19.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 20

17. குமரனே! அம்மண முதல்வனே!
 (தோரா. தி.மு. 11,500 - 7000)
            நாம் இப்போது ஒரு மலை மீது ஏறப்போகிறோம். முன்பு பார்த்தவற்றைப் போன்று மரங்களடர்ந்த மலையன்று இது. ஆங்காங்கே குத்துச் செடிகள்தான் மிகுந்திருக்கும். எனவே பாறையிலிருந்து அனல் வீசும். இதோ மலை உச்சிக்கு வந்துவிட்டோம். மலைக்குப் பொதினி மலை என்று பெயர். பார்த்தீர்களா! ஒரு கல்லால மரத்தைத் தவிர வேறு பெருமரம் ஒன்றுகூட இல்லை. மலையும் அதிக உயரம் இல்லை. கீழே சம நிலத்திலும் அதிக மரங்கள் இல்லை. ஓரளவு வறண்ட நிலப்பரப்புதான். இங்கு நாம் காணப்போவதென்ன?

            அதோ அந்தக் கல்லால மரத்தினடியில் பலர் அமர்ந்திருப்பது தெரிகிறது. அருகில் சென்று பார்ப்போமா? அதோ மரத்தடியில் ஒருவர் சப்பமிட்டு அமர்ந்திருக்கிறார். அவர் தோற்றம் புதுமையாக இருக்கிறது. தலை மயிரையும் முகத்தையும் முற்ற மழித்திருக்கிறார். உடலில் ஆடையொன்றும் அணியவில்லை. அருகில் ஒரு தடி கிடக்கிறது. இளமையாய்த்தான் காணப்படுகிறார். அவர் எதிரிலிருப்பவர்களைப் பார்த்துப் பேசுகிறார்:

            நண்பர்களே! உலக வாழ்வில் பொருள் எதுவும் இல்லை. மண், விண், வளி, நீர், தீ ஆகியவற்றின் சேர்க்கையால் பிறக்கிறோம். பொய்யானவற்றையெல்லாம் உண்மையென்று நம்பி வாணாள் முழுவதும் நாய் போல் அலைகிறோம். இறுதியில் அந்த மண்ணோடும் விண்ணோடும் கலந்து விடுகிறோம். இடையில் கண்டதெல்லாம் மாயை தானே! இடையில் உறவென்றும் பற்றென்றும் எண்ணி மனம் நொந்து வாடுகிறோம். மனைவியென்றும் மக்களென்றும் பற்றுவைத்து அவர்களுக்காகக் கொலை, களவு, வஞ்சகம், சூது செய்து பொருளீட்டுகிறோம். இறுதியில் நமக்கு உண்மையில் எவரும் துணை இல்லை. இந்த உண்மையை நான் கண்டுகொண்டேன். நான் கண்டுகொண்ட இந்த உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். உண்மை உணர்ந்தவர்கள் இந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துச்சொல்ல என்னோடு ஒன்றுசேருங்கள். உலகப் பற்றைத் துறந்து உறவையும் சுற்றத்தையும் துறந்துவிட்டதற்கு அறிகுறியாக முடியை மழித்துவிட்டு உடையையும் கழித்துவிடுங்கள். நாம் உலகத்தாரிடம் சென்று வாழ்வின் பொய்ம்மையையும் நிலையாமையையும் மனைவி மக்களின் பயனின்மையையும் மக்களுக்கு எடுத்துக்கூறி நோயாலும் அறியாமையாலும் உழலும் மக்களுக்குத் தொண்டாற்றிக் கல்வியும் புகட்டுவோம். பயனற்றுப் போகும் இவ் வாழ்வை மன்பதையின் நிலையான தொண்டில் செலவிடுவோம்!

            துறவி பேசி முடித்ததும் எழுகிறார். மக்களும் எழுகிறார்கள. மூன்று பேர் முன்வந்து துறவியின் கால்களில் விழுகிறார்கள். ஒருவன் கூறுகிறான்: பெரியீர்! தங்கள் அறிவுரை எங்களை ஆட்கொண்டது. எங்களைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். துறவி அவர்களை அழைத்துக்கொண்டு மரத்தின் மறுபுறம் சென்று அவர்களின் தலைகளை மழிக்கத் தொடங்குகிறார். மற்றையோரெல்லாம் மலையைவிட்டுக் கீழே இறங்கத் தொடங்குகிறார்கள். நாமும் கீழே போகலாம். இதோ இருவர் ஏதோ கமுக்கமாகப் பேசிக்கொண்டு போகிறார்களே அவர்களை நெருங்கி அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்போம். மாவலி, கேட்டாயா? என்ன உண்மையான உரை. என் உள்ளத்தை அப்படியே ஆட்கொண்டுவிட்டது. நீயும் என்னுடன் வராமல் இருந்து என் மனைவியின் மீதுள்ள அடங்காக் காமமும் இல்லையெனில் நானும் துறவியோடு நின்றிருப்பேன்.

            நல்ல வேளை சோலையப்பா! ஒவ்வொருவரும் சொல்வது ஒவ்வொரு வேளை நன்றாய்த்தான் இருக்கும். சரியாகத்தான் தோன்றும். நம் சூழ்நிலைக்கும் தன்மைக்கும் தக்கவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும்.

            ஏன் மாவலி, இவரைப் பார்ப்போமென்று அழைத்து வந்தாயே, இவரை உனக்குத் தெரியுமா?

            இல்லை. இதற்கு முன் பார்தத்தில்லை, கல்லூரிலிருக்கும் அக்கை வீட்டுக்குப் போயிருந்த போது அவளிடமிருந்து அறிந்துகொண்டேன். அவள் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி இவர்கள் வீடு இருக்கிறது. என் அக்கை கணவன் போலவே இவன் குடும்பத்தினரும் வாணிகர்கள். இவரும் இவர் தமையனும் சிறுவர்களாக இருக்கும் போதே இவர்கள் தாயார் வேறு ஆடவரோடிருந்தாள் என்று கண்டு அவளை இவர்களின் தந்தை கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார். அண்டையாரின் உதவியுடன் மிகவும் துன்பத்திற்கிடையில் இவரின் தமையன் தம்பியையும் வளர்த்துத் தானும் வாணிகத்தில் ஈடுபட்டுப் பொருள் ஈட்டித் திருமணம் செய்துகொண்டு மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானார். இந் நிலையில் தம்பியையும் அழைத்துக்கொண்டு வாணிகத்திற்காக வெளியூர் சென்று திரும்பியவர் தன் மனைவி வேறொருவனுடன் குலவிக் கொண்டிருப்பதைக் கண்டு வெகுண்டு மனைவியையும் அவள் காதலனையும் குழந்தைகளையும் கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றார். அதே அரிவாளால் தன் கழுத்தையும் அரிந்துகொண்டு தானும் அவ்விடத்திலேயே மாண்டார்.

            இவை அனைத்தும் இளையவனின் கண் முன்னாலேயே நடைபெற்றது. தன் பெற்றோரின் கதை ஏற்கனவே ஓரளவு மனதில் உறைந்ததினால் தன் தமையன், கொழுந்தி, குழந்தைகள் வாழ்வும் கொடுமையாக முடிந்ததைக் கண்டதும் ஊரைவிட்டே வெளியேறியவன்தான் இரண்டாண்டுகளுக்குப் பின் இவ்வடிவில் தோன்றியிருக்கிறான். இன்று வரை மணமும் முடிக்காமல் மணம் செய்வதை எதிர்த்துப் பேசி வருவதால் குமரன் என்று இவனை அழைக்கிறார்கள் மக்கள்.

            நண்பா மாவலி! உன்னிடம் சொல்லாமல் வேறு  யாரிடம் சொல்வேன். வாணிகர்க்குத்தான் பெரும்பாலும் இச் சிக்கல் தோன்றுகிறது. நன்கு பொருளீட்டலாம் என்று நினைத்து வாணிகத்தில் ஈடுபடுகிறோம். வாணிகன் என்று சொன்னால் நிறைய பொருளும் கொடுத்து வாணிகர்கள் நமக்குப் பெண் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் வெளியே செல்லும் போது ஊரிலுள்ள விடலைகளும் நம் மனைவியரும் ஒருவரையொருவர் கவர்ந்து விடுகிறார்கள். நம் தேட்டத்தில் தம் இன்பத்தைப் பெருக்குகிறார்கள். என் முதல் மனைவியின் கதைதான் தெரியுமே. அவள் நடந்தை கெட்டதால் விலக்கி வைத்தேன். அவள் கல்லூரில் விலைமகளாக வாழ்கிறாள். அடுத்து வந்த இவள் மேலும் எனக்கு ஐயம் தோன்றுகிறது. எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டதப்பா அதனால்தான் துறவியோடு போய்விடும் எண்ணமே தோன்றியது. நீ கொடுத்துவைத்தவன். உன் மனைவி பிற ஆடவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

            அதில்தான் பெரும் கமுக்கம் இருக்கிறது சோலையப்பா! பெண்களுக்கு இன்பம் கொடுப்பது ஒரு பெரும் கலை. நான் வாணிகத்தில் ஈடுபடும் முன் ஊரில் வேலையின்றிச் சுற்றித் திரிந்தபோது பல பெண்களிடத்தில் இன்பம் கண்டிருக்கிறேன். அவர்கள் கூடலின் போது கூறுவனவற்றிலிருந்தும் நானாக அறிந்தவற்றிலிருந்தும் இவற்றைக் கூறுகிறேன். பெண்களின் உடலில் சில குறிப்பிட்ட உறுப்புகளில் விளையாடினால் இன்ப உணர்வு விரைந்து பெருகும். அவ்வாறு இன்ப உணர்வை மிகுத்துவிட்டுக் கலவியில் ஈடுபட்டால் பெண்கள் கலவியின் உயர்ந்த இன்பத்தை அடைவார்கள். அவ்வாறு ஓர் ஆடவனிடம் முழு இன்பம் அடைந்த பெண்கள் பெரும்பாலும் பிற ஆடவரை நாடுவதில்லை. அதோ என் வீடு வந்துவிட்டது. இது பற்றிப் பின்னர் விளக்கமாகக் கூறுகிறேன், வரட்டுமா?

            இருவரும் போய்விட்டார்கள். அப்பப்பா! என்ன வெய்யில்? அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாறலாம் வாருங்கள். அட்டா வெயிலின் கொடுமை நிழலில் தெரியும். இதென்ன அந்த வீட்டிலிருந்து வரும் ஓசை யென்ன? பொத்துப் பொத்தென்று யாரையோ அடிக்கும் ஒலியல்லவா?

அடேய்! அடேய்! ஏண்டா அவளைப் போட்டு இப்படி அடிக்கிறாய்?

            அவள் செய்ததற்கு அடிக்காமல் பின்னே என்ன கொஞ்சுவா சொல்கிறாய்?
       
            அப்படி என்னடா செய்துவிட்டாள்?

            நூலுக்குச் சாயங்காய்ச்சச் சொன்னால் அதை அடுப்பில் கருகவைத்து அத்தனை நூலும் வீணாய்ப் போயிற்று. பனை ஏறியின் மகளுக்குக் கருப்பட்டி காய்ச்சத்தானே தெரியும்?

            நீதானேடா அவளை விடாப்பிடியாகக் கூட்டி வந்தாய். இப்போதுதான் அறிவு வந்ததோ? இப்படித்தான் உன் அண்ணனும் பொற்கொல்லன் மகளைக் கூட்டி வந்தான். அவளோ அத்தே எனக்குச் சிரட்டை சுடத் தெரியும், உமிவைத்து உலை ஊதித் தரத் தெரியும். சாயங்காய்ச்சவும் நூல் சுற்றவும் நெய்யவும் நீங்கள்தான் கற்றுத்தர வேண்டு்ம் என்று கூறிவிட்டாள். அவள் கற்றுக்கொள்ளுமுன் அவள் உன் அண்ணனிடம் பட்ட அடி! உன்னிடம் வாங்கிய ஏச்சு! அது முடிவதற்குள் இவளைக் கூட்டி வந்துவிட்டாய் நீ! இனி இவளுக்குக் கற்றுத்தர வேண்டும். உன் தங்கை ஒரு கருமானுடன் சென்றாள். அங்கே உலை ஊதத் தெரியாமலும் சுடும் இரும்பை மிதித்தும் கையிலெடுத்தும் புண்ணும் நோவுமாக அவள் கணவனிடம் அடிபட்டுக்கொண்டிருக்கிறாள். இனி உன் தம்பி ஒரு நெய்வோர் குடும்பத்துப் பெண்ணைக் கொண்டு வராமல் வேறு பெண்ணைக் கொண்டுவந்தால் இங்கிருந்து துரத்திடவிட வேண்டும்.

            அம்மா! நீ சொல்லாவிட்டாலும் நான் நெய்வோர் வீட்டுப் பெண்ணைத்தான் கூட்டிவரப் போகிறேன். அணணன்களும் கொழுந்திகளும் நீயும் தங்கையும் படுவதைப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். இளைய தங்கையையும் நெய்வோன் ஒருவனைத் தவிர வேறொரு வரையும் மணக்க விடக்கூடாது.

            அத்தே! சாப்பிடலாமே வாருங்கள். கொழுந்தனும் வா! அத்தான் வாருங்கள்.

            இன்று கண்டவற்றைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? முதலில் அந்த மொட்டைத் துறவியை எடுத்துக் கொள்வோம். மொட்டையடித்து, தாழ்ச்சீலையணிந்து பழனியாண்டி என்று வழங்கும் தெய்வத்துக்கு இப்போது குழந்தை வடிவம் கொடுத்து மாம்பழம் குறித்துத் தந்தையாகிய சிவன் மீது ஏற்பட்ட சினமே அவனது ஆண்டிக் கோலத்தின் காரணம் எனும் கதைக்குப் பொருந்த பொதினி என்ற மலையின் பெயரைப் பழநி என மாற்றிக்கொண்டனர். குமரி என்ற சொல் எவ்வாறு திருமணமாகாக் கன்னியைக் குறிக்குமோ அவ்வாறே குமரன் என்ற சொல்லும் திருமணமாகாத ஆடவனைக் குறிக்கும். வட நாட்டில் முருகனைத் திருமணமாகாத குமரனாகவே வணங்கி வருகின்றனர்
.
            தந்தையாகிய சிவனுக்குத் தெரியாததும் பிரமனுக்கு விளங்காததுமான ஒரு மெய்ம்மத்தைக் கூறினான் சிறுவன் குமரன் என்பது தொன்மம். அம் மெய்ம்மத்தைப் பிரணவம் என்று கூறுவர். எனவே முன்பில்லாத ஒன்றைக் கூறினான் அவன் என்பதும் அதனால் அவனுக்கும் பழைமையோருக்கும் முரண்பாடும் சச்சரவும் எழுந்தது என்பதும் விளங்கும். புதிதாக அவன் பரப்பிய கொள்கை துறவாகவே இருக்க வேண்டும். அதையே பொதினி ஆண்டி உருவம் குறிக்கிது. அலங்கோலத்தைக் ‘கந்தர் கோலம் என்பது உலக வழக்கு.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான பழனியில் ஆண்டி வடிவத்திலிருக்கும் கடவுள் பிறந்த மேனியராகத் திரிந்த அ(ம்)மணர் என்ற சொல் திரிந்து அம்மணர்கள் என்று தமிழ் மக்கள் அழைத்த சமயத்தின் முன்னவர் ஒருவரின் நினைவாக அமைந்தது என்பது எம் கருத்து. பொதினி என்ற பெயரை பழநி என்று திரித்து அதற்கேற்ப ஒரு கதையையும் கட்டிவிட்டிருக்கின்றனர் பூசகத் தொழில்வல்லோர். அந்த மலையிலிருந்து பாயும் ஆற்றுக்கு பழனியாறு என்று இருந்த பெயர் பழ்னியாறு என்றும் பின்னர் பன்றியாறாகி நம் சமற்கிருதக் கிறுக்கர்கள் அதற்கு வராக நதி என்று பெயர் வைத்துள்ளனர்.

            ஆனால் நாம் மேலே கண்ட துறவி வாழ்ந்தது இன்றைய தமிழகத்தினுள் இல்லை, கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

            அடுத்து, கலவிக் கலை வளர்ச்சி. பாலியல் ஆராய்ச்சியில் மிகப் பழமையானது இந்தியா. தமிழர்கள் அதில் முன்பே முன்னேறி இருக்க வேண்டும். அதற்கான சாயல்கள் தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றன. ஆயின் சமற்கிருதத்தில் போன்று முறையான அறிவியல் நூலாக இன்று இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்று வரையறுத்துப் பெண்ணை அடிமையாக்கிய பின்னரும் பெண்களை முழுவதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போகவே, புதுப்புது உத்திகளைக் கடைப்பிடித்துப் பெண்களுக்கு முழு இன்பம் கொடுப்பதன் மூலம் கணவர்கள் அவர்களைப் புறம் போகாமல் தடுக்க முடியும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் காம நூல்களும் கலவிக் கலையும் வளர்ந்திருக்கின்றன. காமசூத்திரம் இந்த உண்மையைப் பல இடங்களில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உணர்த்துகிறது. இந்தியக் காமநூலின் பண்டை நாள் வளர்ச்சி மேலையரை வியப்படைய வைத்திருக்கிறது.

            சிறப்பாக, இன்ப நிலைகளை அறிவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தி குறிப்பிடத்தக்கது. இதன்படி பெண்ணின் ஒரு காலிலிருந்து தொடங்கி உச்சிவரை சென்று மறுகால் வரை இன்ப நிலைகளை 30ஆக வகுத்திருக்கிறார்கள். பெண்ணின் ஒரு மாதவிடாய்க்கும் அடுத்த மாதவிடாய்க்கும் இடையிலுள்ள காலத்தை (சராசரி 28 நாட்கள்) முப்பதாக வகுத்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு திதி எனப் பெயரிட்டிருக்கிறார்கள். (மதிமாதம்மாதர் உறவு நன்கு விளங்குகிறதா?) ஒவ்வொரு திதிக்கும் உறுப்புகளுள் ஒன்றிலிருந்து அடுத்ததற்கு இன்ப நிலை பெயரும். அந்த அந்தத் திதியை அறிந்து அதற்குரிய இன்பநிலையில் விளையாடினால் பெண்ணின் இன்ப உணர்வு விரைந்து பொங்கும். இன்ப நிலையிலிருந்து ஆறாவது இடத்தில் இன்ப உணர்வுக்கு எதிர்வான நிலை இருக்கும்.

            இக் கருத்தை மேனாட்டுப் பாலியல் வல்லோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயின், இன்று அதே உண்மையை வேறொரு வகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு உயிர்த்தாளம்(biorhythm) என்று பெயர். இது உடல் தாளம், உணர்வுத் தாளம், அறிவுத் தாளம் (physical, senstitive and intelligence) என்று மூன்று வகைப்படும். இவை முறையே 23, 28,33 நாட்கள் சுழற்சியைக் கொண்டவை. இதில் நடுவதாகிய உணர்வுத்தாளமும் இன்ப நிலைகள் எனப்படும் நம் பாலியல் திதி முறையும் ஒன்றல்லவா? ஆனால் இதை யாரும் அறிந்து கூறியதாகக் தெரியவில்லை. (இப்பொழுது உருசியாவில் ஓட்டுநர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் உயிர்தாளப் பட்டயங்கள் பேணப்பட்டு வருகின்றன.)

            வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற மனைவியைப் பிரிந்து நெடுநாள் வாழ்வோரின் வாழ்வில் இருவரின் பாலியல் தேவைகளை நிறைவேற்ற இருவருமே தவறான உறவுகளை நாடும் வாய்ப்புகள் உண்டு. அதில் ஆண்களின் நடத்தையை மட்டும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் குமுகம் பெண்ணை மட்டும் இழிவாகப் பார்க்கிறது.

            பெண்களைப் பற்றி மிக இழிவாகப் பாடியிருக்கும் திருவெண்காடர் எனப்படும் பட்டினத்தாரின் துறவுக்கு அவரது வரலாறாகக் கூறப்படுவது: குழந்தை இல்லாத அவருக்கு சிவனே ஒரு குழந்தையாகிக் கிடைக்கிறார். கடல் வாணிகரான அவர் அந்த மகனை வாணிகத்துக்காகக் கடலுக்கு விடுக்கிறார். திரும்பி வரும் மகன் சாண வரட்டிகளைக் கொண்டு வருகிறான். தந்தை திட்ட அகல்கிறார் மகனாக வந்த சிவன். ஆத்திரத்தில் வரட்டியை வீசிய போது அதனுள் தங்கக் காசுகளைக் கண்ட திருவெண்காடர் மகனைத் தேடிய போது காதற்ற ஊசியுடன் “காதற்ற ஊசியும் வாராதுகாணுங் கடை வழிக்கே” என்ற சொற்களைக் கொண்ட ஓலை நறுக்கும் கிடைக்கின்றன. வந்தது சிவனென்று அறிந்து பட்டணத்து அடிகளாக துறவறம் மேற்கொள்கிறார். “தன் மீது கிடக்கும் தூங்கும் கணவனின் கைகளை மெதுவாக அகற்றிவிட்டு வெளியே சென்று பிற ஆடவர்களைப் புணர்ந்துவிட்டு மீண்டும் வந்து கணவனின் கைகைள எடுத்துத் தன் மீது போட்டுக்கொண்டு தூங்கிவிடும் பெண்களை எப்படி நம்புவேன்” என்ற பொருள்படப் பாடிறியிருக்கும் அவருக்கு இக் கதை பொருந்துவதாகக் கொள்ள முடியவில்லை. (சென்னையில் பிறந்து துறவு பூண்டவராகக் கூறப்படும், வெள்ளாளர் குலத்தவரான பட்டினத்துப் பிள்ளையார் பாடல்களையும் இவர் பாடல்களுடன் சேர்த்துக் குழப்பியுள்ளனர்.)

            திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழகத்திலுள்ள புகழ் பெற்ற சொலவடை. அதற்காக பண்டையில் வாணிகத்துக்காக வெளிநாடு சென்று நெடுநாட்கள் மனைவியைத் தனிமைத் துயரில் ஆழ்த்தி அவர்களுடைய ஒழுக்கத்தில் ஓட்டை விழக் காரணமாக இருந்தனர் ஆடவர். அவ்வாறு கருவுற்ற பெண்களின் கணவர்களுக்குக் மடல் எழுதி அவர்கள் ஓடிவந்து உருவாகிவிட்ட கருவுக்குத் தந்தை பதவியை நிலைநாட்டிச் செல்லும் பழக்கம் இருந்ததாக அண்மைக் கடந்த காலத்தில் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று அயல் நாடுகளில் அல்லல் பட்டு ஈட்டி மனைவிக்கு விடுக்கும் பணத்தில் வாழ்வு நடத்தும் பெண்கள் இங்கு தவிர்க்க முடியாத சில உதவிகளுக்காக நாடும் ஆண்களுடன் நாளடைவில் உறவு ஏற்பட்டு குடும்பங்கள் குலையும் இரஙங்த்தக்க நிகழ்வுகளும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. பிறந்த மண்ணில் தங்களது தேவைகளை நிறைவேற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு பொருளியல் கட்டமைப்பை உருவாக்குவதே இதற்குத் தீர்வாகும்.

கடலில் பெண்கள் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் தொல்காப்பியம் விதித்துள்ளது. ஒருவேளை செல்லுமிடத்தில் அவளுக்குப் பாதுகாப்பு இருக்காது, அவள் காரணமாகவே அயலிடத்தில் கணவனுக்கு ஊறு நேரலாம் என்பவற்றால் அத்தடை விதிக்கப்பட்டிருக்கலாமோ?

            அடுத்து, சாதிகள் உருவான அடிப்படை. தத்தம் தேவைகளை தாமே நிறைவு செய்யும் வகையில் அனைவரும் அனைத்துத் தொழிலையும் மேற்கொண்டது ஒரு கட்டம். பண்டமாற்று, வாணிகம் என்று பண்டப் படைப்பு, தன் தேவை என்பதிலிருந்து விலகி முகம் தெரியாத வேறெவர்க்கோ என்று வளர்ச்சி அடைந்த போது வெவ்வேறு தேவைக்கு வெவ்வேறு மனிதரின் உழைப்பு என்று பிரிவினை ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் தொழில் அடிப்படையில் அமைந்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் அதனதன் சிறப்பான தொழிலின் ஏந்துக்காக அதே தொழிலையுடைய குடும்பத்துடன் மண உறவு செய்து கொள்வது இயல்பு. இதனடிப்படையில்தான் குக்குலங்கள் அடிப்படையிலான அக, புற மணக்குழுக்கள் உடைபட்டு தொழில் சார்ந்த குழுவினரிடையே மண உறவுகள் உருவாகி தொழிலடிப்படையில் சாதிமுறை இறுகிப்போயிருக்க வேண்டும். ஆனால் இதற்கும் வருணப் பாகுபாட்டுக்கும் வேறுபாடுண்டு. அது பின்னர் விளக்கப்படும்.

0 மறுமொழிகள்: