17.6.07

அந்த ஆறடி நிலம் யாருக்கு?

"ஆறடி நிலம்" என்ற தலைப்பில் ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்‎‎சுடாய் எழுதிய சிறுகதை உலகப் புகழ்பெற்றது. அந்தக் கதையின் தலைவனிடம் ஒரு பகலெல்லைக்குள் அவன் ஓடிச் சுற்றிவரும் நிலமெல்லாம் அவனுக்குச் சொந்தம் என்று கூறுகிறார்கள். அவன் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கதிரவன் மேலை வாயிலில் வீழ்வது வரை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தான். இறுதியில் ஓடிக்கொண்டே விழுந்து உயிரை விட்டான். இப்போது அவனுக்குத் தேவை ஆறடி நிலம் தான் என்று கதை முடிகிறது.

இன்றும் இங்கே ஒரு சிலர் ஓடி ஓடி இறுதியில் ஆறடி இடம் தான் கிடைத்திருக்கிறது. அவர்கள் டால்சுட்டாயின் கதைத் தலைவனைப் போல் பேராசை கொண்டு ஓடியவர்களல்லர். குடியிருப்பதற்கு ஒரு வீடு கட்ட ஓர் இடம் வேண்டும்; அந்த இடத்தில் சிறிய அளவில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அவர்கள் ஓடினார்கள். இடம் கிடைத்துவிட்டது. அதில் ஆறு அடிக்குள் தான் வீடு கட்டவேண்டும் என்கிறார் ஒருவர். ஆறடி நிலம் என்பது வீடு கட்டுவதற்கு உகந்ததல்லவே. அதற்காக நாம் இந்த இடத்துக்கு அலையவில்லையே என்று கலங்கி நிற்கிறார் நம் கதைத் தலைவர்.

புரியவில்லையா? வீட்டுவசதி வாரியத்தில் பணம் கட்டிப் பதிந்து காத்திருந்து குலுக்கலில் சிக்கன வகை(E-Type) மனையைப் பெற்றவர்களைத் தான் குறிப்பிடுகிறோம்.

இந்தச் ″சிக்கன வகை″ மனைகளின் பொதுவான அளவு நீளத்தில் 40 அடிகளும் அகலம் 16 அடிகளும் ஆகும். இந்த மனையில் முன்னால் 5 அடிகளும் பின்னால் பத்தடிகளும் திறவிடம் விட வேண்டும். நீளத்தில் மீதி இருப்பது 25 அடிகள். ஆனால் பக்கத்தில் பத்தடிகள் திறவிடம் விட வேண்டும். இது இந்த மனைப்பிரிவுக்கு ஒப்புதல் அளித்த நகர ஊரமைப்பு இயக்ககம் விதித்துள்ள விதி. மீதி இருப்பது ஆறு அடி தான். வீடு கட்டுவதற்கென்று ஆடி ஓடி அலைந்து திரிந்த நம் கதைத் தலைவருக்கு இப்போது நிரந்தர ஓய்வுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள் வீட்டுவசதி வாரியத்தாரும் நகர ஊரமைப்பு இயக்ககத்தாரும்.

இந்த மனையில் முன்புறம் 5 அடி விட்டு முழு அகலத்துக்கும் 8¼ அடிக்கு 9½ அடி அளவில் ஒரு அறையும் 6 அடிக்கு 3¾அடியில் கழிவறையும் குளியலும் இணைந்த அறையும் வீட்டுவசதி வாரியமே கட்டிக் கொடுத்துள்ளது. இது நகர ஊரமைப்பு இயக்ககம் விதித்துள்ள மனைப்பிரிவு நிபந்தனைக்கு மாறானது. ஆனால் இந்த விதிக்கு தனக்கு மட்டும் வீட்டுவசதி வாரியம் விலக்குப் பெற்றுள்ளது.

இப்போது மனையையும் ஒற்றையறை வீட்டையும் பணம் கட்டி குலுக்கலில் பெரிய பரிசு அடித்து விட்டது என்ற மனத் திளைப்பில் பெற்ற நம் கதைத் தலைவர் ஒரு கடன் வாங்கி இன்னொரு அறை கட்டுவோம் என்று எண்ணி வரைபடம் ஒப்புதலுக்குக் கொடுத்தால் விதி மீறல் என்கின்றனர் நகராட்சியினர். முறையீடு செய்தால் மீண்டும் மீண்டும் திருப்பியனுப்பிவிடுகின்றனர் நகர ஊரமைப்பு இயக்ககத்தார். வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு மனையைப் பெற்றவருக்கு ஏன் வழங்கப்படவில்லை? நகராட்சி விதிப்படி மனிதர் வாழும் ஒரு அறை கட்ட குறைந்தது 8¼ அடி வேண்டும். இரண்டு சுவர்க் கனங்ளைச் சேர்ந்தால் 9¾ அடி தேவை. இந்த அகலமாவது கிடைக்குமாறு ஏன் மனையின் அளவை நிறுவவில்லை? அல்லது ஒப்பளிக்கப்பட்ட மனையின் அளவில் இந்த 9¾ அடி கிடைக்குமாறு மனைப்பிரிவு விதிகளை ஏன் வகுக்கவில்லை? அல்லது வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு ஏன் மனையைப் பெற்றவருக்கு விரிவு படுத்தப்படவில்லை? அவர் தனியாகக் கேட்கும் போது அது மீண்டும் மீண்டும் ஏன் மறுக்கப்படுகிறது?

வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் உயர் வருவாய்ப் பிரிவு, நடுத்தர வருவாய்ப் பிரிவு, கீழ்நிலை வருவாய்ப் பிரிவு, சிக்கனப் பிரிவு என்று நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் பரம ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட சிக்கன வகை மனைகளுக்குத் தான் இந்தச் சிக்கல். பிற வகைகளில் அவரவர் தேவைக்கு வீடுகட்டிக் கொள்ளும் அளவுக்கு மனைப் பரப்பு உண்டு. இந்தச் சிக்கன வகையில் அது இல்லை.

இன்னும் விந்தை என்னவென்றால் சொந்தப் பணத்தை வைத்து ஒப்புதல் பெறாமல் வீடு கட்டுவோரை யாரும் தடுப்பதில்லை. கடன் தேவைப்படும் உண்மையிலேயே ஏழையான மக்களுக்குத் தான் இந்த ஆறடி நிலம். ஏழைகளுக்கு வாழ்வளிப்பது என்ற பெயரில் அரசு அவர்களுக்கு என்ன செய்கிறது என்பதை மிகத் துல்லியமாகத் தெளிவுபடுத்தும் ஒரு சிறந்த குறியீடு இந்த ஆறடி நிலம்.

(இக்கட்டுரை 1990களில் எழுதப்பட்டது
.)

0 மறுமொழிகள்: