28.6.09

தேசியம் வெல்லும் .....4

நெளியும் உலகு:

உலகில் கிட்டத்தட்ட தேசிய இயக்கங்கள் வெளிப்படையாக அல்லது குறைந்தது, திட்டவட்டமாக வெளித்தோன்றாமல் கருநிலையிலாவது இல்லாத நாடு ஒன்று இல்லை என்றே சொல்லலாம். உலகின் ஒரே வல்லரசாக வளர்ந்து நிற்கும் அமெரிக்காவில் உலகெங்கும் இருந்து பாயும் கணக்கற்ற செல்வத்தால் வேண்டுமானால் ஒரு துயில் நிலையில் அது இருக்கலாம். ஆனால் 200 ஆண்டுகள் உலகைக் கட்டியாண்ட இங்கிலாந்தின் காட்டுலாந்திலும் வடக்கு அயர்லாந்திலும் வெடித்தெழுந்தது போன்ற எழுச்சிகள் ஒரு நாள் அங்கும் நிகழாமல் போகாது.

தன்தீர்மானிப்புரிமை என்ற அடிப்படையில் அமைந்த சோவியத்தின் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட உருசியத் தேசங்களின் மக்களில் பெரும்பகுதியினர் விடுதலை பெற முடிந்திருக்கிறது. ஆனால் அங்கும் ஒடுக்கப்படும் தேசியங்கள் எஞ்சியுள்ளன.

சோவியத் உடைந்து சில தேசங்கள் விடுதலை பெற்றது கூட அங்கிருந்து உருவாகி வளர்ந்து வந்த தலைமைகளால் நிகழ்த்தப்படாமல் அமெரிக்காவின் கையாட்களாக மாறிவிட்ட கோர்ப்பசேவ், எல்த்சின்களின் மூலமாக நடைபெற்றதுதான் அவலம். உருசியாவின் மூலதனத்தின் பின்னணியில் அதன் முதலாளிய உருவாக்கம் நடைபெறாமல் அமெரிக்க முதலீட்டால் நடைபெறுவதுதான் கேடு. ஆனால் லெனினும் தாலினும் குருச்சேவ் முதலியோரும் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கும் வரை அதன் மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் முதலீடு ஒரு தடையாக இருக்க முடியாது.

சீனத்திற்கு எதிராகத் திபேத் மக்கள் நடத்தும் விடுதலைப் போர் பற்றிய செய்திகள் வெளி உலகுக்குத் தெரியும். ஆனால் எவருக்கும் வெளிப்படாமல் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கும் தேசிய உணர்வுகள் எத்தனையோ?

நேற்று திபேத்து என்றால் இன்று நேப்பாளம். சீன – அமெரிக்கக் கூட்டுருவாக்கமான மாவோயியர்களின் செயலுக்கு இந்தியா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை, ஏனென்றால் இன்று அமெரிக்காவால் ஆட்டிவைக்கப்படும் பொம்மைகளே இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்தும். ஆப்கானித்தானை அமெரிக்கா கைப்பற்றிய போதும் இங்கு எதிர்ப்புணர்வு எதுவும் வெளிப்படவில்லை என்பதும் இதனால்தான். அமெரிக்காவின் தொங்குசதையான பாக்கித்தானையும் சேர்த்தால் இவை அனைத்தும் இந்தியாவின் எல்லை நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மேற்காசியாவைத் தம் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுச் செயற்படுகின்றன. ஈராக்கை 1990இல் அமெரிக்கா தாக்கிய போது இந்தியாவின் சந்திரசேகர் தலைமையில் “ஆண்ட” கூட்டத்தினர் அதற்குப் பலவகையிலும் உதவி ஆதாயம் தேடிக்கொண்டனர். ஓர் அமைச்சர், வி.சி. சுக்லா என்று நினைவு, உலக நாடுகளுக்கெல்லாம் சென்று அமெரிக்கா சார்பாகவும் சதாம் உசேனுக்கு எதிராகவும் பரப்பல் செய்ய, இந்தியாவின் வழியாக அமெரிக்காவின் படை வானூர்திகள் செல்லவும் இந்தியாவுக்குள் அவை கன்னெய்யம் நிரப்பிக் கொள்ளவும் வசதிகள் செய்து கொடுத்தது அந்த அரசு. சந்திரசேகர், அமெரிக்காவை நடுவமாகக் கொண்ட நிகர்மைக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஈராக்கை விழுங்கிவிட்டு ஈரானைக் குறிவைத்துள்ளது அமெரிக்கா. இவை எதற்கும் அரபு “அரசர்கள்” எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 16-19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியப் பகுதிகளில் நிலவிய நிலைமை இன்று அங்கே நிலவுகிறது. இந்த “அரசர்கள்” அமெரிக்க அரசுடன் குலவுகிறார்கள். குர்து இன மக்கள் போன்றோரின் தேசிய உரிமைகளை நசுக்குவது அரேபிய மக்களின் வலுவின்மைக்கு அடிப்படையான காரணம்.

ஆப்பிரிக்காவை எடுத்துக்கொண்டால், காட்டுவிலங்காண்டி நிலையிலிருந்து குக்குல(பழங்குடி) நிலையைக் கூட முழுமையாக எய்தாத அம்மக்களிடையில் ஐரோப்பிய முதலாளியத்திலிருந்து உருவான பாராளுமன்ற “மக்களாட்சி”யையும் பாட்டாளியக் கோட்பாட்டையும் விதைத்ததினால் இன்று இனப் படுகொலைகளாலும் ஏழ்மையாலும் வெள்ளைத்தோல் காட்டுவிலங்காண்டிகள் அங்கு விதைத்துள்ள செயற்கையான பஞ்சத்தாலும் நோய்களாலும் மக்கள் அழிந்துவருகின்றனர்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: