18.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 15

12.இந்திரனே! வருணனே! எங்களைக் கா!
(தோரா. தி.மு.1,00,00 - 50,000)

            அதோ நம் வயல்களில் யாரோ மாட்டு மந்தைகளை மேய்க்கிறார்கள். நாம் பார்க்கும் சேரியில் வந்து ஒரு பெண் கூவுகிறாள். உடனே நண்பகல் உணவருந்திக்கொண்டிருந்த அனைவரும் தடிகளையும் கூர்மையான படைக்கலங்களையும் கல் முதலியவற்றையும் எடுத்துக்கொண்டு ஓடுகின்றனர். மந்தை மேய்ப்பவர்களுக்கும் சேரி வாழ்வோருக்கும் கடும் சண்டை நடைபெறுகிறது. மாடு மேய்ப்பவர்களிடம் கற்கருவிகள் தவிர வேறு படைகள் எதுவும் இல்லையாதலால் எளிதில் தோற்றுப் பின்வாங்குகிறார்கள். சண்டையில் இறந்தவர் தவிர மற்றையோர் மாடுகளை ஓட்டிக்கொண்டு ஓடி மறைகின்றனர். சேரிமக்கள் எஞ்சி நின்ற சில மாடுகளை ஓட்டிக்கொண்டு சேரிக்குத் திரும்புகின்றனர்.

            நாம் தோற்றோடும் ஆயர்கள் பின்னர் சென்று அங்கு நடப்பவற்றைக் காண்போம். ஓடி வந்தவர்கள் ஒரு மலைக் குகையின் முன் வந்து கல்லைக் கடைந்து தீமூட்டி மாடுகளில் சிலவற்றைக் கொன்று பச்சையாகவே உண்டுகொண்டிருக்கின்றனர். அப்போது ஒருவன் எங்கிருந்தோ ஓடி வருகிறான். வந்தவன் அவர்களிடம் நான் தசயர்களுடன் ஏற்பட்ட சண்டையில் தப்பியோடி அவர்கள் குடியின் அருகில் மறைந்திருந்தேன். சண்டை முடிந்ததும் அவர்கள் வந்து எரிந்து கொண்டிருந்த நெருப்பருகில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு கிழவனிடம் நம்மிடமிருந்து கிடைத்த ஒரு கன்றைக் கொடுத்தான். இன்னும் இரண்டு மூன்று பேரும் குடிசையினுள்ளிருந்து வெளியே வந்தனர். ஏற்கனவே அமர்ந்திருந்த கிழவனுடன் இணைந்து நெருப்பையும் வருணன் என்பவனையும் இந்திரன் என்பவனையும் புகழ்ந்து உரத்த குரலில் பாடத் தொடங்கினர். பாடிக் கொண்டே உயிருடன் அக் கன்றைத் தீயிலிட்டனர். மற்றவர்களும் கூடிநின்று தங்களுக்கு இன்று போலவே என்றும் வெற்றி தருவாயாக என்று வேண்டினர். நாமும் அவர்களைப் போலவே ஒரு கன்றைத் தீயில் போட்டு அதே போன்று நெருப்பையும் வாரணனையும் இந்திரனையும் வேண்டினால் என்ன? என்கிறான்.
                 
            சொன்னவன் அத்தோடு நிற்காமல் தானே சென்று ஒரு கன்றைப் பிடித்துவந்து தீயைச் சுற்றி நின்றவர்களில் இன்னொருவனுடைய உதவியுடன் கன்றைத் தூக்கித் தீயில் எறிகிறான். எறிந்துவிட்டு குரலை உயர்த்திப் பாடத் தொடங்குகிறான். இக் கூட்டத்தார் நாம் தொடக்கத்தில் பார்த்த மக்கள் அளவுக்கு முன்னேறாத நிலையிலேயே இருக்கின்றனர். பேச்சு, குறைவாகவும் செய்கைகள் அதிகமாகவும் இருக்கின்றன. இருட்டத் தொடங்கிவிட்டது. தொழுகை முடித்த பின்னர் நெருப்போம்புவோர் தவிர்த்தோர் குகையினுள் நுழைகின்றனர். அங்கே ஒன்றிரண்டு பெண்களும் பல ஆண்களும் கொண்ட இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து அமர்ந்துகொள்கின்றனர்.
                                                                                                        
            நாம் இனிப் போகலாம். இவர்கள் எங்கும் உறைந்து வாழாமல் இன்னும் நாடோடிகளாகவே திரிகின்றனர். முன்னைவிட வெற்று நிலம் சுருங்கிவிட்டதால் மாடுகளை மேய்க்கும்போது முன்னேறிய மக்களுடன் இவர்கள் அடிக்கடி போரிட நேர்ந்தது. கருவுற்றோரும் குழந்தைகளுள்ளோரும் போர்களின் போதும் விலங்குகளாலும் அதிகமாகச் செத்துப் போயினர். இவர்களிடையே பெண்களின் குறைவுக்கு இவையே காரணமாக இருக்கவேண்டும்.
                           
            அகரமுதலியில் தசக் கூலி என்ற சொல்லுக்கு உழவுக் கூலி என்றே பொருள் கூறப்பட்டிருக்கிறது. எனவே வேதங்களின் தசுயூக்கள் என்று கூறப்படுவோர் உழுவோராகவே இருக்கவேண்டும். தசம்’ என்ற வேரைக் கொண்ட தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போயிருக்கலாம். இவ்வாறு உழவர்கள் குமுகத்தில் உழைப்புப் பிரிவினையில் கீழ் நிலைக்குச் சென்று அடிமை நிலையை எய்திய போது உழவர் என்ற பொருள்தரும் சுயூ என்ற சொல்லிலிருந்து அடிமைப் பொருள் தரும் தாசர் என்ற சொல் தோன்றியது.

பின்குறிப்பு: இன்றும் களங்களில் நெல் அளக்கும் போது “இலாபம், இரண்டு” என்று தொடங்குவதை ஊர்ப்புறங்களில் காணலாம். அவ்வாறு தொல்பழங்காலத்தில் உழவன் கூலியை “தசம்” என்று முதலில் அளந்துவிட்டு உடமையாளருக்கு ஒன்று, இரண்டு என்று ஒன்பது வரை அளந்தபின் மீண்டும் தசம் என்று தொடங்கியிருக்க வேண்டும். பத்து என்பது பற்று என்பதன் மருவாக இருக்க வேண்டும். பின்னர் 10க்கு மேல் நூறு, ஆயிரம் என்று பத்தின் பெருக்குத் தொகைகள் வழக்கத்துக்கு வந்து பெருக்கல், வகுத்தல் ஆகிய கணக்குமுறைகள் தோன்றிய பின் கூலியை மொத்தத்தில் இருந்து கணிக்க முடியும் என்பதால் பத்து, அதாவது தசம் இறுதிக்குப் போய்விட்டிருக்கும். பழைய பத்து இப்போது தொன்பது(பழைய பத்து) என்று தொடங்கி மருவி இன்றைய ஒன்பதாகத் தமிழிலும் நவம்(புதியது) என்று சமற்கிருதத்திலும் அழைக்கப்பட்டிருக்கும். தொல் + நூறு = தொன்னூறு தொண்ணூறு, தொல் + ஆயிரம் = தொல்லாயிரம் தொள்ளாயிரம்.

            இதே போல்தான் சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் குமரிக் கண்ட வாணிகர்களின் தங்கிடமாக உருவாக்கப்பட்ட நகரங்களையும் அவற்றை அடுத்து அவற்றின் பின்னணியில் வளர்ச்சி அடைந்திருந்த வேளாண்மை சார்ந்த குடியிருப்புகளையும் வளர்ச்சி குன்றிய கால்நடை மேய்ப்பர்கள் தாக்கி அழித்த நிகழ்வைத்தான் ஆரிய அநாகரிகர்களின் தாக்குதல் என்று இன்றைய வரலாற்று வரைவு கூறுகிறது. அதற்கு முன் பலமுறை சிந்தாற்று வெள்ளத்தால் அந் நகரங்கள் அழிந்துள்ளன. அவை ஒவ்வொரு முறையும் மீட்சி பெற்ற போது முந்திய முறையை விட தரம் குன்றியனவாக இருந்தனவென்று அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. சிந்து நாகரிகத்தின் மூல ஊற்றான குமரிக் கண்டம் அடுத்தடுத்த கடற்கோள்களால் தாக்குற்று வலிவிழந்ததுதான் அதற்குக் காரணம். இறுதியில் குமரிக் கண்டம் முற்றிலும் அழிந்து போனதால் சிந்து நாகரிகம் மீண்டெழவில்லை.

            வேளாண்மைக்கும் கால்நடை வளர்ப்புக்கும் உள்ள முரண்பாடு ஓர் அடிப்படைத் தன்மை கொண்டது. நிலைத்திணை – தழையுண்ணிகள் – ஊனுண்ணிகள் இடையிலுள்ள இயற்கையான சமநிலையை திட்டமிட்ட கால்நடை வளர்ப்பு குலைக்கிறது. ஒரு காட்டுப் பகுதியில் முனைப்பான இடைவிடா மேய்ச்சல் இருக்குமானால் மரங்கள் முதுமையடைந்து பட்டுப்போனால் புதிய மரங்கள் வளர வளர கால்நடைகள் அவற்றைக் கறம்பி அழித்துவிடும். அதனால்தான் காடும் காடுசார்ந்த இடமும் என்று தொல்காப்பியம் வரையறுத்துள்ள மலையடிவாரங்கள் உலக முழுவதும் மொட்டைப் புல்வெளிகளாகத் திரிந்து போயுள்ளன. நம் ஆட்சியாளர்கள் தங்கள் அறியாமையால் வகுத்துள்ள காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டங்களால் தழையுண்ணிகள் காடுகளின் தாங்குதிறனை மிஞ்சிப் பெருகி மலைக் காடுகளையும் அழித்து சமவெளிகளில் புகுந்தும் அவற்றைத் தொடர்ந்து கொல்விலங்குகளும் வேளாண்மைக்கும் மக்கள் உயிர் உடைமைகளுக்கும் அறைகூவலாகி நிற்கின்றன.

0 மறுமொழிகள்: