22.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 37

29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 6

.:  உங்கள் குழப்பம் ஞாயமானதுதான். பல ஆயிரம் கோடி முதலீட்டில் சிறப்பு தொழில் நகரங்களும், வளாகங்களும் தொடங்கப்படுகின்றன. அதற்காக அரசே மக்களின் நிலங்களை, அதிலும் நீர்வளம் மிகுந்த நிலங்களாகப் பார்த்து கட்டாயக் கையகப்படுத்தும் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி பறிக்கின்றன. நிலத்தடி நீர்வளத்தை செயற்கைக் கோள்களைப் பயன்ப்படுத்தி இனம்காண்கின்றனர். பெரும்பாலும் சூழலைக் கெடுக்கும் கழிவுகளை வெளிவிடும் தொழில்களையே பணக்கார நாட்டு நிறுவனங்கள் இவ்வளாகங்களுக்குள் நிறுவுகின்றன.

செ.:இச் சிறப்பு வளாகங்களுக்குள் நம் நாட்டுச் சட்டங்கள் செல்லாது என்று சொல்கிறார்களே, அது உண்மையா?

.:  உண்மைதான். 19ஆம் நூற்றாண்டில் சீனத்தில் ஐரோப்பிய நாடுகள் தன்னாட்சி வளாகங்கள் என்ற பெயரில் உருவாக்கியவற்றை எதிர்த்துத்தான் பாக்சர் கலகம் என்ற புரட்சி வெடித்தது. அந்தச் சீனத்து ஆட்சியாளர்கள்தாம் சென்ற நூற்றாண்டில் கணக்கற்ற வளாகங்களை அமைக்க அமெரிக்காவுக்கு இடமளித்துள்ளனர். இன்று புணர் நாய்கள் நடுவீதியில் இழுத்துக்கொண்டு கிடப்பது போல் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றனர் சீன - அமெரிக்க ஆட்சியாளர்கள். நம் ஆட்சியாளர்களுக்குத்தான் மான ஈனம் கிடையாதே. அதனால் இங்கு எல்லாம் “அமைதியாக” நடைபெறுகின்றன.

செ.:வெளியே முடிவில்லாத மின்வெட்டுகள் நடைமுறையிலிருந்த காலங்களில் கூட அங்கெல்லாம் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரமும் குடிநீர் தரமுள்ள நன்னீரும் வழங்கப்படுகிறதாமே?

.:  அது மட்டுமல்ல மின்கட்டணமும் மிகக் குறைவு. சில நேர்வுகளில் இலவயமாகக் கூடக் கொடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். தண்ணீரை எடுத்துக்கொண்டால் தூத்துக்குடி டெர்லைட்டு செம்பு ஆலைக்குப் பெருமளவிலான நீரை அவர்களே தாமிரபரணி ஆற்றிலிருந்து பேயளவான குழாய்களைப் பதித்து எடுத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் விட்டிருக்கிறார்கள்.

செ.:சாயப்பட்டறைகளையும் தோல் பதனீட்டுத் தொழிலகங்களையும் அடைக்கவும் உடைக்கவும் நயமன்றங்கள் ஆணையிட, சற்றும் தயங்காமல் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க, டெர்லைட்டு தொழிற்சாலை குறித்து மட்டும் அதைக் காப்பாற்ற அனைவரும் முனைப்பாக இருப்பது ஏன்? இவ்வாலைக்கு எதிராகப் பலர் நயமன்றத்தில் வழக்குத் தொடுத்தும் எந்தப் பயனும் இல்லையே! 

.:  நயமன்றம் ஆட்சிப் பொறியின் ஓர் உறுப்புதானே! பதவி உயர்வு, இடமாற்றம் என்று எத்தனையோ பலன்களுக்காக ஆள்வினை அதிகாரிகளையும் அரசியலாளரான ஆளும் கட்சித் தலைமைகளையும் சார்ந்திருக்கும் அவர்கள் எவ்வாறு தன்னுரிமையுடன் செயல்பட முடியும்? நயவர் முன் வழக்கை எடுத்துவைக்கவே ஒவ்வொரு கேட்பின் போதும் பெஞ்சு கிளார்க்குக்கு கைக்கூலி கொடுத்தாக வேண்டிய நம் நயமன்ற நடைமுறையில் பணம் படைத்தோருக்குத் தனித் தீர்ப்பு இருப்பதில் என்ன வியப்பு? வழக்கில் தீர்ப்பைக் கூறிய பின் தண்டனையைத் “தவணையில்” கூறும் விந்தையான நடைமுறை அண்மைக் காலத்தில் பொதுவழக்காக மாறிவிட்ட மாயம் என்னவென்று தெரியவில்லை. நடைபெறுபவற்றைப் பார்த்தால் நம் நாட்டில் நடைபெறும் ஊழல்களில் புரளும் மாபெரும் பணத்தில் பெரும் பகுதி நயமன்றங்கள் வழியில் பங்காகின்றன என்று தோன்றுகிறது. அத்துடன் டெர்லைட் ஆலையைப் பொறுத்த வரை வழக்குத் தொடர்ந்தவர்கள் ஏறக்குறைய அனைவரும் தொழிலகத்தை மூடுவதை நோக்கமாகக் கொண்டு அதைச் செய்யவில்லை, தொழிலகத்தாரிடமிருந்து பணத்தை எதிர்பார்த்துத்தான் களத்தில் இறங்கினர் என்பது என் முடிவு. நய மன்றத்தைப் பொறுத்த வரை பசுமைத் தீர்ப்பாயம் என்ற துணை அமைப்பையும் உருவாக்கிப் பங்குபோட்டுக்கொண்டனர் என்பதுதான் என் கட்சி.

      டெர்லைட்டு தொழிலகத்தைப் பொறுத்தவரை வெளியிலிருந்து செம்புக் கனிமம் கடல் மூலம் தொழிற்சாலைக்கு வந்து அங்கு செம்பு பிரித்தெடுக்கப்பட்டு அப்படியே கடல் மூலம் வெளியேறிவிடுகிறது. நமக்கு கிடைப்பது கனிமத்தைக் கப்பலிலிருந்து இறக்கவும் தூய்மைப்படுத்தப்பட்ட செம்பைக் கப்பலில் ஏற்றவும் காவலர் முதல் உயர் பதவியில் ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பும்தான். அதற்காக நம் மக்களுக்கு உரிமையுள்ள மின்சாரத்தையும் குடிநீரையும் பறிகொடுக்கிறோம் என்பதுதான் உண்மை.

செ.:இத்தகைய திட்டங்களில் ஆட்சியாளர்கள் அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டுகிறார்களே அது ஏன் என்பதற்கு எனக்குக் கிடைக்கும் விடை சரியாக இருக்குமா என்று ஐயம் ஏற்படுகிறதே?

.:  உங்களுக்குக் கிடைக்கும் விடைதான் என்ன?

செ.:இம் மண்டலங்களிலும் வளாகங்களிலும் அயல் முதலீடு என்ற பெயரில் இறங்கும் பணத்தில் பெரும் பகுதி ஆட்சியாளர்களாகிய உயரதிகாரிகள், அரசியல் தலைவர்களுடையதாய் இருக்குமோ என்பதுதான் அது.

. :மிகச் சரியான கணிப்பு. ஐரோப்பியர்களிடமிருந்து அடிமை நாடுகள் விடுதலை அடைந்ததும் அந் நாடுகளின் ஆட்சியாளர்கள் ஊழல்கள் செய்து பணத்தை அள்ளிக்குவித்தார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலர் வெளியேறும் முன்பே சிறிது காலம் ஆட்சி செய்த பேரவைக் கட்சி, நயன்மைக் கட்சி ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ‘விடுதலை’க்குப் பின் வெளிப்பட்ட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட அரசியல்வாணர்கள் அப்போதைய தலைமையமைச்சரும் இராகுல் காந்தியின் கொள்ளுப்பாட்டனுமான நேருவின் நெருங்கிய தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது காதலி என்று கூறப்பட்ட ஒரு வெள்ளைக்கார கிறித்துவக் ‘கன்னிகை’ தன் இறுதிக் காலத்தில் தன் சொத்துகள் முழுவதையும் நேருவின் பேரனான இராசீவ் காந்திக்கு எழுதி வைத்தார். இந்தச் சொத்தில் ஒரு பகுதியோ அல்லது முழுமையோ நேரு தானும் தன் தொழர்களுடன் இணைந்தும் ஊழலில் சுருட்டிப் பதுக்கியதாக இருக்கலாம் என்பது எனது ஐயம்.

      நேருவுக்குக் கிடைத்தது போல் காதலிகளோ காதலர்களோ எல்லோருக்கும் கிடைப்பார்களா? “நெருக்கடி காலம்” முடிந்ததும் நடைபெற்ற தேர்தலில் இந்திரா தோற்று மொரார்சி தலைமை அமைச்சரான பின் இந்திரா வீட்டில் உளவுத் துறையினர் தேடுதல் வேட்டை நடத்த இருப்பதை அறிந்து ஒரு பெரும் நிலைப் பேழையில் பணம், தங்கம் போன்றவற்றை வைத்துத் தோட்டத்தில் புதைக்க, அந்தச் செய்தி வெளியே கசிந்துவிட, அதை அங்கிருந்து அகற்ற, அன்றிரவு பெய்த பெரும் மழையில் மண்ணைத் தோண்டிய சுவடுகள் அழிந்துபோக, தேடுதல் வேட்டைக்குச் சென்றவர்கள் முகத்தைத் தொங்கப்போட நேர்ந்தது. இந்திரா ஆட்சிக் காலத்தில் வடக்கில் ஒரு தொடர்வண்டி நிலையத்தில் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர் ஒருவர் சுடப்பட்டார். அவரை யாரும் கண்டுகொள்ளாததால் அவர் அங்கே கிடந்து செத்தார். அவர் இந்திராவின் சொத்துகளுக்கான ஒரு போலி(பினாமி) என்றும் இந்தக் கொலைக்கும் அதற்கும் தொடர்பு உண்டென்றும் தாளிகைகள் கூறின.

      நேரு, இந்திரா போன்ற பெருந்தலைகளுக்கு உள்ள வாய்ப்பு இல்லாத கீழ்நிலைத் தலைவர்களுக்குத் தம் கொள்ளைகளைப் பதுக்கி வைக்கக் கிடைத்த ஒரே இடம் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள். அளவுக்கு மீறிய வருமான வரியை வெறுத்து தத்தம் ஆதாயங்களைப் பதுக்கிய பணக்காரர்களும் உண்டு.

செ.:இந்தப் பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ச.க.வினர் கூச்சலிடுகிறார்களே, அவர்கள் தூய்மேயானவர்கள் என்பது இதன் பொருளா?

.:  கண்டிப்பாக இல்லை. பாராளுமன்ற முறை எனும் இன்றைய இந்தப் போலி  மக்களாட்சியில் ஒரு கட்சி சிறிது சிறிதாக வளர்ந்து வரும் போதே ஊழல் பற்றிய பாடங்களைத் தெளிவாகக் கற்றுக்கொள்கிறது. பெரும் திட்டங்களில் கைக்கூலிப் பணம் கைமாறும் போது ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் வரையறுக்கப்பட்ட விகிதங்களில் அது பங்காகிறது. அவ்வாறு பங்காகவில்லை என்றாலோ அல்லது இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் போன்று தணிக்கை அறிக்கை மூலமோ வேறு வகையிலோ வெளிப்படும் போதோ “பாராளுமன்ற நிலைக்குழு” உசாவலுக்காக எதிர்க் கட்சிகள் கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்து மக்களவையையும் மாநிலங்களவையையும் முடக்குவது ஆளும் கட்சி அடித்த கொள்ளையில் தங்களுக்கும் உரிய பங்கைப் பெறுவதற்குத்தான். ஊழல் பணத்தில் முதல் பங்கைப் பெறுவதா இல்லையா என்பதுதான் இந்தியத் தேர்தல்களின் அடி நீரோட்டமே. மற்றப்படி ஆட்சியைப் பிடித்த எந்த “எதிர்க் கட்சி”யும் முன்பு ஊழல் செய்த எந்த ஆளும் கட்சியின் மீதும் நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டா? இதுதான் காந்தி “அடிகளின்” துன்புறுத்தாமைக் கோட்பாட்டின் நூற்றுக்கு நூறு “கடைப்பிடித்தம்”.     

      ப.ச.க.வைப் பொறுத்தவரை ஊழலில் கணிசமான பங்கைப் பெறும் வகையில் ஆளும் கட்சி வரிசையில் அல்லது எதிர்க்கட்சியின் இடத்தில் அமர்ந்த காலத்தில் இங்கு சூழ்நிலையில் பெரும் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நரசிம்ம ராவ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “தாராளமாக்கல்”, வெளிநாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் கணினிக் கணக்குப்பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றும் நோக்கத்துடன் புகுத்தப்பட்ட “மனித வள ஏற்றுமதி”க்கு ஏற்ப கல்வித்துறையின் பெயரையே “மனிதவள மேம்பாட்டுத் துறை” என்று மாற்றிய நிலையில், பெரும்பாலும் அமெரிக்காவில் குடியேறிய தம் குடும்பத்தினர் பெயரில் தங்கள் சுருட்டல்களைப் பதுக்கும் வாய்ப்பு ஆட்சியாளருக்குக் கிடைத்துவிட்டது. அதன் ஒரு பதம்தான் வாசுபாயின் வளர்ப்பு மகளின் கணக்கில் மாலியில் பெருந்தொகை முதலீடாகியுள்ளதாக வந்த பேச்சு. இவ்வாறு அங்கெல்லாம் பதுக்கப்பட்ட பணத்தை இங்கு கொண்டுவரும் ஓர் உத்திதான் “நேரடி அயல் முதலீடு”.

      முதல் உலகப் போரைத் தொடர்ந்த உலகப் பொருளியல் நெருக்கடியின் போது பட்டினிச் சாவுகளைத் தவிர்க்க கஞ்சித் தொட்டிகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவில் வந்தது. அந்தச் சூழலில் பொருளியல் மேதை கெயின்சு என்பார் முன்வைத்த, அரசே பணத்தாள்களை அச்சிட்டு பண்ட விளைப்பை நோக்கமாகக் கொள்ளாத, சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை அமைப்பதில் செலவிட்டால் மக்களிடம் பணப்புழக்கம் பெருகி பொருளியல் தேக்கம் முடிவுக்கு வரும் என்ற உத்தியைக் கடைப்பிடித்தனர். அதாவது வரி விதித்தல் போன்று மக்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல் அரசே பணத்தாள்களை அச்சிட்டு பொருளியல் தேக்க நிலைகளை எதிர்கொள்ளலாம் என்பது இதன் பொருள். இந்தப் பணத்துக்கு நிகரான நுகர்பொருட்கள் நாட்டில் இருக்க வேண்டுமென்பதே இந்த உத்தியைக் கட்டுப்படுத்தும் ஒரே காரணி. ஆனால் பண்ட விளைப்பின் ஒரே நோக்கம் ஏற்றுமதிக்கு என்பதும் ஏற்றுமதிக்குத் தகுதியில்லாத, இரண்டாம் தரம் எனப்படும் கழிவுப்பொருள்கள் மட்டும் இந் “நாட்டு மன்னர்களு”க்கும் என்பதே நமது பொருளியல் அடிப்படைக் கொள்கையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாயிற்றே. எனவே ஏற்றுமதிக்காக உள்நாட்டிலிருந்து துறைமுகங்களுக்கும் இறக்குமதியானவற்றை உள்நாட்டினுள்ளும் கடவ என்றுதான் வாசுபாயின் அருஞ்செயல்களில் ஒன்றான “தங்க நாற்கரச் சாலை”த் திட்டம் உருவானது. அதில் இவர்களின் “நேரடி” அயல் முதலீடுகள் பாய்ந்தன. இன்று வழி நெடுகிலும் கூடாரம் அடித்து சுங்கம் என்ற பெயரில் வழிப்பறி செய்கின்றனர். ஊழல் பணத்தைக் கையாள்வதில் எத்தனை நுணுக்கமாக உத்தி வகுத்துச் செயற்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா நம் பாரத புத்திரர்கள். முழங்குங்கள், பாரத மாதா கீ சே!  

      பேரவைக் கட்சி ஆட்சிக் காலத்தில் அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று உரக்க முழங்கியவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

செ.:உண்மையிலேயே இந்த அளவுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் தேவைதானா?

.: உங்கள் கேள்விக்கு அடிப்படையுண்டு. ஒவ்வோராண்டும் புள்ளியியல் துறையை வைத்துப் பொய்யான ஒரு கணிப்பை குறிப்பிட்ட துறைகளில் பற்றாக்குறை அல்லது மிகுதி இருக்கும் என்று வெளியிட வைத்து அதற்கேற்ப இறக்குமதி அல்லது ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்கிறார்கள். ஆனால் பின்னர் அக் கணிப்புக்கு எதிராக நடப்பு இருக்கும் போது அதற்கேற்ப ஏற்றுமதி அல்லது அறக்குமதி செய்கிறார்கள். அதனால் பெரும்பாலான பண்டங்கள் ஒரே நேரத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகின்றன. ஆக இரு வகைகளில் ஆட்சியாளர் தரகு பெற முடிகிறது. இது உலகெங்கும் பெரும்பாலும் நடைபெறும் ஒன்றாகும்.

செ.:தேவையற்ற இந்தப் போக்குவரத்தால் மிகப் பெரும் ஆற்றல் இழப்பு ஏற்படுமே!

.:  ஆம்! உலக கன்னெய்ய வளமே ஒரு சிறு குழுவின் பேய்த்தனமான பணத்தாசையால் அளவிறந்து அழிக்கப்படுகிறது. மக்களின் உழைப்பு மற்றும் பிற வளங்களும் வசதிகளும் பெரும்பான்மை மக்களுக்குப் பயன்படாமல் வீணாகின்றன.

செ.:கன்னெய்யமும் ஆயுதங்களும்தாமே நம் நாட்டின் இறக்குமதியில் மிகப் பெரும் பங்கேற்கும் இனங்கள் என்று கூறப்படுகிறதே?

.:  அது உண்மைதான். இந்தியாவில் அசாமைச் சுற்றியுள்ள இமயமலைப் பகுதியில் படிந்திருக்கும் கன்னெய்ய வளம் 200 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தேவைகளை எதிர்கொள்ளப் போதுமானது என்றும் இந்திய அரசு அவ்வளத்தை அறுவடை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்கு முன் தினமணி கட்டுரையொன்று கூறியது. ஆக, ஏற்றுமதியில் கிடைக்கும் தரகைக் கைவிட நம் ஆட்சியாளர்கள் ஆயத்தமாக இல்லை என்பதுதான் உண்மை நிலை.

செ.:உலக வங்கிக் கடன்கள் அனைத்துலகப் பணப் பண்டு(ஐ.எம்.எப்) என்று பெருந்தொகைகள் வருகின்றனவே?        

.:  ஆம். அதுதான் உலகின் மிகப் பெரும் ஏமாற்று. உலக வங்கித் திட்டங்கள் என்பவற்றுக்குத் தேவைப்படுபவை சில உயர் தொழில்நுட்பக் கருவிகள் தவிர பிற அனைத்தும் உள்நாட்டுப் பண்டங்களும் தொழிலாளர்களும்தாம். உ.வ.வும் அனைத்துலகப் பணப்பண்டும் பணமாக ஒரு தம்பிடி கூடக் கொடுப்பதில்லை. கணக்குப் பணமாக(Account money)த்தான் வழங்குகின்றன. அதாவது “உதவி” என்ற பெயரில் கொடுக்கப்படும் தொகை “உதவி”  பெறும் நாட்டின் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தக் கணக்கிலிருந்து அவர்கள் காட்டும் நிறுவனங்களிடம் பண்டங்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் மேற்படி வங்கி அல்லது பணப்பண்டு பெயரில் செய்யப்படுவதாகக் கூறப்படும் திட்டங்களுக்காகத்தான் அப் பண்டங்கள் வாங்கப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை. எடுத்துக்காட்டாக நம் நாட்டில் ஓராண்டு வ(ரவு) - செ(லவு) திட்டத்தில் படைக்கலன்கள் வாங்க ஓரிலக்கம் கோடி உரூவாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதில் இறக்குமதிக்குத் தேவைப்படும் தொகையை டாலர்களில் மேற்கூறிய கடன் நிறுவனங்கள் ஒதுக்கியுள்ள தொகையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். வ.செ. திட்டத்தில் அவ்வினத்துக்காக உரூவாக்களில் ஒதுக்கப்பட்ட தொகையை உலக வங்கி அல்லது அனைத்துலகப் பணப்பண்டு “உதவி” த் திட்டங்களுக்குத் திருப்பி விடுவர்.

      கடன் பெறும் நாடுகளில் திட்டங்கள் வகுப்பதிலும் செயலாக்கத்திலும் மேல் மட்டப் பணிகளில் இருப்போரை இக் கடன் நிறுவனங்கள் நன்றாகக் கவனித்துக் கொள்ளும். தொடக்கத்தில் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உலகச் சுற்றுலா போன்றவற்றை ஏற்பாடு செய்தனர். அடுத்து அவர்கள் இளைய தலைமுறையினருக்கு அந் நிறுவனங்களில் நல்ல பதவிகள் வழங்கியதோடு அவர்களை திட்டப்பணிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் அதிகாரிகளாக அமர்த்துகின்றனர். இந்தியாவிலுள்ள அதிகாரி மேற்காசிய நாடுகளில் ஆய்வு செய்ய, மத்திய கிழக்கு அதிகாரி ஆப்பிரிக்க நாடொன்றில் ஆய்வு மேற்கொள்வார். ஆப்பிரிக்க அதிகாரி தென்னமெரிக்க நாடொன்றைக் கண்காணிக்க, தென்னமெரிக்க அதிகாரி இந்தியாவில் வலம் வருவார். இதைப் பார்க்கும் அந்தந்த நாட்டு மக்கள் மிக நேர்மையாக இத் திட்டப்பணிகள் நிறைவேறுவதாக மனம் குளிர்ந்து போவர்.

 இக் கடன்கார நிறுவனங்கள் இத்துடன் நிற்கவில்லை. இக் கடன் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் போது நிலத்தை இழக்கும் மக்களுக்கு உரிய இழப்பீட்டுடன் அவர்களின் மறுவாழ்வுக்காகவும் தாராளமாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகிறது. குமரி மாவட்டத்தில் உ.வ. “உதவி”யில்  நிறைவேற்றப்பட்ட ஓர் அணைத் திட்டத்தில் நிலம் வழங்கிய மக்களது மறுவாழ்வுக்கு உரிய ஒதுக்கீடு செய்யவில்லை என்பதற்காக அத் திட்டத்துக்கான செயற்பாட்டு மதிப்பீடு உருவாக்கிய களப் பொறியாளரை இடைநீக்கம் செய்தனர். அது போலவே உ.வ. திட்டமாகிய வடக்கிலுள்ள சர்தார் சரோவர் திட்டத்தால் மலைவாழ் மக்களின் வாழ்க்கை அடிப்படை அழிவதையும் சூழியல் கேட்டையும் நிலநடுக்கங்கள் உருவாகும் ஏதத்தையும் முன்வைத்து உண்ணாமைப் போராட்டம் நடத்திய மேதா பட்கர் என்பவர் சில இலக்கம் கோடி உ.வ. “உதவி”யுடன் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று ஆட்சியாளர்கள் உறுதியளித்ததும் உண்ணாமையைக் கைவிட்டுக் காணாமல் போய்விட்டார். தொடக்கச் சிக்கலாக முன்வைக்கப்பட்ட சூழல் கேடு, நில நடுக்க வாய்ப்பு எல்லாமும் கூட காணாமல் போய்விட்டன. இந்த இரண்டாம் கட்ட உ.வ. கடனுக்காக இந்திய அரசை நெருக்கத்தான் இந்த உண்ணாமை நாடகமா, யாமறியோம் தன்னார்வத் தொண்டருக்குத்தான் வெளிச்சம்..
        
செ.:உள்நாட்டுக் கன்னெய்ய வளத்தைக் கைக்கொள்ள, அவற்றை இறக்குமதி செய்து தரகு பார்க்கும் சிலர் தடையாக இருக்கிறார்கள் என்று சென்ற ஆண்டு கன்னெய்யத் துறை அமைச்சர் வீரப்ப மௌலியே வாக்குமூலம் அளித்துவிட்டார், ஆனால் நீங்கள் மேலே குறிப்பிட்ட போர்த் தளவாடங்கள், உயர் தொழில்நுட்பக் கருவிகளை இந்தியாவிலேயே ஏன் உருவாக்கக் கூடாது? உலகின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒன்றைக் கொண்ட இந்தியாவுக்கு வெளியே சந்தையைத் தேட வேண்டிய தேவையே இல்லையே!

தொடரும்.........

0 மறுமொழிகள்: