25.6.09

முதலாளியமும் வல்லரசியமும் .....8

நாடுகளும் நாடுகளின் பகுதிகளும் தத்தம் தனித்தன்மைகளையும் தன்னுரிமைகளையும் தமக்குரிய வளங்களைப் பறிகொடுக்காமலும் பிறவற்றின் வளங்களைப் பறிக்காமலும் தனித்தும் அதே நேரத்தில் மனித இனம் நாடுகளாகவும் பகுதிகளாகவும் சிதறிச் சென்று விடாத அதே நேரத்தில் உலகளாவிய ஓர் சுரண்டல் கூட்டம் மறுபடியும் உலகில் உருவாகி விடாதவாறு ஓர் உறவு வடிவையும் உருவாக்குவோம்.

இந்த வளர்ச்சிப் பண்பை எய்துவதற்காக உடனடியாகச் செயற்படுத்த சில வேண்டிய திட்டங்களை நாம் முன்வைக்கிறோம்.


1. வரியை மதிப்பிடுவதற்கென்று குடிமக்களின் வீட்டிலுள்ளும் பணியிடங்களிலும் நுழைந்து சுவர்களையும் பேழைகளையும் உடைத்துப் பார்க்கும், படுக்கைகளைக் கிழித்துப் பார்க்கும், தரையைத் தோண்டிப் பார்க்கும் அங்கு இருப்பவர்களைக் குறிப்பாகப் பெண்களை இழிவான கேள்விகள் கேட்கும், வாயிலிலும் தொலைபேசி அருகிலும் காவல் நின்று பகற்கொள்ளையர்கள் போல் செயல்படும் வருமானவரியை ஒழித்து, எளிதில், குடிமக்களுக்கு இழிவு நேராமல் மதிப்பிடத்தக்க, வேண்டுமானால், தலைக்கு இவ்வளவு என்று உள்ள வரிகளைக் கொண்டு அரசு தன் வருமானத்தை ஈட்ட வேண்டும். பணக்காரனிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு கொடுக்கிறோம் என்ற ஏமாற்று தேவை இல்லை. எல்லா வளமும் உழைக்கும் மக்களிடமிருந்தே வருகின்றன; எவரிடம் இருந்து எந்த வரியைக் கைப்பற்றினாலும் இறுதியில் அது உழைப்பவனிடமிருந்தே கைப்பற்றப்படும் என்பது உண்மை.

2. ஒன்றியத்துக்கு ஒன்று அல்லது குறைந்தது மாவட்டத்துக்கு ஒன்றாவது அறிவியல் - தொழில்நுட்ப காப்புரிமப் பதிவகங்கள் வேண்டும். அங்கு பதியப்படுபவற்றை வட்டார மற்றும் நாடு தழுவிய தாளிகைகள் மூலம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

3. தொழில் உரிமம் வழங்கும் அதிகாரத்தை ஒவ்வொரு ஒன்றிய ஆள்வினையாளருக்கும் பரவலாக்க வேண்டும்.

4. வேளாண்மையை விளைப்புச் செலவும் ஆதாயமும் பிற தொழில்களில் எந்த விகிதத்திலிருக்கிறதோ அதற்குக் குறையாத அளவில் இருக்குமாறு பேண வேண்டும். இதிலும் அரசியல் கூடாது. உணவுப் பொருள் வாணிகத்துக்கு உரிமம் வழங்குவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தாங்கள் உண்ணும் உணவுக்கு உரிய விலையைக் கொடுக்கும் அடிப்படைப் பண்பாட்டை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

5. இன்றைய பாராளுமன்ற மக்களாட்சி முடிமன்னர்கள் காலத்திலிருந்ததைப் போன்று, ஆனால் முடிமன்னரின் அதிகாரம் நீங்கிய ஒரு குழுவாட்சியாக இன்று வெளிப்படையாக அனைவரும் புரிந்து கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. அதற்கு மாற்றாக, மக்களே உண்மையான ஆட்சியாளர்களாகச் செயற்படும் பங்கேற்பு மக்களாட்சி நோக்கிச் செல்லும் ஓர் அமைப்பு குறித்த உரையாடலை உடனே தொடங்க வேண்டும்.

6. ஏற்றுமதி - இறக்குமதி சார்ந்த பொருளியல் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். இயற்கை வளங்களை, குறிப்பாக புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களை எந்தச் சூழலிலும் எற்றுமதி செய்யக்கூடாது. புதுப்பிக்கத் தக்க வளங்களை எற்றுமதி செய்யும் சூழல் வந்தாலும் அவற்றில் முதல் தரமானவை நம் நாட்டு அடித்தள மக்களின் தேவைகளை நிறைவு செய்து மிஞ்சினால்தான் செய்ய வேண்டும்.

இன்று சந்தனம், ஈட்டி, தோதகத்தி என்ற பெயர்களில் வழங்கும் Rosewood மரம், சில மீன் வகைகள், இலைத் தேயிலை இன்னும் இது போன்ற எத்தனையோ பண்டங்களை உள் நாட்டினர் பயன்படுத்த தடை உள்ளது. ஆங்கிலர் ஆடசிக் காலத்தில் இத்தகைய தடை இல்லை. நம் நாட்டிலுள்ள அனைத்து வளங்கள் மீதும் நம் மக்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த அலசலை முடிக்கும் முன் நாம் இந்தியாவின் பொதுமைக் கட்சி வரலாறு பற்றிய வேறு சில உண்மைகளை அறிந்துகொள்வது நல்லது.

இந்தியாவில் பொதுமைக் கட்சி உருவாகிய நிலையில் வங்காளத்தைச் சேர்ந்த எம்.என்.ராய் லெனினை அணுகி கடசியை மூன்றாம் பொதுமை அனைத்துலகியத்தில்(Communist International) சேர்ககுமாறு கேட்டார். ஆனால் லெனின் கட்சியை பிரிட்டனின் பொதுமைக் கட்சியின் கீழே ஓர் உறுப்பாகச் செயற்படுமாறு அறிவுறுத்தினார். ஒரே ஒரு நாட்டில் மட்டும் உருவாகியிருந்த புத்தம் புதிய இளம் பொதுமை சோவியத்தை வல்லரசுகளின் பகைமையிலிருந்து பொதிந்து காக்க வேண்டியிருந்ததுதான் அவரது இந்த அணுகலுக்குக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்திருந்த பொதுமைக் கட்சிகள் தங்கள் போராட்டங்கள் மூலம் சோவியத்துக்கு எதிரான தங்கள் நாட்டு அரசுகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி வைத்திருந்தன என்றாலும் அவரது எச்சரிக்கை உணர்வு ஞாயமானதுதான். ஆனால் இங்கும் டிராட்கியின் கருத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இதுதான் சாக்கென்று நம் நாட்டு்த் தோழர்கள் பிரிட்டன் கட்சியைவிட பிரிட்டனுக்கே நாணயமாக நடந்துகொண்டனர். ஆயுதம் தாங்கிய புரட்சி என்ற பெயரில் உள்நாட்டினரையும் கட்சி உறுப்பினர்களையும் தீர்ததுக்கட்டினார்களே அன்றி ஒரேயொரு வெள்ளையனுக்கு எதிராகக் கூட அவர்களது ஆயுதங்கள் திரும்பவில்லை. பகத்சிங் கூட மரண தண்டனை பெற்று சிறையிலிருந்த போதுதான் பொதுமைக் கோட்பாடுகளைப் படித்து அவற்றில் ஈடுபாடு கொண்டார்.

தாலின் காலத்துக்குப் பிறகுதான் இந்தியப் பொதுமைக் கட்சி அனைத்துலகியத்தினுள் நுழைந்தது. ஆனால் சீனச் சார்பாக இந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சி உருவான போது தமிழகத்தைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் அதில் இடம் பிடித்துக்கொண்டனர். அவர்கள் சோவியத்தை வெறுத்தனர் என்பதற்கு இதை ஓர் அடையாளமாகக் கொள்ளலாமா அல்லது தமிழ்நாட்டுப் பொதுமைக் கட்சிக்குள் நிலவிய பார்ப்பனர் - வெள்ளாளர் போட்டியைக் காரணமாகக் கொள்ளவாமா? இரண்டும் இணைந்து செயற்பட்டன என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கும் இந்தியா, பாக்கித்தான், சீனம் போன்ற நாடுகளுக்கு ஒரு நல்வாய்ப்பு. இந்நாடுகளிலிருந்து பண்டங்களை இறக்குமதி செய்துவந்த நாடுகள் இப்போது தங்கள் இறக்குமதி அளவைக் குறைத்துவருகின்றன. அதேவேளையில் நம் நாட்டில் பண்டங்களின் தட்டுப்பாட்டால் அவற்றின் விலைகள் ஏறிக்கிடக்கின்றன. இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த ஏற்றுமதியாளர்கள் தங்கள் பண்டங்களை இங்கேயே சந்தைப்படுத்துவதற்கான ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்களின் சிந்தனை வேறு திசையில் செல்வதாகத் தெரிகிறது. ஏழை மக்களுக்கு ″நலத்திட்ட உதவிகள்″, விளைப்பாளர்களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்புகள், இதுதான் சாக்கென்று திரும்பப் பெற முடியாத, தலைமுறைகளுக்கும் நம் மக்களுக்கு உரிமைப்பட்ட மூல வளங்களான இரும்புக் கனிமம் போன்றவற்றைப் பெருமளவில் ஏற்றுமதி!

இன்றைய பணப் புழக்கம் கூட நெடுநாள் தொடரப்போவதில்லை. நம் பொருளியலே வெளியிலிருந்து வரும் பணத்தை நம்பியிருப்பதால் இந்த உலகப் பொருளியல் நெருக்கடியால் நம் நாட்டில் பணப் புழக்கத்தில் விரைவில் பெரும் முட்டுக்கட்டை நிலை வரப்போவது உறுதி. இதை எதிர்கொள்வதற்கு இந்திய அரசிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அமெரிக்காவில் ஏற்கனவே உள் கட்டமைப்பு வசதிகள் ஏறக்குறைய முழுநிறைவாக உள்ளன. உருசியாவில் பொதுமைக் கட்சி ஆண்ட காலத்தில் அங்கும் ஏறக்குறைய முழுமை அடைந்துவிட்டது. செருமனியில் இட்லர் தன் நாட்டுக்குச் செய்த மிகப்பெரும் பணியே அனைத்து உள் கட்டமைப்புகளையும் உருவாக்கியதுதான். ஆனால் இந்தியா ″விடுதலை″ அடைந்து 61 ஆண்டுகளைத் தாண்டிய போதும் எந்த ஒரு துறையிலும் உள் கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது என்று சொல்வதற்கில்லை. அதை மேம்படுத்த வேண்டும் என்ற கவலை கூட எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அனைத்துத் துறைகளிலும் பெரும் தேக்கமும் பின்வாங்கலும் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக பொதுமைத் தோழர்கள் தங்கள் பெரும் அருஞ்செயல் என்று பெருமையடித்துக் கொள்ளும் அரசுடைமைக்கு உள்ளான பெரியவையும் நாட்டு வாழ்வுக்கு இன்றியமையாதவையும் ஆன தொடர்வண்டித் துறையும் மின் துறையும் ஆங்கிலர் அகன்ற பின் பின்னோக்கிச் சென்றுள்ளன. ஆனால் ஆளும் கூட்டம் அயல்நாடுகளில் முதலிடுவதில் முன்னணியில் நிற்கிறது.

இன்றைய உலகப் பொருளியல் நெருக்கடி நம் நாட்டுக்கு ஒரு நல்வாய்ப்பை நல்கியுள்ளது. அதைப் பயன்படுத்தி நம் அரசு பணத்தாள்களை வெளியிட்டு உள் கட்டமைப்புகளைப் போர்க்கால விரைவில் செயற்படுத்தி மக்களிடம் பணப் புழக்கத்தை மிகுத்து ஏற்றுமதியில் ஏற்படும் என்று எதிர்பார்க்கும் வீழ்ச்சியை ஈடுசெய்வதி மட்டுமல்ல அதற்கு அப்பாலும் செல்ல முடியும். நம் ஆட்சியாளர்கள் தம் போக்கை மாற்றிக்கொண்டு களத்தில் இறங்குவாரகளா?

அவர்களாக மாறமாட்டார்கள். நாம்தான் அவர்களை மாற்ற வேண்டும். ஆட்களை மட்டுமல்ல, ஆட்சிமுறையையும் ஆளும் கோட்பாடுகளையும்.

இந்தியாவிலுள்ள நேர்மையான அறிவுத்துறையினர் கிளர்ச்சியூட்டும் உணர்ச்சி வயப்பட்ட சிந்தனைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு நோய் வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் மழலையை, உயிர் பிழைக்க வேறு வழி இல்லாத நிலையில் அறுவைப் பண்டுவக் கூடத்தினுள் விடுத்து வைக்கும் போது என்ன மன நிலையிலிருப்பாளோ அதே மனநிலையில் நின்று செயல்படுவோம்! இன்று ″ஏழை″ நாடுகளுக்கு அத்தகைய ஒரு அறுவைப் பண்டுவம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து செயற்படுவோம்! அமெரிக்கா உருவாக்கியுள்ள நெருக்கடியை அங்கும் உலகெங்கும் இந்தியாவிலும் உள்ள ″தலைர்வர்கள்″ எப்படி எதிர்கொள்வார்களோ நாமறியோம். அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அவர்களால் உலகிலுள்ள சராசரிக் குடிமகனின் அல்லல்களை தீர்த்து வைக்க முடியாது. அந்த எல்லையை என்றோ தாண்டிவிட்டது உலகு. எனவே காலம் கடந்தாவது சரியான திசையைக் காட்டுவோம்.

மார்க்சு வாழ்ந்த காலத்திலிருந்து இன்று காலம் எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. அவர் குறிப்பிட்டிருப்பதைப் போல ″பேற்றுக்கால நோவின் கடுமையையும் கால சீட்சியையும்″ குறைக்கும் திறன் இன்று பெருமளவு வளர்ந்திருக்கிறது.

வல்லரசியத்தை வேரறுப்போம்!

முதலாளியத்தை வளர்ப்போம்!
உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் நம் ஒட்டுண்ணிப் பண்பாட்டுக்கு முடிவுகட்டுவோம்!


(நவம்பர்2008, திசம்பர்2008 & சனவரி2009 தமிழினி இதழ்களில் இக்கட்டுரை தொடராக வந்துள்ளது.)

0 மறுமொழிகள்: