1.7.07

ஒதுக்கீடும் ஏழ்மையும்

கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் சாதிவழி ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் தமிழகம் தான். ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அரும்பணியை இம்மாநிலம் தொடங்கிவிட்டது.

தமிழகத்தை முன்னோடியாக வைத்து இந்திய அரசியல் சட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ஒதுக்கீட்டுக்கு வகைசெய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தைப் போல் பிற்பட்டோருக்கு அது கிட்டவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின் ஒரு "தற்காலிக" அரசு தன்னைக் காத்துக் கொள்வதற்காக எதிர்பாராத ஒரு நேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அளவில் பணி ஒதுக்கீட்டு முறையை ஏற்று ஆணை வெளியிட்டது. ஆனால் அதனாலேயே அவ்வரசு பதவியை இழந்தது. காலத்தின் கட்டளைப்படி அமைந்த இந்த ஆணையைப் பின் வந்த அரசுகளால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதன் வலிமையைக் குறைக்கும் நோக்கில் அதற்குப் பல மறுப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள் இந்த ஒதுக்கீட்டு முறையை விரும்பாதோர். அவற்றில் முதன்மையானது ஒதுக்கீட்டின் பலன்கள் அந்தந்தச் சாதி மக்களில் மேல் மட்டத்திலுள்ளோர்க்கே கிடைக்கும் என்பது. இந்த மறுப்பு உண்மை தான். ஆனால் ஒதுக்கீட்டு முறையால் இழப்பெய்தும் சாதியினரிலும் மேல் தட்டினருக்குத் தான் இந்த இழப்பு ஏற்படுகிறது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒதுக்கீட்டினால் பயன் பெறும் சாதியினராயினும் இழப்பெய்தும் சாதியினராயினும் மிகவும் விரும்பிப் பயிலும் துறைகள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை முதலியன. இத்துறைகளில் இன்று முதியோராக உள்ளவர்களில் ஒதுக்கீட்டினால் பயன்பெற்றவர்களைப் பற்றிய ஓர் உண்மையை ஆய்ந்து பார்ப்போம். அன்று அவர்கள் பெற்றோர் வாழ்ந்த பொருளியல் நிலையில் இன்று அவர்கள் இருந்திருந்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளியிறுதி வரை கூட படிக்க வைத்திருக்க முடியாது, ஏனென்றால் அன்று குடும்பங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் இன்று போல் செலவுக்குரிய தேவைகள் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் ஒரு கீழ்நிலை நடுத்தரக் குடும்பம்கூடத் தன் மகனை ஒரு பொறியாளராக்கிவிட முடிந்தது.

இன்று அது முடியாது. எனவே ஒதுக்கீட்டினால் இன்று ஏழைகள் பயன்பெற முடியாது. ஒதுக்கீடு தொடர்பான சச்சரவு இரு கட்சியிலுமுள்ள மேல் மட்டத்தினரிடையில்தான். இதில் தங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்று காட்டுவதற்காக ஒவ்வொரு குழுவினரும் தங்களிடையிலுள்ள ஏழைகளைத் துணைக்கழைக்கின்றனர். பிராமணர்கள் புரோகிதர்களையும் அர்ச்சர்களையும் காட்டுகின்றனர். பணக்கார நாடார்கள் நேற்று வரை சாணார்களென்று தாங்களே ஒதுக்கி வைத்திருந்த பனையேறிகளைக் காட்டுகிறார்கள். அதுபோலவே யாதவர்களும் நாடோடிக் கோனார்களைக் காட்டுகிறார்கள். முக்குலத்தோர் தம்மிடையேயுள்ள நாட்டார் கள்ளர் போன்றோரைக் காட்டுகின்றனர்.

மேல்மட்டத்தினர் இவ்வாறு ஒற்றுமைக்கரம் நீட்டும்போது இவர்களது குமூக ஏற்பை ஒரு காலத்தில் வேண்டி நின்று ஒதுக்கப்பட்ட ஏழை பிற்படுத்தப்பட்டோரோ இன்று தங்களைக் காட்டி மேல்மட்டத்தினர் பயனைத் தட்டிச் சென்றுவிடக் கூடாது என்று தமக்குத் தனி அடையாளம் காட்டும் வகையில் பிரிவினை முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.

இது ஓர் அபாய அறிகுறி. முன்பு ஒதுக்கீடு உட்சாதி எல்லைகளை மங்க வைத்து சாதிகளின் மொத்த எண்ணிக்கையைக் குறைக்கும் திசையில் மக்களை இட்டுச் சென்றது. இன்று அதே ஒதுக்கீடு சமூகத்தைப் பழைய நிலை நோக்கித் திருப்பி வரலாற்றைத் தலைகீழாக்கப் பார்க்கிறது. எனவே நாம் மக்களிடையில் ஒற்றுமையையும் நாட்டின் முன்னேற்றத்தையும் எய்தத்தக்க ஒரு வழியைத் தேட வேண்டியவர்களாகவுள்ளோம்.

75 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சி தன் சாதிவாரி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன் வைத்தபோது கிடைத்த கல்வி வாய்ப்புகளும் அரசு வேலை உட்பட எழுத்தறிவு தேவைப்பட்ட அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும் ஓர் இசைவு இருந்தது. காலஞ் செல்லச் செல்ல கற்றோர் தொகை வேலை வாய்ப்புகளைக் கொஞ்சங் கொஞ்சமாக மிஞ்சி இன்று ஒன்றுக்கொன்று தொடர்பின்றிப் போய்விட்டது. நாம் வெளிப்பட ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இல்லையாயினும் கல்வியென்பது வேலைவாய்ப்புக் கருவியல்ல. பண்பாட்டின், மக்களாட்சியின் இன்றியமையாத் தேவை என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த உண்மையை நாம் மனமாரப் புரிந்துகொண்டோமாயின் நம் கல்வி முறையின் வடிவமும் உள்ளடக்கமும் தாமே மாற்றமடையும்.

இன்னொரு பக்கத்தில் அரசு வேலைவாய்ப்பு என்பது தனது உச்சத்தை அடைந்து இறங்கு நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக பொருளியல், வாணிக முயற்சிகளில் அரசுத்துறை பெரும் பின்னடைவுகளையும் குறைகூறல்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தனியாருடைமையாக்குதல் என்ற பெயரில் இந்தியப் பொருளியல் அயலுடைமையாகிவிடாமல் மக்களுடைமையாவதற்கு (அதாவது உள்நாட்டு மக்களுக்கு உடைமையாவதற்கு) நாம் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஆனால் இத்தேவையை மக்கள் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அரசு என்பது மக்களை உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளிடமிருந்தது பாதுகாத்தல் என்ற நிலையிலன்றி வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு நிறுவனம் என்ற நிலையில் நெடுநாள் நீடிக்க முடியாது என்பதை அரசின் அன்றாட நடவடிக்கைகளும் அதனால் மக்கள் அடையும் இன்னல்களும் தெளிவாக்கி வருகின்றன. எனவே கல்விக்கும் அரசு வேலைவாய்ப்புக்கும் உள்ள தொடர்பு முறிய வேண்டிய கால கட்டத்தை நாம் நெருங்கி விட்டோம்.

இப்போது இரண்டு கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியவர்களாக உள்ளோம்.

1. அரசுப் பணியாளர்களுக்கும் (உள்நாட்டு)தனியார் துறைப் பணியாளர்களுக்கும் இடையில் உள்ள சம்பளம் மற்றும் சலுகைகளிலுள்ள மாபெரும் ஏற்றத் தாழ்வு.

2. ஏழை நாடாகிய இந்தியாவில் அரசை விட்டால் அதற்கிணையாக எவ்வாறு (உள்நாட்டுத்) தனியார் வேலை வாய்ப்பை அளிக்க முடியும்?

முதலில் இரண்டாம் கேள்விக்கு விடை கூறுவோம்.

நம் நாடு ஒர் ஏழை நாடென்பது ஒரு பெரும் மாயை. வருமான வரித் துறையை முற்றாக ஒழித்து விட்டால் அதனால் முடமாக்கப்பட்டு இருண்ட மூலைகளில் கருப்புப் பணமென்ற பெயரில் பதுங்கிக் கிடக்கும் செல்வம் வெள்ளைப் பணமாகி மாபெரும் மூலதனமாகும். இன்று உலக வங்கியிடம் கடன் வாங்கும் இந்தியா உலக வங்கிக்கே கடன் கொடுக்க முடியும்.

சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள், உரிமங்கள், இசைவுகள், ஒதுக்கீடுகள் என்ற எண்ணற்ற பெயர்களிலும் வகைகளிலும் தளையிடப்பட்டு தோன்றவோ வளரவோ வழியற்றுப் போன இந்நாட்டு மக்களின் தொழில் முனைவு உணர்வு. அத்தளைகள் அகற்றப்பட்டு மக்களுக்கு ஒரு சிறு தூண்டுதலும் கொடுக்கப்பட்டால் நம் நாடு ஒரு தொழில் வள நாடாவதற்குத் தடையேதுமில்லை.

அவ்வாறு ஒரு சூழலை உருவாக்கிவிட்டால் வேலைவாய்ப்புகள் பெருகும். அதே நேரத்தில் எங்கோ வெளியிலுள்ள சந்தையைத் தேடி உள்நாட்டு மக்களின் வாங்கும் ஆற்றலை அழிப்பதில் வெற்றி கண்டுவிட்ட நம் அரசின் அரக்கக் கோட்பாட்டைக் கைவிட்டு உள் நாட்டிலுள்ள மிகப் பெரும் மக்கள் தொகையையே சந்தையாக்கும் நோக்குடன் அவர்களது வாங்கும் ஆற்றலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டால் அரசூழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வு நீங்கும்.

கிராமக் கைத் தொழிலைப் பேணுதல் எனும் பெயரில் சாதியடிப்படையிலான தொழில்களை நிலைநிறுத்துதல் மக்களைப் பழைய சாதியப் பண்பாட்டிலும் ஏழ்மைச் சிறுமையிலும் அமிழ்த்தும் முயற்சியாகும். மண்பானை வனையும் குலாலர்களும் பனை ஏறும் நாடார்களும் ஆடுமேய்க்கும் இடையர்களும் செருப்பு தைக்கும் செம்மார்களும் முடி திருத்தும் நாவிதர்களும் மலம் அள்ளும் துப்புரவாளர்களும் மாடு வைத்திருக்கும் உழவர்களும் நெடுநாள் மரபுத் தொழிலில் நிலைத்து நிற்க முடியாது. மாற்றம் நோவைத் தருவதாயினும் அதை ஏற்றே ஆகவேண்டும். மாற்றத்தின் நோவையும் அதன் கால நீட்சியையும் குறைக்கத்தான் முடியும். மாற்றத்தைக் தவிர்க்கும் முயற்சி தரும் நோவும் இழப்பும் மாற்றத்தினால் ஏற்படுபவற்றை விட மிகக் கடுமையாக இருக்கும்.

தாழ்த்தப்பட்ட., பிற்படுத்தப்பட்ட மக்களின் குமூக மதிப்பை உயர்த்துவதற்கு "உபரியாக" உள்ள நிலத்தைப் பங்கு போட்டுக் கொடுத்தால் போதும் என்று சிலர் உரத்த குரலில் சேர்ந்திசை பயிலுகின்றனர். "உபரி" நிலம் எங்கே உள்ளது? அப்படி இருக்கும் நிலத்தை எல்லோருக்கும் பகிர்ந்தால் ஆளுக்கு எவ்வளவு கிடைக்கும்? அவ்வாறு கிடைக்கும் நிலம் தன் உடைமையாளரை வாழவைக்குமா அமிழ்த்துமா? பணக்கார நாட்டு மக்கள் இதுபோன்ற நில உடைமைகளினால் தான் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து நிற்கிறார்களா? அல்லது நம் நாட்டிலுள்ள உயர் சாதியினர் அனைவருக்கும் நில உடைமை தான் அடிப்படையா? உண்மையில் சிறு நில உடைமை தாங்க முடியாத அடிமை விலங்கு. உழைப்புக்கேற்ற கூலியும் ஊதாரிப் பண்பாட்டுக் கூறுகளின் தாக்கமின்மையும் இருந்துவிட்டால் அதுவே உண்மையான பொருளியல் விடுதலை.

பெரும் பெரும் நிலம் மற்றும் தொழில் உடைமைகளும் மக்களின் வாங்கும் ஆற்றலின் திட்டமிட்ட வளர்ச்சியும் நம் நாட்டின் ஏழை மக்களின் நிலையைக் கட்டாயம் உயர்த்தும்.

உலக வாணிகத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய மண்ணில் வேர் கொண்டு எழுந்த ஆடம் ஸ்மித்தின் ஏற்றுமதிப் பொருளியல் கோட்பாடுகள் போலியான சோசலிசம் இவற்றைக் கைவிட்டு இந்தியாவுக்கேற்ற உள்நாட்டு நுகர்வுப் பொருளியல் கோட்பாட்டை உருவாக்குவோம். ஏழ்மையை விரட்டியடிப்போம். இதுதான் ஒதுக்கீட்டினால் பயன்பெற முடியாத ஏழை மக்கள் எய்த முடியாத ஒன்றுக்குப் பாடுபட்டு புதிய சாதிப் பிரிவினைகளை உருவாக்காமல் அதே நேரத்தில் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுபட்டு உண்மையான சமத்துவம் நோக்கிச் செல்லும் ஒரே வழியாகும்.

சராசரிக் குடிமகனுக்கும் தமக்கு இணையான வசதிகள் கிடைக்கும் வரை அரசூழியர்களுக்கும் புதிய சலுகைகள் வழங்காமலிருக்க வேண்டியதும் இன்றியமையாததாகும். இந்தச் சலுகை ஏற்றத்தாழ்வு தான் ஒதுக்கீட்டிற்கு இந்த அளவு அழுத்தத்தைக் கொடுக்கிறது.

மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை இனங்கான முற்பட்டுள்ள ஓர் உசாவல் குழு செயற்படும் ஒரு சூழ்நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. தொடக்கத்தில் நாம் கூறியது போல் தத்தம் சாதித் தொகுப்பில் (முன்பு விலகியிருந்த பல சாதியினர் இன்று ஏதோவோர் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒருபெயர் கொண்ட குழுக்கள்) உள்ள மிக ஏழையினரைக் காட்டித் தாமும் மிகப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்று கேட்க ஆயத்தமாகி வருகின்றனர்.

ஏறக்குறைய ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு மேல் மட்டத்து மக்களின் விகிதம் கணிசமாக உள்ள வகுப்பினர் எவரும் மிகப் பிற்பட்டோராக வகைப்படுத்தப்படக் கூடாது. அப்படி யாராவது ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டிருந்தால் அது கட்டாயம் திரும்பப் பெறப்படல் வேண்டும்.

இப்படி ஓர் அளவுகோல் வைத்திருந்து, நாட்டின் பொதுப் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டி விட்டால் வேலை வாய்ப்பு பற்றிய முடிவில்லாத கேள்விக்கு விடை கிடைக்கும்.

உண்மையிலேயே வசதி படைத்தோரைக் கணிசமான அளவில் கொள்ளாத சாதிகளை மட்டுமே மிகப் பிற்படுத்தப்பட்டவை என வகைப்படுத்துவதே முறை. அது மட்டுமல்ல. இவ்வாறு இனங்காணப்பட்ட மக்கள் குழுக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு நிலைகளில் தீவிரமான ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி சச்சரவுக்கு இடமாகவும் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கும் ஒதுக்கீடு என்ற நடைமுறையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் செயற்பட வேண்டும். விசாரனைக் குழு இதைச் செய்யுமா? அல்லது அரசியல் காற்று எப்படி வீசுகிறதோ அப்படியே சாயுமா? இரண்டாம் வாய்ப்புத் தான் மிகுதி.

இறுதியாக ஒன்று. பிறப்புயர்வைக் காட்ட புறச் சின்னங்களை அணிந்திருப்போரும் சாதி உயர்வைக் காட்ட உணவுமுறை போன்ற போலிப் பண்பாட்டுக் கூறுகளை உயர்த்திப் பிடிப்போரும் அவற்றைச் கைவிட்டுத் தாமும் பிற மக்களைப் போன்று பிறப்பாலும் பண்பாட்டாலும் சமமானவர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்காதவரை ஒதுக்கீடு ஒரு பொருளியல் அல்லது பகுத்தறிவு சார்ந்த சிக்கலாகவன்றி உணர்ச்சி சார்ந்த ஒரு சிக்கலாக நிலைத்து நிற்கும். ஒதுக்கீட்டை எதிர்ப்போர் இதை உணர்ந்து கொள்வது வரலாற்றின் கட்டாயம்.

(கட்டுரை முடிப்பில் சிறுமாற்றம்)

மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களை இனங்கான முற்பட்டுள்ள ஒரு விசாரனைக் குழு செயற்படும் ஒரு சூழ்நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இந்த இடத்தில் முற்பட்ட தன்மை பிற்பட்ட தன்மை ஆகியவற்றுக்கான ஒரு தெளிவான அளவுகோலை வரையறுப்பது இன்றியமையாதது. பிற்பட்ட தன்மை எனப்படுவதற்குப் பொருளியல் காரணியையும் கனக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாரார் கூறிய பொழுது அதை ஏற்றுக் கொள்ள மறுத்துப் பொருளியல் பிற்பட்ட தன்மை வேறு சமுகவியல் பிற்பட்ட தன்மை வேறு என்று மண்டல் ஆணைய ஆதரவாளர்கள் கூறினர். அப்படியானால் சமூக முற்பட்ட தன்மை, பிற்பட்ட தன்மை ஆகியவற்றைக் தீர்மானிக்கும் அளவுகோல்கள் யாவை? இதுபற்றி யாரும் இதுவரை கேள்வி எழுப்பவுமில்லை; எனவே விடை காணவுமில்லை.

சமூக முற்பட்ட தன்மைக்கும் பிற்பட்ட தன்மைக்கும் அளவு கோல்கள் உள்ளனவா? உள்ளனவாயின் அவை யாவை?

நம் சமுதாயத்தில் உயர் சாதியினருக்கென்று சில பண்பாட்டு மரபுகள் உள்ளன. அவை:

1. பூணூல் அணிதல்
2. புலாலுணவு மறுத்தல்
3. இறந்துபோன மூதாதையருக்குத் திவசம் கொடுத்தல்
4. புரோகிதர், அல்லது குருக்கள் வைத்துத் தீ வளர்த்து அதை வலம் வந்து மணம் புரிதல்.
5. பெண்ணுக்கு மணவிலக்குக்கும் மறுமணத்துக்கும் கைம்பெண் மறுமணத்துக்கும் உரிமையில்லாதிருத்தல்.

மேற்கூறப்பட்ட இந்த அளவுகோல்களைக் கொண்டு தோராயமாகக் கீழ்க்கண்டவாறு ஒதுக்கிட்டுக்குரிய குழுக்களைத் தீர்மானிக்கலாம்.

1. பூணூல் அணிவோரும் புலால் மறுப்போரும் முற்பட்ட குழுக்கள்.
2. பூணூலும் புலால் மறுப்பும் இன்றி இறந்து போன மூதாதையருக்குத் திவசம் கொடுப்பவர் பிற்படுத்தப்பட்ட குழுக்கள்.
3. பூணூல், புலால் மறுப்பு, திவசம் கொடுத்தல் இன்றி தீவலம் வந்து மணவினை முடிப்பதுடன் பெண்ணுக்கு மணவிலக்குக்கும் மறுமணத்துக்கும் கைம்பெண் மறுமணத்துக்கும் உரிமையுடையோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர்.
4. பூணூல், புலால் மறுப்பு, திவசம் கொடுத்தல், தீவலம் வந்து மணவினை முடித்தல், ஆகியவை இன்றி பெண்ணுக்கு மணவிலக்கும் மறுமணத்துக்கும் கைம்பெண் மறுமணத்துக்கும் உரிமையுடைய குழுக்கள்: தாழ்த்தப்பட்டோர்.

இந்தத் தொகுப்புக்கு இன்றைய நடைமுறையில் ஒத்துவரும் குழுக்களும் அவ்வாறு தம்மை மாற்றியமைத்துக் கொள்வதாகக் தத்தம் சமூக அமைப்புகள் மூலம் வெளிப்படையாக அறிவிப்போரும் அவற்றிற்குரிய ஓதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறலாம் என்று வகுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் மேலே தொகுத்துக் கூறிய சமுதாய மரபுகள் நம் வரலாற்றில் சாதியமைப்புகள் உருவான காலத்தில் அவற்றோடு தோன்றிய செயற்கை மரபுகள் ஆகும். அவற்றைக் கைவிட்டு உண்மையான சமூக நீதி கிடைக்க வேண்டுமாயின் அச்செயற்கை மரபுகள் கைவிடப்பட வேண்டும். அச் செயற்கை மரபுகள் கைவிடப்பட ஒரு தூண்டு கோலாகவும் உண்மையான மக்கட் பண்பாடு மேன்மை பெறவும் நான் தொகுத்துத் தந்திருப்பது போன்ற அடிப்படையில் கல்வி இட ஒதுக்கீடு செய்வது தான் நம் சமூக ஏற்றத்தாழ்வின் பண்பாட்டு வேர்களைக் மெல்லி அழிக்கும் உண்மையான வழியாகும்.


(இக்கட்டுரை திரு. முல்லைமுருகன் அவர்களோடு இணைந்து எழுதப்பட்டது.)

0 மறுமொழிகள்: