18.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 12

9. நிரை கவர்ந்தால் போர் மூளும்.
(தோரா. தி.மு. 1,00,000 )

            நண்பகல் தாண்டிய நேரம். இதோ ஒரு புல்வெளி. இடையிடையே மரங்கள். ஒரு புறம் பெரியவையாகச் சில மரங்கள். அவற்றினடியில் வட்டமாகக் கழிகளை நட்டுச் சுற்றிலும் மேலேயும் பனை ஓலைகளால் வேயப்பட்ட குடில்களின் நடுவே தென்னை ஓலையால் வேயப்பட்ட சற்றுப் பெரிய ஒரு குடில் இருக்கிறது. சுற்றியிருந்த திறந்த வெளியில் ஆடுமாடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன.

            குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், இப்போதுதான் ஆட்டையோ மாட்டையோ அடித்துத் தின்றிருப்பார்கள் போலும். குழந்தைகள் பெரியவர்கள் எல்லோர் கைகளிலும் இறைச்சித் துண்டுகள் உள்ளன. எரிந்துகொண்டிருக்கும் நெருப்பிலிருந்து சிலர் வெந்த இறைச்சித் துண்டுகளை எடுத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

            இதோ! ஓர் இளம்பெண் ர் இறைச்சித் துண்டைக் கடித்துக்கொண்டே குடில்கள் இருக்கும் பகுதியைவிட்டுத் தள்ளியிருந்த ஒரு மரத்தினடியை நோக்கிப் போகிறாள். அவள் செல்வதைக் கண்டதும் ஓர் இளைஞன் அவளைப் பின்தொடர்கிறான். பின்னால் நின்று அவள் தோள்களைத் தொடுகிறான். அவள் அவன் கையை மெதுவாகத் தள்ளி விடுகிறாள். அவன் சிறிது குனிந்து அவள் காதோடு ஏதோ சொல்லிவிட்டு ஒரு திசையில் கையை நீட்டுகிறான். அவள் திரும்பிப் பார்க்கிறாள். அவள் முகம் சிறிது சிவக்கிறது. அங்கே! ஓர் ஆமாட்டின்(பசுவின்) பின்னால் ஒரு காளை நின்று கொண்டு அதன் வால்பக்கம் முகர்ந்துகொண்டு அதன் பின்னே சென்றுகொண்டிருக்கிறது.

            பெண் முகம் சிவப்பதைக் கண்டதும் அவள் தோள்மீது கையைச் சுற்றி அணைத்தவாறு மரத்தின் மறைவிற்கு அழைத்துச் செல்கிறான். குடியிருப்பில் எல்லாம் அமைதியாக இருக்கிறது. திடீரென்று புல்வெளியில் ஆங்காங்கு சில மனிதர்களின் தலைகள் தோன்றுகின்றன. அம் மனிதர்கள் ஓசையின்றி ஆடுமாடுகளின் ஒரு பற்றத்தை மெதுவே ஒதுக்கி ஓட்டிச் செல்லத் தொடங்குகின்றனர்.

            நாம் முன்பு பார்த்த ஆண் மரத்தின் மறைவிலிருந்து வெளிவருகிறான். தான் முன்பு பார்த்த மாடுகள் என்ன செய்கின்றனன்று பார்க்க அவனுக்கு ஆவல் போலும். ஆனால் இது என்ன? இந்தப் பக்கத்திலிருந்த ஆடுமாடுகள் எவற்றையுமே காணவில்லையே! புல்வெளியில் துருவிப் பார்த்தவன் கண்களுக்குச் சென்றுகொண்டிருந்த ஆட்களின் தலைகள் தென்பட்டன. அவனுக்குப் புரிந்துவிட்டது. எல்லோரும் ஓடி வாருங்கள்! ஆடுமாடுகளை ஒட்டிச் செல்கிறார்கள்! என்று உரக்கக் கூவுகிறான். குடியிருப்பு உயிர் பெறுகிறது. ஆங்காங்கிருந்து ஆடவரும் பெண்டிரும் ஓடி இளைஞன் பக்கத்தில் வருகிறார்கள்.

            அருகில் வந்தவர்களுக்குத் தொலைவில் ஆடுமாடுகளை ஒட்டிச் செல்பவர்களைக் காட்டுகிறான். எல்லோரும் விறுவிறென்று இயங்குகின்றனர். ஓடிச் சென்று ஆளுக்கொரு ஆப்புக் கல் வைத்த தோல் பைகளையும் கம்புகளையும் எடுத்துக்கொண்டு ஆண்களும் பெண்களுமாகத் திருடர்களைத் துரத்திச் செல்கின்றனர். அவர்களை நெருங்கியபோது அவர்கள் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாகவும் இளைத்துக் களைத்தவர்களாகவும் இருப்பதனால் இவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவே மாடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர். ஒருவனால் மட்டும் காயம் பெரிதாயிருந்ததால் ஓட முடியவில்லை. அவனைக் கொல்லாமல் போட்டுவிட்டு ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு திரும்புகின்றனர். அடிபட்டவன் கூச்சல்போட்டுக் கெஞ்சுகிறான். எனவே ஒருவன் மற்றவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு அவனை மெல்ல அணைத்து நடத்திக் கூட்டி வருகிறான். அவனை இருவராகத் தூக்கி ஒரு காளை மீது அமர்த்திச் செல்கின்றனர். கூட்டத்தில் தலைவன் போலிருந்தவன் இருவரை அழைத்துப் புல்வெளியில் நிற்கும் மரங்கள் மீது ஏறித் திருடர்கள் மீண்டும் வருவதைக் கண்காணிக்குமாறு அனுப்புகிறான்.

            அவர்கள் குடிசைகளை அடைந்ததம் அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாகக் கடற்கரையிலிருந்து மீன், ஈச்சம் பழங்கள், தேங்காய்கள், தென்னங்கீற்றுகள் கொண்டுவரும் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர அகவையான் அங்கே உடலில் ஒரு பெரும் காயத்துடன் குருதி சிந்த வீழ்ந்து கிடக்கிறான்.

            அவனைக் கண்டதும் கூட்டத் தலைவன் விரைந்து அவன் அருகில் செல்கிறான். விரைவாக அங்கிருந்த ஒரு சுரைக் குடுவைக்குள்ளிருந்த தண்ணீரைக் காயம்பட்டவனுக்குக் குடிக்கக் கொடுத்து அவன் சற்றுத் தேறியபின் நடந்தது பற்றி வினாவுகிறான். இதற்குள் ஒருவன் வெளியே ஒடிச்சென்று ஏதோ ஒரு பச்சிலையைக் கொண்டுவந்து காயம் பட்ட இடத்தில் வைத்து அப்புகிறான்.

            இதற்குள் மற்றையோரும் வந்து சேர்ந்துவிட்டனர். கடற்கரையான் கூறத் தொடங்குகிறான்.
           
நானும் என்னோடு ஒரு பெண் உட்பட நால்வரும் வழக்கம் போல் ஆற்றின் கரையில் மிதவையைக் கட்டிப் போட்டுவிட்டு நாங்கள் கொண்டுவந்திருந்த மீன், ஈச்சம் பழம், தேங்காய், தென்னங்கீற்று, முதலியவற்றைத் தலைமேல் தூக்கி வந்துகொண்டிருந்தோம். பாதி வழி வந்திருப்போம். திடீரென்று புதர்களினுள்ளிருந்து பல ஆண்களும் பெண்களும் எங்கள் மீது பாய்ந்தார்கள். எதிர்பாராத தாக்குதல் ஆகையாலும் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததாலும் எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. நான் தவிர்த்த ஆடவர் அனைவரும் இறந்தனர். பெண்ணைக் கொண்டுசென்றுவிட்டனர். நாங்கள் கொண்டுவந்த பொருட்களையும் கொண்டு சென்றுவிட்டனர். நான் இக் காயத்தோடு உயிர் தப்பி ஓடி வந்தேன் என்று கூறி முடிக்கிறான்.
                        
            இதற்குள் ஆநிரைச் சண்டையில் காயமுற்றவன் சோர்வு சற்று நீங்கியவனாக இப் பேச்சில் குறுக்கிடுகிறான். அவர்கள் எங்கள் கூட்டத்தவர்கள். நாங்கள் இருந்த பகுதியில் மழையில்லாததால் மரங்கள் பட்டுப்போயின. எங்கும் நீர் கிடைக்கவில்லை. காட்டு விலங்குகள் மாண்டும் வெளியேறியும் விட்டன. எங்களிடமிருந்த விலங்குகளையும் தின்று தீர்த்துவிட்டோம். வளமான இடம் தேடி வந்துகொண்டிருந்தோம். வழியில் உங்கள் குடியைக் கண்டதும் பலர் உங்கள் ஆநிரையைக் கவர்வதென்று முடிவு கட்டினர். மீதியுள்ளவர்கள் ஆற்றங்கரையில் ஏதாவது பொருள் வந்திறங்கினால் பறித்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறிச் சென்றனர் என்கிறான்.

            இளைஞர்களும் இளைஞிகளுமாகப் பலர் சேர்ந்து சண்டை நடந்த இடத்தைப் பார்த்து வருவதாகக் கூறிச் செல்கின்றனர். இருட்டும் நேரத்தில் திரும்பி வருகின்றனர். தென்னங்கீற்றுக் கட்டுகளைச் கொண்டு வருகின்றனர். இறந்தவர்களை நரிகள் கடித்துச் சிதறடித்து விட்டன என்று கூறுகின்றனர். இப்போது கடற்கரையான் இனி எங்களால் பொருட்களை ஆற்றங்கரையிலிருந்து கொண்டுவர முடியாது. உங்கள் பண்டங்களை ஆற்றங்கரையில் கொண்டுந்துவிடுவோம். பொருட்களை அங்கிருந்து எடுத்து வருவது இனி உங்கள் பொறுப்புத்தான் என்கிறான்.

            கூட்டத் தலைவன் அப்படியாயின் நீங்கள் ஆற்றங்கரையில் வந்து சேர்ந்திருப்பதை நாங்கள் எப்படி அறிவது?என்கிறான். கடற்கரையான் அதோ வானத்தைப் பார்! அங்குத் தெரிகிறதே பிறைநிலவு அஃது இடைவிட்டுத் தேய்ந்து வளர்கிறதென்பதைக் கண்டு வந்திருக்கிறோம். எனவே அதனையே நமக்குக் காலங்காட்டுவதற்கு வைத்துக்கொள்வோம். நிலவு தேய்ந்து மீண்டும் தோன்றும் நாளிலிருந்து நாம் நாட்களைக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். அடுத்த முறை நிலவு தோன்றி ஐந்தாவது நாள் நாங்கள் பண்டங்களோடு வருவோம். நான் குணமடைந்ததும் எனக்குத் துணையாக இருவரை அனுப்புங்கள் என்று கூறி முடிக்கிறான்.

            தலைவன் பண்டங்களை ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று ஆற்றில் வந்தவற்றை இங்குக் கொண்டுவரும் பணியைச் செய்வது யார்? என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்கிறான். முன்பு சண்டை நடந்த இடத்தைப் பார்க்கச் சென்ற சாத்தன் என்ற இளைஞன், நான் செல்கிறேன் என்று முன்வருகிறான். தலைவன் மூத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் பணிகள் இப்போது பன்முகப்பட்டுவிட்டபடியால் நெருப்போம்பும் பணியை அவன் குடும்பத்திலுள்ள முதியவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

            இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மனித நாகரிகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. போர் தொடங்குவதற்கு அறிகுறியாகப் பகைநாட்டு ஆநிரையைக் கவர்வது பழந்தமிழ் மரபு. இக் கவர்வு வெறும் மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டதால் மக்களைத் துன்புறுத்தாமல் நடைபெற்றது. ஆயின் அம் மரபுக்கு அடிப்படை என்ன? முந்தை நாளில் உணவுத் தேவைகளை அடுத்த புல மக்களின் ஆநிரைகளைக் கவர்ந்து நிறைவேற்ற முற்பட்ட போதுதான் முதன்முதலில் போர்களே தோன்றியிருக்கும். இத்தகைய ஒரு முந்தியல் நாகரிக வளர்ச்சியின் கூறு சடங்காக இரண்டாயிரம் ஆண்டுகள் முன்புவரை உலகெங்கிலும் இன்றித் தமிழகத்தில் மட்டும் காணப்படுவதற்குப் பொருளென்ன? மக்கள் கூட்டங்களுக்குள் நடக்கும் போர் முதன்முதலில் தமிழகத்தில்தான் உணவுத் தேவையின் அடிப்படையில் தோன்றியது என்பதாகும். உலகில் வேறெங்கும் இது போன்ற ஒரு சடங்கு நடைபெற்றதற்கான சான்று நமக்குக் கிடைக்கவில்லை. இது தமிழர் நாகரிக முதன்மைக்கும் முன்மைக்கும் ஓர் அசைக்க முடியாத சான்று.
 
 இவர்களும் நிரை கவர்ந்தவர்களைத் துரத்திச் செல்பவர்கள்தாம்.         
            தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்குமளவுக்கு நிரைகவர்தல் கழக இலக்கியத்தில் இடம்பெறவில்லை. சிலம்பில் வடக்கே படையெடுத்துச் செல்ல எண்ணிய செங்குட்டுவன் வடபுல மன்னர்க்குத் தூதர்கள் மூலம் செய்தி தெரிவிக்க வேண்டும் என்று வில்லவன் கோதை என்ற அமைச்சன் கூறுகிறான். அழும்பில் வேள் எனும் மற்றோர் அமைச்சன் ஓர் அரிய அறிவுரையைத் தருகிறான். நாவலந் தீவாகிய பாரதத்திலுள்ள சேரனின் பகை அரசர்களின் ஒற்றரகள் வஞ்சி நகரின் வாயில் வட்டாரத்திலிருந்து விலகாமல் உள்ளனர், எனவே நகரினுள் பறையறைந்து தெரிவித்தாலே அவர்கள் தத்தம் அரசர்களுக்குச் செய்தி விடுத்துவிடுவார்கள் அவன் கூறியதை ஏற்றுப் பறையறிவிக்கிறார்கள். அரசுகளிடை(இராசதந்திர)  உறவில் மீ முகாமையான ஒரு கட்டத்தைக் காட்டும் ஒரு ஆவணமாகும் இது.
நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா
வம்பணி யானை வேந்தர் ஒற்றே
தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ
                  அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப……காட்சிக் காதை, வரி. 173 -177
            நண்ணார், அதாவது பகைவர்களின் ஒற்றர்கள் தலைநகர் வாயிலில் இருக்கிறார்கள் என்றால் நட்பரசர்களின் தூதுவர்கள் அரசின் ஏற்புடன் நகருள்ளே குடியிருக்கிறார்கள் என்று பொருளாகிறது. பகை அரசர்கள் ஒற்றறிவதை முற்றலும் தவிர்க்க முடியாது என்ற வரலாற்று வளர்ச்சிச் சூழலில் அதை ஏற்றுக்கொண்டு அவர்களைத் தங்களின் சில நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் ஒரு அரசிடை உறவு உத்தியின் தோற்றத்தை ஓர் இளவரசரான இளங்கோவடிகள் பதிந்திருப்பதும் தமிழர்களுக்கு மட்டும் பெருமை தருவதாகும். இன்றைய உலக நாடுகளிடையிலான தூதரக அமைப்புக்கு முன்னோடியாக இது கொள்ளத்தக்கது. ஆநிரை கவர்தல் என்ற கட்டத்திலிருந்து பகையரசர்களுக்கு ஓலை விடுக்கும் கட்டத்தைத் தாண்டி தலைநகரில் பறையறிவிப்பதன் மூலம் அரசர்களுக்கு அவர்களின் ஒற்றர்கள் மூலமாகச் செய்தி சென்றடையும் கட்டத்துக்கு அரசிடை உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளதை வில்லவன் கோதைக்கும் அழும்பில் வேளுக்கும் இடையில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் நமக்குத் தெரிவித்துள்ளார் அடிகள்.

            ங்கு வெட்சித் துறையை தேவையிலிலாமல் போயிற்று.

0 மறுமொழிகள்: