பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...4
முரண்பாடுகள்:
தொல்காப்பியம்தான் பொருளிலக்கணத்தை முழுமையான வடிவில் தமக்கு அளிக்கும் ஒரே நூல். நாம் மேலே கொண்டிருக்கும் முடிவுகளுக்கு முரண்பட்ட செய்திகளை அது தன்னுள் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. ஆனால் பாலைத்திணை எனும் புதிரை விடுவிக்கும்போது இருவேறு நிலப்பரப்புகளில் இருவேறு காலங்களில் இருவேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த மக்களிடையில் தோன்றிய பண்பாட்டுக் கோட்பாடுகள் ஒன்றன்மீதொன்று இந்நூலில் படிந்திருப்பதைப் பாலைத் திணை சுட்டி நிற்கிறது. ஒருவகை கோட்பாட்டை உருவாக்கிய மக்கள் தாம் வாழ்ந்த பகுதி அழிந்துவிடவே புதிய இடத்தில் குடியேறி உருக்குலைந்துவிட்ட தம் வாழ்வை மீட்பதில் ஒரளவு வெற்றிபெற்ற நிலையில் உருவான புதிய கோட்பாடுகளைக் கொண்டு பழைய கோட்பாடுகளை மீட்டெழுதிய முயற்சியே தொல்காப்பியம் என்பதை பாலைத் திணை சுட்டி நிற்கிறது. இந்த இரண்டு அடுக்குகளிலிருந்தும் முதன் முதலில் தோன்றிய கோட்பாடு வரிசையை மீட்டமைக்கும் முயற்சியின் விளைவே மேலே தரப்பட்டிருக்கும் முடிவுகள்.
பொருளிலக்கணம், மாந்நநூல், குமுகவியல்:
இன்றைய மாந்த அறிவியலான மாந்தநூல் பொருளிலக்கணம் கையாண்டுள்ள அதே பொருட்களையே கையாள்கிறது. அவை,
1. பருப்பொருள் பின்புலம் - நிலமுமம் கால நிலையும்
2. சமயமும் நம்பிக்கைகளும்
3. உணவு
4. தொழில் நுட்பம்
5. நிகழ்த்து கலைகளும், நுண்கலைகளும் (கலை, இலக்கியம்)
6. குடும்பம்
7. குமுகியல் அமைப்பு
8. அரசியல்
9. மொழி
இவற்றையே பொருளிலக்கணத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை.
மாந்தநூல் எழுத்தறிவு பெறா மக்களின் வாழ்வியலைக் கையாளும் துறை. எழுத்தறிவு பெற்ற மக்களின் வாழ்வியலைக் கையாளும் துறை குமுகவியல் (சோசியலாஜி) எனப்படும். பொருளிலக்கணம் காட்டும் குமரிக் கண்டத்தில் வாணிகப் பெருக்கமும் அரசியல் வளர்ச்சியும் எழுத்தறிவையும் இலக்கிய மேன்மையையும் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்குப் பொருளிலக்கணமே சான்று. ஒருவேளை குறிஞ்சி நில மக்கள் எழுத்தறிவை எய்தாமலிருந்திருக்கலாம். நெய்தலில் மிக உயர்ந்த் இலக்கிய வளர்ச்சியும் குறிஞ்சியில் மிக எளிமையான இலக்கியமும் அமைந்திருக்கலாம். அந்த வகையில் பொருளிலக்கணம் மாந்நூல் கலந்த குமுகவியல் நூல் என்பதே பொருந்தும்.
பொருளிலக்கணத்தின் நோக்கம்:
ஒரு குமுகம் இன்னொரு குமுகத்தை அடக்கியாள்வதற்காகத் தான் அடக்க நினைக்கும் அல்லது அடக்கி வைத்திருக்கும் குமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளை முழுமையாக அறிந்து கொள்ள முயல்கிறது. இவ்வாறுதான் எரோடோட்டசு முதல் எட்கார் தர்சுட்டன் வரையும் இன்று வல்லரசுகளின் பல்வேறு நிறுவனங்களும் பிற மக்களின் வரலாற்றையும் பண்பாட்டுக் கூறுகளையும் ஆய்ந்து வந்திருக்கின்றனர். அதேபோல் குறிஞ்சி தொடங்கி நெய்தல் வரை தங்கள் ஆதிக்கத்தினுள் வைத்திருந்த நெய்தலின் ஆட்சியாளர்களின் முயற்சியால் உருவானதே பொருளிலக்கணம். இப்போது தமிழ்க் கழகம்(சங்கம்) தோன்றுவதற்கான தேவையையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
பொருளிலக்கணம் காட்டும் குமுக வளர்ச்சி நிலை:
பொருளிலக்கணம் வெறும் மொழியிலக்கணமல்ல. மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய பெரும் அறிவியல் சாறு அது. அதன் பல்வேறு சிதறல்களைத் தொல்காப்பியத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நம்மால் காண முடிகிறது. இதிலும் குறிப்பாகத்
தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்......
என்று மனிதனின் தனித்தன்மையை வளர்த்தலைப் பிரித்துக் காட்டுவது உயர்ந்த ஒரு குமுகவியல் ஆய்வுத் துறையின் வளர்ச்சியையும் அதனோடு இணைந்து நடைபோட்ட பல்துறை வளர்ச்சியையும் நமக்குக் காட்டுகிறது. இதுவும் பாலைத்திணைக்கு உரியதே. இந்த வகையில் பாலைத் திணை தொல்காப்பியத்தின் எந்தக் கூறையும் புரிந்த கொள்ள உதவுவதால் தொல்காப்பியத்தைப் "பாலையியல்" என்றே பெயர் சூட்டிவிடலாம் என்று தோன்றுகிறது.
மனிதக் குழுக்கள் முதலில் தத்தம் மூதாதையரான ஒவ்வொரு பெண்ணின் பெயரில் அமைந்த வெவ்வேறு கூட்டங்களாக மலை முகடுகளிலிருந்து கடலோரம் வரை வாழ்ந்து வந்தனர். தங்கள் மூதாதையர் பெயரிலமைந்த இந்தக் கூட்டங்களுக்கு அம்மூதாதையரே தெய்வம். அத்தெய்வப் பூசாரியரே அவர்களின் தலைவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் தத்தம் கூட்டத்தைச் சேர்ந்த மக்களோடு தடங்கலின்றி பாலுறவு கொண்டு வந்தனர். தம் கூட்டத்தினர் ஒருவரின் இரத்தத்தைச் சிந்தும் வெளியார் எவரையும் பழி வாங்குதல் ஒவ்வொருவருரின் கடமையாகும். இத்தகைய மக்கட் கூட்டங்கள் மூலக்குடிகள் அல்லது குக்குலங்கள் எனப்படும்.
ஆனால் நாளடையில் மலையிலிருந்து கடல்வரையில் வாழ்ந்த இந்த மக்களிடையில் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்புகளுக்கேற்பப் பொருளியல் வேறுபாடுகளும் அதனடிப்படையில் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் வேறுபாடுகளும் தோன்றின. ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்த பிற கூட்டத்து மக்களிடமிருந்து தம் பண்பாடு வேறுபடுவதைவிட பிற பகுதியில் வாழ்ந்த தம் கூட்டத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து அதிகமாக மாறுவதை அவர்கள் கண்டனர். எனவே பழைய குக்குல உறவுகள் உடைபட்டு நிலஞ்சார்ந்த உறவுகள் வலுப்பெற்றன. பழைய குக்குலத் தெய்வங்களின் வழிபாடும் பூசாரித் தலைவர்களும் செல்வாக்கிழந்தனர். அவ்வாறு தான் தாய்த் தெய்வங்களுக்குப் பகரம் வருணன், இந்திரன், மாயோன், சேயோன் போன்ற தெய்வங்கள் தோன்றின. ஆனால் இந்த நானிலங்களிலுமிருந்து பிரிந்து பாலையில் ஒதுங்கிய மக்கள் மட்டும் தம் குக்குலத் தெய்வங்களின் எச்சமான ஐயை என்ற தாய்த் தெய்வத்தை வழிபட்டனர்.
இவ்வாறு குமரிக் கண்டத்தில் தோன்றிய பல்வேறு குக்குல மக்கள் தங்களிடையில் வளர்ச்சி ஏற்படுத்திய வேற்றுமைகளின் விளைவாக நிலத்தால் பிரிந்தும் அதே காரணத்தால் தோன்றிய ஒற்றுமையால் நிலத்தால் இணைந்தும் நாகரிகத்தில் ஓர் உயர்ந்த மட்டத்தை எய்திய ஒரு கட்டத்தைப் பொருளிலக்கணம் காட்டுகிறது. இதில் பாலைநிலம் ஒரு நடுவான இடத்தை நிலத்தில் மட்டுமல்ல அனைத்து வகையிலும் பெறுகிறது.
அன்றும் இன்றும்:
மேலே குறிப்பிட்டுள்ளவாறு குமரிக் கண்டத்தில் உயர்நிலை எய்திய நாகரிகம் நிலவியது என்ற தமது கருத்து கற்பனையானதாகவும் தற்பெருமை கூறுவதாகவும் தோன்றுவது இயல்பு. ஏனென்றால் அத்தகைய ஒரு வளர்ச்சி நிலையில் நம் முன்னோர்கள் இருந்திருப்பார்களென்பதை இன்று நாமே நம்ப முடியாத அளவுக்கு நம் நிலை தாழ்ந்திருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள முடிவுகளை எய்த ஐரோப்பிய நாகரிகம் இன்று வளர்த்தெடுத்திருக்கும் அறிவியல்களின் துணை வேண்டியிருக்கிறது. அவ்வறிவியலின் முடிவுகளே நமது தொல் நாகரிகச் சிறப்பின் உயர்வை அளந்து காண உதவும் கருவியாகவும் அளவுகோலாகவும் ஆகுமளவுக்கு நாம் பின்னடைந்து விட்டோம். பின்னடைவு என்பது இங்கு பின் தங்குதலைக் குறிப்பிடவில்லை, பின் வாங்குதலை, பின்நோக்கிச் சென்றதைக் குறிக்கிறது.
மார்க்சின் தோழர் ஏங்கல்சு தான் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் அரசு தோன்றுவதற்கு முதற்படியாக மக்கள் குக்குலங்களாகப் பிரிந்திருப்பதிலிருந்து நிலத்தினடிப்படையில் பிரியத் தொடங்குகின்றனர் என்று கூறுகிறார்.
தொல்காப்பியத்தின் மூலம் நாம் காணும் பொருளிலக்கணமும் அப்பொருளிலக்கணத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற அறிவியற் துறைகளின் செறிவும் இப்பல்வேறு துறைகள் தத்தமக்குரிய நூல்களைக் கொண்டு விளங்கியமையைக் காட்கிறது. இவற்றைச் சுட்டிக்காட்டுவதன் நோக்கம் தற்பெருமை பேசுவதற்கோ தருக்கித் திரிவதற்கோ அல்ல. நம் முன்னோர் எய்தியுள்ள இம்மேன்மையை எய்தும் திறன் நமக்குண்டு என்ற தன்னம்பிக்கையையும், அத்தகைய உயர்நிலையை மீண்டும் எய்த வேண்டும் என்ற ஊக்கத்தையும் நாம் பெற வேண்டும் என்பதற்காகத் தான். வரலாறு என்பது ஓர் உரிமை முறி மட்டுமல்ல போர்க்கருவியுமாகும். அதனை இன்னும் கூராக்குவோம்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக