தேசியம் வெல்லும் .....2
ஈழத் தமிழரும் தமிழகத் தமிழரும்:
ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழருக்கும் ஒரு வகையில் பெரும் ஒற்றுமை இருக்கிறது. இரு நிலங்களின் மக்களும் தங்கள் தாய்மண்ணை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது. ஆனால் அவர்களிடையிலான வேற்றுமை, ஈழத் தமிழர்களுக்கு தாங்கள் வெளியேறுவதன் காரணம் தெரியும்; தங்களை வெளியேற்றுபவன் யார் என்பதும் தெரியும். அப்படி வெளியேற்றுவோரிடமிருந்து தம் மண்ணை மீட்க வேண்டும் என்ற வெறியும் அவர்களிடையில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
ஆனால் தமிழகத் தமிழனுக்குத் தான் தன் தாய்மண்ணிலிருந்து துரத்தப்படுகிறோம் என்பதே தெரியாது. தான் ஒளிநிறைந்த ஓர் எதிர்காலத்தைத் தேடி வெளியேறுவதான கற்பனையில் அவன் முழ்கியுள்ளான். அதனால் எந்த விசை தன்னை வெளியேற்றுகிறது என்ற தேடலே அவன் சிந்தனையில் உருவாகவில்லை. இவ்வாறு வெளியேறுவதற்கான “தகுதி”களைப் பெறுவதற்காகத் தன் நிலபுலன்களை விற்றுவிட்டு அவன் வெளியேறுகிறான். அது போலவே ஆட்சியாளரின் நேரடியும் மறைமுகமுமான ஒடுக்கல்களால் நெருக்கப்பட்ட உழவனும் தன் நிலங்களை விற்கிறான் அல்லது தரிசாகப் போடுகிறான். அத்தகைய நிலங்கள் மனைகளாக்கப்பட்டு வெறும் முதலீட்டுக் கருவியாகி தமிழகத்தின் பணவளத்தைச் செயலிழக்கச் செய்கின்றன அல்லது ஆட்சியாளர்களால் கையகப்படுத்தப்பட்டு பனியா – பார்சி - அயல்நாட்டுக் கொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்து கைப்பற்றப்படுகின்றன. உலகப் பொருளியல் சிதைவினால் பெரும் நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் நாட்டை விட்டு ஓடிப்போனவர்கள் திரும்பிவரத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் அயலவர்களுக்குப் பணியாற்றுவோரும் வேலை இழக்கும் நிலையில் உள்ளனர். இவர்கள் ஈட்டிய பணத்துக்கு இங்கு நேர்மையான முதலீட்டு வாய்ப்புகளை இங்குள்ள பனியா - பார்சி - பொதுமைக் கட்சி - அயல்விசைக் கூட்டணி பறித்து வைத்துள்ளதால் அவற்றை மிகப் பெரும்பாலோர் வீண் செலவுகளில் அல்லது பயனற்ற அசையாச் சொத்துகளில் அழித்துவிட்டு நிறந்கின்றனர். இன்று தமிழக மக்கள் தம் மண்ணின் மீது உரிமையற்ற நிலையை எய்தி நிற்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளில் பாலத்தீன மக்களுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு மண்ணிழப்பு நிலைமை பெரியார் போன்ற தலைவர்களாலும் அவர்களது பெயர்களை முழக்கிக் கொண்டு வரிசை வரிசையாகத் தோன்றிய பல்வேறு படி நிலைகளிலுள்ள எத்துவாளிகளாலும் நேர்ந்துள்ளது.
(தொடரும்)
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக