18.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 16

13. வெண்ணெய்யும் கண்ணனும்.
(தோரா. தி.மு. 1.00,000 - 50,000)
                                      
            இதோ ஒரு குடியிருப்புக்கு வந்திருக்கிறோம். எங்கும் மாட்டுச் சாணத்தின் வாடை. சுற்றிலும் மந்தை மந்தைகளாக மாடுகள் காணப்படுகின்றன. இருள் கவிந்து கொண்டிருக்கிறது. ஒரு புறத்தில் புகைந்துகொண்டிருக்கும் நெருப்பில் கட்டைகளை இட்டு இரவு நெருப்பு வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் சில முதியோர்கள். குடிசைகளினுள் சில சிறு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி சிந்துகின்றன.

            30 ஆண்டுகள் அகவை மதிக்கத்தக்க ஒரு பெண் குடியிருப்பின் நடுவுக்கு வருகிறாள். அங்கே நிற்கும் ஓர் அகன்று படர்ந்த அரச மரத்தின் அடியில் வந்து நிற்கிறாள். அவள் இடையில் அழகிய தோலாடையையும் மார்பில் மயிரில் நெய்த ஆடையையும் அணிந்திருக்கிறாள். அரச மரத்தின் அடியில் பெரிய பானையும் அதனுள் ஒரு மரக் கொம்பும் இருக்கிறது. விளிம்பெல்லாம் பாலும் வெண்ணெய்யும் காணப்படுகின்றன. மரத்தடிக்கு வந்த பெண் பெண்டுகளா எல்லாரும் வாருங்கள். இன்று வெண்ணைய் விழாவல்லவா? என்று கூவுகிறாள். குடிசைகளிலிருந்து பல இளம் பெண்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள்.

            முதலில் வந்த பெண் பிறவற்றைவிடப் பெரியதாகிய ஒரு குடிசையினுள் சென்று ஓர் இளைஞனைக் கையைப் பற்றி அழைத்து வருகிறாள். அவன் பிறரைவிடக் கருமையாகக் காணப்படுகிறான். அவன் மிக அழகிய தோலாடையின் மேலே ஒரு மயிராடைக் கச்சை உடுத்தியிருக்கிறான். கையிலே புல்லாங்குழல் வைத்துள்ளான். தலையில் மயிலின் பீலிகளில் இருந்து கொய்யப்பட்ட இரண்டு கண்கள் சொருகிவைக்கப்பட்டுள்ளன. கழுத்தில் மணமிகுந்த மலர்களாலும் தழைகளாலும் கட்டிய மாலை தொங்குகிறது. அரச மரத்தடியில் இளைஞனைக் கொண்டு நிறுத்திய பெண் கும்மியடித்தபடிக் குரவையிட்டுக் கொண்டே இளைஞனைச் சுற்றி வருகிறாள். பிற பெண்களும் குரவையிட்டுக்கொண்டே அவனைச் சுற்றிச் சுற்றி ஆடி வருகிறார்கள்.

            இளைஞன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கிறான். பெண்கள் இசையில் ஒன்றியவர்களாய்க் கும்மியடித்துக்கொண்டே சுற்றி வருகிறார்கள். காதில் இசை தேனாய்ப் பாய்கிறதல்லவா? அதோ பாருங்கள்! மாடுகள் கூட அசைபோடுவதை நிறுத்தி இசை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை! குழலிசை நிற்கிறது. முதற்பெண் மீண்டும் குரவையொலிக்க மற்ற பெண்களும் உடன் இசைக்கிறார்கள். முதற்பெண் இனிய குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறாள். மற்ற பெண்கள் கும்மியடித்து அவனுடன் ஆடுகிறார்கள்.

                        அசோதை பெற்ற அருங்குழவி
                        அக்கை பெற்ற அருங்குழவி
                        தவழும் போதில் ஆனிடத்தில்
                        இவர்ந்து பாலுண்ட இருங்குழவி
                        சித்திஎன் தோளில் விளையாடி
                        சித்தம் கவர்ந்தருங்குழவி
                        காலூன்றும் போதில் ஆன்மடியில்
                        பாலைக் கறந்த பெருங்குழவி
                        கன்றோடு கன்றாய் விளையாடி
                        நன்றாய்க் கலந்த கவின்குழவி
                        சிறுவனாம் போதில் பிரையேற்றி
                        நறுந்தயிர் கண்ட குறுங்குழவி.
                        கொம்பு கொண்டு தயிர்கடைந்து
                        பொங்கு வெண்ணெய் தருங்குழவி
                        வெண்ணெய் உருக்கி நெய்வார்த்துக்
                        கண்ணொளி அகலினை அருள்குழவி.
                        திமிலுயர் காளை பொருதுவென்று
                        முலையுயர் கன்னியர் சேர்குழவி
                        புல்வளர் மூங்கில் குழலெடுத்துக்
                        கல்லுரு கிசை வளர்குழவி
                        பொருதெமை வென்ற தசயர்தமைப்
                        பொருந்த வைத்த பெருங்குழவி
                        ஆனைந்து வழங்கி மாறாயெமக்கு
                        ஏனைப் பொருளீந்த இன்குழவி
                        கன்னிய ரெத்தனை மருவினும்
                        என்னை மறவா என்குரிசில்.

மூத்த பெண் பாடி முடிக்கிறாள். முடிக்கவும் ஒரு பெண் ஒரு குடிசையினுள் சென்று ஒரு மண்பாண்டத்தை எடுத்து வருகிறாள். அதனை இளைஞன் அருகில் அமர்ந்திருக்கும் மூத்த பெண்ணருகில் வைக்கிறாள். அவள் பானையினுள்ளிருந்து கைநிறைய வெண்ணெயை எடுத்து அவன் வாயில் ஊட்டுகிறாள். ஒவ்வொரு பெண்ணும் சிறிது வெண்ணெய் எடுத்து அவன் வாயில் ஊட்டுகிறார்கள். பின்னர் அவனை அழைத்துக் கொண்டு அப்பெரும் குடிலினுள் நுழைகின்றனர். உள்ளே ஒரே கும்மாளமும் சிரிப்பும் கேட்கிறது.
 இதுவரை நடந்த ஆடலையும் பாடலையும் கண்டும் கேட்டும் களித்துக்கொண்டிருந்த சேரியிலுள்ள ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளும் கலைகின்றனர். சேரிக்கு வெளியே பேச்சுக் குரல்கள் கேட்கின்றன. மாடுகளின் மீது சுமைகளுடன் ஒரு கூட்டம் வருகிறது. மாடுகளின் மீதிருந்த பொதிகளை இறக்குகிறார்கள். சேரித் தலைவன் கண்ணன் குடிலிலிருந்து வெளியே வருகிறான். சாத்துத் தலைவன் கண்ணனை நெருங்கி வெண்ணெய் விழாக் காண வந்துவிடத்தான் எண்ணினோம். ஆனால் நாவாய் காலந்தாழ்ந்தே வந்தது. அதனால்தான் நேரத்துக்கு வர இயலவில்லை என்கிறான்.
                                   
            அப்போது நாவாய்த் தலைவன் நாயக்கன் வந்து கண்ணா நாங்கள் நாவாயில் ஆற்றில் வந்துகொண்டிருந்த போது ஒரு கூட்டம் எங்கள் மீது கற்களை எறிந்தும் வளை தடிகளை வீசியும் தாக்கியது. போரில் எம் தலைவன் இறந்துவிட்டான். நான் தலைமையேற்று நாவாயை ஒரு வழியாகக் கொண்டு சேர்த்தேன். கொஞ்சம் தவறியிருந்தாலும் நாங்களும் இறந்திருக்க வேண்டியதுதான். இப்பொழுதெல்லாம் நாவாயின் பாதிப் பாரம் எங்கள் படைக்கலங்களாகவே உள்ளன என்று கூறி முடிக்கிறான்.
                              
            நாயக்கன் முடித்ததும் சாத்தன் தொடர்கிறான் பண்டங்களை ஏற்றிக்கொண்டு நாங்கள் வரும் வழியில் ஒரு வறண்ட பகுதியைத் தாண்டும்போது அங்கிருந்த சேரியைச் சேர்ந்த கூட்டத்தினர் எங்களைத் தாக்கினர். வறட்சியால் உணவின்றி ஏற்கனவே வாடியிருந்த அவர்களை எளிதில் வெல்ல முடியுமென்றிருந்தோம். ஆனால் உயிர்ப் போராட்டமாக அவர்கள் போராடியதால் வெல்வது கடினமாகவே இருந்தது. அவர்களில் பலரும் நம்மில் பலரும் இறந்தனர்! இருப்பினும் அவர்கள் சில பண்டங்களைப் பறித்துச் சென்றுவிட்டனர் என்று கூறி முடிக்கிறான்.
                         
            இரவில் ஆடிக் களித்ததால் சேரியினுள்ளோரும் இரவு முழுவதும் நடந்து களைத்ததால் வாணிகரும் உண்டு உறங்கச் செல்கின்றனர். தாமும் செல்வோம். நாம் முன்பு நெய்தல் மருத நிலங்களின் நாகரிக வளர்ச்சிகளைக் கண்டோம். இப்போது இவ் விரண்டு நில மக்களுடனும் முல்லை நில மக்களும் பண்டமாற்றுச் செய்யத் தொடங்கியதைக் காண்கிறோம். நாம் அறிந்த கண்ணன் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்து தாய்மாமனுக்கு அஞ்சி இடைச்சேரியில் மறைவாக வளர்க்கப்பட்டதாகவும் சிறுவனாக இருக்கும்போது குறும்பு மிகுந்தவனாக வெண்ணெய்த் திருடி உண்டு வளர்ந்தாகவும் தன்னைவிட அகவை முதிர்ந்த தன் அத்தை முறையுடைய ஒரு பெண்ணைக் காதலியாகக் கொண்டிருந்ததாகவும் ஆயர்குடி இளம்பெண்களையெல்லாம் மேவியதாகவும் தாய்மாமன் கஞ்சனைக் கொன்று நாட்டைக் கைப்பற்றியதாகவும் பழங்கதைகள் கூறும்.
           
            ஆனால் மாந்த நாகரிக வளர்ச்சியில் மாட்டிறைச்சியை உண்ட முல்லை நில மாந்தன் பாலைக் கறக்கவும் காய்ச்சவும் பாலிலிருந்து வெண்ணெய் தயிர், மோர், நெய் முதலிய ஆனைந்துகளைப் பெறவும் இயன்ற போதே அவன் பிற புலத்தாருடன் தம் பண்டங்களை மாற்றி வாணிகம் செய்து கலந்திருக்க முடியும். இப் பெருஞ்செயலை இயற்றியவனையே கண்ணன் குழந்தைப் பருவக் கதை காட்டுகிறது. மேலும் ஆயர்களுக்கு மாட்டுடன் நெருங்கிய பழக்கம் ஏற்படுத்துவதற்கே ஏறு தழுவலில் வெற்றிபெற்றவனுக்கே பெண் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இதனை ஏற்படுத்தியவனும் கண்ணனே. ஆயர்குலப் பெண்கள் ஆனைந்துகளைக் கொண்டு பிற புல மாந்தரிடைப் பண்ட மாற்றியதைத் தெளிவாகக் கழக நூற்கள் கூறுகின்றன. காசுக்கு விற்கும் நடைமுறை இப்போது உள்ளது.

            அதே போல கண்ணனின் தாய் அசோதை என்றே சிலப்பதிகாரம் கூறுகிறது. (அசோதை பெற்றெடுத்த கொலைக்களக் காதை - 46). கண்ணன் தன்னின் முதிய ஒரு பெண்ணைக் காதலியாகக் கொண்டிருக்கலாம். அது மீப் பழங்காலமாதலால், அக் காலத்தில் தந்தை என்ற உறவும் அத்தை என்ற உறவும் ஏற்பட்டிருக்க முடியாது. சித்தி என்று கூறுவது இழிவென்று கருதிப் பின்னர்க் கதை எழுதியோர் அத்தை என்றும் கூறியிருக்கலாம். அது என்னவாயினும் நமக்கு முகாமையல்ல. புல்லாங்குழலையும் அவன் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் கஞ்சனோடு போராடி வடமதுரையை ஆண்டவன் பிற்காலத்தவன். அவன் பெரும்பாலும் ஆடு வளர்ப்போராகிய குறும்பர்களின் தலைவனாக இருக்க வாய்ப்புண்டு. விசயநகரப் பேரரசில் செல்வாக்குச் செலுத்தியவர்கள் இக்குறும்பர்களே. சோழ மன்னன் கரிகாலன் இவர்களை நாட்டை விட்டுத் துரத்தினான். அவர்களில் கணிசமானோர் அரசுக்கு அடங்கி இடையர்களில் ஒரு பிரிவாக இங்கேயே தங்கியிருக்கின்றனர். கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் வாழும் கிரிட்டினவகை எனப்படும் குறுப்புகளும் இக் குறும்பர்களே. வள்ளுவர் குறிப்பிடும் கொல்குறும்பு, நம் மக்களிடையில் மிகத் தாராளமாக வழங்கும் குறும்பு ஆகிய சொற்கள் இவர்களின் கடந்தகால நடவடிக்கைகளின் வரலாற்றுத் தடயங்கள்.    

பிற்சேர்க்கை: முல்லை நில நாகரிகத்தின் வளர்ச்சியில் கண்ணனுக்கு முந்திய ஒரு கட்டம் இருந்திருப்பதற்கான வலுவான தடயங்கள் உள்ளன. அதுதான் பலராமன் என்று சமற்கிருத நூல்கள் குறிப்புடும் பலதேவனின் பங்களிப்பு. பலதேவனின் கொடியான பனைமரம் அவன் முல்லை நிலத்தைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. அவன் ஆயுதமான கலப்பை அவனை வேளாண்மையோடு தொடர்புபடுத்துகிறது. இதில் ஏதாவது முரண் இருந்தால் அவனைப் பற்றிய ஒரு தொன்மச் செய்தி அதற்குரிய விடையைத் தருகிறது: கிருஷ்ணனாற் பிருந்தாவனத்திற்கேவப்பட்டுக் கள்ளுண்டு களித்துக் கோபிகைகளுடன் விளையாட யமுனையை அழைக்க வாராதிருத்தல் கண்டு கோபித்துக் கலப்பையால் இழுத்தவர்… (அபிதான சிந்தாமணி, பலராமர் – 6).  

            கலப்பையால் ஆற்றை இழுத்தல் என்பது வேளாண்மைக்காக ஆற்று நீரைத் திருப்புவது அன்றி வேறில்லை. நன்செய் வேளாண்மையின் தோற்றத்தைக் கீழ் வருமாறு தடம் பிடிக்கலாம். மேலே மலை நெல்லைப் பற்றிக் கூறினோம்[1]. மழைக் காலத்தில் மலையில் முளைத்து நிற்கும் நாற்றுகளை மழை நீர் அடித்து வந்து குத்துச்சாய்வான நிலங்களில் ஓடி கடற்கரையை நெருங்கும் போது தட்டையான நிலத்தில் போட்டுவிட்டுப் போகும். அங்கு அது வளர்ந்து காய்த்து முற்றிய நிலையில் அதைப் பார்த்த தொல் பழங்கால மக்கள் அதிலிருந்து அரிசி எடுத்து உண்ணத் தொடங்கியிருக்க வேண்டும். இயற்கையைப் போலச் செய்வது அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு திசை. அந்த அடிப்படையில் குடியிருப்புகளில் நீர் புழங்கும் இடங்களில் நெல் முளைப்பதைப் பார்த்த பெண்கள் நெல்லை முளைக்க வைத்து ஆற்று நீரில் போட்டு அது சென்று ஒதுங்கி வளர்ந்து பலன் தரும் வேளையில் அறுவடை செய்திருக்கலாம். இந்த கட்டத்தின் ஒரு குமுகியல் புதைபடிவமாக தமிழகத்தில் விளங்குவது முளைப்பாரி திருவிழாவாகும். பல்வேறு தவசங்களையும் கூலங்களையும் வீட்டில் கலங்களில் வளர்த்து ஆறு, கால்வாய்,குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கரைத்துவிடும் இந்த நிகழ்முறைக்கு இதுதான் சரியான விளக்கமாக இருக்க முடியும்.

            குமரி மாவட்டத்திலும் அதை ஒட்டிய நெல்லை – தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலும் முளைப்பாரித் திருவிழா காணப்படவில்லை. அதாவது குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய தமிழகத்துக்கு மக்கள் குடியேறிய காலகட்டத்தில் இங்கு முளைத்த தவசங்களை ஆற்றில் பாரிக்கும் (பாரித்தல் – பரப்பல்) கட்டத்தில் இருந்திருப்பார்கள் என்றும் தென் மாவட்டங்களில் எடுத்த எடுப்பில் மேம்பட்ட வேளாண்முறையை வந்தேறிகளிடமிருந்து கற்றிருப்பார்கள் என்றும் கொள்ளலாம்.   

            முளைப்பாரிப்புக்கு அடுத்த கட்டம்தான் மழைநீர் ஒதுக்கும் சேற்றில் தவசங்களை விதைத்தல். இதில் உணவுக்குப் பயன்படுத்த முடியாத, இன்று நாம் களை என்று களையும் புல்பூண்டுகள் உடன் வளர்ந்து தவசங்களின் விளைச்சலைப் பாதிப்பதால் களைகளுக்கும் தவசப் பயிர்களுக்கும் ஒரே நேரத்தில் பூத்துப் பால்பிடிப்பதில் போட்டியைத் தவிர்ப்பதற்காக நாற்றுவிட்டு வளர்ந்த பின் வயலை உழுது களைகளைச் சேற்றினுள் புதைத்து அவை வளர்ந்து பூப்பதற்கு முன் தவசப் பயிர் பால்பிடித்து முடித்துவிடுவதாகிய விளைவத் தரும் உத்தியெல்லாம் குமரிக் கண்டத்திலிருந்து வந்தேறிய மக்கள் இங்கு புகுத்தியவை.  

             குமரிக் கண்டத்தில் மருத நிலத்தில் நிகழ்ந்த, ஆற்று வெள்ளம் அள்ளி வந்து படிவிக்கும் அள்ளல் மண்ணில் தவசத்தை விதைப்பதைப் பார்த்துத்தான் பலதேவன் ஆற்றுநீரைத் திருப்பி நிலத்தை கலப்பையால் உழுது சேறாக்கி அதில் தவசங்களை விதைத்து முல்லை நிலத்திலும் நன்செய் வேளாண்மைக்கு வித்திட்டிருக்க வேண்டும். தொடக்கத்தில் மனிதர்களே கலப்பையை இழுத்த நிலையில் மாட்டை, காளையை அதற்குப் பயன்படுத்தும் வகையில் ஏறுதழுவல் என்ற நடைமுறையை வகுத்தவன் கண்ணனாக இருக்க வேண்டும். அதனாலேயே பலதேவனை கண்ணனின் அண்ணனாகத் தொன்மங்கள் காட்டுகின்றன போலும். அதே நேரத்தில் பலதேவன் அறிவுக் கூர்மை இல்லாத குடிகார முரடன் என்றும் தொன்மங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படை என்னவாக இருக்கக் கூடும்?

            பலதேவனின் கொடி பனையாகவும் அவன் கள்ளைக் குடிப்பவனாகவும் காட்டப்பட்டிருப்பதால் அவனைக் கால்நடை வளர்ப்பவன் என்பதற்குப் பகரம் கள்ளிறக்கி விற்றுப் பிழைத்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று கொள்ள வேண்டும். மாடு மேய்த்துக்கொண்டு அலைந்து திரிந்த மக்களை முதன்மையாகக் கொண்ட முல்லை நிலத்தில் கள்ளை வைத்துப் பிழைக்கும் அவலநிலையை முடிவுக்குக் கொண்டுவரவே ஆற்று நீரை உயர் எட்டங்களிலிருந்து வாய்க்கால் வெட்டி கீழ் எட்டங்களில் ஆற்று மட்டத்தை விட உயர்ந்த நிலங்களில் பாய்த்து கலப்பை என்ற கருவியைக் கொண்டு உழவு எனும் தொழில்நுட்பத்தால் நெல் போன்ற நன்செய் உணவுப் பயிர்களை வளர்க்க வழிவகுத்தவன் பலதேவன் என்பது தெளிவாகிறது. ஒருவேளை முல்லை நிலத்தில் வளர்ந்த கால்நடைகளில் கணிசமான எண்ணிக்கையை உழவுக்கும் வண்டி போன்ற பிற தேவைக்கும் வேளாண்மை சார்ந்தோர் பண்டமாற்றின் மூலம் பெற்றுக்கொள்ளவும் மாடுகளுக்குத் தேவையான வைக்கோல் எனும் தீவனத்தை வழங்கவும் அதன் மூலம் வளர்த்தோரின் வாழ்நிலை உயர்ந்ததால்தான் போலும் பலதேவன் கண்ணனின் மூத்தோனாகக் கூறப்பட்டிருக்க வேண்டும். கண்ணன் பால், தயிர், மோர், வண்ணெய், நெய் போன்ற பண்டங்களை மாட்டிலிருந்து பெற்று அதனையும் வேளாண் மக்களுடன் பகர்ந்துகொண்டாதால்[2] இப்போது ஆயர்கள் என்று ஆகிவிட்ட அவர்களின் பொருளியல் நிலை உயர்ந்தது. இப்போது காளைகளின் தேவையுடன் அவற்றை ஈனும் ஆக்களின் தேவையும் எல்லாப் பகுதிகளுக்கும் விரிவடைந்ததால் ஆ வளர்ப்பு மிக வளமான தொழிலாகச் செழித்தது. அதனாலேயே மேய்ச்சல் பரப்புக்காக வேளாண் மக்களுக்கும் ஆயர்களுக்கும் போட்டி உருவானது. இதனால் முல்லை நிலத்தவரின் தெய்வமாக அதுவரை இருந்த பலதேவன் பின்னுக்குத் தள்ளப்பட்டு கண்ணனின் பெருமைக்குள் சிறுமைப்படுத்தப்பட்டான். ஆனால் இந்த முரண்பாடு இந்திரனுக்கும் கண்ணனுக்குமான பூசலாகத் தொன்மங்களில் காட்டப்பட்டுள்ளன.

            பலதேவன் வெள்ளையன் என்றும் அழைக்கப்படுகிறான்(மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் – சிலம்பு. ஊர்காண் காதை – 9). வெண்மை என்ற பொருள் தரும் ஒரு சொல் வால் என்பதாகும். எனவே பலதேவனை வாலி என்றும் கூறுவதுண்டு (தமிழ்மொழி அகராதி - வாலி). சிலப்பதிகாரம் வால்வளை மேனி வாலியோன் என்று கூறுகிறது(இந்திரவிழவூரெடுத்த காதை – 172).

            இப்பொழுது எமக்கோர் ஐயம். வெள்ளையனான பலதேவனின் வாலி என்ற பெயரை வைத்து வாலையுடைய குரங்காக வாலி என்ற ஒரு கதைமாந்தனை உருவாக்கி அதைப் பற்றிக்கொண்டு ஆந்திர மக்களின் முதன்மைத் தெய்வங்களில் ஒன்றான அனுமனைப் படைத்திருப்பாரோ வான்மீகர் என்பதுதான் அது. இராமாயணப் போர் முற்றிலும் கற்பனையானது என்பதறகு வலுவான சான்றுகள் உள்ளன. தொன்மங்களின்படி இராவணனுக்கும் இராமனுக்கும் குறைந்தது 8 தலைமுறை இடைவெளி உள்ளதும், இராமனும் அவன் தங்கை சீதையும் தம்பி இலக்குவனும் தந்தையின் ஆணைப்படி 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்று திரும்பி மணமுடித்து வாழ்ந்தனர் என்று கூறும் புத்த சாதகக் கதைகளில் ஒன்றான தசரத சாதகத்தில்[3] இராவணனோ சீதை கடத்தப்பட்டதோ இராமாயணப் போரோ கூறப்படவில்லை என்பதும்தாம் அவை. இந்தக் கதையின் நம்பகத் தன்மையே, இன்றைய மரபுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத, ஆனால் மனித வரலாற்றில் ஒரு காலத்தில் நடைமுறையிலிருந்த உடன்பிறந்தோர் மணமுறையே. இந்தக் கதைக்குள் கிரேக்கத்தின் இலியடு காப்பியப் பெண் கடத்தல் கருவைப் புகுத்தி வட இந்தியாவில் ஆண்ட கிரேக்கர்களுடன் புத்த – அம்மண சமயங்களின் செல்வாக்கால் தங்கள் வள வாழ்வை இழந்திருந்த பார்ப்பனர்களும் இணைந்து கிரேக்க கடல் வாணிகத்துக்குப் போட்டியாளர்களாக விளங்கிய தென்னக மக்களுக்கு எதிராக எழுதப்பட்டதே வான்மீகி இராமாயணம். (விரிவுக்கு இராமர் பாலப் பூச்சாண்டி என்ற எமது நூலைப் பார்க்க)    

            வேளாண்மை வளர்ச்சியடைந்த ஆந்திரத்தின் கிழக்குக் கடற்கரையில் வேளாண்மைக்குப் புதிய எல்லைகளைக் காட்டிய வெள்ளையன் என்று பொருள்படும் வாலியாகிய பலதேவன் வழிபாடு இருந்ததை வாலையுடைய குரங்கு என்று கொண்டு வாலியையும் சுக்கிரீவனையும் அனுமனையும் குரங்குப் படைகளையும் படைத்துள்ளார் வான்மீகர். இதில் ஒரு விந்தை என்னவென்றால் வாலி என்பதற்கு வெள்ளையன் என்ற பொருள் இருப்பது போல் சுக்கிரீவன் என்பதற்கும் வெண்மைப் பொருள் உண்டு[4]. ஆந்திர மக்களின் பண்பாடு பற்றிய புதிய கண்ணோட்டத்துடனான ஆய்வுகள் இது குறித்து நமக்குச் செய்திகள் தரக்கூடும்.

            மகாபாரதக் கண்ணனுக்கும் அவனுக்கு அத்தை உறவுடைய குந்திக்கும் தகாத உறவு இருந்தது என்று எங்கோ படித்தேன். அதைத்தான் கண்ணனுக்கு அவன் அத்தை உறவுடைய பெண்ணுடன் உறவு இருந்ததாக நூலில் குறிப்பிட்டிருந்ததன் அடிப்படை.

   வடக்கத்திக் கண்ணனுக்கு இராதை என்றொரு காதலி உண்டு. குமரிக் கண்டக் கண்ணனுக்கு நப்பின்னை என்பவள் காதலி. அவள் கண்ணனின் தங்கை என்பது சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவையில் வெளிப்படுகிறது.
மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன்  என்றாள் இளின்னை - ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை  
என்றும் தொடர்ந்தும் அவள் பெயர் வருகிறது. உடன்பிறந்தார் மணத்துக்குத் தமிழ் இலக்கியத்தில் காணப்படும் வலுவான ஒரு சான்று இது.

            நவநீதம் என்ற சொல்லுக்கு புதுமை, புது வெண்ணெய் என்ற பொருள்களையும் நவநீதகம் என்ற சொல்லுக்கு நெய் என்ற பொருளையும் தமிழ்மொழி அகராதி தருகிறது. இரவில் நெருப்பின் வேளிச்சத்தை அகல் விளக்கின் மூலம் குடிலுக்குள் கொண்டுசென்று மக்களின் வாழ்க்கையில் புதுமையை விளைவித்ததால் நெய்க்கு இப் பெயர் வந்திருக்கலாம்.   [1] பக.65
[2]ஒரு பொருளுக்குப் பகரம் இன்ன்றை மாற்றும் பண்டமாற்றுதான் பகர்தல். Barter எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இதுதான் மூலமாக இருக்க வேண்டும்.
[3] இந்நூல் பக். 61.
[4] அதன் தொடர்ச்சியாகத்தான் போலும் இந்திரன் மைந்தனாகக் கூறப்படும் அருச்சுனனின் கொடி குரங்கு எனப்படுகிறது. சிலப்பதிகாரம், அழற்படு காதையில் உரக்கரங்கு உயர்த்த வொண்சிலை யுரவோன் என்ற 111ஆம் வரிக்கு உரையில் “‘உரக்குரங் குயர்த்த வொண்சிலை யுரவோன்’ என்னும் அடி இடைச்செருகல் போலும்” என்கிறார் வேங்கடசாமியார். அவ் வரியை மூலத்தில் அடைப்புக் குறிக்குள் கொடுத்துள்ளார்.          

0 மறுமொழிகள்: