31.7.07

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...3

ஐந்திணைகளுக்கும் உரிய வாழ்க்கை முறைகள்:

மாந்தநூல் எனப்படுவது பழங்குடிகள் அல்லது ‌மூலக்குடி மக்களின் எழுத்தறிவுக்கு முந்திய வாழ்க்கை முறைகளை ஆயும் துறையாகும். மூலக்கு‌டிகள் மணவுறவில் அகமணக் குழுக்கள், புறமணக் குழுக்கள் என்ற பிரிவுகளைக் கொண்டவை. ஒவ்வொரு மூலக்குடியும் ஒரு அகமணக் குழுவாகும். அகமணக் குழு என்பது தமக்கு வெளியே மணவுறவு தடை செய்யப்பட்ட மக்கள் தொகுதியாகும். அவ்வகையில் இன்றைய சாதி ஒவ்வொன்றும் ஓர் அகமணக் குழுவாகும். ஆனால் இந்த அகமணக் குழு சிறு பிரிவுகளாகப் பிரிந்து புறமணக் குழுக்களாகின்றன. இந்தக் குழு‌க்கள் ஒவ்வொன்றின் உறுப்பி‌னரும் தமக்குள் மணவுறவு கொள்வதில்லை. தமக்கு வெளியிலுள்ள இன்னொரு பிரிவின் உறுப்பினர்களோடு தான் உறவு கொள்வர்.

குறிஞ்சித் திணை:

ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதி தொடக்க நிலையில் மனிதர்களிடையில் இருந்ததில்லை. ஒரு புறமணக் குழுவின் உறுப்‌பினர்கள் தமக்கு மணமுறையுள்ள இன்னொரு புறமணக் குழுவின் எதிர்பால் உறுப்பினரனைவருடனும் கட்டுப்பாடற்ற உறவு கொள்ளும் நிலை ஒரு கட்டத்தில் இருந்தது. திருமணம் என்ற ′′கரணம்′′ தோன்றுமுன் இவ்வாறு புணர்ந்த இருவர் சேர்ந்து வாழ்வதும் பழக்கமில்லை. எனவே இத்தகைய புறமணக் குழுக்கள் இரண்டு தனித்தனி இடங்களில் வாழ்ந்ததால் அதன் உறுப்பினர்கள் எவ்வாறு மணவுறவு கொள்வது? இதைத் தான் குறிஞ்சித் திணையின் உரிப்பொருளாகிய புணர்ச்சி குறிக்கிறது.

குறிஞ்சித் திணையின் ஆண் - பெண் ஒழுக்கம் என்பது புணர்ச்சி ம‌ட்டுமே. மணமுறைக்குரிய இரு வேறு புறமணக் குழுக்களைச் சேர்ந்த ஓர் ஆணும், பெண்ணும் தத்தமது வாழ்வி‌டங்களுக்கு வெளியே சந்திக்கும்போது ஒருவரையொருவர் விரும்பினால் கூடிப் பிரிவர். கூட்டத்தின் விளைவாகப் பிறக்கும் குழந்தை பெண்ணின் குழுவைச் சேரும். இது தாய்வழிக் குமுகத்துக்குரியது. அதே இணை மீண்டும் கூடுவது தற்செயலானதே. அவர்கள் வேறெவரோடும் கூட உறவு கொள்ளலாம். இதையே,

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப........


என்கிறார் தொல்காப்பியர். அதே இணையோ, வேறு இணையோ என்பதை வெவ்வேறு பிறவிகளில் என்று வருவித்துப் பொருள் கூறுவார் இளம்பூரணர். அவர் வருவித்த பிறவிகளை விட்டுவிட்டால் நமது முடிவுக்குத் தடை எதுவுமில்லை.

குறிஞ்சித் திணைக்குப் புறம் வெட்சி எனும் வேற்றுப் புல ஆநிரை கவர்தலாகும். இது உணவுக்காக முல்லை நிலத்தின் ஆநிரைகளைக் களவாடுதலும் அதினிமித்தம் நிகழும் போருமாகும். குறிஞ்சி மக்களின் உணவுக்கு வேட்டையும், காய், கனி கிழங்குகளைத் திரட்டலும் நிலவிய காலம். சிறிது பண்டமாற்றும் தொடங்கியிருக்கலாம். எனவே உணவுப் பற்றாக்குறையை ஈடுசெய்ய முல்லை நிலத்து மாட்டைத் திருடினர் போலும்.

முல்லை:

முல்லை நிலத்தின் அகம் இருத்‌தல் ஆகும். இருத்தல் என்ற சொல் இன்று வழங்கும் அதே பொருளில் இங்கு கையாளப்பட்டிருக்கிறது. ஓர் ஆணும், பெண்ணும் திருமணமின்றிப் பொருந்தியிருப்பதை இன்று இருத்தல் என்கிறோம். அதேபோல் ஓர் ஆணும், பெண்ணும் தாம் இருவரும் விரும்பும் வரையில் பொருந்தியிருப்பதே முல்லையின் அகத்தினை உரிப்பொருள். கோவை இருளர் போன்ற மலைவாழ் மக்களிடையிலும் நாட்டுமக்கள் சிலரிடமும்(பெண்டுக்கு மேய்க்கி எனப்படும் ஆயர் பிரிவினரிடமும்) இம்முறை இன்றும் நிலவுகிறது.

இங்கு புறத்திணை வஞ்சி, மண்ணுக்காகப் போரிடல், (மண் நசைஇ வேந்தன்....) ஆநிரைகளைப் பெருக்குவதற்காக மேய்ச்சல் நிலத்துக்காகப் போரிடுவது, ஆநிரைகள் உணவுக்காகவன்றி விற்பனைக்காக ‌வளர்க்கப்படுகின்றன. வண்டி மாடுகள், உழவு மாடுகள், பொதி மாடுகள், கறவை ஆக்கள் என்றவாறு.

பாலை:

பாலை என்னும் அகத்திணை பிரிவு. இதுபற்றி இங்கு நாம் முன்பே கூறியுள்ளோம். பாலை மக்களின் வாழ்வு ஆறலைத்தலைச் சார்ந்தது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பாலை நிலத்தில் இயற்கையிலி‌ருந்து உணவை‌ப் பெற முடியாது. எனவே வழிப்பறித்துத் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெறுகிறார்கள். ஆனால் இந்த ஆறலைத்தலையும் பாலையின் கொடுமையையும் எதிர்கொள்ளும் து‌ணிவுடன் பாலையைக் கடப்போர் யா‌ர்? அவர்களின் நோக்கமென்ன? அவர்களை அதற்குத் தூண்டுவது யாது?

வாணிகம் என்று நமக்குத் தெரியும். எனவே பாலையின் இரு மருங்கும் உள்ளோர்க்கு இன்றியமையாதவை ஆகிவிட்ட பொருட்களில் வாணிகம் செய்வதற்காக வாணிகர்கள் இடர்கள் நிறைந்த பாலையைக் கடக்கிறார்கள். இந்த இடர்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு வாணிகம் ஆதாயம் மிக்கதாய் இருந்திருக்க வேண்டும். ஒருபுறமிருந்து மாடும் மலைபடு பொருட்களும் மறுபுறமிருந்து துணிமணிகள் பொன்ம(உலோக)ப் பொருள்கள், நெல், உப்பு, கருவாடு போன்றவையும் பாலையைக் கடந்திருக்கும். இந்த நிகழ்முறை குமுகத்தில் ஏற்பட்ட பிரிவின் விளைவாகவும் காரணமாகவும் அமைகிறது.

பண்டமாற்றும் அதிலிருந்து வாணிகமும் தோன்றும்வரை தனி மனிதர் எவருக்கும் தான் பிறந்து வளர்ந்த கூட்டத்துக்கு வெளியே வாழ்வென்பது கிடையாது. ஆனால் வாணிகம் வளர்ச்சியடைந்தபோது வாணிகக் குழுக்களின் உறுப்பினர்கள் தத்தம் மக்கள் கூட்டத்திலிருந்து பிரிந்துவந்து புதிய கூட்டமாக உருவானவர்கள். வாணிகப் பொருட்களைக் கொண்டு செல்லும் வழியில் வளம் குறைந்த இடங்களில் வழிப்பறியை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் வாணிகர்கள் தவிர்க்க முடியாதபடி போர்க்கலையில் சிறந்தவராயிருக்க வேண்டியது இன்றியமையாதது. எனவே போர்க்கலை வல்லவர்கள் வாணிகர்களாக மாறலாம் அல்லது வழிப்பறியாளர்களாக மாறலாம். அத்தகைய வழிப்பறியாளர்க்குச் சிறந்த வாழிடமாக அமைந்தது மனிதன் இயற்கையில் நிலைத்து வாழத்தக்க வளங்களைத் தராத பாலை நி‌லம்.

வாணிகம் செழித்து வளர்வதற்கு அடிப்படைக் காரணமாகவும் பின்னர் அதன் விளைவாகவும் அமைந்தது தொழில் வளர்ச்சி. நெசவு, கம்மியம், அணிகலன், தோல்தொழில் போன்ற இத்தொ‌ழில்க‌ளில் ஈடுபட்டவர்கள், தாம் இதுவரை பிறந்து வளர்ந்த மக்கள் கூட்டம் உழைத்து வாழ்ந்த நிலத்திலிருந்தும் த‌ம் கூட்டத்திலிருந்தும் பிரிந்தவர்கள். முன்பு தாம் பிறந்து வளர்ந்த கூட்டத்திலிருந்தும் அவர்களது வாழ்வின் அடித்தளமாக இருந்த நிலத்திலிருந்தும் பிரிந்து தனியே வாழ முடியாத தனி மனிதர்கள் இப்போது வாணிகராகவும், போர் வீரராகவும், வழிப்பறியாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் பிரிந்து செல்ல முடிந்தது. அதனால் காதலர் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவும் உடன் போகவும் நேர்ந்‌தது. இந்‌த‌ப் பிரிவைச் சுட்டிநிற்பது பாலைத்திணை.

பாலைத் திணை காட்டும் வா‌ழ்வு அந்த நிலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வை மட்டுமல்ல ஐந்நிலங்களின் வாழ்நிலைகளிலும் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதையே உடன்போக்கும் பிரிவே என்ற புதிர் மூலம் அது விடுவித்துக் காட்டுகிறது. பாலையின் புறத்திணை வாகை. தத்தமக்குரிய திறனை மிகுதிப்படுத்துதல் என்று விளக்கம் கூறுகிறது தொல்காப்பியம். இதைச் சுருங்கக் கூறினால் மனிதன் தன் தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். இதுவரை தத்தம் மக்கள் கூட்டத்தினுள் ஒவ்வொருவரது தனித்தன்மையும் அமுங்கிக்கிடந்தது. தனி வாழ்வும் கூட்டு வாழ்வும் பிரிக்க முடியாமலிருந்தால் தனி வாழ்வென்று ஒன்று கிடையாது. தனித்தன்மைகளின் வளர்ச்சிக்குக் கூட்டு வாழ்க்கை தவிர்க்க முடியாத ஒரு தடையாக இருந்தவந்தது. அத்தடை இப்போது உடைபட்டுவிட்டது. மனிதர்களின் தனிப் பண்புகள் வளரும் ‌சூழ்நிலையில் அவை ஆற்றலுடன் வெளிப்பட்டு குமுகத்தைப் புதுப்புதுப் துறைகளில் ஒரு பாய்ச்சலுடன் முன்தள்ளிச் செல்கிறது.

பாலை நிலப் போரில் ஈடுபடும் இரு கட்சியினரும் பிறரைத் தாம் மிஞ்சினால் தான், அதாவது எதிரியை அழித்தால்தான் தான் உயிர் பிழைக்க முடியும் என்று போரிடுகின்றனர். ஆறலைப்பவர் வென்றால்தான் அவர்கள் வாழ்வதற்கு உணவு கிடைக்கும். தாக்குதலுக்கு உள்ளானவர் வென்றால்தான் தாம் படு‌கொலைக்குத் தப்ப முடியும். இந்த வகையிலும்,

தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்.......

என்ற தொல்காப்பியர் கூற்று பொருந்தி வருகிறது.

மருதம்:

இங்கு குமுக அமைப்பே மாறித் தோன்றுகிறது. நீர்வளமும் நிலவளமும் வேளாண்மையை வளர்க்கின்றன. துணைத் தொழில்கள் பெருகுகின்றன. செல்வமும் வளமும் பெருகுகிறது. மருதமும் பாலையும் மயங்கும் வளம் குறைந்த பகுதி மக்களின் கொள்ளைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க நிலையான படையும் தலைவனும் உருவாகின்றனர். அவர்கள் பொறுப்பில் கோட்டைகள் கட்டப்பட்டுப் பாதுகாப்பு ஒப்படைக்கப்படுகிறது. கோட்டைக்குள் வேளாண்மையில் ஈடுபடாத மக்களும் வெளியே உழவர்களுமாக மக்கள் பிரிகிறார்கள். தலைமக்கள், புலமக்கள் என்ற பாகுபாடு கூர்மையடைகிறது. தலைமக்கள் சொத்துக்கு உரியவராகிறார். சொத்துடைமையின் விளைவாக ஆண் பெண் உறவுகளில் மாற்றம் ஏற்படுகிறது. கரணம் எனும் திருமணமுறை வருகிறது. நிலத்திலிருந்து விடுபட்ட தலைமக்களை மணந்து கொண்ட பெண்கள் தங்கள் நிலச் சொத்துரிமையை இழந்து கணவனோடு வாழ நேர்கிறது. எனவே பெண்ணுக்கு மணவிலக்கு உரிமை இருந்தாலும் சொத்துரிமை இல்லா நிலையில் கணவனைப் பிரிவதால் ஏற்படும் பொருளியல் விளைவுகளால் அவள் அந்த உரிமையைக் கையாள முடியாதவளாகிறாள். பிற பெண்களுக்காகவோ, பணியின் நிமித்தமோ தன்‌னைக் கணவன் பிரிந்து சென்றால் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவது தவிர அவளுக்கு வேறு வழியில்‌லை. எனவே ஊடல் தான் மருதத்தின் அகத்திணை உரிப்பொருள்.

மருதத்தின் புறத்திணை உழிஞையாகும். இது ‌கோட்டையை முற்றுகையிட்டுக் கைக்கொள்வதற்கான போர். கோட்டையினுள் நிறைந்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடிப்பது இதன் நோக்கம்.

நெய்தல்:

நெய்தல் நிலம் கடலை ஆள்பவரைத் தலைமக்களாகக் கொண்டவர்களின் நிலம். இங்கு கடல் வாணிகமு‌ம் கடலாதிக்கமும் மேலோங்கிய நிலை. கடலாதிக்கம் பிற நிலங்களின் மீதும் உள்நாட்டின் மீதும் ஆதி‌‌க்கத்திற்கு வழிவகுக்கும். உள்நா‌ட்டு வாணிகம் முழுவதும் இவர்கள் கையில். எனவே இவ‌ற்றை எய்தவும் காக்கவும் நிலையான வலிமை மிக்க படையும் அரசும் தேவை. இங்கு ஆணாதிக்கம் தன் உச்ச நிலையை எய்தியது. பெண் தன் கணவனைப் பிற பெண்களாலோ, சாவாலோ பிரிய நேர்ந்தால் கைம்மை[1] என்ற சிறை தவிர வேறு போக்‌கிடம் அற்றவளாகிறாள். கணவனையும் தன் விதியையும் எண்ணி இரங்குவதே அவள் நிலை.

நெய்தலின் புறத்திணை உரிப்பொருள் தும்பை. இதற்கு வலிமையைக் காட்டும் போர் என்று விளக்கம் கூறியுள்ளார் தொல்காப்பியர் (மைந்து பொருளாக.....). அதாவது ஆதிக்கம் தான் இதன் நோக்கம். ஆதிக்கத்தின் அடையாளமாகத் திறை பெறுவதும் அடிமைகளைப் பெறுவதும் இதன் நோக்கங்களாகலாம்.

வரலாற்றில் மெசப்பொட்டோமியாவில் ஆண்ட அசிரிய, பாரசீக அரசுகள் கொ‌ள்ளையை நோக்கமாகக் கொண்டு அமைந்த அரசுகள். படை வலிமையால் எதிரிககளை அழித்து அவர்கள் நாடுகளிலிருந்து கொள்ளைகள் மூலமும் திறை மூலமும் வாழ்ந்தவை. எனவே போர்களின் கொடுமை பெ‌‌ரிது. ஆனால் அலக்சாந்தரின் படையெடுப்பு அந்த அளவுக்குக் கொடியதல்ல என்று கூறப்படுகிறது. அவனது நோக்கம் தன் நாட்டுக்கு அடிமைகளை அனுப்புவதாகவே இருந்தது. எனவே எதிரிப் படைகளைக் கொன்றொழிப்பது கொள்கையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. பெர்சுப்போலிசு எனப்படும் பாரசீகத் தலைநகரை அழித்ததுகூடச் சோர்ந்துபோன தன் படை வீரர்கள் கொள்ளையின் மூலம் ஊக்கம் பெறவே எனக் கருதப்படுகிறது. மருத நிலத்தில் கொள்ளைக்காக கோட்டை மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் நெய்தல் நிலத்தில் ஆதிக்கத்துக்காக நடத்தப்படும் போருக்கும் இவற்றை ஒப்பிடலாம்.

நெய்தல் நிலத்தில் வென்றவர் விரும்புவது அதிகாரத்தையும் அதற்கு அடையாளமான திறையையும் தான்.


(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1]கைம்மை என்பது கைவண்மை என்பதன் திரிபு. கைம்பெண்களைப் பருத்திப் பெண்டிர் என்றும் கூறுவதுண்டு. ‌துணையற்ற பெண்கள் உயிர் வாழ்வதற்காக கைத்தொழில் செய்து பிழைப்பதலி‌ருந்தே கைம்மை என்ற சொல் பிறந்தது. எனவே கணவனை இருவகையிலும் பிரிந்த பெண்களைக் கைம்பெண் என்று கூறலாம்.

0 மறுமொழிகள்: