தேசியம் வெல்லும் .....1
2008 திசம்பர் குமுதம் - தீராநதியில் கி.பி.அரவிந்தன் அவர்களின் மடல் கண்டேன். அவர் பழைய நடப்புகளைத் தமிழகப் படிக்குநருக்கு நினைவூட்ட முற்பட்டிருக்கிறார். ஆனால் தமிழகத்தின் நிலை என்ன?
தடுமாறும் தமிழகம்:
தமிழக மக்கள் இந்த மண்ணிலிருந்து தங்கள் வேர்களை இழந்து வருகின்றனர். படித்தால் ஏதோவொரு வெளிநாட்டுக்குச் சென்றாவது பிழைக்கலாமே, ஏதாவது பண்டம் விளைத்தால் ஏதாவதொரு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாமே என்பதாக அவர்களது சிந்தனை சிறகடிக்கிறது.
பெரியாரிலிருந்து தொடங்கிய ஒட்டுண்ணி வாழ்க்கை மீதான வெறி மக்களை அணு அணுவாகப் பிளந்துவைத்துள்ளது. சட்டக் கல்லூரியில் நடந்தது அதன் திட்டவட்டமான வெளிப்பாடு.
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு என்பதே நிலையான வாய்ப்பாடாகிப் போனது. அதற்காக, அதனைப் பயன்படுத்தி நம் ஆட்சியாளர்களும் அவர்களின் கைக்கூலிகளான சாதி, சமயத் தலைவர்களும் மக்களைச் சாதிகள், உட்சாதிகள் என்றும் மதங்கள், உள்மதப் பிரிவுகள் என்றும் மொழிக் குழுக்கள் என்றும் நாள்தோறும் அணுக்கள், மின்னணுக்கள் என்ற வகையில் பிளந்து வருகின்றனர். எந்த நொடியில் எந்த இடத்தில் எந்தச் சாதி அல்லது மத அல்லது மொழிக் கலவரம் வெடிக்குமோ என்று மக்கள் அஞ்சி நடுங்கி வாழும் வகையில் இன்று தமிழகம் மட்டுமல்ல, முழு இந்தியாவும் உள்ளது.
ஒதுக்கீட்டுக்கு மாற்றாக அனைவருக்கும் கல்வி என்ற ஒரு திட்டத்தைப் பற்றி எவருக்கும் சிந்தனை இல்லை. திருவிதாங்கூர் சமத்தானத்தில் திவானாக இருந்த சி.பி. இராமசாமி ஐயர் என்ற தமிழர், தமிழர் வாழும் பகுதிகளில் 1946இல் தொடங்கிய கட்டாயக் கல்வித் திட்டம் அவர் 1948இல் பதவி விலகினாலும் அங்கு முழுமையான எழுத்தறிவை வளர்த்ததைப் பற்றி எவரும் கண்டுகொள்ளவில்லை. அது போல் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பதைத் தொழில் வளர்ச்சி மூலம் என்பதை மறைத்து அரசு ஒட்டுண்ணி வேலைகள் என்று பொதுமைக் கட்சியினர் திசை திருப்பினர். காமராசர் போன்றோர் அரும்பாடுபட்டு உருவாக்கிய அரைகுறைக் கல்விக் கட்டமைப்பில் கூட இந்திய அரசு முன்வைத்த “மனிதவள ஏற்றுமதி”க் கொள்கையால் தாய்மொழிக் கல்வி அகன்று கொண்டிருக்க, அது பதுங்கியிருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எழுத்தறிவு புகட்டாத “செயல் வழிக் கல்வி”த் திட்டத்தால் மக்கள் அக்கல்விக் கூடங்களை நாடாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற தலைமுறையில் ஆங்கில வாயிலில் பயின்று கல்வி அதிகாரிகளாக வந்திருக்கும் அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளே தங்கள் தங்கள் சாதிகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்குக் கல்வியளித்து வரும் இப்பள்ளிகளை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. “தமிழ்”, “தமிழ்த் தேசியம்” பேசுவோர் இதைக் கண்டுகொள்ளாதது, அவர்களே தங்கள் சாதி ஏழை மக்கள் தங்களுக்கு இணையாக வளர்ந்துவிடுவதை விரும்பாத இவர்களின் உள்மனச் செயற்பாட்டின் விளைவுதான் என்பது எம் துணிபு.
சாதி, சமய, மொழிக்குழுத் தலைவர்கள் அனைவருமே தங்கள் தங்கள் குழுக்களின் மேலடுக்கினருக்கு மட்டும் உயர்கல்வியும் உயர்பதவி வாய்ப்புகளும் வேண்டும் என்பதற்காக மக்களுக்குள் குழுவெறியைக் கிளப்பித் தத்தம் குழுவினரைத் தத்தமக்குப் பின்னால் அணிதிரளவைத்துத் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற அவர்களை வாக்கு வங்கிகளாக்கி வைத்துள்ளனர். ஆனால் அந்த ஏழைப் பெரும்பான்மை மக்களுக்கோ வாழ்நிலை நாளுக்குநாள் கேள்விக்குறியாகிவருகிறது. இப்படித்தான் வெவ்வேறு காலங்களில் மேல் நிலைக்கு வந்தவர்கள் தங்கள் நலன்களை நிலைநிறுத்துவதற்காக மக்களின் தாய்மொழியைச் சேரி மொழியாக்கி ஓர் அயல்மொழியை ஆட்சியிலும் ஆலயத்திலும் ஏற்றிவைத்து அங்கு பார்ப்பனனையோ சமண ஒற்றனையோ அமர்த்தித் தம் குமுக மேலாளுமையைப் பேணி வந்துள்ளனர். இன்று ஆங்கிலம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது, அவ்வளவுதான்.
தமிழக உழவன் விளைநிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டுவிட்டான். உரூபாவுக்கு ஒரு கிலோ அரிசியா, தான் விளைத்த நெல்லுக்குத் தானே விலை வைக்கும் உரிமையா என்ற கேள்வியின் முன் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து செய்வதறியாமல் அறிவு மயங்கி வீழ்ந்துவிட்டான், நில உச்சவரம்பாலும் குத்தகை நிலைப்புச் சட்டங்களாலும் துண்டு துக்காணி நிலங்களுக்கு மட்டும் உரியவனாகிவிட்ட தமிழக உழவன்.
குடும்ப வருவாயை ஆடவர்கள் சீமைச் சாராயக் கடைகளின் முன் காத்துநின்று கரைத்துக்கொண்டிருக்க பெண்கள் பங்கீட்டுக் கடைகள் முன்னும் அரசு அலுவலகங்கள் முன்னும் மானிய விலைப் பண்டங்களுக்காகவும் இலவயங்களுக்காகவும் காத்துக்கிடக்கின்றனர்.
குடும்ப அட்டை என்பது அடையாள அட்டை என்பதற்குப் பகரம் மகிழுந்து வைத்திருப்போரைக் கூட இலவயங்களை நாடிச்செல்ல உதவும் பஞ்ச கால அட்டையாக மாறியுள்ளது. மக்களின் மானம், தன்மதிப்பு அனைத்தையும் அவிழ்த்தெறிந்து அம்மணமாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். சாராயத்தில் ஆதாயம், இலவயப் பொருட்கள் கொள்முதலில் தரகு, மானியப் பொருட்களைக் கடத்தி அதிலும் கொள்ளை, சாராயம் காய்ச்சுவதில் அல்லது கொள்முதலிலும் கொள்ளை. சாராயம் விற்றதில் கிடைத்த வரியில் மக்களுக்கு இலவயங்களை அள்ளி வழங்குகிறோம் என்று சட்ட மன்றத்திலேயே பெருமிதம் வேறு!
ஆள வந்தவர்கள் தமிழக நலன்களை அயலவர்களுக்கு விற்று ஆசியாவின் பணக்காரக் குடும்பங்களின் பட்டியல் எனும் ஏணியில் கிடுகிடுவென்று மேலேறிக்கொண்டிருக்கின்றனர். உலகப் பட்டியல் அடுத்த இலக்கு
இவ்வாறு விற்றுவிட்ட உரிமைகளை மீட்கப் போகிறோம் என்று தமிழகக் கட்சிகளும் “தமிழ்” இயக்கங்களும் நாடகமாடி விற்றவர்களிடம் விற்றதில் பங்குக்காகப் பகரம் பேசுகின்றனர். இந்த இயக்கங்களின் பெரும்பாலான தலைவர்களிடம் நமக்கு நேரடித் தொடர்பு இருந்ததுண்டு. அதனால் அவர்களை நாம் நன்றாகவே அறிவோம்.
“தமிழ் இயக்கங்கள்”, “தமிழ்த் தேசிய இயக்கங்கள்” என்பவற்றின் தலைவர்களும் அவற்றால் வழிநடத்தப்படும் தொண்டர்களும் தமிழகத்தை அறியமாட்டார்கள்; தமிழகத்தின், தமிழக மக்களின் உண்மையான சிக்கல்களை இந்தத் தொண்டர்கள் அறியமாட்டார்கள். “தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்” என்றொரு பொய்யுரையால் திசைமாறிச் செலுத்தப்பட்டவர்கள் இந்தத் தொண்டர்கள். இந்தத் “தமிழ் இயக்கங்களின்” தலைவர்கள் பலருடைய குறிக்கோள் பணி ஓய்வுக்குப் பின் மீண்டும் உள்நாட்டிலோ அயல் நாட்டிலோ ஒரு வேலையைப் பெறுவதுதான்.
இதற்காக இவர்கள் தமிழக வரலாற்று உண்மைகளை விலையாகக் கொடுப்பர் பேரா.இரா.மதிவாணன் போன்று, அண்டை மாநிலங்களை ஆளும் ”இந்திய”க் கட்சிகள் தமிழக மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டு பனியா - பார்சிச் சுரண்டலிலிருந்து கவனத்தைத் திருப்பும் வகையில் திரு அரணமுறுவலைப் போல் செம்மொழிச் சிக்கலுக்காகக் கூச்சல் போடுவர். இவர்களில் பெரும்பாலோர் ஆட்சியாளர்களோடு கள்ள உறவு வைத்துக்கொண்டு மேலுக்குக் குறைகூறுபவர்கள். இவர்களுக்கு திரு.கி.பி. அரவிந்தன் எந்தப் பழைய கதையையும் பேசிப் பயனில்லை.
அண்மையில் “தமிழீன”த் தலைவர் 40 மக்களவை உறுப்பினர்களிடம் பதவி விலகல் மடல்களை வாங்கி வைத்துக்கொண்டு தில்லிக்குச் சென்றதே வண்ணமாலை அலை ஒதுக்கீட்டில் சுருட்டப்பட்டதாகக் கூறப்பட்ட உரூ 80,000 கோடிச் சிக்கல் குறித்து சோனியாவை மிரட்டத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும் அவரை நம்புவது போல் இவர்கள் அனைவரும் நடித்தார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் இது போன்ற “நம்புதல்கள்” முறையாக நடந்தேறுகின்றன.
இது போன்ற மிரட்டல்களில் திரைத்துறையினரும் ஒழுங்காக ஒத்துழைப்புத் தருகிறார்கள். மக்கள் மகிழ்ந்து போகிறார்கள். சொல்லிலேயே, காட்சியிலேயே மகிழ்ந்து போய்விடும் தமிழக மக்களுக்கு இறுதி விளைவைப் பற்றி எடுத்துரைத்து வழிநடத்த ஒரு தலைவன் இன்று இல்லை. ஒரு கோட்பாட்டையும் அரசியலையும் முன்வைப்போரை இனங்கண்டுகொள்ளும் பக்குவமும் மக்களிடையில் உருவாக முடியாத ஓர் அவலச் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தே இருக்கும்.
(தொடரும்)
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக