10.7.07

பாசனம் ...3

பாசனப் பணிகளில் குறிப்பாகப் பராமரிப்புப் பணிகளில் பொதுமக்களின் பங்கு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். எடுத்துக்காட்டாக பல்லாண்டுகளாக உலக வங்கி ′′உதவி′′யுடன் நடைபெற்று வரும் காவிரி மேம்பாட்டுத் திட்டத்தில் வாய்க்கால்களில் பதிக்கப்படும் சிமென்றுப் பாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட‌டு மாட்டுத் தொழுவங்களுக்குத் தளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டப்படும் வயற்கால் மடைகள் பயன்படுத்தப்படாமல் வாய்க்காற் கரைகளை உடைத்து நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆறுகளுக்கும் பாசன அமைப்புகளுக்கும் அவற்‌றின் மூலம் வரும் நீருக்கும் உண்மையான உரிமையாளர்களான உழவர்களே அவற்றைப் பணோமல் சிதைக்க முற்படும் போது கூலிக்கு வேலை செய்யும் அதிகாரிகளிடம் உன்ன அக்கறையை எதிர்பார்க்க முடியும்? எனவே ஒட்டு மொத்தப் பாசனச் செலவில் பங்குடன் அவ்வப்பகுதிப் பராமரிப்புச் செலவுகளையும் அவ்வப்பகுதி மக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். ஆனால் உழவர்களுக்கு ஓர் முதன்மையான உரிமையையும் கொடுக்க வேண்டும். தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்குத் தாங்களே விலை நிறுவும் உரிமை வழங்கப்பட வேண்டும். அரசு இதில் தலையிடக் கூடாது.

புதிய பாசன அமைப்பு கீழ்க்காணும் வகைகளில் செயற்படலாம்.

1. பாசன வாரியத்தின் பொறுப்பில் அரசியல்வாதிகளோ ஐ.ஏ.எஸ். அதிகா‌ரிகளோ அமர்த்தப்படக் கூடாது. நேர்மையிலும் தொழில்நுட்பத் திறமையிலும் புகழ் பெற்ற பொறியாளர்களே அமர்த்தப்பட வேண்டும்.

2. பொதுப் பொறியியலில் (Civil Engineering) பட்டயப் படிப்பை நிறுத்தி ஐ.டி.ஐ. மட்டத்தில் ஒன்றும் பட்ட மட்டத்தில் ஒன்று மாகப் பிரிக்க ‌வேண்டும். இப்போது பணியில் இருக்கும் பட்டயப் பொறியாளர்களுக்கு, முன்பு மருத்துவத் துறையில் செய்தது போல் ஓர் ஐந்தாண்டு காலத்திற்குள் உரிய பயிற்சித் திட்டமொன்றை வகுத்து அனைவரையும் பட்டப் பொறியாளராக்க வேண்டும்.

3. அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் முதல் அலுவலக நீர்வாகி வரையிலும் களத்தில் கரைக் காவலர் முதல் வாரியத் தலைவர் வரையிலும் முற்றிலும் பொறியியல் படித்தோரே அமர்த்தப்பட வேண்டும். களப்பணியாளர்களுக்கு இணையான அலுவலகப் பணியாளரை வரையறுத்து அவர்கள் ஒருவருக்கொருவர் மாற்றத் தக்கவராயிருத்தல் வேண்டும்.

4. ஒவ்வொரு கோட்டம் அல்லது தேவைக்கேற்ப சரக்காளர் அமர்த்தப்பட வேண்டும். சிமென்று, கம்பி போன்ற பொருட்களை ஒப்பந்தக்காரரே வழங்க வகை செய்ய வேண்டும்.

வேலையில் தரத்தில் குறைபாடுகள் இருந்தால் ஒப்பந்தத்தை மீறிய குற்றவாளியாக ஒப்பந்தக்காரரே தண்டிக்கப்பட வேண்டும். மேற்பார்வை ஊழியர்கள் அல்லது பொறியாளர்கள் தாங்களாகவே அதற்குக் காரணமாயிருந்தாலொழிய அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாது.

அளவைச் சரிபார்க்கும் அலுவலர் போன்றோரின் ஒத்துழையாமையால் ஒப்பந்தக்காரருக்கு இடையூறுகள் ஏற்படா வண்ணம் தேவையான உரிமைகளும் ஒப்பந்தக் காரருக்கு வழங்கப்பட வேண்டும்.

பாசனப் புலனாய்வுப் பணியில் உண்மையான ஆர்வமும் நேர்மையும் உள்ள பொறியாளர்க‌ளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பொருளியலில் நியாயமான ஊக்குவிப்பும் கொடுத்து அடிப்படை ஆவணங்கள் உருவாக்குதல், இருப்பவற்றைப் புதுப்பித்தல் ஆகிய பணிகளை ஒப்படைக்க வேண்டும்.

வக்கணையோடு செயல்படும் தணிக்கை முறையை மாற்றி ஆக்க முறையில் சீரமைக்க வேண்டும். களப் பொறியாளருக்கு ஒரு துளி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5. உழவர் சங்கங்கள், பாசனத்துறை இருவரும் இணைந்த அமைப்புகள் வசதியான பரப்புகளுக்கு ஒவ்வொன்றாக உருவாக்கப்பட வேண்டும். அந்தந்தப் பரப்புக்குத் தேவையான பராமரிப்புப் பணிகளைப் பாசனத்துறை செய்வதும் அதேபோல் பொதுமக்கள் தங்களுக்குப் பயன்படும் பாசன அமைப்புகளுக்குக் கேடுவராமல் நடந்து கொள்வதும் பாசனத் துறை செய்யும் பணிகளுக்குத் தேவையான செலவுகளை உழவர்கள் பாசனத்துறைக்குகுச் செலுத்துவதும் இங்கு கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறனான அமைப்புகளை உருவாக்கிய உடன் போதிய பராமரிப்பின்றி சிதைந்து கிடைக்கும் இன்றைய பாசன அமைப்புகளைச் சீரமைக்கும் பெருந்திட்டம் ஒன்றை வகுத்து உழவர்களின் கண்காணிப்புடனும் துணையுடனும் அதனை நிறைவேற்ற வேண்டும்.

பாசன அமைப்புகளுக்குப் பொறுப்பற்ற பொதுமக்களால் ஏற்படும் சிதைவுகள், திருட்டுகளைத் கண்காணிக்கும் பணியில் உழவர்களுக்கும் பொறுப்பிருக்க வேண்டும்.

தண்ணீர் அருந்தலான நேரங்களில் எவ்வாறு அதனைப் பங்கிடுவது என்பதைச் சங்கங்கள், பாசனத் துறையினரின் விரிவான கூட்டம் மூலம் முடிவு செய்து அதனைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பயிர்களுக்கு அளவுக்கு மேல் நீர் வழங்குவதால் ஏற்படும் தீங்குகளை உழவர்களுக்கு எடுத்துரைத்து நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தப் பழக்க வேண்டும். இதற்கும் உழவர் சங்கங்கள், பொறுப்பேற்க வேண்டும்.

குளக்கரைகளைப் பாதிக்காமலும் நீர்த்தேக்கத்துக்கு இடையூறுறில்லாமலும் வயல்களுக்கு கரம்பை அடிப்பதையும் செங்கற் சூளைகளுக்கு மண்ணெடுப்பதையும் ஊக்கப்படுத்த வேண்டும். மண்ணெடுப்பதை முறைப்படுத்துவரைக் கண்காணிக்கும் பொறுப்பை உழவர் சங்கங்களிடம் விட்டுவிட வேண்டும். எடுக்கப்படும் மண்ணுக்குக் கட்டணம் பெற்றுக் கொள்ள வேண்டும். மண்ணெடுப்பதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை வருவாய்த் துறையிலிருந்து எடுத்துவிட வேண்டும். அதே போல் அண்‌மைக் காலமாக இதில் கெடுபிடி செய்து கொ‌ண்டிருக்கும் சுரங்கத்துறையை ஒழிக்க வேண்டும். குளங்களில் மரங்கள் வளர்ப்பது கைவிடப்பட வேண்டும்.

6. குளங்களைத் தூரெடுப்பது பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. இது நடைமுறைக்கு உகந்ததல்ல. ஏனென்றால்,

  • நாட்டிலுள்ள அனைத்துக் குளங்களிலுமுள்ள பெருமளவு மண்ணை வெட்டி வெளியேற்றுவதற்குப் பெரும் செலவு ஆவதுடன் அதற்குத் தேவையான ஆள் பலம் கிடைப்பது கூடக் கடினம்.

  • அவ்வாறு எடுக்கப்படும் மண்ணைக் கரைகளில் போட்டால் குளத்தின் உட்புறத்தில் மடைகளையும் வயல்களையும் பாதிக்கும். எதிர்வாயில் போட்டால் எளிதில் மீண்டும் குளத்தினுள் வந்தவிடும்.

அ‌தற்கு மாற்றாக குளத்தின் உயர்நீர் மட்டத்தைப் பழைய முழுகடை நிலங்களைத் தவிர புதிய நிலங்களை எதிர்வாயில் முழுகடிக்காத அளவுக்கு உயர்த்த வேண்டும். தேவைப்பட்டால் எதிர்வாய் நிலைங்களைத் தேவைப்படும் அளவுக்கு மேடாக்கலாம். மட்டத்தை உயர்த்தும் போது கரையையும் உயர்த்த வேண்டியிருப்பதால் குளத்திலுள்ளிருந்து இதற்காக எடுக்கும் மண்ணாலும் குளத்தின் கொள்திறன் கூடும்.

களத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்குத் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நிலைமைகளை அகற்றி அவர்களது பட்டறிவுக்கும் முன்முயற்சிக்கும் ஊக்கமும் மதிப்பும் தந்தால், பாசனத் துறையின் செயற்பாடுகளோடு உழவர் பெருமக்களின் இன்றியமையா ஒத்துழைப்பும் இருந்தால் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நம் நாடு வளம் பெறுமென்பதில் ஐயமில்லை.

0 மறுமொழிகள்: