22.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 36


23.குமுகியல் வல்லுநர்களன்றோ நாம்! - 5

செ.:மொத்த வருமானத்தில் வரி கணக்கீட்டிலிருந்து கழிப்பதற்கென்று சில விலக்குகள் அளித்துள்ளார்களே?

.:  ஆம்! அவற்றையும் பார்ப்போம். சில ஆண்டுகளுக்கு முன் இந்திரா விகாசு பத்திரம், கிசான் விகாசு பத்திரம் என்பவற்றை இந்திய ஆட்சியாளர்கள் வெளியிட்டார்கள். இவற்றில் செய்யும் முதலீடு 5 ஆண்டுகளில் இரு மடங்காகும். அத்துடன் முதலிடும் ஆண்டின் வருமான வரிக் கணக்கீட்டிலிருந்து அத்தொகை கழிக்கப்படும். ஆனால் முதிர்வடைந்து பணம் கைகளுக்கு வரும் போது மொத்த முதிர்வுத் தொகையும் வருமான வரிக்கு உட்படும். அதிலிருந்து தப்ப வேண்டுமானால் மொத்தத் தொகையையும் மீண்டும் அப் பத்திரங்களில் ஒன்றில் முதலிடுவது ஒன்றே வழி.                     
           
      இரண்டு, உயிர்க் காப்பீட்டுக் கழகத்துக்குச் செலுத்தும் காப்பீட்டுத் தவணைத் தொகை. உயிர்க் காப்பீட்டுக் கழகத்துக்குச் செலுத்தும் மொத்தத் தொகையைப் போல் பல மடங்காக இத்தனை ஆண்டுகளுக்குப் பின் திருப்பித் தரும் வாக்குறுதி காப்பாற்றப்பட்டாலும் வங்கி சேமிப்புக் கணக்கைப் போல் இதனை நினைத்த நேரம் திரும்பப் பெற முடியாது. தவிர்க்க முடியாத சூழலில் கேட்டால் கணிசமான ஒரு பகுதியைப் பிடித்துவிட்டுத்தான் தருவார்கள். முதிர்வடைந்த பின்னர் கூட கிடைக்கும் பணத்தின் உண்மை மதிப்பு நாம் செலுத்திய பணத்தின் மதிப்பில் 3.5 நூற்றுமேனிதான் என்று அண்மைக் கணிப்பொன்று(தினமணி) கூறுகிறது. முகவர்களுக்கென்றும் ஊழியர்களுக்கென்றும் மிக மிகத் தாராளமாக காப்பீட்டுக் கழகம் அள்ளி அள்ளிக் கொடுக்கும் பணத்தை நாம் செலுத்துவதிலிருந்துதானே கொடுக்க வேண்டும்? இருப்பினும் எதிர்பாரா உயிரிழப்புகள், உறுப்பிழப்புகளின் பின்னர் எஞ்சுவோர் உயிரைப் பிடித்து வாழ இன்று இருக்கும் ஒரே வழி என்ற நிலையில் இந் நிறுவனத்தை அணுகுவோரைக் குறை சொல்ல வழியில்லை. ஆனால் இதில் வாடிக்கையாளர்களின் நலனுக்கு முன்னுரிமை வேண்டிப் போராட வேண்டியது ஒரு நிலை என்றால் வருமான வரியிலிருந்து போலியான ஒரு தப்பிப்பு என்று வருமான வரித்துறை நெருக்குவதையே இங்கு சுட்ட வேண்டியுள்ளது.

      அடுத்து வீட்டுக் கடன். வீடு கட்டுவதற்கு எடுத்த கடனுக்குத் திரும்பச் செலுத்தும் தவணைத் தொகையும் வரி கணக்கிடுவதற்கான வருமானத்திலிருந்து கழிக்கப்படும்.

      பொருளியல் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் வீடு கட்டுவதில் இடப்படும் முதலீடு இழப்பைத் தரும் ஒன்றாகும். மாதச் சம்பளம் வாங்குவோருக்கு மாதாமாதம் தமக்குக் கிடைக்கும் பணத்தை அந்தந்த மாதமே கரைத்துவிடும் நடைமுறைக்குத் தடை போட்டு ஒரு கட்டாயச் சேமிப்பை ஊக்குவதாக வீட்டில் செய்யும் முதலீடு அமையும். ஆனால் தொழில் -  வாணிகத் துறையில் உள்ளோர் சொந்தமாக வீடு கட்டுவதை விட வாடகை வீட்டில் வாழ்வதே ஆதாயம். சொந்த வீட்டின் காலமுறைப் பராமரிப்புச் செலவு, ஆண்டுதோறும் கட்டடத்தின் மதிப்பில் ஏற்படும் இறக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிட வாடகைச் செலவு மிகக் குறைவே ஆகும். அத்துடன் கட்டடச் செலவுக்கு வட்டிக் கணக்குப் பார்த்தால் வாடகை மதிப்பு ஒன்றுமே இல்லை எனும் அளவுக்குக் குறைவாக இருக்கும். இந்தப் பொருளியல் கணிப்பின் பின்னணியில் வருமான வரியிலிருந்து ஒரு சிறிய தொகைக்கு விலக்கு கிடைக்கும் என்பதற்காக ஒரு பெருந்தொகையை வீடு கட்டுவதற்காகத் திருப்புவது என்பது ஒரு பொருளியல் தற்கொலை முயற்சியாகும். அத்தகைய ஒரு முயற்சியை தொழில் - வாணிகர்களிடையில் தூண்டும் வருமான வரித் துறையின் முயற்சி சராசரிக் குடிமகனின் பணத்திரட்சி பனியா – பார்சி – வல்லரசியத்துக்குப் போட்டியாக உருவாகாமல் திசைதிருப்பி விடுவதுதான் என்பது தெளிவாகும்.

      மேலே நாம் விளக்கிய இரு நேர்வுகளிலும் மக்களின் பணத் திரட்சியை ஆட்சியாளர்கள் தங்கள் ஆளுகையுள் கொண்டுவரும் ஓர் உத்தியாகவும் வருமான வரியைக் கையாள்வதைக் காணலாம்.

      கோயில்கள் கட்டுவதற்கும் அறக்கட்டளைகளுக்கும் வழங்கும் நன்கொடைகள் வருமான வரி விதிப்புக்கான தொகையிலிருந்து கழிக்கப்படும். அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகளும் கழிக்கப்படும். ஆனால் புதிய தொழில்களில் முதலிடும் தொகையையும் கழிக்க வேண்டும் என்ற வேண்டுகை இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

      ஆக மொத்தத்தில் வருமான வரி கணக்கீட்டுக்கு மொத்த வருமானத்திலிருந்து கழிப்பதற்கென்று வருமான வரித்துறை ஒதுக்கியுள்ள இனங்களை அலசினாலும் ஆட்சியாளர்களின் நோக்கம் வரி தண்டுவதல்ல, இந்திய ஆட்சியை ஆட்டிவைக்கும் பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணிக்கு அப்பால் எந்தச் சராசரி இந்தியக் குடிமக்களுக்கும் தங்கள் வருமானத்தை ஆக்க வழியிலான முதலீடாக மாற்றுவது பற்றிய சிந்தனை எழாதவாறு, அதாவது மக்களின் வருமானம் முதலீட்டு வடிவம் பெறாதவாறு தடுப்பதற்கே வருமான வரித்துறையின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகும்.
 
செ.:நிறுவனப் பங்குகளில் முதலிட்டால் என்ன?

.:  இன்றைய நிலையில் நாம் பங்கு முதலீடு என்று புரிந்துகொள்ளும் இரண்டாம் நிலை பங்குச் சந்தையில் செய்யும் எந்த முதலீட்டிலிருந்தும் எந்த நிறுவனத்தின் முதலீட்டிலும் ஒரு காசு கூட சென்றடையாது. இது ஒரு “தூய” சூதாட்டமே.

செ.:இதென்ன புதுக் கதை?

.:  கதையல்ல உண்மை. இதற்காக நாம் வரலாற்றில் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும். தொழிற் புரட்சியின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஒரு சிலரைக் கூட்டுச் சேர்த்து  தொழல்களைத் தொடங்கினர் தொழில் நாட்டமுடையோர். தொழிலில் இழப்புகள் வந்த போது அதை ஈடுகட்டுவதற்காகத் தம் சொத்துகள் அனைத்தையும் இழந்து நடுத் தெருவுக்கு வந்தனர். பலர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த இடரைத் தவிர்ப்பதற்காக உருவானதுதான் எல்லைப்பட்ட கடப்பாட்டு(Limited liabilities) முறை. இதன்படி ஒரு நிறுவனத்தில் ஏற்படும் இழப்புகளை அதில் முதலிட்டுள்ளவர் ஒவ்வொருவரும் அவரவர் முதலீட்டு விகிதத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

      இதிலும் இடர்ப்பாடுகள் உருவாயின. ஒரு நிறுவனத்தில் தற்காலிகமான சிக்கல்கள் ஏற்படும் போது அதைச் சீர் செய்யக் காலம் தராமல் தத்தம் பங்குகளை நிறுவனத்திடம் ஒப்படைத்துத் தம் பங்குப் பணத்தைத் திரும்பக் கேட்ட போது நிறுவனங்கள் தவிர்க்க முடியாமல் கவிழ்ந்தன. ஒரு நிறுவனம் இழப்பால் கவிழப்போகிறது என்று போட்டி நிறுவனங்கள் புரளிகளைக் கிளப்பியதும் கணிசமாக நிகழ்ந்ததுண்டு.  இவற்றைத் தவிர்க்க உருவானதுதான் இரண்டாம் நிலை பங்குச் சந்தை. இதன் படி ஒரு நிறுவனத்தின் பங்கை வைத்திருக்கும் ஒருவருக்கு உடனடிப் பணத்தேவை ஏற்பட்டால் தன் பங்கு முதலீட்டை இன்னொருவருக்கு மாற்றி, அதாவது விற்றுத் தன் பணத்தேவையை நிறைவேற்றுவது. நம் நாட்டில் அசையாச் சொத்துகளை நுகரும் உரிமையுள்ள ஒத்தி என்ற முறையில் காலம் குறிப்பிட்டு ஒருவரிடம் ஒப்படைத்துப் பணம் பெற முடியும். அப்படி ஒத்தி பெற்றவருக்கு திடீரென்று பணத்தேவை ஏற்பட்டால் தான் ஒத்தியாகப் பெற்ற சொத்தை இன்னொருவருக்கு அதே தொகைக்கு மறுவொத்தி என்ற முறையில் ஒப்படைத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்வது என்ற நடைமுறை உள்ளது. இப்படி மறுவொத்தி வாங்குபவரிடம் ஒத்திப் பணத்தை சொத்தின் உரிமையாளர் கொடுக்கும் போது அதைப் பெற்றுக்கொண்டு மறுவொத்தியாளர் சொத்தை ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால் பங்குச் சந்தையில் பங்குகளை அதற்கு உரிய நிறுவனத்துக்கு விற்க வகையில்லை. அதன் காரணமாகத்தான் ஒரு நிறுவனம் சிறப்பாகச் செயல்படுவதாகத் தோன்றினால் அதற்கு அதிக விலை கொடுத்து வாங்க முதலீட்டாளர்கள் முன்வந்தனர். விற்பவருக்குப் பண நெருக்கடி என்றால் தான் வாங்கியதை விடக் குறைந்த விலைக்கும் விற்க வேண்டி வந்தது. இது வளர்ச்சியடைந்து இன்று அது ஒரு பெரும் சூதாட்டமாக மாறி நிற்கிறது. பங்கின் உண்மையான மதிப்பான முக மதிப்பைப் போல் ஆயிரம் மடங்கு வரை சந்தை மதிப்பு உள்ளது. ஆனால் அந்தப் பங்குகளுக்கு அந் நிறுவனம் வழங்கும் ஆதாய ஈவு என்பது அம் முக மதிப்பின் நூற்றுமேனியாக(சதவீதமாக)வே வழங்கப்படுகிறது. அதாவது பத்து உரூபாய் முக மதிப்புள்ள ஒரு பங்கை நீங்கள் சந்தையில் ஆயிரம் உரூபாய் கொடுத்து வாங்கி அதற்கு ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 100 நூற்றுமேனி ஈவு வழங்கப்பட்டால் உங்களுக்குக் கிடைப்பது வெறும் பத்தே உரூபாய்கள்தான். இப்போதுள்ள முறையில் உங்கள் முதலீட்டுக்கு உரிய ஆதாயம் வேண்டுமென்றால் உங்கள் பங்கை இரண்டாம் நிலை பங்குச் சந்தையில் விற்பதுதான் வழி. அத்துடன் எளிய மக்கள் இச் சந்தையில் புகுந்து செயல்பட முடியாதவாறு ஆயிரம் பத்தாயிரம் பங்குகளின் தொகுதிகளாகத்தான் பங்கு வாணிகம் நடைபெறுகிறது. காப்பீட்டு நிறுவனங்களில் போன்று முதலிட்டவன் ஆதாயம் கண்டு வாழ்ந்தாலும் அனைத்தையும் இழந்து செத்தாலும் முகவர்கள், தரகர்களுக்கு எப்போதும் ஆதாயம்தான். குதிரைப் பந்தயம் போல் சூதாட்டமாகக் கொண்டே இத் துறையில் பலர் இறங்கி இழப்பெய்தி தற்கொலை செய்துகொண்டது முந்தைய தலைமுறைகளில் அடிக்கடி நிகழ்ந்ததுண்டு. இப்போது இது போன்ற செய்திகள் வருவதில்லை. அவை மறைக்கப்படுகின்றனவா என்று ஐயமாக இருக்கிறது.

செ.:பங்கின் முக மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் உள்ள இந்த மாபெரும் இடைவெளி செயற்கையானதா?

.:  ஆமென்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். ஒரு நிறுவனத்தின் உண்மையான சொத்து மதிப்புக்கும் அதன் மொத்த பங்குகளின் முக மதிப்புக்கும் மாபெரும் இடைவெளி உள்ளது. அப் பங்குகளின் மொத்தச் சந்தை மதிப்பு ஏறக்குறைய அந் நிறுவனத்தின் மொத்தச் சொத்து மதிப்போடு ஓரளவு ஒத்துப்போகும்.

செ.:இது எவ்வாறு நிகழ்கிறது?

.:  நிறுவன ஆதாயத்தில் நிறுவனத்தில் விரிவாக்கங்கள் செய்யும் போது அதற்கு இணையாக பங்குகளின் முக மதிப்பைக் கூட்டுவது என்ற நடைமுறை கிடையாது. இலவயப் பங்குகள் பங்கு முதலீட்டாளர்களுக்குக் கொடுப்பதும் கட்டாயமில்லை. அது மட்டுமல்ல, அரையாண்டுக் கணக்கு முடிப்பின் போது ஆதாயத்தில் கணிசமான தொகையை, ஏறக்குறைய 80 நூற்றுமேனி வரை எதிர்பாராத செலவினங்களுக்கு என்று ஒதுக்கீடு (Reserve) என்ற தலைப்பில் காட்டி “ஒதுக்கி”விடுவார்கள். உண்மையில் இவையெல்லாம் பங்கு முதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டியவையாகும். நிறுவனத்தை நடத்துகிறவர்கள் பங்கு முதலீட்டார்களை ஏமாற்றி அடி முட்டாள்கள்களாக்குகிறார்கள் என்பதே உண்மை நிலை. அதன் விளைவாக முதலீட்டாளர்களிடையில் எதிர்பார்க்கத்தக்க கொதிப்பை ஆற்றுவதாகவே இரண்டாம் நிலை பங்குச் சந்தையை ஒரு சூதாட்டமாகப் பார்க்காமல் ஒரு சேமிப்பாகப் பார்க்கும் முதலீட்டாளர்களுக்குப் பயன்படுகிறது. பெரும் ஆதாயத்தை எதிர்பார்க்காமல் திடீர்த் தேவைகளுக்குப் பணத்தைப் புரட்டத்தக்க ஒரு முதலீடாக அது செயற்படுகிறது. பணம் தேவைப்படும் நேரத்தில் விற்க முடியாமல் தவிக்கவைக்கும் அசையாச் சொத்துகள் போல் அன்றி தங்க நகைகள் போல், வங்கி வைப்புத் தொகைகள் போல் அதை முறையாகக் கையாளக் கற்றவர்களுக்கு இது பயன்படுகிறது.

செ.:அப்படியானால் நம் போல் சராசரிக் குடிமகன் ஒருவன் முதல்நிலைப் பங்குகளில் முதலிடுவது எப்படி?

.:  அதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். சராசரிக் குடிமக்களை பங்குச் சந்தையின் பக்கம் வாரமல் துரத்துவதறகான திட்டமிட்ட பணிகளை 1980களிலேயே நம் ஆட்சியாளர்கள் முடித்துவிட்டார்கள். நரசிம்மராவின் ஆட்சியில்  தாராளமாக்கல் என்ற பொய் முழக்கத்துடன் ஆட்சியாளர்களின் தூண்டுதலில் ஊடகங்கள் விரித்த வலையில் மயங்கி புதிதாகப் பலர் பங்கு வெளியீட்டில் இறங்கினர். மக்களும் மிகுந்த ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் பங்கேற்றனர். தாராளமாக்கல் என்பது உண்மையில் அயல் நாட்டினர்க்கே என்பது புதுத் தொழில்முனைவோருக்குப் புரியத் தொடங்கியது. பலரால் அரசிடமிருந்து தொழில் தொடங்குவதற்கான இசைவைக் கூடப் பெற முடியவில்லை. அத்துடன் சரியான முகவரியே இல்லாத ஆயிரம் போலி நிறுவனங்கள் இந்தியப் பங்குப் பரிமாற்ற நடுவண வாரியத்தின் (செபி) ஒப்புதல் பெற்று பங்குப் பத்திரங்களை வெளியிட்டு உரூ. 5000/- கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டன. அத்துடன் அரசு வங்கிகளின் துணையோடும் ஆட்சியாளரின் அரவணைப்போடும் அர்சத் மேத்தா நடத்திய திருவிளையாடல்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் 10,000 கோடிக்கு மேல் இருக்கும். எவ்வளவுக்கென்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

பங்குப் பத்திரங்கள் காணாமல் போனாலோ ஏதங்களில் அழிந்து போனாலோ புதிய நகல் பங்குப் பத்திரங்கள் வழங்குவது உண்டு. ஆனால் ஆட்சியாளரின் செல்லப் பிள்ளைகளான அம்பானி வகையறாக்கள் ஏற்கனவே விற்கப்பட்டு பாதுகாப்பாக இருந்த பங்குகளுக்கே நகல் பத்திரங்களை விற்றார்கள். செபியும் ஆட்சியாளரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவை அனைத்தும் சேர்ந்து  பங்குச் சந்தை ஊக வாணிகத்திலிருந்து சராசரி குடிமக்களை வெளியேற்றின. இவ்வளவும் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு நடத்தியவை. பங்குகளை வெளியிடுவது பற்றி வெளிப்படையான அறிவிப்புகள் சராசரி மக்கள் படிக்கும் தாளிகைகளில் வெளிவருவதில்லை. ஏதோவொரு வங்கி அல்லது முகவாண்மை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு ஒரே நாளில் அனைத்தும் விற்றுப்போய்விட்டதாகச் செய்திகள் வரும். ஆனால் புதிய பங்குகளை அறிமுகம் செய்யும் போதே முக மதிப்பைப் போல் 100 மடங்கு வரை வெளியீட்டு மதிப்பை நிறுவும் அருவருப்பூட்டும் கொடுமை நிறைந்த நடைமுறையை அரசு நிறுவனங்களே, குறிப்பாக வங்கிகள் பின்பற்றுகின்றதைக் கேள்வி கேட்கத் துப்பற்ற படித்த அறிவிலிகள் நிறைந்ததாக இந்த நாடு இழிந்து போய் நிற்கிறது. அதற்கேற்றவாறே பங்கு முதலீடு குறித்த சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந் நிறுவனங்கள் கொள்ளை மலிவான வட்டியில் அந்த மக்களின் சேமிப்புகளிலிருந்து கடன் பெற்று கொள்ளை ஆதாயம் வைத்து மக்களுக்குத் தங்கள் பண்டங்களையும் பணிகளையும் வழங்குவதால் அந்த மக்களின் சேமிப்பின் பண மதிப்பு இன்றைய நிலையில் ஆண்டுக்கு 25லிருந்து 50 நூற்றுமேனி வரை கரைந்து போகிறது. அதாவது இன்று நீங்கள் ஓரிலக்கம் உரூபாய்களை ஒரு வங்கியின் சேமிப்புக் கணக்கில் செலுத்தினால் அடுத்த ஆண்டு வட்டியுடன் சேர்த்து உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொண்டு இப்போது அப் பணத்தால் வாங்க முடிவதில் முக்காலிலிருந்து பாதி அளவுதான் வாங்க முடியும். அதாவது பணத்தின் மதிப்பு அல்லது வாங்கும் ஆற்றல் அந்த அளவுக்குக் குறையுமாறு ஆட்சியாளர்களின் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளன. தங்கள் அருஞ்செயல்கள் என்று நம் பொதுமைத் தோழர்கள் ஆர்ப்பரிக்கும் பல்வேறு அரசுடைமை நிறுவனங்கள் ஆகிய சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள், மின் வாரியங்கள், கன்னெய்ய(பெட்ரோலிய) நிறுவனங்கள், நிலக்கரி நிறுவனங்கள், ஏற்கனவே அரசின் பிடியிலிருந்த தொடர்வண்டித் துறை ஆகியவை தங்களின் பணிகளுக்கும் பண்டங்களுக்குமான கட்டணங்களையும் விலைகளையும் உயர்த்துவதால் மக்கள் அரசுக்கும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் கூடுதல் விலைகளையும் கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது ஒவ்வொன்றாக வெளிப்படத் தோன்றியிருக்கும் வகைவகையான பலப்பல இலக்கங்களிலான கோடி உரூபாய்கள் ஊழல்களோடு நம் கவனத்துக்கு வராமல் இவர்களின் 60 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அவர்கள் அடித்த கொள்ளைகளின் விளைவுகளும் நம் பண மதிப்பு வீழ்ச்சியில் முகாமைப் பங்கேற்றுள்ளதில் ஐயமில்லை. இவ்வாறு மக்களைக் கொள்ளையடித்த ஊழல் ஆட்சியாளர்களை மிரட்டி வல்லரசியம் தன் கைக்குள் போட்டுக்கொண்டு திணிக்கும் உலக வங்கி உட்பட பல்வேறு உலகப் பண நிறுவனங்கள் தங்கள் பிடியுனுள் இது போல் சிக்கிய பிற நாடுகளில் இது போல் வல்லந்தமாக(பலவந்தமாக) கொள்ளை மலிவு விலையில் பறித்த பண்டங்களையும் தங்கள் நாடுகளில் விளைக்கப்பட்டு தொழில்நுட்பம் காலங்கடந்ததால் குப்பையில் சேர்க்க வேண்டிய போர்த் தளவாடங்களையும் உயர் தொழில்நுட்பக் கருவிகளையும் தாங்கள் நிறுவும் உயர் விலைகளில் இங்கு குவித்து இங்கு உருவாகும் பண்டங்களை குறைந்த விலைகளில் பறித்துச் செல்வதால் ஏற்றுமதிப் பண்டங்களை விளைக்கும் உள்நாட்டினரின் வருவாய் குறைதல், விலை கூட்டப்பட்ட நம் தேவைப் பண்டங்களின் இறக்குமதியால் விலைகளில் ஏற்றம், ஏற்றுமதியால் பண்டங்களின் கிடைப்பு குறைந்து அதனால் ஏற்படும் விலை ஏற்றம், அத்துடன் இந்திய ஏம வங்கி மூலம் அமெரிக்க டாலருக்கு எதிராக நாள்தோறும் இந்திய பண மதிப்பைக் குறைக்கும் இந்திய ஆட்சியாளரின் கொடுங்கோன்மை என்று இந்திய ஆட்சியாளர்களின் எண்ணிலடங்கா குற்றஞ்சார் நடவடிக்கைகளால் பண மதிப்பின் இந்த வீழ்ச்சி நடைபெறுகிறது. இதிலிருந்து தப்ப கூடுதல் வட்டி தருவோம் என்று வாக்களிக்கும் போலி நிறுவனங்களிடம் அரும்பாடுபட்டு வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி தாம் மிச்சம் பிடித்த பணத்தை மக்கள் போட்டுவைத்தாலோ ஆட்சியாளர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. வரி தண்டுகிறோம் என்ற பெயரில் தனிமனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கிற, வீடுகளுக்குள் புகுந்து காவாலித்தனம் செய்கிற ஆட்சியாளர்கள் குடிமக்களின் பணத்தைக் கையாளும் நிறுவனங்கள் அல்லது தனியாள்கள் மீது எந்த விதமான கண்காணிப்புக்கும் ஆயத்தமாக இல்லை. எடுத்தால் களத்துக்குள் புகுந்து வழக்குகளை முன்வைக்கும் நம் நய(நீதி) மன்றங்களின் தலைவர்களின் கண்களில் தங்கள் அரிய சேமிப்புகள் இப்படிப் பறிபோவது பற்றி நாள்தோறும் தொலைக்காட்சிளின் முன் நின்று நெஞ்சிலடித்து அப்பாவி மக்கள் அலறுவது படவில்லை. மாறாக இம் மக்கள் அதிக வட்டிக்குப் பேராசைப்பட்டதன் விளைவு இது என்று வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுகிறார்கள். ஆனால் இன்று நாட்டில் மக்களிடையிலான கொடுக்கல் வாங்கலில் நிலவும் வட்டி விகிதத்தை விட இந்தப் “போலி” நிறுவனங்கள் அளிக்க முன்வரும் விகிதங்கள் மிக மிகக் குறைவு என்பதுதான் உண்மை நிலை. உண்மையில் மக்களின் சேமிப்புகள் பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணிக்குப் போட்டியாக வந்து விடக்கூடாது என்ற ஆட்சியாளரின் திட்டத்தின் ஒரு பகுதிதானே இவை அனைத்தும்? இந்தப் பகற்கொள்ளையை இந்தியக் குமுகத்தின் மாபெரும் வலிமை மரபு என்றும் மக்களின் “குடும்பச் சேமிப்பு மரபு” என்றும் இது தவிர வெளிநாட்டு மூலதனம் எதுவும் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றும் மாவட்டம் தோறும் அரங்குகள் அமைத்தும் இதழ்களில் கட்டுரைகள் வரைந்தும் முரசு கொட்டி வருகிறார் பனியா – பார்சிகளின் நெடுநாள் ஊதுகுழலான “தணிக்கையாளர்”(ஆடிட்டர்) குருமூர்த்தி. உண்மையில் இன்று பெருந்தொழில் நிறுவனங்கள் குவிக்கும் மாபேரும் ஆதாயங்கள் நம் “பாட்டாளிகளின் கூட்டாளிகள்” கூறுவது போல் பாட்டாளிகளைச் சுரண்டுவதன் விளைவல்ல, சராசரி குடிமக்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் குருமூர்த்தி விதந்து கூறும் “குடும்பச் சேமிப்பு மரபை”ப் பயன்படுத்திச் சுரண்டுவதன் விளைவுதான் என்பதையும் இந்தச் சுரண்டலில் தங்கள் பங்குக்காகத்தான் நம் “பாட்டாளியரின் கூட்டாளிகள்” அவர்களைத் திரட்டிப் “போராடுகிறார்கள்” என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

செ.:பங்கு முதலீடு கடைசிக் குடிமகன் வரைக்கும் எட்ட என்ன செய்யலாம் என்பது குறித்து ஏதாவது கருத்து கொண்டிருக்கிறீர்களா?

.:  ஆம். அதைப் பற்றி ஒரு திட்டத்தை முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
        வருமான வரியை ஒழிக்க வேண்டும்.
        இரண்டாம் நிலை பங்குச் சந்தையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
        10 கோடி உரூபாய்களும் அதற்கு மேலும் மூலதனமுள்ள நிறுவனங்களுக்கு 49 நூற்றுமேனிக்கு மிகாமல் முனைவோரும் எஞ்சிதைப் பங்குப் பத்திரங்கள் மூலமாகவும்தான் மூலதனம் திரட்ட வேண்டும்.
        பங்குப் பத்திர வெளியீட்டில் முகமதிப்புக்கு மேலே விலை நிறுவக் கூடாது.
        பங்குகளின் மறுவிற்பனையும் மறுவாங்குதலும் அந்தந்த நிறுவனங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.
        அவ்வாறு மறுவிற்பனையாகும் விலைதான் அந் நிறுவனப் பங்குகளின் எதிர்கால முகமதிப்பாக இருக்கும். அந்த மதிப்பின் நூற்றுமேனியில்தான் ஈவுத்தொகை கணக்கிடப்பட வேண்டும்.
        பங்குகளின் மறுவாங்குதலால் நிறுவனம் பண நெருக்கடிக்கு உள்ளாகாமல் தவிர்க்கவும் எதிர்பாராச் செலவுகளை எதிர்கொள்ளவும் மொத்த மூலதனத்தின் ஒரு பகுதியை காப்புப் பணமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இதையும் மொத்த முதலீட்டினுள் கணக்கிட வேண்டும்.
        தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன்கள் மூலம் மூலதனம் திரட்டக் கூடாது. பங்குப் பத்திரங்கள் மூலம்தான் திரட்ட வேண்டும்.
        நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு ஆதாயத்தில் ஒரு குறிப்பிட்ட நூற்றுமேனியை பங்கு பத்திரங்களாக வழங்க வேண்டும்.
        தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலதனக் கடன் வழங்கக் கூடாது.
        சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள் பராமரித்தல், குறுகிய கால வைப்புகள், கேட்போலைகள், பட்டியல்கள் செல்லாக்குதல், ஊர்திக் கடன்கள், தனியார் வீடமைப்புக் கடன்கள், நகைக் கடன்கள், மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், அரசு மற்றும் உள்ளூராட்சிகளுக்குரிய கட்டணங்களை வாங்கிச் செலுத்துதல் என்ற எல்லைக்குள் அவற்றின் செயற்பாடுகளை அடக்க வேண்டும். தங்கள் இயல்புக்கேற்ப காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்களைச் செயற்படுத்தலாம்.
        50 கோடி உரூபாக்கள் முதலீட்டுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பங்குகள் அந் நிறுவனம் அமையவுள்ள ஒன்றிய எல்லைக்குள் அடங்கிய உள்ளுர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். அதிலும் ஒருவருக்கு ஓர் இலக்கம் உரூபாக்களுக்கு மேல் பங்கு வழங்கக் கூடாது.
        50 கோடி முதல் 100 கோடி வரை முதலீடுள்ள நிறுவனங்களின் பங்குகள் மாவட்ட மக்களுக்கும் அதற்கு மேற்பட்ட முதலீடுள்ளவற்றின் பங்குகள் மாநிலங்களின் எல்லைகளுக்குட்பட்ட மக்களுக்கும் மட்டும் வழங்க வேண்டும். மீயுயர் முதலீடுள்ள நிறுவனங்கள் அரசின் முழு முதலீட்டில்தான் இயங்க வேண்டும்.

செ.:அயல் நேரடி முதலீடு என்பது பற்றி மிக உயர்வாகப் பேசுகிறார்களே, அது பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறதே!

தொடரும்.......

0 மறுமொழிகள்: