8.7.07

நில உடைமைக் குளறுபடிகள் - 1

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது பற்றி 10.2.94 தினமணியில் ஒரு செய்திக் கட்டுரை வெளிவந்தது. இந்தத் தேக்கத்துக்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று நீதிபதிகள் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. காலியான இடங்கள் நிரப்பப்படவில்லை. புதிய பணி அமர்த்தல்கள் நடைபெறவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை புதிய அமர்த்தல்களுக்குப் பிற துறைகளைப் போல் பணம் கேட்கப்படுகிறதா? ஏனென்றால் சில துறைகளில் பதவி உயர்வுகளுக்குப் பணம் கேட்டதால் அப்பதவி உயர்வுகளை எதிர்பாத்து நின்றோர் கணக்குப் பார்த்து ஆதாயமில்லை என்று வாளாயிருந்து விட்ட நேர்வுகள் பல உண்டு.

இன்னொரு புறம், தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் மிகப் பெரும்பாலானவை உரிமையியல் வழக்குகளே என்பதை மேற்படி செய்திக் கட்டுரை தெளிவாகக் காட்டுகிறது. உரிமையியல் வழக்குகளில் இந்தப் பெருக்கத்துக்கான ஒரு பின்னணியை ஆய்வதே நம் நோக்கம்.

நம் நாட்டில் சொத்துடைமை ஆவணங்கள் இரு துறைகளின் பொறுப்பில் உள்ளன. ஒன்று ஆவணப் பதிவுத்துறை, இன்னொன்று நில அளவைத் துறையின் உதவியுடன் வருவாய்த் துறை. சொத்துடைமை, இன்னும் குறிப்பாக நிலவுடைமை ஆவணங்களில் இவை செய்து வரும் குளறுபடிகள் தான் உரிமையியல் வழக்குகளின் பெருக்கத்துக்கு முதன்மைக் காரணம்.

பதிவுத் துறையில் உள்ள ஒரு நடைமுறை என்னவென்றால் தகுந்த பணம் கொடுத்துவிட்டால் யாரும் தமக்கு உரிமையில்லாத வேறு யாருடைய சொத்தை வேண்டுமானாலும் இன்னொருவருக்கு விலை, ஒற்றி, அடமானம் என்று எந்த வகை வில்லங்கம் வேண்டுமானாலும் செய்து பத்திரம் பதிந்து கொடுத்து விடுவது. ஒரு சொத்து உண்மையில் யாருடைய உடைமையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவணங்கள் பதிவாளர்களின் வசம் இருந்தாலும் அவர்கள் மீது பொறுப்புச் சுமத்தும் வழக்கம் இல்லையாதலால் இதை அவர்கள் தயக்கம் இன்றிச் செய்து ஆதாயம் பெறுகின்றனர்.

அதேபோல் வருவாய்த் துறையினர் பட்டா எனும் பட்டயத்தை வழங்குகின்றனர். இதற்கென்று நெறிமுறைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. ஆனால் இங்கும் தகுந்த பணத்தை வழங்கிவிட்டால் ஒருவருடைய பெயரிலிருக்கும் நிலத்தை முதலில் கூட்டுப் பட்டா என்ற பெயரிலும் பின்னர் தனிப் பட்டாவாகவும் சில நாட்களில் இன்னொருவர் பெயருக்கு மாற்றிவிடுகின்றனர்.

இதில் நிலஅளவைத் துறையினரின் பங்கு மிகப் பெரியது, கொடியது. ஒரு பகுதியை மறுஅளவை செய்யும் போது, நிலவுடைமைகளைத் தம் விருப்பம் போலக் குறித்துக் கொள்கின்றனர். அதனால் பாதிக்கப்படுபவர் அதைச் சரி செய்வதற்கு நீண்ட நெடும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அதில் அவர் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. தளர்ந்து, சோர்ந்து கைவிட்டு விடுவது தான் வழக்கம். இது எப்படி நேர்ந்தது?

ஆங்கிலேயர் நம் நாட்டைக் கைப்பற்றிய போது இங்கு நிலவரி முறை மிகக் குழப்பமாக இருந்தது. வேளாண் வகை(ரயத்துவாரி), இனாம் வகை, காணிப்பற்று(மிராசுதார்)வகை, படையாட்சி(பாளையங்கள்)வகை என்று பல வகையாக இருந்தது. அவற்றில் வேளாண் வகை என்பது அரசே நேரடியாக வரி தண்டுவதாக இருந்தது. ஆனால் அங்கும் பல இடங்களில் நிலம் பிரிவில்லாத பங்குகளாக அவரவர் கைப்பற்றில் உள்ள நிலம் அவரவர் விருப்பம் போல் விற்கப்பட்டும், வில்லங்கம் செய்யப்பட்டும் வந்தாலும் அவற்றுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் இல்லை.

காணியாட்சி நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுக் காணியாளர் மூலம் வரி அரசுக்குச் செலுத்தப்பட்டது. படையாட்சி நிலங்களுக்கு வரி என்றில்லாமல் கப்பமாக தண்டப்பட்டது.

இவற்றில் வெள்ளையர் காணியாட்சியை ஒழித்தனர். படையாட்சிப் பகுதிகளைத் தம் அரசியல் வசதிக்கேற்பப் பறிமுதல் செய்து வேளாண் வகையாக மாற்றவோ புதிய இடையாட்சிகளிடம்(சமீன்தார்களிடம்) ஒப்படைக்கவோ அல்லது இருந்த படையாட்சிகளை இடையாட்சிகளாக மாற்றவோ செய்தனர்.

வேளாண் வகை, காணியாட்சி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படையாட்சி நிலங்களை வெள்ளையர் அளந்து தீர்வை நிறுவினர். இவ்வாறு நிறுவுவதற்காக உள்ளூர் மக்களைத் திரட்டி அவர்களைக் கலந்து முடிவெடுத்து உடைமைகளை முடிவு செய்தனர். இந்த முறைக்கு உள்ளூர் உசாவல்(Local Enquiry) என்று பெயர்.

விடுதலைக்குப் பின்னர் இனாம்களும் இடையாட்சிகளும் ஒழிக்கப்பட்டு வேளாண் வகையாக மாற்றப்பட்ட போதும் இந்த 'உள்ளூர் உசாவல்'முறை பேருதவியாக இருந்தது. இவை அனைத்தும் வருவாய்த் துறையாலும் அதனோடிணைந்திருந்த அளவைத் துறையாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். இப்போது அனைத்து நிலங்களும் அளக்கப்பட்டு வரி நிறுவப்பட்டுத் தீர்வுக்கு(Settlement) வந்த பின்னரும் இந்த உள்ளூர் உசாவலை வைத்துக் கொண்டு இவ்விரு துறையினரும் சித்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆவணங்களைப் புதுப்பித்தல்(UDR) என்ற பெயரில் அவர்கள் செய்யும் அழிம்புகள் சொல்லிமாளாது. மறுஅளவைகள் நடந்தபோது ஊரிலுள்ள செய்தியறிந்த திறமைசாலிகளுடன் இணைந்து யார்யார் நிலங்களையெல்லாமோ அத்திறமைசாலிகளுக்குப் பட்டயம்(பட்டா) போட்டுக் கொடுத்திருக்கின்றனர். அதே பழக்கத்தின் தொடர்ச்சியாக இப்போது எங்காவது அளவை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் அங்கெல்லாம் ஆட்களைத் தேடிப் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் பெயரில் பட்டயம் போட்டு விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பதறிக் கொண்டு அலைவது தான் மிச்சம். பத்திர ஆவணத்திற்குப் புறம்பாக எப்படிப் பெயர் மாறியது என்று கேட்டால் 'அண்டை உசாவலில்' தெரிய வந்தது என்கின்றனர். அண்டை வீட்டில், மேல்மாடியில் அல்லது கீழ்த்தளத்தில் வாழ்பவர் ஆணா பெண்ணா என்று கூட அறிய முடியாத இன்றைய உலகில் வழியில் செல்வோரிடம் சொத்துடைமைச் செய்திகளைத் திரட்டுகிறார்களாம். எப்படிக் காது குத்துகிறார்கள் பார்த்தீர்களா! "இவன்களுக்குச் சரியாக அளந்து போட்டால் நமக்கு என்ன ஆதாயம்? இப்படி நம்மைத் தேடிக் கொண்டு வருவான்களா?" என்று கூசாமல் கேட்கிறார்கள். பலருக்கு இவ்வாறு தங்கள் நிலத்தை வேறு பெயர்களுக்குப் பட்டயம் போட்டிருப்பதுகூடத் தெரிவதில்லை. விலைப் பத்திரம் தங்கள் கைகளில் இருக்கிற உறுதியில் இருந்து விடுகிறார்கள். இவ்வாறு பட்டயத்தை அல்லது பத்திரத்தைக் கையில் வைத்திருக்கிற ஒருவர் அந்த நிலத்தை வேறொருவருக்கு விற்ற பின்னர் இன்னொருவர் வழக்கு மன்றம் ஏறுகிறார். நீதி மன்றங்கள் ஒன்று மாற்றி ஒன்று பத்திரம் வைத்திருப்பவர்க்கும் பட்டயம் வைத்திருப்பவர்க்கும் சார்பாக மாற்றி மாற்றித் தீர்ப்பளித்து வழக்குகளைச் சாகாமல் காப்பாற்றி வைத்திருக்கின்றன.

அடுத்தது, ஒரு நிலம் விற்பனையின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அதற்காகப் பட்டய மாற்றம் செய்வதும் பகுதியாக விற்கப்பட்டிருந்தால் அதை உட்பிரிவு செய்வதும் ஆகும்.

உட்பிரிவு செய்வதில் வெள்ளையர் காலத்தில் முன் அளவு ஆவணங்கள் இல்லாமையால் இருக்கின்ற வரப்புகளை அப்படியே குறித்து உட்பிரிவு செய்தார்கள். இந்த விதியை இப்போது பல வரைபடங்கள் உள்ள நிலங்களுக்கும் கையாளுகிறார்கள் அளவைத் துறையினர். ஒரு பத்திரம் பதியும்போதே உட்பிரிவுக்கும் கட்டணம் தண்டப்பட்டு விடுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைந்துள்ள அளவரை(Sureyer) அணுகும்போது அவர் முதலில் கேட்கும் கேள்வி "வரப்பு இருக்கிறதா?" என்பது தான். தான் வாங்கியுள்ள பரப்புள்ள நிலத்தை அளந்து கண்டுபிடித்து அதற்கு வரம்பிடுவதற்கான தொழில்நுட்ப அறிவுரையைப் பெறுவது தான் நிலத்தை வாங்கியவரின் உடனடி நோக்கம். அவரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டவுடன் அவர் திகைத்துத் தடுமாறுகிறார். ஏதோ செய்யத் தகாத குற்றத்தைச் செய்து விட்டவர் போல் கலங்குகிறார். இவ்வாறு சிக்கலைக் கிளப்பிய பின்னர் அளவர் சிக்கலுக்குத் தீர்வையும் சொல்கிறார். அதாவது பணம் கொடுத்தால் வரப்பில்லாமலே உட்பிரிவு செய்யப்படும். இந்தத் தொகை ஆயிரக்கணக்கு என்ற அளவுக்கு இப்போது உயர்ந்துள்ளது.

பட்டயம் மாற்ற வேண்டுமானாலும் அதே அளவு தொகை கேட்கிறார்கள். இதில் நில உச்சவரம்புப் பிரிவினருக்கும் பங்குண்டு. கொடுக்கவில்லை என்றால் ஏதாவது சிக்கல் உண்டாக்கி ஆளை மண்டியிட வைத்துவிடுவார்கள்.

அனுபவ பாத்தியதை என்ற சட்டப் பிரிவும் இவ்வாறு தெளிவில்லாமலிருந்த எல்லைகளின் விளைவுதான். ஆனால் இன்று அது திருடுவோருக்குப் பரிசளிப்பதாகவும் அப்பாவிகளுக்குத் தண் டனையாகவும் ஆகிவிட்டது.

ஒரே சொத்தை ஒருவருக்கு விற்ற பின்னர் இன்னொருவருக்கும் விற்பவர்கள் இருக்கிறார்கள். இந்த விற்பனையைப் பதியும் முன்னரே பதிவுத் துறையினரால் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் 'தகுந்த' கூலியைப் பெற்றுக் கொண்டு பதிந்து விடுகிறார்கள். இந்த வழக்குகளும் நீதி மன்றங்களில் குவிக்கின்றன.

தமிழ் நாட்டில் இன்று தீர்வைப்பணி(Settlement) முடிவுற்றது போல் தோன்றினாலும் பல இடங்களில் இன்றும் "பிரிவின்றிப் பங்குகளாக" நிலங்கள் கிடக்கின்றன. பயிர்ச் செய்கை தொடர்ந்து நடைபெறும் இடங்களில் அவரவர் கைப்பற்றுகள் விற்பனைகள் மூலம் கைமாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தரிசாக விழுந்து விட்ட நிலங்களில் எவெரெவர் பங்கு எங்கிருக்கிறதென்பதைக் கண்டுபிடிக்க முடியாதாகையால் ஏதாவது நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சீர் செய்யவில்லையென்றால் அவை என்றும் தரிசுகள் தாம். அவற்றில் எவராவது துணிந்து இதுதான் தன்பகுதி என்று விற்றுவிட்டார் என்றால் உடனே பிற பங்காளிகள் அனைவரும் வாங்கியவரைப் பிய்த்தெடுத்து விடுவார்கள்.

இன்று தேக்கு மரக் காடுகள் வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு மக்களிடம் பணம் பெற்று நாடெங்கும் பல நிறுவனங்கள் நிலங்களை வாங்கியிருக்கின்றன. அவையனைத்தும் மேலே கூறிய சிக்கல்களில் சிலவற்றையேனும் சந்தித்தே ஆக வேண்டியிருக்கும். ஆனால் அவர்களின் முன்முயற்சிகளினால் இந்த முட்டுக்கட்டை நிலையை அகற்ற முடியும்.

புறம்போக்கு நிலங்கள் என்று பல்வேறு நோக்கங்களுக்காக பெரும்பரப்பு நிலங்கள் ஒவ்வோர் ஊரிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இடம்பிடித்தால் அதற்குத் தண்டத் தீர்வை என்றும் தண்டிவிடுகிறார்கள். இருந்தாலும் அவ்வாறு விதிப்பதற்குக் கையூட்டு வழங்க வேண்டும். திடீர் திடீரென்று அகற்றியும் விடுவார்கள். மீண்டும் பணம் கொடுக்க வேண்டும். புறம்போக்கு எனும் திட்டம் சட்டத்தை வாடகைக்கு விட்டு (அரசூழியர்கள்) பணம் பண்ணுவதற்கான சட்டங்களில் ஒன்று.

முன்னாள் திருவிதாங்கூர் சமத்தானத்தில் மிகுதியாக உள்ள புறம்போக்கு நிலங்களை அவ்வப்போது ஏலம் விட்டுவிடுவார்கள் என்று கேட்டிருக்கிறேன். இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை.

ஆங்கிலேயர்கள் நம் குமுகத்தில் தீவிரமான மாற்றங்களைச் செய்யவில்லை. இன்னொரு 1857ஐச் சந்திக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் புதுச்சேரியின் பிரஞ்சியரும் சமத்தானங்களும் நல்ல மாற்றங்கள் பலவற்றைச் செய்தனர். திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு மாறிய குமரி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சிறந்த வருவாய்த் துறை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. மதியழகன் விரும்பினார். ஆனால் பின்னர் அவர் சிக்கிக் கொண்ட அரசியல் புயலில் அவரது அருமையான திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. முன்பு தன்னாட்சியுடைய சமத்தானத்தின் ஒரு பகுதியாயிருந்த குமரி மாவட்டம் இன்று பன்றியுடன் சேர்ந்த கன்றாகி விட்டது. புதுவை மாநிலத்தின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.

நிலவுடைமையாளரை அச்சுறுத்தும் இன்னொரு அரசு நடவடிக்கை வீட்டு வசதி வாரியத்துக்காக நிலம் கையகப்படுத்தலாகும் இவ்வாரியம் செயற்படும் இடங்களில் எங்கெங்கு ஒரளவு விலை மதிப்புள்ள நிலங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் கையகப்படுத்தும் முன்னீடுகள் முன் வைக்கப்படும். நிலவும் சந்தை மதிப்பிலிருந்து மிகக் குறைந்த விலையே வழங்கப்படுமாதலால் நிலவுடைமையாளர்கள் பதறியடித்துக் கொண்டு அதிகாரிகளை அணுகுவர். இறுதியில் ஏக்கருக்கு எவ்வளவென்று பேரம் பேசி மேலேயுள்ளவர்களுக்குக் கொடுத்துவிட்டால் முன்னீடு கைவிடப்படும். நிலத்தின் மதிப்பில் 10விழுக்காடு "வெட்ட"வேண்டுமென்பது "மரபு". வாணிக நோக்கமற்ற பொதுப் பணிக்காகவே நிலம் கையகப்படுத்தும் சட்டம் கையாளப்பட வேண்டும் என்று விதியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் வாணிக அடிப்படையில் செயற்படும் வீட்டு வசதி வாரியத்துக்கு இச்சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? உலக வங்கி அதில் முதலிட்டிருக்கிறது என்பதாலா?

மக்களுக்கு வீடுகள் அமைத்துத் தருவது தான் வீட்டுவசதி வாரியத்தின் பணி. அப்படியிருக்க முறைப்படி நகர ஊரமைப்பு இயக்குனரகத்தின் இசைவைப் பெற்று மனைப்பிரிவு செய்து கல்லிடப்பட்ட இடங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அடிப்படை என்ன? வீடுகள் கட்டி குடியிருந்த மனைகளையும் அளந்து மக்களை மிரட்டுகிறார்களே நிலம் கையகப்படுத்தும் துறை ஊழியர்கள், இது அரசுக்குத் தெரியுமா? அல்லது ஒவ்வொரு கட்டத்திலும் மேலையுள்ளவர்களுக்கு இவ்விவ்வளவு வந்துவிட வேண்டுமென்று விழுக்காடு நிறுவியிருக்கிறார்களா?

வீட்டுவசதி வாரியத்தின் இந்த நடவடிக்கைகளால் மக்களின் மனதில் தோன்றியிருக்கும் எண்ணம் என்னவென்றால் இன்றைய சாலைப் போக்குவரத்தின் நிலையில் வெளியில் சென்றவருக்கு எப்போது சாவு வரும் என்று எதிர்பார்க்க முடியாதோ அதேபோல் நிலம் வைத்திருப்போர் அது என்று பறிபோகும் என்பதையும் எதிர்பார்க்க முடியாது என்பது தான்.

வேளாண் நிலங்களை வீடுகட்டுவதற்குப் பயன்படுத்தும் முன் அவை வேளாண்மைக்குத் தகுதியற்றவை என்ற சான்றிதழை வேளாண் துறையிடம் பெறவேண்டுமென்று ஓர் அரசாணை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வீட்டு வசதி வாரியம் உட்பட அரசுத் துறைகளுக்கும் பிற அரசுசார் நிறுவனங்களுக்கும் இவ்வாணை பொருந்தாது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

அடுத்து வருவது நில உச்சவரம்பு. வருமான வரியைப் போலவே நில உச்ச வரம்பும் பெருநிலவுடையார்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி நிலமற்றோருக்குக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த ஒரு திட்டமாகும். ஆனால் இதுவரை எந்த நிலமும் கைப்பற்றப்பட்டதாகவோ, கைப்பற்றப்பட்ட நிலம் எவருக்கும் கொடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால் அதிகப்படி(உபரி) நிலங்களென்று சில நிலங்கள் அறிவிக்கப்பட்டு அவற்றை உடையோர் பயன்படுத்தாமல் ஆக்கிவைத்துள்ளனர். எவ்வாறு வருமானவரி, மூலதனத்தை முடக்கிப் போடப் பயன்படுத்தப் பயன்படுகிறதோ அவ்வாறே நில உச்சவரம்பு, நிலத்தை முடக்கிப்போடப் பயன்படுகிறது.

உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலங்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலங்கள் ஒரு புறம் முடங்கிக் கிடக்க மறுபுறம் அரசு அலுவலகங்கள் கட்டவும் ஏழைகளுக்கு இலவசப் பட்டா வழங்கவும் சில இடங்களில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் அமைக்கவும் பாசனக் குளங்களே பாழடிக்கப்பட்டு வருகின்றன. அரசின் அளவுகோல்கள் விந்தையானவை!

நில உச்சவரம்பு என்பது ஒரு மாயை. அதனால் எவரும் பயன்பெறவில்லை. மாறாகக் குத்தகை ஒழிப்பு மூலம் பயிர்த் தொழில் செய்த எண்ணற்ற குத்தகையாளர்கள் நில உடமையாளர்களாக மாறியுள்ளனர். இதன் மூலம் நிலத்தின் மீதுள்ள அவர்களது பிடிப்பு உறுதிப்பட்டுள்ளதால் நிலத்தின் விளைதிறன் முன்னேறியுள்ளது. இப்புதிய நிலவுடைமையாளர்கள் தங்களது எளிய பண்பாட்டுப் பின்ணனியினால் உருவான சிக்கனத்தினால்(வாழ்வுச் செலவுக் குறைவு, சொந்த உழைப்பு, நேரடிக் கண்காணிப்பு, எனவே தொழில் நுட்பத் தேர்ச்சி) உச்சவரம்பை மிஞ்சிய நிலங்களின் சொந்தக்காரர்களாகியுள்ளனர். இவற்றில் கணிசமானவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். இவர்கள் உச்சவரம்புச் சட்டங்களிலிருந்து தப்புவதற்காகக் கைக்குழந்தைகள் மீது கூட நிலங்களை வாங்குகின்றனர். அக்குழந்தைகள் வயதுக்கு வரும் வரை அந்நிலங்கள் மீது கடன் பெறல், விற்றல், வில்லங்கம் செய்தல் என்று அனைத்துப் பொருளியல் நடவடிக்கைகளுக்கும் விலங்கிடப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளது நஞ்சைப் பகுதிகளில் நிலையாகும். புஞ்சைப் பகுதிகளில் சிறு நிலவுடைமையால் எந்தப் பயனுமில்லை. பொதுவாகவே சிறு உடைமைச் சொந்த உழவனாயிருப்பதை விட வேளாண் தொழிலாளியாயிருப்பதே ஆதாயமும் மன அமைதிக்கு உகந்ததுமாகும். அனைவருக்கும் நிலத்தைப் பங்கிடுவதென்ற முழக்கம் வேளாண்மையின் உண்மை இயல்பைப் புரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ளும் வாய்ப்பில்லாத வெற்றுச் சிந்தனையாளர்களின் வரட்டு முழக்கம். தாழ்த்தப்பட்டவர்கள் நிலவுடைமையினுள் நுழையாமலேயே நிமிர முடியும். சிறு உடைமையாளராவது விடுதலையல்ல. புதிய பல அடிமைத்தனங்களுக்கும் விலங்குகளுக்கும் ஆளாவதாகும். எனவே அனைவருக்கும் நிலம் என்ற குறிக்கோள் கைவிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

நிலவுடைமையாளரை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கும் இன்னொரு துறை நகர ஊரமைப்புத் துறை. ஒரு நிலப் பகுதி திட்டப் பகுதி என்று இத்துறையால் அறிவிக்கப்பட்டுவிட்டால் அதன்பின் அதில் எந்தக் கட்டுமானம் கட்ட வேண்டுமாயினும் சென்னையிலுள்ள இயக்குநராக ஒப்புதல் பெறவேண்டும். (இவ்வித ஒப்புதல்களை அந்தத் துறை அமைச்சரின் வாய்மொழி ஒப்புதல் இன்றி வழங்குவதில்லை என்பது நடைமுறை என்று கூறப்படுகிறது.) இதைவிடக் கொடுமையானது பல ஏக்கர் நிலங்களைத் திறந்தவெளி, பூங்கா, பசுமைப் பகுதி, சாலைவளைவு என்றெல்லாம் அறிவித்து விடுவார்கள். அந்த நிலங்களில் எந்தக் கட்டுமானமும் கட்ட இயலாது. இதுபோன்ற இடங்களுக்கு அத்துறையோ அரசோ எவ்வித இழப்பீடும் தருவதில்லை. இதைப்போல் தேவையற்ற இடங்களிலெல்லாம் கூட வாணிகப் பகுதி, தொழிற் பகுதி என்று பெரும் பரப்புகளை ஒதுக்கீடு செய்துவிடுவார்கள். இவ்விடங்களுக்கு மதிப்பு மிகவும் குறைந்துவிடும். ஆனால் இவ்வாறு செய்யப்பட்ட "ஒதுக்கீட்டுக்கு" "ஒதுக்கீடு விலக்கம்" செய்யும் அதிகாரம் இயக்ககத்துக்கு உண்டு. இதில் பெருமளவு பணம் கைமாறும். இங்கும் நிலத்தின் மதிப்பில் திட்டவட்டமான விழுக்காடுகள் உண்டு.

மனைப்பிரிவுத் திட்டங்களில் 10விழுக்காடு பூங்காக்கள் என்று விடப்படுகிறது. இவ்விடங்களைப் பராமரிப்புக்காகச் ஒப்புதலளிக்கும் உள்ளாட்சி அமைப்பிடம் சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புடன் சேர்த்து ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட பூங்காக்களையே பராமரிக்க வக்கற்ற நிலையிலிருக்கும் நம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இவ்வாறு பெரும் பரப்புகளை ஒப்படைப்பது செத்தவன் கையில் வெற்றிலை கொடுப்பது போன்ற பயனற்ற செயலாகும். அத்துடன் திட்டமிடப்பட்ட வீடமைப்புகளுக்கு நடுவில் இத்தகைய வெற்றிடங்கள் சேரிகளை உருவாக்கத்தான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

திட்டப்பகுதியென்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அது நஞ்சையாயிருந்தாலும் அதில் கட்டிடம் கட்டுவதற்குள்ள தடை தாமே விலகிவிடும். எனவே இங்கும் ஊழலுக்கு வாய்ப்புண்டு. (ஊழலுக்காகவே இவ்வாணை இத்தனை விலக்குகளுடன் இயற்றப்பட்டதோ?)

(தொடரும்)

0 மறுமொழிகள்: