28.6.09

தேசியம் வெல்லும் .....10

மார்க்சியமும் தேசியமும்:

பாட்டாளிகளுக்கு நாடு கிடையாது என்று மார்க்சு – ஏங்கெல்சு இணையர் நம்பினர். இந்தியாவில் பழைய குமுகத்தை, அதன் கட்டமைப்பை உடைத்த இங்கிலாந்து அதைப் புது வடிவில் மீளக்கட்டாமல் விட்டுவிட்டது என்று எழுதிய மார்க்சு, இந்தியா உட்பட ஐரோப்பாவின் அடிமை நாடுகளுக்குரிய வரலாற்றுப் பங்கைக் கணக்கிலெடுக்கவில்லை. ஒரு விடுதலைப் போரின் சிறு அறிகுறி கூட அன்று எங்கும் வெளித்தோன்றவில்லை. ஏங்கெல்சு, சிலாவிய நாடுகளை வரலாற்றிலிருந்து அகன்ற தேசங்கள் என்றே கணித்தார். ஆனால் அயர்லாந்து விடுதலைப் போராட்டமும் இங்கிலாந்துக்குள் பணியாற்றிய அயர்லாந்தினரான தொழிலாளர்களை இங்கிலாந்தின் தொழிலாளர்கள் தாக்கியதும் மார்க்சையும் ஏங்கெல்சையும் அதிரவைத்தன. அயர்லாந்து மக்களின் தேசிய உரிமைகளை இங்கிலாந்தின் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அயர்லாந்து தொழிலாளர்களும் இங்கிலாந்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து பிரிட்டன் அரசை எதிர்க்க வேண்டுமென்றும் அறிவுரை கூறினர். அது எவர் செவியிலும் ஏறவில்லை. ஏறவும் செய்யாது. இன்றைய வல்லரசிய ஊழியில், (அனைத்துவகைப் பொதுமைக் கட்சிகள் உட்பட) ஆட்சியாளர்கள் வல்லரசியங்களுடன் கள்ள உறவு கொண்டிருந்தாலும் “தாய்நாட்டுப் பற்று” என்ற அவர்களது பரப்பலில் மக்கள் மயங்கிவிடுவது தவிர்க்க முடியாதது. உலகப் போரின் போது இப்போக்குக்கு, குறிப்பாக செருமனியின் காட்கி போன்றோரின் செயற்பாட்டுக்கு எதிராக லெனின் மேற்கொண்ட கொள்கைப் போர் சோவியத்துப் புரட்சி வெற்றிபெற்று உலகப் போரின் முதல் கட்டம் முடிவதுவரை வெற்றிபெறவில்லை என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

அதைத்தான், அதாவது ஈழப் பாட்டாளியரும் சிங்களப் பாட்டாளிகளும் இணைந்து இலங்கை அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று, ஈழ விடுதலைப் போரைப் பொறுத்தவரை இந்தியாவின் மார்க்சியப் பொதுமைக் கட்சியின் நிலைப்பாடு என்று அக்கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் அண்மையில் கூறி, தான் ஈழவிடுதலைப் போரை ஏற்கவில்லை என்றார். இவர்களுக்கு பனியா - பார்சி ஆதரவு வெறியினால் அறிவே பேதலித்து கிடக்கிறதென்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

தேசிய விடுதலைப் போரை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் உலாவரும் மார்க்சிய லெனினிய அல்லது மாவோயியப் பொதுமைக் கட்சிகள் எனப்படும் அமெரிக்க - சீனக் கூட்டுறவில் இயங்கும் இயக்கங்கள் பாட்டாளியக் கோட்பாட்டை அதன் மிகக் கொச்சையான வடிவில் எடுத்துரைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, முதலிடுவது என்பதே சுரண்டலுக்கு வழிவகுத்துவிடும் என்கிறார்கள்; இது ஒடுக்கப்படும் தேசியங்களின் மூலதனத்துக்கு மட்டும்தான்!

அத்துடன் அவர்கள் மண் சார்ந்த, பொருளியல் சார்ந்த தேசியத்தைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பயிற்றுவிக்கப்பபட்டுள்ளனர். அவர்கள் பண்பாட்டுத் தேசியம் பற்றித்தான் பேசுவார்கள். பொருளியல் மாற்றம் வளர்ச்சி பற்றி யாராவது பேசினால் அடித்தள மக்களின் பண்பாடு சிதைந்துபோகும் என்று முட்டுக்கட்டை போடுவார்கள். தொழில்நுட்பமும் விளைப்புப் பாங்கும் மேம்பட்டால் மக்களின், குமுகத்தின் பண்பாட்டு மட்டம் உயரும் என்ற மார்க்சியத்தின் அடிப்படைப் புரிதலை இவர்கள் அறியாதவர்கள். விளைப்புப் பாங்கு உயருந்தோறும் மக்களின் பண்பாடு, அதிலும் பண்பாட்டின் அடிப்படையான மனிதர்களிடையிலான உறவு, இன்னும் குறிப்பாக, இந்தியா, தமிழ்நாடு, ஈழம் போன்று சாதிய ஒடுக்குமுறைகளால் காலங்காலமாக வலுவிழந்து கிடக்கும் குமுகங்களில் பண்பாட்டு உயர்வுக்குப் பொருளியல் விளைப்புப் பாங்கின், இன்னும் தெளிவாகச் சொல்வதனால், நிலக்கிழமைப் பொருளியலிலிருந்து முதலாளிய விளைப்புப் பாங்குக்கு மேம்படுவது எவ்வளவு உடனடித் தேவை என்பது அவர்கள் சிந்தனைக்குள் புகவில்லை ஆனால் அதற்கு எதிராக, பண்பாட்டைக் காத்தல் என்ற கூப்பாடு எவ்வளவு தீங்கானது, அந்த முழக்கத்தை முன்வைத்தவர்கள் எத்தகைய கயவர்கள் என்பதை நினைக்குந்தோறும் அவர்கள் மீது எமக்குக் கட்டுக்கடங்காத வெறுப்பும் சினமும் உருவாகின்றன. இவர்கள் முன்வைக்கும் நஞ்சினும் கொடிய இந்தத் தீய கருத்தை இதுதான் மார்க்சியம் என்று நம்பி ஏற்றுக்கொள்வோரின் அறியாமை அல்லது செம்மறியாட்டுத்தனம் நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடுகிறது.

இவர்கள் பரப்பலை முறியடித்து, ஏழை நாடுகளிலுள்ள ஒவ்வொரு தேசத்திலும் இன்று பெருவழக்காய் நிலவுகின்ற விளைப்புப் பாங்குக்கு அடுத்த விளைப்புப் பாங்குக் கட்டத்துக்கு அத்தேசத்தை இட்டுச் செல்லும் செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும் உண்மையான மார்க்சியர்கள். அவ்வாறு ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பான்மையான பகுதிகளிலும் குக்குலக் குமுகம் நிலவுவதால் அங்கு அடிமைக் குமுகத்துக்கான செயல்திட்டம் வேண்டும் என்கிறோம். இது சரிதானா? செயற்படுத்த முடியுமா என்றொரு கேள்வி எழும். இதற்கு விடையை இன்றைய சீனம் தருகிறது.

(தொடரும்)

1 மறுமொழிகள்:

சொன்னது…

அன்பின் ஐயா வணக்கம்
தங்கள் இணையப் பக்கம் கண்டு மகிழ்ச்சி.தங்கள் படைப்புகள் சிறப்பு.
தொடர்ந்து எழுதுங்கள்,பேசுங்கள்,
தங்கள் கட்டுரைகள் விக்கிபீடியாவில் இணைக்க முயற்சி செய்வேன்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி