31.7.07

குமரிமைந்தனின் கட்டுரைகள் பற்றி புதிய நூற்றாண்டு புத்தக நிலையத்தாரின் (என்.சி.பி.எச்) திறனாய்வு

NEW CENTURY BOOK HOUSE PRIVATE LTD.,
PUBLICATION UNIT,
6, NALLATHAMBI STREET,
ANNA SALAI, MADRAS - 600 002.

நாள்:19-4-1995.

அன்புடையீர்,

தங்களின் 11-04-95 தேதியிட்ட கடிதம் கிடைத்தது.

தங்கள் கட்டுரைத் தொகுப்பை எமது ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில் அவர்களின் கருத்துரை திருப்திகரமாக இல்லாததினால் தங்களின் ஸ்கிரிப்டை இத்துடன் திருப்பி அனுப்பியுள்ளோம்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

இங்ஙனம்,

திருமதி. மீனாட்சி,
செயல் அலுவலர்
நூல் வெளியீட்டுத்துறை

இணைப்பு: மேற்கண்டவாறு.



திறனாய்வுகள்


குமரிமைந்தன் - இவர் யார் என்று தெரியவில்லை.

1. வீட்டைக் கட்டிப்பார்

′வங்கிக் கடன்களால் பயன்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் தான்′ என்று கூறுகிறார். இதை நடைமுறை உண்மை என்று வலியுறுத்துகிறார். இந்தத் தகவலை எங்குப் பெற்றார் என்று தெரியவில்லை. இது கடும் குற்றச்சாட்டு. வங்கிக்கடன்களால் பயன் பெறுவோர் அரசியல்வாதிகளும் தொழில் முதலாளிகளும் தான். அனைந்திந்திய வங்கி ஊழியர் சங்கம் இந்திய முதலாளிகள் எவ்வாறு வங்கி மூலதனத்தைக் கபளீகரம் செய்துவருகிறார்கள் எவ்வாறு பல வங்கிகள் மூடப்படும் நிலையில் உள்ளன என்று விளக்கமான ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கிகளின் நடைமுறையைப் பரிசீலித்த நரசிம்மம் குழு கூட இத்தகைய கடுமையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசியதில்லை. இக்கட்டுரை தினமணியில் 21.10.93ல் வெளிவந்ததாகவும் கூறுகிறார்.

2. வருமானவரி தேவையா?

எல்லா நாடுகளிலும் வருமானவரி அங்கீகரிக்கப்பட்ட வரி. ஆனால் வருமான வரி இந்தியாவில் நடைமுறைப்படுத்தும் வழி தீமையானது. நாட்டு முன்னேற்றத்திற்கும் ஏழைமக்களின் நல்வாழ்வுக்கும் வருமானம் பெறுவோர் பங்களிக்க வேண்டும் என்ற நன்னோக்கத்தில் எழுந்த வரி வருமானவரி. ஆசிரியர் வருமானவரியையே நீக்க வேண்டும் என்று வாதிக்கிறார். கொள்ளையடிக்கும் முதலாளிகளுடைய வாதம் வரியை நீக்கிவிட்டால் கறுப்புப்பணம் வெள்ளைப் பணமாகிவிடும் என்பது. ஆசிரியருடைய வாதமும் இதுவே.

3. அந்த ஆறடி நிலம் யாருக்கு?

இது வீடுகட்டுபவர்களுக்கு நகராட்சி தரும் தொல்லைகளை விவரிக்கிறது. ஆசிரியர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது புரியவில்லை.

4. நிலவுடைமைக் குளறுபடிகள்.

தமிழகத்தில் இருந்த நில உரிமைகளை உறவுகளை எடுத்துக் காட்டுகிறார். உழுபவனுக்கே நிலம். நில உச்சவரம்பு என்னும் இரண்டு கோரிக்கைகளையும் நகையாடிச் சாடுகிறார். இதிலிருந்து இவர் நிலப்பிரச்சினையைச் சரியான கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவில்லை என்பது தெரிகிறது. அவர் அளிக்கும் ஆலோசனைகளில், 1) வருவாய்த் துறைக்கு வரிதண்டுவது தவிர நிலவுடைமையில் எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்பது. இது ஏறத்தாழ உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையை மறைமுகமாகத் தாக்குவது எனலாம். 2) நில உச்சவரம்பு நிலம் முடமாக்குவதற்குப் பயன்படுகிறது. எனவே நில உச்ச வரம்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆலோசனைகள் பொதுவாக நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாக உள்ளது காணலாம்.

5) பாசனம்.

இது ஒரு நல்ல கட்டுரை. ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டது.

6) ஒதுக்கீடும் ஏழ்மையும்.

இக்கட்டுரைத் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் ஆடம் ஸ்மித்தின் பொருளியல் கோட்பாடுகளையும் சோஷலிசத்தையும் கிண்டலும் கேலியும் செய்கிறார். நிலவுடைமை, தொழில் உடைமை (Landlordism, Capitalism) நாட்டுக்கு நலம் பயக்கும் என்று கூறுகிறார்.

7) பாலைத்திணை விடு(வி)க்கும் புதிர்கள்.

இது நல்ல தரமான கட்டுரை. ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

8) தைப் பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்.

பண்டைய தமிழகத்தில் வழக்கத்திலிருந்த வான நூல் பற்றிய ஆய்வுக் கட்டுரை இது. நல்ல முயற்சி. அரிய கருத்துக்கள் கொண்டது.

இதிலிருந்து பாசனம் என்ற கட்டுரையும் இலக்கியக் கட்டுரைகள் 2ம் தவிர மற்றவை என்.சி.பி.எச் ஆல் வெளியிடத்தக்கவையல்ல என்பது என் கருத்து.

- ஆசிரியர் குழு.

0 மறுமொழிகள்: