18.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 17

  1. கொற்றவையே! குமரியே!
(தோரா. தி.மு. 50,000)
இதோ நாம் நெருங்கிக்கொண்டிருக்கும் இடம் நாம் இதுவரை கண்ட உறைவிடங்களைவிட மிகப் பெரியதாக இருக்கிறதல்லவா? சுவர்களின் மீது ஓட்டுக் கூரையிடப்பட்ட வீடுகள் எதிரெதிர் வரிசைகளில் அமைந்து நடுவில் அகன்ற வீதிகளுடன் காணப்படுகின்றன. மறுபுறத்தில் கடலின் அலைகள் எழும்பி இரைச்சலிட்டுக்கொண்டு கரையில் மோதித் திரும்புகின்றன. அதோ அங்கே செங்கற்களால் கட்டப்பட்ட கனத்த சுவரையுடைய துறைமுகத்தின் பாந்துகளில் நாம் இதுவரை கண்டவற்றைவிடப் பெரிய மரக்கலங்கள் நிற்கின்றன. அவற்றில் உயரமான பாய் மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. பாய்கள் இறக்கப்பட்டுள்ளன. மரக்கலங்கள் பெரிய வடங்களால் துறையிலுள்ள புணைப்புக் கம்பங்களில் கட்டப்பட்டுள்ளன. துறையை அடுத்துக் காணப்படும் மண்டபங்களில் பலவகைப் பண்டங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. காவலாளிகள் போல் தோன்றுவோர் செம்பால் செய்யப்பட்ட வாள்போன்ற படைக்கலங்களைத் தாங்கி நடந்துகொண்டிருக்கின்றனர். பல மரக்கலங்கள் கடலிலிருந்து வந்து சேர்ந்தவாறு இருக்கின்றன. அவற்றிலிருந்து மக்கள் இறங்குவதும் ஊருக்குள் செல்வதுமாக இருக்கிறார்கள். ஊருக்குள் அவ்வப்போது ஆரவாரம் கேட்டுக் கொண்டிருக்கிறது. நாம் ஊருக்குள் சென்று பார்க்கலாமா?
                                                              
            இதோ ஊருக்குள் வந்துவிட்டோம். மக்கள் ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக எங்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்? பின்தொடர்ந்து பார்ப்போம். பெண்கள் அரையில் பல்வேறு வண்ணங்களில் அழகிய ஆடைகளைக் கட்டியிருக்கிறார்கள். மார்பில் முலைக்கச்சு அணிந்துள்ளனர். கைகளில் சங்கு வளைகளும் கால்களில் வெள்ளித் தண்டைகளும் அணிந்துள்ளார்கள். கழுத்தில் முத்துமாலைகளும் மலர் மாலைகளும் காணப்படுகின்றன. காதுகளில் தங்க நகைகள் மிளிர்கின்றன. கூந்தலில் மலர்கள் காட்சியளிக்கின்றன. ஆண்கள் கைகளிலும் கால்களிலும் வண்டயங்களுடன் கழுத்தில் மலர் மாலைகளுடனும் காதுகளில் கடுக்கன்களுடனும் காணப்படுகின்றனர்.

            இதோ நாம் நெருங்குமிடத்தில் செங்கல் கொண்டு வளைவாகக் கூரை வேயப்பட்ட பெரும் கட்டடங்கள் காணப்படுகின்றன. ஊரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் போல் வந்துகொண்டிருக்கிறார்கள். எல்லோரும் உள்ளவற்றில் மிகப் பெரிய ஒரு கட்டிடத்தினுள் நுழைகிறார்கள். நாமும் உள்ளே செல்வோம். இதோ இங்கே வாருங்கள். இங்கு நின்றால் இங்கு நடைபெறுவதெல்லாம் நன்றாகத் தெரியும். அதோ அந்த மேடை எதற்காகப் போடப்பட்டிருக்கிறது? கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்.
                                          
            மண்டபத்தின் ஒரு கோடியிலிருக்கும் அம் மேடையை நோக்கி ஓர் ஆடவன் வருகிறான். அவனைத் தொடர்ந்து ஒரு பெண் வருகிறாள். அவளுக்கு அகவை என்னவென்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பக்கத்தில் இருக்குமா? அவள் முகத்தில் பெண்மையின் மென்மைக்குப் பகரம் ஒரு முரட்டுத் தன்மையே காணப்படுகிறது. அவள் கருமையாக ஏதோ ஓர் ஆடையால் உடலை மறைத்திருக்கிறாளே! இந்த ஆடை எதனால் செய்யப்பட்டது? அருகில் சென்று பார்ப்போம் வாருங்கள். ஆ! இதென்ன? யானைத் தோல் போலல்லவா காணப்படுகிறது. இவ்வளவு முரட்டுத்தனமாக ஓர் ஆடையை உடுத்திருக்கும் இவள் ஒரு பெண்தானா?
                                               
            பெண்ணைத் தொடர்ந்து வாட்களைத் தூக்கிய ஆடவரும் பெண்டிருமாகச் சிலர் வருகிறார்கள். மேடையை அடைந்ததும் பெண் மேடையில் உள்ள இருக்கையில் அமர்கிறாள். அமர்ந்ததும் முதலில் வந்த ஆடவன் குமரி வாழ்க! என்று முழங்குகிறான். கூட்டம் முழுவதும் குமரி வாழ்க! என்று கடலலை போல் எதிரொலிக்கிறது. மீண்டும் அவ் வாடவன் கொற்றவை வாழ்க! என முழங்குகிறான். கூட்டமும் முன்போல் எதிரொலிக்கிறது. ஆரவாரம் அடங்கிய பின் ஆடவன் பேசத் தொடங்குகிறான். கூட்டம் அமைதியாகிறது.

            நகரத் தோழரே! தொலைவிலிருந்து வந்திருக்கும் பெரு மக்களே! உங்களுக்கு நல்வரவு! இன்று உலக வரலாற்றிலே ஒரு பொன்னாள். உலகிலேயே முதன்முதலில் இங்கு ஒரு கொற்றம் அமைக்கப்படுகிறது. உலகில் நமக்கு எட்டிய தொலைவு வரை கடலோடி உலக மக்களுடன் வாணிகம் செய்வதற்கு நம்மை இயல வைத்த நம் தலைவி குமரித் தாயைத் தலைமையாகக் கொண்ட ஓர் அரசு இன்று அமைகிறது. இவ் விழாவினைக் காணவும் நம் அன்னைக்குக் காணிக்கைகளைச் செலுத்தவும் உலகெங்குமிருந்து நாவாய்த் தலைவர்களும் இங்குக் குழுமியிருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நம் தாய்க்குக் கொற்றத் தலைவி என்பதற்கு அடையாளமாக முடியணிவிக்கப்படும் என்று கூறுகிறான்.
                                                     
            அப்போது ஒருவன் ஒரு தலையணி கொண்டுவருகிறான். அது தங்கத்தால் செய்யப்பட்டு மணிகள் இழைக்கப்பட்டு மின்னிக் கொண்டிருக்கிறது. அதனை முதலில் பேசிய ஆடவனிடம் கொடுக்க அவன் வாங்கிக் குமரியின் தலை மீது அணிவிக்கிறான். கொற்றவை வாழ்க!, குமரி வாழ்க! என்ற ஆரவாரத்தில் மண்டபமே அதிர்கிறது. குமரி எழுந்து நிற்கிறாள். கூட்டம் மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறது. குமரி பேசத் தொடங்குகிறாள்:

            பெருமக்களே! நெய்தல் நிலத்தாரால் முதலில் ஆறுகளின் மூலமும் பின்னர் கடல் மூலமும் தொடங்கப்பட்ட பண்டமாற்று நிலத்திலும் பரவி வளர்ந்தது. ஆனால் கடற் கொள்ளைக்காரரும் ஆறலைக் கள்வரும் தோன்றி வாணிகருக்கு இடையூறு செய்தனர். அவர்களை அடக்கி வாணிகத்தின் இடர்களைக் களைய நாம் முயன்று உலகில் பல்வேறு துறைமுகங்களிலுமுள்ள வாணிகர்களை ஒன்றுசேர்த்து வலுவான படைகளை அமைத்து முதலில் கடல் வாணிகத்தைக் காத்தோம். பின்னர் நிலத்திலும் படைகளை அமைத்தோம். இன்று நமக்கு எட்டிய தொலைவுக்கு இப் படைகளை நிறுவியிருக்கிறோம். உலகின் மிகப் பெரிய துறைமுகமாகிய பஃறுளியாற்றின் கவாயிலமைந்துள்ள மாதுறையாகிய இத் துறைமுகத்திலிருந்து தண்பொருனையாற்றின் கொற்கை, காவிரியின் புகார், கங்கையின் காளிக்கோட்டம், சிந்தாற்றின் கரை என்ற துறைகளிலெல்லாம் நம் கடற்படையின் ஆட்சி பரவியுள்ளது. அவர்களுக்கெல்லாம் நாம் பாதுகாப்பளிக்கிறோம். அது போன்று நிலத்திலும் ஆங்காங்குப் படை நடுவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளைகாரர்களையும் நம் படைகளையும் பிரித்துணர மீன் உருவம் பொறித்த நம் கொடிகளை நம் கப்பல்களும் நிலப் படைகளும் தாங்கி நிற்கும். இனி உலகிலுள்ள மக்களனைவரும் நம் அரசின் பாதுகாப்பில் நலமாக வாழலாம். நிலத்தில் வறண்ட பகுதியில் வாழும் மக்களெல்லாம் நம் பாதுகாப்புப் படைகளில் சேர்க்கப்பட்டுக் கொள்ளைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நம் அரசு எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும். உங்கள் நல்வாழ்த்துகளாலும் என் படைத் தோழர்களாலும் சிறப்பாகப் பல போர்களில் என்னோடு துணைநின்று வெற்றியை ஈட்டித் தந்து இதோ மேடைமீது நிற்கும் பொன்னி, கயல், தோகை, உடு, தாமரை, நெய்தல், காளன், ஆரன் முதலியோர் துணையாலும் இக் கொற்றத்தை அமைக்க என்னால் இயன்றது. உங்கள் அனைவருக்கும் என் நன்றி” என்று கூறி நிறுத்துகிறாள்.

            இப்போது பின்னாலிருந்த ஒருவன் முழுநீளமுள்ள ஒரு நூல் கற்றையை அவளிடம் கொடுக்கிறான். குமரி அதைக் கையில் வாங்கிக் கூட்டத்தினரைப் பார்த்து முதன்முதலில் நூற்கும் கருவியைச் சமைத்த நுண்தொழில் வல்லோன் அணிந்து கொண்டதும் பின்னர்க் கலப்பையை யாத்த பலதேவனுக்கு நம் முன்னோர் சிறப்பின் அடையாளமாக அணிவித்துப் பெருமைப்படுத்தியதுமான இம் முப்புரி நூலை நம் தலைமைக் கப்பலை யாத்து என் மணி முடியையும் யாத்த இவ் வாசாரியனுக்கு அணிவிக்கிறேன். இது போன்று மக்கள் மேம்பாட்டுக்குப் பணியாற்றுவோர்க்கெல்லாம் நம் அரசு மதிப்பளிக்கும், நல்வாழ்வளிக்கும் என்று கூறி இருக்கையில் அமர்கிறாள்.

            மீண்டும் குமரி வாழ்க! கொற்றவை வாழ்க! என்ற ஆரவாரம் எழுந்து ஒலிக்கிறது. குமரி எழுந்து முன்னே செல்ல அவள் துணைவர்கள் பின்தொடர்ந்து மறைவது வரை தொடர்கிறது. கூட்டம் சிறிது சிறிதாக வெளியேறுகிறது. நாமும் வெளியேறுவோம். கடற் காற்று எவ்வளவு இன்பமாக வீசுகிறது. அதோ மூட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தினுள் ஒருபுறமாக அமர்வோமே! எவரோ இருவர் பேசும் குரல் கேட்கிறதே! அவர்கள் பேசுவதைக் கேட்போம்.
                      
            என்ன தீக்கண்ணரே! விழாவைக் கண்டீரா? இந்தப் பெண் நமக்குக் கொஞ்சநஞ்சமிருந்த செல்வாக்கையும் அழித்துவிடுவாள் போலிருக்கிறதே

            பெண்ணென்று கூறாதீர் அழலேந்தி! பண்டன் என்று கூறும். தோற்றத்தில் பெண் போன்றிருந்தாலும் அவள் அலி. இல்லையென்றால் இதுவரை ஆண்மகன் எவனையும் நாடாமலிருப்பாளா?

            ம்! நான் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை அவளுடன் போரில் நெடுநாள் துணையாயிருந்த ஒருவன் அவளைப் புணர முயன்ற போது அவனைக் கைவாளால் குத்திக் கொன்றுவிட்டாளாமே! அதிலிருந்து எந்த ஆடவனும் அவளை நெருங்குவதில்லையாமே!
                 
            அது மட்டுமா? அவள் அணிந்திருக்கும் அந்த ஆனைத் தோலை ஆடவன் கூட அணியத் துணியமாட்டான்

            சரி, அஃதிருக்கட்டும். நம் நிலைமையைப் பார்ப்போம். நெருப்பின் காவலர்களாய், தலைவர்களாய் இருந்த நம் செல்வாக்கை முன்பு சாத்தின் தலைவர்கள் பறித்தார்கள். ஆனால் கொள்ளை நோய்களைப் பயன்படுத்தி நமக்கு எதிரிகளாய்த் தோன்றியோரைக் காவு கொடுத்து நம் நிலைமையை ஓரளவு காத்து வந்தோம். அடுத்து, கண்ணன் நெய்யைக் கண்டுபிடித்தான். அகல் விளக்கு வந்தது. தொடர்ந்து எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பின்னர் நெருப்போம்பல் தேவையில்லாது போயிற்று. நம் செல்வாக்கு அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது
           
            ஆனால் நாம் விடவில்லையே! அக் கண்ணனையும் புகழ்ந்து பாடினோம். கொள்ளை நோய்கள் கண்டபோதெல்லாம் நம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டோம். நெருப்பை வளர்த்துத் தெய்வங்களை வாழ்த்திக் காவுகள் கொடுத்து வந்தோம். அதே போன்றே இக் குமரியையும் நெருப்போம்பலின் போது புகழ்ந்து பாடுவோம். ஆனால் அவள் பண்டன் என்று மறையமாகப் பரப்புவோம்
        
            ஆமாம்! அதுதான் சரியான வழி. அதோ யாரோ இருமுவது கேட்கிறது. யாரேனும் நம் பேச்சைக் கேட்டுவிடப்போகிறார்கள். விரைவில் இவ் விடத்தை விட்டுச் செல்வோம்.

இருளத் தொடங்குகிறது. கடற்கரையில் கப்பலூழியர் கூட்டங்களிலிருந்தும் ஊரிலுள்ள வீடுகளில் இருந்தும் வரும் இனிய சமையல் மணம் இதுவரை நாம் சென்ற இடங்களைவிட மேன்மையாயிருக்கிறதல்லவா? எங்காவது சற்றுப் படுத்திருக்கலாமா? அதோ அந்த வீட்டின் முன்புறம் நல்ல திண்ணையொன்றுள்ளதே! வாருங்கள் போவோம்.

            வீட்டினுள்ளிருந்து ஒரு பெண் விம்மியழும் குரல் கேட்கிறதே! திண்ணையை அடுத்திருக்கும் அறையிலிருந்தல்லவா ஒலி வருகிறது. ஊடே ஓர் ஆடவனின் குரலும் ஆறுதல் கூறுகிறாற் போல் கேட்கிறதல்லவா? இதோ அந்தப் பெண் கேவுவதை நிறுத்திவிட்டுப் பேசுகிறாள். சீ! என்னைத் தொடாதே. அவள் என்னை ஏசியபோது வாயை மூடிக்கொண்டிருந்தாயே? நான் என்ன செய்து விட்டேன்? நான் இன்று கொற்றவை முடிசூட்டுவிழா காணச் சென்றதற்காகத்தானே இவ்வளவும்? அவள் மூத்தவள் என்பதற்காக எங்கள் அனைவரையும் அடிமைகள் போல் நடத்துகிறாள். அதிலும் என்னைக் கண்டால் அவளுக்கு ஒரே வெறுப்பு. நான் அழகியாயிருப்பதால் ஆண்கள் அனைவரும் என்னை நாடி வருவது அவளுக்குப் பொறாமையாயிருக்கிறது. நீ என்னை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது கப்பல் வாணிகத்தில் உனக்கு ஏராளமான வருவாய் வருவதாகக் கூறினாய். என்னை நன்றாக நடத்துவார்களென்று உறுதி கூறினாய். ஆனால் இன்று அவள் என்னைத் திட்டிய போது ஒரு சொல் எதிர்த்துப் பேசவில்லை. நான் என் அம்மாவிடம் போகிறேன்.

            ஆண் குரல், வேண்டாம் கண்ணே! நீ போய்விட்டால் என்னால் ஒரு நொடி கூட வாழ முடியாது. நீதான் என் உயிர். அவள் உன்னைத் திட்டிய போதும், நீ வேலைகள் செய்வதைக் காணும் போதும் எனக்கு எவ்வளவு வேதனையாயிருக்கிறதென்பதை நீ எங்கே அறியப்போகிறாய்? உன்னிடம் என் அண்ணன்மார் அணுகும்போது சினமும் வெறுப்பும் வரத்தான் செய்கிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்?

            அவள் ஏன் நாம் மட்டும் தனியாக வாழ்ந்தால் என்ன? நீதான் நிறைய பொருளீட்டுகிறாயே! நமக்குக் குடும்பம் நடத்த அது போதுமே

            அவன், ஆனால் நமக்கு இப்பொழுது குடியிருக்க ஒரு வீடும் தட்டுமுட்டுகளும் வேண்டுமே! அவற்றைத திரட்ட என்னால் இப்போது இயலாதே. என் ஈட்டத்தை எல்லாம் குடும்பத்தில் கொடுத்துவிட்டேனே! மேலும் உன்னை என்னுடன் விட என் அண்ணன்மார் ஒருப்படுவாரா?

            அவள், உன்னுடன் நான் வரவிரும்பிய போது எங்கள் புணர்முறைக் குடும்பத்தின் ஆடவர்களுக்கு என் தாய் ஈட்டுப் பணம் கொடுத்தாளல்லவா? அதைப் போல் உன் அண்ணன்மாருக்கும் கொடுப்பதற்கு அவள் ஒருப்படுவாள். நமக்கு மனையமைக்கவும் அவள் வகை செய்வாள். என்ன சொல்கிறாய்?

            அவன், அப்படியானால் முயன்று பார். எனக்கு மறுப்பில்லை; மகிழ்ச்சியே! சரி கண்ணே! உன் விருப்பம் போலவே செய்யலாம்... தூங்குவதற்கு முன் ஒரு முறை... வேறு வகையான ஒலிகள் கேட்கின்றன. உங்கள் மனம் கற்பனைகளில் இறங்குகின்றனவா? தடுத்து நிறுத்துங்கள். பேச வேண்டியவை நிறைய உள்ளன.

            நம் நாட்டின் தென்கோடிக்குக் குமரி முனை என்ற பெயரிருப்பது நாமெல்லாரும் அறிந்ததே. அதற்குத் தெற்கேயிருந்து கடலில் மூழ்கியதாகக் கூறப்படும் நிலப்பரப்புக்குக் குமரிக் கண்டமென்று பெயரென்பதும் அங்குக் குமரியாறு என்ற ஆறும் குமரி மலை என்ற மலைத் தொடரும் இருந்ததாகப் பழந்தமிழ் நூற்கள் கூறுவதையும் நீங்கள் அறிவீர்கள். இன்று குமரி முனையில் குமரி என்ற கன்னித் தெய்வத்தின் கோயிலும் உளது. இவையனைத்தும் ஏதோ ஒன்றைச் சுட்டுகின்றன. அது என்ன? முழுகிப் போன குமரிக் கண்டத்தில் குமரி என்ற மிகப் பெரும் புகழ்பெற்ற பெண் ஒருத்தி வாழ்ந்திருந்தாள். அவள் நினைவே குமரி என்ற பெயர் இவற்றிற்கெல்லாம் அமைந்துள்ளதற்குக் காரணம். அப்படி அவள் செய்த அருஞ் செயல்தான் என்ன?

            இதற்கு விடை காணுமுன் நீங்கள் சில சேதிகளை அறிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மூவேந்தர் குடிகளுக்குள் மிக மூத்தகுடி பாண்டியர்ருடையதாகும். இக் குடியை நிறுவியது ஒரு பெண்ணென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துமாகும். கிரேக்கத்தில் கூட பாண்டிய மரபை ஏற்படுத்தியவள் ஒரு பெண்ணென்ற கதை நிலவுவதாகத் திரு. கனகசபை தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலில் கூறுகிறார். கிரேக்க மாவீரன் எரிக்குலசு தன் மகள் பாண்டியா என்பவளை மதுரையில் அரசியாக்கியதாக அக் கதை அமைந்துள்ளது. மேலும் இன்றைய மதுரையில் கூட நடுநாயகமாக அமைந்திருப்பது மீனாட்சி என்ற பெண் தெய்வத்தின் கோயிலாகும். இங்கு மீனாட்சி என்ற சொல்லுக்கு மீன் போன்று இமைக்காத கண்களை உடையவள் என்று பொருள்படுமாறு மீனாக்சி என்று சமற்கிருதவாணர் எழுதுகின்றனர். ஆனால் இது மீனாட்சி(மீன்+ஆட்சி) என்ற சொல்லின் வடமொழித் திரிப்பாகும். எ-டு. காட்சி காக்சி; சாட்சி - சாக்சி. மீனக் கொடி கொண்டு ஆண்டவள் என்பதே இச் சொல்லின் பொருள். மீனக் கொடிக்குப் பாண்டிய குலத்துடனுள்ள தொடர்பு கொண்டு நோக்கும் போது இஃது ஓர் உறுதியான சான்றாகும். மேலும் மனைவியின் அதிகாரம் உள்ள குடும்பத்தை மதுரை என்று கூறும் வழக்கும் மதுரையில் பெண்ணரசு இருந்தமையைக் காட்டும். சிலப்பதிகாரத்தில் மதுராபதி தெய்வத்தை,
                                        
            கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
            பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
            குலமுதற் கிழத்தி
என்று கூறுவதும் இன்னொரு சான்று.

            இவள் பெண் தன்மையின்றி விளங்கினாள் என்பதைத் திருவிளையாடற் புராணம் கூறும். மூன்று முலைகளுடனும் ஆண்களைக் கண்டு நாணமடையாமலும் ஆண்களை மதியாமலும் இருந்ததாகவும், சிவனைக் கண்டவுடன் மூன்றில் ஒரு முலை மறைய நாணுத் தோன்றியதாகவும் அது கூறும். சிலப்பதிகாரமும் அவளைப் பெண்மையும் போர்க் கோலமும் உடையவளாகக் கூறும். சிவனின் மனைவியாகக் காட்டப்படும் மலைமகள் அல்லது காளி என்பவள் எந்த வடிவில் வழங்கப்பட்டாலும் அவளைக் குமரி, கன்னி என்ற அடை மொழிகளை இட்டு வேதங்கள் முதல் சிலப்பதிகாரம் வரை வழங்குகின்றன. சிவனின் மனைவியாகவும் பல மக்களையுடையவளாகவும் காட்டப்படும் சிவையை உண்ணாமுலையாள் என்று கூறுவதும் இதனாலேயே போலும்.

            குமரியை அலி என்று ஏளனம் செய்தவர்கள் இருந்தார்கள் என்பதைத் திருவிளையாடற் புராணக் கதை காட்டுவதாகக் கொண்டால் அலி என்ற பொருள்படும் பண்டன், பண்டான் என்ற சொற்களினடியில் பாண்டியன் என்ற சொல் பிறந்திருக்கலாமென்று கூறுவதில் தவறொன்றுமிருக்காது. பல வேளைகளில் ஏளனப் பெயர்களே நிலைத்து விடுவதுண்டு. வரலாற்றிலும் சொற்பிறப்பிலும் இதற்கு ஏராளமான சான்றுகள் உள. மணமுடிக்காமல் கன்னியாகவே வாழ்ந்த இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்தைப் பற்றிய சுவையான கட்டுரை ஒன்று ஒரு பாலியல் இதழில் சிவாண்டுகளுக்கு முன் வெளி வந்தது. அதாவது எலிசபெத் பெண்ணேயல்ல, ஆணே என்பதே அதன் கருத்து. கொள்ளை நோய் பரவியிருந்த தலைநகரிலிருந்து பட்டத்து இளவரசியான சிறுமியை அவளது பெற்றோர் நம்பிக்கைக்குரிய ஒரு கணவன் - மனைவியரிடம் ஒப்படைத்து வெளியூர் ஒன்றுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி இறந்துவிடவே அவளே போன்ற தோற்றமுடைய ஒரு சிறுவனை அவர்கள் பெண் போல் உடையணிவித்து வளர்த்துச் சில ஆண்டுகள் கழித்து அரசனிடம் ஒப்படைத்தனர். அவனே பின்னர் முதலாம் எலிசபெத்தாக இருந்தான். இம் முடிவுக்குத் துணையாக எலிசபெத்து அன்றாடம் முகம் மழித்தாள் என்பதையும், தன்னை வளர்த்த கணவன் மனைவியரையன்றி வேறெவர் முன்பும் அவள் உடைமாற்றுவது கிடையாதென்பதையும் தன் அறைக்குள் அவள் இளம் பெண்களை விடுவதில்லையென்பதையும் ஆண் போலக் குதிரையேறிப் பல போர்களில் ஈடுபட்டாள் என்பதையும் கட்டுரையாசிரியர் காட்டுகிறார்.

            போர்க் களங்களில் வாளெடுத்துப் போர் புரிந்தாள் என்பதாலும் வாணாள் முழுவதும் கன்னியாகவே வாழ்ந்தாள் என்பதாலும் இடைக்கால அரசி ஒருத்திக்கே இந் நிலைமையென்றால், மிகப் பழங்காலத்தில் ஒரு பெண் மணமின்றி வாழ்வதை எண்ணிப் பார்க்க முடியாத ஒரு காலத்தில் அவ்வாறு வாழ்ந்த ஒரு பெண்ணிற்கு அலி என்னும் பெயர் வந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. மீனும் பெண் தெய்வமும் மொகஞ்சதாரோ, அரப்பா களிமண் அடையாளங்களில் குறிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கின்றனர். பெருமை வாய்ந்த மீன், பெருமை வாய்ந்த தாய் என்ற சொற்கள் உள்ளதாக மூவாரிகளின் புதிர்கள் என்ற நூல் கூறுகிறது. எனவே, மீனாட்சி(குமரி)யின் செல்வாக்கு இமயம் வரை எட்டியிருந்ததென்று கூறலாமல்லவா? மற்றும் நம் நாட்டில் கன்னிப் பூசைகள் நடத்தப்படுவதும் உலகமெல்லாம் பண்டை நாளில் கன்னித் தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்திருப்பதும் கிறித்துவின் தாயைக் கன்னி என்று பெருமைப்படுத்துவதும் குமரியின் புகழ் உலக முழுவதும் பரவியிருந்ததற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

            இவ்வாறு கடல் மூலமும் ஆறுகளின் வாயிலாகவும் பண்டமாற்றைத் தொடங்கி நிலவழி வாணிகத்துடன் இணைத்து வளர்ப்பதற்கு நெய்தல் நிலமே வாய்ப்புடைதாயிருந்தால் முதல் அரசு நெய்தல் நிலத்தில் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பே உள்ளது. இக் கருத்துக்கு அரண் செய்வது போல் தமிழகத்தில் மூத்த குடியான பாண்டியர்களின் மூலவர்கள் பரதவர்கள் என்ற அறிஞர் கருத்து உள்ளது. பாண்டியருடைய கொடியும் கடலில் செழித்துத் தோன்றி நெய்தல் நிலத்தோரின் உணவாகவும் செல்வமாகவும் விளங்கும் மீனாகவே இருக்கிறது. மதுரை என்ற சொல்லுக்கும் பொருத்தமான பொருள் ஒன்றும் இதுவரை கூறப்படவில்லை. ஆனால் துறைகளுள் பெரியது என்று பொருள்படுமாறு மாதுறை என்ற சொல்லின் திரிபே மதுரையாகி இருக்கலாமல்லவா? வட மதுரையையும் மாத்ரா என்றே அழைக்கின்றனர். பழ மதுரை ஒரு கடற்கரை நகரம், பாண்டிய மரபு முதல் அரச மரபு. இவையாவும் முதல் அரசு நெய்தல் நிலத்தில் தோன்றியது என்று கொள்வதற்குப் போதிய சான்றுகளாகும்.

            அடுத்து, குடும்ப வாழ்வில் ஏற்பட்ட மாறுதலைப் பார்ப்போம். பெண்ணே தொடக்கத்தில் குடும்பத் தலைவியாக ருந்தாள். நடைமுறைச் சிக்கல்களால் குடும்பத்துக்குள்ளேயே புணர்முறையை அடக்குவது விரிந்து ஒரு குடும்பத்துப் பெண்ணே இன்னொரு அல்லது பல குடும்பங்களின் புணர்முறையாகவும் தலைமாறாகவும் இருந்தாள். இவற்றைப் புணர்முறைக் குடும்பங்கள் அல்லது சரவடிகள் (கோத்திரங்கள்) என்பது வழக்கம். இன்னும் பார்ப்பனர், வேளாளர் முதலிய வகுப்பாரிடம் இம் முறை நிலவுகிறது[1]. இதன்படி ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் உடன் பிறந்தவர் போன்றவர். எனவே அவர்களுக்குள் திருமணம் கிடையாது. முன்னேற்றமடையாத ஒரு கூட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஆடவரும் அவர்களின் புணர்முறைக் கூட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பெண்டிருக்கும் தலைமாறாகவும் கணவன் மனைவியர் ஆவர். இவ் விரு கூட்டத்தாரும் நாடு முழுவதும் பரவி இருப்பதால் ஒருவன் தன் இருப்பிடத்தை விட்டு எவ்வளவு தொலைவு சென்றாலும் தன் புணர்முறைக் கூட்டத்தில் பிறந்த எந்தப் பெண்ணையும் உரிமையோடு புணரலாம்.

            அடுத்து, குடும்பமாக வாழுமிடங்களில் பெண்கள் இருக்குமிடங்களுக்கே ஆண்கள் வாழச் செல்வது வழக்கமாக இருந்தது. பின்னரே ஆணின் வீட்டுக்குப் பெண் செல்லும் வழக்கம் ஏற்பட்டது. நாகரிகம் வளர்ந்தபோது இயற்கையிலிருந்து கிடைக்கும் வளங்களைத் திரட்டி ஆங்காங்குள்ளவர்கள் மட்டும் வாழ்ந்து வந்த நிலை மாறிப் பண்டமாற்று மூலமும் வாழ்வுத் தேவைகளை ஈட்டும் நிலை ஏற்பட்டதும் குடும்பக் கட்டுத் தளர்ந்தது. எனவே, வாணிகத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தம் பெண்களைக் கொடுக்கத் தாய்மார் விருப்பிய போது பெண்ணின் புணர்முறையினர் எதிர்த்தனர். புணர்முறையினருக்கு ஈடாகப் பொருளைக் கொடுப்பதன் மூலம் இப் பிணக்குக் குமுகத்தால் தீர்த்துவைக்கப்பட்டது. இப்போது பெண் ஆடவன் வீட்டுக்குச் சென்றாள்.

            மீண்டும் அக் குடும்பத்தில் உறுப்பினர்கள் தொழிலிலும் வாணிகத்திலும் ஈடுபட்டிருக்கும் போது வாணிகத்தில் ஈடுபட்டிருப்பவனுக்கு அவன் அதிக ஈட்டத்தினால் செல்வாக்கு மிகுவதும் அதனால் பிணக்குகள் ஏற்படுவதும் இயல்பு. அவன் அல்லது அவனது விருப்பத்திற்குரிய குடும்ப உறுப்பினளாகிய பெண் தனியாகச் செல்ல விரும்பும் போது, எதிர்ப்புக் கிளம்பிப் பின்னர் அவன் உடன்பிறந்தோருக்கு ஈடாகப் பொருளைக் கொடுத்து அப் பெண்ணின் மீதுள்ள அவர்களின் உரிமையை ஒழித்துக் கொள்வதும் நடைபெற்றது.

            இதைக் கேட்பவர் சிலருக்கு ஏதோ கற்பனைக் கதையைக் கேட்பது போலிருக்கலாம். மேலுள்ளவற்றுக்கு அடிப்படை, குமுக மாந்தவியல் அறிஞர்களின் கருத்துகளாயிருந்த போதிலும், அவற்றிற்கான ஆணித்தரமான சான்றுகள் இன்றும் நம்மிடையே சடங்குகளாகத் திகழ்வதை காணமுடியும். சடங்குகள் இன்றியமையாச் சூழ்நிலையில் நடைபெற்ற பொருள் பொதிந்த செயல்முறையின் நிழலென்று முன்னமேயே உங்களுக்குக் கூறியிருக்கிறேனே! அவ்வாறு நிலவும் சடங்குதான் என்ன? நம் திருமணங்களில் பலவித சடங்குகள் நடைபெறுகின்றன. அவற்றில் தெளிவாக மேற்கூறியவற்றுக்குச் சான்றாகக் காணப்படுபவை குமரி மாவட்டத்தில் வாழும் நாடார் வகுப்பாரிடையே நடைபெறுவனவாகும்.

            இவர்களிடையில் தாய்மாமனுக்குப் பெண்ணைக் கொடுக்கும் வழக்கம் இன்று கிடையாது. ஆனால், மாமன் கலியாணம் என்றொரு சடங்கு நடைபெறுகிறது. இதன்படி உண்மைத் திருமணத்திற்கு முன்பு பெண்ணின் தாய் மாமன் கையில் பெண்ணின் கையை வைத்துத் தேங்காய் வைத்துச் சுற்றி முடிக்கிறார்கள். இது ஒன்றேல் பழைய முறைப்படி மாமனுக்குள்ள உரிமையைக் காட்டுவதாக இருக்கவேண்டும். அன்றேல் பிறனுக்குப் பெண்ணைக் கொடுப்பதற்கு ஊரார் முன்னிலையில் அவனது ஒப்புதலைப் பெறுவதாய் இருக்கவேண்டும். இன்று வரை பல வகுப்பாரிடையிலும் நடைமுறையிலிருக்கும் ஓர் உண்மை நடைமுறையின் (மாமனுக்குப் பெண்ணைக் கொடுக்கும் முறை) நிழல் அம் முறையைக் கைவிட்ட ஒரு வகுப்பாரிடையே எவ்வாறு நிலவுகிறதென்பதற்கு ஒரு சான்றாகவும் இஃது அமையும். இச் சடங்கு விரிவடைந்து தாய்மாமன் இல்லாத பெண்ணுக்கு ஒரு தேங்காயை மாமனாக வைத்து மணம் முடிப்பதுண்டு. ஆணுக்கும் மாமன் கலியாணம் செய்வதாகவும் விரிவடைந்துள்ளது. தன் பெண்ணாகிய முறைப்பெண்ணைத் தவிர வேறொரு பெண்ணை மருமகன் மணமுடிப்பதைத் தாய்மாமன் ஒப்புவதாகவும் இதனைக் கொள்ளலாம்.

            அதே போன்று இவ் வகுப்பாரின் திருமணம் முடிந்ததும் அதாவது தாலி கட்டியதும், மணமேடையிலேயே மணப் பெண்ணையும் மணமகனையும் அமர்த்தி அவர்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கின்ற கிண்ணத்திலிருக்கும் பாலில் போடப்பட்டிருக்கும் பூ அல்லது ஆலிலைத் துண்டுகளைத் தோய்த்துப் பெண்ணின் மீது மாப்பிள்ளையின் குடும்பத்து ஆடவரெல்லாரும் தெளிப்பார்கள். பாட்டன்மாராயிருந்தாலும் பேரன்மாராயிருந்தாலும் அனைத்து ஆடவரும் இதனைச் செய்வார்கள். இதைப் பார்க்கும் போது பெண்ணுக்குத் தங்களை அவள் கணவர்கள் என்று அவர்கள் அறிமுகம் செய்துகொள்வது போலவும் இருக்கும். பெண்மீது தங்களுக்கு உள்ள உரிமையைத் தண்ணீர் தெளித்து விடுவது போலவும் இருக்கும். இதற்கு அனந்தரம் செய்தல் என்று பெயர். இச் சடங்கு செய்யும் உரிமையுடையவரை அனந்தரச் சொக்காரர்கள் என வழங்குவர். இன்னாருக்கு நாங்கள் அனந்தரச் சொக்காரர்களாக்கும் என்று அடிக்கடி இங்குக் காதில் விழும். சொக்காரர் என்ற சொல்லுக்கு பங்காளி அல்லது தாயாதி என்று பொருள்.

            இச் சடங்கு வெவ்வேறு வகுப்புகளிலும் வெவ்வேறு வடிவில் நடைபெறுகிறது. சிலவற்றில் மணப் பெண்ணின் நெற்றியில் மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் குங்குமம் வைப்பார்கள். இது புதுப் பெண்ணை மனைவிமாராகிய தம் கூட்டத்தினுள் வரவேற்பது போலிருக்கும். இது பல வகுப்புகளில் இப்போது விரிவடைந்து உறவல்லாத பெண்களும் ஆண்களும் குங்குமம் வைப்பதாக முடிந்திருக்கிறது. சடங்கின் விரிவே இது. குமரி மாவட்ட நாடார்களிடையிலும் இது விரிவடைந்து மணத்துக்கு முன்பு தனித்தனியே மணமகனுக்கும் மணமகளுக்கும் அனந்தரம் செய்யும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இச் சடங்கை மணவிலக்கில்லாத வகுப்புகளில் ஆண்களும் மணவிலக்குள்ள வகுப்புகளில் பெண்களும் நிகழ்த்துவதாகக் கொள்ளலாம். இவ் வகுப்புகளில் குடும்ப அதிகாரம் முறையே ஆண்களிடமும் பெண்களிடம் உள்ளது என்பதுதான் இதன் பொருள்.

            அடுத்து இன்னொரு சடங்கு. இதற்கு வீடு காண்பதென்பது பெயர். மணமகளைத் தாய், அவளைத் தொடர்ந்து மணமகன் வீடு சென்று அங்குள்ள உறவினர்க்கெல்லாம் விருந்து வைத்துத் தன் உடன்பிறந்த ஆடவரின் ஆண்மக்கள், தன் கணவனுடன் பிறந்த பெண்களின் ஆண்மக்கள், மணமகனின் உடன்பிறந்த ஆடவர்கள், பெண்ணின் உடன் பிறந்த பெண்களின் கணவர்கள் அனைவருக்கும் வெற்றிலைச் சுருளில் பணம் வைத்துக் கொடுப்பாள். இதற்குச் சுருள் வைத்தல் என்று பெயர். பெண்ணுக்கு ஒரு குடும்பத்தை நடத்தத் தேவையான அனைத்துத் தளவாடங்களையும், மணமகனுக்கு உடை முதல் படுக்கை, தலையணை உட்பட பலவற்றையும் வழங்கிவிட்டுத் திரும்புவாள். இச் சடங்கு(வீடு காண்பது) நடைபெறுவது எக் காரணத்தாலாவது காலந் தாழ்ந்தால் அச் சடங்கு நடத்தப்படும் வரையில் அத் தாய் மகள் வீட்டில் உணவுண்ணாள். பெண் எக் காரணத்தாலாவது கணவனைப் பிரிந்து தாய்வீடு திரும்ப நேர்ந்தால் இத் தளவாடங்கள் அனைத்தும் அவளையே சாரும்

            பெண்ணுக்குப் புணர்முறையுள்ள ஆடவர்க்கெல்லாம் பணம் கொடுப்பதற்குப் பெண்ணின் மீதுள்ள உரிமையை ஈடு கொடுத்து வாங்குவதென்பதைத் தவிர வேறென்ன விளக்கம் தர முடியும்? மணமகனின் உடன்பிறந்தார்க்கும் சுருள் கொடுக்கப்படுவது ஒரு பெண் ஒரு குடும்பத்தில் உள்ள எந்த ஒருவனை மணந்தாலும் அவள் தானாகவே அவன் உடன்பிறந்தார்க்கும் மனைவியாகவே இருந்தாள் என்பதையே காட்டும். மேலும் இதற்குச் சான்றாகக் குழந்தைகளின் தந்தையரின் உடன்பிறந்த ஆடவரும் தாயாரின் உடன்பிறந்த பெண்டிரும். அவர்களின் மனைவியரும் கணவர்களும் அவர்களை மக்களே என்றும்; குழந்தைகள் அவர்களை அப்பா அல்லது அம்மா என்றும் அழைத்து வருவதையும் குறிப்பிட வேண்டும். மற்றும் கொழுந்தர்கள். கொழுந்திகள் (மைத்துனர், மைத்துனிகள்) ஆகியோர் உரிமை நெருக்கத்தோடு பேசிப் பழகுகின்ற முறையும் இதையே குறிக்கும். மற்றும் மைத்துனர், மைத்துனி கொழுந்தன், கொழுந்தி என்ற சொற்களும் புணரத்தக்கவர் என்றே பொருள் தரும். அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி என்ற பழமொழி தமிழர்களிடை நிலவுகிறதே என்று தமிழ்ப் பற்றாளர் எவரும் கலங்கிப் பயனில்லை. அஃது என்றோ ஒரு நாள் நிலவிய உண்மையையே குறிப்பிடுகிறது.
 

            மற்றும் இவர்களிடத்தில் (குமரி மாவட்ட நாடார்களிடையில்) ஒரு பெண் தன் கணவனின் உடன்பிறந்தவனின் மனைவியைக் குறிப்பிட அனத்தரத்தி என்ற சொல் பயன்படுகிறது. ஓரகத்தி என்ற சொல்லுக்கு இணையாக இன்று இது வழங்கப்படுகிறது. அனந்தரம் என்ற சொல்லுக்கு அகரமுதலி அடுத்த உரிமை என்று பொருள் தருகிறது. ஒரு பெண்ணைப் பொறுத்தவரை இன்னொரு பெண் எதற்கு அடுத்த உரிமையுள்ளவள்? தன் கணவனின் முயக்குக்குத் தானே? இதோடு அனந்தரம் செய்தல் என்ற சடங்கையும் பொருத்திப் பாருங்கள். அடுத்த உரிமையை நாட்டல் என்று பொருள் கொள்ளலாமல்லவா? இப்படி ஒரு பொருள் இருப்பதை உணர்ந்தால் இவ் வகுப்பார் இச் சடங்கைத் தொடர்ந்து நடத்துவார்களோ என்னவோ? நேரம் விடிந்து விட்டது போல் தோன்றுகிறதே! அடுத்த காட்சியைக் காணச் செல்லலாமா?

பின்குறிப்பு: மேலே “வீடு காணுதல்” பற்றி கூறியுள்ளது பற்றி ஒரு திருத்தம். வீடு காணுதல், மறு வீடு காணுதல் என்று இரண்டு கட்டங்களாக இது நடைபெறுகிறது. முதல் வீடு காணுதல் திருமணம் முடிந்த அன்றே நடைபெறுகிறது. அன்றிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிழமைக்குள் மறு வீடு காணுதல் நடைபெறுகிறது. ஆனால் இந்த மறு வீடு காணுதல் பற்றி புலவர்மணி ஆ.பழனி அவர்கள் கூறுவதைக் காண்போம். “திருமணம் முடிந்த பிறகு கணவனையும் மனைவியையும் தனிக்குடித்தனம் நடத்துமாறு செய்வதைக் கட்டாயமான குடும்ப வழக்கமாகக் கொண்டு ஒழுகுபவர் தமிழ்நாட்டில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்தாம்....திருமணம் முடிந்து மூன்றாண்டுவரை அவர்கள் பொதுக் குடும்பத்தில் மணமகன் பெற்றோரோடு இருப்பர். நான்காம் ஆண்டில்தான் பெற்றோர்கள் அவர்களை ‘வேறு வைப்பர்’”[2]. 

          மணமகன் “பெற்றோர்” என்று கூறியவர் ‘வேறு வைப்பவர்’ “பெற்றோர்கள்” என்று கூறினாலும் மணமகனின் பெற்றோரா, மணமக்களாகிய இருவரின் பெற்றோர்களும் இணைந்தா, அதாவது வீடு போன்ற அசையாச் சொத்துகளை மணமகனின் பெற்றோரும் சீர்கள், செய்நேர்த்திகளை[3](சீர்செனத்தி) மணமகளின் பெற்றோரும் வழங்கினரா என்று தெளிவாகக் கூற முடியவில்லை. ஆனால் தாய்வீட்டுச் சீதனம் என்பதுதான் உலக வழக்கு. நாட்டுக்கோட்டைச் செட்டியாரான பாவலர் கண்ணதாசனும் தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும்பொருளும் என்றுதான் பாகப்பிரிவினை திரைப்பட்டத்துக்குப் பாடல் எழுதியுள்ளார். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது சிலப்பதிகாரத்தில்
வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
                           மறப்பரும் கேண்மையோ டறப்பரி சாரமும்
                                விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
                              வேறுபடு திருவின் வீறுபெறக் காண
                              உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க ……மனையறம்படுத்த காதை, 84 – 88
என வருவதும் “பேரியற் கிழத்தி” கண்ணகியின் தாயா அல்லது கோவலனின் தாயா என்ற ஐயமும் ஏற்படுகிறது. ஒருவேளை தாய்வீட்டுச் சீர் – செய்நேர்த்திக் கட்டத்தை விட்டு மணமகன் பெற்றோரே அவற்றைச் செய்யும் முழுமையான ஆண்வழிக் குமுக அமைப்பினுள் பூம்புகார் வாணிக வகுப்பினர் நுழைந்துவிட்டனரா என்று தெரியவில்லை. ஆனால், சீதனத்தை வரதட்சிணை(வரனாகிய மணமகனுக்கு அளிக்கும் காணிக்கை) என்ற சொல்லால் குறிக்கும் பார்ப்பனர்களிடையில் கூட பெண் தாய் வீட்டுக்குத் திரும்பும் நிலை வந்தால் அவள் கணவன் வீட்டுக்குக் கொண்டுவந்த நகைநட்டுகள், பிற தட்டுமுட்டுகள், தளவாடங்களைத் திரும்ப எடுத்துச் செல்லும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. அதாவது பெயரை வரதட்சிணை என்று மாற்றினாலும் நடைமுறையில் அது சீதனமாகவே தொடர்கிறது.     
                                                                                   
            நாம் குறிப்பிட்ட குமரி மாவட்ட நாடார் சாதியினரிடையில் சில சிறப்பான வழக்கங்கள் நிலவின. சொத்தாவணங்களில் பெண்களைத் தாயார் பெயரைக் குறிப்பிட்டு அவரின் மகள் என்றுதான் எழுதினர். தாயின் சொத்துகள், பெண் மக்கள் இருந்தால் அவர்களுக்குத்தான் உரிமையாயின. இப்போது இப் பழக்கங்கள் மாறிவிட்டன. ஆனால் தாயின் நகைகள், தாலி தவிர பெண் மக்களையை சேரும். மணமகள் பணமாகக் கொண்டுவரும் சீதனத்துக்கு(சீ + தனம் = பெண்ணின் சொத்து) மணமகனின் சொத்துகளில் ஒன்றை அவள் பெயருக்கு ஈடு எழுதிக் கொடுத்தனர். அதற்கு அச்செழுதுதல் என்று பெயர். அப் பழக்கமும் இப்போது இல்லை.

            இவர்களிடையில் முதல் ஏழாம் நாள், இரண்டாம் ஏழாம் ஏழாம் நாள் என்று இரு சடங்குகள் உண்டு. திருமணத்தை அடுத்த ஒரு நான் இரவு மணமகன் வீட்டில் மணமகனின் அண்ணன் தம்பி உறவுடைய சொக்காரர்களுக்கு இறைச்சி விருந்து வைப்பர். இந்த விருந்துக்கு முதல் ஏழாம் நாள் சடங்கு என்று பெயர். அன்றுதான் மணமக்களின் முதலிரவு நடக்கும். அடுத்த ஏழாம்நாள் மணமகள் வீட்டில்  அதே போன்ற விருந்துவைப்பர்.

            என் பெற்றோருக்குத் திருமணம் நடந்த போது அன்னையாரின் பெற்றோரின் இயலாமையால் மறுவீடு காணும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. எனக்கு 9 அகவையில் எங்களுக்கு புது வீடு பால்காய்ச்சும் விழாவன்று சீர் செய்நேர்த்திகளுடன் அன்னையின் பெற்றோர் மறுவீடு காண வந்தனர். அதுவரை என் பாட்டி எங்கள் வீட்டுக்கு வந்தால் தண்ணீர் கூட அருந்தாமல் திரும்பிவிடுவார். அதாவது தான் வழங்கிய சீர் செய்நேர்த்திகளுடன் தன் கணவனின் தனி ஈட்டத்தில் இன்றி கோளுடையார்களின்[4] வீட்டில் அவர்களின் கை பார்த்து வாழும் மகளிடம் உணவுண்பது இழுக்கு என்பதுதான் இதன் பொருள். இந்தக் கண்ணோட்டத்தில்தான் வேறுபடு திருவின் வீறுபெறக் காண என்ற சிலப்பதிகார வரியைக் காண வேண்டும்.

            நாட்டுக்கோட்டைச் செட்டியார்களில் மூன்றாண்டுகள் சென்று ‘தனிவைப்பதாக’ இன்றும் நீடிக்கும் இந் நிகழ்முறை குமரி மாவட்ட நாடார்களிடையில் ஓரிரு கிழமையில் நடைபெறும் சடங்காகச் சுருங்கியது மட்டுமல்ல ‘தனிவைத்தல்’ இல்லாமல் போயுமிருக்கிறது.

            மேலே கூறப்பட்ட “சுருள் வைத்தலி”ன் பின்னுள்ள குமுக நிகழ்முறை சில சாதிகளில் மாப்பிள்ளை மறிப்பு என்ற பெயரில் மாப்பிள்ளை வீட்டார் முறை மாப்பிள்ளைகளுக்கு ஈடு வழங்கும் சடங்காக நிலவுகிறது. மறவர் போன்ற சாதிகளில் மணமகன் வீட்டார் முறைப்பெண்ணிடம் பகரம் பேசி பணம் பெற்று தங்கள் உரிமையை விட்டுக்கொடுத்ததும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு அவ்வாறு பகரம் பேசி பணம் கொடுத்து உரிமையைக் கழித்ததும் அண்மைக் காலம் வரை நிகழ்ந்தது அச் சாதி சார்ந்தவர்களிடமிருந்து அறிந்த செய்தி.

            மணமான தன் மகனையும் மருமகளையும் தனிக் குடித்தனம் வைப்பது இன்று பெரும் சிக்கலாகி இருக்கிறது நம் குமுகத்தில். ஆனால் வீட்டில் 4 ஆண்மக்கள் இருந்தால் அத்தனை பேருக்கும் வரும் தட்டுமுட்டுப் பொருள்களையும் தளவாடங்களையும் தங்கள் வீட்டுப் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்குக் கொடுத்துக் கழிக்கும் உரிமையும் இன்றி வீட்டுப் பரணில் போட்டு அடைசலாக்கும் அவலம் பொது நடைமுறையாகிவிட்டிருக்கிறது.
           
இவை அனைத்தும் நம் குமுகத்தில் ஒரு கட்டத்தில் பிள்ளைகளைத் தனிக் குடித்தனம் வைக்கும் பழக்கம் பரவலாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. முதுமையில் பெற்றோரையும் திருமணம் ஆகும் வரை இளைய உடன்பிறப்புகளையும் தனிக் குடித்தனம் செல்லும் பிள்ளைகள் பராமரிக்கத் தேவைப்படா வகையில் சொத்துரிமை நடைமுறைகள் இருந்தால்தான் இது இயலும். சூலில் இருக்கும் குழந்தைகள் கூட குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் சொத்துக்கு உரியவர்கள் என்று பிள்ளைகள் அடம்பிடிக்கும் சூழல்தான் இன்றைய முட்டுக்கட்டை நிலையை உருவாக்கியிருக்க வேண்டும்.

இத்தகைய பின்னணியில் பெற்றோர் தம் அனைத்துத் தேட்டையும் இருக்கும் சொத்துகளை விற்றும் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்க, அவர்கள் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல ஈட்டத்துடன் வேலை பார்க்க, பெற்றோர் பணம் இருந்தும் பார்க்கவும் பழகவும் ஆளற்று அல்லலுறும் பொதுவான சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சூழலின் பின்னணி தெரிந்தும் தெரியாதவர்களாய் நம் நாட்டுப் படித்த கூட்டம் “ஐயையோ கூட்டுக் குடும்பம் உடைந்துவிட்டதே” என்று எழுப்பும் புலம்பலும் ஓலமும் தாங்க முடியவில்லை. உண்மையில் கூட்டுக் குடும்பம் என்றோ உடைத்துவிட்டது. தங்கள் நலனுக்காக அண்ணன் தம்பிகளைப் பிரிந்து நகரங்களுக்கு இவர்கள் நகரத் தொடங்கிய அன்றே அது தொடங்கிவிட்டது. தங்களைப் போல் படித்துப் பதவிகள் பெற வாய்க்காத தங்கள் உடன்பிறப்புகளின் தோள்களில் ஏறி உலா வந்தது இத் தலைமுறையில் செல்லுபடியாகவில்லை. உலகம் என்பது நம் குடும்பம் மட்டுமல்ல, நம்மைப் போல் நாடு முழுவதும் மனிதர்கள் வாழ்கின்றனர். அவர்களோடு இணைந்து வாழ நாம் பழகவில்லை. தானும் தன் இல்லத் துணையும் தம் பிள்ளைகளும் என்று மிகக் குறுகிய வட்டமாகிய குடும்பத்துக்கு வெளியே இருப்பவை எல்லாமே நாம் நுகரத்தான் அவற்றுக்கு நாம் மாறாக ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமக்கு இல்லை. ஆனால் நம் பண்டையர் இதை உணர்ந்து செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை தொல்காப்பியம் பதிந்துவைத்துள்ளது.

    காமஞ் சான்ற கடைக்கோட் காலை
                        ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
                        அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
                        சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
எனும் பொருளதிகாரம் 190ஆம் நூற்பா கூறுவது, குடும்பக் கடமைகளை முடித்த தலைவனும் தலைவியும் தகுதியுள்ள நன்மக்களை நாடி நல்லறம் புரியும் தன்னையொத்த பிறரோடு கூடி சிறந்த செயல்களில் ஈடுபடுவதே அவர்கள் கடந்த கால வாழ்க்கையின் பயன் என்பதாகும். சிறந்தது என்பதற்கு அறத்தின் மேல் மன நிகழ்ச்சி என இளம்பூரணர் உரை கூறியிருக்க நச்சினார்க்கினியாரோ அறம்பொருள் இன்பத்திற் சிறந்த வீட்டின்பம் என்று “சும்மா இருப்பதே சுகம்” என்று போகாத ஊருக்கு வழி காட்டுகிறார். இந்த “வழிகாட்டல்”தானே இந்த குமுகத்தையே அழிவுப்பாதையில் கொண்டு நிறுத்தியுள்ளது. ஏமஞ்சான்ற என்பதற்கு வானப்பிரத்தமும் சந்நியாசமும் என்றும் அவர் பொருள் கூறியுள்ளார். வானப்பிரத்தம் என்பது கையும் காலும் ஓய்ந்துவிட்ட காலத்துக்கு முற்றிலும் பொருந்தாத நடைமுறைகளைக் கொண்டது. சந்நியாசமோ வகைவகையாக இரந்து வாழ்வது எப்படி என்று கூறுவது. இரப்பதே உயர்ந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்து உயர் வருமானமுள்ள தொழில் என்ற நிலைக்கு நம் நாட்டைக் கொண்டுவிட்டிருக்கும் தமிழ்ப் பண்பாடு மட்டுமல்ல, “கணக்காயர்” குருமூர்த்தி புகழ்த்தேத்தும் “இந்தியப் பண்பாட்டி”ன் அடித்தளமே இதுதான்.

            ஆனால் நம் தொன்மங்கள் மேற்காணும் தொல்காப்பிய வரிகளுக்கு ஒரு பொருத்தமான விளக்கத்துக்கு வழிகாட்டுகிறது. முனிவர்கள் ஆசிரமங்கள் எனப்படும் இருக்கைகளில் இருந்துகொண்டு மாணவர்களுக்குக் கல்வியளித்து மாற்றாக அவர்களின் உழைப்பைப் பெற்று தங்கள் படிப்பறிவையும் பட்டறிவையும் அடுத்த தலைமுறைகளுக்குத் தந்துவிட்டுச் சென்றனர். அதை குருகுல முறை என்று இன்று கூறுகின்றனர். ஆனால் அதை அப்படியே இன்று மீட்க முடியாது. ஏனென்றால் அன்று மிகுந்திருந்தது போல் வளமான கன்னிமை மாறாத காடுகள் இன்று இல்லை. இருக்கும் காடுகளே தாங்க முடியாத எண்ணிக்கையில் தழையுண்ணிகள் பெருகி அவை சமதளத்தில் இறங்கி மக்களைக் கொன்று வேளாண் நிலங்களை அழிக்கின்றன. இருக்கும் கான் பரப்புக்கும் தழையுண்ணிக்கும் ஏற்ற ஒரு விகிதத்தைப் பேணும் சிந்தனையின்றி நம் ஆட்சியாளரை ஆட்டிப்படைக்கும் வல்லரசியம் வகுத்திருக்கும் கான்விலங்கு பாதுகாப்புச் சட்டங்களை இயற்றி நாட்டின் இயற்கைச் சமநிலையை அழித்துவருகின்றனர். சமநிலங்களோ பயன்பாட்டிலிருந்து பெருமளவு அகன்று வருமானவரிக்கு அஞ்சிப் பதுங்கும் பணத்தின் சவக்கிடங்காக(மனைப்பிரிவகளாக) மாறிக்கிடக்கிடக்கின்றன. அவற்றில் பொது நோக்குள்ளவரின் ஈகையால் கிடைக்கும் நிலங்களில் துணையின்றித் தவிக்கும் மூத்தோரைக் குடியமர்த்துவது முதற்பணி.

இன்றிருக்கும் கல்வி முறை கணினியில் செயல்படும் கணக்குப்பிள்ளைகளையும் உடல் அலுங்காத ஆள்வினை(நிர்வாக)ப் பணியாளர்களையும் உருவாக்குவதை நோக்கியதாகும். இது எவையெவற்றையோ மனப்பாடம் செய்து அவற்றை எழுதி மதிப்பெண் என்ற ஒன்றை ஈட்டுவதால் தேர்வாகும் நடைமுறையைக் கொண்டது. அத்துடன் பெருமளவு பணமும் வேண்டும். இந்தக் கல்வி முறையின் அடிப்படை மாணவரின் அனைத்துத் திறன்களையும் ஆர்வங்களையும் புதைத்து வல்லரசியத்தின் தேவைகளை மட்டும் நிறைவேற்றும் உயிர்க் கருவிகளை உருவாக்குவதாகும். இதை நோக்கமாகக் கொண்டு குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் கல்வி நிலையங்கள் எனும் சிறைக் கூடங்களுள் அடைபடுவதால் இயற்கையான திறமைகளும் ஆர்வங்கள் எவையேனும் துளிர்விட்டிருந்தால் அவையும் அழிக்கப்பட்ட, சிந்தனை முடமாக்கப்பட்ட உயிர்வகையாக்கப்பட்ட இளைஞர்களில் மேற்கூறிய வேலைவாய்ப்பு பெற்றவராகிய மொத்ததில் ஓரு மிகச் சிறு விகிதத்தினர் தவிர்த்த அனைவரும் ஆகியுள்ளனர். இவ்வாறு குறியேதுமின்றி பல்லாண்டுகள் வாழ்ந்து அலுத்துப் போன இளைய தலைமுறையினரிடையில் குமுகப் பொறுப்புணர்வு மலராமல் அவர்களால் குமுக நெருக்கடிகள் வெளித்தோன்றியுள்ள காலத்தில் நாம் உள்ளோம். இந்தப் பின்னணியில் தரிசாகக் கிடக்கும் நிலங்களில் காடு வளர்ப்புடன் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைகளை உருவாக்கி அதில் இயற்கைச் சூழலில் விளையாடியும் வளர வளர உடலுழைப்புடன் கூடிய செய்முறைப் பயிற்சியோடு இணைந்த எழுத்தறிவும் வழங்குவது அடுத்த பணி. இவை இரண்டையும் இணைக்கும் உத்தியையும் நாம் வகுக்க வேண்டும். இவ்வாறு குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து குமுகம் எனும் அகன்ற களத்தினுள் அனைவரும் வினை புரியத்தக்க ஒரு சூழலை மேற்கூறிய நூற்பா நமக்கு சுட்டுகிறது.
      
நாம் தொன்மத்திலிருப்பவையாகக் கூறியுள்ள இந்த ஆசிரமங்களை பிற இடங்களில் கூறியுள்ள குக்குலப் பூசகர்களுடன் இணைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. தொன்மங்களை அணுகும் போது இத்தகைய பிரித்துணர்த்தும் கூறுகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்.


[1]இந்தூல் பக. 28,29,32,33 பார்க்க.
[2] சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு, தமிழினி, சென்னை 600014, 2007, பக். 373.
[3] செனத்தி என்ற வழக்குச் சொல்லுக்கு செய்நேர்த்தி என்ற விளக்கத்தைக் கூறியவர் புலவர் த.சரவணத் தமிழன் ஆவர்.
[4]     கொள்ளுதல் என்ற சொல்லின் அடியிலானது இச் சொல். கொள் → கோள். கொண்டான் கொடுத்தான் என்பது பொது வழக்கிலுள்ள சொல். சம்பந்தி என்று பிற பகுதிகளில் குறிப்பிடுவது இதைத்தான்.
                கற்பெனப் படுவதுகரணமொடு புணரக்
            கொளற்குரி மரபிள் கிழவன் கிழத்தியைக்
   கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுவே எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பொருளதிகாரம் - 140

0 மறுமொழிகள்: