17.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 1

குரங்கிலிருந்து
பிறந்தவன்
தமிழன்
 (பஃறுளி முதல் வையை வரை இரண்டாம் பதிப்பு)
குமரிமைந்தன்

மனந்திறந்து…………..
          உலகம் இடையறாது மாறிக்கொண்டிருக்கிறது. அதைப் போலும் அதன் விளைவாகவும் மனித சிந்தனையும் மாற்றமும் வளர்ச்சியும் அடைகிறது. பஃறுளி முதல் வையை வரை என்ற  நூலை முதன் முதலில் நான் எழுதிய காலத்துக்கும் அது அச்சேறத் தொடங்கிய காலத்துக்கும் இடையில் கூட நான் எய்திய முடிவுகளில் பிழைகள் இருந்ததை என்னால் உணர முடிந்தது என்பதை முதற் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். அப்போது அவற்றை முழுமையாகத் திருத்தி எழுதும் வாய்ப்புகள் எனக்கிருக்கவில்லை. இன்று கூட நூலை முழுமையாகத் திருத்தாமல் ஒவ்வொரு அதிகாரத்தையும் பற்றிய என் இன்றைய நிலைப்பாட்டை அந்தந்த அதிகாரத்தின் இறுதியில் தந்திருக்கிறேன்.

            இந் நூல் முதன் முதலில் அச்சு வடிவம் பெறக் காரணமாயிருந்த தோழர் குணா அரணுரையில் எழுப்பிய கேள்விகளுக்கு மறுமொழி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
                       
            1.வெளிப் படையெடுப்பாளர்களின் பங்கு பற்றிக் குறிப்பிடவில்லை என்று அவர் கூறுகிறார். மாந்த நாகரிகத் தொடக்கத்தில் குமரிக் கண்டம் போன்ற மிகப் பெரியதொரு நிலப் பரப்பில் நிகழ்ந்த மோதல்களை அகமென்றும் புறமென்றும் பிரித்தல் இயலாது. அகமே புறமாகவும் புறமே அகமாகவும் செயற்படும். குறிஞ்சி(மலை) தொடங்கி நெய்தல்(கடற்கரை)ரை பரந்து கிடந்த நெடும் நிலப் பரப்பில் ஒவ்வொரு நிலப் பகுதியிலும் கலந்து வாழ்ந்த பல்வேறு குக்குல மக்களையும் குறிஞ்சியிலும் நெய்தலிலும் மிக அகன்று வாழ்ந்த ஒரே ஒரு குக்குல மக்களையும் அகம் புறமென்று வரையறுப்பது எளிதல்ல.புறப் பகைவர்களென்று ஒரு மக்கள் கூட்டத்தைக் காட்டுவதற்காக கற்பனையான ஆரிய இனக் கோட்பாட்டைத் தூக்கிப் பிடிப்பது சரியல்ல. அத்துடன் இன்றுவரை சுட்டிக்காட்டத்தக்க ஒரேயொரு அகழ்வாய்வுக் களம் கூட இன்றி வரலாற்று வரைவில் நிலைத்திருக்கும் ஒரே இனம் ஆரிய இனம்தான் என்பது வரலாற்ற்றிஞர் கூற்று[1]. ஆரியர் என்பதையும் வேதகால மக்கள் என்பதையும் ஒரே மக்கள் குழுவினரைக் குறிக்கும் சொற்களாகத் தான் கொள்ள முடியவில்லை என்கிறார் தேவிப்பிரசாத் சட்டோபாத்தியியா Lokayatha என்ற தன் நூலில்.

     
            அத்துடன் நூலில் வலியுறுத்தப்பட்டுள்ள முகாமையான கருத்து என்னவென்றால் வேதங்களை இயற்றியவர்கள் வெளியிலிருந்து படையெடுத்தோ பரவியோ இந்தியாவினுள் வந்தவர்களல்ல, குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்களும் அது முழுக முழுக அங்கிருந்து வெளியேறி இந்தியாவினுள் குடியேறியவர்களுமேயாவர் என்பதே. வருணன், இந்திரன் ஆகிய இரண்டு வேத காலத் தெய்வங்கள் தமிழரின் பண்டைய பண்பாட்டின் காப்பிலக்கியமாகிய தொல்காப்பியத்தில் காணப்படுவதற்குக் காரணம் வேறெதுவும் இருக்க முடியாது. அது மட்டுமல்ல, வேதங்களில் போலன்றி தொல்காப்பியத்தில் அத் தெய்வங்கள் நிலப் பிரிவுகளாகிய நெய்தல், மருத நிலங்களோடு முறையே தொடர்பு கொண்டிருப்பதைக் கருதினால் அவை தமிழர்களின் பண்பாட்டோடு பிரிக்க முடியாத உறவு கொண்டவை என்பதும் புலப்படும்.

            2. நூலில் போர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டே உள்ளது. ஆநிரை கவரும் போது நிகழும் சண்டை, வேள்விகளை அழிக்கும் சண்டைகளைப் பற்றிய செய்திகள் என்று பலவற்றைச் சொல்லலாம். ஆனால் போர்கள் பற்றி இன்னும் பல காட்சிகளுக்கு இடமிருக்கிறது என்பது உண்மை தான்.
                     
            மறைகளில் கூறப்படும் போர்களின் உண்மை பற்றி இப்போது உரிய இடத்தில் விளக்கியுள்ளேன்.

            3. பயிர்த் தொழிலில் பெண்களின் பங்கு உரிய வகையில் கூறப்படவில்லை என்ற குணாவின் அடுத்த கருத்தில் உண்மை இருக்கிறது. உண்மையில் பெண்ணின் பங்கு உரிய வகையில் எடுத்துச் சொல்லப்படவில்லை. இப்போது உரிய அதிகாரங்களின் பின் குறிப்புகளில் அவை சேர்க்கப்படும்.

4. வண்ணங்கள், சாதிகள் பற்றிய தோழர் குணாவின் தெளிவு எனக்கு அப்போது இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இன்று ஒரளவு தெளிவுடன் அதைப் பற்றி விளக்க இயலும். அவ்வாறே பின் குறிப்புகளில் விளக்கியுள்ளேன்.


            5. இந் நூலைப் பற்றி அரணுரையில் தோழர் குணாவும் முன்னுரையில் நானும் இதுவென்று சுட்டாமல் பொதுப்படவும் கூறிய குறைகளைத் தவிர உருப்படியான திறனாய்வுக் கருத்துகள் எதுவும் என் கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. வெங்காளூரிலிருந்து வெளிவந்த மீட்போலையில் ஒரு குறிப்பிட்ட சாதியின் கருத்துகள் ஊடாடியுள்ளதாக ஒரு திறனாய்வு வைக்கப்பட்டது. இது குறித்து நான் விளக்க வேண்டியுள்ளது.

            நான் தொழில் முறை ஆய்வாளனல்லன், களப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் இல்லாதவன். ஆனால் நான் பார்த்த அரசுப் பணி நிமித்தம் நான் தங்கிய பல்வேறு இடங்களில் நண்பர்களிடமிருந்தும் நேரடியாகவும் அறிந்த சில செய்திகள் எனக்குக் கருப்பொருளாயமைந்தன.

            படிக்கும் காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் நான் ஆர்வமுற்றிருக்கவில்லை. அரசர்கள், நாடுகள், நகரங்களின் பெயர்கள், அரசர்களின் ஆட்சிக் காலங்கள், நடைபெற்ற போர்களின் ஆண்டுகள் போன்றவற்றை நினைவில் வைத்திருக்க இயலாமை ஒரு முகாமையான காரணம். அது போல் தேவைப்படும் நூல்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் வாய்ப்பும் எனக்கில்லை. ஆனால் எனக்குப் படிக்கக் கிடைத்தவற்றில் கிடைத்த செய்திகளில் தமிழ், தமிழகம், தமிழர், குமுகியல் வளர்ச்சி, மனித வரலாறு, பண்பாடு, சிந்தனைகள் மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் என்ற நிலையில் நினைவில் நிறுத்தியிருந்தேன். மார்க்சியத்தை அறிந்த போது குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற ஏங்கல்சின் ஒப்பற்ற நூலைப் படித்த பின்னர் அதில் கூறப்பட்டிருக்கும் இயற்பாடுகள் தமிழகக் குமுகத்தில் எப்படி நிகழ்ந்துள்ளன என்று அலசத் தோன்றியது. அதன் விளைவுதான் இந்த நூல்.
                                         
            நான் இந் தூலை எழுதுவதற்காகக் குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு களப்பணி எதிலும் ஈடுபட வில்லை. அதே வேளையில் நான் பிறந்து வளர்ந்த குமுகச் சூழலில் என் கவனத்திலிருந்து தப்ப முடியாத சில செய்திகளுடன் ஆங்காங்கே நான் கேள்விப்பட்ட செய்திகளும் சேர்ந்து இந் நூலின் உருவாக்கத்தில் பங்காற்றியுள்ளன. ஒரு சாதிக்குரிய நடைமுறைகள் என்று இந் நூலில் கூறப்பட்டிருப்பவை பிற சாதிகளில் வேறு வடிவங்களில் இடம்பெற்றிருப்பதையும் ஒரே சாதியிலுள்ள உட்பிரிவுகளுக்கிடையிலும் ஒரே உட்பிரிவின் வெவ்வேறு நிலப் பகுதிக் குழுக்களிடையிலும் வடிவங்களில் நடைமுறைகள் வேறுபடுகின்றன. வெவ்வேறு சாதிகள் என்று இன்று அறியப்படுபவற்றின் உட்குழுக்களுக்குள் ஒரே தன்மை உடையனவாகவும் இந் நடைமுறைகள் காணப்படுகின்றன. எனவே வேறுபட்ட சாதிகள், சாதிக் குழுக்கள் என்பவை வெறும் மாயை என்பதை என்னால் தெளிவாக எடுத்து வைக்க முடியும். அந்தக் கருத்தைக் கள ஆய்வு மூலம் வெளிப்படுத்தப் பயன்படும் என்ற நோக்கத்துடன்தான் தமிழகச் சமூக வரலாறு - வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற நூலை நான் இயற்றினேன்.
                                               
            அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு இத்தகைய மாபெரும் களத்தில் இறங்கியுள்ளாயே என்று ஏளனம் செய்வோர் இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்வது இதுதான்: என்னை விடப் பல மடங்கு கற்றோர் எண்ணற்ற பேர் நம்மிடையே இருப்பது எனக்கு நன்றாவே தெரியும். கழக இலக்கியங்கள் தொட்டு இன்றைய தலித் இலக்கியங்கள் வரை எழுத்துப் பிசகாமல் மேற்கொள்ளத்தக்கவரும் கல்வெட்டுகள், பட்டயங்களென்று ஒன்று விடாமல் ஒப்புவிக்கும் ஆற்றலுள்ளவரும் தமிழகத்தினுள்ளும் இந்தியாவினுள்ளும் வெளியிலுமுள்ள அனைத்து அகழ்வாய்வுக் களங்கள் பற்றிய செய்திளை விரல் நுனியில் வைத்திருப்போரும் உலக மொழிகள் அனைத்தையும் நாநுனியில் வைத்திருப்போரும் எத்தனையோ பேர் இருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் செய்யத் துணியாத இப் பணியில் துணிந்து நான் இறங்கத் தூண்டுகோலாக இருந்தது தமிழர்களின் தொடக்க கால வரலாற்றை எப்படியும் தோண்டி எடுத்தே ஆக வேண்டும் என்ற தமிழ்க் குமுகத் தேவையின் வெளிப்பாடேயாகும். தொடக்க முயற்சியில் பிழைகள் நேர்ந்தாலும் இன்று இன்னும் மேம்பட்ட வகையில் தொல்பழந்தமிழர் வரலாற்றை எடுத்து வைக்க முடியும் என்று நம்பிக்கையோடு என்னால் சொல்ல முடியும்.

            அரணுரையில் ஆரியர் என்ற இனமே இருந்ததில்லை என்ற என் கருத்தை ஏற்க தோழர் குணா தயங்கினாலும் பின்னர் அவர் எழுதிய தமிழியப் பொதுவுடைமை என்ற நூலில் தமிழகத்துப் பழங்குடியினரான பறையர்கள் மற்றும் ஆரியர்கள் என்று கருதப்படும் பிரஞ்சியர்கள் ஆகியோரின் உடலளவுகளை ஒப்பிட்டுக் காட்டி இந்த இனக் கோட்பாட்டை மறுத்திருக்கிறார் என்பது இந் நூலின் கருதுகோளுக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாமல்லவா?

            திறனாய்வு என்ற வகையில் வெளிப்பட்ட ஒரு கருத்தையும் இங்கு கூறத்தான் வேண்டும். 1983 வாக்கில் நாகர்கோயிலில் கூட்டப்பட்ட ஒரு திறனாய்வுக் கூட்டத்தில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் உறுப்பினராகிய கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் ஒருவர் அகராதிகளில் காணப்படாத 28 சொற்கள் இந் நூலில் கையாளப்பட்டிருப்பதாகக் கூறி அதை ஒரு குறையாகச் சுட்டினார். ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் படைப்பாளிகள் அம் மொழியில் வழக்கிலில்லாத புதிய சொல்லை வடித்தாலும் அல்லது வழக்கிலிருக்கும் ஒரு சொல்லை அதுவரை அதற்கு வழக்கிலிருக்கும் பொருளிலிருந்தும் மாறுபட்ட பொருளில் கையாண்டாலும் அச் சொற்களை அவர் அம் மொழியின் சொல்வளத்தைப் பெருக்குவதற்காகச் செய்த பெருந்தொண்டு என்று போற்றி அச் சொற்களையும் சொல்லாட்சிகளையும் அவரது பெயரைக் குறிப்பிட்டு அகராதிகளில் ஏற்றுவர். ஆனால் மாற்றத்தையும் அதனால் ஏற்படும் வளர்ச்சியையுமே பரிந்துரைத்த மார்க்சின் பெயரைக் கூறிக்கொண்டு செயற்படும் பொதுமை இயக்கத்தாரும் அவர்களது துணை அமைப்புகளைச் சார்ந்தோரும் தமிழ்க் குமுகத்தைப் பொறுத்த வரையில் மாற்றங்கள், வளர்ச்சிகள் நிகழாமல் பாதுகாத்துக்கொள்ளும் பணியைத் தாங்களாகவே ஏற்றுக்கொண்டு திறம்படச் செயற்படுகின்றனர் என்ற உண்மையை நாம் பதிவு செய்ய வேண்டும். இவர்களது வகுப்பு, வரணம் அல்லது சாதிப் பின்னணி பற்றி விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற என் நூலில் விளக்கியுள்ளேன். அத்துடன் அவர் சுட்டிக்காட்டிய சொற்கள் என் படைப்பல்ல, தேவநேயப் பாவாணரால் வடிக்கப்பட்டவை என்ற உண்மையையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவ்வாறு உரிய வகையில் திறனாய்வுகள் வெளிப்படாத நிலையில் என்னுடைய எழுத்துக்கு நானே திறனாய்வு செய்ய வேண்டிய ஒரு தேக்க நிலை தமிழ் வரலாற்றுச் சூழலில் நேர்ந்திருப்பதின் ஒரு தடயமாக இந்த இரண்டாம் பதிப்பு அமைந்துள்ளது.

            நூலில் தரப்பட்டுள்ள கால அளவுகளை இன்னும் முன்னோக்கிக் காட்டியுள்ளேன். இதற்காக, பொய்களையே சொல்வதற்கென்று திரு.சு.கி. செயகரன் என்பார் எழுதி நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள குமரி நீலநீட்சி (இரண்டாம் பதிப்பு -2004 அக்டோபர்) எனும் நூல் பாவாணர் அடிக்கடி கூறும் எண்ணெயும் உண்மையும் மேலே வந்தே தீரும்என்பது போல் சில அரிய உண்மைகளைத் தந்துள்ளது. அதற்காக அந்த நூலுக்காககவும் அதை எழுதிய சு.கி.செயகரன் என்பவருக்கும் அதை வெளியிட்ட நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகத்தாரும் நன்றி செலுத்துகிறேன்.

பிரளயம் பற்றிய மரபுகள் என்ற தலைப்பின் கீழ், திபெத் என்ற துணைத் தலைப்பில்(பக்64 – 65) அவர் கூறியிருப்பது:
            “ஒரு பெரும் வெள்ளத்தால் உலகம் மூழ்கும் நிலையில் இருந்தது. கடவுள் மக்கள் பட்ட வேதனையைக் கண்டு, வங்காளம் வழியாக வெள்ளத்தை வற்றச் செய்தார். அப்போது திபெத்தில் வாழ்ந்த மக்கள் குரங்குகளை விட சற்றே மேம்பட்ட நிலையில் இருந்தனர். இவர்களை மேம்படுத்தவும் அறிவுப் பாதையில் இட்டுச் செல்லுமுகமாகவும் சில சான்றோர்களைக் கடவுள் இங்கு அனுப்பியதாகக் கூறுகிறது இக்கதை.”

            குமரிக் கண்டத்திட்டு இந்திய நிலத்தட்டாகச் சுருங்கி தெற்கிலிருந்து நகர்ந்து வந்து ஆசியக் கண்டத்திட்டில் தன் கிழக்கு முனையை மோதி கடிகார எதிர்த் திசையில் சுற்றி மேற்கு முனையையும் இடிக்க இடையில் சிக்கிய கடல் பரப்பாகிய டெத்தீசுக் கடலின் மட்டம் உயர்ந்து அது ஆசியத் தட்டில் இருந்த திபெத்து மக்களுக்கு அச்சுறுத்தலாகியதும் பின்னர் வங்காள விரிகுடாப் பகுதியில் உடைத்துக்கொண்டு கங்கையாற்றின் இன்றைய தடம் உருவானதும் இம் மரபு மூலம் வெளிப்படுகிறது என்பது வரலாற்றுப் பார்வை உள்ள எவருக்கும் எளிதில் விளங்கும். அத்துடன் குமரிக் கண்டத்திட்டிலிருந்த மக்கள்தாம் இந்த மரபில் கூறப்படும் “சான்றோர்”கள் என்பதும் விளங்கும்.

            புவியியங்கியலார்கள் (Geologists) குறிப்பிடுவது போல் கண்டப்பெயர்ச்சியின் போது, அதாவது இந்தியா ஆசியாக் கண்டத்தை நோக்கி தெற்கிலிருந்து, காண்டவனத்திலிருந்து, உடைந்து சென்று அதனுடன் இணைவதற்கு முன் மனித இனம் தோன்றியிருக்கவில்லை என்று கூறுவது தவறு. அது மட்டுமல்ல, உலகமெல்லாம் மக்களின் இலக்கியப் பதிவுகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் மரபுகளாகவும் நிலவுகின்ற கடற்கோள்கள் நிகழ்ந்த காலங்களில் மனிதன் தோன்றியிருக்கவில்லை என்று இவர்கள் கூறுகின்றனர். புவியியங்கியலார் கூறும் முடிவுகள் இவர்கள் பெற்ற புலனங்களிலிருந்து ய்தறிந்தவை. அதே நேரத்தில் மக்களின் பதிவுகள் என்றோ வாழ்ந்த மக்கள் கண்ட உண்மைகள். புவியியங்கியலாரின் காலக் கணிப்புகள் இன்று வரை ஒரு திடமான விடையைத் தரவில்லை. எனவே இவர்களின் காலக்கணிப்புகள் சரியானவையா என்பதற்கு மனிதர்களின் பதிவுகள் தாம் உரைக்கல்லாக முடியுமேயொழிய மக்களின் பதிவுகளைச் சரிபார்க்க இன்றைய புவியியங்கியலார்களால் இயலாது. மனிதர்களின் தோற்றக்காலம் பற்றிய ஆய்வுகளும் இன்னும் திடமான விடைகளைத் தர இயலாதவையாகவே உள்ளன.

            அந்த நூலில் தாலமி என்ற கிரேக்க அறிஞர் வரைந்த உலகப் படம் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். அப் பகுதிகளை உலகப் படத்தில் வரைந்த போது செய்த பிழைகள் பல. அவற்றில் முக்கியமானவை இரண்டு : இந்தியா ஒரு தீபகற்பம் என்பது தெரியாமல் இந்தியாவை ஒரு பெரும் தீவாகக் காட்டியது மற்றும் இலங்கையின் அமைப்பை ஏறத்தாழ பதினான்கு மடங்கு மிகைப்படுத்திக் காட்டியது (பக். 35).

            தாலமியின் உலக வரைபடம் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வரைபடங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்று இன்றைய உலக வரைபடத்தின் திரிபடைந்த வடிவம் என்று சொல்லலாம். இன்றைய அக்க மற்றும் நேர் வரைகளே (Latitudes and Longitudes) அதிலும் தரப்பட்டுள்ளன.



 
குமரி நிலநீட்சியில் தரப்பட்டுள்ள படம்
ஆனால் பிற வரைபடங்களில் அக்க, நேர் வரைகள் மாறுபட்டுள்ளன. அத்துடன் ஒரு படத்தில் இந்தியா என்பது ஒரு தீவாகக் காட்டப்பட்டுள்ளது. வேறு படங்களில் தீவாகக் காட்டப்பட்டுள்ள பகுதியில் தாம்பிரபேன் என்ற பெயரில் இலங்கை என்று காட்டப்பட்டுள்ளது. திரு.சு.கி. செயகரன் இந்த இரண்டு படங்களில் எதையுமே முழுமையாகக் காட்டாமல் அவற்றில் ஒன்றில் தாம்பிரபேன் என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை மட்டும் தனியாகப் போட்டுவிட்டு இந்தியா தீவாகக் காட்டப்பட்டிருப்பதும் தாம்பிரபேன் காட்டப்பட்டுள்ளதும் ஒரே படம் என்பது போன்ற ஒரு பொய்மையை உருவாக்கியுள்ளார்.

            எனக்கு நண்பர் ம. எட்வின் பிரகாசு 6 உலக வரைபடங்களை வலைத் தளங்களிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளார்.



இது இன்றைய உலகப் படத்தைப் போன்று தோற்றமளிப்பது


இதில் இந்தியா ஒரு தீவு போன்று ஒரு புள்ளியில் மட்டும் ஆசியாவோடு தொடர்பு கொண்டுள்ளது. இதைத் தான் சு.கி. செயகரன் முதல் பிழையாகச் சுட்டியுள்ளார் போலும். ஆனால் இந்தப் படத்தில் குமரி(இந்து)மாக்கடல் பகுதி மட்டுமே துண்டித்துத் தரப்பட்டுள்ளது.
கிழக்கு முனை ஆசியத் தட்டைத் தொட்டவாறு இருப்பதைக் காணலாம்


இந்த இறுதி நான்குக்கு இடையில் பெரும் வேறுபாடுகள் இல்லை. இதில் காட்டப்பட்டிருக்கும் தாப்பிரபேனை அடுத்துள்ளதாகக் கூறப்படும் இந்தியாவுக்கும் (2) ஆம் படத்தில் இந்தியா தொட்டுக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ள ஆசியாவுக்கும் பெரும் வேறுபாடு இல்லை.
            தாலமியின் உலக வரைபடம் ஓர் ஏமாற்று என்று கூறுவோரும் உண்டு. அதில் உண்மையும் உண்டு தவறும் உண்டு. இன்று துல்லியமானதாகக் கூறப்படும் உலக திணைப்படம் வரையும் முயற்சியில் முதலில் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடத்தைத் தாலமியின் வரைபடம் என்று எவரோ கூறி வெளியிட்டிருக்கலாம் (முதல் படம்) என்று தோன்றுகிறது. அவருக்கு முன்பே இன்னொரு கிரேக்கர் ஒரு உலகப் படத்தை வரைந்திருப்பதாக Geographia (Ptolemy) என்ற தலைப்பில் விக்கிபீடியா கூறுகறது. (2) ஆம் வரைபடம் பெரும்பாலும் தாலமிக்குக் கிடைத்த ஒரு பழம் வரைபடம் என்று தோன்றுகிறது. அதில் இந்தியா ஒரு தீவாகக் காட்டப்பட்டிருப்பதால் அதை நீக்கிவிட்டு அதன் இடத்தில் தாப்பிரபேனை அவர் வைத்துள்ளார் போலும். ஆனால் தாப்பிரபேன் இந்தியாவிலிருந்து பலநாள் கடல் செலவில் செல்ல வேண்டிய இடம் என்று அரேபியக் கடலோடிகளும் அங்கு நிழல் தெற்கு நோக்கி மட்டும் விழும் என்றும் அதனைச் சுற்றிக் கடலில் வந்தவர்கள் எவருமில்லை என்றும் கிரேக்கர்களும் எழுதி வைத்துள்ளனர் (பார்க்க தென்னிலங்கை கட்டுரை இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், ஆசிரியர் குமரிமைந்தன், வேங்கை பதிப்பகம், 80, மேலமாசி வீதி, மதுரை - 625 001). அவற்றைப் பார்த்து அவர் காலத்தில் தாப்பிரபேன் என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவுக்குக் கூடுதல் பரப்பை அளித்து தாலமி உலகப்படம் வரைந்து விட்டார் போலும்.

            மேலே கூறிய (2) ஆம் திணைப்படம் திபேத் மக்களிடையில் வழங்கும் வெள்ளப்பெருக்குக் கதைக்குப் பொருந்தி வருகிறது. கிழக்குக் கோடியில் ஒரேயொரு புள்ளியில் ஆசியாவைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்தியா மேலும் நெருங்கி மேற்குக் கோடியிலும் வால்போல் உள்ள பகுதியில் தொட்டு நெருங்கினால் இடையில் சிக்கிய நீர்மட்டம் உயர்வது இயல்பு. அவ்வாறு உயர்ந்து அந்த நீர் கீழ்க்கோடியில் உடைத்துக் கொண்டு இன்றைய கங்கைச் சமவெளி உருவாக வழியமைத்ததையே திபெத்திய வெள்ளப் பெருக்குக் கதை கூறுகிறது எனலாம்.
                                                                           
            அப்படியானால் இந்த வெள்ளப்பெருக்குக் கதை கூறும் நிகழ்ச்சி நடைபெறுவதற்குப் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகத்திணைப் படத்தை வரைந்திருக்க வேண்டும். எரிக் வான் டெனிக்கன் போன்ற ஐரோப்பிய - அமெரிக்கர்களைக் கேட்டால் இது வேறு உலகங்களிலிருந்து நம்மை விட நாகரிகத்தில் உயர்ந்த மனிதர்கள் இங்கு வந்து வரைந்த படமாக்கும் என்பர், ஏனென்றால் உலகில் சொந்தமாக நாகரிகத்தை வளர்ப்பதற்கு வெள்ளைத் தோலர்களால்தான் முடியும் என்று நம்மை நம்ப வைப்பது அவர்களது குறிக்கோள். ஆனால் உண்மை அதுவல்ல, உலகின் தென் அரைக் கோளத்தில் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் வரைந்த உலகத் திணைப்படத்தின் ஒரு பகுதிதான் இது.

            கோண்ட்வானாக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து வடக்கிலிருந்த லாரோசியா என்ற பெருங்கண்டத்தை நெருங்க, அப் பகுதியில் இருந்த டெதிசு எனும் ஆதிக்கடல் பரப்பு சிறுத்து, இடைப்பட்ட படிவங்கள் இமயமலை எனும் மடிப்பு மலையாக உயர்ந்தன. இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம். இது நடந்தது சுமார் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அதற்கும் 130 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனம் தோன்றியது. (அழுத்தம் செயகரனுடையது பார்க்க, அதே நூல் பக்: 59.)

இந்தக் கூற்றிலிருந்து பல உண்மைகளைப் பெற முடியும்:

(1). மனிதர்கள் தோன்றி (135 - 130) = 5 மில்லியன், அதாவது ஐம்பது இலக்கம் ஆண்டுகள் ஆயின என்பது. ஆனால் சிக்கல் என்னவென்றால் இந்த ஆசிரியர் இதே நூலில் மனிதன் தோன்றிய காலமாக ஐந்து இடங்களில் 5 வெவ்வேறு காலங்களைக் கூறுகிறார். அவற்றுள் 17-ஆம் பக்கத்தில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆதிமனிதர் தோன்றிய பின்னர் கண்டங்கள் சில மீற்றர்கள் மட்டுமே நகர்ந்துள்ளன. (தன்னினைவில்லாதவர் போன்று எழுதும் இவர் போன்றோரது படைப்புகளை ஆகா ஓகோவென்று புகழும் தமிழகத்து மதிப்புரையாளர்களை நினைக்கும்போது இன்றைய கல்வி முறை சிந்தனை என்ற புலனை எவ்வளவு அழிந்துவிட்டது என்னும் திடுக்கிட வைக்கும் உண்மை புரிகிறது.)

(2). டெதிசு கடல் மறைந்து 135 மில்லியன் ஆண்டுகள் ஆயிற்று என்றால் அதற்கும் முன்பு டெதிசு கடலைக் காட்டும் வரைபடத்தை மனிதர்கள் வரைந்துள்ளனர் என்றால் மனிதன் புவிமேல் அதற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் அதாவது 14 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே தோன்றிவிட்டான் என்பது புலனாகிறது.

(3). காட் எலியட் என்பவர் லெமூரிய மனித இனம் 13.5 முதல் 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களிலிருந்து இரு படிகள் முன்னேறிய இனமே ஆரிய இனம் என்று கூறுவதாகவும் திரு.சு.கி. செயகரன் கூறுகிறார். அப்போது டினோசர்கள் லெமூரியாவில் வாழ்ந்தன என்று காட் எலியட் கூறுவதாகக் கூறுகிறார். ஆரிய இனத்தை உயர்த்துவதற்காக உருவானதே லெமூரியாக் கோட்பாடு என்று இதை வைத்து சு.கி.செயகரன் கூறுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல, எர்ணசுட்டு எக்கல் என்பார் உருவாக்கியது லெமூரியக் கோட்பாடு. மனிதன் தோன்றி வளர்ந்த நிலம் லெமூரியா என்பதோடு அவரது வேலை முடிந்தது. இதன் மூலம் ஐரோப்பா அல்லாத ஒரு மண்ணில் மனிதன் தோன்றி வளர்ந்ததாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அதில் உள்ளுணர்வால் உணர்ந்த செய்திகளைப் புகுத்தியவர் இறைநெறி (பிரம்மஞான)க் கழகத்தினர். இந்தியாவினுள் ஆரிய வேதங்களின் ஆட்சியை அழிக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் என்று பரப்பி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பார்ப்பனர்களிடையில் ஊடுருவத் திட்டமிட்ட அமெரிக்க முயற்சிதான் இறைநெறிக் கழகம். அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு மும்பையில் காலூன்ற முயன்ற அதனை அங்கு எவரும் ஏறெடுத்தும் பார்க்காததால் சென்னையில் காலூன்றிய அதனுள் உலகிலுள்ள ஆரிய இன வெறியர்களும் சாதி வெறியர்களும் புகுந்து கொண்டனர். இந்தியாவில் இறைநெறிக் கழகத்திலிருந்து அமெரிக்கப் பிடியை விலக்க அன்னிபெசன்றைக் கருவியாக்கிய பிரிட்டனின் தந்திரம் குறிப்பிடத்தக்கது.
           
            நமக்கு வேண்டியது டெத்திசுக் கடல் மறைந்த 13.5 கோடி ஆண்டுக்கும் லெமூரியாவில் மனிதர்கள் தோன்றியதாக காட் எலியட் கூறிய 13.5 - 22.5 கோடி ஆண்டுக்கும் தற்செயலாகவோ, ஏதோ ஏற்பட்ட இணைவை எண்ணிப் பார்க்கத் தோன்றுவதுதான். இடைப்பிறவரலாக ஒன்றைக் கேட்கிறேன். கடாரம்(சுமத்திரா) மீது படையெடுத்த இராசேந்திரன் பிடித்த நாடுகளில் இலாமுரிதேசம் என்ற ஒன்று இருந்ததாக அவனது மெய்கீர்த்தி கூறுகிறது. அந்த வட்டாரத்தில் அத்தகைய பெயருள்ள பகுதி எது என்று அப் பகுதிவாழ் தமிழர்கள் கூற முடியுமா? லெமூரியா என்ற பெயர் நாம் பொதுவாகக் கருதுவது போல் லெமூர் எனும் குரங்குகளிலிருந்து வந்ததா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது இதிலிருந்து ஒரு வேளை புலப்படலாம்.

திரு.சு.கி.செயகரன் 19ஆம் நூற்றாண்டு ஆய்வு முடிவுகளை வைத்து 13½ கோடி ஆண்டுகள் முன்பு இடம்பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சியை, அதாவது இந்திய நிலத்தட்டு ஆசியக் கண்டத்திட்டில் மோதியதை, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டரசு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் நூல் 8½ கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது(இந்த நூல்தான் இந்திய நிலத்தட்டு நாம் மேலே கூறியபடி மேற்கு முனையில் ஆசியத்தட்டில் முட்டி கடிகார எதிர்ச்சுற்றில் நுற்றி ஆசிய கண்டத்தட்டை அணைத்ததாகப் பட விளக்கமும் தந்துள்ளது). ஆக 1½ நூற்றாண்டு கால ஆய்வுகள் ஒரு புவியியங்கியல் நிகழ்வை 5 கோடி ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியுள்ள அதே வேளையில் மனிதன் தோற்றக் காலத்தை முன்னோக்கி நகர்த்திக்கொண்டுள்ளது. தினமணி இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் குமரிக் கண்டத் திட்டும் ஆசியக் கண்டத் தட்டும் மோதியது 1.5 முதல் இரண்டு கோடியாண்டுகளுக்கு முன் தொடங்கி ஆறு முதல் எட்டு மில்லியன் (அறுபது முதல் எண்பது இலக்கம்) ஆண்டுகளுக்கு முன் இன்றிருக்கும் அளவுக்கு உயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது[1]. எனவே காலக் குறிப்பில் இந்த மாற்றம் தேவை என்று நான் கருதுகிறேன்.

            தமிழ்நாட்டரசு பாடநூல் தந்திருப்பது ஒரு கருத்தியல் வரைபடமே. தாலமியின் உலகப் படங்கள் என்ற தொகுப்பில் உள்ளவை ஒருவேளை துல்லியத்தில் குறைபாடுடையவாய் இருக்கலாம், ஆனால் வெவ்வேறு காலங்களில் உலகின் இப் பகுதியின் தோராயமான நிலக்கிடப்புகளை காட்டுனவாகும். அந்தத் தொகுப்பில் எண் (2) இட்ட படம் ஏறக்குறைய இன்றைய உலக அமைப்பை ஒத்த  படங்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாகும். மேலே, அதாவது வடக்கில் இருக்கும் பெரும் நிலப்பரப்பைக் காட்டும் பகுதியிலிருந்து தொங்கிக்கொண்டிருப்பது போல் காணப்படும் நிலப்பரப்புதான் ஆசிய நிலத் தட்டுடன் வலது மூலையில் மோதி கடிகாரச் சுற்றாகச் சுழலத் தொடங்கிய இந்தியத் தட்டு என்று தோன்றுகிறது. இது தாலமியால் உருவாக்கப்பட்ட படம் என்று தெரியவில்லை.

இந் நூலில் குமரிக் கண்டத்தின் பகுதிகள் கடலுள் முழுகியது பற்றிய புவியியங்கியல் (Geological) விளக்கங்களுக்குள் நுழையவில்லை என்பதையும் மேலே குறிப்படப்பட்டுள்ள திரு.சு.கி.செயகரனின் நூலின் திறனாய்வாக நான் எழுதிக்கொண்டிருக்கும் குமரிக் கண்ட அரசியல் என்ற நூலில் அவை பற்றிய செய்திகள் முன்வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று நடைமுறையிலிருக்கும் வரலாற்று வரைவு வரையறைகள், பெருமைப்படத்தக்க வரலாறு என்று ஒன்று இல்லாதவர்களாகிய அமெரிக்கர்கள் வகுத்ததவையாகும். அவர்களது குறிக்கோள் பொருளியல் வல்லாண்மையின் பின்னால் ஒளிந்திருக்கும் படை வலிமையால் தங்களை மீறிச் செல்ல முடியாமலிருக்கும் உலகின் பெரும்பான்மை மக்களின் வரலாற்றைச் சிறுமைப்படுத்துவதாகும். மண்டை ஓடுகளும் பானை ஓடுகளும்தாம் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வரலாற்றுச் சான்றுகளாகும். தமிழகத்தைப் பொறுத்த அளவில் அவற்றில் ஏதாவது கிடைத்தாலும் ஆளும் கணங்கள் அவற்றை அழித்துத் தாண்டவமாடுதல் விதிவிலக்கின்றி நடைபெறுகிறது.    

முதற் பதிப்பின் போது அது வெளிவரத் துணை நின்ற பல நண்பர்களுக்கும், என் அறியாமையின் காரணமாக, உரிய வகையில் என் நன்றியுணர்வைப் பதிவு செய்யத் தவறிவிட்டேன். அந்தத் தவற்றைத் திருத்திக் கொள்ள இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். கையெழுத்துப் படியாக இருந்த இப் படைப்புக்கு அன்று புதிதாக அறிமுகமாகியிருந்த உலர்ப்படி என்றும் ஒளிப்படி என்றும் குறிப்பிடப்படுகின்ற செராக்சு முறையில் நான்கு படிகள் எடுத்துத் தந்த ஈழத்து நண்பர் சுந்தர் எனப்படும் பிரான்சிசு அரவிந்தனுக்கும் அவரது தோழர்களுக்கும் அவற்றில் ஒரு படியைப் படித்தவுடனேயே அச்சிடும் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்ட தோழர் குணாவுக்கும் அச்சிடும் பொறுப்பை ஏற்றுச் சிறப்புடன் முடித்துத் தந்த நண்பர் அரணமுறுவலுக்கும் பொருளுதவிய மறைமலையடிகள் புத்தக நிலையத்தாருக்கும் இலைமுரியா நினைவு இயக்கத்தினருக்கும் பல வகைகளிலும் வெளியீட்டில் துணை நின்றுதவிய தோழர்கள் பொன்.பரமேசுவரன், பொன்.சந்திரன் ஆகியோருக்கும் கைப்படி நிலையிலிருந்த இந்தப் படைப்பைத் தன் தோழர்களின் உதவியுடன் படிகள் எடுத்து தம் வட்டங்களில் படித்து கருத்தாய்வு செய்து தங்கள் கருத்துகளை முன்வைத்து என்னை ஊக்கிய நண்பர் மதுரை பீவிகுளம் செல்வரசு அவர்களுக்கும் காலந்தாழ்த்திய என் நன்றியை உரியதாக்குகிறேன்.

            இந்தப் பதிப்பில் 6ஆம் அதிகாரத்தில் வரும் இரண்டு படங்களில் உலகின் வெப்பப் பாலைநிங்கள் என்ற தலைப்பில் உள்ள படம் A Commercial Geography(by L.Dudly Stamp, Longmans, Green and Co.,1951,p.21) என்ற நூலிலிருந்தும் புவியின் மீது உறைபனிப் பரவல் கோட்டின் புறவரைவு என்ற படம் Physical Geology(G.Gorshkov, A.Yakushova, MIR Publishers, Moscow,1967,p.197) என்ற நூலிலிருந்தும் பெறப்பட்டவை. அவற்றிலுள்ள குறிப்புகளைத் தமிழாக்கித் தரும் பணியை முடித்துத் தந்த நண்பர் வெள்உவனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

            இந்த இரண்டாம் பதிப்பை வெளியிட முன்வந்துள்ள வேங்கை பதிப்பகத்தின் நண்பர் பொன்.மாறனுக்கும் அவரது மைந்தன் திரு.வேங்கைமார்பனுக்கும் என் நன்றிகள்.

            இரண்டாம் பதிப்பு உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்ற தன் வேட்கையை வெளிப்படுத்தி முடங்கிக் கிடந்த இப்பணியை உயிர்ப்பித்து உதவிய நண்பர் குணாவுக்கு இன்னொரு முறை நன்றி கூறுகிறேன்.
தெற்குச் சூரங்குடி                                                                                                      குமரிமைந்தன்.
12.02.2007


 [1].Masks of Gods, I. Primitive Mythology, Joseph Campbell
[2] இந்தியாவின் பருவ மழைகள், கே.என்.ராமச்சந்திரன், தினமணி, 19-07-2013

0 மறுமொழிகள்: