின்னர் அவன் விடுவிக்கப்பட்டானாம்.
பிரமத்தியசு என்பதற்கும் பரமசிவன் என்பதற்கும் ஒலி ஒற்றுமை
இருக்கிறது. கையில் நெருப்பை ஏந்தியிருக்கும் பரமசிவனை நெருப்பின் கையாளலைக்
கண்டுபிடித்ததற்கு நாம் சான்றாக வைத்துள்ளோம். இதிலிருந்து தெரிவது ஆதனின் பின் தோன்றிய
யூதர்களில் முன்னோர் நெருப்பு கண்டுபிடித்த பரமசிவனின் காலத்துக்கு முன்னமேயே தம்
பிறந்த மண்ணிலிருந்து பிரிந்து சென்று விட்டனர் என்பதேயாம். நெருப்பின் கையாளலை
அவர்கள் பிறர் மூலமாகவே கற்றுக்கொண்டதால், அதன் கண்டு பிடிப்புக்குரிய சேதி
ஒன்றும் அவர்கள் நூலில் இல்லை. ஆனால்
அவர்களது கடவுளுக்கான படையல்கள் நெருப்பிலிட்டு எரிப்பதன் மூலமே நிறைவேற்றப்பட்டன.
இனி நெருப்பின் கையாளல் மாந்த வாழ்வில் விளைத்த
மாற்றங்களைப் பார்ப்போம். விலங்குகளின் அச்சம் ஒருவாறு குறைந்தது. உறைவிடங்களில்
நெருப்பை அணையாமல் வளர்த்து வந்தால் விலங்குகள் அணுகா. இதனால் குகைகளில் வாழ்ந்து
வந்த மாந்தன் வெளியிலும் வதியத் தொடங்கினான். இவ்வாறு வதியும் இடங்களில் அவன்
இரவும் பகலும் நெருப்பை அணையாமல் ஒம்பி வந்தான். இவ்வாறு நெருப்போம்பல் பிறந்தது.
நாகரிக முதிர்ச்சியடைந்த ஒரு கூட்டத்திலிருந்து நெருப்பு உண்டாக்குவதற்குக்
கற்றுக் கொண்டவர்கள் தவிர எந்த மாந்தக் கூட்டமும் நெருப்போம்பல் எனும் கட்டத்தைத்
தாண்டாமல் நாகரிகத்தை
எய்திருக்க முடியாது. அவ்வாறாயின், நம்மிடம் நெருப்போம்பும் வழக்கம் இருந்ததா?
அதற்குச் சான்றாக அதன் சாயல்கள் ஏதாவது இன்று உள்ளனவா? இதற்கு விடையாக, ‘ஆம்’ என்று துணிந்து கூறலாம்.
முதலாவதாக நம் நாட்டில் இன்றும் பார்ப்பனர்களால்
செய்யப்படும் தீ வேள்விகள் ஒரு சான்று. இதுவன்றி இடைக்காலம் வரை ஊருக்கு ஊர் உள்ள
கோவில்களில் நந்தா[1]
விளக்கு என்ற ஒன்று அல்லும் பகலும் அணையாமல் பேணப்பட்டு வந்துள்ளது. அதை எரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்யைப் பெற ஒவ்வொரு கோவிலுக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டு அதன்
வருமானத்திலிருந்து எண்ணெய் பெறப்பட்டது. அது மட்டுமின்றி ஊர்ப் பொதுமன்றில் வரும்
சிறு வழக்குகளில் தண்டனையடைவோரிடம் நந்தா விளக்குக்கு எண்ணெய் தண்டப்பட்டது.
இவை எல்லாவற்றையும் விட அதிகச் சிறப்புடைய சான்று எந்த விழாவானாலும்
புதிதாக மின் விளக்கு ஏற்றும் விழாவானாலும் முதலில் ஒரு குத்து விளக்கை ஏற்றி
வைப்பது இன்றுவரை தொடர்ந்து வரும் பழக்கமாகும். இதைக் கொண்டு இன்றுவரை
நெருப்போம்பும் பழக்கத்தின் சாயல் நம்மிடம் தொடர்ந்து வந்துள்ளதைத் தெளியலாம்.
மேலும் இன்றும் ஊர்ப்புற விழாக்களில் தீச்சட்டியும் பந்தமும் ஏந்தித்
தெய்வமாடுவதையும் மணவிழாக்களில் தீ வளர்ப்பதையும் விளக்கேந்துவதையும் புதுமனை
புகுவிழாவில் அடுப்பேற்றிப் பால் காய்ச்சுவதையும்[2]
சேர்க்கலாம்.
விலங்கு நிலையிலிருந்து நிமிர்ந்து நின்ற மாந்தன்
நெருப்பைக் கையாண்டு விலங்குகளின் அச்சத்திலிருந்து மீண்ட அவன் வரலாற்றின்
இரண்டாம் கட்டத்தைக் கண்டோம். அடுத்த கட்டத்தைக் காண்போமா?
பிற்சேர்க்கை:
நெருப்பை
மனிதன் கையாளத் தொடங்கி 4 இலக்கம் ஆண்டுகள் ஆகின்றனவாம். ஆனால் முப்பதினாயிரம் ஆண்டுகளாகத்தான்
அதைச் சமையலுக்குப் பயன்படுத்துகிறானாம்[3]. அதற்கு
முற்பட்ட மூன்றிலக்கத்து எழுபதினாயிரம் ஆண்டுகளும் அவன் நெருப்பை எதற்குப் பயன்படுத்தினான்
என்ற கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.
இந்திய விடுதலைப் போர் மறவர் லோகமானிய
திலகர், தீ வேள்வி ஆரியர்க்குரியது என்பதை அடிப்படையாகக் கொண்டு நெருப்போம்பல் அவர்களிடையில்
எவ்வாறு உருவாகியிருக்கும் என்ற கேள்வியை எழுப்பி அவர்கள் புவியின் வடமுனையிலுள்ள பனி
மண்டலத்திலிருந்து வந்தவர்களாயிருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
ஆனால் இன்றும் வட முனையில் பனி மண்டலத்தில்
வாழும் மக்கள் குளிரிலிருந்து பாதுகாப்புக்காக பனிக் கட்டியைக் குடைந்து உருவாக்கிய
இருப்பிடங்களில் சீல் மீன் போன்றவற்றின் கொழுப்பில் விளக்குகளையும் அடுப்பையும் எரிக்கின்றனர்.
அத்துடன் நாள் முழுவதும் தீ வளர்த்து ஓம்பும் அளவுக்குப் பனி மண்டலத்தில் விறகு தரும்
நிலைத்திணைகள் கிடையா.
அது மட்டுமல்ல “ஆரிய இன”க் கோட்பாடு கூறுவது
போல் பெரும் எண்ணிக்கையில் படையெடுத்தோ இடம் பெயர்ந்தோ வரும் அளவில் மக்களை வளர்த்தெடுக்கும்
வளமுடையதல்ல புவிமுனைப் பகுதிகள்.
அதுவுமின்றி நெருப்பு இயற்கையில் உருவாவதை, அதாவது மின்னல் தாக்கியோ மரங்கள் ஒன்றோடொன்று உரசியோ
இயற்கையாகத் தீப்பிடிப்பதற்கு வேண்டிய அடர்ந்த காடுகளும் பணி மண்டலத்தில் கிடையா. எனவே
நெருப்பை இயற்கையில் உருவாகி உயர்ந்த மரங்களையும் சருகுகளையும் எரித்து நீடித்து நிற்பதைக்
கண்டு அதனை நாள் முழுவதும் ஓம்பும் வகையை மென்காடுகள் உள்ள வெப்ப மண்டலங்களிலேயே மனிதன்
உருவாக்கியிருக்க முடியும்.
[1].நததம் என்ற சொல்லுக்கு இரவு, இருள் என்ற பொருள்கள்
உள்ளன. நந்தாவிளக்கு என்பதற்கு அணையா விளக்கு
என்பது பொருள்.
[2]
புது வீடு கட்டிப் பால் காய்ச்சுவதற்கான அடுப்பைப்
பழைய வீட்டிலிருந்து கொண்டுவரும் அகல் விளக்கிலிருந்து ஏற்றும் வழக்கம் சில
ஆண்டுகளுக்கு முன் வரை குமரி மாவட்டத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக