22.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 35


29.குமுகியல் வித்தகர்களன்றோ நாம்! - 4 

செ.:வருமான வரியால் உண்மையான எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?        

.:  நாமறிந்தவரை வருமான வரியைக் கொண்டு நம் நாட்டில் எந்தப் பொதுவான வளர்ச்சியோ ஏழைகளுக்கு நன்மையோ ஏற்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அப்படிக் கூற முடியுமானால் அவற்றோடு நம் மக்கள் மீது ஏறி நிற்கும் அயல்நாட்டுக் கடன் அளவையும் அயற் செலாவணி ஈட்டுவதென்ற பெயரில் உள்நாட்டு மக்களின் நுகர்வுக்கு மறுக்கப்பட்டு ஏற்றுமதியாகும் பண்டங்களின் மதிப்பையும் ஒப்பு நோக்கினால் நம் மக்களுக்குப் பெரும் இழப்பே மிஞ்சுவது புலனாகும். எனவே வருமான வரியால் நம் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக அது விளைத்து வரும் தீங்குகள் எண்ணற்றவை. சிலவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்.

ஆங்கிலராட்சிக் காலத்தில் இங்கு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. விடுதலையை அடுத்த ஆண்டுகளிலும் நிலை இதுதான். வருமான வரி விதிப்புக்கு, பொதுமை, நிகர்மை(சோசலிச)க் கட்சியினர் ஒரு முற்போக்குச் சாயத்தைப் பூசிய பின்னர்தான் கெடுபிடிகள்  தோன்றின. 1974இல் இந்திரா “நெருக்கடி நிலை” அறிவித்த பின்னர் அதற்கெதிராக உருவான மக்கள் எழுச்சிக்குப் பின்னர் அதற்கு ஒத்துழைப்பு அளித்த பணம் படைத்த அரசியல்வாணர்கள் சிலரையும் இதழ் முதலாளிகள் சிலரையும் ஒடுக்குவதற்கென்றே வருமானத்தில் 97.5 சதவீதம் வரை உம்பர்(சூப்பர்) வரி விதிக்கும் கொடுமை அரங்கேறியது. ஆனால் இக் காலகட்டத்தில்தான் எங்கோ கிடந்த திருபாய் அம்பானி திடீரென்று 5000 கோடி உரூபாய்கள் சொத்துக்களுடன் முளைத்தெழுந்த இறும்பூது(அற்புதம்)ம் அரங்கேறியது என்பது குறிப்படத்தக்கது.  இப்போது மக்களிடையில் பணக்காரர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. எனவே வருமான வரி பற்றிய கிலியும் மக்களிடையில் பெருகியுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டுத் தாம் ஈட்டும் பணத்தை வரைமுறையின்றிப் பறிகொடுப்பதை யார்தான் விரும்புவர்? எனவே வருமானங்கள் மறைக்கப்பட்டன. சட்டப்படி ஈட்டப்பட்ட பணம்  ″சட்டத்துக்குப் புறம்பான″ கருப்புப் பணமாக மாறிப் பதுங்கும் நிகழ்முறையும் தொடங்கியது.

செ.:தனி மனிதர்கள் கைகளில் திரளும் பெரும்பணம் ஆதாயம் என்ற வடிவில் எளிய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம்தானே. அதன் ஒரு பகுதியை ஒருமான வரியாக அரசு எடுத்துக்கொள்வதில் என்ன தவறு?
.
.:  கொள்ளை ஆதாயம் வைத்துத் தொழில் செய்வோரைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் ஆட்சியாளர்கள் எடுப்பது பற்றி எவரும் சிந்திக்கக்கூட இல்லை. அதே வேளையில் அவ்வாறு திரளும் பணம் மூலதனமாக மீண்டும் பொருளியல் களத்தில் இறங்குமானால் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், அதனால் உருவாகும் நுகர்வு உயர்வு வடிவிலான வாழ்க்கைத்தர உயர்வு, அதன் விளைவான பணப் புழக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் தொழில் வளர்ச்சி என்ற ஓர் ஆக்க வழிச் சுழல் உருவாகி நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பயன் கிடைக்கும். ஆனால் வருமான வரிக் கொள்ளை இந்த நன்மை தரும் வாய்ப்பைக் கெடுத்து மூலதனமாக வேண்டிய பணத்தைக் கருப்புப் பணமாகப் பதுங்க வைக்கிறது.

இவ்வாறு பதுக்கப்பட்ட பணம் வாளாவிருக்குமா? அது திருமணச் சந்தையிலும் கல்விச் சந்தையிலும் புகுந்து அனைத்துத் துறையிலும் சராசரி மக்களின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் வருமான வரித்துறையினர், வீடுகளிலும் நிறுவனங்களிலும் புகுந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த நுகர்பொருள்களையும் அள்ளிச் சென்று விடுவதால் பணம் படைத்தோர் கட்டடங்களிலும் பிற ஆடம்பரங்களிலும் தேவைக்கு அதிகமாகக் செலவிட்டுப் பணத்தைக் கரியாக்கி விடுகின்றனர். இதன் மூலம் நாட்டுக்கு பெரும் கேடு பயக்கும் ஓர் ஊதாரிப் பண்பாடு பணக்காரர்களிடமிருந்து தொடங்கி குமுகத்தின் அடித்தளம் வரை ஊடுருவிவிட்டது. நம் மக்களின் வாழ்நிலையையும் நாட்டின் பொருளியல் விடுதலையையும் பாதுகாக்க நம் நாட்டில் திரட்டத்தக்க கடைசித் தம்பிடியைக் கூடச் சேமிக்க வேண்டிய ர் உலகப் பொருளியல் சூழலில் இந்த ஊதாரிப் பண்பாடு எனும் மாபெரும் தீமையை சிறுகச் சிறுக உரமிட்டு வளர்த்திருப்பது இந்த வருமான வரிக் கெடுபிடியாகும்.

சிறு வருமானம் கொண்ட அடித்தட்டு மக்கள் போலி நிறுவனங்களிடம் பணத்தைப் பறிகொடுப்பது ஒரு புறம் நடக்க இன்னொரு புறம் ஓரளவு வருமானம் பெறுவோர் தம் வருமானத்தை மறைக்க வீட்டு மனைகள் எனப்படும் காலி இடங்களை வாங்கி மறைக்கிறார்கள்.
பண்டைக் காலங்களில் பகல் கொள்ளையர்கள், தீவட்டிக் கொள்ளையர்களுக்கு அஞ்சி பணத்தை, நகைகளை மண்ணுக்குள் புதைத்ததைப் போன்ற நடைமுறை இது . ஆனால் பண்டையர்கள் புதைத்த செல்வத்தில் ஒரு சிறிய விழுக்காடாவது தொடர்ந்த தலைமுறைகளில் யார் கையிலாவது கிடைக்கும் வாய்ப்புண்டு. ஆனால் இன்றைய அரசுக் கொள்ளையர்களுக்கு அஞ்சி நிலத்தில் புதைக்கப்பட்ட பணம் அதை விற்காமபண்டைக் காலங்களில் பகல் கொள்ளையர்கள், தீவட்டிக் கொள்ளையர்களுக்கு அஞ்சி பணத்தை, நகைகளை மண்ணுக்குள் புதைத்ததைப் போன்ற நடைமுறை ல் போட்டால் யாருக்கும் பயன்படாமல் போகும்.

கட்டடங்களின் மதிப்பை உரிய வாய்பாடுகளால் எளிதில் கணித்துவிட முடியும். அதே வேளையில் நிலத்தின் மதிப்புக்கு அத்தகைய வாய்பாடு எதுவும் இல்லை. குமுகத்தின் பணப் புழக்கத்துக்கும் அதனைச் சட்டப்படி முதலிடுவதற்கு அக் குமுகத்தின் சராசரி குடிமகனுக்கு உள்ள வாய்ப்புகளுக்கும் உள்ள உறவுதான் நிலத்தின், அதிலும் குறிப்பாக வீட்டுமனையின் விலையை முடிவு செய்கிறது எனலாம். இங்கு நிலத்தின் பண மதிப்பு என்பது பணத்தாளின் பண மதிப்பு போன்றே செயல்படுகிறது. வேளாண்மைக்குத் தேவையான குறிப்பிடத்தக்க பரப்புள்ள நிலம், நம் ஆட்சியாளர் வேளைண்மை மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் கணக்கில்லா பல்திசைத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் வருமான வரிக்கு அஞ்சி ஒரு மறைவிடத்தைத் தேடிக்கொண்டிருந்த “கருப்பு”ப் பணத்துக்கு ஒரு பாதுகாப்பான மறைவிடமாக மாறிவிட்டது. ஆனால் இதிலுள்ள மாபெரும் துயரம் என்னவென்றால் குத்தகை முறை சிற்றுடைமையினுள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முடங்கித் தேங்கிக் கிடந்த நம் வேளாண்மை தன் தளைகளை அறுத்துப் பெரும்பண்ணை வேளாண்மையாக, புதுப் புதுத் தொழில்நுட்பங்களைப் படைத்து வளர்வதற்குப் பயன்பட்டிருக்க வேண்டிய மக்களின் பணத் திரட்சி அந் நிலங்களை சிறு சிறு மனைகளாக உடைத்து எதற்கும் உதவாத தரிசாக மாற்றப் பயன்பட்டிருக்கிறது. இவ் இழிநிலைக்கு ஒரே காரணம் வருமான வரிதான்.

      இன்று நிலத்தின் உண்மையான கள மதிப்பு பத்திரப் பதிவு மூலம் கணக்குக்கு வரும் மதிப்பைப் போல் நான்கு மடங்குக்கும் மேலாகும். இதனால் உண்மையாக வீடுகட்ட விரும்பும் சராசரிக் குடிமகனுக்கு அது எட்டாத கனவாகிவிட்டது. அதே வேளையில் வெளிநாட்டில் பணி அல்லது உள்நாட்டில் அயல் பணி அல்லது ஊழல் செய்யும் அரசூழியர், அரசியல்வாணர், வாணிகர் போன்றோரைக் குறிவைத்து பனியாக்கள் உருவாக்கும் மனைப் பிரிவுகளுக்கும் வீடுகளுக்கும் அவர்கள் வைக்கும் விலைகளை இந்தக் கள மனை விலை நயப்படுத்துகிறது. இந்த வகையிலும் வருமான வரி மறைமுகமாக பனியா – பார்சி – வல்லரசியக் கூட்டணிக்கே வலுச் சேர்க்கிறது.

      இவ்வாறு வருமான வரிக் கெடுபிடி ஏற்கெனவே நிலைத்துவிட்ட, ஏறக்குறைய அனைவருமே பனியா – பார்சி – வல்லரசியம் சார்ந்தவர்களாகிய முதலாளிகளுக்குப் போட்டியாக புதிய முதலாளிகள் உருவாவதைத் தடுக்கிறது. பழையவர்களுக்கு அரணிட்டுக் காத்து அவர்களது முற்றுரிமைக்கு வழிவகுத்து ஆரோக்கியமான ஒரு பொருளியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

செ.:அப்படி எந்தத் தொழில் முனைவைத் தடுத்துள்ளனர்?

.:  எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றைக் கூறுகிறேன்.

டாட்டா நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அணிகலன்(ஆபரணம்) துறையில் நுழைந்தது. இவர்கள் எதிர்பார்த்த ஓட்டம் இல்லை. எனவே குமரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பல நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதிலும் பலனில்லை போலும்.  இது இந்தியா முழுவதும் நிகழ்ந்திருக்கும் என்றும் தோன்றுகிறது. எனவே அடுத்த ஆண்டு வரவு – செலவுத் திட்ட அறிக்கையில் டாட்டா போன்ற வணிக அடையாளம் கொண்ட நிறுவன நகைகளுக்கு விளைப்பு(உற்பத்தி) வரியிலிருந்து விலக்களித்தனர். இந்தியா முழுவதும் நகைத்துறையினரிடம் எழுந்த கொந்தளிப்பால் இப்போது அந்தச் சலுகையை விலக்கிக்கொண்டுள்ளனர்.

பனியாக்கள் விளைத்த நிர்மா என்ற சவர்க்கார(சோப்பு) விற்பனை கொடிகட்டிப் பறந்த வேளையில் சில உள்ளூர்ச் சரக்குகள் அதன் சந்தையைக் கைப்பற்றிக்கொண்டிருந்தன. அப்போது தமிழ்நாட்டு சவர்க்காரத் தொழில் சார்ந்தவர்கள் மீது தேடுதல் வேட்டை என்ற பெயரில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. கோவையிலுள்ள ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு கோடி உரூபாய்களை அள்ளிச் சென்றனர் என்பது தாளிகை(பத்திரிகை)ச் செய்தி. ஆனால் “நிர்மா” மீளவில்லை என்பது வேறு கதை.

நரமசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் பனியாக்கள் பெருமளவில் அசையாச் சொத்து(வீடு – மனை)த் துறையில் கால் வைத்தனர். அவர்களுக்காகவே நரசிம்மராவ் அரசு நகர்ப்புற நிலவரம்புச் சட்டத்தை மீளப்பெற்றுக்கொண்டது.
 
அப்போது நடுவரசில் பண அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பொறுப்பிலிருந்த இந்திய ஏம(ரிசர்வு) வங்கி தமிழகத்தில் அப்போது நன்முறையில் செயற்பட்டுவந்த 36 பண நிறுவனங்கள் வலுவிழந்த நிலையில் உள்ளன என்று தாளிகையில் விளம்பரமே செய்தது. அடுத்த நாளே அவற்றில் முதலீடு செய்த அனைவரும் வாயில்களில் வரிசையில் நின்றனர் நங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவதற்காக. உலகில் எந்த ஒரு வங்கிக்கும் இத்தகைய ஒரு சூழலில் என்ன நேரும்? அனைத்தும் வீழ்ந்தன.

மேலே கூறப்பட்ட பண நிறுவனங்கள் அப்போது நல்ல ஆதாயம் ஈட்டத் தொடங்கியிருந்த அசையாச் சொத்தான மனைப் பிரிவு வாணிகத்தை நம்பியே முதலீட்டார்களைக் கவரும் நல்ல வட்டியை முதலீட்டார்களுக்கு உறுதியளித்திருந்தன. ஆனால் பரவலாக யாருக்கும் தெரியாத ஒரு நடவடிக்கையில் வருமான வரித்துறை இறங்கியது. இந்த அசையாச் சொத்து வாணிக நிறுவனங்களில் புகுந்து அவர்களிடம் மனைகள் வாங்க முன்பணம் கொடுத்திருப்போரின் செய்திகளைத் திரட்டி அவர்கள் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்புறம் யார் அந்தத் திசையில் காலெடுத்து வைப்பர்? நெல்லையைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் நடத்திய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தந்த செய்தி இது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால் சென்னையில் கட்டுமானப் பணிகள் நிலைகுத்தி நிற்பதாக அவர் கூறினார்.

நெல்லையில் கந்துவட்டித் தொழில் மூலம் பேரளவில் பணம் ஈட்டிய ஒருவர் தன் சாதியைச் சேர்ந்த ஒரு பொறியாளர் பொறுப்பில் சென்னையில் கட்டுமானப் பணியில் காலெடுத்து வைத்தார். நெல்லையில் அவர் வீட்டிலும் அந்தப் பொறியாளரின் வீடு, அலுவலகங்களிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் “தேடுதல்” வேட்டை நடந்தது. அண்ணன் பெட்டியைக் கட்டி நெல்லைக்கு மீண்டார். இப்போது ஒரு திரையரங்க வளாகத்தை அமைத்துக்கொண்டு வழக்கமான வட்டித் தொழிலையும் செய்து வருகிறார்.

மதுரையில் பரிசுச் சீட்டு நடத்திப் பெரும் பணம் ஈட்டிய கே.ஏ.எசு.சேகர் என்பவர் ஒரு கட்டத்தில் கட்டுமானத் தொழிலில் காலடி எடுத்துவைத்தார். பரிசுச் சீட்டுத் தொழிலில் பல வகையான முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த எந்தச் சூழலிலும் கண்டுகொள்ளாமல் இதுவரை இருந்த மாநில, நடு அரசுகளின் விற்பனை வரி, வருமான வரித் துறைகள் இப்போது அவர் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தின. தாங்க முடியாமல் அந்த இளம் தொழில் முனைவர் நெஞ்சு வெடித்து இறந்த அவலம் எளிதில் மறக்க முடியாதது.

இப்படி நாடு முழுவதும் பனியாக்களின் முற்றுரிமைக்காக கட்டுமானத் துறையில் மட்டும் நசுக்கப்பட்ட முனைவுகள் எத்தனையோ? நெஞ்சு வெடித்து மாண்டவர்கள் எத்தனை பேரோ?

தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த “ஜீவி” எனப்படும் வெங்கடேசுவரன், குஞ்சுமோன் ஆகியோரின் திடீர்ச் சாவுகள்தாம் மறக்கத்தக்கனவா?
     
வருமான வரி பற்றிய இடைவிடாத அச்சத்தாலும் பதற்றத்தாலும் நம் நாட்டுப் பணக்காரர்கள் முதுகெலும்பில்லாத பெரும் கோழைகளாகிவிட்டனர். நாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாணர்களும் அவர்களின் துணை பெற்ற போக்கிரிகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் ஒரு வலுவான இயக்கம் உருவாக முடியாமல் போனதறகு நாட்டின் முதன்மைக் குடிமக்களாகிய பணக்காரர்களிடம் நிலைத்துவிட்ட இந்தக் கோழைத்தனமே காரணகும். பணக்காரர்களே ஒதுங்கி ஓடும் போது ஏழை என்ன செய்வான்?

இன்று பொதுவாக அனைவரின் நடுவிலும் குறிப்பாக உயர்த்த வாழ்க்கைத் தரம் உடையவர்கள் நடுவில் குருதிக் கொதிப்பு, நீரழிவு, நெஞ்சக நோய் போன்றவற்றிற்கு அவர்கள் உண்ணும் உணவு, வாழும் வாழ்க்கைமுறை ஆகியவற்றை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. இடைவிடாத அச்சமும் பதற்றமும் முகாமையான காரணங்களாகும். தன் தலை நரைக்காமைக்கு கழகப் புலவர் பிசிராந்தையார் கூறும் காரணங்களை இங்கு நினைத்துப் பார்ப்பது நன்று. இந்த வகையிலும் சில நிகழ்வுகளைக் கூறுகிறேன்:

நெல்லையில் கட்டுமானத்துறையில் பணியாற்றிய ஒருவரை ஒரு வாணிகர், முகம்மதியரான இன்னொரு வாணிகரின் கட்டடத்தில் சில பணிகள் செய்வது தொடர்பாகத் தன் கடை ஊழியருடன் அவரிடம் விடுத்தார். அந்த ஊழியர் இவரை அறிமுகம் செய்வதில் சிறிது தடுமாறினார். இவர் விளக்கிச் சொன்னார். அவர், இவரது உடையையும் தோற்றத்தையும் அந்த ஊழியர் தடுமாறியதையும் கண்டு வந்தவர் வரித்துறையைச் சேர்ந்தவரோ என்று நடுங்கிப் போய் விட்டதாகவும் நெஞ்சு இன்னும் படபடப்பதாகவும் கூறினார். நாள் முழுவதும் இவர்களை நினைத்து மன அமைதி குலைந்து வாழ வேண்டியிருப்பதாகவும் அதனால் தனக்கு நெஞ்சாங்குலை(இருதய) நோயும் நீரிழிவும்(சர்க்கரை வியாதி) தாக்கியுள்ளதாகவும் மனம் நொந்து கூறினார்.

அதே நெல்லையில் லாலா சத்திரம் முக்கு எனுமிடத்தில் சதன் அங்காடி என்ற பெயரில் தேநீர்க் கடையோடு இணைந்த பல்பொருள் அங்காடி ஒன்றை வெளியூர்க்காரர் ஒருவர் நடத்திவந்தார். ஒரு தேநீர்க் கடையில் தேநீர் போடுபவராக இருந்து படிப்படியாக வளர்ந்தவர் என்று அவரைப் பற்றிக் கூறினர். ஒரு நாள் அவர் வீட்டிலும் கடையிலும் ஒரே நேரத்தில் “வேட்டை” நடத்தினர் வருமான வரித்துறையினர். ஆடிப்போய்விட்டார் நண்பர். நெஞ்சகத் தாக்குதலுக்கு உள்ளானார். போதுமடா சாமி வாணிகம் என்று தன் சொந்த ஊரான உடுமலைப்பேட்டைக்குக் குடும்பத்துடன் வண்டியேறிவிட்டார் தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்த அவர்.
     
இவை தனிப்பட்ட முறையில் தனக்கு அறிமுகமான தனியாள்களுக்கு நடந்த கொடும் பட்டறிவுகள் பற்றிய ஒரு தனி மனிதன் பதிவுகள். ஒட்டுமொத்த தமிழகத்திலும், மொத்த இந்தியாவிலும் தொழில் வாணிகத் துறைகளில் ஈடுபட்டிருப்போரில் எத்தனை எத்தனை இலக்கம் பேர் எத்தனை எத்தனை மன அழுத்தங்களாலும் நாட்பட்ட நோய்களாலும் இரக்கமற்ற இந்த வேட்டை நாய்களால் அலைக்கழிப்புக்கு ஆளாகி இருப்பார்கள்? எண்ணிப்பாருங்கள்.

செ.:வருமான வரியின் பின்னணியில் இத்தனை கொடுமைகள் நடைபெறுகின்றனவா? வியப்பாக இருக்கிறதே!

.:  இன்னும் நிறைய இருக்கிறது, கேளுங்கள். 

நடு அரசின் ஆளும் கட்சியினர் தங்கள் கட்சியிலுள்ளோரையும் பிற கட்சியிலுள்ளோரையும் தங்கள் விருப்பத்திற்கிசைய ஆட்டிவைக்க வருமான வரிக் கெடுபிடிகள் உதவுகின்றன. திரைப்பட நடிகர்களும் பணக்காரர்களும் வருமான வரிக் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காகவே அரசியல் கட்சிகளைச் சார்ந்து நிற்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டுக்கு ஒன்றே ஒன்று:

ஒப்பில்லா நடிகர் என்று அனைவரும் போற்றுகிற சிவாசி கணேசன், தான் திரையுலகில் காலெடுத்து வைத்த காலத்தில் கட்சிப் பரப்பலுக்குப் பேருதவியாய் இருப்பார் என்று அத் துறையில் தன்னை இறக்கி உதவிய தி.மு.க.வின் அன்றைய “பகுத்தறிவு”க் கொள்கைகள் தன் பன்முக வளர்ச்சிக்குத் தடையாயிருப்பதை உணர்ந்து திருப்பதி சென்று மொட்டை போட்டு சிக்கலை உருவாக்கி வெளியேற்றப்பட்டாரே அன்றி வேறெந்தக் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பிய அவர் மீது வருமான வரித்துறையினர் தேடுதல் வேட்டை நடத்திய போதுதான் பணம் ஈட்டுவதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பது அவருக்குத் தெரிந்தது. கர்மவீரர் என்றும் கறைபடாத அரசியலாளர் என்றும் பெருந்தலைவர் என்றும் பலரும் போற்றுகிற காமராசரிடம் அப்போது அவரைக் கைகாட்டி விட்டனர். அவ்வாறுதான் அவரது பேரவைக் கட்சி நுழைவு நடைபெற்றது என்பது வரலாறு. இவ் வகையில் ஆண்ட கட்சிப் பரப்பலுக்கென்று தமிழ்த் திரை உலகின் உச்சியில் இருந்த ஒரு நடிகரை வருமான வரித்துறையின் மிரட்டலால் பெற முடிந்தது.

அது மட்டுமல்ல அவர் தம்பி என்று குறிப்பிட்ட இராசீவ் காந்தி(இந்தியாவை ஆள்வதற்கென்றே “ஆண்டவன்” படைத்துள்ள குடும்பத்தின் இளவரச“ரை”த் தம்பி என்று அழைக்க எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?) தன்னை இழிவு படுத்தியது பொறுக்காமல் புதிய ஒரு கட்சியை(தாயக மறுலர்ச்சிக் கழகம்?) உருவாக்கிய போது அவர் வெளியிட்ட அறிக்கை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. தனது அனைத்துப் பட உரிமைகளையும் விற்று வருமான வரிப் பாக்கிகள் எதுவும் இல்லாமல் அடைத்துவிட்டுத்தான் புதுக் கட்சியைத் தொடங்கியதாகக் கூறியதுதான் அந்த அறிக்கை. இனி வருமான வரித்துறையைக் கொண்டு எந்த ஆளும் கட்சியும் தன்னை மிரட்ட முடியாது என்று ஆளுவோருக்கு கிட்டத்தட்ட நேரடியாக விடுத்த அறைகூவலாகும் இது.

ஆளும் கட்சிகள் பிற கட்சிகளை, குறிப்பாக மாநிலக் கட்சிகளை வருமான வரித்துறையைக் கொண்டு எவ்வாறு மிரட்டுகிறார்கள் என்பதற்கு ஓர் எதிர்மறை உத்தியைக் கையாண்டு வரலாற்றில் பதிந்த ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு இது. இன்று நடுவண் உளவு வாரியத்தை (சி.பி.ஐ.)யும் வருமான வரித்துறையையும் கொண்டு நடுவரசு மாநில ஆட்சியாளர்களை மிரட்டுவதாக முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டுவது வெளிப்படையான சான்று. அவரும் அவருடைய கட்சியின் ஆட்சியும் ஊழிலில் திளைப்பது உலகறிந்த உண்மை என்பதால் அது மக்கள் நடுவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

செ.:ஊழல் செய்யும் அதிகாரிகளையும் அரசியல்வாணர்களையும் குற்றவியல் துறையினரைக் கொண்டு புலனாய்வு செய்யாமல் வருமான வரித்துறை கொண்டு தேடுதல் வேட்டை நடத்துவது ஏன்?      

.:  இதில்தான் மறையமே அடங்கியுள்ளது. அவர்களை வெறுமே அச்சுறுத்திப் பணம் பறிப்பதையும் அதே வேளையில் அவர்களைத் தம் விருப்பத்துக்கு வளைப்பதையும் குறிக்கோளாகக் கொண்டதாகும் இது. இதற்கு வெளிப்படையான ஒரு சான்று சுக்ராம் நேர்வாகும்.

வரம்பில்லாமல் பணம் கொட்டும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் மீது வருமானத்தை மீறி 53 கோடி உரூபாய்கள் அளவில் சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறை நடவடிக்கையில் இறங்கியது. இந் நிலையில் அவரது கட்சியுடன் பாரதீய சனதா கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது. அதன் பின் வருமான வரித்துறை வருவாய்க்கு மிஞ்சிய கள்ளப் பணம் 53 கோடி உரூபாயை கணக்கில் காட்டாத கருப்புப் பணம் என்று விளக்கம் கொடுத்து அதற்கு வரியாக 17 கோடி உரூபாய்களைப் பிடித்து மீதி 36 கோடியை நல்ல பணமாக ஆக்கித் தந்தது. கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்கும் ஒரு நேர்வல்ல இது; சிறை, சொத்துப் பறிப்பு போன்ற தண்டனைகள் வழங்கப்பட வேண்டிய ஊழல்கள், முறைகேடுகள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களின் மூலம் ஈட்டிய கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் ஒரு நேர்வாகும். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் மனதில் நன்கு பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

செ.:இப்படி ஒரு அரசுத்துறை இருப்பது குமுகத்துக்குப் பெரும் கேடாக அல்லவா முடிந்துவிடும்?  

.:  சரியாகப் புரிந்துகொண்டீர்கள். வருமான வரியிலிருந்து தப்புவது எப்படி என்ற ஒரே சிந்தனையே பெரும் சிந்தனையாகிவிடுவதால் பணம் வைத்திருப்போரின் கவனம் வளர்ச்சி, மேம்பாடு என்ற திசைகளிலிருந்து விலகி நிற்கிறது. வருமானத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் நாணயம், நேர்மை, போன்ற உயர் குணங்களைக் கைவிடுவதற்கு அனைவருக்கும் ஞாயம் கிடைத்து விடுகிறது. நாட்டின் ஒழுக்கப் பண்பாட்டின் சிதைவுக்கு இது அடித்தளமாகிறது.

செ.:வருமான வரித் தேடுதல் என்றாலே பலரும் நடுங்குகிறார்களே ஏன்?

.:  வருமான வரித் தேடுதல் வேட்டைகள் வடிவத்தில் பகற்கொள்ளையை ஒத்தவை. தொலைபேசியைத் துண்டிப்பதற்குப் பகரம் ஒரு காவலர் தொலைபேசியில் நின்றுகொள்வார். முன் வாசல், பின் வாசல், நான்கு புறங்கள், புகைபோக்கி, முகப்பு என்று கட்டடம் சுற்றி வளைக்கப்படும். திறவுகோல் கிடைக்கவில்லையானால் பேழைகள் உடைக்கப்படும், பொருட்கள் வாரியிறைக்கப்படும். படுக்கைகளைக் கிழிப்பதும் சுவர்களை உடைப்பதும் தளத்தைத் தோண்டிப் பார்ப்பதும் கூட “இயல்பான” தேடுதல் உத்திகள். கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லையானால் அருவருப்பான சொற்கள் உதிர்க்கப்பபடும். தூத்துக்குடியில் இத்தகைய ஒரு “தேடுதலின்” போது கிடைத்த செல்வம் எப்படிக் கிடைத்தது, மனைவி பரத்தமை செய்து ஈட்டியதா என்று வேட்டை நாய்கள் கேட்டதாகவும் இல்லத் தலைவி கூனிக் குறுகுமாறு வீட்டின் தலைமகன் “ஆம்” என்றதும் ஓர் 20 ஆண்டுகளுக்கு முந்திய செய்தி. இவ்வாறு நடத்தப்படும் தேடுதல் வேட்டைகளில் மிகப் பெரும்பாலானவை கணக்கில் வருவதில்லை. கணக்கில் வராத விலை மிகுந்த ஆடம்பரப் பொருள்களை வேட்டை நாய்கள் கணக்கில் காட்டாமலே எடுத்துக்கொள்ளும். இவ்வாறு சுருட்டப்படும் செல்வம் உயர் மட்டம் வரை செல்வதற்கான வாயில்களும் வழிமுறைகளும் உள்ளன.

தேடுதல் வேட்டையின் இந்த வடிவம் இருண்ட காலம் எனப்படும் இடை நூற்றாண்டுகளில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் சிற்றரசர்கள் தத்தம் ஆட்சிப் பகுதியில் இருந்த பணக்காரர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கவர்ந்து கொண்டதைப் போன்றது. இங்கு கொலை மட்டுமே வேறுபாடு.

பகற்கொள்ளை, தீவட்டிக் கொள்ளைகளின் போது கொள்ளைக்கு ஆளாவோன் மீது அயலவர்களுக்கு பரிவு இருக்கும். உதவிக்கு வருவார்கள். ஆனால் இன்றோ மக்களின் நலன்களைக் காப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கை என்று நம் பொதுமைத் தோழர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாயப் படிமத்தால் மக்கள் ஒதுங்கி விடுவதுடன் மக்களைக் கசக்கிப் பிழிந்து சேர்ந்திருக்கும் பணம்தானே என்ற பகை நிலையும் உருவாகி விட்டிருப்பது பெரும் கொடுமை.

செ.:தேடுதல் வேட்டையின் இந்த வடிவத்தைப் பார்த்தால் நம் மக்களின் அடிப்படை உரிமைகள், குடிமை உரிமைகள், பொருளியல் உரிமைகள், போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லையே!

.:  மிகச் சரியாகக் கூறினீர்கள். தன் இரவு நகர் ஆய்வின் போது ஐயத்தின் அடிப்படையில் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான் என்பதற்காகத் தனி மனித உரிமைக்கு ஊறு செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி அதற்காகத் தன் கையையே வெட்டிக்கொண்ட பாண்டிய அரசனின் கதையில் வெளிப்படும் தனி மனித உரிமையை மதிக்கும் அரசனின் பண்பு ஓங்கி இருந்த நம் மண்ணில் அரசின் நடைமுறை வருமானம் என்ற பெயரில் மக்களின் தனி மனித உரிமையைக் காலில் இட்டு மிதிக்கும் அதிகாரத்தை வழங்கும் ஒரு வரி விதிப்பு மக்களாட்சி நடப்பதாகக் கூறப்படும் இன்று தேவையில்லைதானே!

செ.:தேவையில்லைதான். ஆனால் தேடுதல் வேட்டையின்றி வருமான வரியைத் தண்டுவதில் என்ன சிக்கல்?

.:  தேடுதல் வேட்டைக்குக் கூறப்படும் காரணம் ஒருவரின் வருமானத்தைக் கணக்கிடுவதற்கு வழி ஏதுமில்லை என்பதாகும். நில வரி தண்டல் நிலத்தின் தரம் குறித்த பல்வேறு கூறுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டு சிக்கலின்றி நடைபெறுகிறது. வருமான வரி அப்படியல்ல. சில ஆண்டுகளுக்கு முன் ஓர் எம்பி(பம்பு) பழுது பார்ப்பதற்காக நெல்லையிலிருந்து மதுரையில் உள்ள ஓர் நிறுவனத்துக்கு வந்திருந்தேன். அவர்கள் பழைய எம்பிகளைப் புதுப்பிப்பதுடன் புது எம்பிகள் செய்வதை மூலத் தொழிலாகக் கொண்டவர்கள். அந் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்த இளைஞரிடம் வருமான வரி பற்றி பேச்சுக் கொடுத்தேன். அவரது மிசை(மேசை) மீது கிடந்த மேற்கோள்(கொட்டேசன்) புத்தகத்தைக் காட்டி நிறுவனத்தின் வருவாயை மதிப்பிட வரும் வருமான வரித்துறை அதிகாரி அப் புத்தகத்தைக் கையிலெடுத்து இதுதான் உன் வருமானத்துக்கான ஆவணம் என்று அடாவடியாக நடந்துகொள்வதை மனம் நொந்து கூறினார். பத்துப் பேர் மேற்கோள் மடல் பெற்றுச் சென்றால் ஒருவர் திரும்பி வருவது கூட அரிது என்பது தொழில் – வாணிகத் துறையிலுள்ளோர், தொழில் நடத்துவோர், வாடிக்கையாளர் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், நாம் குறிப்பிடுவோர் யார்? அரசு அதிகாரிகளான கடவுள்களின் தோற்றரவுகள்(அவதாரங்கள்) அல்லரோ! எனவே அவர்கள் கூறுவதற்கு மாற்றுக்கருத்து உளவோ? அவர்களின் அருளைப் பெற நாம் நம் தெய்வங்களின் அருளைப் பெற செய்வது போல் காணிக்கை செலுத்துவதுதானே முறை!

      மக்களிடம் வரி தண்டுவது பூவிலிருந்து வண்டு தேன் எடுக்கும் போது பூவுக்கு வலிக்காமல் எடுப்பது போல் மக்களுக்குத் தொல்லை தராமல் செய்ய வேண்டுமென்று கவுடில்லியனாகிய சாணக்கியன் தன் பொருள் நூலில்(அர்த்த சாத்திரத்தில்) கூறியுள்ளான். ஆனால் நம் ஆட்சியாளரின் நடைமுறை மக்களைத் துன்புறுத்துவதற்காகவே வருமான வரியை வைத்துள்ளது என்பது தெளிவாகிறது.

செ.:இவ்வாறு எப்போது எங்கிருந்து வரிக்காரன் வருவான் என்று பதற்றத்துடன் இருக்கும் மக்களால் எப்படி தொழில்துறையில் அருஞ்செயல்களை ஆற்ற முடியும்?

.:  நீங்கள் கூறிய இதே சொற்களைத்தான் மாபெரும் வரலாற்றறிஞர் வில் டூரான்று STORY OF CIVILIZATION என்ற தன் படைப்பின் முதல் மடலமான OUR ORIENTAL HERITAGEஇல், ஒர் நாகரிகத்தின் வீழ்ச்சிகளுக்கான இரண்டு காரணங்களில் ஒன்றாகக் கூறுகிறார். அவர் கூறும் மற்றொரு காரணி மரணம் எந்த மூலையில் பதுங்கியிருக்கிறதோ என்று மக்கள் அஞ்சும் நிலை. இவ் விரண்டையும் இன்று நம் நாட்டு மக்கள் சந்திக்கின்றனர்.

      நான் குறிப்பிட்ட இளைஞர் கூறிய இன்னொரு செய்தி உங்கள் கேள்விக்கு விடை கூறுகிறது. அவர்களுக்கு தமிழகத்திலுள்ள பல நகரங்களில் தொழிலகங்கள் வெவ்வேறு பெயர்களில் உளவாம். ஆனால் அவற்றை ஒரே நிறுவனப் பெயரில் நடத்தினால் வருமான வரித்துறை உட்பட பல்வேறு நடுவரசுத் துறைகள் புகுந்து உண்டு இல்லை என்று செய்து விடுவார்களாம். இப் பல்வேறு துறைகளின் சட்ட விதிகள் இருக்கும் போது பனியா - பார்சிகளால் மட்டும் எப்படி பெரிய பெரிய புதிய புதிய நிறுவனங்களை உருவாக்க முடிகிறது என்பது நம் முன் நிற்கும் கேள்வி. மேற்படி பனியா – பார்சிகளுக்குப் போட்டியாக மாநிலங்களில் வாழும் அந்தந்த தேசியங்களின் குடிகள் வளர்ந்துவிடக் கூடாது என்பதுதான் இச் சட்டங்களின் நோக்கமே என்பதுதான் நமக்குக் கிடைக்கும் ஒரே விடை.

செ.:வருமான வரி குறித்து மக்களிடம் நிலவும் பொது மனப்பான்மையைப் பார்க்கும் போது வருமான வரி வருவாய் அரசின் மொத்த வருவாயில் கணிசமான பகுதியாக இருக்கும் போலிருக்கிறதே! வருமான வரியை ஒழித்தால் அதை எப்படி ஈடுகட்டுவது?

.:  பெரும்பாலானோர் நீங்கள் கூறுவது போல்தான் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை வேறு. 1993-94ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மட்டும் இது மொத்த வருமானத்தில் 6 நூற்றுமேனியாக உயர்ந்துள்ளது. அதற்கு முன் தொடர்ந்து 5 நூற்றுமேனியாகவே இருந்து வந்தது. அதன் பின்னர்தான் ஆண்டைய வரவு – செலவு அறிக்கையில் வருவாய் மதிப்பீட்டில் 15 நூற்றுமேனி அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் மொத்தத் தண்டல் சராசரியாக அதில் மூன்றில் ஒரு பகுதிதான், அதாவது ஏறக்குறைய 5 நூற்றுமேனி அளவுதான் என்பது அண்மையில் வெளிப்பட்ட ஒரு செய்தி.

      இவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் பட்டியலில் கையெழுத்திட்டுச் சம்பளம் பெறும் ஊழியர்களிடமிருந்து வருவதுதான். பெரும் முதலாளிகளிடமிருந்து வருவது புத்தகக் கணக்கில்தான். ஏற்றுமதி - இறக்குமதி உதவித் தொகைகள் மற்றும் பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகளைக் கணக்கிட்டால் இந்த முதலாளிகளுக்கு நிகரமாக அரசே ஆண்டுதோறும் பணம் வழங்குவதாக முடியும். இவ்வாறு சென்ற ஆண்டில் பெரும் அசுர நிறுவனங்களுக்கு “நம்” அரசு கொட்டிக் கொடுத்துள்ள தொகை 5.7 இலக்கம் கோடி உரூபாய்கள் என்பது மார்க்சீயப் பொதுமைக் கட்சியின் தமிழகச் செயலர் திரு. இராமகிருட்டினன் தந்துள்ள செய்தி. அது போகக் கணக்கிலெடுக்க முடியாத மிகச் சிறு அளவுதான் சராசரிப் பணக்காரர்களிடமிருந்து கிடைக்கும்.

      வருமான வரித்துறையின் மொத்த நடவடிக்கையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாதச் சம்பளக்காரர்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் செயற்படும் வருமான வரித்துறையை பனியா – பார்சி – வல்லரசிய முதலாளிகள், அரசியல்வாணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நலன்களுக்காக இந்தியா என்ற சிறைக்கூடத்துக்குள் காந்தியால் அடைக்கப்பட்ட பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த மாநிலங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் பொதுமக்களையும் பனியா – பார்சி – வல்லரசியம் சாராத பணக்காரர்களையும் அச்சுறுத்துவதற்காகவும்  அவர்களின் அனைத்துத் தொழில் முனைவுகளையும் கருவறுக்கவும் தங்கள் அதிகார ஆதிக்கத்தை மக்கள் மீது நிலைநிறுத்துவதற்காகவும் பயன்படுத்துவதாகவே முடிகிறது. இதன் விளைவாக மக்களின் சேமிப்பு மனப்பான்மையும் முதலீட்டு மனப்பான்மையும் புதியன படைக்கும் சிந்தனையும் அழிக்கப்படுகிறது. உள்நாட்டு மூலதனம் துரத்தப்பட்டு ஒளிந்து கொள்வதால் உள்நாட்டுத் தொழில்நுட்பமும் வளர வழியற்றுப் போகிறது.

      வரி தண்டவும் கண்காணிக்கவும் பேணப்படும் ஒரு பெரும் ஊழியர் படையின் சம்பளம், படிகள், கட்டட வாடகை போன்ற ஆள்வினைச் செலவுகள், தேடுதல் வேட்டை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகள் “கருப்புப் பணம்” பற்றிய துப்பு தரும் துப்பாளிகளுக்கு வழங்கப்படும் கைக்கூலி ஆகியவற்றை மொத்த தண்டலில் கழித்தால் கிடைக்கும் நிகர வருவாய் வெட்கப்படத்தக்கதாய் இருக்கும்.

எனவே, வருமான வரித்துறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நமக்கிருக்கும் அயல்நாட்டுக் கடன்களைப் போல் பல மடங்கு மதிப்புள்ள, கருப்புப் பணம் என்று வருமான வரித்துறையால் முத்திரை குத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள பணம் மூலதனமாகப் பொருளியல் களத்தில் இறங்க வழி ஏற்பட வேண்டும். மக்களின்(தனியார் எனும் போது அது வெளிநாட்டவரைப் பிரித்துக் காட்டாது, மக்கள் என்றால் உள்நாட்டவரை மட்டும் குறிப்பிடும்)  பொருளியல் நடவடிக்கைகள் பல்கிப் பெருகும். இதன் விளைவாகச் சுங்கவரி போன்ற வரி வரவுகள் ஒழிக்கப்பட்ட வருமான வரியை விடப் பல மடங்கு உயரும். மக்களின் வேலை வாய்ப்புகளும் வாழ்க்கைத் தரமும் உயரும். மக்களின் முனைவுகளின் விளைவாக நம் சொந்தத் தொழில்நுட்பமும் அறிவியலும் வளரும், நம் பொருளியல், தொழில்நுட்ப அடிமைத்தனம் நீங்கும்.

தொடரும்.....

0 மறுமொழிகள்: