1.7.07

வீட்டைக் கட்டிப் பார்

உலகிலுள்ள நாடுகளெல்லாம் எதிர்நோக்கும் ஒரு பெரும் சிக்கல் மக்களுக்குக் குடியிருக்க வீடுகள் கட்டுவதாகும். நம் நாட்டிலும் அச்சிக்கல் உண்டு. இச்சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு அவ்வப்போது சில திட்டங்களை நடுவண் அரசும் மாநில அரசுகளும் ஊரறியப் பறைசாற்றுவதுண்டு. ஆனால் நடைமுறையில் அரசு செய்யும் செயல்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன. இச்செயல்கள் நகர ஊரமைப்புத் துறை மூலமாக ஒரு புறமும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் இன்னொரு புறமும் நடைபெறுகின்றன.

ஒரு குடிமகன் தனக்கு ஒரு வீடு கட்டுவதற்காக ஒரு வரைபடம் போட்டு அதற்கு உரிய உள்ளூராட்சியிடம் ஒப்புதல் பெறும் நடைமுறை நாளுக்கு நாள் சிக்கலாக்கப்பட்டு வருகிறது. இப்படிச் சிக்கலாக்குவதற்கு உள்ளூர் திட்டக் குழுமம் என்றொரு அமைப்பு பயன்படுகிறது.

ஒப்பேற்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்குத் தான் கட்டிட வரைபடம் ஒப்பளிக்கப்படும் என்ற கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு ஒப்பேற்றைப் பெறாத மனைப் பிரிவுகளிலும் வரைபடங்களுக்கு ஒப்பளிக்கப்படுகிறது. இதில் பொதுமக்களிடம் கையூட்டு பெறப்படுகிறது. அதேவேளையில் உள்ளூர் திட்டக் குழுமம் என்ற அமைப்பு ஒரு பகுதியைத் "திட்டப் பகுதி" என்று அறிவித்துவிட்டால் ஒரு கட்டிட மனைக்கு ஒப்புதல் பெறுவதற்கு ஒரு முறை சென்னையிலிருக்கும் நகர ஊரமைப்பு அலுவலருக்கு உள்ளூர் திட்டக் குழுமம் மூலம் மனுச்செய்து உட்பிரிவு ஒப்புதல் பெறவேண்டும். பின்னர் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் திட்ட இசைவு பெற வேண்டும். மூன்றாவதாக உள்ளூராட்சியிடம் வரைபட உரிமம் பெறவேண்டும்.

இதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மட்டத்திலும் கட்டணங்களும் கையூட்டுகளும் உண்டு. அலைச்சல்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் கணக்கில்லை.

இந்த நிலைமையில் இந்த உள்ளூர் திட்டக் குழுமத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவராக அந்தந்த நகராட்சியின் தலைவரும் உறுப்பினர் - செயலராக நகரமைப்பு அலுவலரும் இருந்து வந்தனர். புது ஏற்பாட்டின்படி உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்டங்களுக்கு ஒரே உறுப்பினர் செயலாகராத் திருநெல்வேலியிலுள்ள மண்டல நகரமைப்புத் துணை இயக்குநரும் அமர்த்தப்பட்டுள்ளனர். இனி ஒரு வரைபடத்துக்கான திட்ட இசைவு மனுவோ ஒரு மனைப் பிரிவு அல்லது மனை உட்பிரிவு மனுவை நகரமைப்பு இயக்குநருக்கு அனுப்பும் மனுவோ அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தான் கொடுக்கப்பட வேண்டும்.

அந்தந்த மாவட்டத் தலைநகருக்கும் உறுப்பினர் - செயலர் வரும்போதுதான் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் திருநெல்வேலியிலிருந்து உறுப்பினர் - செயலரின் வருகைக்காக மனுக்களும் மக்களும் காத்திருக்க வேண்டியிருக்கும். மக்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. நாளுக்கு நாள் உயரப் பறந்துகொண்டிருக்கும் விலைவாசியின் முன்னால் இந்த நாள் கடத்தும் நடைமுறையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

கட்டட விதிகளில் சூழ்நிலைக்கும் நடைமுறைக்கும் பொருந்தாதவை பல உண்டு. அத்துடன் திடீர் திடீரென்று புதுப்புதுச் சுற்றறிக்கைகளின் மூலம் நடைமுறைக்கு ஒவ்வாத புதுப்புது விதிகளை நகர ஊரமைப்பு இயக்குநர் புகுத்துவார். இந்த விதிகளுக்கு விலக்குகள் அளிப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் இவ்விலக்குளைப் பெறுவதற்குச் சென்னையிலுள்ள நகரமைப்பு இயக்குநர்(DTP) அலுவலகம் அல்லது தலைமைச் செயலகம் வரை வீடுகட்டுவோர் சென்று அவற்றைத் "தள்ளி" விட வேண்டும் என்பதிலிருந்து இதன் கடுமை புரியும்.

அடுத்த காலங்கடத்தும் இடம் வீடுகட்டக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களாகும். வீடுகட்டுவதற்குக் கீழ்க்கண்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.

1. கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்கள்
2. அரசு அலுவலகங்கள்
3. ஆயுள் உயிர் காப்பீட்டுக் கழகம்
4. வங்கிகள்
5. வீட்டு வளர்ச்சி நிதியளிப்புக் கழகம்(HDFC)
6. மேற்படி கழகத்திடமிருந்து பணம்பெற்றுக் கடன் வழங்கும் சில தனியார் நிறுவனங்கள்
7. மாநில வீட்டுவசதி வாரியம்

இவற்றில் ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.

1. கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்களில் கடன் மனுச்செய்யும் நடைமுறை எளிது. உள்ளாட்சியால் ஒப்பளிக்கப்பட்ட வீட்டு வரைபட நகல்களும் கடன் தொகையைத் தீர்மானிப்பதற்கேற்ற மதிப்பீடும் தேவை. அடுத்துக் கட்டடம் கட்டப்படவேண்டிய மனை மீது கடன் பெறுபவர்க்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்கள், வரைபடங்கள், மதிப்பீடுகளை ஆய்வு செய்து அச்சங்கத்தின் வழக்கறிஞர் கருத்துரை வழங்குவார். கருத்துரை வழங்கிய பின் கடனுக்கு ஒப்பளிப்பு வழங்கப்படும். ஒப்பளிப்புக்குப் பின்னர் கட்டட மனையையும் கட்டப்படவிருக்கும் கட்டடத்தையும் சங்கத்திற்குக் கடன்பெற விருப்பவர் அடமானம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

இதுவரை அனைத்தும் எளிதாக முடிந்துவிடும். இனிமேல் தான் சிக்கல். வீடமைப்புக் கூட்டுறவு சங்கங்களுக்கெல்லாம் ஒரு நடுவண் சங்கம் சென்னையில் இருக்கிறது. உள்ளூர்ச் சங்கத்தின் கையிருப்பில் கடன் கொடுக்கத் தேவையான பணம் இருந்தாலும் நடுவண் சங்கம் ஒப்பளித்தால் தான் கடனைக் கொடுக்க முடியும். இந்த நடுவண் சங்கம் எந்த நொடியில் வேண்டுமாயினும் மனுக்கள் வாங்குவதையும் கடன் தவணைகள் வழங்குவதையும் நிறுத்தி உள்ளூர் சங்கங்களுக்கு ஆணையிட முடியும்.

கூட்டுறவு சங்கங்களில் அரசு இயந்திரத்தின் தலையீடு எப்போதுமே உண்டு. நேர்மையாக நடக்க விரும்பும் சங்கங்கள் கூட அரசு அதிகாரிகளின் நெருக்குதல்களினால் ஊழல் புரிய நேர்வதுண்டு.

2. அரசு அலுவலகங்கள் எனும் போது நடுவண், மாநில அரசுகள் வெவ்வேறு நெறிமுறைகைளக் கையாள்கின்றன. நடுவணரசு அலுவலகங்களில் பணிபுரிவோர்க்கு எளிதில் கடன் கிடைத்து விடுகிறது. மனைப்பிரிவு ஒப்பளிக்கப்பட்டதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சியிடம் ஒப்பளிப்பு பெற்ற வீட்டு வரைபடம் இருந்தால் போதும் கடன் வழங்கப்பட்டுவிடும். அத்துடன் மனுச் செய்த ஆறு மாதங்களில் கடன் வழங்கப்பட்டுவிடும். நடுவணரசு சார்ந்த பிற நிறுவனங்களிலும் இதுவே நடைமுறை.

ஆனால் மாநில அரசின் கதையே வேறு. வீட்டுமனை நகரமைப்புத் துறையில் ஒப்பளிப்பைப் பெற்ற மனைப்பிரிவில் உள்ளதாயிருக்க வேண்டும். அத்தகைய மனைப்பிரிவில் உள்ளூராட்சியால் ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்துடன் மனுச் செய்ய வேண்டும். கடன் கொடுப்பது திடீர் திடீரென்று நிறுத்தி வைக்கப்படும். நீண்ட நாட்கள் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட கடன் வழங்கல் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனுச் செய்தவர்களுக்கே இப்போது கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசு சார்ந்த பிற நிறுவனங்களிலும் இது தான் நிலை.

உடனடியாக ஒரு வீடு வேண்டுமென்று விரும்புவோருக்குப் பயனில்லை இதனால். எனவே அவர்கள் வேறு கடன் நிறுவனங்களையே நாடவேண்டி வருகிறது. இருந்தால் இருக்கட்டும், கட்டி வாடகைக்கு விடலாம் என்று கருதுபவர்களுக்கே மாநில அரசின் இந்தக் கடன் கொள்கை உதவும்.

3. மூன்றாவதாக வருவது உயிர்க் காப்பீட்டுக் கழகம். காப்பீட்டாளர்களுக்கு வீடு கட்டும் கடன் வசதி செய்து கொடுக்கிறோம் என்று இக்கழகம் வாக்களிக்கிறது. கடன் தேவைப்படும் தொகைக்குக் காப்பீடு செய்ய வற்புறுத்துகிறது. அத்தொகைக்குக் காப்பீடு செய்து முடித்ததும் அதன் ஆர்வம் மங்கி விடுகிறது. காப்பீட்டுக் கழகத்தில் நடைமுறை கீழ்க்கண்ட வாறாகும்.

முதலில் கடன் தேவைப்படும் தொகைக்குக் காப்பீட்டில் சேர வேண்டும். பின்னர் உள்ளூராட்சியிடம் ஒப்பளிப்புப் பெற்ற வரைபடத்துடனும் மதிப்பீட்டுடனும் மனுச் செய்யவேண்டும். கழகத்தில் பதிவு பெற்ற பொறியாளரின் சான்று பெற வேண்டும். அதன் பின்னர் கழகத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞரின் கருத்தினைப் பெற வேண்டும். இவ்வளவுக்கும் பிறகு மனு மண்டல அலுவலகம் செல்லும். அங்கும் ஒரு முறை வேறொரு வழக்கறிஞரின் கருத்து பெறப்படும். அவர் குறைபாடுகள் எவற்றையேனும் சுட்டிக்காட்டினால் மீண்டும் ஒரு முறை திரும்பவரும். அதனைச் சரிசெய்ய வேண்டும்.

மீள அனுப்பப்பட்ட மனு மீண்டும் சில சிக்கலான அலுவலக நடைமுறைகளுக்காகப் பலமுறை மண்டல அலுவலகத்துக்கும் உள்ளூர் அலுவலகத்துக்கும் போய்த் திரும்பும். இதற்குள் பெரும்பாலான கடன் கேட்போர் தம் சொந்தப் பணத்திலும் அங்கிங்கு புரட்டியும் வீட்டைக் கட்டி முடித்து விடுவார்கள். அல்லாதவர் பாடு திண்டாட்டம் தான்! இதனால் தவறாமல் ஆதாயம் அடைபவர்கள் முகவர்கள் தாம்!

ஒப்பளிக்கப்பட்ட பின்பும் சிக்கல் தீர்ந்துவிடாது. மதிப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதிதான் கடனாகக் கொடுக்கப்படும். மீதித் தொகையின் விகிதத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் கடன் வேண்டுபவர் முதலில் கட்டட வேலை செய்து அதனைக் கழகப் பொறியாளர் ஏற்கச்செய்ய வேண்டும். இதற்காக அப்பொறியாளருக்கு ஒவ்வொரு முறையும் கழகம் கணிசமான தொகையைக் கடன் வேண்டுவோர் மீது சுமத்தும். எனவே விவரம் அறிந்தோர் உயிர் காப்பீட்டுக் கழகம் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.

4. வங்கிகள் கடன் கொடுப்பதாகக் கொள்கை அளவில் கூறிக்கொள்ளும். ஆனால் அக்கடன்கள் மூலம் பயன்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களும் தான். வீட்டுக் கடன் என்பதில் மட்டுமல்ல அரசுடைமை வங்கிகளிலிருந்து‌ கிடைக்கும் நன்மைகளில் பெரும்பாலானவற்றில் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தான் உரிமை உண்டு என்பது நடை முறை உண்மை.

5. எச்.டி.எஃப்.சி. எனும் நிதியளிப்புக் கழகத்தின் நடைமுறை எளிதானது. உள்ளூராட்சியிடம் ஒப்புதல் பெறப்பட்ட வரைபடம், மதிப்பீடு, மனையின் உரிமை பற்றிய ஆவணங்கள், வருமானத்தைப் பற்றிய சம்பளச் சான்றிதழ் அல்லது வருமானவரி ஆண்டறிக்கை இவற்றை இந்நிறுவனத்திடம் ஒப்படைத்துக் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு வருமானம் போதுமா போன்ற வழிமுறைகளை அது நிறைவு செய்தால் உடனடியாகக் கடன் வழங்கப்படுகிறது.

மாவட்டத் தலைநகரங்களுக்கு மாதம் ஒரு நாள் வருகைதரும் கழகத்தின் அலுவலர்கள் மூலமாகவே கடன்தொகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே இன்னொரு கடன் நிறுவனத்திடம் கடன் நிலுவை இருந்தாலும் அதைச் செலுத்திப் போக அக்கடன் வேட்பாளரால் மாதந்தோறும் கட்ட இயலக்கூடிய தொகைக்கு இக்கழகம் கடன் வழங்குகிறது. இது இக்கழகம் மட்டுமே காட்டும் சலுகையாகும். இக்கழகத்தின் நடைமுறையைக் கூர்ந்து பார்த்தால் வீடு கட்டுதல் என்பதை விட வட்டிக்குக் கடன் கொடுத்துத் திரும்பப் பெறல் என்பதிலேயே அது குறியாயிருப்பது புலப்படும்.

6. இக்கழகத்திடம் கடன்பெற்றுக் கழகத்தில் அதே எளிய நடை முறைகளுடன் அதே வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனங்களும் உள்ளன.

7. இறுதியில் வருவது மாநில வீட்டுவசதி வாரியம். இந்நிறுவனம் அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் நோக்கத்தில் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தனியாருக்கு வீடுகட்டவும் மனைகளை அமைத்துச் சாலை, குடிதண்ணீர், வடிகால் வசதி, புதை சாக்கடை முதலிய வசதிகளோடும் மக்களுக்கு அளித்தது.

அண்மைக் காலத்தில் இதன் நடவடிக்கைகள் மிகவும் விரிவடைந்துள்ளன. எல்லா நகரங்ளைச் சுற்றியும் வீடமைப்பதற்கென்று தனியார் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையில் இக்கையகப்படுத்தலிலிருந்து தப்புவதற்கென்று பெருந்தொகை, கைக்கூலியாகவும் கைமாறுகிறது. அத்துடன் வணிக நோக்கில் செயற்படும் இக்கழகத்திற்கு அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்துவது முறைகேடு என்ற குரலும் புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட மனை அல்லது வீடு முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்திப் பின்னர் மாதத் தவணைகளில் மீதித் தொகையைச் செலுத்துதல் என்ற அடிப்படையில் பொது மக்களுக்குக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு விந்தை என்னவென்றால் சொத்தை ஒப்படைக்கும் ஆவணத்திலுள்ள ஒரு கட்டுப்பாடு கட்டடங்களில் கட்டுமானம் தரமாயில்லை என்று மறுப்புரை கூற அவற்றைப் பெறுவோருக்கு உரிமை இல்லை என்பது. இது எப்படி இருக்கு?

அன்றியும் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் என்ற ஒதுக்கீடுகளைப் பயன்படுத்திப் போலிச் சான்றிதழ்களைப் வைத்து வீடு ஒதுக்கீடு பெற்று விடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் தனித்தனி மனுக்கள் அளித்துக் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வீடு கிடைத்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் பத்து வீடுகள் வரை கிடைக்கிறது. உண்மையான ஏழைகளுக்கும் வீடு தேவைப்படுவோருக்கும் வீடுகள் கிடைப்பது அரிது.

மேற்கூறிய கடன் நிறுவனங்களில் செயற்பாட்டைத் தொகுத்து ஆய்ந்தால் பொதுமக்கள் கடன் பெற்று வீடு கட்டவோ கட்டிய வீட்டைத் தவணை முறையில் பெறவோ வேண்டுமென்றால் ஒன்று எச்.டி.எஃப்.சி.யை நாட வேண்டும் அல்லது வீட்டுவசதி வாரியத்தை நாட வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் நெருக்கப்படுகிறார்கள் என்பது பெறப்படும். அது மட்டுமல்ல! இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் ஏறக்குறைய 85 பங்கு உலகவங்கி மூலதனத்தில் எச்.டி.எஃப்.சி. தொடங்கப்பட்டதென்பதும் மாநில வீட்டுவசதி வாரியத்தில் இப்போது பெருமளவு உலகவங்கி முதலீடு உள்ளதென்பதையும் கவனத்தில் கொண்டால் நாம் பெறும் விடை யாது? இவ்வாறு உலக வங்கியின் முதலீடு இவ்விரு நிறுவனங்களிலும் நுழைந்த பின்னர்தான் வீடுகட்டும் கடனில் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு வருமானவரி கணிப்பில் கழிவுண்டு என்ற விதி சேர்க்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் வேளாண் நிலங்களில் வீடுகள் கட்டக் கூடாது என்று இரண்டாண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விலக்கு உண்டு என்பதையும் கட்டட விதிகளில் சிக்கலானவற்றுக்கு அரசே விலக்கு அளித்து விடுகிறது என்பதையும் கவனத்தில் கொண்டால் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை விளங்கும்.

மறைமுகமாகவும் நேரடியாகவும் பூட்டப்பட்டுள்ள விலங்குளையும் அகற்றினால் இந்தியாவிலுள்ள பொதுமக்களாலும் எச்.டி.எஃப்.சி., வீட்டுவசதி வாரியம் போன்ற அரசு நிறுவனங்களின் செயற்பாட்டை அவற்றைவிடவும் சிறப்பாகவும் நல்ல தரத்துடனும் செய்ய முடியும். அதன் மூலம் இவ்வரசு நிறுவனங்களைப் போல் பல நூறு மடங்கு இந்திய மக்களுக்கு வீடுகட்டும் பணியில் சிறப்புடனும் வீறுடனும் ஈடுபட்டு நிறைவேற்ற முடியும்.

ஆனால் விலங்குகள் ஒடியும் நன்னாள் எந்நாளோ?

(21.10. 93 தினமணியில் சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது.)

0 மறுமொழிகள்: