18.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 13

10.சாத்தும் தெய்வமும்.
(தோரா. தி.மு. 1.00,000 - 50,000)
இதோ ஒரு குடி. இங்கு நெடுந் தொலைவுக்குக் காடின்றித் தெளிவாயிருக்கிறது. வட்டமான வரிசைகளில் குடிசைகள் உள்ளன. குடிசைகள் வட்ட வடிவத்தில் சுவரெழுப்பப்பட்டு ஒரு வாயிலுடன் உள்ளன. நடுவில் மற்றவற்றைவிடப் பெரிய குடிசை ஒன்று உள்ளது. அதன் முன் புறம் ஒரு பெரிய அரசமரம் நிற்கிறது. அதனடியில் நெருப்புப் புகைந்துகொண்டிருக்கிறது. குழந்தைகளும் சிறார்களும் மரத்தினடியில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
                      
            பொழுது சாய்ந்துகொண்டிருக்கிறது. தொலைவில் குதிரைகளின் குளம்பொலி கேட்கிறது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஒலிவந்த திசையில் ஓடிச்சென்று பார்க்கின்றனர். குடிசைகளுக்கு உள்ளும் புறமுமிருந்து ஆண்களும் பெண்களுமாக ஒலி வந்த பக்கம் ஆவலோடு பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். அனைவரும் தம் இடைகளில் பலவகை விலங்குத் தோல்களை ஆடைகளாக அணிந்துள்ளனர். ஒலி வந்த பக்கத்திலிருந்து குதிரைகளில் பல ஆட்கள் வருகின்றனர். அவர்கள் கைகளில் கரிய மரங்களாலும் எலும்புகளாலும் ஆகிய பலவகைப் படைக்கருவிகள் உள்ளன. அவர்களுக்கிடையில் சுமை ஏற்றப்பட்ட மாடுகள் பல்வேறு பொருட்களைச் சுமந்துவருகின்றன.

சாத்து[1] வந்துவிட்டது! சாத்து வந்துவிட்டது! குழந்தைகள் கைகொட்டிக் கூச்சல்போட்டுத் துள்ளிக் குதிக்கிறார்கள். குடியை சாத்து நெருங்கியதும் பெண்களும் ஆண்களும் சிறுவர்களும் ஆரவாரத்துடன் அதனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. சாத்தில் இருந்தவர்களை அவரவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்டியணைத்து மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர். வந்தவர்கள் தத்தம் குடிசைகளை நோக்கி நகர மற்றவர்கள் பண்டங்களை இறக்கித் தலைவன் குடிசை முன் நின்ற அரச மரத்தினடியில் வைக்கின்றனர். இவ்வளவு நேரமும் இதனைத் தன் பெரிய குடிசையின் முன் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் தலைவனின் முகத்தில் தெரிவது என்ன உணர்ச்சி? வெறுப்பா? பொறாமையா?
                             
            சாத்தில் வந்தவர்கள் தத்தம் குடிசைகளில் இருந்த கருவாடு, காய வைத்த இறைச்சி முதலியவற்றை உண்டு ஓய்வெடுக்கின்றனர். தலைவனாகச் சென்ற சாத்தன் குடித் தலைவனை நோக்கி வருகின்றான். இருவரும் மரத்தடியில் அமர்கிறார்கள். சாத்தன் பேசுகிறான். கடற்கரைக்காரர்கள் இப்போது அதிகமாக மாடுகள் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பது போல் கொடுத்தோமானால் நமக்கு உணவுக்கு மாடுகள் கிடைக்காது. அதுதான் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறுகிறான். தலைவன் மறுமொழி கூறுமுன் இருவர் சேர்ந்து ஒருவனைத் தூக்கி வருகின்றனர். அவன் நாக்கு வெளியே சற்றுத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இறந்துபோயிருக்கிறான். உடன்வந்தவர்கள் இவனுக்கு வாயாலும் வயிற்றாலும் பல தடவை போனது, பின்னர் திடீரென்று மாண்டுவிட்டான் என்கின்றனர்.

            சிறிது நேரத்தில் இதே போன்று ஒரு பெண்ணையும் தூக்கி வருகின்றனர். ஒரு பெண் தன் குடிசையிலிருந்து ஒரு குழந்தையை அழுதபடிக் கையில் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறாள். குழந்தை இறந்திருக்கிறது. தலைவன் கண்களை மூடியபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவன் போல் அமர்ந்திருக்கிறான். அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகைக் கீற்று தோன்றி மறைகிறது. இதற்குள் குடியிலிருந்த அனைவரும் அரச மரத்தடியில் குழுமிவிட்டனர். திடீரென்று தலைவனிடமிருந்து அலறலிலும் சேராத ஊளையிலும் சேராத ஓர் ஒலி கிளம்புகிறது. அனைவரும் தலைவனைப் பார்க்கின்றனர்.

            அவன் வெறிபிடித்தவன் போன்று எழுந்து நிற்கிறான். அவனது கண்கள் சிவந்து காணப்படுகின்றன. மூச்சு இரைக்கிறது. தலையை அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டிருக்கிறான். கால்கள் தரையில் பாவவில்லை. ஏ... ய் எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள். இதோ வந்திருப்பது உங்களுக்குத் தண்டனை. நான் யார் தெரிகிறதா? நான்தான் தெய்வம். உங்கள் முன்னோர்களுக்குப் பாம்பாய் வந்து வழிகாட்டியவனும், நெருப்பாய்ப் பாதுகாப்பளிப்பவனும், ஆண் - பெண்ணாய்ப் பிரித்தவனும், நிலவாய் வழி காட்டியவனும் நானே. என்னை நீங்கள் மறந்தீர்கள். என் முன்னே நீங்கள் பணிந்து நடக்கவில்லை. அதைத் தண்டிக்கத்தான் உங்களுக்கு இந்தச் சாவு. உங்களில் யாரும் என் சினத்திலிருந்து தப்பமுடியாது என்றெல்லாம் கூவுகிறான்.
                                     
            அனைவரும் அச்சத்தால் அரண்டுபோய் வாயடைத்து நிற்கின்றனர். ஒரே ஒரு முதியவள் மட்டும் ஓரளவு துணிந்து தலைவன் முன் வருகிறாள். தெய்வமே உன் சினத்தைத் தணிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
                            
            ஓ... ய்! பெண்ணே என் பகைவர்களை அழிக்காமல் என் சினம் தணியாது. மற்றவர்கள் பிழைத்துக்கொள்ள ஒரு வழி சொல்கிறேன். என்னை அன்றாடம் தொழுங்கள். இதோ என்னால் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் தலைவனைக் கொண்டு எனக்குத் தொழுகை நடத்துங்கள். அவன் சொற்படி நடவுங்கள். இப்பொழுது உங்களைப் பாதுகாக்க வேண்டுமானால் எனக்கு ஓர் உயிர்க் காவு கொடுங்கள் என்கிறான். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அனைவர் முகங்களிலும் அச்சம் குடிகொண்டுள்ளது. அப்போது சாத்தில் வந்த ஒருவனையும் ஒரு குடிசையிலிருந்து தூக்கி வருகிறார்கள். அவனும் செத்துவிட்டிருக்கிறான். கூடி இருந்தவர்கள் முகத்தில் பேரச்சம் குடிகொள்கிறது. முன்பு கேட்ட கிழவியே மீண்டும் கேட்கிறாள், யாரைக் காவு கேட்கிறாய் தெய்வமே?
                                                 
            அதோ அந்தப் பெண் கையிலிருக்கிறதே அந்தக் குழந்தையை! தலைவன் உறுமலுடன் கூட்டத்தின் ஒரு புறத்தில் நடப்பவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாதவள் போல் காணப்பட்ட ஒரு பெண்ணைக் காட்டிக் கூறுகிறான். அப் பெண்ணை நோக்கி ஒருவன் முன்னேறுகிறான். அப் பெண் நிலைமையை உணர்த்தவளாகக் குழந்தையை மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு கூவுகிறாள். என் குழந்தையைத் தொடாதே! நான் அவனுக்கு இணங்க மறுத்ததற்காகப் பழிவாங்கப் பார்க்கிறான். கூவிக்கொண்டே ஓடுகிறாள். அவளை நோக்கி நகர்ந்தவன் அவளைத் துரத்திக் கொண்டு ஓடுகிறான். இன்னும் இருவர் அவன் துணைக்குச் செல்கின்றனர். அவள் ஒரு குடிசையினுள் சென்றுவிடுகிறாள். அவர்களும் அவளைத் தொடர்கின்றனர். பெண்ணின் அவலக் குரல் கேட்கிறது. குழந்தையுடன் ஒருவன் வருகிறான். மற்றவரும் பின்னால் வருகின்றனர். குழந்தையைக் கொண்டுவந்து தலைவனிடம் கொடுக்கின்றனர்.

            அனைவரும் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே தலைவன் குழந்தையின் கழுத்தை நெரிக்கிறான். ஒரு முனகலுடன் குழந்தையின் ஆவி பிரிகிறது. இதற்குள் தலைவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் தீயை நன்கு வளர்ந்துவிட்டிருக்கிறான். இறந்த குழந்தையைத் தலைவன் நெருப்பில் எரிகிறான். அலறிக்கொண்டு பாய்ந்த தாயை இருவர் இறுகப் பற்றிக்கொள்கின்றனர். முடைநாற்றம் வீசக் குழந்தையின் பிணம் எரிகிறது. சாத்துக்குத் தலைமை தாங்கி வந்த சாத்தன் ஒரு புறத்தில் நின்று அமைதியாக இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் முகத்தில் வெறுப்பும் சினமும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. இப்போது ஒரு பக்கத்திலிருந்து ஓர் இளைஞனும் இளைஞியும் குடிக்குள் நுழைகிறார்கள். இருவர் கைகளிலும் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது. அவர்கள் வந்ததை அங்கிருந்தோர் யாரும் கவனிக்கவே இல்லை. வந்தவர்கள் நேரே சாத்தனிடம் செல்கிறார்கள்.

            இளைஞன் தன் கையிலிருந்த பொருளைக் காட்டிக் கூறுகிறான்: இப் பொருள் ஒரு புல்லில் விளைந்தது. இதனைக் கிளிகளும் பறவைகளும் கொத்தி உண்பதைப் பார்த்திருக்கிறோம். இன்று ஓர் எலியும் அதை எடுத்துத் தின்பதைப் பார்த்தோம். புல்லினடியில் இது போன்ற பொருள் கிடந்தது என்று ஒரு நெல்லை உடைத்து உமியைக் காட்டுகிறான். நாங்களும் உடைத்து உள்ளிருந்த இந்தப் பொருளைத் தின்று பார்த்தோம் என்று அரிசியைக் காட்டுகிறான். சுவையாக இருந்தது. எனவே கொஞ்சம் திரட்டி எடுத்துவந்துள்ளோம். என்று சாத்தனிடம் அரிசியைக் கொடுக்கிறான். இன்னும் இந்தப் புல் நிறைய வளர்ந்துள்ளது என்கிறான்.

            சாத்தன் அரிசியை வாயில்போட்டு மெல்லுகிறான். தலையை ஆட்டுகிறான். அவன் முகத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. நாளை நாம் போய் இது போல் திரட்டி வரலாம் என்று கூறுகிறான். இதற்குள் நெருப்பைச் சுற்றியிருந்த கூட்டம் கரைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவராக அவரவர் குடிசைகளுக்கு முன் சென்று அமர்கின்றனர். குழந்தையைப் பறிகொடுத்த பெண் மட்டும் விம்மி அழுது கொண்டிருக்கிறாள். அவளின் தாய்போல் தோன்றும் ஒரு பெண் அவளை ஆதரவாக அணைத்துக் கூட்டிச் செல்கிறாள்.
                                                     
            சாத்தனுக்குச் செல்வாக்கு வளர்ந்து தன் செல்வாக்குக் குறைந்து வருவதைக் கண்ட தலைவன் இப்போது தெய்வத்தின் பேரைச் சொல்லித் தன் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டான். ஆனாலும் கூட்டத்தில் ஒரு பிளவு விதை விழுந்துவிட்டது. புதிய வளர்ச்சி நிலைகள் தோன்றிப் பழைய அதிகாரங்களுக்கு அறைகூவல்கள் ஏற்பட்ட போதெல்லாம் பிளவுகள் ஏற்படுவது இயற்கை. இது மாந்த நாகரிக வளர்ச்சியில் தொடர்ந்து காணப்படும் கூறாகும்.

            இவ்வாறு உலக நாகரிக வளர்ச்சியின் மிக முகாமையான கட்டமாகிய நில வாணிகத்தின் தோற்றத்தை இந்நிகழ்ச்சி காட்டுகிறது. தமிழ்நாட்டில் வாணிகர்கள் சாத்தன்களென்றே அழைக்கப்பட்டனர். கோவலன் தந்தை மாசாத்துவான் எனப்படுகிறான்; மணிமேகலையில் வரும் ஆதிரையின் கணவன் பெயர் சாதுவன்; மற்றும் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் போன்ற பெயர்கள் சாத்தனுக்கும் வாணிகத்துக்கும் உள்ள உறவைக் காட்டும். வாணிகர்க் கெதிராக அரசும் பார்ப்பனியமும் கூட்டுச் சேர்ந்தபோது வாணிகர்கள் அம்மணத்தைத் தழுவியதால் சாத்தனைச் அம்மணத் தெய்வமாக இன்று பலர் மயங்குகின்றனர்.

            இவ்வாறு முற்றிலும் தமிழர் தெய்வமான சாத்தன் உலகெங்கும் பரந்து காணப்படுகிறான். குமரிக் கண்டம் எனும் நூலில் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருக்கும் சாத்தா மலையைப் பற்றிக் கா. அப்பாத்துரையார் எழுதியுள்ளார். ஏகுபதியரின் தெய்வமான சாத்தனையே பேயன் என்னும் பொருள்படும்படிச் சாத்தன் (Satan) என்று யூதமறை கூறுகிறது. இங்குத் தமிழரின் நாகமும் சாத்தனும் ஒன்றுடுகிறார்கள். கடல் - நில வாணிகங்களில் தமிழர்கள் வளர்ச்சியடைந்த பின்னரே ஏகுபதியினர் பிரிந்து சென்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

            இவ்வாறு புகழ்பெற்ற சாத்தனை எல்லைக் காவல் தெய்வமாக ஐயனார் என்ற பெயரில் தமிழ்நாட்டில் இன்று வழிபடுகிறார்கள். யானையும் குதிரையும் அவன் ஊர்திகள். நாய் அவன் துணை. ஆனால் இந்த ஐயனாரை சிவன், திருமால் என்ற இரு ஆண் தெய்வங்களின் தன்னினச் சேர்க்கையில் பிறந்த அரி அர புத்திரன் என்று பெயரிட்டுத் தொன்மக் கொடியர்கள் இழிவுபடுத்தினர்.

            சாத்தனின் இழிவு இத்துடன் நின்றுவிடவில்லை. கேரளத்தில் ஒன்றிரண்டு நூற்றாண்டுகட்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைத் சாத்தனின் மேல் ஏற்றி அவனை ஐயப்பன் ஆக்கினர். ஓர் அரசன் மகப்பேறின்றிச் சிறுவன் ஒருவனை எடுத்து வளர்த்தான். வளர்ப்புப் பிள்ளை காளைப் பருவ மெய்திய வேளையில் அரசி ஓர் ஆண் மகவீன்றாள். பெற்ற குழந்தைக்கு முடிசூட்டுவதற்காக வளர்த்த குழந்தை துரத்தப்பட்டான். அவன் கொள்ளைக் கூட்டமொன்றை நிறுவிக் கொள்ளையடித்து நாட்டு மக்களைத் துன்புறுத்தினான். அவன் தனக்கு மறைவிடமாக வைத்திருந்ததே இன்றைய சபரிமலை. இவ்வாறு நம் சாத்தன் கொள்ளைக்கார ஐயப்பனோடு சேர்த்துக் கூறப்படும் இழிநிலைக்கு வந்துவிட்டான்.
 

பிற்சேர்க்கை: தெய்வத்துக்கு உயிர்ப் பலி கொடுப்பது பற்றி இங்கே சிறிது பேச வேண்டும். வேட்டை வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் மனிதனுக்குத் தேவையான உணவு கிடைக்கவில்லை. வேட்டையாடும் கட்டத்தில் மனிதர்கள் குட்டையாகவும் கருநிறம் கொண்டவராகவும்தான் இருந்தனர் என்பது வரலாற்றாசிரியர்களின் பொதுவான கருத்து[2]. எனவே அவர்கள் தங்கள் குழுவில் நோய்வாய்ப்பட்டோ, முதுமையாலோ வேட்டைகள் அல்லது பிற குழுக்களுடன் சண்டையிலோ இறந்தவர்களின் பிணங்களையோ உணவாக்கித்தான் வாழ்ந்திருப்பர். தங்கள் குழுவில் வலிமையானவர்களுக்கு அல்லது தலைவர்களுக்கு கிடைத்ததில் சிறந்த பங்கைக் கொடுத்திருப்பார்கள். அது போலவே தங்கள் வலிமையாலோ பிற ஆற்றல்களாலோ அருஞ்செயலாற்றி குழுவினரின் போற்றுதலுக்கு உரியவராக இருந்து இறந்த பின் தெய்வமாக வழிபடப்பட்டோருக்கும் கிடைத்ததில் சிறந்ததைப் படைத்திருப்பர். அந்த வகையில் தொடக்க கால மனிதர்களின் தவிர்க்க முடியாத கடவுளான நெருப்புக்கும் அளித்திருப்பர். கால்நடைகளை வளர்க்கத் தொடங்கிய பின்னர் அவற்றில் சிறந்தவற்றை நெருப்புக்குப் பலியிட்டனர். அவை வடுப்படாதவையாக[3] இருக்க வேண்டும் என்று யூத மறை கூறுகிறது. பினீசியர்கள் குழந்தைகளைப் பலி கொடுத்தனர் என்பது வரலாறு. கால்நடை வளர்ப்பால் உணவுப்பொருள் வழங்கல் சிக்கலில்லா நிலை வந்தபின், பெரும்பாலும் போர் போன்ற தேவைகளுக்காக மனிதர்கள் மிகுதியாகத் தேவைப்பட்ட நிலையில் மனிதனுக்குப் பகரம் ஆட்டைப் பலி கொடுக்குமாறு கடவுள் கேட்டதாக யூத மறையும் குரானும் கூறுகின்றன.

            அரிச்சந்திரனைப் பற்றி வேதத்தில் கூறப்பட்ட கதை வேறு ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் காட்டுகிறது. தனக்கு மகன் பிறந்தால் அவனைப் பலியாகத் தருவதாக வருணனை வேண்டிப் பெற்ற மகனைப் பலி கொடுக்காததால் அவனுக்கு நோயை உண்டாக்குகிறான் வருணன். வேறு வழியில்லாமல் சுனச்சேனன் என்பவன் தந்தைக்கு நூறு மாடுகளை விலையாகக் கொடுத்து அவனை வாங்கி பலி கொடுக்கிறான். இங்கு வயிற்றுப்பாட்டுக்கு வழி வகுக்கும் மாடு என்ற செல்வத்துக்கு மகன் உயிர் விலை பேசப்பட்டிருக்கிறது.                 


[1] சாத்து எனும் சொல் ஆங்கிலத்திலுள்ள கேரவான் (Caravan) எனும் சொல்லுக்கு இணையானது. இடர் மிகுந்த வழிகளில் தனியாகச் செல்ல அஞ்சி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதற்கு சாத்து என்று பெயர். வணிகச் சாத்துகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சீனத்திலும் தமிழகத்திலும் நடைமுறையிலிருந்தன. இன்றும் பாலைவனத்தைக் கடப்பதற்குச் சாத்துகளாகவே மக்கள் செல்வது உலகின் பல பகுதிகளில் தோடர்கிறது.
[2] A School History of England, C.R.I.Fletcher and Rudyard Kipling, Oxford Press, 1930, p.11
[3] Unblemished. நம் மரபில் வழங்கும் கதைகளும் அநாகரிகர்கள் தங்களிடம் சிக்கும் மனிதர்களில் வடுப்பட்டவர்களைத் தெய்வத்துக்குப் பலியிடமாட்டார் என்று கூறுகின்றன.

0 மறுமொழிகள்: