20.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 26

23. மன்னன் ஒரு வழி மக்கள் ஒரு வழி
(தோரா. தி.மு.5000)
            நாம் இப்போது ஒரு பெருங்கோட்டையின் முன் நிற்கிறோம். கோட்டை மூடப்பட்டிருக்கிறது. அதன் முன் புறம் சூழவும் பல்லாயிரக்கணக்கானோர் கைகளில் போர்க் கருவிகளுடன் நிற்கின்றனர், அவர்களைப் பார்த்தால் போர் வீரர்களைப் போல் தோன்றவில்லை. குடிமக்களைப் போல் தோற்றமளிக்கின்றனர். கூட்டத்தில் பல பெண்களும் காணப்படுகின்றனர். கோட்டை வாயிலை அணுகிச் செல்வோம். இருவர் பேசுவது காதில் விழுகிறதா?

            அடேய் மாதவா! வாமனன் உள்ளே போயிருக்கிறானே வெற்றியோடு திரும்புவானா?

            உறுதியாகத் திரும்புவான். அவனிடம் தெய்வீக ஆற்றல் இருக்கிறது.,

            அவனைக் கொன்று போட்டுவிட மாட்டார்களா? தனியாகப் போயிருக்கிறானே!

            துணிவார்களா? மன்னன் மாவலி அரண்டு போயிருக்கிறான். வாமனன் இன்று மாலைக்குள் திரும்பவில்லையானால் நாம் கோட்டையைத் தகர்த்துவிடுவதாக அச்சுறுத்தியிருக்கிறோமே!”.

            அப்படியானால் ஏதோ காரணத்துக்காக மக்கள் வெகுண்டு மன்னன் மீது போர் தொடுத்திருக்கிறார்கள். அமைதிப் பேச்சுக்காக அவர்கள் தலைவன் உள்ளே போயிருக்கிறான் என்று தெரிகிறது. நாம் உள்ளே சென்று பார்த்தால் என்ன? உள்ளே அரச மண்டபத்தை நோக்கி ஒரு குள்ளமான மனிதனை இரு வீரர்கள் அழைத்துச் செல்கின்றனர். அவன் பூணூல் அணிந்துள்ளான். அவன் நாற்புறமும் பார்வையிட்டவாறு நடந்து செல்கிறான். காவலர்கள் மண்டப வாயிலை அடைந்ததும் நின்றுவிட, வாமனன் மட்டும் உள்ளே செல்கிறான். உள்ளே அரசன் முகத்தில் சினமும் கவலையும் தோன்ற அமர்ந்திருக்கிறான். அவனைச் சுற்றி அரசச் சுற்றத்தார் அமர்ந்திருக்கின்றார்கள்,

            வருக வாமனா; அவ்விருக்கையில் அமர்க! என்கிறான் அரசன். வாமனன் அமர்கிறான்.

            உன் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாய். இப்போது என்னன்ன கட்டுறவுகளை (நிபந்தனைகளை) வைக்கப்போகிறாய்?

            வாமனன் சுற்றியிருப்போரை நோக்குகிறான்; தயங்குகிறான். அரசன் புரிந்துகொண்டு தனியாகப் பேச விரும்புகிறாயா? என்று வினவினான். ஆம் என்பது போல் தலையசைக்கிறான் வாமனன். அரசச் சுற்றத்தினரை நோக்கி அரசன் தலையசைக்க அவர்கள் தயங்கியவாறே வெளியே செல்கிறார்கள். அரசன் வாமனனை நோக்குகிறான். உம்…. சொல் வாமனன் கனைத்துக் கொண்டு தொடக்குகிறான்.

            அரசே! பாண்டிய மரபின் படிநிகராளியாக இருந்த உன் முன்னோர் பாண்டிய அரசு நிலைகுலைந்த போது தன்னாட்சி கொண்டு ஆளத் தொடங்கினார்கள். வாணிகர்களுக்கு உதவுவது உங்கள் முகாமையான பணியாயிருந்தது. தனியரசு நிறுவியதும் மக்களிடம் திறை கேட்டீர்கள். மக்களின் தலைவர்களாக இருக்கும் பார்ப்பனர்களிடம் திறை தண்டி வந்தீர்கள். நாங்களும் உங்களுக்கு அடங்கி வாழ்ந்து வந்தோம். பரசிராமன் வழங்கிய முறைப்படி நாங்களே இந் நாட்டில் உயர்ந்த குடிகளாக இருந்து வருகிறோம். எங்களுக்கு மற்ற வகுப்புப் பெண்டிரும் வைப்பாட்டிகளாக இருந்து வருகிறார்கள். இங்கு பெண்கள் ஒரு கணவனுக்கு மேல் ஒரே நேரத்தில் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்திருக்கிறீர்கள். நாட்டின் வெவ்வேறு பகுதிகளை மேற்பார்க்க உங்கள் படிநிகராளியரையும் அமர்த்தியிருக்கிறீர்கள். இது மறைமுகமாக எங்கள் மேலாண்மையைப் பறிப்பதாகும். எனவேதான் பார்ப்பனர்களாகிய நாங்கள் மக்களையெல்லாம் தூண்டி இந்தப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். ஒரு நயமான முடிவு ஏற்படவில்லையென்றால் அரசே உன்னையும் உன் அரண்மனையையும் மக்கள் அழித்து எங்கள் நாட்டைச் சேர்ந்த அரச மரபை ஏற்படுத்தி விடுவார்கள்.

            சரி வாமனா! அப்படியானால் பார்ப்பனர்களாகிய உங்கள் மேலாண்மையைக் காத்துக்கொள்ளவே மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிக் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறீர்கள், அப்படித்தானே? அரசன் குரலில் அடக்கப்பட்ட சீற்றம் தெரிகிறது.

            ஆம் மன்னா! வாமனன் துணிவுடன் கூறுகிறான்.

 இதற்கு நீ கூறும் தீர்வு என்ன?

            முதலில் உங்கள் படிநிகராளியரைத் திரும்பப் பெற வேண்டும். ஒருத்திக்கு ஒரே கணவன் என்ற சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். பார்ப்பனர்களாகிய எங்களுக்கிருக்கும் மேலாண்மையில் எக் காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது. இவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொண்டால் நாங்கள் அரசருக்குரிய திறையை உரிய காலங்களில் இறுக்கவும் தங்கள் ஆட்சிக்குப் பாதுகாப்பளிக்கவும் அணியமாக உள்ளோம். கிளர்ச்சியை நிறுத்தி மக்களை அமைதிப் படுத்தி அழைத்துச் செல்வோம்.

            மன்னன் நீண்ட நேரம் ஒன்றும் பேசவில்லை. அவன் முகத்தில் இழிவுணர்ச்சியும் ஆத்திரமும் குழப்பமும் நிலவுகின்றன. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, சரி அப்படியே ஆகட்டும்! என்று கூறுகிறான். மன்னன் கைகளைத் தட்டவே காவலன் ஒருவன் உள்ளே வருகிறான். அரசச் சுற்றத்தாரை அழைத்து வா என ஆணையிடுகிறான். அரசச் சுற்றத்தார் உள்ளே வந்ததும் சுற்றத்தாரே! வாமனனோடு பேச்சு முடிந்தது. அரசுக்கான திறையை நம்பூதிரிகளே திரட்டி இறுத்துவிடுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாம் நம் படிநிகராளியரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுகிறோம். மக்களின் குமுக வாழ்வில் மாற்றம் செய்யும் எண்ணம் நமக்கில்லை. கிளர்ச்சியை உடனே நிறுத்திக்கொள்ள வாமனன் நடவடிக்கை எடுப்பான். நம் முடிவை அறிக்கையாக்கி மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! அரசன் எழுந்து தன் மாளிகைக்குள் செல்கிறான்.

            இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல்,  மகிசூர் மைசூராகிய எருமையூரில் பதினிரா, அதே போன்று மலையாள நாட்டில் ஓணம். இவ் வோணத் திருநாளுக்கு ஒரு தொன்மக் கதை உள்ளது. சேர நாட்டில் மாவலி என்ற சேர மன்னன் ஒருவன் இருந்தான். அவன் கொடைத்திறம் மிக்கவன். அவன் ஆணவமிக்கிருந்தான் என்றும் அவன் ஆணவத்தை அடக்கக் கருதிய விண்டு(திருமால்) ஒரு குறள் பார்ப்பான் வடிவில் சென்று அரசனிடம் தனக்குத் தவம் இயற்ற மூன்றடி நிலம் கேட்டானாம். அரசன் கொடுத்ததாகக் கூற, விண்டு விண்ணுக்கும் மண்ணுக்குமாக முழுவடிவெடுத்து ஓரடியால் மண்ணையும் மற்றோரடியால் விண்ணையும் அளந்து விட்டு மூன்றாவது அடிக்கு இடம் கேட்க, அரசன் தன் தலையைக் காட்டினானாம். விண்டு அவன் தலை மீது காலை வைத்து அவனை ஆட்கொண்டதாகவும் அப்போது உனக்கு வேண்டுவன கேளென, தான் இறையடி சேரும் இந் நாளை என் நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என்றும் தான் அதனை ஆண்டுதோறும் கண்டு களிக்க வேண்டும் என்றும் மாவலி வேண்டினானாம். அந்த நாளே திருவோணம் என்று கொண்டாடப்படுவதாகக் கூறுவதே அக் கதை.
 
 இக் கதை ஏதோ ஒரு வகையில் ஒரு பார்ப்பான் ஒரு சேர அரசனைத் தந்திரத்தால் மடக்கியதையே குறிக்கிறது என்பது அறிஞர் கருத்து. இவ்வாறு பார்ப்பனர்ககு உதவியவர் அனைவரையும் சில கற்பனைகளையும் கலந்து பதின் தோற்றரவு(அவதார)க் கதைகள் புனையப்பட்டிருக்க வேண்டும்.

            சேரன் மரபினர் அந் நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் தழுவிய மருமக்கள் வழியை அதாவது தாயுரிமை வழியை - பின்பற்றாது தனித்து வாழ்ந்துவந்தனர். அவர்கள் சேர நாட்டு மக்களைவிடத் தாய்த் தமிழகமாகிய பாண்டிய சோழ நாடுகளோடு அதிக உறவு வைத்திருந்தனர். எனவே மக்களோடு சேராதவன் என்று குறிக்கப் போலும் சேரான் என்பது சேரன் என்று மருவியிருக்கலாம். அந் நாட்டு மொழியும் கடைக்கழகக் காலம்வரை தாய்த் தமிழ்நாட்டுப் மொழியை(செந்தமிழை) ஒட்டி வந்திருந்ததற்கும் சேரரின் பாண்டிய, சோழ நாடுகளின் உறவே காரணமாயிருக்க வேண்டும்.

            சேரமான் பெருமாள் என்னும் சேர வேந்தன் காலத்தில் அவனுக்கும் அவன் மைந்தர்க்கும் ஏற்பட்ட மன வேற்றுமையால் தனக்குப்பின் தன் மருமக்களுக்கே நாடு உரிமையானது என அறிவித்ததாக ஒரு கதை நிலவுகிறது. இதன் பின்னர்தான் மலையாள நாடு தமிழ்நாட்டினதும் தமிழ்மொழியினதும் உறவை அறுத்துக்கொண்டு தனித்துத் திரிந்து போலும்.

            அம் மருமக்கள் மரபுமுறை தென்பாண்டி நாடாகிய, பிற்காலத்தில் மலையாள நாட்டின் ஆளுமையிலிருந்த நாஞ்சில் நாட்டு வேளாண் வகுப்பினரையும் பிடித்துக் கொண்டது. பின்னர் ஆண்களுக்குக் குடும்பத்தில் அதிகப் பொறுப்பும் ஆளுமையும் இருக்க இம் முறையால் சிக்கல்களும் முரண்பாடுகளும் தோன்றின. அதன் விளைவாக இம் மருமக்கள் மரபுக்கு எதிர்ப்பு உருவானது. கவிமணி தேசிகவிநாயகத்தின் மருமக்கள் வழி மான்மியம் நூல்  இப் போராட்டத்தின் முற்றிய நிலையாகும். இவ்வாறு இம் மருமக்கள் தாயமும் பல கணவர் மணமுறையும் மலையாள நாட்டில் அருகிவிட்டன[1].

பின்குறிப்பு: நம் பண்டை வரலாற்றைத் தடம் பிடிப்பதில் எண்ணற்ற சிக்கல்கள் உள்ளன. தமிழ் இலக்கியங்கள், மக்களிடையே நிலவும் எண்ணற்ற மரபுகள் ஆகியவற்றுடன் இற்றை மேலை உலகின் அறிவியல் கோட்பாடுகளுடன் மனித குலத்தின் ஒப்பற்ற மெய்யியல் - கோட்பாட்டுப் பிழிவான மார்க்சியத்தின் துணையுடன் வேதங்கள் எனப்படும் மறைகள் தரும் செய்திகளையும் பண்டைத் தொன்மங்களையும் அலச வேண்டியுள்ளது. அதில் பல முரண்பாடுகளை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. எடுத்துக்காட்டாக பொருளிலக்கணக்கம் காட்டும் ஐந்நிலப் பண்பாட்டின் தோற்றத்தைத் தடம் பிடிக்கும் போது முதலில் நெய்தல் நிலம் வலிமை பெற அதிலிருந்து மருதமும் அதிலிருந்து முல்லையும் அதிலிலிருந்து குறிஞ்சியும் ஒவ்வொன்றாக விடுதலை பெற அவை அனைத்திலுமிருந்து வெளியேறியவர்களும் அண்டை நிலத்தவரும் கலந்து பாலைப் பண்பாடும் உருவானதாகக் கண்டோம்[2]. இதற்கான தடயங்கள் மறைகளிலும் தொன்மங்களிலும் உள்ளன. வருணனைப் புகழ்ந்தும் அவனை இழித்து இந்திரனைப் புகழ்ந்தும் மறைகளில் பாடல்களும் கதைகளும் உள்ளன. இந்திரனை எதிர்த்து கோவர்த்தன மலையைத் தூக்கிப் போரிட்டு கண்ணன் புறங்கண்டதை தொன்மம் கூறுகிறது. அறிதுயிலில் இருந்த கண்ணனை அம்பெய்து சேரன் என்ற வேடன் கொன்றதாக மகாபாரதம் கூறுகிறது.

            கடவுள் வாழ்த்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் புறநானூற்றின் முதல் பாடலாகிய, சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியுள்ள பாடலில் வரும்,
                        அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
                        நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
                        ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
                        பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் 
என்ற வரிகளிலிருந்து துரியோதனன் சேர மரபின் முன்னோன் என்பது தெளிவாகிறது. விரிவுக்கு நண்பர் திரு.வெள்உவனுடன் நான் இணைந்து எழுதிய பெருஞ்சோற்று உதியஞ்சேரல் என்ற கட்டுரையைக் காண்க[3]. ஆனால் முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கழகப் புலவர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். அதே வேளையில் இரண்டாம் கழகத்தில் இருந்தவர்களில் ஒருவனான துவரைக்கோன் கண்ணனாக இருந்தால் அவன் மாண்ட நாளிலிருந்து கலியுகம் தொடங்கியதாகக் கூறப்படுவதிலிருந்து கி.மு.3101இலிருந்து சேரர்களின் ஆட்சி தோன்றியது என்று கொள்ள வேண்டியுள்ளது. சேரனின் கொடி வில்லாக இருப்பதற்கு இக் கதையின் கரு ஓர் அடிப்படையைத் தருகிறது. இந்த முடிவுக்கு முரஞ்சியூர் முடிநாகராயர் முதற் கழகப் புலவர் என்ற குறிப்பு முரணாகிறது.

            முக் கழகக் கால நீட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற கருத்தை பல ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் காட்டும் காரணம் இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்களும் பொறிப்புகள் போன்ற பிற சான்றுகளும் கி. மு. 4ஆம் நூற்றாண்டுக்கு அப்பால் செல்லவில்லை என்பதாகும். ஆனால் இந்தக் காரணத்தைப் புறந்தள்ள நமக்குக் கிடைத்த சான்று கி.மு.165இல் கலிங்க மன்னன் காரவேலன் பொறித்த அத்திகும்பா கல்வெட்டில் தமிழ் மூவேந்தரும் 12 குறுநில மன்னரும் 1300 ஆண்டுகளாகப் பேணிவந்த, தாங்கள் ஒருவர் இன்னொருவர் மண்ணைத் தன் நாட்டோடு இணைக்கக் கூடாது, திறையாண்மை தண்டலாம் என்ற உடன்படிக்கையைத் தந்திரத்தால்[4] தான் உடைத்ததாகக் குறிப்பிட்டிருப்பதாகும். இதைப் படியெடுத்த முகர்சி என்ற “ஆய்வாளர்”, பிற சான்றுகளின் படி தமிழ் வேந்தர்களின் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டுக்கு அப்பால் செல்லவில்லையாதலால் 113 என்பதுதான் 1300 எனப் பிழையாகப் பொறிக்கப்பட்டிருக்கும் என்ற குறிப்புடன் 113 என்று பதிந்துவிட்டார். புலனங்களிலிருந்து முடிவுகளை எடுக்க வேண்டிய நேர்மையான வழியிலிருந்து விலகி ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுக்கேற்ப புலனங்களைத் திருத்திப் பதிவது நேர்மையற்றவர் செயல். ஆனால் உண்மையான பொறிப்பை மறைக்காமல் குறிப்பெழுதியமைக்காக அவர் தன் பணியின் தன்மை பற்றிய தெளிவற்ற, இந்தப் பணிக்குத் தகுதியுமற்ற ஒருவர் என்றே முடிவு கட்ட வேண்டியுள்ளது.

            இனி, கல்வெட்டு தரும் கால அளவை எடுத்து ஆய்வோம். கல் வெட்டு பொறிக்கப்பட்டது கி.மு.2ஆம் நூற்றாண்டு, தமிழக அரசர்கள் அமைத்த கூட்டணியின் வாழ்நாள் 13 நூற்றாண்டுகள், ஆக, மூவேந்தர்கள் கி.மு.15ஆம் நூற்றாண்டிலேயே இங்கு வலுவாகக் காலூன்றிவிட்டனர். மூன்றாம் தமிழ்க் கழகம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை நிலைத்துள்ளது. ஆக, 1700 ஆண்டுகளுக்குத் தெளிவான சான்றுள்ளது. எனவே பண்டை இலக்கியங்கள் மூன்றாம் சங்கத்துக்குக் கூறும் 1850 ஆண்டுகளுக்கும் இதற்கும் வெறும் 150 அல்லது 200 ஆண்டுகள்தாமே வேறுபாடு உள்ளது. எனவே பிற இரு சங்கங்களின் கால நீட்சி குறித்தும் பெரும் வியப்பு கொள்ள வழியில்லை என்பது நம் முடிவு. நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சித் தலைவர்களின் கீழ் பாண்டிய அரசு இருந்திருள்ளதா என்ற கேள்விக்கு குமரியாகிய கொற்றவையை நெய்தல் நிலத்துக்குக் கொள்ளலாம் என்பது எம் கருத்து.  துவரைக்கோனை முல்லைக்கும் குமரவேளை குறிஞ்சிக்கும் முக் கழகம் பற்றிய செய்திகளின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம் என்றால் வரிசை பொருந்திவரவல்லை. அத்துடன் இவர்கள் கழகங்களின் தலைவர்களாக இருந்தவர்களாகவே குறிக்கப்பட்டுள்ளது. அதே வேளை,
                        ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
                   போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
                        சேரன் பொறையன் மலையன்….
என்று சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை, ஊசல் வரி 24ஆம் வரியில் அடிகள் குறிப்பிட்டுள்ளது சேரர்கள் துரியோதனன் மரபினர் என்ற உண்மையை மனம் செரிக்க மறுத்ததன் விளைவா?

            தொடர்ந்த கடற்கோள்களும் நீண்ட கால இடைவெளியும் தொடர்ந்த உட்பூசல்களும் என்ற சூழ்நிலையில் கிடைத்த செய்திகளை வைத்து அரசர்கள், கழகங்களின் தலைவர்கள் குறித்த பட்டியல்களைப் பின் வந்தவர்கள் வகுத்துள்ளனர். ஆனால் கழகங்கள் பற்றிய செய்திகளில் வரும் நூல்களின் பட்டியல் ஆர்வமூட்டும் முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, மாபுராணம், பூதபுராணம் என்பன அவை. அவை என்னென்ன பொருள் குறித்தவையாய் இருக்கும் என்று நம் கற்பனையை ஓட்டிப் பார்ப்போம். அடுத்தவர் எழுதியவற்றை மேற்கோள் என்ற பெயரில் கொட்டிக் குவித்து ஆழமான ஆய்வு என்று பெருமையடித்துக் கொள்வோர் நம் “கற்பனை”களைக் கேலி பேசுவர் என்பது பற்றி நாம் கவலைப்படவில்லை. பிறர் கால் படாத, தமக்குரியதல்ல என்று அவர்கள் புறக்கணித்த தடத்தில் நடந்து சிறிது பிழையான விடைகள் கிடைத்தாலும் அத் தடத்தில் துணிந்து செல்வதையே பெருமை என்று கருதுகிறோம். நாம் நடந்த தொலைவுக்கு அப்பாலும் செல்வதற்கான தடத்தை வரும் தலைமுறையினருக்குத் தெளித்து[5](தெளிவுபடுத்தி) வைப்பதற்காகப் பெருமைப்படுகிறோம்.

            நாரை என்பதற்கு ஒரு பறவை என்பது தவிர வேறு பொருள் கிடைக்கவில்லை. நாரைக் கொம்பு என்பதற்கு நீண்ட கொம்பு என்ற பொருளை தமிழ் மொழியகராதி தருகிறது. பெரும்பாலும் நீருள் அகழும் நீண்ட கருவிகளைப் பற்றிய நூலாக முதுநாரை இருக்கலாம். குருகு என்பதற்கு ஊதுலை எனப்படும் துருத்தி என்ற பொருளும் உண்டு. எனவே பொன்மங்களை(உலோகங்களை)ப் பிரிக்கும் உலைகளைப் பற்றிக் கூறும் பொன்மவியலைப் பற்றிக் கூறுவதாக முதுகுருகு இருக்கலாம். இரும்பைக் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் நுட்பத்தின் வளர்ச்சிதான் குப்போலா உலை. ஒரு மாட்டுவண்டிப் பாரம், அதாவது ஒரு தன் கனிமத்தைப் பிரித்தெடுக்கும் திறன் கொண்ட  தமிழகத்திலிருந்த உலைகளை முன்னுருவாகக் கொண்டு கொள்திறனைப் பெரிதாக்கும் தோறும் உருவான சிக்கல்களை எதிர்கொண்டு மேம்படுத்தப்பட்டதே குப்போலா உலை[6]. களரி என்பதற்கு அரங்கம், ஆயுதம், சூது, கூத்து முதலியன பயிலிடம், போர்க்களம், தொழில் செய்யுமிடம், நாடகசாலை, நீதிமன்றம் என்ற பொருள்கள் கிடைக்கின்றன. விரை என்ற சொல்லுக்கு கலவைச் சாந்து என்ற பொருளை கழகத் தமிழ் அகராதி தருகிறது. எனவே களரியாவிரை என்பது உள் மற்றும் வெளி அரங்கங்களில் நடைபெறும் பல்வேறு வகையான போட்டிகளைப் பற்றிய நூல் என்று கொள்ளலாம். இந்தப் போட்டிகள் அரசியலில் மிகாமையான குறிதகவுடையன என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக மகாபாரதத்திலும் நளன் கதையிலும் ஆட்சியைக் கைப்பற்ற சூதாட்டம் பயன்படுவது, போருக்குப் பகரம் சூதாட்டம் ஓர் அரசியல் நடவடிக்கையாக ஒரு காலத்தில் பயன்பட்டிருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. போர் என்றால் படைவீரர்களை அமர்த்தி அவர்களுக்கு மக்களின் வரிப் பணத்தில் செலவுசெய்து நாட்டு மக்களுக்கு இடையூறுகளை விளைவித்து படைவீரர்களையும் தலைவர்களையும் கொல்ல வேண்டும், சூதாட்டம், ஒற்றைக்கு ஒற்றைப் போர் (துவந்த யுத்தம் – Dual) என்று எத்தனையோ எளிய மாற்று வழிகள் இருக்கின்றனவே[7]. இது மக்களைப் புறக்கணிக்கும் ஒரு நடைமுறை என்று மனதின் ஒரு மூலையில் சிறிது உறுத்துகிறதோ? எந்தப் போர் என்று மக்களைக் கேட்டு நடைபெற்றது? நடைபெறுகிறது? உலக வரலாற்றிலும் இலக்கியங்களிலும் அரசியல் சார்ந்த இத்தகைய எண்ணற்ற போட்டிகள் காணப்படுகின்றன. மாபுராணம் என்பது விலங்குகள் பற்றிய நூலாகும் என்ற கருத்து பல ஆண்டுகளுக்கு முன்பே தென்மொழி இதழில் வெளிவந்தது. அது போல் பூதபுராணம் இயற்பியல் சார்ந்த நூலாக இருக்கலாம். சமற்கிருத, பிராகிருத, பாலி நூல்களை நுணுகி ஆய்ந்தால் மேற்காணும் பழந்தமிழ் நூல்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

            நம் பண்டை வரலாற்றையும் பண்பாடுகளையும் தடம்பிடிப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துச் சொல்லத் தொடங்கியதில் சற்று விலகி எங்கெங்கோ உங்களை அழைத்துச் சென்றுவிட்டேன் என்று நீங்கள் ஐயுறுகிறீர்களா?. வாமனன் பற்றிப் புரிந்துகொள்வதற்கான ஓர் ஆயத்த விளக்கமே இது.

            குமரி மாவட்டத்தில் இரணியல் என்றொரு ஊர் உள்ளது. இதுதான் இரணியன் இருந்து ஆண்ட தலைநகராயிருக்கலாம் என்பது என் கருத்து. இரணியன் என்பதற்கு பொன்னன் என்பது பொருள். இவன் மகனே பிரகலாதன். பிரகலாதன் என்பதற்கு முதல் ஆதன் என்பது பொருள். ஆதன் என்பது சேர அரசர்களைக் குறிக்கும் பெயர் விகுதிகளில் ஒன்று.  பிரகலாதனின் மகன் விரோசனன். இவன் பூசகர்களின் நெருக்குதலை விரும்பாததால் என்று தோன்றுகிறது, தவம் மேற்கொண்டதாக அபிதான சிந்தாமணி தரும் செய்திகளிலிருந்து தெரிகிறது. அவனது மகன் மாவலி மக்களால் மிகவும் போற்றப்பட்ட ஓர் அரசன். அவனையும் ஏதோ தந்திரத்தால் பூசகர்கள் அகற்றியதையே திருமாலின் வாமன தோற்றரவுக் கதை சுட்டுகிறது.  இழந்த தம் அரசனின் நினைவைப் போற்றும் வகையிலேயே சேர நாட்டு மக்கள் இன்றும் திருவோணத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

            பக்.34இல் நாம் பார்த்தவாறு அரபுக் கடல் வழியாகப் புகுந்த நம்பூதிரிகளின் முன்னோர் தங்களை எதிர்கொள்ள உள்ளூர் மக்களில் சில குக்குலத்தினரின் துணையுடன் பிரகலாதனையும் சேர்த்துக்கொண்டு இரணியனைக் கொன்றனர். அரிமாவைக் குலக்குறியாகக் கொண்ட மக்களைத்தான் ஆளரி (நரசிம்மம்) என்று தொன்மத்தில் பதிந்துள்ளனர் போலும்.

ஒருவேளை மாவலியின் காலத்தில் கோயில்களின் கொடுங்கோன்மை தாங்காமல் அடித்தள மக்கள் அரசனின் நேரடி ஆட்சியின் கீழ் தங்களைக் கொண்டுவரவும் நம்பூதிரிகளின் மேலாளுமையை முறியடிக்கவும் அரசனை நெருக்க, மன்னன் எடுத்த நடவடிக்கைகளை நம்பூதிரிகள் இடைப்பட்ட ஆதிக்கக் கூட்டத்தை துணை சேர்த்து முறியடித்த ஒரு நிகழ்வாகவே மாவலியின் கதையைப் பார்க்க வேண்டும்.

மாவலியின் மகன் வாணன் எனப்படும் வாணாசுரன் அல்லது பாணாசுரன். இவன் மேற்குத் தொடர்ச்சி மலையின் வட கோடியில் அமைந்துள்ள மகாபலேசுவரம்(மகாபலி அதாவது மாவலி + ஈசுவரம், தஞ்சைப் பெரிய கோயிலை இராசராசேசுவரம் என்று அழைப்பது போல்) என்று அழைக்கப்படும் சோணிதபுரம் ஆகிய சோப்பட்டினத்தில் ஆண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக அவன் மகளை ஓர் உளவாளி(முற்றிலும் ஓர் உருவகத் தெய்வமான காமனின் மகனான அநிருத்தன் என்கிறது தொன்மம்) மயக்கி உள்நுழைய அவனை அரசன் சிறைப்படுத்த அதைச் சாக்காக வைத்து அவன் கோட்டையை முற்றுகையிட்டதை மாதவி ஆடும் பதினோராடல்களில் அவுணனான வாணாசுரனைக் கொல்வதற்காக அவனுடன் திருமால் நிகழ்த்திய மற்போரைக் குறிக்கும் மல்(1) எனும் ஆடல், வாணன் தலைநகர வீதியில் திருமால் ஆடிய குடம்(2) எனும் கும்பாட்டம், ஆண்மை திரிந்த ஆண்பேடி வடிவத்தில் காமன் ஆடிய பேடி(3), வாணன் ஏவிய பாம்பு, தேள் போன்றவற்றை எதிர்கொள்ள மரக்காலில் நின்று காளி ஆடிய மரக்கால்(4), அவுணர்களை மயக்குவதற்காக திருமகள் ஆடிய பாவைக் கூத்து(5)[8], வாணன் தலைநகரின் வடக்கு வாயில் முன் வயலில் நின்று கடைசியர் வடிவில் இந்திராணி ஆடிய கடயம்(6) என்று பாதிக்கு மேல் சேர மரபினருக்கு எதிரான திருமாலின், அதாவது பூசகர்களின் நடவடிக்கைகளாக இடம்பெற்றிருப்பது சிலப்பதிகாரம், கடலாடு காதையின் மூலம் வெளிப்படுகிறது. திருமாலின் 10 தோற்றரவுகளில் ஆளரி, வாமனம் ஆகிய இரண்டும் வெளிப்படையாகவும் சேர நாட்டைப் பரசிராமனின் நாடு என்பதன் மூலம் பரசிராமம் மறைமுகமாகவும் சேர மரபினருக்கு எதிரானவை என்ற உண்மை தெளிவாகிறது. காமனுடன் தொடர்புபடுத்தப்படுவதால் இதில் பாண்டியரின் வட இந்தியப் பிரிவினரின் தொடர்பு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
பாண்டியனுக்கும் காமனுக்கும் உள்ள சில ஒற்றுமைகள்.
                                         பாண்டியன்                                       காமன்
                                          மீன் கொடி                                    மகரக் கொடி
                                         திங்கட் குடை                                 திங்கட் குடை
                                  (திங்கள் குலத்தோன்)       
                                               மாறன்                                            மாரன்
                                  நெய்தல் நிலவரசன்                          கடல் முரசோன்

இப் பாணனே முற்றிலும் ஆண்குறி வடிவத்தில் இருந்த குறியாகிய சிவலிங்கத்தை இன்றைய வடிவத்தில் வழவழப்பாக வடித்தவன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகிறது.

இப் பாணன் சிவன் மீது மிகுந்த பற்றுள்ளவன் என்றும் அவனை திருமால் ஒடுக்கியதாகவும் அபிதான சிந்தாமணி தரும் செய்திகளிலிருந்து சிவனிய – மாலிய போட்டிகள் மட்டுமல்ல அரசர் – பூசகர் மோதலும் வெளிப்படுகிறது.

இவ்வாறு இன்றைய தமிழகத்தின் தென் கோடியில் இருந்த சேர மரபின் ஒரு கிளையை இன்றைய மராட்டியக் கடற்கரைக்கு கேரளப் பூசகர்கள் துரத்தியுள்ளனர். இவர்களுக்கும் சேர மரபினருடன் இணைத்துக் கூறப்படும் அதியமான் மரபினருக்கும் உள்ள உறவு என்னவென்று தெரியவில்லை. ஆனால் அசோகன் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு இணையாக சத்தியபுத்திரர்கள் என்று அதியமான் குறிப்பிடப்படுவதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் அவர்கள் அப் பகுதியில் வலிமையுடன் ஆண்டுள்ளது விளங்குகிறது. அது மட்டுமல்ல, குமரி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள நாகர்கோயிலுக்கு நேர் வடக்கிலிருக்கும் அழகியபாண்டிபுரம் எனும் ஊருக்கு அதியனூர் என்ற பெயர் இருந்திருப்பது அதியமானின் ஆட்சியின் விரிவு பற்றிய ஒரு புரிதலை நமக்குத் தருகிறது.

பிற்காலத்தில் இரணியலைத் தலைநகராகக் கொண்டு வேணாடு விளங்கியது. அதை முதலில் பத்மநாபபுரத்துக்கும் பின்னர் திருவனந்தபுரத்துக்கும் கொண்டுசென்றனர். திருவிதாங்கூர் என்று அறியப்படும் அந் நாட்டின் பெயர் உண்மையில் இரணியலை அடுத்துள்ள திருவிதாங்கோடு என்ற ஊரின் பெயரில் இருந்து திரிந்ததாகும்.

            வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இயங்கிய சேரர்கள் கோயில்களின் குறிப்பாக காளி கோயில்களின் அடிப்படையில் இயங்கிய கோயில் தம்பிரான்களை ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர் என்று தெரிகிறது. அதனால் அவன் அரசவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது. 

            சிலப்பதிகாரம், கட்டுரை காதை, வரிகள் 56 – 62இல் திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை.............குலவுவேற் சேரன் என்ற கூற்றும் அதற்குப் பொருள் கூறும் போது “தண்கட னாட ணொண்பூங் கோதை, பெருநா ளிருக்கை என்று கூறினார் பிறரும்” என்று வேங்கடசாமி அவர்கள் கூறுவதும் இந்த நம் கருத்துக்கு அடிப்படையாயமைந்தன.

சேர மரபினரிடையில் பிற்காலத்தில் மக்கள் வழியும் மருமக்கள் வழியும் மாறி மாறி வந்துள்ளன. இறுதியில் இராமவர்மன் என்ற மன்னன் தன் மக்களுக்கு நாட்டை விட்டுச் சென்ற போது அவன் உடன்பிறந்தாள் மகனான மார்த்தாண்டன் நாடுகள் எனும் ஆட்சிப் பிரிவுகளின் தலைவர்களான 64 நாடான்களில் இருவரின் ஒத்துழைப்புடன் நம்பூதிரிகளையும் எதிர்த்து மாமன் மக்களைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். நம்பூதிரிகளைத் தண்டிக்கும் வகையில் நம்பூதிரிப் பெண்களை மீனவர்களான பரதவர்(பரவர்)களுக்கு மணமுடித்து வைத்தான். அவர்களுக்குப் பிறந்தவர்கள் முக்குவர் என்ற மீனவப் பிரிவினராக இருக்கின்றனர். தனக்கு உதவிய அனந்தபத்மநாப நாடானைத் தன் தலைமை மெய்க்காப்பாளனாக வைத்துக்கொண்டான். ஆனால் அனந்தபத்மநாபனை நாயர்கள் தந்திரமாகக் கொன்றுவிட்டார்கள்[9]. அதனால்தானோ என்னவோ தன் உயிரைக் காத்துக்கொள்ள “தன்” நாட்டை தலைநகர் திருவனந்தபுரத்தில் வீற்றிருக்கும் பத்மநாபக் கடவுளுக்கு எழுதிவைத்து தான் அந்த இறைவனின் அடிமையாக(பத்மநாப தாசனாக)  நாட்டை ஆள்வதாக அறிவித்தான். உண்மையில் இறைவனுக்கு அடிமை என்பது பூசகர் என்ற வடிவில் வாழும் நம்பூதிரிகளுக்கு அடிமை என்றே பொருள்படும்.

 திருவிதாங்கோடு அரசின் அதிகாரங்கள் எட்டரைப் பங்குகளாக(யோகங்களாக)ப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எட்டு பங்குகள் நம்பூதிரிகளுக்கும் அரைப் பங்கு மட்டும் அரசனுக்கும் உரியவை. ஆக அரசனுக்கு பதினேழில் ஒரு பங்கு அதிகாரம் மட்டுமே இருந்நது. இப்போது அதையும் நம்பூதிரிகளின் காலடியில் ஒப்படைத்துவிட்டு, கேரள வரலாற்றாசிரியர்களாலும் பிறராலும் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவன் என்று போற்றப்படும் வீர மார்த்தாண்ட வர்மன் மாவலியின் மறு பிறப்பாக வாமனன் காலடி முன் தலையைக் குனிந்து கொடுத்த அவலம் மலைஞாலத்தில் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் அரங்கேறியது. அன்றிலிருந்து திருவிதாங்கோட்டு அரசர்கள் மருமக்கள் வழியினராக மாறினர். மரபுரிமைச் சிக்கல்கள் வரும் என்பதால் அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. அம்மச்சியார் எனும் வைப்பாட்டிகள் மூலமே தங்கள் காமத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டியவரானார்கள்.
  
பூசகர்களின் தலைமையாக மலைஞாலத்தில் செயற்பட்ட நம்பூதிரிகளின் மேலாளுமை கி.பி. 20 ஆம் நூற்றாண்டில் அச் சாதியைச் சேர்ந்த சங்கரன் நம்பூதிரிப்பாடு முதலமைச்சராகி உழுபவர்க்கே நிலம் சொந்தம் என்ற திட்டத்தைச் செயல்படுத்திய பின்னரே முடிவுக்கு வந்தது. அதுவரை அரசனுக்கும் நம்பூதிரிகளுக்குமான போராட்டம் இடைவிடாமல் நடைபெற்று வந்தது[10].

            சேரர்களின் இரு கட்டங்களிலான குடியேற்றங்களில் முதலாவது பாரதப் போர் முடிவுற்றதும், பெரும்பாலும் முதல் கழகக் காலத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற பெயரில் முதல் கழகக் காலத்தில் ஒருவரும் கடைக் கழகக் காலத்தில் ஒருவரும் வாழ்ந்திருக்க வேண்டும். இருவரின் பெயர்க் குழப்பத்தில் இரண்டாமவர் பாடியதை முதலவர் மீது ஏற்றியிருக்க வேண்டும். அதே வேளை உதியஞ்சேரலைப் பாடும் பதிற்றுப்பத்து பாடல் துரியோதனன் பக்கத்திலிருந்து போரிட்டு மாண்ட, இடையெழு வள்ளல்களில் ஒருவனான அக்குரன் என்பானுடன் சேரலாதனின் கொடைத்திறத்தை ஒப்பிட்டுக்காட்டியிருப்பது காலக் குழப்பத்தை உண்டாக்குவதையும் குறிப்பிட வேண்டும்.  

            தோல்வியடைந்த துரியோதனன் வழியில் வந்தவன் இரணியனாக இருக்க வேண்டும். கண்ணனை சேரன் என்ற வேடன் கொன்றதான கதை கதவபுரத்தில் ஆண்ட கண்ணன் மரபினரை துரியோதனன் மரபினர் வென்று அப்போது பாண்டியர்களாயிருந்த ஆயர்களிடமிருந்து குறிஞ்சி நிலத்தை புதிய இடத்திலும் மீட்டதாக இருக்க வேண்டும்[11].

            புவியின் மேலோடு அடியிலுள்ள களிக் குழம்பின் அலைவால் மேலெழும்பியும் அழுந்தியும் நகர்ந்தும் கொண்டிருந்த நிலையில் புதிய புதிய இடங்கில் புதிய புதிய மக்களிடையில் ஒரே தன்மையுள்ள நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதும் குழப்பம் மிகுந்த அந்த நிகழ்வுகளைப் பதிவதில், மனிதர்களைக் கடவுள்களாகக் கற்பித்துப் பதிவு செய்திருக்கும் நம் நாட்டுச் சூழலில் கால, இடக் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பே. அதனுடன் வெவ்வேறு கடவுள்களையும் கோயில்களையும் வைத்துப் பிழைப்பு நடத்தும் பூசாரிகள் புகுத்தும் புனைவுகளையும் தல புராணங்களையும் இனங்கண்டு ஒதுக்குவதும் மிகக் கடினமான வேலை.


[1] மாந்த நூல் நோக்கில் நாயர்களிடையில் நடைமுறையிலிருந்தது பெண் வழியிலான தலைமகனுரிமை(Male primogeniture in the female line)யாகும். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களிடையில் இருந்தது ஆண் வழியிலான பெண்மக்கள் உரிமை(Female right in the male line)யாகும்.
[2] பக். 104 - 105
[3]  இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல், குமரிமைந்தன், வேங்கை பதிப்பகம், மதுரை, 625001, 2004.
[4] அம்மண சமயத் துறவிகள் வடிவில் ஒற்றர்களை விடுத்து இதைச் செய்தான்.
[5] இது குமரி மாவட்ட வழக்கு
[6] நம் ஆளும் கும்பல் அன்று தொழில் சார்ந்த மக்களை இடங்கைச் சாதியினர் என்று ஒதுக்கி ஒடுக்கி வந்தது அன்று என்றால் இன்று காப்புரிமம் என்றும் வேறு என்னென்ன வழிவகைகள் உள்ளனவோ அத்தனை வகைகளிலும் புதியன படைக்கத் துணிந்தவர்களை நசுக்கியும் நாட்டை விட்டுத் துரத்தியும் வல்லரசியத்திற்கு உதவி தரகு பார்க்கிறார்கள். இதைச் சுட்டிக்காட்டினால் வெற்றுப் பழம் பெருமை பேசுகிறோம் என்று நம்மை கேலி பேசிவிட்டு வல்லரசியத்துக்கு அடிமை செய்து காசு பார்ப்பதில் இன்பம் காண்கிறார்கள். அல்லது யாராவது போராடி துணை நின்றால் காரியம் முடிந்ததும் கைகழுவிவிடுகிறார்கள்.
[7].அமெரிக்காவைச் சேர்ந்த புதின ஆசிரியர் எரால்டு ராபின்சு(Harald Robins) என்பாரின் Carpetbaggers என்று நினைவு, புதினத்தில் ஓர் அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கூடியிருக்கும் பெரும் தொழில் முதலைகள் தம்முள் மிகத் தொலைவுக்கு மோளை(மூத்திரத்தை)ப் பீச்சியடிப்பவரைத் தேர்ந்தெடுத்ததாகக் காட்டியுள்ளார்.  
[8]மரக்கூழ் முதலிய கனம் குறைந்த பொருள்களால் செய்யப்பட்ட பொள்ளலான ஆலி எனப்படும் பொம்மைக்குள் மனிதர்கள் நுழந்து தூக்கி ஆடும் ஆலியாட்டம் .
[9].   இங்கு தரப்பட்டுள்ள பல செய்திகள் ப-ர்.எம்.இம்மானுவேல் அவர்கள் எழுதிய Anatomy of a folklore “Ottan Kathai” – A deified Spy and his King Viira Martanda Varma என்ற நூலிலுள்ளவை. வெளியீடு, Historical Research & Publications Trust, Nagarcoil, 629004, 2005. 
[10] இது பற்றிய விரிவான செய்திகளை “வள்ளுவமு”ம் வானியலும் என்ற என் நூலில் காணலாம்.
[11] பக்கம் 104 பார்க்க.

0 மறுமொழிகள்: