30.7.07

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...1

பொருளிலக்கணமும் தொல்காப்பியமும்:

தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்று வகைப்படுத்தியிருப்பது தொல் தமிழ் மரபு. இன்று இம்மூன்று இலக்கணங்களும் ஒருசேர அமைந்ததாக நமக்குக் கிடைத்திருக்கும் நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம், கோட்பாடு வகுத்தல் என்ற வகையில் முதல் நூலல்ல. ஏற்கனவே வழக்கிலிருந்த கோட்பாடுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நூல்.‌ நூற்பாக்களில் 'என்மனார் புலவர்', 'என்ப' என்ற சொல்லாட்சிகளை இதற்குச் சான்றாகக் கூறலாம். அத்துடன் ஏற்கனவே அடிப்படை இலக்கணம் அறிந்தவர்க்கே சொல்லப்படுவது போலும் தொல்காப்பியம் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக,

அகர முதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப

ஒளகார இறுவாய்ப்
பன்னீரெழுத்தும் உயிரென மொழிப

னகர இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப

என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர எங்கும் எழுத்துக்கள் வரிசையிட்டுக் காட்டப் படவில்லை. அதேபோல் பொருளதிகாரத்திலும் ஏழுதிணைகளும் வரிசைப்படுத்தப் படவில்லை. இவ்வாறு இலக்கணம் அறிந்தவர்க்கே சொல்லப்படுவதால் நிலவிவரும் இலக்கண மரபில் அக்காலச் சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களை உள்ளடக்கியதாக இந்நூல் செய்யப்பட்டிருப்பதாக நாம் கருதினோமாயின் அந்த வகையில் புதிய ஒரு கோட்பாட்டைப் படைத்த முதல் நூல் என்றும் கூறலாம்.

பொருளிலக்கணம் என்றால் என்ன?

எழுத்தும் சொல்லும் இலக்கியத்தின் வடிவத்தைத் தரும் மூலப்பொருளாகிய ஓசையின் இரு நிலைகள். இந்த மூலப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்ட இலக்கியத்தின் உள்ளடக்கம் தான் பொருள். அதாவது பொருள் என்பது இலக்கியத்தின் நுவல் பொருளாகும். இந்த நுவல் பொருளை அன்று நிலவிய பல்வேறு துறை அறவி‌ய‌ல்களின் துணை கொண்டு வரையறுப்பதே பொருளிலக்கணத்தின் நோக்கம். இந்த நம் முடிவுக்குத் திணை என்றால் என்ன என்ற ஆய்வு துணை செய்யும்.

திணை என்றால் என்ன?

திணை என்பதற்கு ஒரு வரையறை கூறவேண்டுமாயின் திணைக்குரியனவாகக் கூறப்படும் முப்பொருட் பிரிவுகளையும் நாம் காண வேண்டும். அவை முதல், கரு, உரிப் பொருட்களாகும். முதற்பொருள் என்பது நிலம், பொழுது என்ற இரண்டுமாகும். பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என முதலது ஆண்டையும் மற்றது நாளையும் அவ்வாறாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. இந்த வகைப்பாட்டின் விரிவு‌ தரப்பட்டிருந்தாலும் அவ்வாறு இருவகைப் பிரிவு உண்டு என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இலக்கணமறிந்தோர்க்கே தொல்காப்பியம் கூறப்பட்டுள்ளது என்பதற்கு இது இன்னொரு சான்று.

கருப்பொருள் என்ற தலைப்பின் கீழ் வருபவை:


அவ்வகை பிறவும் என்று கூறப்படுவதால் இந்தப் பட்டியல் இன்னும் விரியும் என்பது புலனாகிறது. அத்துடன் இந்த நீண்ட பட்டியலை அறிந்தோரை நோக்கியே தொல்காப்பியம் செய்யப்பட்டுள்ளது என்பதும் பு‌லனாகிறது. எனவே ஒவ்வொரு திணைக்கும் உரிய கருப்பொருள் எவை எனத் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை‌.

மூன்றாவது, உரிப்பொருள்:

உரிப்பொருள் எனப்படுவது திணைக்கு உரிய பொருளாகும். அவை
அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்.


ஆனால் தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் திணையும் உரிப்பொருளும் கூட மேலே குறிப்பிட்ட வரிசையில் கூறப்படவில்லை. புறத்திணையியலில் நடுவிலுள்ள பாலை தனியாக‌க் கூறப்பட்டு எஞ்சியவை இதே வரிசையில் இடம் பெற்றுள்ளன. இவையன்றி இரு திணைகள் முதற்பொருள் கருப்பொருட்களின்றி உள்ளன. அவை, கைக்கிளை - ஒருதலைக்காமம், பாடாண்திணை - வெற்றி பெற்றோனைப் பாடுதல், பெருந்திணை - ஒவ்வாக்காமம், காஞ்சி - வாழ்க்கை நிலையாமை கூறல்.

இந்த ஏழு திணைகளுள்ளும் உள்ள வேறுபாட்டைத் தொகுத்தல் கிடைப்பது

முதல் நான்கில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலப்பிரிவுக்கு அதற்குரிய பொழுதுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இறுதி இரண்டும் எல்லா நிலப் பிரிவுகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் உரியன. பாலை மட்டும் நிலமில்லாத ஒன்றாக நிற்கிறது.

தொல்காப்பியத்தில் முழுமை பெற்ற வடிவத்தில் காணப்படும் முதல் நான்‌கு திணைகளையும் அணுகிப் பார்த்தால் திணையின் அடிப்படைப் பண்பு புரியும்.

மக்களின் பருப்பொருட் பின்னணியான நிலத்தையும் காலநி‌லையையும் முதற்பொருளாகவும் அம்முதற்பொருட்களுடன் வினைப்பட்டு அதன் விளைவாக அமைந்த வாழ்க்கைமுறையைக் கருப்பொருளாகவும் குடும்பம் எனும் ஆண் - பெண் உறவாகவும் போர் எனும் அரசியல் உறவாகவும் மக்கள் தமக்குள் கொண்டுள்ள குமுக உறவுகளை உரிப்பொருளாகவும் கொண்டதாக திணை எனும் கருத்துருவம் விளங்குகிறது. இந்தக் கருத்துருவத்தில் முதற் பொருளாகிய நிலத்தை மட்டுமே இழந்து முரண்பட்டு நிற்கிறது பாலை.

பாலையின் முரண்பாடு:

பாலைத் திணையிலுள்ள இந்த முரண்பாடு முன்பே கண்டுணரப்பட்டுள்ளது. உலகின் ஒப்பற்ற இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான இளங்கோவடிகள் இந்த முரண்பாட்டை உணர்ந்துள்ளார். இதற்குத் தீர்வாக பாலை நிலத்தை குறிஞ்சி முல்லை என்ற வேறு இரண்டு நிலங்களின் கோடைகாலத் திரிபு நிலையாக் கூறியுள்ளார்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

இளங்கோவடிகள் தொல்காப்பியத்தை ஆழ்ந்து படித்து இந்தத் தீர்வைத் தந்துள்ளார். இருந்தாலும் இந்தத் தீர்வு சிக்கலைத் தீர்த்துவிடவில்லை.

முதற்பொருள் கோடைகாலத்தில் பாலை வடிவம் கொள்ளலாம். ஆனால் கருப்பொருட்களும் மக்களும் ஆண்டுதோறும் இந்த மாற்றத்தைப் பெற முடியுமா? உரையாசிரியர்கள் குறிஞ்சி, முல்லை, பாலை என்ற மூன்று நிலங்களுக்கும் கொடுத்துள்ள கருப்பொருள் வரிசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த முரண்பாட்டை நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஐந்நிலத் தெய்வங்களும் தமிழகமும்:

மேலே தொடருமுன் ஐந்நிலத் தெய்வங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்களில் வருணன், இந்திரன் என்ற இரு தெய்வங்களும் ஆரியருக்குரியனவாகக் கருதப்படும் வேதங்களில் இடம் பெற்றுள்ளமையால் ஆரியத் தெய்வங்ககளாகக் கூறப்படுகின்றனவே அப்படியாயின் அவை எவ்வாறு தொல்காப்பியத்தில் இடம்பெற்றன என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வியைத் தொடந்து இன்னும் எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் எழுப்பி அவற்றுக்கு விடைதேடிக் கொண்டிருப்பது இங்கு நம் நோக்கமல்ல. இத்தெய்வங்கள் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் உருவானவையா இல்லையா என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே விடை தேடுகிறோம்.

வருணன், இந்திரன் என்ற தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் தொல்லாய்வுகளின் மூலம் ஐரோப்பா, நடு ஆசியா ஆகிய பகுதிகளிலும் வட இந்தியாவில் தொகுக்கப்பட்டவையாகக் கூறப்படும் வேதங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் எங்கும் தொல்காப்பியத்தில் போல் திட்டவட்டமான நிலப்பகுதியின் நாகரிகத்‌தின் கூறுகளில் ஒன்றாக அவை கூறப்படவில்லை. அப்படியிருக்க அத்தெய்வங்களை வேறு நிலத்து மக்களுக்குரியவை என்பது வரலாறு மற்றும் பண்பாட்டு அறிவியலின் அடிப்படையையே புறக்கணிப்பதாகும். இந்த வகையில் உலகில் பண்பாட்டுக் கூறுகளுடன் தெய்வத்தை இணைத்து எழுதப்பட்டு தமக்குக் கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம் ஒன்றே. எனவே இந்தத் தெய்வங்கள் தமிழருக்கு மட்டுமே உரியவை.

(தொடரும்)

1 மறுமொழிகள்:

சொன்னது…

==பதிப்பிக்க அல்ல==

பக்கப்பட்டையில் உள்ள ammaa not equal to அம்மா படத்தில் இருந்து செல்லும் இணைப்பை http://www.tamil99.org தளத்துக்கு மாற்றித் தர வேண்டுகிறேன். நன்றி.