20.1.16

குரங்கிலிருந்து பிறந்தவன் தமிழன் - 24

21. மாரியே! மகமாயி! காவாய்!
(தோரா. தி.மு. 11,500 - 7000)
            நாம் இப்போது மீண்டும் சமநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறோம். ஓர் ஊரைத் தாண்டிக் காட்டுப்புறமாக நடந்துகொண்டிருக்கிறோம். இங்கு ஒரு பெருமரத்தடியில் மக்கள் கூட்டம் ஒன்று தங்கியிருக்கிறது. இவர்களைப் பார்த்தால் ஏதோ நாடோடிக் கூட்டத்தார் போல் தோன்றுகிறது. நிலையாகத் தங்கியிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. மரத்தைத் தாண்டி ஓரிடத்தில் தனியாக நடுப்பருவத்தைக் தாண்டிய ஒரு பெண் துயரத்தோடு அமர்ந்திருக்கிறாள். அவளருகில் அவளைவிட இளைய ஒரு பெண் அமர்ந்து ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறாள். அருகில் சென்று என்ன பேசுகிறார்கள் என்று கேட்போம்.

            அக்கா, இப்படியே இடிந்துபோய் இருந்து என்ன அக்கா செய்வது? பொன்னியைப் போட்டுவிட்டு வந்ததில் உன்னைப் போல் எல்லோருக்கும் வருத்தந்தான். அவள் எவ்வளவு இனிய பெண், அவள் மீது நம் கூட்டத்தினர் அனைவருக்கும்தான் எவ்வளவு பேரன்பு! ஆனால் என்ன செய்வது? அந்தப் பொல்லாத நோய் வந்துவிட்டால் நாம் யாராயிருந்தாலும் போட்டுவிட்டுத்தானே வரவேண்டியிருக்கிறது. என் ஓராண்டுக் கைக் குழந்தையையும் முன்பு போட்டுவிட்டு வந்தோமே! பொன்னிதான் அப்போது எவ்வளவு போராடினாள்? கூட்டத்தினரின் நன்மைக்காகத் தனிப்பட்டவர்களின் உணர்ச்சிகளைக் கொல்ல வேண்டியுள்ளதே. இனி அழுது என்னக்கா செய்வது? வந்து ஒரு வாய் உணவாது உண்ணக்கா!

            இருளாயி! நீ என்னதான் சொன்னாலும் என் மனம் ஏற்க மறுக்கிறதே! என் அருமை மகள் என் கண் முன் வந்து நிற்கிறாளே! என் உயிருக்காகவல்லவா நான் உங்களுடன் வந்துவிட்டேன்? நானும் செத்தாலும் அங்கேயே இருந்திருக்க வேண்டும். என் மகள் நீரும் உணவும் இன்றி எவ்வாறு மாண்டாளோ; அவளைத் தவிர வேறு பெண்ணையே திரும்பிக்கூடப் பார்க்காமல் என் தம்பி சீராளன் இருந்தானே! அப்படிப்பட்ட அழகு மகளைத் தன்னந்தனியே சாகவிட்டு வந்தேனே!
                                  
            தமக்கையின் பேச்சை இடைமறித்த இருளாயி திடுக்கிட்டு அச்சமும் வியப்பும் நிறைந்த குரலில்,அக்கா! அக்கா! அதோ பார்! அங்கே வருவதைப் பார்த்தால் பொன்னியைப் போல் இருக்கிறதே! என்று கையை நீட்டிக் காட்டுகிறாள். பட்டப்பகலில் இப்படியும் பேய் வருமா அக்கா! என்று தொடர்ந்து கூறிவிட்டு எழுந்து பின்நோக்கி நகர்கிறாள், ஆம்! ஓர் இளம் பெண் தள்ளாடியபடித் தலைவிரி கோலமாக வந்து கொண்டிருக்கிறாள். பார்ப்பதற்கு நமக்கும் அச்சமாகத்தான் இருக்கிறது. அவள் கையில் ஒரு வேப்பிலைக் கொத்து காணப்படுகிறது. பொன்னியின் தாய் அச்சத்துடனும் கவலையுடனும் எழுந்து நிற்கிறாள். அவள் கால்கள் அவளையாறியாமலேயே பின் நோக்கி நகர்ந்தாலும் தயக்கத்துடன் நிற்கின்றன.

            வந்த பெண் அருகில் நெருங்கிவிட்டாள். அம்மா! நான் உன் பொன்னிதானம்மா! நான் பேயில்லை. நான் சாகவில்லை அம்மா! பிழைத்துவிட்டேன் அம்மா! என்கிறாள். தாயின் அருகில் நெருங்குகிறாள். தாய் எதிரில் வந்த உருவத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்கிறாள். அவள் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் தோன்றுகின்றன. அருகில் நெருங்கிவிட்ட மகளை ஓடிச் சென்று அணைத்துக் கொள்கிறாள். கண்ணே! பொன்னி! என் அருமை மகளே! என்று கண்களில் நீர் மல்கக் கூறுகிறாள். அம்மா! அம்மா! மகளும் தேம்பலும் மகிழ்ச்சியுமாகக் கூறுகிறாள். இதற்குள் மரத்தடியிலிருந்த கூட்டத்தாரெல்லாரும் தாயும் மகளும் நிற்கும் இடத்திற்கு வருகிறார்கள். வியப்போடு பார்க்கிறார்கள். அம்மை வடுக்கள் சரியாக ஆறாத நிலையில் இருக்கும் பொன்னியைப் பார்க்கிறார்கள்.
            ஆளே உருமாறிப் போய் விட்டாயே பொன்னி! நீ உயிரோடு திரும்பியதை எங்களால் நம்பவே முடியவில்லையே! இக் கொடுநோய் உன்னை இப்படி அடையாளம் தெரியாமல் மாற்றிவிட்டதே! என்றெல்லாம் ஆளுக்கொன்றாகச் சொல்கின்றனர். ஒரு முதிய பெண் கேட்கிறாள், எப்படியம்மா நீ பிழைத்தாய்?

            பொன்னி கூறத் தொடங்குகிறாள். நான் மயக்க நிலையிலிருந்து விழித்த போது நீங்களெல்லாம் போய்விட்டிருந்தீர்கள். நான் புரிந்துகொண்டேன். இந் நோய்க்கான நம் கட்டுத்திட்டத்தின் படி என்னை விட்டுப் போயிருக்கிறீர்கள் என்று. உடலெல்லாம் ஒரே எரிச்சல். சொறிய வேண்டும் போல் இருந்தது. அதே நேரத்தில் எதுவோ ஆறுதலாகத் தடவி விடுவது போல் இருந்தது. ஒரு வேப்ப மரத்துக் கிளை என் உடலைத் தொட்டவாறு அசைந்துகொண்டிருந்தது. அது தடவத் தடவ அரிப்பும் எரிச்சலும் குறைவதை உணர்ந்தேன். உடன் அக் கிளையை ஒடித்துக்கொண்டு அரிப்பெடுத்த இடங்களிலெல்லாம் தடவிக்கொடுத்தேன். பசி எடுத்தது. கிளையைத் தாழ்த்தித் தளிர்களைக் கிள்ளி மென்று உண்டேன். கசப்பாக இருந்தாலும் பசிக் கொடுமையால் நாலைந்து கொழுந்துகளைத் தின்றுவிட்டேன்.

            இரவில் உறங்கிவிட்டேன். அடுத்த நாள் விழித்த போது உடலில் ஓரளவு தெளிவும் வலுவும் கண்டேன். மாலையில் எழுந்து நடமாட முடிந்தது. பக்கத்தில் இருந்த மரங்களிலிருந்து சில பழங்களைப் பறித்து உண்டேன். வேப்பங் கொழுந்துகளையும் உண்டேன். மறுநாள் இன்னும் நன்றாக உணர்ந்தேன். மாலையில் மெல்ல மெல்ல உங்கள் தடத்தைப் பின் தொடர்ந்தேன். பலவாறு கேள்விகள் கேட்டு அவளோடு பேசிவிட்டு அவள் தோற்றமே மாறிவிட்டது என்பதை மட்டும் பலரும் குறிப்பிட்டு விட்டு ஒவ்வொருவராகக் கலைகிறார்கள். மீண்டும் தாயும் மகளும் தனியாக விடப்படுகிறார்கள்.

            ஏனம்மா! சீராளன் என் பக்கமே வரவில்லை? நான் அழகை இழந்துவிட்டேன் என்பதைக் கண்டு ஒதுங்குகிறானோ? ஐயோ! நான் அவனோடு பேசலாம் என்று எவ்வளவு மகிழ்ச்சியோடு வந்தேன்! பொன்னி கூறுகிறாள்.
                                 
            வருந்தாதே பொன்னி! ஓரிரண்டு நாட்களில் அவன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு விடுவான்.

            இல்லையம்மா! நான் முடிவு செய்துவிட்டேன். நான் இனி இங்கே இருக்கப்போவதில்லை. இக் கொடுநோயை அடக்குவதற்கு ஒரு மருந்தை நான் கண்டுவிட்டேன். இதை மக்களெல்லாருக்கும் பரப்பப் போகிறேன். இருளாயியின் குழந்தையைப் போட்டுவிட்டு வந்தோமே? அக் குழந்தை இடைவிடாமல் என் கண் முன் நிற்கிறது. அது போல் எத்தனை குழந்தைகள் இறக்கின்றனவோ? அதை நிறுத்தும் மருந்தைக் கண்ட பின்னரும் என்னால் இங்கு வாளாவிருக்க மனம் வரவில்லை. நான் இப்போதே போகிறேன்.
                
            வேண்டாம் மகளே! இரண்டு நாளாவது இருந்து உடலைத் தேற்றிவிட்டுப் போ. என் மகளாய்ப் பிறந்து எல்லோருக்கும் தாயாக மாறிச் செல்கிறாயா மகளே! என் மாறித் தாயே! என்று மகளைக் கட்டிக்கொண்டு அழுகிறாள் அந்த அன்புத் தாய். உங்கள் கண்களிலும் நீர் சுரக்கிறதா? இந்தத் துயரக் காட்சியைக் கண்டது போதும்! வாருங்கள்போவோம்!

            மாரியம்மன் என்று நாம் வணங்கும் தெய்வத்தைப் பற்றிச் சிறிது கூறுவோம். மாரியம்மன் என்ற தெய்வம்தான் அம்மை நோயை உண்டாக்கும் தெய்வம் என்பது நம்மவர் நம்பிக்கை. பெண் தெய்வமான இவள் விதைக்கும் விதைகள்தான் இந் நோயால் உடலில் உண்டாகும் கொப்புளங்கள் என்பது நம்பிக்கை. எனவே இந்த நோய்க் கண்டால் வித்துக் கண்டிருக்கிறது எனச் சொல்வது குமரி வழக்கு. பெண் தெய்வத்தால் வருகிறதென்ற நம்பிக்கையால் அம்மை நோய் என்றும் அம்மை கண்டிருக்கிறதென்றும் கூறுவர். இம் மாரியம்மனுக்கு வேப்பிலை மிகப் பிடித்தமானதென்பது நம்பிக்கை. அம்மை கண்ட வீட்டிலும் நோயாளியின் அருகிலும் வேப்பிலையை வைத்திருந்து நோயாளியின் உடலில் வேப்பிலை கொண்டு தடவினால் மாரியம்மன் சினந்தணிந்து நோயையும் தணிவிப்பாள் என்பதும் நம்பிக்கை. இதே போன்று வேப்பிலையால் குணமாகும் பொன்னுக்கு வீங்கி எனும் நோய்க்கும் அம்மன் கட்டு என்பது பெயர்.

            இந் நோய்க்குப் பொதுவாக ஆங்கில(அலோபதி – எதிரியல்) மருத்துவர்கள் பண்டுவம் செய்வதில்லை. ஆனால், இந் நோயால் ஏற்படும் சில உடற் குறைபாடுகளுக்கு வேப்பெண்ணெய் கொண்டு நாட்டு மருத்துவர்கள் பண்டுவம் செய்து வெற்றி காண்கிறார்கள். இந் நோயைப் போலவே வைரசு என்னும் நுண்மிகளால் ஏற்படும் பொன்னுக்கு வீங்கி என்னும் அம்மன் கட்டுக்கும் வேப்பிலையை மஞ்சளோடு சேர்த்து அரைத்துப் பூசுகிறார்கள். அம்மை நோய் கண்டவர்களுக்கு முதன்முதல் நீராட்டும் போது வேப்பிலையை அரைத்துப் பூசியே நீருற்றுகிறார்கள். இவையெல்லாம் வேப்பிலைக்கும் இந் நோய்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள உறவைச் சுட்டும். அம்மை நோய்க்கு வேப்பிலையை மருந்தாகக் கண்டுபிடித்த பெண்மணிதான் இன்று மாரியம்மனின் உருவில் வணங்கப்படுகிறாள் என்பதுதான் அந்த உறவு.

            இனி மாரியம்மன் பற்றிய தொன்மப் புளுகைக் காண்போமா? முன்பு பரசிராமன் பற்றிய தொன்மக் கதையைக் கூறினேனல்லவா? அதில் தந்தையின் ஆணைப்படித் தாயைக் கோடரியால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டிக் கொன்ற பரசிராமன் தந்தையிடம் தாயை உயிர்ப்பித்துத் தர வேண்டுகிறான். வெட்டுண்ட தாயின் தலையையும் உடலையும் நெருப்பிலிட்டாயிற்று, உடல் எறிந்து போய்விட்டது. ஆனால் தலையில் அவ்வளவாக நெருப்பேறவில்லை. இரேணுகையைப் போன்றே கணவனால் நடத்தை ஐயுறப்பட்டுத் தலை வெட்டுண்டு இறந்த ஒரு சக்கிலியப் பெண்ணின் உடலும் பக்கத்தில் எரிந்துகொண்டிருந்தது. அந்த உடல் வேகாமல் இருந்தது. எனவே இரேணுகையின் தலையையும் சக்கிலிப் பெண்ணின் உடலையும் இணைத்துப் பரசிராமனிடம் இவள்தான் உன் தாய் என்று ஒப்படைத்தான் சமதக்கினி. அவள்தான் இரேணுகா பரமேசுவரி எனப்படும் மாரியம்மன்.

            பொதுவாக மாரியம்மன் சிலை என்பது தலையை மட்டும் கொண்டதாக இருக்கும். இத் தலையின் முகத்தில் அம்மைத் தழும்புகள் போன்ற வடுக்கள் காணப்படும். இதனை இரேணுகையைத் தீயிலிட்டபோது உண்டான கொப்புளங்கள் என்று தொன்மையர் தம் புளுகுக்கேற்பக் கூறுவர். அவை உண்மையில் அம்மை நோய்த் தழும்புகளே.

            வடார்க்காடு மாவட்டத்தில்(இன்று திருவண்ணாமலை மாவட்டம்) ஆரணியை அடுத்திருக்கும் படைவீட்டம்மன்தான் இரேணுகை எனக் கூறுவர். இவ் வூரை அடுத்து ஓடும் கமண்டலாற்றின் கரையில்தான் பரசிராமன் தாயைக் கொன்றான் என்பர். அதனால்தான் இவ் விடத்தில் இக் கோயிலை அமைத்தனர் போலும். (கதைக்குத் தகுந்தாற் போல் கடவுளை உருவாக்குவதும் ஊருக்கும் சிலைகளுக்கும் தகுந்தவாறு கதைகள் சொல்வதும் பூசாரியார் வழக்கம்). அதனால்தான் இங்கிருந்து பரசிராமன் சென்றிருக்க வேண்டும் என்று நான் முன்பு கூறினேன். மேலும் அவ் வூரை அடுத்திருக்கும் கிழக்கு மலைத் தொடர்ச்சியைச் சேர்ந்ததாகிய சவ்வாது மலை எனப்படும் ஏறக்குறைய நூறு கற்கள் நீளமுடைய சந்தனக் காட்டு மலையின் காட்டுப் பகுதிக்கு மலையாளக் காடுகள் என்று பெயர். இங்கு வாழும் தொல்குடி மக்களுக்கு அவர்கள் தமிழே பேசிய போதிலும், மலையாளத்தார் என்ற பெயரே வழங்குகிறது. எனவே இம் மலையாளக் காட்டுக்கும் மலையாள நாட்டுக்கும் உள்ள தொடர்பை உணரலாம்.
                             
            மாரியம்மனின் மாற்றம் இத்துடன் நின்றுவிடவில்லை. பொதுமக்களால் பூசை செய்யப்பட்டு உயிர் பலியுண்டு வந்த இத் தெய்வம் இந் நூற்றாண்டில் பார்ப்பனர்களால் பூசை செய்யப்பட்டு மரக்கறித் தெய்வமாக மாறி வருகிறது. இதற்குச் சிறந்த சான்று சென்னையருகில் உள்ள திரைமீன்கள் வணங்கும் திருவேற்காட்டு மாரியம்மன் (கருமாரி). இங்கு பொதுமக்களால் பூசை செய்யப்படும் ஒரு பழங்கோவில் உள்ளது. அதன் அருகில் இற்றை ஏந்துகளுடன் ஒரு புதுக் கோவில் கட்டப்பட்டு அதற்குப் பார்ப்பனப் பூசாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனை முன்னின்று செய்தவர் அப்போதைய அமைச்சராக இருந்த பக்தவத்சலம் என்று கூறப்படுகிறது. இந்த நாகரிகக் கோவிலையே திரை மீன்கள் முற்றுகையிடுகின்றன. திரைப்படங்களும் தனிப் பாடல்களுமாக இசைத்தட்டுகள் விளம்பரம் செய்கின்றன. இவ்வாறு பழைய இரேணுகைக் கதையும் மறைக்கப்பட்டு மாரியம்மன் சிவையின் ஒரு வடிவமாக மீண்டும் ஒரு மாற்றம் பெற்றுப் பார்ப்பனர்க்கு அதிக வேலை வாய்ப்பைத் தருகிறாள். இப் பணி வேறு பல ஊர்களிலும் நடைபெற்றிருக்கிறது, நடைபெறுகிறது.

பின்குறிப்பு: தொன்மங்களின் படி கார்த்தவீரியார்ச்சுனன் இராவணன், வாலி ஆகியோரின் சம காலத்தவன். அதனால் படவீட்டம்மன் பற்றிய கதை பூசகர்களின் கற்பனை என்பது தெளிவு. பரசிராமன் பற்றி அபிதான சிந்தாமணி கூறுவது (சமதக்கினி பார்க்க): வேட்டையாடிக் களைத்திருந்த கார்த்தவீரியனும் படையினரும் சமதக்கினியின் ஆசிரமத்தை அடைந்தனர். காமதேனு எனும் தேவருலக ஆவைக் கொண்டு அவர்கள் அனைவருக்கும் விருந்தளித்தான் சமதக்கினி. இத்தகைய ஆ ஒன்று அரசனான தன்னுடன் இருப்பதுதானே முறை என்று நினைத்த கார்த்தவீரியன் அதனைத் தனக்குக் கொடுத்துவிடுமாறு கேட்டான். சமதக்கினி மறுத்தததால் இருவருக்கும் உருவான மோதலில் கார்த்தவீரியனை சமதக்கினி கொன்றுவிட்டான். இதை அறிந்த கார்த்தவீரியனின் மைந்தர்கள் சமதக்கினியைக் கொன்றுவிட்டனர். அதற்குப் பழிவாங்கவே 21 தலைமுறை அரச மரபினரைக் கொல்வதாக பரசிராமன் சூளுரைத்துப் புறப்பட்டான் என்கிறது கதை.

            இவ்வாறு இந்த மாட்டுக்காக கௌசிகன் எனும் அரசன் வசிட்ட முனியுடன் போரிட்டுத் தோற்று தவமே பெரிதென்று அரசைத் துறந்து தவம் மேற்கொண்டு விசுவாமித்திரன் ஆகிறான்.

            இக் கதைகளில் வரும் காமதேனு என்பதுதான் என்ன? இதற்கு விடை காண்பதற்கு நாம் கடந்த காலத்துள் மீண்டும் ஒரு முறை சென்று திரும்ப வேண்டும்.

            நெய்தல் நிலத்தில் பூசகர்களின் மேலாளுமையை மீறி குக்குலங்களைக் கடந்த மக்களின் இணைவு உருவாக்கிய அவர்களின் வலிமை தங்களுக்கு அறைகூவலாக இருப்பதைக் கண்ட மருத நிலப் பகுதியைச் சேர்ந்த 7 குக்குலப் பூசகத் தலைமைகளும் இந்திரன் என்ற தலைவனைத் தேர்ந்தெடுத்து குக்குல மக்கள் குழுக்களின் ஒன்றிகளாக இருந்த கோட்டைகள் என்ற அமைப்பை உடைத்துத் தன் ஆளுகையினுள் கொண்டுவரப் பணித்தார்கள். அதனாலேயே இந்திரனை கோட்டைகளை அழிப்பவன் என்ற பொருள்படும் புராந்தகன் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. இவன் பூசகத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவன் என்பதை அவன் அரசவையில் முனிவர்கள் காட்டிய செல்வாக்குகள் மூலம் தொன்மங்கள் காட்டுகின்றன. சிலப்பதிகாரம் இந்திரன் அவையில் அகத்தியர் செலுத்திய மேலாளுமையைத் தெளிவாகக் காட்டுகிறது. உண்மையில் கோட்டைகள் என்பவை நடுவில் தலைவனின் குடிசையைக் கொண்டு அதைச் சுற்றி பிறரின் குடிசையைக் கொண்ட ஒரு குடியிருப்பேயாகும். நெல்ல மாவட்டத்தில் வாழும் கோண்டுரெட்டி என்ற வகுப்பினர் சாதிப் பெயரில் உள்ள கோண்டு என்ற சொல் கோட்டை என்ற பொருள் கொண்டதென்றும் அது பற்றிய மேற்குறிப்பிட்ட செய்திகளையும் அவ் வகுப்பைச் சேர்ந்த நண்பர் வெள்உவன் கூறினார்.

            பண்டை எகிப்தில் குக்குலப் பூசாரியர் வானை நோட்டமிட்டு குறிப்பிட்ட வான் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடும் நாளில் அப்போதைய அரசனை மாற்றிவிட்டு புதிய ஒருவனைத் தேர்ந்து அமர்த்தினார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[1]

            நம் தொன்மங்கள் முனிவர்கள், அதிலும் குறிப்பாக ஏழு முனிவர்கள் என்ற பெயரில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியல்களில் வருபவர்கள் உண்மையில் குக்குலப் பூசாரியரே. இவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடும் பயிற்சிகளால் தங்கள் புலன்களை அடக்கி அதன் மூலம் பிறரின் உளவியலைக் கட்டுப்படுத்தி நோய் தீர்த்தல், நோய்களை உண்டாக்கல் போன்றவற்றுடன் முறையான மருத்துவம் மூலமும் மக்கள் மீது தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தியவர்கள். மாந்த நூலார் இவர்களை சாமன்கள்(Shamans) என்று குறிப்பிடுவர். வானியல் போன்ற துறைகளிலும் இவர்களது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இவர்களின் உளவியல் திறன்களை இப்நாட்டியம், மெசுமரியம் போன்ற இன்றைய வசியத் திறன்களோடு ஒப்பிடலாம்.

            இவர்கள் உருவாக்கிய அரசர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் உருவான அதிகாரப் போட்டியின் தடயம்தான் நாம் மேலே தந்துள்ள தொன்மப் பதிவுகள். அதாவது பூசகர்கள் மக்களிடமிருந்து பெற்ற கடமைகளாகிய வரிகளில் அரசனுக்குப் பங்கு செலுத்துவதற்கு மாறாக அரசர்களே நேரடியாக வரியைத் தண்டி பூசகர்களுக்குப் பங்கு கொடுக்க மேற்கொண்ட மூயற்சியையும் அது முறியடிக்கப்பட்டதையும் மேலே தரப்பட்டுள்ள தொன்மப் பதிவுகள் காட்டுகின்றன. அந்தப் போராட்டத்தின் ஒரு அடையாளனாகவே பரசிராமன் விளங்குகிறான். காமதேனு என்பது குக்குலப் பூசகர்களின் வரி வருவாயின் குறியீடு.

            ஆனால் இந் நிலை நெடுநாள் தொடரவில்லை. அரசனின் செயற்பாட்டு எல்லை விரிவானது மட்டுமல்ல அவனது செயற்பாடுகளும் சிக்கலானவை. குறிப்பாக அயல் அரசர்களுடன் அடிக்கடி போர்களில் ஈடுபட வேண்டி இருந்ததால் அவன் தன் போர் உத்திகளையும் கருவிகளையும் மேம்படுத்திக்கொண்டே இருப்பது கட்டாயமானது. அது புதுப் புது அறிவியல் – தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கும் உழைப்புப் பிரிவினைகளுக்கும் இட்டுச்சென்றது. அது மொழியை வளப்படுத்தி அதன் எல்லைகளையும் விரிவாக்கியது. அதனால்தான் பல்வேறு நிலப்பரப்பில் வழங்கிய வழக்குகளைத் தொகுத்து அகத்தியர் உருவாக்கிய அகத்தியம் என்ற இலக்கண நூல் புதிய நிலைமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமையால் நாம் மேலே கூறியுள்ளவாறு இந்திரன் பெயரில் ஐந்திரம் என்ற இலக்கண நெறியை உருவாக்கியது. அதன் ஒரு பகுதிதான் பொதுமக்கள் வழக்குக்கான தமிழும் சிறப்புப் பயன்பாட்டுக்கான மறைமொழியும். அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே என்று தொல்காப்பியம் காட்டுவது இதைத்தான்.

            அறிவியல் – தொழில்நுட்பச் சொற்களை மக்கள் வழக்கிலிருந்து அகற்றி “மறைவான” மொழியை உருவாக்கிய நம் பண்டையோரின் செயலுக்குத் தலைகீழாக வடிவத்தில் வழக்குச் சொற்களாகவும் பொருளில் சராசரி குடிமக்கள் புரிந்துகொள்ள முடியாதவையுமாகிய “கலைச் சொற்களை”யும் பொதுவான அகராதியினுள் கொண்டுவந்துள்ள ஒரு நிகழ்வை ஓர் ஆங்கில அகராதியின் முன்னுரை சுட்டுகிறது. அதைப் பார்ப்போம்:

            “அறிவியல் – தொழில்நுட்பங்களில் புரட்சிகரமான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன, ஊடகங்களின் தாக்கத்தின் விளைவாக புதிய அறிவியல் – தொழில்நுட்பக் கலைச் சொற்கள் சிறப்புத் துறைகள் சார்ந்தவர்களின் முற்றாதிக்கத்திலிருந்து விடுபட்டுள்ளன...”             

(There have been revolutionary developments in the sciences and technology, and the influence of mass media has made new scientific and technical terms no longer the monopoly of the specialist.) CHAMBERS TWENTIETH CENTURY DICTIONARY – 1972.

அறிவியல் – தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பொதுப் பாடத்திட்டத்தினுள் கொண்டுவந்து “மறை”ப்பு எதுவும் இல்லாத ஒரு அறிவுச் சூழலை ஏற்படுத்தியதாலேயே, சமயத்தை அறிவியலின் பாதையில் குறுக்கிடாமல் ஒதுக்கி வைத்ததாலேயே, ஐரோப்பியரால் இன்று வரை முழு உலகத்தின் மீதும் பொருளியல் – அரசியல் – படையியல் அதிகாரத்தைச் செலுத்த முடிகிறது.

ஆனால் நம் ஆட்சியாளர்களோ இன்று வரை உள்நாட்டு அறிவியல் – தொழில்நுட்பர்களை மட்டுமல்ல வெளியாருக்குத் தரகர்களாக, “காந்திய வழியில்”  செயல்படும் பனியா – பார்சி – குசராத்தி குழுக்கள் தவிர்த்த உள்ளூர் தொழில் – வாணிகக் குழுக்கள் நிலைத்துவிடாமலும் புதிதாக உருவாகிவிடாமலும் நுட்பமாகக் கண்காணித்து அழிக்கும் பணியில் முனைப்பாக உள்ளனர். தொழில்நுட்பம் குறித்தவரை அண்மைக் காலம் வரை மருந்துப் பொதியல்களில் அம் மருந்தால் குணமாகக் கூடிய நோய்க் குறிகள் அச்சிட்டிருந்ததை மருத்துவர்களாகிய தரகர்களின் கொள்ளைக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஒரே காரணத்துக்காக நிறுத்தியிருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள் என்பதொன்றே போதும்.      

            குமரிக் கண்டத்தில் பூசகர்களின் மேலாளுமை கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்பதற்குச் சான்றாக குமரி மாவட்டத்தில் நிலவிய ஒரு நடைமுறை உள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஊர் ஆட்சி நடுவமாக இருப்பவை முப்புராதியம்மன், முத்தாரம்மன், முத்தாலம்மன், முத்துமாலையம்மன் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களில் அறியப்படும் அம்மன் கோயில்களே. இங்கு மாதம் ஒரு முறை ஊர்க் கூட்டங்கள் நடைபெறும். வழக்குகள் மூதலிக்க(உசாவ)ப்படும். ஊர்க் கூட்டங்களுக்கு வராதவர்களிடமிருந்து ”பிழை” என்ற பெயரில் தண்டப்படும் தொகை, கோயில் கொடைவிழாவுக்கென்று வரி என்ற பெயரில் தண்டப்படும் தொகையில் செலவு போக மிஞ்சும் தொகை, திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் தொடர்புடைய வீட்டார் செலுத்தும் கட்டணம் என்று திரளும் பணத்திலிருந்து ஊர்க் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பது, ஏலச் சீட்டு நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெறும். இந் நிகழ்ச்சிகளிலெல்லாம் தலைமை தாங்குபவர் முதலூடி(முதல் வீட்டுக்காரர்), முதல்பத்து(முதல் மரியாதை என்று பிற பகுதிகளில் கூறப்படுவதற்கு இணையானது)க்காரர் என்ற பெயர்களில் அறியப்படும் ஊர்த் தலைவர் ஆவார். திருமணத்துக்கு ஊராரை அழைப்பதற்குக் கூட கோயிலில் ஊர் மக்கள் கூடி வெற்றிலை பாக்கு எடுத்து வீடுவீடாகச் சென்று வழங்கினர். இவற்றில் பூசாரிக்கு அவரது பணியின் அடிப்படையில் எந்தப் பங்கும் கிடையாது. சாமியாடுவது கூட பூசாரியல்ல. இலங்கையோடு ஒன்றாகக் கிடந்த நிலப் பகுதிகளுக்கு இடையில் கி.மு.1700 வாக்கில் கடல் புகுந்து பிரித்துவிட்ட இப் பகுதியில் பூசகர்களின் அதிகாரம் முற்றிலும் அகன்றுவிட்டதற்கு இது ஓர் அசைக்க முடியாத சான்று. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நாட்டாண்மை தொடங்கி பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படும் ஊர் த்தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்தான் பூசகர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசன் குடியிருக்கும் அரண்மனைக்கும் கடவுள் குடியிருக்கும் இடத்துக்கும் கோயில் என்ற ஒரே சொல் தமிழில் வழங்குவது ஒதுக்க முடியாத இன்னொரு பண்பாட்டுச் சான்று. இவ்வாறு பூசகர்களின் அதிகாரம் ஒழிக்கப்படுவதற்கு முன் கடல் மூலம் வட இந்தியக் கடற்கரைகளில் குடியேறிய குமரிக் கண்ட மக்களிடையில் எஞ்சியிருந்த பூசகர் மேலாளுமை அங்கிருந்த சூழல்களால் அரசர்களை அடக்கியிருந்தது[2]. அந்தச் செல்வாக்கின் அடிப்படையிலேயே கவுடில்லியனின் பொருள் நூல் ஒரு வேளாண் பரப்பை உருவாக்கும் போது ஒரு பார்ப்பனக் குடியிருப்பை உருவாக்கப் பரிந்துரைத்ததும் பிற்காலத்தில் பல்லவர்கள் அதே நடைமுறையைக் கடைப்பிடித்ததும்.  வடக்கிலிருந்து கழகக் காலத்தின் இறுதிக் காலத்தில் பார்ப்பனியம் இங்கு ஊடுருவியதை சிலப்பதிகாரம் தெளிவாகக் காட்டுகிறது.

            அரசர்களின் அதிகாரம் எட்டாத ஒரு மூலையில் காட்டாட்சி நடத்திய ஒரு கூட்டத்தினர் முதலில் கேரளக் கடற்கரையில் அரபுக் கடலினுள் ஒரு தீவில் வாழ்ந்து கப்பல்களைத் தாக்கி வந்துள்ளனர். பின்னர் அவர்கள் கேரளத்தினுள் நுழைந்துள்ளனர். அவர்களை எதிர்கொள்ள குமரிக் கண்ட மக்கள் குடியேறும் முன் அங்கு வாழ்ந்த பல்வேறு குக்குல மக்கள் ஒன்றுதிரண்டு முன்பு குமரிக் கண்டத்தில் ஐந்நிலத் தெய்வங்களை உருவாக்கி மண்ணின் மைந்தர்களின் ஆட்சியை உருவாக்கியது போலவே ஆங்காங்கு ஒவ்வொரு காளி(பகவதி) கோயிலை நிறுவி அங்கெல்லாம் ஒவ்வொரு பூசகத் தலைமையையும் உருவாக்கி புதிதாக நுழைந்தவர்களை எதிர்கொண்டுள்ளனர்.

இறுதிக் கடற்கோளுக்குப் பின் சேரன் தீவாகிய இன்றைய இலங்கை வழியாக நுழைந்த சேரர்களை எதிர்க்க காளிகோயிலை நடுவமாகக் கொண்ட உள்நாட்டு மக்களும் அவர்களால் எதிர்க்கப்பட்ட வந்தேறி நம்பூதிரிகளின் முன்னோர்களும் அணி சேர்ந்தனர். இந்த நம்பூதிரிகளின் முன்னோரின் குறியீடுதான் கேரள வரலாற்றில் இடம் பெற்றுள்ள பரசிராமன்.    


[1]Masks of Gods, I. Premitive Mythology, Joseph Campbell

[2] Keith A.B., Rig-Veda Brahmanas, P.121, Cambridge 1925, and Ayithreya Brahmana as quoted in Lokayatha, Debiprasad Chattobadhyaya, p. 611 & p. 611-12.

0 மறுமொழிகள்: