28.6.09

தேசியம் வெல்லும் .....5

“முகம்மதிய”த் தேசியம்:

இன்று அமெரிக்காவையும் உலகையும் ஆட்டி வைக்கும் யூதப் பெரும் முதலைகள் தங்கள் வரலாற்றை மறந்து செயற்படுகின்றனர். கி.பி. நான்காம் நூற்றாண்டில் உரோமின் அரச சமயமாக ஏற்கப்பட்ட கிறித்துவத்தைக் காட்டி, ஏசுவைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டின் மீது அன்றைய இசுரேலர்கள் மீது படையெடுத்து அவர்களை உலகமெல்லாம் நாடோடிகளாகவும் ஏதிலிகளாகவும் அலையவிட்டவர்களின் வழிவந்தவர்கள்தாம் இன்றைய ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ஆகிய கிறித்துவர்கள். இந்தியாவுக்கும் சீனம் போன்ற பிற கிழக்கு நாடுகளுக்கும் பெயர்ந்த யூதர்களை அந்நாடுகளின் அரசர்கள், தங்கள் மக்களுக்குத் தாங்கள் வழங்காத உரிமைகளைக் கூட வழங்கி வாழவைத்தனர். ஆனால் ஐரோப்பாவில் யூதர்கள் பட்ட கொடுமைகள் உலகில் எந்த மக்களும் நாமறிந்த வரலாற்றில் பட்டறியாதவை. யூதர்களின் குடியிருப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கே தனிச் சொல் ஆங்கில அகராதியில் உள்ளது. இன்று சீக்கியர்களை இழிவுபடுத்தும் சர்தார் நகைச்சுவை போல் சில நூற்றாண்டுகளுக்கு முன் நகைச்சுவைகள் யூதர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் நிலவின. சேக்சுப்பியரின் வெனிசு வாணிகன் (Merchant of Venice) போன்று அவர்களது கஞ்சத்தனத்தையும் கல்நெஞ்சத்தனத்தையும் காட்டும் கதைகள் ஏராளமாக உண்டு.

கிறித்துவம் வட்டித் தொழிலுக்கு விதித்திருந்த தடையால் கிறித்துவ ஐரோப்பியர்களை மீறி யூதர்கள் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். இவர்களுக்கு எதிராக இருந்த உணர்வுகளிலிருந்தே உரோமின் போப்பரசருக்கு எதிரான மார்ட்டின் லூதரின் கோட்பாடுகள் ஐரோப்பாவில் காட்டுத் தீ போல் பரவின. ஆனால் அதன் பயனாக உருவான முதலாளியத்தில் ஏற்கனவே பணம் சேர்த்து வைத்திருந்த யூதர்களைத் தாண்டி ஐரோப்பியர்கள் செல்வது அரிதாகவே இயன்றது. இதன் எதிர்வினைதான் இட்லர் யூதர்களை அழிக்கப் புறப்பட்டது. இருப்பினும் தொடக்கத்தில், இங்கிலாந்துக்கு ஏதிரான தன் போர் ஆயத்தங்களுக்கு செருமானியிலிருந்த யூத முதலாளிகள் இட்லருக்குப் பயன்பட்டனர்.

சார் காலத்திய உருசியாவிலும் யூதக் குடியிருப்புகள் திடீர் தாக்குதலுகளுக்கு உள்ளாயின. ஆக, கிறித்துவ உலகு யூதர்களுக்கு எந்த விதிவிலக்குமின்றிக் கொடுமை இழைத்தது. இந்தச் சூழலில் ஐரோப்பாவில் “உலக”ப் போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில் பெரும் முதலாளிகளில் பெரும்பான்மையினரும் அறிவியல் - தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆகிய யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினர். அங்கு அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. போர் முடிவுக்கு வந்த போது இங்கிலாந்து தலைமையிலான ஐரோப்பாவின் வலிமை பழங்கதையானது. அமெரிக்காவும் சோவியத்தும் புதிய வல்லரசுகளாயின.

இந்தச் சூழலில் யூத முதலாளிகள் பாலத்தீன நாட்டின் நிலங்களை அங்குள்ள மக்களிடம் விலைகொடுத்து வாங்கி உலகிலுள்ள ஏழை யூதர்களை அங்கு குடியேற்றி வேளாண்மை, தொழில்கள் ஆகியவற்றில் அவர்களைக் கொத்தடிமைகள் போல் பயன்படுத்திச் சிறிது சிறிதாக வளப்படுத்தினர். இந்தப் பின்னணியில் போர் முடிந்த நிலையில் பாலத்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் ஆன சிக்கலைத் தீர்த்து வைக்கும் வாய்ப்பு அமெரிக்காவுக்குக் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி அமெரிக்க, ஐரோப்பிய யூதர்கள் யூதர்களுக்கான தாயகமாக இசுரேலை அமைத்து அதன் ஒரு பகுதியாகப் பாலத்தீனத்தை வைத்தனர். பாலத்தீனத்தை விடுவிக்க அம்மக்கள் நடத்திய வீறுமிக்க போராட்டங்களையும் அதைக் காரணமாக வைத்து உலக யூத வல்லரசியம் மேற்காசியா மீது கட்டவிழ்த்துவிட்டுவரும் கொடுமைகளையும் நாம் நன்றாகவே அறிவோம். அதன் உச்சகட்டமாக இன்று இசுரேல் பாலத்தீனத்தினுள் நடத்திவரும் தாக்குதல்களை, இன அழிப்புகளை எதிர்த்து இந்திய அரசு வாயே திறக்காமல் இருப்பது அது அமெரிக்காவின் யூத வல்லரசியத்தின் ஒரு அங்கமாகச் செயற்படுகிறது என்பதற்கு ஐயத்திற்கு இடமில்லாத ஒரு சான்று.

இந்த நிலையில் ஈழ, தமிழக, இந்திய, உலக முகம்மதியர்களின் நிலை என்ன? அவர்கள் உண்மையான உலக அரசியல் பின்னணியை உணர்ந்திருக்கிறார்களா என்ற கேள்விக்குள் நாம் நுழைந்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியும்தாம் நமக்குக் காத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் ஒளிபரப்பாகும் வின்(Win) தொலைக்காட்சியில் படிக்கப்படும் செய்தியில் உலக முகம்மதிய நாடுகளின் நிகழ்ச்சிகளைச் சொல்லி, பாலத்தீனர்களுக்கு ஆதரவான செய்திகளையும் சொல்லி, ஈழத்தைப் பற்றி வரும்போது அங்குள்ள தமிழர்கள் மீது பகை உணர்வும் சிங்கள, இந்திய அரசுகளின் மீது பரிவுணர்வும் வெளிப்படும் வகையில்தான் அது அமைகிறது. இது முகம்மதியர்களின் முகாமையான செயற்பாடாக வரலாற்றின் ஊடாக நாம் காணும் ஒன்று.

முகம்மதியத் தலைமைகள் எப்போதுமே ஓர் உலக முகம்மதியத் தேசிய உணர்வையே பேணி வந்துள்ளன. இந்தியாவில் முகம்மதிய ஆட்சி நடந்த நாட்களில் இங்குள்ள முகம்மதிய அரசர்கள் தங்களை உலக முகம்மதியக் கட்டமைப்பினுள் ஓர் அரசர் என்று ஏற்றுக் கொள்ளுமாறு, அந்தந்தக் காலத்தில் உலகில் வலிமை பெற்று விளங்கிய காலிபாக்களிடமும் ஆப்கானிய, பாரசீகப் பேரரசுகளிடமும் பெரும் பரிசுப் பொருட்களுடன் தங்கள் தூதுவர்களை விடுத்து அந்தத் தூதுவர்கள் அக்கலீபாக்கள் அல்லது பேரரசர்களின் அரண்மனை வாயில்களில் காத்துக்கிடந்தார்கள். அதை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் தில்லியில் ஆண்ட செர்சா சூரியும் அக்பரும்.

. உலகின் மிக உயர்ந்த சமயம் ஏற்றத் தாழ்வில்லா நயன்மை(நீதி)யே என்று அறிவித்துச் சட்டங்களை இயற்றியவர் செர்சா சூரி. ஆங்கிலருக்கும் இன்றைய இந்திய ஆட்சியருக்கும் இந்தியாவை ஆள்வதற்குப் பயன்படும் பல சட்டங்கள் செர்சா சூரி தன் 4½ ஆண்டுகால ஆட்சியின் போது வடித்தவையாகும்.

தன் நாட்டு மக்கள் தங்கள் மதத் தலைமையகத்துக்குப் போவதாகக் கூறி அயல் நாடுகளுக்குச் செல்லக் கூடாது என்பதற்காகவே அக்பர் மக்காவுக்கு அச்சுப் பயணம் செய்வதைத் தடைசெய்தார். அதற்காகவே இந்தியாவுக்கென்று ஒரு புதிய மதத்தை தீன் இலாகி என்ற பெயரில் உருவாக்கினார். அதில் குறைகள் இருந்த போதிலும் அது வெற்றி பெறாமல் போனாலும் அந்த முயற்சியின் உள்ளடக்கம்தான் நமக்கு முதன்மையானது.

முகம்மதியப் பூசாரிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட அவுரங்கசீப்பால் இவர்களது முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. பின்னர் ஐரோப்பியர்களால் மேற்காசிய நாடுகள் முறியடிக்கப்பட்டு இந்தியாவும் ஆங்கிலர் கைகளுக்குள் வந்த பின்னர் முகம்மதியர்களிடையில் தாங்கள் வாழும் மண் சார்ந்த தேசிய உணர்வு துளிர்விட்டது. அதை முளையிலேயே கிள்ளியெறிந்தது, இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி என்று இந்திய மொழிகளைத் தனித்தனியே எடுத்துக்கொண்டால் இந்திய மக்களில் பெயரளவில் அதைப் பேசும் கூடுதல் மக்களின் ஆதரவைப் பெற்று தான் சமணன் என்பதை மறைத்து இந்துவென்று அடையாளம் காட்டி (சான்று: வில் டூரன்று) இந்திய முகம்மதியர்களைத் தனிமைப்படுத்தி அவர்களில் கணிசமானவர்களை இந்தியாவிலிருந்து அகற்றிய, பனியா நலனைக் குறிக்கோளாகக் கொண்டு தன் உயிரையே அதற்காகக் காவு கொடுத்த காந்தியின் செயற்பாடு.

இந்திய ‘விடுதலை’யின் பின் கிழக்காசிய நாடுகளும் இலங்கையும் ‘இந்தியர்’களைத் துரத்தியதால் அவர்களில் மிகப் பெரும்பான்மையராக இருந்த தமிழக மக்கள், அவர்களிலும் பெரும்பான்மையாயிருந்த முகம்மதியத் தமிழர்கள் ஈட்டி வந்த செல்வம் நின்று போனதால் உருவாகிய ஏழ்மையின் விளைவாகத் தாம் வாழும் தமிழ்நாட்டின் மீது அவர்களின் கவனம் பதிந்து தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இணையும் போக்கு உருவானது. அதுவும் முடிவுக்கு வந்தது 1967க்குப் பின்னர் கிழக்காசியப் போரின் விளைவாக எகிப்து சூயசுக் கால்வாயைப் பிடித்து மேற்காசிய நாடுகள் கன்னெய்ய(பெட்ரோலிய)த்தை அரசுடமையாக்கிய பின்னர். அதனால் மேற்காசியாவில் திரண்ட செல்வத்துக்கு விலைபோன உலக முகம்மதியத் தலைமைகளால் மீண்டும் உலக முகம்மதியத் தேசியம் களைச்செடி போல் விரைந்து பரந்து வளர்ந்தது. அதன் விளைவாக மேற்காசிய ஆளும் கும்பல்களின் நலன்களை உலக முகம்மதிய நலன்களாகக் காட்டும் போக்கும் அவர்கள் அதனை நம்பும் போக்கும் உருவாகியுள்ளது. முகம்மதியர்களுக்குத் தாம் வாழும் மண்ணுக்குப் புறம்பான தனித்த தேசிய அடையாளமும் பண்பாடும் உள்ளதென்று இந்தத் தலைமைகள் பரப்பி அது ஏறக்குறைய அனைவர் மனங்களிலும் படிந்துவிட்டது. இதற்காகப் பெருஞ் செலவில் “மார்க்க” மாநாடுகள் கடந்த 15 ஆண்டுகளுக்குள் நடத்தப்பட்டன. எனவே பாலத்தீனம் தவிர்த்த எந்த ஒரு தேசத்திலும் உருவாகும் தேசிய இயக்கங்களிலும் இருந்து அத்தேசியத்தினுள் அடங்கிய முகம்மதியர்கள் அயற்பட்டு ஒடுக்கும் தேசியத்தின் பக்கம் நிற்கும் தம் தலைவர்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். அதன் விளைவுதான் ஈழ மண்ணில் முகம்மதியர்கள் ஈழத் தேசியத்துக்கு எதிர் நிலைப்பாடு எடுத்திருப்பதும் வின் தொ.கா.வில் வெளிப்படும் காழ்ப்பும்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: