20.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 27

24. மொட்டைத் தலையும் முழங்காலும்
(தோரா. தி.மு. 1000)
நாம் இப்போது முதன்முதலாக வட நாடு செல்கிறோம். நாம் வட மதுரை எனக் கூறப்படும் மதுரா எனும் ஊரை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அந்த ஊரின் தெற்கிலிருந்து வரும் சாலையில் நம் முன்னே இருவர் சென்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் தலையில் நீண்ட முடியுடனும் தாடியுடனும் காணப்படுகின்றனர். பூணூல் அணிந்துள்ளனர். இருவரும் உரையாடியபடி விரைந்து செல்கின்றனர். வாருங்கள் நாமும் விரைந்து சென்று அவர்கள் பேசுவதைக் கேட்போம்!

            நாம் காணப் போகிறவனைப் பற்றி கேட்கிறீரா வைசம்பாயனரே? அது ஒரு விந்தையான கதை. ஆனால் சுவையான கதை. இவன் தாய் ஆற்றிலே மீன் பிடித்தும் படகு விட்டும் வாழும் பரதவர்களின் கூட்டத்துப் பெண். அவர்களின் பெண்கள் பருவமடைவதுவரை ஆற்றில் படகு விட்டுப் பொருளீட்டுவர். இவன் தாய் காமவல்லி சிறுமியாய் இருந்தபோதே அகவைக்கு மீறிய வளர்ச்சியும் எவர் கண்ணையும் பறிக்கும் கவர்ச்சியும் கொண்டிருந்தாள். எனவே காமத்தோடு நோக்கும் ஆடவரின் பார்வைகளின் பொருள் சிறுமியாயிருக்கும் போதே இவளுக்குப் புரிந்து இருந்தது.

            அப்போது அவள் ஊருக்கருகில் பராசன் என்ற ஓர் இளந்துறவி இருந்தான். அவன் ஒரு முறை படகில் செல்லும் போது இச் சிறுமியைக் கண்டு அவள் அழகில் மயங்கிவிட்டான். அடிக்கடி அவளைக் காண்பதற்காகவே படகில் செல்லலானான். அவளோடு பேச்சுக்கொடுத்துப் பழகினான். கவர்ச்சி மிகுந்த பெண்களுக்குள்ள இயற்கைப்படி அவளும் இவனின் மயக்கம் தந்த தற்பெருமையில் மயங்கினாள். பராசனின் கைகள் காட்டும் வித்தையில் தன்னை மறந்து கிடப்பாள். பருவம் அடைந்ததும் தன்னைப் படகுத் துறைக்கு விடமாட்டார்கள், பராசனிடம் பெறுகின்ற இன்பம் கிடைக்காது என்று அஞ்சிய அவள் தான் பருவம் அடைந்த போது அதைப் பெற்றோரிடமிருந்து மறைத்து விட்டாள். ஆனால் இயற்கையை மறைக்க இயலுமா? கருவுற்றாள் கன்னி. அது என்றோ ஒரு நாள் தெரியத்தானே வேண்டும்! தாய் தந்தையர் கேட்டபோது அழகாகக் கூறிவிட்டாள்; அம்மா, ஒரு நாள் படகு விட்டுக்கொண்டிருந்த போது ஒரு முனிவர் என் படகில் தனியாகப் பயணம் செய்தார். நடு ஆற்றில் படகு வந்ததும் என்னைப் பார்த்து, இதே நேரத்தில் நான் ஒரு பெண்ணைச் சேர்ந்து ஒரு மகனைப் பெற்று அவனைக் கொண்டு உலகுக்கு ஓர் அருஞ்செயலாற்ற வேண்டியுள்ளது; இங்கு உன்னைத் தவிர வேறு பெண்ணில்லை; எனவே நீ என்னைப் புணர வேண்டும் என்றார். ஐயா, நான் பருவமடையாத சிறுமியாயிற்றே பகற்காலமாயிற்றே என்றேன். கவலைப் படாதே இப்போதே நீ பருவமடைவாய் என்றார். நான் உடனே பருவமடைந்தேன். அவர் தவவலிமையால் பகலவனை மேகங்கள் மறைக்க பகல் இரவானது. ஆற்றின் நடுவில் அவர் தவவலிமையால் தோன்றிய திட்டிலிறங்கிப் புணர்ந்தோம். அதனால் ஏற்பட்டதுதானம்மா இக் கரு!

            பெற்றோர் அவளை வீட்டில் இருத்தினர். குழந்தை பிறந்து தன்னிடமிருந்தால் தான் தகுந்த ஆடவனை மணமுடிக்க முடியாது எனக் கருதிய காமவல்லி பராசனைக் கமுக்கமாக அழைத்துப் பிறந்தவுடன் குழந்தையைக் கொண்டு சென்றுவிடுமாறும், இல்லையென்றால் அதைத் தான் கொன்றுவிடுவதாகவும் அச்சுறுத்தினாள். பராசன் குழந்தையைத் தனக்குத் தந்துவிடுமாறு அவளைக் கேட்டுக் கொண்டான். எனவே பேற்றுக் காலம் வந்ததும் பெற்றோருக்குச் சொல்லாமல் பராசனுக்கு ஆளனுப்பிப் பிறந்த ஆண் குழந்தையை அவனிடம் கொடுத்தனுப்பிவிட்டாள். பெற்றோரிடம், குழந்தை நோவின்றித் திடீரென்று பிறந்துவிட்டது. தண்டு கமண்டலங்களோடு தோன்றிய குழந்தை பிறந்தவுடன் என் தந்தை சென்ற திசை ஏதென்று கேட்டது. நான் அவர் இருக்கின்ற திசையைச் சொன்னேன். என்னை வணங்கிவிட்டு, நீ நினைக்கும்போது வருவேன் தாயே என்று கூறி அந்த ஆண் குழந்தை சென்றுவிட்டான்! என்று கூறிவிட்டாள்.

            குழந்தையைக் கொண்டுவந்த பராசனைத் துறவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே குழந்தையுடன் தெற்கு நோக்கிச் சென்றான். சிறுவன் மதிநுட்பம் வியக்கத்தக்கதாயிருந்தது. எனவே பல்வேறிடங்களுக்கும் அழைத்துச் சென்று பல்துறைகளையும் பயிற்றுவித்தான். இருந்தாலும் இவன் பிறப்பின் மறையம் எப்படியோ வெளிவந்துவிடவே மறையவர் இவனை ஒதுக்கத் தலைப்பட்டனர். ஆனால் இவனோ நாடு முழுவதும் அலைந்து திரட்டிய தன் அறிவைக் கொண்டு பார்ப்பனர்க்கு ஏற்றம் கொடுக்கவும், தன் புகழை வளர்க்கவும் ஒரு திட்டம் வைத்திருக்கிறான். அவன் திட்டம் நம் வகுப்பாருக்கு மிக உதவியாயிருக்குமாதலால் நாம் அவனை ஊக்குவிக்க வேண்டுமென்றே உம்மையும் அழைத்துச் செல்கிறேன்!

            இதற்குள் இருவரும் ஊருக்குள் நுழைந்துவிட்டனர். ஊரின் ஓர் ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு சிறு குடிலினுள் அவர்களுடன் நாமும் நுழைகிறோம். அங்குச் சுற்றிலும் பல ஏட்டுச் சுவடிகள் இரைந்து கிடக்கக் கையில் ஓர் ஏட்டுச் சுவடியுடன் ஓர் இளைஞன் ஒரு மணை மீது அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். நுழைபவர்களைக் கண்டதும் வாரும் கருணானந்தரே! என எழுந்து சென்று வரவேற்கிறான்.

            வியாசரே! இவர்தான் வைசம்பாயனர், நம் திட்டத்துக்கு இவர் மிகவும் உதவுவார் என்று கூறி உடன் சென்றவரைக் கருணானந்தர் அறிமுகம் செய்கிறார். மூவரும் அமர்ந்ததும், நம் திட்டத்தைச் சுருக்கமாகக் கூறுகிறேன் என்று வியாசன் தொடங்குகிறான்.

            நான் தென்னாட்டில் சுற்றி அறிந்துகொண்டவற்றிலிருந்து கண்டவை இவை. அங்குள்ள மக்கள் ஐந்திணை நிலைகளில் வாழ்க்கை, வழிபாட்டு முறைகளைக் கொண்டு வாழ்கிறார்கள். இருந்தாலும் அவர்களனைவரும் வேந்தர்களின் கீழ் உள்ள குறுநிலத் தலைவர்களின் கீழ் ஒன்றாக வாழ்கிறார்கள். இவ்வாறு கலந்து வாழும் போது அவர்களுக்குள் தத்தம் நிலத்துக் கடவுளரைப் பற்றிய பிணக்குகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப் பிணக்குகளே அப் பூசாரியாரின் செல்வாக்கை ஓரளவு பாதுகாத்து வருகிறது.

            ஆனால் தமிழ்நாட்டின் தமிழ் மொழியை அரசே பேணி வருவதால் மக்களிடையே ஒருவகை ஒற்றுமை ஏற்பட்டுப் பூசாரிகளின் செல்வாக்கு வரம்பு மீறாமல் பார்த்துக்கொள்கிறது. சில வேளைகளில் அவர்களின் செல்வாக்கை முற்றிலும் அழித்துவிடும் நிலைமையைக் கூட ஏற்படுத்திவிடுகிறது.

            வடக்கே கூட தென்னாட்டில் தோன்றிய தெய்வங்களையே பெரும்பாலும் வணங்கி வருகிறார்கள். அங்கு போலவே வாரணன், இந்திரனின் வழிபாடுகள் மங்கிவருகின்றன. இங்கு வாழும் மக்களும் அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்கள்தாமா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இங்கு அங்கு போல் பேரரசு எதுவும் இல்லை. இப்போதுதான் கிருட்டிணன் தலைமையில் ஒரு பேரரசு உருவாகிவருகிறது. அதற்கு முன் ஆரியர்கள் என்ற தலைவர்கள் சிறு சிறு பரப்புகளின் ஆதிக்கத்திலிருந்தார்கள். அவர்களுடன் முன்பு பாண்டிய நாட்டு வாணிகர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள். பாண்டிய நாடு கடல் கொள்ளப்பட்ட பின்பு அவ் வரசு வலு குன்றிய காலத்தில் ஆரிய நாட்டினர் பாண்டிய அரசின் படிநிகராளியரை எதிர்க்கத் தொடங்கினர். இந்த எதிர்ப்புத் தொடங்கியதற்குக் காரணமே நம் வேள்விகளைப் பாண்டிய நாட்டினர் அன்று ஒடுக்க முனைந்ததுதான். இராமன்தான் முதன்முதலில் முயன்று இப் பாண்டிய நிகராளிகளை ஓரளவு வெற்றிகரமாக முறியடித்தான். பின்னர் வேளாண்மை பெருகியபோது ஆக்களை வேள்வியில் கொல்வதற்கு எதிர்ப்பு வந்தது. ஆரிய நாட்டு மக்களெல்லாம் இரண்டாகப் பிரிந்து போரிட்டனர். ஆக் கொலையைக் கைவிட நேர்ந்தாலும் நம் செல்வாக்கை இறுதியில் நிலைநிறுத்திவிட்டோம். அதற்குக் காரணம் நம் ஒற்றுமைதான். அவ் வொற்றுமைக்குக் காரணம் நம் மொழிதான். இம் மொழியை வளர்த்து தெற்கேயிருப்பவரையும் நம்மோடு சேர்த்து ஒன்றுபடச் செய்ய நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.

            பல் திணைப் பூசாரியர் ஒதுகின்ற மந்திரங்களையும் ஒன்று சேர்த்து மூன்று பகுதிகளாகப் பகுத்து வேதங்கள் என்று பெயர் கொடுக்கப் போகிறேன். இனி வேள்விகளிலும் பூசைகளிலும் இவ் வேதங்களையே ஓத வேண்டும். இந்த வேதங்களின் தொகுப்பிலிருந்தும் வழக்கு மொழிகளிலிருந்தும் முதன்முதல் பிரமன் உருவாக்கிய உபநிடத மொழியில் வான்மீகியார் இராமாயணத்தைப் படைத்தார். கிரேக்க நாட்டுக் கதையை இணைத்துக் காடு சென்ற இராமனின் மனைவியைப் பாண்டியப் படிநிகராளியரின் மரபினனான இராவணன் தூக்கிச் சென்றதாகவும், அவனை வென்று அவளை மீட்டு வந்ததாகவும் இதை எழுதினார். அவர் வழியில்தான் நானும் என் நூற்களை ஆக்கப் போகிறேன். இந் நூலைப் படிக்கும்போது தென்னாட்டில் வழங்கும் தெய்வங்கள் எல்லாம் ஆரிய நாட்டில் தோன்றியவை போலவும் இந் நாட்டின் நாகரிகம் எல்லாமே நமக்கு உரியவை போலவும் தோற்றமளிக்கும். பரதவர் நாடு என்று பொருள்படும் பரத நாடு என்பது கூட பரதன் என்ற வடநாட்டு அரசன் பெயரோடு தொடர்புபடுத்தப்படும்.

            மேலும் அனைத்துத் தெய்வங்களையும் ஒருவரோடொருவர் உறவுடையவர்களாகக் காட்டி அனைத்துத் தெய்வங்களையும் இணைத்து முழுமுதற் கடவுள் சிவன் என்று கூறிக் குமரியை அவன் மனைவியாக்கிவிட்டேன். அதனால் பரதவர் செல்வாக்கோடு அவர்கள் தலைவியின் நினைவும் நாட்டைவிட்டு ஓடிவிடும். சில தெய்வங்களை ஒன்றிணைத்துப் பல தலைகளுடன் ஒரு தெய்வமாகவும் பல தெய்வங்களை ஒரே தெய்வத்தின் தோற்றரவுகளாகவும் காட்டியிருக்கிறேன். பார்ப்பனர்களை எதிர்த்தவர்களையும் இத் தெய்வங்களுடன் சேர்த்துவிடுவோம்.

            இதைக் கூறிக்கொண்டிருக்கும்போதே வைசம்பாயனர் இடைமறித்துத் திட்டம் மிகச் சிறப்பாகத்தான் உள்ளது வியாசரே. ஆனால் இதை எவ்வாறு நாடெங்கிலும் பரப்புவது?

            அதைத்தான் கூறப்போகிறேன். இக் கதைகளைப் பரப்புவதற்கென்று ஒரு கூட்டத்தையே உருவாக்க வேண்டும். முனைப்பான பயிற்சியளித்து அவர்களை நாடு முழுவதும் அனுப்ப வேண்டும். அவர்கள் ஆங்காங்கு மேலும் கதை சொல்பவரைப் பயிற்றுவித்து நாடெங்கும் பரப்ப வேண்டும். அந்தப் பணி உங்கள் தலைமையிலே நடைபெற வேண்டும்!

            இதற்கு நிறையப் பொருள் வேண்டுமே!

            அதற்குத் தான் நான் மதுரை வந்தேன். கிருட்டினிடம் உதவி பெற வழியிருக்கிறது. அங்கே நாம் போகலாம் வாருங்கள்!

மூவரும் வெளியே இறங்கி நடக்கிறார்கள். நாமும் தொடருவோம். இதோ ஒரு கோட்டை முன்னால் வந்து நிற்கிறோம். கோட்டை மிக வலுவான காவலுடையதாயிருக்கிறது. வந்தவர்களின் தோற்றத்தைக் கண்டதும் காவலர்கள் விலகி வழிவிட அவர்களைத் தொடர்ந்து நாலைந்து காவலர்களும் துணைக்குச் செல்வோர் போல் செல்கிறார்கள். இறுதியில் அரண்மனையை அடைகிறோம். காவலர்கள் வெளியே நிற்க அரண்மனை வாயிற்காவலரிடம் மன்னரைக் காண வியாச முனிவர் வந்திருப்பதாகச் சொல்! என ஓரளவு அதிகாரக் குரலில் வியாசன் கூறுகிறான். உள்ளே சென்ற காவலன் திரும்பி வந்து வருக! என வியாசனை மட்டும் அழைத்துச் செல்கிறான்.

            உள்ளே அரண்மனையின் ஓர் அகன்ற கூடத்தின் நடுவில் விலையுயர்ந்த ஆடை அணிகள் அணிந்த ஓர் அரசன் ஓர் அழகிய மஞ்சத்தின்மீது சாய்ந்தவாறு படுத்திருக்கிறான். மஞ்சத்திலும் அதனைச் சுற்றிலும் பல அழகிய பெண்கள் அவனுக்குச் சாமரை வீசியும் மற்றும் பலவகைப் பணிவிடைகள் செய்துகொண்டும் இருக்கிறார்கள். சில பெண்கள் இசைக் கருவிகள் இசைக்கவும் சிலர் பாடவும் சிலர் ஆடவுமாகக் கூடம் கேளிக்கை நிறைந்து காணப்படுகிறது. முனிவன் கூடத்தினுள் நுழையவும் காவலன் திரும்பிச் செல்கிறான். வருக முனிவரே! என மன்னன் வரவேற்கிறான். நுழைந்த முனிவன் சுற்றிலும் நின்ற பெண்களை ஆவலோடும் ஆராய்வது போலவும் நோட்டமிடுகிறான். மன்னவன் புன்னகையுடன் பெண்களை அப்பால் செல்லுமாறு சாடை காட்ட அவர்கள் அகன்றவுடன், வியாசன் ஒரு பெருமூச்சுடன் மன்னனை நோக்குகிறான். அரசன் ஓர் இருக்கையைக் காட்ட வியாசன் அதில் அமர்கிறான்.

            என்ன சேதி முனிவரே? கேட்கிறான் மன்னன். இருக்கையில் அமர்ந்தவாறே, கிருட்டிண மன்னவா! நான் முன்பு உனக்குக் கூறியிருந்தது போலவே பெரும் திட்டத்துடன் வந்துள்ளேன். தென்னாட்டில் கடற்கோளினாலும் சேரர்களுடன் ஏற்பட்ட பிணக்கினாலும் வடக்கே வந்த உன் முன்னோர்களாகிய திரையிடத்தார் தெற்கேயிருந்த மதுரையின் பெயரால் இந் நகரை அமைத்து வாழ்ந்து வேளாண்மை வளர்த்து வருகையில், கண்ணன் என்ற பெயர்கொண்ட உன் முன்னோன் ஒருவன் வேளாண்மை கருதியும் ஆனைந்து வேண்டியும் ஆக்களைக் கொல்வது கூடாதென்று விதித்ததும், அதனை அறமென்று கொண்டு அம்மணத் துறவியர் பரப்பி வருகையில் பூசாரியர் வேள்விக்கு இடையூறு நேர்ந்ததும், அவர் துணைகொண்டு ஆரிய நாட்டு அரசரெல்லாம் இரு கட்சியராகிச் சண்டையிட்டு வந்ததும், இறுதியில் பூசாரியர் கொலை வேள்வி வளர்ப்பதை நிறுத்தி நெய்யூற்றி வேள்வி வளர்ப்பதும் அரசர்கள் குதிரைகளைப் பலியிட்டு வேட்பதும் உனக்குத் தெரியும். அத்தகைய பெருமை படைத்தவன் பெயரைத் தாங்கி, எதிர்த்தவரை அழித்தும் வேண்டியவர்க்குதவியும் மதிக்காதவரை இழித்தும் சேரர்களின் ஆட்களாகிய நாகர்களைத் துரத்தியும் ஆரிய நாட்டின் வலிமை பெற்ற பேரரசை நிறுவியிருக்கின்ற உன்னை வான்மீகி இராமனை உயர்த்திப் பாவியம் இயற்றியது போல் போற்றி ஒரு பாவியம் இயற்றி இருக்கிறேன்.

            விண்டு என்ற கடவுளின் தோற்றரவு நீ என்றும், உனக்கு இதற்கு முன் எட்டுத் தோற்றரவுகள் உண்டென்றும், இன்றும் ஒரு தோற்றரவுண்டென்றும் கூறியிருக்கிறேன். புகழ் பெற்ற பரசிராமன், பலதேவன், இராமன், வாமனன் முதலியோர் எட்டுத் தோற்றரவுகளில் இடம் பெறுவர். உங்கள் தெய்வமான வெண்ணெய் கண்டுபிடித்த கண்ணன், உன் முன்னோனான கண்ணன் ஆகியோரின் அருஞ்செயல்கள் உன் செயல்களாகும். சிவனை உனக்கு அளியனாகவும் (மைத்துனன்), குமரியைத் தங்கையாகவும், ஆனைமுகன், குமரன் ஆகியோரை மருமகன்களாகவும் ஆக்கியிருக்கிறேன். பிரம உபநிடதம் எழுதி நால்வருணக் கருத்தை முதன்முதல் தோற்றியவனான பிரமனைப் படைப்புத் தெய்வமாகவும், அவன் மனைவியாகக் கலைமகள் என்பவளைப் படைத்து அவளைக் கல்விக்குத் தெய்வமாகவும், பிரமனை உனக்கு மகனாகவும் ஆக்கியுள்ளேன். உன்னைக் காப்புத் தெய்வமாகவும் சிவனை அழிப்புத் தெய்வமாகவும் ஆக்கியுள்ளேன். நீ பங்கு கொண்டு வெற்றி பெற்ற குருசேத்திரப் போரை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாவியம் இயற்றியுள்ளேன். பாண்டியன் முன்னோரான பரதவர் பெயரில் வழங்கும் பரதநாடு என்ற பெயரை மங்க வைப்பதற்காகச் சகுந்தலை என்னும் பெண்ணின் பெயரில் ஓர் இன்பக் கதை எழுதி அவள் மகன் பரதன் பெயரால் பாரத நாடு என்ற பெயர் வந்ததாகக் கதைகட்டி அதை நிலைநிறுத்த காபாரதம் என்று பாவியத்துக்குப் பெயரும் சூட்டியுள்ளேன். அப் பாவியத்தில் போரின் போது நீ மருதனுக்கு (அருச்சுனனுக்கு) அறிவுறுத்துவதாக ஒரு பகுதி இருக்கிறது. தென்னாட்டில் தொடங்கிய மெய்யறிவு தொடங்கி வருண அறங்கள் வரை நீ அதில் அறுவுறுத்துவதாக அமைந்துள்ளது. அதற்குப் பகவத் கீதை என்று பெயர் சூட்டியுள்ளேன். இக் கீதையால் உலகம் முழுவதும் உன் புகழ் பரவும். இக் கதைகளை எல்லாம் நாடு முழுவதும் பரப்பினால், தென்னாட்டில் நிலவும் பேரரசுகள் போன்று நம் ஆரிய நாட்டிலும் நிறுவலாம். வடநாடு முழுவதையும், ஏன் தென்னாட்டையும் கூட ஒன்றிணைப்பதான இந்த மொழியையும் பரப்பலாம். பூசாரிகளையும் வேள்விளையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத தென்னாட்டிலும் இக் கதைகளின் வலுவினால் வடநாட்டினர்தான் அவர்களைவிட மேம்பட்டவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவர்களிடை நம் மேம்பாட்டை நிலை நிறுத்திவிடலாம், அதற்காகவே கதைகளில் வேண்டிய அளவுக்கு காமச் சுவையைக் கலந்துள்ளேன்.”

            கிருட்டிணன் கண்கள் வியப்பாலும் நம்பிக்கையின்மையாலும் விரிந்தன. அவற்றில் பேராசை கொழுந்துவிட்டெரிந்தது. ஆனால் இக் கதைகளை எப்படி இவ்வளவு பரந்த நாட்டில் அவ்வளவு விரைவில் பரப்ப முடியும்?

            அதற்காக நான் ஓர் இளைஞர் படையை நிறுவுகிறேன். அவர்களுக்கு இக் கதைகளைச் சொல்வதற்குப் பயிற்சியளித்து நாடு முழுவதும் போகவிட வேண்டும்.

            அதற்கு நிறையப் பொருள் வேண்டுமே!

            அதற்காகத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன் மன்னவா! முதலில் ஒரு குழுவினருக்குப் பயிற்சியளிப்பதற்கான ஏந்துகளைச் செய்து கொடு! பின்னர் பயிற்சி பெற்றவர்களை நாட்டின் நாலாப்புறமும் அனுப்பிவிடுகிறேன். அவர்கள் ஆங்காங்கு ஆதரவு திரட்டிக் கொள்வார்கள், நாளடைவில் மக்களே இவர்களைப் பேணிக்கொள்வார்கள்.

            நல்லது, வேண்டிய உதவி அளிக்கப்படும். யாரது காவலா! கருவூலத்தாரை வரச்சொல்!

சரி நாம் போகலாமா?

            இதுதான் நம் நாட்டு வரலாறு மழுங்கிப் போன கதை. நாம் கருதுவது போன்று நம் வரலாறு எழுதப் படாமலில்லை. ஆனால் எழுதப்படும் போதிருந்த குமுகச் சூழல் அனைத்து வரலாற்றையும் தொன்மக் குப்பையில் போட்டுக் குழப்பி வைத்துவிட்டது. மரபு வழியாக இருந்த வரலாறெல்லாம் இவ்வாறு திட்டம் போட்டுப் பரப்பப்பட்ட தொன்மக் குட்டையில் கரைந்து போயின. இன்றும் நம் நாட்டில் உண்மைகளின் குரலைப் போலிகளும் அறிவியலின் தொண்டையைத் தொன்ம ஓலங்களும் அழுத்திக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

            பல்வேறு திணை மக்களிடையில் ஒற்றுமையைத் தோற்றுவிக்கின்ற ஒரு நோக்கத்தைத் தொன்மக் கதைகள் நிறைவேற்றின. அதனோடு பார்ப்பனரைத் தூக்கவும் பிறவிக் குல வேறுபாடுகளை நிறுவவும் அத் தொன்மக் கதைகள் பயன்பட்டன, பயன்படுகின்றன. பார்ப்பனர் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளாத தென்னாட்டின் உண்மையான நாகரிகப் பெருமையை மறைத்து எல்லாப் பெருமையையும் வடநாட்டுக்கு உரிமையாக்குகின்ற பொய்மைக் கருத்துகளைப் பரப்பி, மீண்டும் புது உருவுடன் அப் பார்ப்பனர் ஆதிக்க முயற்சி நடைபெற இது வழி கோலியது. மலையாள நாட்டோடு தொடர்புடைய பரசிராமனை இராமனுடன் சண்டை போடவிட்டனர். ஒரே கடவுளின் இரு தோற்றரவுகள் ஒரே நேரத்தில் வாய்த்தது மட்டுமின்றி ஒன்றோடு ஒன்று சண்டையும் இட்டன. அதே பரசிராமன் கிருட்டிணத் தோற்றரவுக் காலத்திலும் வாழ்கிறான்! கிருட்டிணனின் தமையனாக அவனோடு வாழ்ந்தவனாகக் காட்டப்படும் பலராமன் எனப்படும் பலதேவனும் திருமாலின் ஒரு தோற்றரவாம். ஆறு படைவீடுகளிலும் தமிழ்நாட்டில் வாழும் முருகன் கங்கையில் தோன்றியவனாகக் கூறப்பட்டான். தலையில் பாம்பு, நீர், நிலவு போன்றவற்றுடனும் கைகளில் நெருப்பு, உடுக்கு, சூலம் முதலியவற்றுடனும், உடலில் மரவுரி, தோலாடை ஆகியவற்றுடனும் தென்னகத்தில் தோன்றிய உலகிலேயே முதற்பெரும் நாகரிகத்தின் காட்சியகமாக விளங்குகின்ற சிவனைப் பனிமலையில் வாழ வைத்தனர். உண்ணாமுலையான குமரியை அவன் மனைவியாக்கினர், அகத்தியனை வடக்கிருந்து வரவைத்தனர்!

            முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
            இடியுடைப் பெருமழை பெய்தா தேகப்
            பிழையா விளையுள் பெருவளஞ் சுரப்ப (ஏரிகளால்)
            மழைபிணித் தாண்ட மன்னவன் ………      (சிலப்பதிகாரம் 2:11:26 - 29)
ஆன பஃறேரான்(பல் + தேரான்) பெயரைப் பகீரதன்’(பல்+ரதன்) என மொழி பெயர்த்து அவனுடன் கங்கையைத் தொடர்புபடுத்தினர். பரதவர் குலத்தின் பெருமையை மறைத்தனர். தமிழ் நாகரிகத்தின் ஏன் உலகத்தின் நாகரிகத்தின் - முன்னோர்களான நெய்தல், மருத நில மக்களின் தெய்வங்களான வாரணனையும் இந்திரனையும் ஆயிரங்கண்ணோன் எனவும் பிறவாலும் இழிவுபடுத்தினர்.

            அடுத்து இக் கதைகளின் வாயிலாகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட செயற்கையான மொழியான சமற்கிருதத்தை இத் துணைக் கண்டம் முழுவதும் பரப்பிப் பார்ப்பனர்களை மொழியாலும் தொழிலாலும் நோக்கத்தாலும் ஒரே கூட்டமாக்கினர். இன்றும் ஒரே தொழிலைச் செய்யும் இந்திய மக்கள் மொழி வேற்றுமையால் மொழிக்கொரு சாதியாகச் சிதறுண்டு கிடக்க, (சமற்கிருத) மொழியால் ஒன்றுபட்ட ஒரே பெரும்பான்மைச் சாதி இந்தியாவில் பார்ப்பனரே. அதுவே அவர்களின் மாறாத மேலாண்மைக்குக் காரணம். மொழியின் இந்த ஆற்றலைத் தமிழர்களின் முன்னோர் உணர்ந்திருந்தாலேயே மொழி உணர்வு மங்காமலும் பார்ப்பனரின் மேலாண்மை தமிழ் நிலத்தின் எல்லைக்குள் புகாமலும் தமிழ்க் கழகங்களின் மூலம் ஓரளவு பாதுகாத்துவந்தனர்.

            வியாசன் தொன்மங்களை எழுதும் போது பொதுப்படையாகவும், சிவன், விண்டு ஆகிய உண்மைத் தெய்வங்களுக்குச்(உண்மையாக வாழ்ந்தவர்களைக் குறிக்கும் தெய்வங்களுக்கு) சமமான மதிப்புக் கொடுத்து வரைந்திருப்பான். ஆனால் சூத புராணிகர் என்ற பெயரில் நாடு முழுவதும் இக் கதைகளைப் பரப்பியவர்கள் அவ் வப்பகுதி மக்களுக்கு உரிய தெய்வத்தை உயர்த்தியும் மற்ற தெய்வங்களைத் தாழ்த்தியும் கதைகளைச் சொல்லியதால், கதைகள் பெருகியதோடு ஒன்றோடொன்று முரண்படவும் செய்தன. நன்றாகக் கதை சொல்லுந்திறன் பெற்றவர்களெல்லாம் பார்ப்பனராயினர். கதைகளில் பால் உணர்வுகளும் முறை மீறிய புணர்ச்சி நிகழ்ச்சிகளும் விரவியிருந்ததால் மக்களைக் கவர்ந்தன. வேள்வி வளர்த்தலும் பார்ப்பன உயர்வும் மீண்டும் தலை தூக்கின.

            வியாசனைப் பற்றிய கதை நாம் முன்பு கேட்டது போன்றது. இது மாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பருவமடையாத பெண்ணைத் தன் தவ வலிமையால் பருவமடைய வைத்து அவளைப் பராசன் புணர்ந்து உடனே அவள் வியாசனைப் பெற, தண்டு கமண்டலத்துடன் பிறந்த அவன் உடனே தந்தையின் பின்னால் நடந்து சென்றதாகவும், தாய் மீண்டும் பருவமடையாத பெண்ணாக மாறி விட்டதாகவும் கதை கூறும்.

            இப் பெண் பரிமனகந்தி என்ற பெயர் கொண்டு திங்கள் குல வேந்தன் சந்தனுவை மணந்து இரு ஆண்குழந்தைகளைப் பெற்றாள். ஒருவன் இறந்து விட இன்னொருவனுக்கு இரு பெண்களை மணம் முடித்தனர். அவனும் விரைவில் இறந்துவிடவே தாயின் ஆணைக் கிணங்க, வியாசன் இரு கைம்பெண்களையும் புணர திருதராட்டிரனும் பாண்டுவும் பிறந்தனர். இவ்வாறு பாரதப் போர் வீரர்கள் பரதன் மரபின் அரத்தமே கலவாது பிறந்தவர்கள். முன்பு கூறியது போன்று பரதவர் நாடு எனப்பட்ட பரத நாட்டுக்கு பரதன் நாடு என்று பெயர் கொடுத்தவன் இந்த வியாசனே. இவனே தன்னையும் ஒரு பரதவப் பெண்ணின் மகன் என்று கூறிக்கொள்வது தன் மீது ஐயம் எழாமலிருப்பதற்காகவும் இருக்கலாம்.

            அம்மணர்கள் தங்கள் இருபத்தினான்கு தீர்த்தங்கரர்களில் கண்ணனை ஒருவனாகக் கூறுகின்றனர். அவன் ஓர் இடையனாகவும் கூறப்படுகிறான். மேலும் வேளாண்மை பெருகிய பின்புதான் ஆனினத்தைப் பாதுகாக்கும் தேவை ஏற்பட்டிருக்கலாம். வேளிர்கள் கண்ணன் மரபினரே என்ற கருத்தும் நிலவுகிறது. இவ்வாறு ஆக்களைக் கொல்லாமைப் பேரறமாகக் கொள்ளப்பட்டு, அது முதிர்ந்து அம்மணர்களின் கொல்லாநோன்பாக முற்றியிருக்க வேண்டும். வேள்விகளை அழித்ததாகக் கூறப்படும் போர்கள் இக் கட்டத்து நிகழ்ச்சிகளோ என்னவோ? பின்னர் எதிர்ப்பை அடக்க முடியாத பார்ப்பனர், தாமும் ஊனுணவைத் துறந்தனர். ஆயினும் இன்றும் அவ்வப்போது கொலை வேள்வியை நடத்திவருகின்றனர். வரலாற்றுக் காலத்தில் நமக்குத் தெரிந்த வட இந்தியப் பேரரசு நந்தர் மரபு. நந்தர்கள் என்றால் இடையர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே இவர்கள் கிருட்டினனின் வழியினராகவே இருக்க வேண்டும். ஆனைந்து கண்ட கண்ணன் ஆட்டிடையனான கண்ணன் அம்மணக் கண்ணன் மூவரையும் நந்தக் கண்ணனுடன் இணைத்துக் கதை எழுதியிருப்பர்.

            கண்ணனும் அருச்சினன் எனப்படும் மருதனும் பின்னர் பாண்டவர்களின் பின்னோனான செனமேசெயனும் இணைந்து அழித்ததாகக் கூறப்படும் நாகங்கள் எனப்படுபவை நாகர்களே என்பது அறிஞர் கருத்து. பரதர்களும் முக் குலத்தோரும் நாக மரபினரே என்பதும், அவர்கள் தமிழர்களில் மிகப் பழைய நாகரிகத்தினர் என்பதும் அறிஞர் கருத்து.

            தாறுமாறாகக் கிடந்த வேதங்களைத் திரட்டி நான்காகத் தொகுத்தவன் வியாசன் என்று காபாரதம் கூறுகிறது. எனவே வேதங்களின் உண்மை வடிவம் இன்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் வேத மொழியில் தமிழ் வேர்கள் விரவிக் கிடப்பதிலிருந்துதான் அவற்றை உருவாக்கியோர் தமிழர்களே என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம். சாம வேதத்தில்   ஒலியும் இருக்கு வேதத்தில்   ஒலியும் உள்ளதாக ஒரு வட மொழி அன்பர் கூறுவார். கடற்கோளால் வடக்கில் புகுந்தவர்கள் புதுமைக்காக உள்நாட்டின் அநாகரிகர்களாக இருந்த மாடு மேய்க்கிகளின் பூசைப் பாடல்களையும் அதிகமாகச் சேர்த்திருக்க வேண்டும்.
           
ஆண் பனையாகிய அலகுப் பனையின் பாளையை மரத்தலிருக்கும் போது ஒடித்தாலே அதிலிருந்து சுரப்பதால் சுரபானம் (தமிழ் மொழியகராதி: சுரா – கள்) என்றறியப்படும் கள்ளைக் கடவுளுக்குப் படைத்து அரிசிச் சோற்றைப் புளிக்க வைத்துக் கிடைக்கும் மது[1]வைத் தாங்களும் குடித்ததனால் இவர்களுக்கு சுரர் என்ற பெயர் வந்தது(அபிதான சிந்தாமணி, சுரர் – பிரமன் சொற்படி மதுவுண்டதால் இப் பெயரடைந்தவர்). அது போல் மதுவை(சோமபானத்தை)க் கடவுளுக்குப் படைத்து கள்ளை(சுரபானத்தை)த் தாங்கள் உண்டவர்கள் அசுரர் எனப்பட்டனர். பனை மிகுதியாகவும் நெல் அரிதாகவும் உள்ள நிலப் பரப்பில் அதாவது குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்தோர் தங்களுக்கு அரிதாகக் கிடைக்கும் நெல்லிலிருந்து பெறப்படும் மதுவைத் தங்கள் கடவுள்களுக்குப் படைத்ததால் அசுரர் என்றும் நெல் மிகுதியாகவும் பனை அரிதாகவும் வளர்ந்த, அதாவது மருத நிலத்தில் வாழ்ந்தோர் தங்களுக்கு அரிதான கள்ளைத் தங்களது கடவுளுக்குப் படைத்ததால் சுரர் என்றும் அழைக்ப்பட்டனர்.
           
சமற்கிருதம் பார்ப்பன ஒருமைப்பாட்டு நோக்கத்துக்காகச் செயற்கையாகப் படைக்கப்பட்ட மொழி. உலகில் தோன்றிய செயற்கை மொழிகளுள் நீண்ட நாள் நின்று நிலவுகின்ற ஒரே மொழி இதுதான் என்பது ஓர் உருசிய நூல் கூறும் கருத்து[2]. இஃது உண்மைதான். ஏனென்றால் உலகில் இதனைத் தாய்மொழியாகக் கொண்டவர் நடைமுறையில் ஒருவரும் இல்லை. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பேச்சில் நாம் கைவிட்ட தூய தமிழ்ச் சொற்களாகிய அகம், அகமுடையான், ஓரகத்தி, அத்தையன்பர், அம்மான்சேய், இடைகழி முதலிய சொற்கள் இன்றும் வழங்குகின்றன. இவர்களின் பகட்டுவாழ்வுக்கு இன்றியமையாததாலேயே சமற்கிருதம் பிற செயற்கை மொழிகளைப் போல் அழியாமல் காக்கப்பட்டு வருகிறது.

            திராவிடர் என்ற சொல்லுக்குப் பல்வேறு வேர்களைக் காட்டுகிறார்களேயன்றி அதற்குப் பொருத்தமான பொருள் ஒன்றும் இதுவரை கூறப்படவில்லை. இச் சொல்லுக்கு ஒரு பொருள் இருக்க வேண்டும். அது என்ன? பழந் தமிழ்நாடு கடலில் முழுகியபோது அதற்குத் தப்பி உலகின் பல்வேறு நாடுகளுக்குத் தமிழர்கள் சென்றார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. மூவாரிகளின் புதிர்கள் (The Riddles of Three Oceans) என்ற நூல் உலகின் மிகப் பழைய நாகரிகங்கள் அனைத்தும் எழுப்பும் சிக்கல்கள் முழுகிய குமரிக் கண்டத்திலிருந்து சென்ற மக்கள் அவற்றை நிறுவினார்கள் என்ற ஒரே புனைகோளால் தீர்ந்துவிடும் என்று கூறுகிறது. இவ்வாறு உலக முழுவதும் பரவிய தமிழர் தம் பிறப்பிடம் எதுவென்று கூறியிருப்பர்? திரையிடம் என்றோ திரையமிழ்பதி என்றோ கூறியிருக்கலாமல்லவா? உலகில் திரமிலிபதி, திரமிலி, திராவிடம் என்றெல்லாம் வழங்கப்படும் சொற்களுக்கு இப்பொழுது ஒரு பொருத்தமான பொருள் இருக்கிறதல்லவா? இதில் இன்னுமொன்று. தமிழ் என்ற சொல்லுக்கும் திராவிடம் என்ற சொல்லுக்கும் எந்த வேர்ச்சொல் தொடர்புமில்லை; அஃது இம் மக்களால் பேசப்பட்ட மொழி என்பதைத் தவிர! எரித்திரியர் என்பதை ரிதிரையர் எனலாமா? எகிப்து என்பதை ஏகுபதி எனலாமா? பிரித்தத்தானியத்தின் காட்டுலாந்தில் குமாரி என்ற சொல்லால் வழங்கப்படுவோர் குமரி நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவரோ?

            ஆரியன் என்ற சொல் கலப்பை என்று பொருள்படும் ஏர் எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாக ஆரியர் இனத்தைப் படைத்த மாக்சுமுல்லர் கூறுகிறார். ஏர் என்பது ஒரு தமிழ்ச் சொல் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நிலத்தை உழுதல், நிலத்தாயின் வயிற்றைக் கிழிக்கும் செயலாகும், எனவே அதைச் செய்வோர் கீழ் மக்கள் என்று கூறும் வேதங்களைப் பாடியவர்களாகக் கூறப்படும் மாக்சுமல்லரின் ஆரியர்கள் எவ்வாறு அப் பெயர்க்குரியவராவர்? ஆர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிலம் என்பது ஒரு பொருள். கீழை நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், வெள்ளையர் வரும்போது நிலம் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமாக இருக்கவில்லையாம்! மக்கள் கூட்டங்களுக்குச் சொந்தமாக இருந்ததாம்! வடநாடு தொல் பழங்காலத்தில் சிறு சிறு தலைவர்களின் கீழே அவ்வக் கூட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் சொந்தமான துண்டுகளாக இருந்தனவாம்! இத் தலைவர்கள் நிலத் தலைவர்கள் என்ற பொருளில் ஆரியர்கள் என்று வழங்கப்பட்டனர். இம் முறை வழங்கிய வட இந்தியா, இன்றைய பாக்கித்தானம், வங்காளம், ஆப்கானித்தானம், ஈரான் அனைத்தையும் சேர்த்து ஆரியநாடு என்றனர். எனவே ஆரிய நாடுதான் இருந்ததே தவிர ஆரிய இனம் இருக்கவில்லை. வாணிகத்திலிருந்து உருவான தமிழ் நாட்டிலிருந்து (பாண்டிய நாட்டிலிருந்து) பிரித்துணர இப் பெயர் வழங்கப்பட்டது. (ஏர் என்ற வேர் கொண்டாலும் இங்கு பொருந்தும்[3]).

            மகாபாரதத்தை எழுதத் தொடங்கிய போது தான் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு ஒருவர் வேண்டுமென்று வியாசர் விரும்பிய போது ஆனைமுகப் பிள்ளையார் முன்வந்து மேரு மலையை ஏடாகவும் தன் மருப்பு(தந்தம்)களில் ஒன்றை ஒடித்து எழுத்தாணியாகவும் கொண்டு எழுதினாராம். போரில் கோட்டைகளைக் கொம்பால் குத்தி உடைக்க முயலும் போது உடைந்த கொம்புடன் இருக்கும் யானைகளைப் போர் வீரர்கள் வழிபடுவதிலிருந்து உருவான யானை வழிபாட்டை மேன்மைப் படுத்தவும் மகாபாரதக் கதைக்கு கடவுள் தன்மை கொடுப்பதற்கும் ஒரே நேரத்தில் வழி செய்தாயிற்றல்லவா?

            நம் தொல் வரலாற்றையும் பண்பாடுகளையும் புரிந்து மீட்பதற்கு உதவும் தரவுகளை சிதைந்த அல்லது திரிபடைந்த நிலையிலாவது இன்று கிடைக்க வழியமைத்துக்கொடுத்ததற்காக வியாசனுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழ் ஆய்வாளர்களுக்கு குமரிக் கண்டம் பற்றிய தொன்மைச் செய்திகளுக்கு வாயு புராணம், மச்ச புராணம் போன்றவை அடிப்படையாயிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


[1].  மதி – நிலா, மதி – அறிவு, மது – மதியை மயங்க வைக்கும் நீர்மம், சோமன் – நிலவு, சோமை – மயக்கம், சோம்பல் – சோர்வு; சோமபானம் → மது. இன்றும் இத்தகைய மதுக்குடங்களைத் தமிழ்நாட்டுச் ‘சிறுதெய்வ’க் கோயில்களில் வைத்து வழிபடுகிறார்கள்; இதைப் ‘பொங்கப்பானை’ என்றும் நெல்லை மாவட்டத்தல் குறிப்பிடுவர், குமரி மாவட்டத்தில் பச்சரிசியைச் சோறாகச் சமைத்துப் படைப்பதை அப்பெயரால் அழைப்பர்.  பல பொருள் ஒரு சொல்லாக இதைக் கொள்ள வேண்டும்; மது நன்றாக நொதித்து பொங்கி வழிவதாலேயே அதைப் பொங்கல் பானை என்று அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிடைக்கும் மது “தோப்பிக்கள்” என்ற பெயரில் சென்னையில் நடமாடுகிறது. அலுவலகங்களில் வேலை செய்வோருக்காக கூடையில் சுமந்து செல்வோர் மிஞ்சும் சோற்றைப் புளிக்கவைத்து இது பெறப்படுகிறது. டொப்பி அரிசி என்று அழைக்கப்படும் அரிசிக்கும் இதற்கும் உறவு இருக்குமா என்று தெரியவில்லை. “ஆரியர்”க்கு உரியவை என்று கூறப்படும் சுரபானம், சோமபானம் என்பவை தமிழர்களின் அடிப்படைப் பண்பாட்டின் கூறுகளாக இருப்பதைக் சுட்டுகிறோம், அவ்வளவே.    
[2] Sounds and Signs, A.Kondratov, MIR Publishers, Moscow, 1969, p.179 - 183
[3] are, the unit of metric land measure,100sq. metres, ஒரு எக்டேர் , அதாவது 100 are என்பது 2.47 ஏக்கர்கள். அண்மைக் கடந்த காலத்தில் ஓர் ஏர் உழவு என்பது 2.5 ஏக்கர்கள் என்பது உழவர்களிடையில் குமரி மாவட்டத்தில் நடப்பிலிருந்த கணக்கு. ஒரு மீற்றருக்கு 3.28 அடிகள் என்பதற்குப் பகரம் 3.3 என்று கொண்டால் பிரஞ்சு எக்டேரும் தமிழ் ஏரும் ஒரே பரப்பையே குறிக்கும். இது பற்றிய விரிவை சிலப்பதிகாரப் புதையல் என்ற எமது ஆக்கத்தின் புகார்க் காண்டம் மடலத்தில் நாடுகாண் காதையில் ஆறைங்காதமே என்ற சொல்லுக்கான விளக்கத்தில் காணலாம்.    

0 மறுமொழிகள்: