31.7.07

தைப்பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்

தைப் பொங்கல் தமிழர்களின் பண்பாட்டின் மிகப் பழமையானதொரு திருநாளாகும். இத்திருநாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் இது சங்கராந்தி என்ற பெயரில் பொங்கலுக்கு முந்திய நாளில் கொண்டாடப்படுகிறது.

சங்கராந்தித் திருநாளுக்கு கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் இறுதி நாள் என்றும் தைப்பொங்கல் கதிரவனின் வடக்கு நோக்கிய செலவின் தொடக்கமென்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. உண்மையில் சங்கராந்தி, தைப்பொங்கல் எனப்படும் நாட்கள் முறையே கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் இறுதியிலும் வடக்கு நோக்கிய செலவின் தொடக்கத்திலும் தான் வருகின்றனவா?

இல்லை. கதிரவன் தன் செலவின் தென் கோடியில் திசம்பர் 20 ஆம் நாள் இருக்கிறது. வட கோடியில் சூன் 20-ஆம் நாளில் இருக்கிறது. மார்ச்சு 21,செப்டம்பர் 21 ஆகிய நாட்களில் நிலநடுக்கோட்டில் வருகின்றது. அப்படி இருக்கும்போது சங்கராந்தி, தைப் பொங்கல் என்பவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

உலகில் முகாமையாக மூவகை ஆண்டுமுறைகள் நிலவுகின்றன. அவை மதியாண்டு, கதிராண்டு, மதிகதிராண்டு எனப்படும். அவற்றில் முகம்மதியர்களின் ஆண்டு தூய மதியாண்டு. ஆங்கில ஆண்டு எனப்படும் கிரிகோரியன் ஆண்டைப் பொதுவாக கதிராண்டு எனக் குறிப்பிடலாமாயினும் கதிரவனின் திருப்புமுனை இயக்கங்களோடு அதற்குரிய இயைபு முறிந்துவிட்டது. இந்தியாவிலுள்ள சாலிவாகன ஆண்டு தூய கதிராண்டு. சோதிடத்திற்குப் பயன்படும் சூரியவட்டமும்(Zodiac) இதுவும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளன. உலகிலுள்ள பிறவனைத்து ஆண்டு முறைகளும் மதிகதிராண்டுகள் தாம்.

உலகில் மனிதன் இரவு பகல் என்ற காலக் கணக்குக்கு அடுத்தபடியாக அறிந்த காலக் கணிப்பு நிலவின் வளர்வு, தேய்வு என்ற இயற்பாட்டைத் தான். நிலவு இருளில் தோன்றும் ஒளிவிளக்கு என்பதாலும் அதனைக் கண்ணால் எளிதில் நோட்டமிட முடிந்ததாலும் இது நிகழ்ந்தது. முன் இவ்வாறு நிலவின் ஒரு துடிப்பு அதாவது காருவா எனும் அமாவாசையிலிருந்து வெள்ளுவா எனும் பவுர்ணமிக்கு மாறி மீண்டும் காருவாவுக்கு வரும் காலம் ஓராண்டு என்று கணக்கு வைக்கப்பட்டது. இவ்வாறு இன்றைய ஓராண்டுக்கு முன்பு ஏறக்குறைய 12 ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. கிறித்துவ மறைநூலில் ஆதாம் போன்ற தொடக்க கால மனிதர்களுக்குத் தொள்ளாயிரத்துக்கு மேற்பட்ட அகவை குறிப்பிடப்பட்டிருப்பது இதனால் தான்.

அடுத்த கட்டமாக பன்னிரண்டு நிலா மாதங்களைக் கொண்ட மதியாண்டு நிறுவப்பட்டது. வானில் இரவில் நிலவுக்குப் பின்னணியில் எண்ணற்ற விண்மீன் கூட்டங்கள்[1] உள்ளன. புவி கதிரவனைச் சுற்றிவரும் தன் போக்கில் ஒரு வெள்ளுவாவின்போது நிலவின் பின்னணியிலிருக்கும் வீண்மீன் கூட்டம் அடுத்த வெள்ளுவாவின் போது இருப்பதில்லை. அதுபோன்ற 12 வெள்ளுவாக்களின் பின்னர் தான் ஏறக்குறைய பழைய விண்மீன் கூட்டம் பின்னணியில் தோன்றும். இவ்வாறு 12 மதிமாதங்கள் கொண்ட நிலவாண்டுகள் உருவாயின. ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகள் முடியும்போது நிலவு முன்பிருந்ததற்கு முந்திய விண்மீன் கூட்டத்தின் எல்லைக்குள் தான் வந்திருக்கும். இதைச் சரி செய்வதற்கு இந்த ஒரு மாதம் பொய் மாதம் எனக் குறைக்கப்பட்டது. இன்றைய சுமார்ந்த ஆண்டு எனப்படும் தெலுங்கு ஆண்டு இந்த வகையினதே. இவ்வாறு அது மதிகதிராண்டாக மாற்றப்பட்டுவிட்டது.

தமிழ் ஆண்டு நேரடியாகவே கதிராண்டாகக் கணக்கிடப்படுகிறது. புவி கதிரவனைச் சுற்றும்போது அதனோடு உள்ள தன் அச்சின் சாய்வினால் கதிரவன் வடக்கும் தெற்கும் நகர்வதான தோற்றம் ஏற்படும். இந்தத் தோற்றத்தின் அடிப்படையில் புவியின் ஒருசுற்று ஓராண்டாகக் கணக்கிடப்பட்டது. அதே வேளையில் நிலவின் இருப்பிடத்தை வைத்தே மாதங்களின் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. சித்திரை நாண்மீனைக் கொண்ட விண்மீன் கூட்டத்தில் நிலவு வரும் மாதம் சித்திரை என்றும் விசாக நாண்மீனைக் கொண்ட கூட்டத்தில் நிலவு வரும் மாதத்தை வைகாசி என்றும் அழைத்தார்கள்.

இதே ஆண்டின் மாதங்களுக்கு கேரளத்தில் அவ்வம்மாதத்தில் கதிரவன் இருக்கும் ஓரைகளின் (ராசிகளின்) பெயர்கள் இடப்பட்டுள்ளன. வெள்ளுவாவன்று நிலவு இருக்கும் ஓரைக்கு நேர் எதிர் ஓரையில் கதிரவன் இருக்கும்.

இதுதவிர விண்வெளியில் கதிரவனின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட விண்மீண் இருக்கும் வகையில் மீண்டும் வரும் கால இடைவெளியை ஆண்டாகக் கொள்ளும் ஆண்டு முறையும் உள்ளது. இதற்கும் புவியின் ஒரு சுற்றைக் கொண்ட ஆண்டுக்கும் மிகச் சிறிய வேறுபாடு உண்டு.

பண்டைக் கிரேக்கத்தில் 8 மதியாண்டுகளை எடுத்துக் கொண்டு அதை நான்கு நான்காண்டுகாகப் பிரித்து அடுத்தடுத்த நான்காண்டுகளுக்கு முறையே இரண்டும் மூன்றும் மாதங்களைத் தள்ளிக் கணக்கிட்டு மதியாண்டுகளைக் கதிராண்டுகளுடன் இணைத்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றின.

யூதர்கள் மதியாண்டுகளின் தொகுதியில் சில ஆண்டுகளுக்கு 13 மாதங்களை வைத்து பத்தொன்பது கதிராண்டுகளில் அவற்றை இணைத்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கதிரவன் வான மண்டலத்தில் வடக்கு தெற்காக நகரும் தோற்றத்தை வைத்தே ஆண்டுகளைக் கணக்கிட்டுள்ளனர். இப்போது நடப்பிலிருக்கும் சித்திரை மாதத்தில் வரும் ஆண்டுப் பிறப்பு கதிரவன் நில நடுக்கோட்டுக்கு மேலே வரும் நாளைக் குறிக்கின்றது. இது தைப் பொங்கல் கதிரவனின் வடக்கு நோக்கிய செலவில் தொடக்கத்திலிருந்து கணக்கிடப்பட்ட ஓர் ஆண்டுப் பிறப்பின் தடயம். அதுபோன்று ஆடிப்பிறப்பும் கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் தொடக்கத்திலிருந்து கணக்கிடப்பட்ட ஓர் ஆண்டுப் பிறப்பின் தடயம்.

இவற்றில் தைப் பிறப்பு நமக்குச் சில கேள்விகளை எழுப்புகிறது. கதிரவனின் வடக்குச் செலவின் தொடக்கம் நிகழ்வது உண்மையில் திசம்பர் 21இல் தான். ஆனால் அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு சனவரி 14 ஆம் நாளில் கொண்டாடுகிறோம். இது ஏன்?

இதற்காக விளக்கத்தை நம் நாட்டுக் கணியர்கள்(சோதிடர்கள்) சிலரிடம் கேட்டபோது அவர்களில் கல்லூரிப் படிப்புப் படித்தவர்கள்கூட கணியத்தின் வானியல் அடிப்படை பற்றிய சிந்தனையே இல்லாமலிருக்கிறார்கள். கணியத்தில் ஓரைகளைக் காட்டும் கட்டங்களைத்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறதேயொழிய புவியை நடுவில் வைத்து அதிலிருந்து வட்ட வடிவில் ஓரைச் சக்கரம்போட்டு விளக்கினால் அவர்களுக்குப் புரியவே இல்லை.

திசம்பர் 21க்கும் சனவரி 14க்கும் இடையிலுள்ள 24 நாட்கள் இடைவெளிக்கு அவர்களால் கூற முடிந்த காரணம் வட்டத்திலிருக்கும் பாகைகள் 360; ஆனால் ஆண்டிலுள்ள நாட்கள் 365. ஒரு நாளைக்கு ஒரு பாகை என்ற கணக்கில் பார்த்த நம் முன்னோர்கள் ஆண்டுக்கு ஐந்து நாட்கள் பிழைவிட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். இப்போது வெள்ளையர்களின் காலக் கணிப்பை நாம் அப்படியே எடுத்துக் கொள்வதனால் அந்த வேறுபாடு கூடாமல் அப்படியே நின்று போய்விட்டது என்பதாகும்.

ஆனால் உண்மைநிலை என்னவென்றால் பஞ்சாங்கங்களில் திசம்பர் 21 மகர அயனம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மகரம் என்பது மலையாள வழக்கில் தை மாதத்தைக் குறிப்பதாகும். எனவே கதிரவனின் வடக்குச் செலவு தெற்குச் செலவுகளின் கணிப்பில் தம் முன்னோர்கள் தவறு ஏதும் செய்யவில்லை. இந்தத் தவற்றுக்கு வேறு ஏதோவொரு காரணம் இருக்கிறது. அது என்ன?

பண்டை வரலாற்றில் ஒரு கட்டத்தில் தமிழர்கள் குமரிக் கண்டத்தில் மகரக் கோடு எனப்படும் 23½ பாகை தெற்கு அக்கக் கோட்டிற்கு அருகில் வாழ்ந்திருக்க வேண்டும். இப்போது மகரக் கோட்டில் கதிரவன் வரும்போது (இன்றைய நிலையில் திசம்பர்21) ஆண்டுப் பிறப்பை வைத்திருக்க வேண்டும். பின்னர் காலஞ் செல்லச் செல்ல அறிவியல் வளர வளர நிலநடுக்கோட்டின் தன்மையைப் பற்றிப் புரிந்திருப்பார்கள். அதேவேளையில் தெற்கே கடற்கோள்களினால் மக்கள் வடக்கு நோக்கி, அதாவது நிலநடுக்கோடு நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

நிலநடுக்கோட்டின் இயல்பு என்னவென்றால் நிலநடுக்கோட்டில் கதிரவன் இருக்கும் நாட்களில் உலகெங்கும் இரவும் பகலும் சமமாக இருக்கும். அதுபோல் கதிரவன் எந்த நிலையில் இருந்தாலும் நிலநடுக்கோட்டில் மட்டும் என்றுமே இரவும் பகலும் சமமாக இருக்கும். இத்தன்மைகளினால் நிலநடுக்கோட்டில் அமைவதாக ஒரு தலைநகரை அவர்கள் அமைந்திருக்க வேண்டும். அதுவே தென்மதுரையாக இருக்க வேண்டும்.

உலகத் திணைப்படத்தைப் பார்த்தால் நன்மதுரை அல்லது மூலமதுரை எனப் பொருள்படும் சுமத்ரா தீவின் வழியாகத் தான் நிலநடுக்கோடு செல்கிறது.

குமரிக் கண்டத்தின் பெரும் பகுதி முழுகியது. இதுவே தமிழிலக்கியங்களில் முதற் கடற்கோள் என அழைக்கப்படுகிறது. மக்கள் வடக்கு நோக்கி ஓடினர். புதிதாக ஓரிடத்தில் தங்கள் தலைநகரை அமைத்தனர். அதுதான் கபாடபுரம் எனப்படும் கதவபுரம். இடம் மாறினாலும் கதிரவன் அந்த இடத்துக்கு நேர் மேலே வரும் நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடும் மரபை மாற்றவில்லை. இதனால் உண்மையாக நிலநடுக்கோட்டுக்கு கதிரவன் வரும் நாளுக்குப் பகரம் தங்கள் புதிய தலைநகருக்கு நேராக வரும் நாளைப் புதிய ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். இதனால் 24 நாட்கள் ஆண்டுப் பிறப்பு தள்ளிப் போனது. அதன் விளைவாக தை மாதப் பிறப்பும் 24 நாட்கள் தள்ளிப் போனது. இந்தத் தலைநகரம் ஏறக்குறைய 5ஆம் வடக்குப் பாகையில் இருந்தது. அதாவது இன்றைய இலங்கையின் தென் கோடியிலிருக்கும் காலே நகருக்கு நேரே ஓரிடத்தில் இருந்தது.

இரண்டாம் கடற்கோளுக்குப் பின்னர் இன்னொரு தலைநகர் மாற்றம். அது மணலூர். மணலூர் என்பது கொற்கையை ஒட்டிய ஓர் ஊர். இவ்வூரைப் பற்றிய செய்தி தமிழ்ச் சங்கங்களைப் பற்றிக் கூறும் தமிழ் இலக்கியங்களில் பதிவாகவில்லை. மாறாக மகாபாரதத்தில் பதிவாகியுள்ளது. அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றபோது மணலூரில் ஆட்சி செய்த சித்திராங்கதன் என்ற பாண்டிய மன்னனின் மகளான சித்திராங்கதை என்ற பெண்ணை மணந்தான் என்று கூறுகிறது.

இந்த ஊரில் பாண்டியனின் தலைநகர் இருந்ததற்கு இன்னொரு சான்று சித்திரை பத்தாம் நாள். ஏறக்குறைய ஏப்பிரல் 23. இந்த நாளில் கதிரவன் கொற்கைக்கு நேராக வருகிறது. கொற்கையின் பாகை 8.

இறுதியாகப் பாண்டியர்கள் மதுரைக்குக் குடிபெயர்ந்தார்கள். கடலினால் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளின் விளைவாக அவர்கள் தங்கள் தலைநகரை உள்நாட்டினுள் மாற்றிக்கொண்டனர். ஆனால் கடற்படை, கடல் வாணிகம் ஆகியவற்றின் இன்றியமையாமையை அவர்கள் மிகப் பழங்காலத்திலேயே பயன்படுத்தி உலகப் பேரரசு கண்டு உயர்ந்தவர்கள். எனவே பட்டத்து இளவரசனைக் கொற்கையிலேயே அமர்த்தினர்.

இப்போது மதுரையில் தலைநகரம் அமைத்ததைக் காட்டும் காலக் கணிப்பு மாற்றங்களெதையும் நிறுவவில்லை. ஆனால் அதேவேளையில் அந்நகருக்கு நேர் மேலே கதிரவன் வரும் நாளின் பெருமையை அவர்கள் மறக்கவிலலை. நெடுநல்வாடையில் மதுரை அரண்மனையைப் பற்றிக் கூறும்போது நாழிகை வட்டிலிலுள்ள இரு கோல்களில் நிழல்களும் ஒரே நேர்கோட்டில் விழும் நாளில் அந்த அரண்மனைக்குக் கால்கோள் நடத்தினர் என்று கூறப்பட்டுள்ளது. கதிரவன் நேர் மேலே இருக்கும் நாளில் தான் இது நிகழும்.

விரிகதிர பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறி நிலை வழுக்காது குடக்கேர்பு
ஒரு திறஞ் சாரா அரைநா ளமையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிதிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெருமபெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து

இவ்வரிகளே பாண்டியர்கள் ஆண்டுப் பிறப்புக்குக் கதிரவன் தலைநகருக்கு மேலே வரும் நாளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நம் உய்த்துணர்வுக்கு அடிப்படை. தைப் பொங்கலில் ஏற்படும் 24 நாட்கள் வேறுபாடும் சித்திரைப் பத்தும் நெடுநெல்வாடையில் வரிகளும் இந்த நம் முடிவுக்கு அடிப்படையாக அமைகின்றன.

இவ்வாறு குமரிக் கண்ட ஆய்வுக்கு ஏராளமான சான்றுகளை நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பெற முடியும். முயன்று தேடுவோம்.

அடிக்குறிப்பு:

[1]ராசிகளென்றும் நட்சத்திரங்களென்றும் அழைக்கப்படுபவை உண்மையில் விண்மீன்களின் கூட்டங்களே. ராசிகளுக்கு ஓரைகளென்பதும் நட்சத்திரங்களுக்கு (நாள்+சத்திரம்?) நாண்மீன்களென்பதும் தூய தமிழ்ச் சொற்கள். ஓரை என்றசொல் Hora என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே வந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர். ஓரை என்பதற்குக் கூட்டம் என்பது ஒரு பொருள். கிரேக்கத்தில் வேளை என்ற பொருள் மட்டுமே. ஆங்கிலத்தில் விண்மீன் கூட்டங்களை Constellation என்றே கூறுகின்றனர். இதுபோன்ற பொருள் கிரேக்கச் சொல்லுக்குக் கிடையாது. எனவே ஓரை என்ற சொல்லிலிருந்தே கிரேக்கச் சொல் பிறந்துள்ளது உறுதி.

0 மறுமொழிகள்: