9.7.07

பாசனம் ...2

பாசனம் இன்று தமிழகத்தில் பொதுப்பணித்துறையினரின் கையில் உள்ளது. இத்துறையில் பணம் செலவு செய்யும் பிரிவுகளில் பணியாற்றுவோர்க்கே மதிப்பு. அடுத்த வரிசையில் வருவோர் பாசன நீரை முறைப்படுத்துவோர். இவ்விரண்டு இடங்களிலும் பணம் நன்கு புரளும். நேர்மை, நாணயம் ‌என்ற பெயரில் பணம் பண்ணாதவர்களை இப்பணிகளில் வைத்திருக்க மேலேயுள்ளவர்களும் கீழேயுள்ளவர்களும் விரும்புவதில்லை. அதேபோல் பிறருக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் ஏப்பம் விட்டு விடுபவர்களை‌யும் வைப்பதில்லை. இவ்விரு சாரரும் புலனாய்‌வுப் பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் உதவாக்கரைகள் என்று ஒதுக்கப்பட்டவர்களாகையால் இவர்களுக்கு எந்த வசதியும் செய்து தருவதில்லை. எனவே நேர்மையானவர்களுக்கு ஆர்வமிருந்தாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. இன்னொரு வகையினர் எப்போது பணம் புழங்கும் பகுதிக்குச் செல்லலாமென்று ஒரே குறியாயிருப்பதினால் அவர்கள் வேலையில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

இந்தப் புலனாய்வுப் பிரிவுகள்தான் பாசனத் திட்டங்களை வகுக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால் நம் பாசனத்துறை ஏன் சரியாகச் செயல்படவில்லை என்பதன் காரணங்களிலொன்று புலப்படும்.

இன்னொரு புறம் குளங்களின் பராமரிப்பு. குளங்களின் பராமரிப்பில் பெரும் பங்கு மண் வேலைக்கு. ஆனால் பொதுப்பணித்துறையில் ஆண்டுதோறும் கூலிகள், விலைகளின் பட்டியல் நிறுவக் கடைப்பிடிக்கும் தவறான நடைமுறையால் மனித ‌உழைப்பில் செய்யப்படும் மண்வேலை கட்டுபடியாவதில்லை. இயந்திரங்கள் கொண்டு செய்யப்படுபவை கட்டுபடியாகும் நிலையில் உள்ளன. எனவே குளங்கள் பராமரிப்பில் பொதுவாக துறையினரும் ஒப்பந்தக்காரர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் வெள்ளம், வரட்சிக் காலங்களில் அரசு ஒதுக்கும் பெருந்தொகைப் பணத்தைச் ′′செலவு′′ செய்வதில் அனைவருக்கும் ஆர்வம் உண்டு. எனவே மழைக் காலங்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை.

அடுத்து பொறியாளர்களின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம். ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளையர்களான பொறியாளர்‌கள் மீது வருவாய்த் துறையின் கட்டுப்பாடு கிடையாது. பொதுப்பணித்து‌றை வளாகத்தினுள் காவல்துறையினரோ பிறரோ முன் இசைவின்றி நுழைய முடியாது. இத்துறையின் தனித்தன்மையை பேணுவதற்காகவே காசுக்கணக்கு, பொருட்கணக்குகள், கோப்புப் பராமரிப்பு என்று எல்லா வகையிலும் பிற துறைகளிலிருந்தும் வேறுபட்ட முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. வனத்துறையிலும் இத்தனித் தன்மை பேணப்பட்டது.

இன்றைய நிலைமை என்ன? இன்றைய பாசனப் பொறியாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் இன்னும் துல்லியமாகக் கூறவேண்டுமாயின் மாவட்ட ஆட்சித் தலைவர்களி‌ன் மனைவிகளின் எடுபிடிகள். எனவே பொதுப்பணித்துறையிலடங்கிய பாசனம் அரசியல் விளையா‌ட்டுகளின் களம். பொறியாளர்கள் மேலே மேலே கப்பம் கட்ட வேண்டியிருப்பதும், ஓய்வு பெறக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதும் அனைத்துத் துறைகளிலும் போல் விதிவிலக்கின்றிக் காணப்படுவதால் அதைத் தனியாகக் கூற வேண்டியதில்லை.

பொதுப்பணித் துறையிலுள்ள இன்னுமொரு பெரும் நோய் பொறியாளர்களுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் பிளவு; பட்டப் பொறியாளர், பட்டயப் பொறியாளர் என்ற பிளவு. முன்பு மருத்துவத் துறையில் நிலவிய இது போன்ற பிளவைத் தீர்த்தது போல் இதையும் தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்குத் தடையாயிருப்பவர்கள் இவ்விரண்டு காரர் பெயரில் செயற்படும் சங்கங்களில் தலைவர்களே. இந்தப் பிளவைப் போக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் இத்தலைவர்கள் மறைமுகமாக அவற்றை முறியடித்து வந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் பணியின் தரத்தை மேம்படுத்தப் பயன்பட்ட பொறியாளர் சங்கம் இன்று தெருநாய்களில் தலைமையாகி விட்டிருக்கிறது. பிரித்தாளும் நம் அரசும் இப்பிளவைப் பேணிக் காக்கிறது.

பொதுப் பணித் துறையின் அடிப்படை அதிகாரிகளான பிரிவு அலுவலர்களெனும் பொறுப்பிலிருக்கும் பொறியாளர்கள் தலையில் சிமென்று, இரும்பு போன்ற பொருட்களைப் பேணும் சரக்காளர் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. களத்தில் வேலைகளை நேரடியாக மேற்பா‌‌ர்வையிடும் மேற்பார்வை ஊழியர்கள் அவர்‌கள் மேற்பார்வையிடும் வேலைகளின் தரத்துக்குப் பொறுப்பல்ல. அவர்களின் மேல் அதிகாரியான பிரிவு அலுவலான பொறியாளருக்கே முழுப்பொறுப்பும். இதனால் ஏற்படும் மன உளைச்சல்களினால் முழு ஈடுபாட்டுடன் பொறியாளர்களால் செயற்பட முடயாமல் போகிறது.

வெள்ளையராட்சிக் காலத்தில் ‌விஸ்வேஸ்வரய்யாக்களையும் கிரு‌ஷ்ணய்யர்களையும் ஏகாம்பரங்களையும் உருவாக்கிய பொதுப்பணித்துறையால் இன்று ஒரு குமாரசாமியை மாநிலத்தை விட்டுத் துரத்தத் தான் முடிந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

அனைத்தையும் அனைவரையும் தங்கள் ஆதிக்கத்தினுள் கொண்டு வந்தவிட வேண்டுமென்ற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகளின் பேராசை ஒரு புறம். இன்னொரு புறம் சொன்னால் வியப்பாயிருக்கும். மாநிலப் பணித் தேர்வானையத்தால் இளநிலை - உதவியாளராகத் தேர்வு செய்யப்பட்டதன்றி வேறு தொழில்நுட்பத் தகுதி ஏதுமில்லாமல் தணிக்கையா‌ளர் என்ற பெயரில் செயற்படும் உண்மையான பொறுப்பேதுமற்ற ஒரு வலிமையான கும்பலின் ஆதிக்கத்துக்குப் பொறியாளர்கள் அனைவரும் அஞ்சும் ஓர் இழிநிலை உள்ளது. தணிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு காசுச் செலவுக்கும் இவர்கள் கூறும் வக்கணைகளை மீறி முடிவு கூறும் அதிகாரம் இருந்தும் அதனைச் செயற்படுத்தும் துணிவு இன்றைய பொறியாளர்களுக்கு இல்லை.

அதேபோல் தொழில்நுட்பத்தைக் குறித்து ′′தணிக்கை′′ ‌ செய்வதற்கென்று வரைவுப் பிரிவு என்று ஒன்று உண்டு. அது வரைவதெல்லாம் கடிதங்களைத் தான். களப்பணியாளர்கள் செய்யும் பணிகளில் ஏதாவது குற்றம் சொல்ல முடியுமா என்ற ஆய்வையே இவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். தொழில்நுட்பம் குறித்த ஆக்கமுறையிலான எந்தக் கருத்தும் இவர்களிடமிருந்து வராது. மொத்தத்தில் இவ்விரு பிரிவினரின்பணி ′′ஒருவன் வேலை செய்ய ஒன்பது பேர் நொட்டை சொல்ல′′ என்பதாகும். அதுமட்டுமல்ல, இவ்வாறு நொட்டை சொல்லச் சொல்ல அவர்களுக்கு வரும்படியும் கிடைக்கும்.

இதற்கு ஒரு காரணம் துணிவும் திறனும் உள்ள செயற்பொறியாளர் போன்ற உயரதிகாரிகள் அரசியல்வாதிகளின் அடக்குமுறையின் முன் அடங்கிப் போய்விடுகிறார்கள். அல்லது ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள். பிறர் வரும்படி கருதி இந்தத் ′′தணிக்கை′′ களை ஒதுக்கத் தங்களுக்குள்ள அதிகாரத்தைக் கையாள்வதில்லை. அத்துடன் பொறியாளர்களின் ஒற்றுமை இன்மை வலிமையான ஒரு காரணம்.

இக்காரணங்களால் பொதுப்பணித்துறையில் பொறியாளர்கள் எவருமில்லை. பொறியியல் படித்த அதிகாரிகளே தான் உள்ளனர் என்ற நிலை தான் இன்று நிலவுகிறது.

பாசனத் துறையில் இன்று ஒருவகைத் தண்ணீர் வாணிகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பகுதி உழவர்களும் தத்தமக்குத் தண்ணீர் திறந்துவிடுதல், பாசன அமைப்பு பராமரித்தல் தொடர்பாகப் பொதுப்ப‌ணித்துறையையும் வருவாய்த்துறையையும் அணுகுவதற்கென்று சங்கங்கள் அமைத‌துள்ளனர். இச்சங்கங்கள் முதலில் வரட்சிக் காலங்களில் உழவர்களிடம் பணம் திரட்டி இவ்விரு துறை அதிகாரிகளுக்கும் கொடுத்து தண்ணீர் கொண்டு வந்தனர். இப்போது தண்ணீர் தாராளமாக இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் தண்ணீர் கிடைக்கிறது. இதில் சங்கத் தலைவர்களுக்கும் பங்குண்டு. பாசனத்துறைக்கு நேர்ந்த அவலத்தைப் பாருங்கள்!

இனி தொழில் நுட்பப் பக்கத்தைப் பார்ப்போம்,

1. பண்டைக் குளங்களின் கரைகள் வளைவாக ஆழமான இடத்தில் சிறிது உள்வாங்கி இருக்கும். "கொக்கு வெளுத்திருக்கும் குளம் கோணியிருக்கும்" என்ற சொல்வடை கூட வழக்கிலிருக்கிறது. ஆழமான இடத்தில் உள் வாங்கியிருப்பதிலும் முனைகள் வளைந்து இருப்பதிலும் சில நன்மைகள் உண்டு.இன்றைய பொறியாளர்கள் அவ‌ற்றை அறியார்.

2. ஓடைகள் அல்லது ஆறுகளுக்குக் குறுக்கே குளங்கள் அமைப்பது முன்பு வழக்கமில்லை. அணைக்கட்டுகள் அல்லது மன்சூரம்புகள் எனப்படும் மண்‌ணைகள் அமைத்து வரத்துக் கால்வாய்‌கள் வழியாகக் குளங்களுக்குத் தண்ணீ‌ரைக் கொண்டு வருவதே வழக்கம் இதனால் குளங்களில் வண்டல் படிவது குறையு‌ம். இப்போது இந்த நடைமுறை ‌புதிய குளங்கள் அமைக்கும் போது கடைப்பிடிக்கப்படுவதில்லை.

3. குளங்கள் தொடர்களாக அமைந்துள்ளதால் மேலே ஒரு குளத்தில் உடைப் பெடுத்தால் கீழேயுள்ள அனைத்துக் குளங்களும் உடைக்கும். குளங்கள் தம் போக்கில் கண்ட இடத்தில் குறிப்பாக ஆழமான இடத்தில் உடைப்பெடுத்தால் அதனால் ஏற்படும் இழப்பு மிகப் பெரிது. தண்ணீர் முழுவதும் வீணாகியும் விடும். கரை வரை வயல் இருப்பதாலும் குளத்துப் பக்கம் நீரிருப்பதாலும் உடைப்பு ஆழமாக இருப்பதாலும் உடைப்பை அடைக்க மண் கிடைப்பது கடினம். இதைத் தவிர்ப்பதற்காக மறுகாலுக்கு அருகாமையில் மறுகால் மட்டத்தை விட ஓரடி தாழ்வாகக் கொஞ்ச நீளத்துக்குக் கரையை அமைத்திருப்பது வழக்கம். இன்று அம்முறை கைவிடப்பட்டுள்ளது. உடைப்பெடுப்பது "அனைவருக்கும்" ஆதாயமாயிருப்பதால் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைககளில் யாருக்கும் ஆர்வமில்லை.

நடைமுறைக் கோளாறுகள்‌‌:

1. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குளப் புறம்போக்குகளைப் பட்டா போட்டுக் கொடுப்பதால் குளங்கள் அழிந்து வருகின்றன.

2. எதிர்வாயில் இவர்கள் ஆக்கிரமிப்புச் செய்வதால் குளங்கள் சுருங்குவதுடன் மேடுதட்டியும் வருகின்றன.

3. முன்பு செங்கல் ஆளைகளுக்கும் வயல்களுக்கும் குளங்களில் படியும் வண்டல் மண் எடுக்கப்பட்டது. இப்போது கருவேல மரங்கள் வளர்க்‌கப்படுவதாலும் வள்ளுவர் வாய்மொழியில் கூறுவதாயின் "வேலொடு நிற்கும்" வருவாய்த் துறையினர் மற்றும் இப்போது இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள சுரங்கத் துறையினரின் அளவு மீறிய அரிப்புத் தொல்லையாலும் நீமையுரங்களின் ஆதிக்கத்தாலும் இம்முறை கைவிடப்பட்டு அதன் விளைவாகக் குளங்கள் மேடிட்டு வருகின்றன.

4. குளங்களில் உள்ள மடைகளை அடைக்கும் சீப்புகள் காணப்படுவதில்லை. அவற்றைப் பராமரிக்க எந்த ஏற்பாடும் இல்லை. எனவே பெருகும் தண்ணீர் விரையில் வடிந்து வெளியேறி வீணாகிறது.

5. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் மனப்பான்மை மக்களுக்கு இல்லை. வல்லான் வகுத்ததே வாய்க்‌கால் என்பது போல் முன் வயல்காரர்கள் தண்ணீரை வீணடித்து கடைமடை உழவர்கள் வாடவிடுகிறார்கள். சமுதாயத்தில் எங்கும் போல் இங்கும் அராசகம் நிலவுகிறது.

இந்நிலையில் பொதுப் பணித்துறையில் பாசனத் துறையைத் தனியாகப் பிரித்துக் தன்னாட்சியுடைய ஒரு வாரியமாக அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்கும் வழக்கம் போல் உலக வங்கியில் நெருக்குத‌லே காரணம். இந்த நெருக்குதல் இல்லாமல் நாமாகவே செய்திருக்க வேண்டிய பணி இது. கடன் வாங்குவதற்காகத் திருமணம் ஏற்பாடு செய்த "கடன் வாங்கிக் கல்யாணம்" திரைப் படக் கதாநாயகனின் தந்தையாகி நிற்கின்றனர் நம் ஆட்சியாளர்‌கள்.

(தொடரும்)

0 மறுமொழிகள்: