புதிய நூற்றாண்டு புத்தக நிலையத்தாரின் (என்.சி.பி.எச்) திறனாய்வுக்கு மறுமொழி
அன்புடையீர் வணக்கம்.
எனது 8 கட்டுரைகள் அவை குறித்த 19.4.95 நாளிட்ட தங்கள் திறனாய்வுடன் கிடைத்தன. அதில் நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடைகளையும் என் சில ஐயப்பாடுகளையும் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
குமரிமைந்தன் யார்?
இயற்பெயர்
செ. பெரியநாடார்
புனைபெயர்கள்
குமரிமைந்தன், பேயன்
பிறந்த இடம்
குமரி மாவட்டம்
பிறந்த நாள்
04-05-1939
பெற்றோர்
செல்லப்பெருமாள் - அன்னவடிவு
கல்வி
பொது - இடைநிலை வகுப்பு
தொழில் - எல்.சி.இ. (பொதுப் பொறியியல் உரிமம்)
வேலை
1960 முதல் 1983 வரை 24 ஆண்டுகள் தமிழகப் பொதுப் பணித்துறையில் பிரிவு அலுவராகப் பணி. பின்பு விருப்ப ஓய்வு பெற்று சொந்தத் தொழில்.
அரசியல் சார்பு
தோற்றம் - திராவிட இயக்கம்
மலர்ச்சி - தனித் தமிழ் இயக்கம்
முதிர்ச்சி - மார்க்சியம்.
எழுத்துப்பணி
ஆக்கிய நூல்கள்
1. பஃறுளி முதல் வையை வரை
2. தமிழகச் குமுக வரலாறு-வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும்
3. விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும்
4. நலிந்து வரும் நாட்டுப்புறம்
தமிழாக்கம்
1. பொறியியற் கல்லூரிக் கைநூல்-பாசனம் ஆசிரியர் டபுள்யூ.எம். எல்லிசு.
2. சோசலிச நடப்பியமும் இன்றைய இலக்கிய நிகழ்முறையும் ஆசிரியர்: ஓவ்ச்சாரெங்கோ வெளியீடு: நியூ செஞ்சரி புத்தக நிலையம்.
இனி கட்டுரைகளுக்கு வருவோம்:
பாசனம், பாலைத்திணை, தைப்பொங்கல் பற்றிய கட்டுரைகளை மனந்திறந்து பாராட்டியுள்ளமைக்கு என் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிவு மறைவில்லா உங்கள் நேர்மையான திறனாய்வுப் பண்புக்கு என் பாராட்டுகள்.
வீட்டைக் கட்டிப்பார்:
'வங்கிக் கடன்களினால் பயம்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் தான்' என்று நான் கூறியிருப்பதற்குக் கொதித்துப் போயிருக்கிறீர்கள். அரசியல்வாதிகளும் தொழில் முதலாளிகளும் தான் என்று சாவடியிருக்கிறீர்கள். முதலில் நான் குறிப்பிட்டிருப்பது வீடுகட்டும் கடன் பற்றி. நீங்கள் ஒரு அரசியல் வாதியாகவோ தொழில் முதலாளியாகவோ இல்லாமலிருந்தால் நகைக்கடன் போன்ற சில்லரைக் கடன்களுக்குத் தான் வங்கியை நாடுவோம். அந்த மட்டத்திலிருந்து நான் பேசுகிறேன். இரண்டாவதாக, வங்கியோடு தொடர்பில்லாத அரசியல்வாதி எப்படி வங்கிப் பணத்தை விழுங்க முடிந்தது? 45.000 கோடி உரூபாய் திரும்பப்பெற முடியாத கடனாய் எப்படிப் பாழானது? நாட்டுடைமையாக்கம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் கையில் உங்கள் கட்சியினர் கொண்ட முயற்சி தானே காரணம்? நாற்பத்தைந்து ஆயிரம் கோடி மக்கள் பணம் பாழாவது எத்தனை தனியார் வங்கிகள் திவாலாலும் நிகழாதே! இப்போதாவது அரசுடைமைக்கு எதிராள நீங்கள் குரல்கொடுக்க ஆயத்தமா? உயரதிகாரிகளின் கைகளிலும் அரசியல்வாதிகளின் கைகளிலும் 85 கோடி மக்களின் பொருளியல் நடவடிக்கைகளை, பொருளியல் வாழ்வினை அடகுவைப்பது தான் சோசலிசமா? கூட்டுறவுத்துறை போன்றவையும் அத்தகையவை தானே?
வருமான வரி தேவையா?
உங்கள் எதிர்ப்பில் சாரமில்லை என்பது உங்களுக்கே புரிந்திருக்கிறது. எல்லா நாடுகளிலுமிருப்பதால் இங்கும் தேவை என்கிறீர்கள். யாருடைய நோக்கம் நன்னோக்கம்? முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்காமல் மக்களை அவர்கள் கொள்ளையடிக்க விட்டுவிட்டு அவர்களிடமிருந்து வழிப்பறி செய்வதைக் கட்டுரை தெளிவாகக் கூறியுள்ளதே! முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்களென்றால் அரசு அதைத் தடுக்க வேண்டும். இல்லாத நிலையில் அது சட்டப்படி ஈட்டப்பட்ட பணம் தானே! அதில் எத்தனை நூற்றுமேனி கருப்புப் பணம் என்ற கணிப்பே வருமானவரித்துறை அவ்வப்போது நிறுவும் வரியில்லா வருமானத்தின் உச்சவரம்பு அடிப்படையில் தானே! அரசியல்வாணர்களும் கொள்ளைக்காரர்களும் சுருட்டும் பல கோடிக்கணக்கான கள்ளப்பணம் சட்டப்படி ஈட்டப்பட்ட இந்தக் ′′கருப்புப் பணம்′′ போல் பறிமுதல் செய்யப்படுவதில்லையே! ஆளும் கும்பலில் இந்த அடாவடியினால்லவா பல கோடிக்கணக்கான கோடி உரூபாய்கள் முடங்கிப் போய் பன்னாட்டு நிறுவனங்களும் உலகவங்கியும் பணக்கார நாடுகளிலுள்ள கயவாளிகளெல்லாம் இந்த மண்ணில் முதலை விதைத்து வளமெல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் வகையில் மூலதன வெற்றிடம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது? இதற்கு உங்கள் அணுகல் தானே மூலகாரணம் .
அந்த ஆறடி நிலம் யாருக்கு?
வீடு கட்டுபவர்களுக்கு நகராட்சி தரும் தொல்லைகளையல்ல அரசு தரும் தொல்லைகளைத் தான் குறிப்பிட்டுள்ளேன். வீட்டைக் கட்டிப்பார் கட்டுரையோடு தொடர்புடையது இது. உலக வங்கியின் முதலீட்டுக்களமான வீடமைப்பு வாரியத்துடன் சேர்ந்து தமிழக அரசு பொது மக்களின் வீடுகட்டும் நடவடிக்கைகளை முடமாக்குகிறது என்பது கட்டுரையின் கரு. உங்களுக்கத் தான் அரசும் அதன் உறுப்புகளும் அவற்றின் அதிகாரிகளும் புரட்சியின் மூலவிசைகளாயிற்றே! இத்தகைய கட்டுரைகளின் சாரம் எங்கே புரியப் போகிறது?
நிலவுடைமைக் குளறுபடிகள்
நிலப் பிரச்சனை என்ன?
பொதுமை இயக்கம் ஊழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை வைத்துள்ளது. இதில் உழுபவன் என்பது நிலத்தைக் குத்தகைக்குப் பயிரிடுவோனையும் உழுதொழிலாளியையும் குறிப்பிடும் பொதுச் சொல்லாகும். இதில் பயிரிடுவோனுக்கே நிலம் சொந்தம் என்பது சரியான நிலைப்பாடு, ஏனென்றால் குத்தகை முறை என்பது பண்டை நிலக்கிழமை(நிலப்பிரபுத்துவம் - Feudalism)யின் தொடர்ச்சி அல்லது நிலத்தைத் தீண்டாத நிலவுடைமை (Absentee landlordism)யின் விளைவு. முதல் முறையில் உழவன் நிலத்திலிருந்து விடுபட முடியாதவாறு தளைப்பட்டிருக்கிறான். நிலமும் அவ்வாறே தளைப்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை அகற்றி நிலம் அதன் உடமையாளரால் நேரடியாகப் பயிர்செய்யப்படுவதால் நிலவுடைமையாளனின் கவனிப்பும் ஈடுபாடும் அதன் மூலம் நிலத்தின் விளைதிறனும் உயர்கின்றன. நிலவுடைமையாளனும் பயிரிடுவோனும் ஒன்றாகிவிடுவதால் அவன் தன் நிலத்தை விற்றுவிட்டு மாற்றுத் தொழிலில் இறங்கும் உரிமையையும் பெற்றுவிடுகிறான். இதன் மூலம் பெருநிலவுடைமைகள் உருவாகி முதலாளிய வேளாண்மை உருவாவதற்கு வழியேற்படும். ஐரோப்பாவின் நிலக்கிழமைச் குமுகம் உடைந்து முதலாளியம் தோன்றுவதற்கு இந்தக் குத்தகை ஒழிப்பு தான் வழிகோலியது. இதைத்தான் நானும் பரிந்துரைத்துள்ளேன். உழுதொழிலாளியை நிலவுடைமையாளனாக்குதல் அவனைப் புதிய அடிமைத் தனத்துக்கு இட்டுச்செல்லும் என்பதைப் பட்டறிவுள்ள குறு உழவன் ஒருவனைக் கேட்டீர்களாயின் புரிந்து கொள்ளலாம்.
நில உச்ச வரம்பு என்பது இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் குழப்பமானது. குத்தகையாக நிலங்களை விட்டிருக்கும் ஒருவன் அதே நிலையில் உச்சவரம்புக்கு ஆளானால் உச்சவரம்புக்குட்பட்ட நிலம் குத்தகையொழிப்புக்கு ஆளாகுமா? சொந்தப் பயிரிடும் நிலம் உச்சவரம்புக்கு மிகுந்திருந்தால் அது பறிக்கப்படுமா? என்பதெல்லாம் தெளிவாக இல்லை. சொந்தப்பயிரில் இருக்கும் நிலம் உச்ச வரம்புக்கு ஆளாவது அதாவது துண்டு துணுக்குகளாவது குமுக வளர்ச்சித் திசைக்கு எதிரான செயலாகும்.
இங்கு மார்க்சியத்தில் அடிப்படை ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். குமுக வளர்ச்சி என்பது முந்தியல் பொதுமை, அடிமைச் குமுகம், நிலக்கிழமையியம், முதலாளியம், பொதுமை என்ற வரிசையில் நிகழ்கிறது என்பது மார்க்சின் முடிவு. இவற்றில் எந்தவொரு கட்டத்தினுள்ளும் நுழையாமல் தாண்டி இன்னொரு கட்டத்தினுள் தாவிக்குதிக்க முடியாது என்பது அவரது திட்டவட்டமான முடிவு. புதிய கட்டத்தின் பேறுகால நீட்சியையும் நோவையும் வேண்டுமானால் குறைக்கலாம் என்பது அவரது கூற்று. இந்த அடிப்படையில் முதலாளியத்துக்கு முந்தியதாகிய நமது குமுகம் (பணக்கார நாடுகள் தங்கள் மூலதனத்தையும் தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் கொண்டு நிறுவியுள்ள தொழிற்சாலைகளை வைத்து நம் நாடு முதலாளிய நாடு என்று வாதிடுவது தவறு. பழைய சாதி சார்ந்த விளைப்பு முறைகள் முற்றிலும் உடைபட்டு, மலைகளில் வாழும் ஆதிவாசிகளும் நிலத்துக்கு வந்து முதலாளிய விளைப்பு முறையில் ஈடுபட்டு, குடும்ப அமைப்பு தகர்ந்து, சமயம் கேள்விக்குரியதாகி வரும் நிலை தான் நாம் முதலாளியத்தினுள் முழுமையாக நுழைந்து விட்டதற்கு அறிகுறி. இந்நிலை வராமல் தடுப்பதற்கே இயக்கங்களை மார்க்சிய இயக்கங்கள் நடத்துவது தான் வரலாற்று அவலம்) முதலாளியத்தினுள் நுழைய வேண்டுமானால் கோயில் நிலங்கள் உட்பட (கோயில் நிலங்களைப் பற்றி நீங்கள் மூச்சுவிடுவதே கிடையாதே ஏன்?) அனைத்துக் குத்தகை நிலங்களும் பயிரிடுவோர்க்குச் சொந்தமாக வேண்டும். அதன் மூலம் பெருநில உடைமைகள் உருவாகி சிறு நில உடைமையாளர்கள் முதலாளிய வேளாண்மையின் தொழிலாளர்களாக வேண்டும். இந்த இடைமாற்றத்தின் போது சிறு உடைமையாளர்களுக்குப் பெரும் இன்னல்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது தான் மார்க்சியர்களின் கடமை.
நிலக்கிழமைச் குமுகத்திலிருந்து முதலாளியச் குமுகத்துக்கு மாறிச் செல்வது ஒரு குமுக முன்னேற்றம என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் பொதுமைக் கட்சி அறிக்கையில் ஐரோப்பாவில் முதலாளியச் குமுகம் உருவாகிய நிலையில் பழைய மூடநம்பிக்கைகள், கீழ்ந்தரமான குமுக உறவுகள் போன்றவை எவ்வாறு உடைந்து சிதறின என்பதை விளக்கி அந்தக் கட்டத்தில் முதலாளியத்தின் இந்த முற்போக்குத் தன்மை பற்றி மார்க்சும் ஏங்கல்சும் மனம் மகிழ்ந்து பாராட்டியிருப்பதைப் படித்திருப்பீர்கள். எனவே குத்தகை நிலம் சொந்த நிலமாவது முற்போக்கு தான்.
சிறுவுடைமை பெருவுடைமையாவது முற்போக்கு தான். சொந்தப் பயிரிடும் நிலம் உடைந்து சிதறுவது வளர்ச்சிக்கு எதிரானது தான். பெருவுடைமையும் அது வேளாண்மையாயிருந்தாலும் தொழில்துறையாயிருந்தாலும் அதில் உழைக்கும் தொழிலாளர்களும் முதலாளியத்துக்கு அடுத்த கட்டமாகிய சோசலிசத்தின் இன்றியமையாத உறுப்புகள். அந்த உறுப்புகளை உருவாக்குகவதே மார்க்சியர்களின் வரலாற்றுக் கடமை.
நிலவுடைமையராகியுள்ள முன்னாள் குத்தகையாளர்கள் விரைந்து வளர்வதை நீங்கள் அறிவீர்களோ என்னவோ. ஆனால் அது இன்று நடைமூறை உண்மை.
நேரு மரபினரும் நரசிம்மராவும் நிலஉச்சவரம்பைச் செயற்படுத்தவில்லை என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் உச்சவரம்புச் சட்டம் நிலத்தை முடமாக்கவே பயன்படுகிறது என்னும் என் கருத்தில் என்ன பிழை?
உழுபவன் என்பவன் பயிரிடுவோனா? உழுதொழிலாளியா? குத்தகை ஒழிப்பு பற்றிய தங்கள் நிலைப்பாடு என்ன அருள்கூர்ந்து தெளிவுபடுத்துங்கள். நிலச்சுவான்தார் எனும் சொல் நிலப்பிரபு அல்லாத சொந்தப் பயிரிடும் நிலவுடைமையாளரைக் குறிக்கிறதா? குத்தகைக்கு நிலத்தை விடும் நிலவுடைமையாளரைக் குறிக்கிறதா? அல்லது மூவருக்கும் பொதுவானதா? நான் வேளாண்மையை. முதலாளிய முறையில், முழுவதும் சொந்தப் பொறுப்பில் செய்பவரிடம் நிலங்கள் திரள வேண்டுமென்று கூறுகிறேன். அது தான் மார்க்சியம் காட்டும் வழி.
ஒதுக்கீடும் ஏழ்மையும்:
ஆடம்ஸ்மித்தைக் குறை சொல்லியிருப்பதை ஒரு குறையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
வரலாறு தெரிந்த நாள் முதல் உலக வாணிகம் என்பது உலக வாணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு குழுவுடன் அந்தந்த நாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்நாட்டுக் குழுக்கள் கூட்டுச் சேர்ந்து அனைத்து மக்களையும் கசக்கிப் பிழிவதாகும். பினீசியர்கள் தொடங்கி இன்றைய ′′காட்′′ ஒப்பந்தக்காரர்கள் வரை நிலமை மாறவில்லை. ஐரோப்பாவில் தொழிற்புரட்சியே இவ்வகை வாணிகக் குழுக்களின் நடவடிக்கைகளிலிருந்து தான் உருவானது. அத்தொழிற்புரட்சியின் பொருளியல் கணக்கனான ஆடம்ஸ்மித் அத்தகைய வாணிக நலன்களை முன்னிட்டுத் தானே கோட்பாடுகளை வகுத்துள்ளார்?
இந்தப் பொருளியல் பின்னனியில் உருவாள பாராளுமன்ற மக்களாட்சி அரசியல்வாணர்களும் அதிகாரிகள் கூட்டமும் இவ்விருசாரார்க்கு வேண்டியவர்களுமாக நடத்தும் குழவாட்சி நிலையிலிருந்து மீளவில்லை. குழுக்களின் பொருளியல் நடவடிக்கைகளுக்கேற்ற குழுவினராட்சி(Oligarchy) தான் பாராளுமன்ற மக்களாட்சி. பணக்கார நாடுகளில் உள்ள 25 நூற்றுமேனி மக்களுக்கு உலக முழுவதுமுள்ள செல்வங்கள் சென்று பாய்வதால் பாராளுமன்ற வடிவத்தில் குழுவாட்சி உள்ளடக்கம் அவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றவில்லை. ஏழை நாடுகளில் அது துலக்கமாகத் தெரிகிறது. எனவே இக்குழுவினராட்சிமுறையை ஒழித்துப் பொதுமக்கள் யாவரும் பங்கு கொள்ளும் புதிய வகையிலான மக்களாட்சி மலர வேண்டுமாயின் ஒவ்வொரு நாட்டு மக்களும் தத்தம் நாட்டு வளங்களைத் தத்தம் நாட்டு மூலதனத்துடனும் உழைப்புடனும் தத்தம் நுகர்வுக்கேற்ற வகையில் உழைத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வந்நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு அவ்வந்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தொழில்நுட்பங்களை வளர்க்க வேண்டும். அதற்கு முதற்படித் தேவை அரசிடமிருந்து உள்நாட்டு, மற்றும் எல்லைக் காவல், நீதிமன்றங்கள், பணப்புழக்கம், வெளிச் செலாவணி போன்ற துறைகள் தவிர பொருளியல் நடவடிக்கை அனைத்தையும் பிடுங்கி அவற்றில் உள்நாட்டு மக்களுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படையிலமைந்த ஐரோப்பியப் பொருளியல் கோட்பாடுகளைக் குறை கூறியுள்ளேன்.
சோசலிசத்தைக் குறை கூறவில்லை, போலி சோசலிசத்தைத் தான் குறை கூறியுள்ளேன். அண்மைக் காலத்தில் 1953க்குப் பின்னர் பொதுமைக் கட்சி கடைப்பிடித்து வரும் செயல் திட்டத்தைத் தான் குறை கூறியுள்ளேன். வங்கிகளை அரசுடைமையாக்குதல், கூட்டுறவு அமைப்பின் கீழ் மரபுத் தொழில்களைக் கொண்டு வருவது, தொழில்களை அரசுடைமையாக்குவது, உணவுப் பொருட்கள் அனைத்தின் கொள்முதலையும் விற்பனையையும் அரசே மேற்கொள்வது நிலத்தை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுப்பது, வருமானவரி மூலம் பணக்காரர்களிடமிருந்து செல்வத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பயனுள்ள திட்டங்களைத் தீட்டுவது என்பதாகும் அது.
இதே கோட்பாடுகளைக் கொண்டு உருவான இன்னொரு இயக்கம் சோசலிச அனைத்துலகியம். இது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டது. லோகியா, ராசநாராயணன், சார்சு பெர்ணாண்டோ ஆகியோர் இவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள். இவ்வியக்கம் மார்க்சு காலத்திலேயே உருவாகி விட்டது. இதைக் கற்பனைச் சோசலிசம் என்று மார்க்சு குறிப்பிட்டுள்ளார். தான் பரிந்துரைக்கும் சோசலிசத்தை அறிவியல் சோசலிசம் என்றும் பொதுமையியம் என்றும் குறிப்பிட்டார். அதைப் புரட்சிகர சோசலிசம் என்றும் கூறினார். இருக்கும் அரசுப் பொறியைத் தகர்த்தெறிந்து பாட்டாளி மக்களின் முற்றதிகாரத்தின் கீழ் அனைத்து விளைப்பு வகைதுறைகளையும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக்கி வகுப்பில்லா ஒரு குமுகத்தை நோக்கிச் செலுத்தி அரசே தேவையில்லா நிலையை உருவாக்க வேண்டுமேன்று அவர் கூறினார். இதை சோசலிசக் கட்டம் என்றும் பொதுமைக் கட்டம் என்றும் இரண்டாய்ப் பிரித்தவர் லெனின் தான். உருசியாவில் நடந்தது ஒரு சோசலிசப் புரட்சியா இல்லையா என்பதில் அவர் பெரும் குழப்பம் அடைந்திருந்தார் (லெனினையமா குறை சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா! மார்க்சும் லெனினும் மனிதர்கள் தானே! வளர்ச்சியென்பது தட்டுத்துதருமாறிய முன்னேற்றம் தானே!) அதனால் முதலாளியத்துக்குள் நுழையாமல் நிலக்கிழமையிலிருந்து நேரடியாக பொதுமையினுள் நுழையும் முயற்சி தோல்வியுற்றது. மாறாக முதலாளியத்தினுள் நுழைவதாகத் திட்டம் தீட்டியிருந்தால் சப்பானைப் போல் 20 ஆண்டுகளில் முதலாளியத்தை நோக்கித் தான் மட்டுமல்ல ஏழை நாடுகள் அனைத்தையும் இட்டுச் சென்று இன்று உலக மக்கள் பண்பாட்டில் அடுத்த கட்ட வளர்ச்சிக்குள் நுழைய ஆயத்தமாக்கியிருக்கலாம்.
இன்று நீங்கள் கைக்கொண்டிருக்கும் செயல் திட்டமும் மார்க்சும் ஏங்கல்சும் கற்பனைச் சோசலிசம் என்று நகையாடிய போலிச் சோசலிசமும் ஒன்று தான். நீங்கள் சோவியத் முகாமுக்கு ஆதரவாக நின்றீர்கள்; அவர்கள் அமெரிக்க முகாமுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அடிப்படையில் இரு குழுவினரும் வல்லரசு நாடுகள் எளிதாக இங்கு நுழைந்நு தம் பொருளியல் பேரரசுகளை அமைத்துக் கொள்வதற்குத் தேவையான பொருளியல் வெற்றிடங்களை உருவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள்.
தவறான அணுகுமுறையால் மக்களாட்சிப் பட்டறிவில்லாத சோவியத் மக்களை அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் சுரண்டிக் கொழுந்திருந்தனர்; அதனை உடைக்கக் கோர்ப்பசேவ் முயன்றபோது அவரது துனைவர் ஒருவர் கூறினார், ஊழலால் ஆட்சியாளர்களிடம்(அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும்) திரண்டிருக்கும் செல்வத்தை ஏற்றுக் கொண்டு அதை அவர்கள் தொழில்களில் முதலீடு செய்ய வகைசெய்தால் சோவியத்தின் பொருளியல் நெருக்கடியிலிருந்து தப்பலாம் என்று. கோர்ப்பசேன் மாறாக அமெரிக்காவின் கால்களில் வீழ்ந்தார். குடும்பத்தைப் பட்டினிபோட்டு காரல்மார்க்சு உருவாக்கிய கோட்பாடு, வாழ்நாளின் பெரும் பகுதியைத் தலைமறைவாகக் கழித்த லெனினின் கனவுகள் கோடிக்கணக்கான சோவியத் மக்களின் குருதி அனைத்தும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்ததாலும் தெளிவின்மையாலும் இரண்டகங்களாலும் வீணாயின.
இந்தப் பாடங்களிலிருந்து பெறப்படுவது என்னவென்றால் மார்க்சு முதலாளியத்தை எய்திய நாடுகள் நிகர்மையை எய்துவதற்காக செயல்திட்டத்தைத் தான் வகுத்துத் தந்தாரேயோழிய ஏழை நாடுகள் முதலாளியத்தினுள் நுழைவதற்கான செயற்திட்டத்தை வகுத்துத் தரவில்லை. அது இப்போது தேவைப்படுகிறது. எனவே ஏழை நாடுகள் முழுமையான முதலாளியத்தினுள் நுழைவதற்காக செயற்திட்டம் ஒன்றை உடனடியாக வகுக்கு வேண்டும். இந்த அடிப்படையில் தான் நான் முதலாளிய விளைப்பு முறைகளை வேளாண்மையிலும் தொழில்துறையிலும் புகுத்துவதற்கு வசதியாக பெருநிலஉடைமை (நிலப்பிரபுத்துவமோ குத்தகை வேளாண்மையா அல்ல) பெருந்தொழில் அமைப்புகள் வேண்டும் என்கிறேன்.
எனக்கொரு ஐயம் Capialism என்ற சொல்லுக்கு தனியுடைமை என்று பொருள் கொண்டிருக்கிறீர்களோவென்று. ஏழைநாடுகளில் இன்று நிலவுவது தனியுடைமை மட்டும் தான். பணக்கார நாடுகளில் தான் அதாவது மார்க்சின் சுற்றுப்படி Classical Capitalism நிலவுகிறது. அனைத்து விளைப்பு வகைதுறைகளும்(Means of Production) விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலரின் கைகளில் குவிவது, பெரும்பான்மை மக்கள் கூலித் தொழிலாளர்களாக மாறுவது. இது தான் பொதுமையியத்துக்கு முந்தியதாக அதற்கு முன்னோடியாக அமையத்தக்க பொருளியல் அமைப்பென்று மார்க்சு கூறினார். இங்கு மாற்றம் மிக எளிது. தனிஉடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணத்தக்க அந்த ஒரு சிலரை அகற்றிவிட்டால் பெரும்பெரும் பொருளியல் அமைப்புகளைத் தொழிலாளர்களே கையாண்டுவிடலாம். எனவே பெரும் முதலாளியத்தைப் பரிந்துரைத்தன் மூலம் மார்க்சியத்திலிருந்து நழுவி விட்டதாக நான் கருதவில்லை.
சோவியத் ஒன்றியம் கலைந்து போய்விட்டதால் மார்க்சியம் தோற்றுவிட்டதாய் நான் கருதவில்லை. மழலைப் பருவத்து மார்க்சியம் தன் தவறுகளின் விளைவைச் சந்தித்துவிட்டது. தவறுகள் என்னென்ன என்று கண்டுபிடிக்க வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறது. இக்காலகட்டத்தில் அதுபற்றிய ஒரு கலந்துரை தேவையென்று நீங்கள் கருதினால் என் கட்டுரையை உங்கள் திறனாய்வுகளுடனும் என் விளக்கங்களுடனும் வெளியிடலாம். முடிவு உங்கள் கையில்.
அன்புடன்,
குமரிமைந்தன்.
பெறல்:
நியூ செஞ்சுரி புத்தக நிலையம்.
1 மறுமொழிகள்:
அன்பு குமரிமைந்தன்,
உங்களுடைய பதிவுகளுக்கு ஒரு முன்னுரை அளித்திருந்தீர்கள் என்றால், ஓரளவு நீங்கள் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்கும்.
வருமான வரியைப் பொறுத்தவரை,
வேறு விதங்களில் அதை எப்படி
உபயோககிக்கலாம் என்பது குறித்து
எனது கட்டுரை ஒன்றை (என் பெயர் கொண்ட பதிவில்: "நதி நீர் இணைப்பு") பார்த்தால், ஆக்கபூர்வமாக இது குறித்து மேலும்
சில கருத்துக்கள் உங்களுக்குத்
தோன்றலாம்.
ஜீவி
கருத்துரையிடுக