9.7.07

பாசனம் ...1

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்துப் பாயிரமே என்று கப்பலோட்டிய தமிழர் நிறுவியுள்ளதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் திருக்குறள் வான் சிறப்பு அதிகாரத்தில் மழையைப் போற்றியே தொடங்குகிறது என்பது புலப்படும். சேர இளவல் மாமழை போற்றும் என்று வாழ்த்துகிறார். சீவகச் சிந்தாமணி பூமகள் இலம்பகத்தில் மழைநீர் ஆற்றிலிருந்து வயலுக்கு இட்டுச் செல்லப்பட்டு பயிரிடப்பட்டு அறுவடை ஆவது வரை சொல்லோவியமாக்குகிறது.

இவையனைத்தும் ஒருசேர விளக்குவது தமிழக மக்கள் மழையின் அருமையை அதாவது அதன் போதாமையைத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள் என்பதையே. அதன் விளைவு பாசனப் பொறியியலின் பிறப்பு. ஓராண்டு முழுவதும் வேளாண்மைக்குத் தேவைப்படும் மொத்த நீரின் அளவுக்கு ஆண்டின் மழைப் பொழிவு போதுமாக இருந்து ஆனால் அந்தந்‌தக் காலத்தில் அவ்வப்போது பெய்‌யும் மழை போதாமல் இருந்தால் அங்கு பாசனம் தேவைப்படும். அந்தந்தக் காலங்களில் பெய்யும் மழையே போதுமானதாக இருப்பதால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாசன முறையோ அமைப்புகளோ இல்லை.

தமிழகத்தில் பாசன முறைகளைத் தொடங்கியவர்‌கள் பாண்டியர்கள் என்பதற்கு ′′மழை பினித் தாண்ட′′ பாண்டியர்களை வாழ்த்துவதன் மூலம் சிலப்பதிகாரம் சான்று ‌தருகிறது. மழையை வான் என்று திருக்குறள் அழைக்கிறது. எனவே ஆகாய கங்கை எனப்படுவது மழையே. அதை நிலத்துக்குக் கொண்டு வந்தவனாகக் கூறப்படும் பகீரதனும் ஒரு பாசன வித்தகன் தானோ?

பெரும் பரப்பில் பாசன அமைப்புகளை அமைத்துப் பராமரிப்பதன் மூலமே பண்டைய அரசுகள் மக்கள் மீது தம் பிடிப்பை வைத்திருந்தன. இறைத்தல் அடியாகப் பிறந்த இறைவன், குடித்தல் தொடர்பாகப் பிறந்த குடி மகன் உறவு இதைத் தான் குறிக்கிறது.

உலகில் நெருக்கமாகக் குளங்களைக் கொண்ட நாடுகள் எகிப்தும் தமிழகமும். அவற்றிலும் தமிழகத்துக்கே முதலிடம். இங்கு சராசரி அரை சதுர மைலுக்கு - ஏறக்குறைய ஒன்றேகால் சதுர கிலோமீற்றருக்கு ஒரு குளம் உள்ளது.

குளங்களின் வடிவமைப்பிலும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் உத்தியே சிறந்தது. இவையன்றி குளங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றில் பண்டைக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் மிக நுணுக்கமான சில உத்திகள் இன்றுவரை யாராலும் புரிந்து கொள்ளப்படவில்லை.

தமிழகம் வெள்ளையர் வருகைக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடைவிடாத போர்களினால் அலைக்கழிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் ஊரவைகள் என்ற அமைப்புகள் பாசன அமைப்புகளையும் பாசன நடைமுறைகளையும் ஓரளவு பேணி வந்தன. அத்துடன் பேரரசர்களும் சிற்றரசர்களும் குறுநிலத் தலைவர்களும் அவ்வப்போது அணைகளைக் கட்டியும் வாய்க்கால்களை வெட்டியும் குளங்களை அமைத்தும் பாசனப் பணியாற்றியுள்ளனர். இருந்தாலும் கரிகாலன் என்ற பெயரில் சங்க காலத்தில் வாழ்ந்த இரு பேரரசர்களும் (கரிகாலர்கள் மூவர் என்று கருதுவாரும் உண்டு) செய்ததுபோல் தமிழகத்தில் மிகப் பேரளவுப் பாசனப் பணி யாரும் செய்ததில்லை. புகழ்மிக்க கல்லணை கட்டியது, காவிரிப் படுகை முழுவதும் காவிரிக்கும் அதன் கிளைகளுக்கும் கரையமைத்தது, திருவளவாய்க்கால், கட்டளைக் கால்வாய் போன்ற நீண்ட நெடுங்கால்வாய்‌களை அகழ்ந்தது ஆகியவை அவர்களது அருஞ்செயல்களாகும். குடகுப் பகுதியில் மறிக்கப்பட்டுத் திருப்பப்பட்ட காவிரியைப் போரிட்‌டுக் கரிகாலன் மீ‌ட்டு வந்ததைப் புராண வடிவில் மணிமேக‌லை கூறுகிறது.

தமிழகத்தில் அரசியல் சீ‌ர்மை சிதையச் சிதையப் பாசனப் பராமரிப்பும் குறைந்தது. வெள்ளையரும் தொடக்கத்தில் இதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்கள் அவர்களைச் செயலுக்குத் தூண்டின. தம் நாட்டில் பாசனப் பட்டறிவு இல்லாதிருந்தும் எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்த பாசன அமைப்புகளையும் மழையளவுகளையும் நோட்டமிட்டு இன்று நம் நாட்டில் நிலவிவரும் பாசனக் கோட்பாடுகளை அவர்கள் உருவாக்கினர்.

இந்த வகையில் அவர்கள் ஒரு ஐம்பது ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ள இறும்பூதுகள் எண்ணினால் நம்மைப் புல்லரிக்க வைக்கும். ஒரு புறத்தில் அணை கட்டி எதிர்ப்புறத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் பெறும் ஒப்பற்ற பெரியாற்று ஆணையை வடிவமைத்து நிறுவிய பென்னிக்குவிக் என்ற பெருமகன் முன்னாள் சென்னை மாநிலத்தி‌லடங்கியிருந்த அனைத்து ஆறுகள், சி‌ற்றாறுகள் ஓடைகள், வடிகால்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஆற்றுப் பள்ளங்களென்றும்(River Basins) பள்ளங்கள் என்றும்(Basins) சிறு பள்ளங்களென்றும்(Minor Basins) வகுத்து திணைப்படம்(Map) உருவாக்கினார். இப்படம் பென்னிக்குயிக் திணைப்படம் என்று வழங்கப்படுகிறது. தஞ்சை மண்டலத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், கிளைவாய்க்கால்கள் அவற்றின் கிளைகள் என்று முடிவின்றி 10அடி நீளமுள்ள வயற்கால்கள் வரை காட்டும் பாசனத் திணைப்படங்கள் கிராமத் திணைப்படங்களின் அளவுக்கு உருவாக்கப்பட்டன. அதே அளவில் வாய்க்கால்கள், வயல்கள், சமமட்ட‌க் கோடுகள் ஆகியவற்றைக் காட்டும் மட்டத் திணைப்படங்கள்(Block level maps) உருவாக்கப்பட்டன. அவற்றின் மட்டங்களுடன் தரப்பட்டுள்ளன. தஞ்சை மண்டலத்தில் உள்ள வடிகால்களைக் காட்டும் வடிகால்‌ திணைப்படங்‌களும் உள்ளன. மிகச் சிறு வயற்கால்கள் உட்பட ஒவ்வொரு வாய்க்காலும் ஓடும் புல எண்களையும் அவை நீர்பாய்‌ச்சும் புலங்களின் எண்களையும் காட்டும் பெரும்பெரும் பாசனப் பதிவேடுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆங்கிலப் பொறியாளர் ஒருவர் (அவர் பெயர் ‌நினைவில்‌லை) முன்னாள் சென்னை மாநிலத்திலுள்ள மலைமுகடுகளுக்கெல்லாம் குதிரையில் சென்று ஒவ்வொரு ஓடை, சிற்றாறுகள் ஆகிய அனைத்தின் தோற்றம், பாயும் பாதை, அவற்றின் நீர்வளம் ஆகியவற்றைத் தொகுத்து அவற்றினடிப்படையில் எங்கெங்கு என்னென்ன கொள்திறனில் ‌எந்தெந்தப் பகுதிக்குப் பயன்படும் வகையில் என்னென்ன பாசன அமைப்புகள் அமைக்கலாம் என்று கூறும் நூல் ஒன்றை இயற்றியிரு‌க்கிறார். இன்றைய பாசனத் திட்டங்களில் ஏறக்குறைய எல்லாமே அவரால் பட்டியலிடப்பட்டவையே என்று தெரிகிறது.

பாசனத்துறைக்குப் புறத்தே நிலஅளவைத் துறையி‌னர் நாட்டிலுள்ள அனைத்துக் குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள், ஓடைகளைக் காட்டும் இந்திய அரசுத் திணைப்படங்களையும் வட்டத் தி‌ணைப்படங்களையும்(Taluk maps) உருவாக்கியுள்ளனர். அத்துடன் ஒவ்வொரு வருவாய் ஊருக்கும் உரிய தீர்வைப் பதிவேடு (A Register எனப்படும் Settlement Register) அவ்வவ்வூரிலுள்ள பாசன ஆதாரங்களை திணைப்படமாகக் காட்டுகிறது. அடங்கல் பதிவேடு கூட பாசன ஆதாரங்களின் அடிப்படையிலேயே பராமரிக்கப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆற்றியுள்ள இந்த அருஞ் செயல்களுக்கு மாறாக, விடுதலை பெற்ற நாம் என்ன செய்துள்ளோம்? பெரியாற்று நீர்மின் நிலையத்திலிருந்து பாசனமில்லாக் காலத்தில் வெளியேறும் நீரைப் பிடித்து வைப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட வைகை அணையை அளவறியாமல் பெரிதாகக் கட்டிவிட்டமையால் அதன் கீழுள்ள வைகையாறு முற்றிலும் வறண்டு போயிற்று. பெரியாற்றில் நீரிருக்கிறதென்ற மெத்தனத்தால் பெரியாற்று - வைகைப் பாசன மண்டலத்திலுள்ளள பல்லாயிரக்கணக்கான குளங்களையும் சரிவரப் பராமரிக்காமையால் ஒவ்வொரு மழைக் காலத்திலும் நம் மூதாதையர் போற்றிய அருமருந்தன்ன மழைநீர் வீணாகிக் கடலினுள் சென்று விடுகிறது.

தமிழக மக்கள் வகுத்துள்ள ஏரிக் கோட்பாடுகள் ஒப்பற்றவை. குளங்கள் தொடர்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குளத்திலுள்ள மறுகால் அதன் கீழுள்ள இன்னோர் குளத்தினுள் விழும். அந்தக் குளத்து மறுகால் அடுத்த குளத்தினுள் என்றிவ்வாறு 50 குளங்களையும் மிஞ்சும் தொடர்கள் உண்டு. இந்த அமைப்பு நீரை எந்த இழப்புமின்றி மிகச் சிக்கனமாகப் பிடித்து வைக்க உதவுகிறது. இறுதியிலுள்ள குளத்தின் மறுகால் ஏதாவதொரு ஆற்றில் அல்லது ஓடையில் சேரும். அவ்வாறு சேரும் நீரை அணைகள் மூலம் கீழேயுள்ள குளங்களுக்குத் திருப்பிவிடும் அமைப்புகளும் உள்ளன.

இவ்வளவு சிறப்பாக அமைந்த நம் பாசன முறையின் அடிப்படைக் கோட்பாடுகளில் மிகப் பெரும்பாலானவற்றை 50 ஆண்டுகளில் புரிந்து கொண்டு ஆங்கிலேயர்‌கள் அவ‌ற்றை மேம்படுத்தவும் செய்தனர். ஆனால் நாமோ விடுதலை கிடைத்த இந்த 50 ஆண்டுகளில் நாமாக எதுவும் செய்யாதது மட்டுமல்ல அவர்கள் செய்து வைத்தவற்றைப் பேணவும் இயலாதவர்களாகி விட்டோம்.
எடுத்துக்கா‌ட்டுக்கு, குளங்கள் சீரமைப்புத் திட்டம் எனும் பெயரில் செயல்படும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். நாம் முதலில் குறிப்பிட்ட பெனிக்குயிக் திணைப்படத்தில் அமைந்த சிறுபள்ளங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள குளங்களைப் பெருந் தொகுதிகள், சிறுதொகுதிகள், தனிப்பட்ட குளங்கள் என்று பகுத்து அவற்றிலடங்கிய குளங்களின் முழு விளக்கங்களையும் திரட்டி அவற்றுக்கு வரலாற்றுக் குறிப்புகள் உருவாக்கி ஒரு சிறு பள்ளத்துக்கு ஒரு நூல் என்ற அளவில் உருவாக்கினர். அத்துடன் அமையாது அவ்வரலாற்றுக் குறிப்புகளில் தரப்பட்டுள்ள வரையளவுகளுக்கேற்ப ஒவ்வொரு குளத்தையும் சீரமைக்கவும் திட்டமிட்டனர். ஆனால் இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் வரலாற்றுக் குறிப்புகள் தொகுக்கும் பணி ஒரு பகுதி தான் முடிவுற்றது. சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டதாகவே தெரியவில்லை.

இன்றும் குளங்கள் சீரமைப்புக் கோட்டங்கள் செயற்படுகின்றன. ஆனால் அவற்றின் செயற்பாடுகள் சொன்னால் வெட்கக்கேடு. குளங்களின் அமைப்பில் மறுகால் மட்டம் மடைகளின் தளவடி மட்டம் ஆகியவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இந்த மட்டத்தை நிறுவுவதற்காக மாபெரும் நிலவியல் அளவை மட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்று சிறிதும் அக்கறை இன்றி மட்டங்கள் நிறுவும் ‌இப்பணி செய்யப்படுவதால் அவற்றிற்குரிய நம்பகத் தன்மையை அவை இழந்து நிற்கின்றன. பெரும்பாலான பாசனத் திட்டங்கள் இவ்வாறு உருவாக்கப்படும் வரலாற்றுக் குறிப்புகளையே சார்ந்து நிற்கின்றன என்பதை வைத்து நம் பாசனத் திட்டங்களின் தரத்தை அறுதியிடலாம்.

பாசன அணைகளின் வடிபரப்புகளில் நீர்மின் திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கோதையாறு, நெல்லை மாவட்டத்தில் சேர்வலாறு, மதுரை மாவட்டத்திலுள்ள சுருளியாறு போன்றவை. இவை அமைக்கப்பட்ட நாளிலிருந்தே ஒழுங்காகச் செயற்படுவதில்லை. ஆனால் அவற்றில் பெருமளவு நீ‌ரைத் தேக்கி வைத்துக் கொண்டு பாசனத்துக்கு நீரின்றிப் பயிர்கள் வாடும் நி‌லையிலும் அந்த நீரை வெளியிடுவதில்லை. அவ்வாறு வெளியிடுவதற்கான முன்னமைப்புகளுடன் அந்த அணைகள் கட்டப்படவுமில்லை. பெரியாற்று நீர்மின்திட்டத்தில் பாசன நீர் வெளியேறுவதற்கான அமைப்புகள் சிறப்பாக உள்ளன. இந்‌தப் புதிய அமைப்புகளிலுள்ள இச்சிக்கல் மக்களுக்குத் தெரியவுமில்லை.

(தொடரும்)

0 மறுமொழிகள்: