25.6.09

முதலாளியமும் வல்லரசியமும் .....7

வரலாற்றில் இந்திய, தமிழக பொருளியல் வளர்ச்சிக் கட்டங்களைப் பற்றி சில ஐயப்பாடுகள் நமக்கு எழுகின்றன. குமரி மாவட்டம் இரணியலில் 1936 வரை அடிமைச் சந்தை இருந்ததாக மேலே குறிப்பிட்ட புலவர் கு.பச்சைமாலின் நூல்(குமரிமாவட்டம் பிறந்த வரலாறு, பக்.34இல்) கூறுகிறது.

அப்படியானால் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளபடி அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர் என்பது அடிமைகளைப் பற்றிய குறிப்பா?

கழக இலக்கியத்தில் அடிமைகளைப் பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பது தொகுத்தோர் தேர்வின் விளைவா? சென்ற நூற்றாண்டில் சரசுவதி மகால் நூல்நிலையத்தில் ஆங்கிலர் ஒருவர் தொகுத்து வைத்திருந்த நாட்டுப் புறப்பாடல்களில் பெரும்பான்மைப் பாடல்களையும் தீயில் அழித்த கி.வா.சகன்னாதன் செயல் போல் முன்பும் நடந்திருக்கிறதா?

அப்படியானால் தொல்காப்பியம் காட்டும் மருதத் திணை பண்பாடு, நெய்தல் திணைப் பண்பாடு ஆகியவை நிலக்கிழமைப் பண்பாடு என்று எடுத்துக் கொண்டாலும் குக்குலப் பண்பாடு, அடிமை நிலைப் பண்பாடு, நிலக்கிழமைப் பண்பாடு வரையிலான கலப்பு வெள்ளையர் காலம் வரை தொடர்ந்திருக்கிறது. அதன் பின்னர்தான் இன்றைய பெருமளவிலான நிலக்கிழமைப் பண்பாடும் அதற்கு அடுத்தபடி முறையே குக்குலப் பண்பாடும் அடிமைப் பண்பாடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அவ்வப்போது வெளிவிசைகள் வந்து இந்த மனித உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முழக்கங்களை வைத்துத் அடித்தள மக்களைத் தங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்திவிட்டு இறுதியில் கைவிட்டுவிடுகிறார்கள். மீ்ண்டும் பழைய நிலை திரும்பிவிடுகிறது.

இந்தத் தேக்க நிலைக்குக் காரணமே விளைப்புப் பாங்கிலும் தொழில்நுட்பத்திலுமான தேக்கமே. எனவே இந்தத் தேக்க நிலையை மாற்றி முதலாளியத்தினுள் நாம் திட்டமிட்டு நுழைவது உடனடித் தேவையாகிறது.

வரலாற்றில் திட்டமிட்டு முதலாளித்தை லளர்த்த நாடு ஒன்று உண்டு. அதுதான் சப்பான். நாம் முன்பு(தமிழினி அக்டோபர் 2008, மதமும் சமயமும்) குறிப்பிட்டுள்ளது போல், அயலவரை ஐயக்கண் கொண்டு பார்ககும் சப்பானின் துறைமுகம் ஒன்றில் 1853இல் ஒரு அமெரிக்கப் போர்க் கப்பல் குடியரசுத் தலைவரின் ஓலையுடன் நங்கூரம் பாய்ச்சியது. வணிகத்துக்காக வாயில்களைத் திறந்துவிட வேண்டும் என்றது ஓலை. இல்லை என்றால் போர். நிலக்கிழமை ஆள்வினைத் தலைவர்களாகிய டைமியோக்களைப் பேரரசர் கலந்தார். அமெரிக்காவின் கேட்பை ஏற்றுக்கொள்வதென்று முடிவாகியது. ஐரோப்பிய நாடுகளும் பின் தொடர்ந்தன. உள் நுழைவதற்கான இசைவைப் பெற அவை படை வலிமையைக் காட்டவேண்டியிருந்தது.

1868இல் புதிய பேரரசராகப் பதவியேற்ற 14 அகவை இளைஞனை இணங்கவைத்து இந்தியாவில் போல் வருணங்களாக இருந்த சப்பானியக் குமுக அமைப்பைச் சட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவாகி இருந்த வளர்ச்சி நிலைகளைக் கண்டுவந்து தம் நாட்டில் புகுத்தி ஒரு பின்தங்கிய நிலக்கிழமைக் கொண்டிருந்த சப்பானை இருபதே ஆண்டுகளில் ஒரு முதலாளிய நாடாக மாற்றிய அரும் பணியைச் செய்தவர்கள் ஈட்டோ, இனூயி என்பவர்கள். இவர்கள் அங்குள்ள போர்ச் சாதியாகிய சாமுரையைதச் சேர்ந்தவர்கள். அரச மரபு அல்லது மாநிலங்களின் ஆட்சியாளர்களான சோகன்கள் அல்லது ஆள்வினைப் பொறுப்பிலிருந்த டோமியோக்கள் ஆகியோரிடையிலிருந்து வந்தவர்கள் அல்லர் அவர்கள். வாள் வைத்துக்கொள்ளும் உரிமை பெற்ற, ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு போர் வந்தாலொழிய எந்த வேலையுமில்லாத, ஒட்டுண்ணிகள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும் எளிய மக்களிடையிலிருந்து தோன்றியவர்கள். போர்க்குணம் உள்ள இச்சாதியினரின் ஒரு பகுதியின் பின்னணி இருந்ததனாலும் முன்பு ஆயுதம் ஏந்த உரிமை இல்லாதிருந்த உழவர்களும் அவரகளுக்கும் கீழே இருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களுக்குக் கிடைத்த உரிமைகளைக் காத்துக்கொள்ள வீறார்ப்புடன் துணைநின்றதாலும் இந்த மாற்றங்களை எதிர்த்து நடைபெற்ற இயக்கங்களை அவர்களால் எளிதில் முறியடிக்க முடிந்தது.

வெள்ளையர்கள் நுழைந்து இந்தியாவின் பகுதிகளைப் பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்குப் பல வழிகளில் துணைநின்ற மரபுப் பெருமை மிக்க அரசர்களுக்கு மாறாக அவர்களை எதிர்த்து வீறுடன் போரிட்ட திப்பு சுல்தான் ஆகட்டும் நாட்டு மக்களைத் திரட்டி 1801 முதல் 6 ஆண்டுகள் தமிழகத்திலும் தென்னகத்தின் பிற பகுதிகளிலும் உள்ள பாளையக்காரர்களையும் சிற்றரசர்களையும் ஒரு கூட்டமைப்பில் இணைத்துப் போரிட்டதுடன் நம் வரலாற்றிலேயே முதன்முதலாக மக்களின் ஓர் உரிமைப் பட்டயத்தையும் வெளியிட்ட மருது பாண்டியர்களும் ஆகட்டும் அவர்களெல்லாம் எளிய குடும்பங்களிலிருந்து தோன்றியவர்கள். ஆனால் அவர்களுக்கு சப்பானியர்களுக்கு வாய்த்தது போல் ஒரேயொரு அரசனின் துணை கூடக் கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று அவலம்
[1].

சப்பானிலும் தென்னிந்தியாவிலும் 19ஆம் நூற்றாண்டில் போர்ச் சாதிகளின் நடத்தை இவ்வாறிருக்க 20, 21ஆம் நூற்றாண்டுகளில் காந்தி ஊழியிலும் பின்னர் பெரியார் ஊழியிலும் வழக்கம் போல் தம் நாட்டு மக்கள் மீது மேலாளுமை செலுத்துவதற்காக அயலவரான பனியாக்களுக்கும் பார்சிகளுக்கும் வல்லரசியல்களுக்கும் தமிழ்நாட்டை விலை பேசுவதாகவும் அதில் பங்குச் சண்டை அரசியல் நடத்துவதாகவும் தங்கள் மேலாளுமையை நிலைநிறுத்துவதற்காகத் தங்கள் எண்ணிக்கை வலிமையையும் பொருளியல், அரசியல் செல்வாக்குகளையும் பயன்படுத்தி அயலவர் எவராயிருந்தாலும் அவர்களுக்கு அடிமை செய்யத் தயங்காத கோழைகளின் செயலாகவும் மானமில்லாவர் செயலாகவுமே அவர்களது நடவடிக்கைகள் உள்ளன.

நம் சிக்கல்களைக் கையில் எடுத்துக்கொண்டு நேர்மையாகச் செயற்படும் ஒரு தலைவன் நம்மிடையிலிருந்து உருவாகவில்லை; அல்லது அத்தகைய தலைவர்களை இனங்கண்டு முன்னணியில் கொண்டுவந்து நிறுத்தும் பக்குவம் நமக்கு இன்னும் கைகூடவில்லை; அல்லது அவர்களை முன்னிறுத்தத்தக்க சிக்கல்களை உணரத்தக்க வகுப்புகளிடம் உரிய அகமை, அதாவது சிந்தனை வறட்சி நிலவுகிறது; அல்லது அவர்களின் சிந்தனை திசைதிருப்பப்பட்டுள்ளது என்பதுதான் இப்போது நம் நாட்டின் முன்னுள்ள மாபெரும் சிக்கல். தலைவர்கள் என்ற வகையில் நம் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடம் வெறும் தற்செயல் நிகழ்வு என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

முடியாது, கட்டாயமாக முடியாது. ஏனென்றால் இந்த அக வறுமைக்கும் வெறுமைக்கும் மார்க்சியத்தின் மறுப்பும் திரிபுமான பொதுமைக் கோட்பாட்டுக்கு முழுப் பொறுப்பு உண்டு. நம் நாட்டில் முதலாளியத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டிய தொழில் முனைவுள்ள உடைமை வகுப்புகளின் உளவியல் மீது திட்டமிட்ட ஒரு கொடும் தாக்குதலை அக்கோட்பாடு நடத்தி வெற்றி பெற்று நிற்கிறது. அயல் சமயங்களின் மூலமாகவும் உள்நாட்டுக் கட்சிகள் மூலமாகவும் தொண்டு என்ற பெயரில் அளந்து அறிய முடியாத அளவில் பாயும் அயல்நாட்டுப் பணத்தின் மூலமாகவும் இது இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் மிகக் குறைந்த முதலீட்டிலும் உழைப்பிலும் மிகப் பெரும் வருவாயை ஈட்டும் கல்லூர்ப் பேராசிரியர்களும் அரசூழியர்களும் அவர்களுக்கு இணையாக வருவாய் ஈட்டுவதற்கு ஒரு வாணிகனோ ஒரு சிறுதொழில் முனைவரோ முதலீட்டு இழப்பை எதிர்நோக்குதல், பல்வேறு வகையான சந்தை நெருக்கடிகள், ஊழியர் சிக்கல்கள், ஆட்சியாளர் செய்யும் அட்டூழியங்கள், குறிப்பாக வருமான வரித் துறையின் வரம்பு மீறல்களால் அடையும் மானக்கேடு ஆகியவற்றைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அவர்களைச் சுரண்டல் பேர்வழிகள், கொள்ளைக்காரர்கள், இரத்தக் காட்டேரிகள் என்றெல்லாம் ஈவிரக்கமின்றி வசைபாடி மக்கள் நடுவில் அவர்களைப் பற்றிய ஒரு கொடுமையான படிமத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதைவிடவும் கொடுமை அவர்களே தங்களைப் பற்றிய அத்தகைய ஒரு படிமத்தைத் தங்கள் மனதில் ஏற்றிவைத்துவிட்டார்கள் என்பதுதான். அதனால்தான் யார் எந்தக் கொடுமையைத் தங்களுக்கு இழைத்தாலும் எதிர்த்துப் போராடாமல் பணத்தைக் கொட்டிக் கொடுத்துத் தவிர்க்க முயல்காறார்கள். இது நம் நாட்டுப் பொருளியல் வளர்ச்சிக்கும் தற்சார்புக்கும் மக்களின், குறிப்பாக அடித்தள மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கும் எவ்வளவு தடையாக இருந்திருக்கிறது என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

இந்தத் தப்பெண்ணங்களிலிருந்து அவர்கள் தப்புவதற்கு உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியின் இன்றியமையாமையையும் தொழில் முனைவோரும் முதலீட்டாளரும் ஆற்றுகின்ற பெருமை மிக்க இன்றியமையாப் பொதுநலத் தொண்டு குறித்தும் அவர்களது தன்மதிப்பை அவர்களே உணரும் வகையில் செறிவான, முனைப்பான பரப்பல் செய்ய வேண்டும்.

பணம் படைத்தவர்களின் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகள் நாட்டையே குட்டிச்சுவராக்கிவிடும் என்பதை அமெரிக்கப் பட்டறிவும் அளவுமீறிய கட்டுப்பாடு நாட்டைச் சிதறடித்துவிடும் என்பதை உருசியாவின் பட்டறிவும் அண்மைக்கால நிகழ்வுகள் மூலம் நமக்கு ஐய்யத்துக்கு இடமின்றிக் காட்டியுள்ளன. எனவே நயமான கண்காணிப்புக்கு உட்பட்ட தேசிய முதலாளியமே அமைதியான மனிதகுல முன்னேற்றத்துக்கு உகந்தது.

சங்கக் குடும்பங்கள்(சங் பரிவார்) உட்பட்ட அயல் சமய அமைப்புகள் இன்னொரு புறம் தங்களுக்கு அயல் நாடுகளிலிருந்தும் பனியாக்கள், பார்சிகளிடமிருந்தும் கிடைக்கும் கணக்கற்ற பணத்தைப் பயன்படுத்தி மக்களிடையில் மதவெறியை ஊட்டி இவர்களது கொள்ளைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி வைத்துள்ளன.

இன்னொரு புறம் தமிழகத்தைப் பொறுத்தவரை பொருளியல் உரிமைக்கான போரட்டம் நடக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் ஒரு ″மொழி முதன்மைக் கோட்பாட்டை″க் காட்டி தமிழகத்தில் உள்ள செயல் ஊக்கம் உள்ள மக்களின் ஒரு பகுதியினரின் சிந்தனையைக் குழப்பி வைத்துள்ளனர். இவர்களிடையிலும் பணப்புழக்கம் தாராளமாக உள்ளது.

″இந்தியத் தேசிய″, அதாவது அனைத்திந்தியக் கட்சிகள் எனப்படுபவை பல்வேறு மாநில மக்களுக்கு இடையில் திட்டமிட்ட வகையில் பகைமையை வளர்த்துத் தம் தேசியக் கொள்ளைகள் மீது மக்களின் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்கின்றன.

சுரண்டல் விசைகளின் இந்தத் திசை திருப்பல்களிலிருந்து மக்களின் கவனத்தைப் பொருளியல் உரிமையின் இன்றியமையாமை, அதாவது, நம் மக்களிடம் திரளும் பணத்தை ஆக்கமான வகையில் முதலிட உரிமை, நம் நாட்டு மூலவளங்கள் மீது அந்தந்தப் பகுதி மக்களுக்கு உள்ள மறுக்க முடியாத உரிமை, நம் அறிவியல் - தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்த நமக்குள்ள உரிமை ஆகியவை மீது ஈர்க்க வேண்டு்ம்.
மார்க்சிய அறிதல் கோட்பாட்டில் நடைமுறை மிக முகாமையான இடத்தைப் பிடித்துள்ளது. எவ்வளவுதான் சிந்தித்தாலும் ஆயிரம் பேர் சேர்ந்து அலசினாலும் நடைமுறையில் செய்து சரிபார்ப்பதற்கு இணையாக நிற்க முடியாது. இற்றை அறிவியலும் செய்மூறை ஆய்வைத்தான் தன் இறுதி உத்தியாகக் கொண்டுள்ளது. நம் நாட்டில் ″அறிதல்″ உத்திகளாகக் கொள்ளப்படும் ″யோகமு″ம் ″தியானமு″ம் அதனை எதிர்கொள்ள முடியவில்லை என்பதை நாம் நமது தேவை ஒவ்வொன்றுக்கும் வல்லரசுகளையே நாடி நிற்கும் நிலைமை சுட்டிக் காட்டுகிறது.

செல்வத்தில் திளைத்து தினவெடுத்து ஒய்யார வாழ்வின் உச்சத்துக்குச் சென்ற உரோமப் பேரரசு அங்கிருந்த அடிமைகளால் முடிவுக்கு வந்து இருண்ட காலத்துக்குள் நுழைந்த ஐரோப்பா அதிலிருந்து வெளியேற 12 நூறாண்டுகள் பிடித்தது. அது போல் அமெரிக்க ஆளும் கூட்டம் தினவெடுத்து நிற்கிறது. உள்நாட்டில் வாழும் வெளிநாட்டு அடிமைகள் அவர்களது கொட்டத்தை அடக்கப் போகிறார்களா அல்லது உலகத்தின் மூலை முடுக்கிலெல்லாம் தன் படையை நிறுத்தி வைத்து கொழுப்பெடுத்து ஆங்காங்கே உரசிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் கிறுக்குத்தனத்தால் ஓர் உலக அணுப்போர் தொடங்க இருக்கிறதா என்பது உலகில் உள்ள சரியாகச் சிந்திக்கத் தெரிந்த மக்கள் முன் எழுந்து நிற்கும் பெரும் கேள்வி.

புதிதாகக் குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்றிருக்கும் கறுப்பரான ஒபாமா அமெரிக்க அணுகலில் புரட்சிகர மாற்றம் எதையோ கொண்டுவரப் போகிறார் என்று கணிக்கின்றனர். ஆனால் நீண்டகாலப் போராட்டத்துக்குப் பின் ஒரு கறுப்பர் இப்பதவியைப் பெற்றிருப்பதால் உலகில் அமெரிக்க நலன்கள் என்று அமெரிக்கர்கள் கருதும் இனங்களில் அவர் மிகுந்த எச்சரிக்கையுடனேயே செயற்பட வேண்டியிருக்கும். முன்னிருந்தவர்களைவிட மிக முனைப்பாகச் செயற்படும் உளவியலுக்குக்கூட அவர் ஆட்படலாம். அயலுறவு அமைச்சர்களாகச் செயற்பட்ட காலின்சு பாவெல் மன அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெளியேறியதையும் கண்டலீசா ரைசு தன் முன்பு இருந்தவர்களிலிருந்து எந்த வகையிலும் மேம்பட்டவராக நடந்துகொள்ளவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒபாமாவினது தொடக்க கால நடைமுறைகள் நம் கருத்தை வலியுறுத்துவனவாகவே உள்ளன.

அமெரிக்கர்களுடைய பொதுவான குமுகியல் அணுகல் வெள்ளையரோடு நிறமுள்ளவர் (Coloured people) என்று அவர்கள் குறிப்பிடும் அயல்நாட்டினரின் கலப்பில் பிறந்தவர்கள் மீண்டும் மீண்டும் எத்தனை முறை வெள்ளையரோடு கலந்தாலும் கூட அவர்களைத் தங்களுக்கு இணையானவர்களாக அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக தென்னமெரிக்காவில் ஒருவர் பிறந்த நாட்டையோ அவருடைய நிறத்தையோ பார்ப்பதைவிட அவர் கடைப்பிடிக்கும் பண்பாடு ஐரோப்பிய, சிவப்பிந்திய கலப்பில் உருவாகியுள்ள இலத்தீன் அமெரிக்கப் பண்பாடா அல்லது பண்டைய சிவப்பிந்தியப் பண்பாடா என்பதைத்தான். இவ்வாறு ″இனத்தூய்மை″யில் விடாப்பிடியாக இருந்த வட அமெரிக்கர்கள் இன்று கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் அண்மைக் காலத்து வந்தேறிகளுக்கும் கலப்பினத்தாருக்கும் சிறுகச் சிறுக இடமளித்து இப்போது இறுதியில் குடியரசுத் தலைவராகவே ஒரு கலப்பினத்தவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அங்கே வெள்ளையரின் ஆற்றல் வீழ்ச்சி அடைந்து பிற இன மக்கள் அவர்களது இடத்தைப் பிடிக்கத்தக்கதாகத் தம் ஆற்றலை வளர்த்துள்ளனர் என்பதுதான் அதன் பொருள். ஆனால் இதனால் அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள ஐரோப்பியர் அல்லாத மக்களுக்கு ஏதாவது நன்மை இருக்கும் என்று நினைத்தால் நாம் ஏமாந்தவர்களாவோம், ஏனென்றால் பொருளியல் நலன்கள் எப்போதும் நிலம் சார்ந்துதான் செயற்படும். எடுத்துக்காட்டாக கர்நாடகத்தில் வாழும் தமிழ் பேசும் ஓர் உழவன் காவிரி நீர் தொடர்பாகக் கன்னட மாநிலத்துக்குச் சார்பாகத்தான் செயற்பட முடியும். அதுதான் தேசியம் என்பதன் உண்மையான இயல்பும் உள்ளடக்கமும்.

அடுத்து பாராளுமன்ற ″மக்களாட்சி″யின் எல்லைப்பாடுகளையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். இந்தியாவுடன் ஒப்பிட அமெரிக்காவின் ″மக்களாட்சி″ உயர்வானது என்று கூறப்பட்டாலும் அங்கு பாராளுமன்றத்துக்குத்தான் இந்தியாவில் உள்ளதைவிடக் கூடுதல் அதிகாரமே அன்றி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அங்கும் வரிசையில் காத்து நின்று வாக்குப் பதியும் வெறும் கருவிகளே. அங்கு நடப்பதும் உலக வாணிகத்தைக் கையில் வைத்திருப்போரின் (இன்று அது யூதர்களைக் கொண்டுள்ளது) வெறும் குழுவாட்சிதான். இந்தியாவைப் பொறுத்தவரை மோகன்தாசு கரம்சந்து காந்தியின் புண்ணியத்தால் பனியா - பார்சி கும்பலின் குழுவாட்சிக்குப் போட்டியாக இன்றுவரை எவரும் களத்தில் இறங்க முடியவில்லை.

இவ்வாறு நாம் மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்தகவுகளும் மெய்யாகாமல் இருக்க வேண்டுமாயின் உலக நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் மட்டுப்படும் வகையில் ″ஏழை″ நாடுகளிலிருந்து வல்லரசுகளுக்குப் பாயும் செல்வம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிகழ வேண்டுமாயின் ″ஏழை நாடுகளிலுள்ள மக்களிடையிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மட்டுப்படும் அளவுக்குச் செல்வ உருவாக்கமும் பங்கீடும் சீர்செய்யப்பட வேண்டும். அது நிகழ வேண்டுமாயின் மலை உச்சிகளிலும் கடல் ஓரங்களிலும் மனிதன் எட்டாத மூலை முடுக்குகளிலும் வாழும் அனைத்து மக்களும் தேசியங்களின் நீரோட்டங்களுக்குள் பிற மக்களுக்கு இணயாகவும் சமமாகவும் கொண்டுவரப்பட வேண்டும். பெருமரபியல் தேசிய முதலாளியம் ஒன்றால்தான் இதைச் செய்ய இயலும்.

உலகுக்கு கறிக்கோழி போன்ற மிக விரைந்த ஆனால், சிறு தட்பவெப்ப மாறுபாட்டைக் கூடத் தாங்க முடியாத வளர்ச்சி தேவையில்லை. உலகின் அனைத்து வளங்களையும் ஒரு சில நாடுகளில் உள்ள பணமுதலைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும், உலகிலுள்ள இளைஞர்களைப் பொறுக்கி தமக்கு வேண்டிய திறன்களை வளர்த்து பிற திறன்களை அழித்துத் தங்களுக்குப் பயன்படுத்திவிட்டு வீசியெறிந்து விடும் உலகளாவிய கல்வி கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கும், நாட்டுக்கு நாடு, ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வெவ்வேறு பகுதிக்குப் பகுதி, ஒவ்வொரு பகுதிக்குள்ளும் மக்களுக்கு மக்கள் எட்டமுடியா ஏற்றத்தாழ்வை வளர்த்து வைத்திருக்கும் இந்த ″வளர்ச்சி″ என்ற பெயரிலான அழிவு தேவையிலை. ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அதன் பகுதிகளுக்குள்ளும் வாழும் மக்களின் வாழ்நிலையில் கேடுதரும் அளவுக்கான ஏற்றத்தாழ்வுகள் இன்றி சீரான வளர்ச்சியை எய்தும் படியான, ஒரு கோடியிலுள்ள வளர்ச்சியின் பயன்கள் மறுகோடியை எட்டுவதற்குரிய கால இடைவெளியைத் தரும்படியான விரைவில் வளர்ச்சி இருந்தால் போதும். ″திறன் மிகுந்த″ மூளைகளைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்துகிறோம் என்று மேல்தட்டினர் மேன்மேலும் பிற மக்களிடமிருந்து தங்களை எட்டாத உயரத்துக்குக் கொண்டு செல்லும் தொடர்ச்சியான உயர்கல்வி முறை தேவை இல்லை. பட்டறிவு, பகுத்தறிவு, படிப்பறிவும் மாறி மாறி, ஒன்றையொன்று தொடர்ந்து வரும் சீரான வளர்ச்சி தரும் கல்விமுறையைப் புகுத்துவோம். குழந்தைகளுக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கும் திறன்களை அறிவதற்கும் அவற்றை குமுகத்துக்கு ஆக்க வழியல் பயன்படும் வகையில் வளர்த்தெடுப்பதற்கும் உரிய தொழிலியல், வேளாண்மையில், கலையியல், படிப்பியல் கட்டமைப்புள்ள கல்வி நிலையங்களை, அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் அமைப்போம். அவர்களிடம் பிறவியிலேயே குமுக வாழ்க்கைக்குக் கேடுதரும் பண்புகள் அமைந்திருந்தால் கல்வி மூலமும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்திப் பயிற்சிகள் அளிப்பதன் மூலமும் அவற்றை அகற்றுவோம். கல்விக்காகக் குமுகச் செல்வத்தில் பாதியைக் கூட, ஆனால் சரியான முறையில் நாம் செலவிடலாம்.

(தொடரும்)


அடிக்குறிப்பு:

[1] இந்தப் போர் பற்றிய செய்திகளை ப-ர். இராசதுரை அவர்கள் எழுதியுள்ள South Indian Rebellion என்ற நூலில் பார்க்கலாம்

0 மறுமொழிகள்: