23.6.09

முதலாளியமும் வல்லரசியமும் .....6

மார்க்சிய மெய்யியல் இரண்டு பகுதிகளைக் கொண்டது:

1. வரலாற்றுப் பருப்பொருளியம் (Historical Materialism)


இதன் சாரம் நாம் முன்பு குறிப்பிட்டுள்ளவாறு, மனித இனம் முந்தியல் பொதுமை, அடிமைக் குமுகம், நிலக்கிழமைக் குமுகம், முதலாளியக் குமுகம் என்ற, விளைப்புக் பாங்கில் மாறுபட்ட, ஒன்றிலிருந்து அடுத்தது தொழில்நுட்பத்திலும் மனித உறவுகளிலும் மேம்பட்ட பொருளியல் வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. அந்தந்த வளர்ச்சிக் கட்டத்துக்கு உரிய விளைப்புப் பாங்குக்கு ஏற்றவாறு மேம்பாட்டைந்தவையாக அதன் சமயம், திருமண உறவுகள், அறிவியல் - தொழில்நுட்பங்கள், உணவு முறைகள், சட்டங்கள், கலை இலக்கியம், அரசியல், மனித உறவுகள் என்று நீண்டு செல்லும் ″குமுகத் தன்னுணர்வின்″ வெளிப்பாடுகள் அமைகின்றன.

2.இயங்கியல் பருப்பொருளியம் (Dialectical Materialism)


இதன் அடிப்படை:

1.இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவை இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கின்றன; மாறாமல் நிலையானது என்று எதுவுமே கிடையாது; மாறாமல் இருப்பது மாறுதல் ஒன்றுதான் என்பது.


2.இயற்கை, குமுகம், மனிதச் சிந்தனை ஆகியவை எதிரிணைகளின் முரண்பாட்டினால் இயங்குபவை; இந்த இயங்கியல் எதிரிணைகள் ஒன்றையொன்று அழிப்பதில்லை; ஒன்று இல்லாமல் மற்றொன்று இருப்பதில்லை.

இவற்றின் தன்மைகள் இயங்கியல் விதிகள் என்ற வகைப்பாட்டினுள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை மூன்று:


1.எதிரிணைகள் ஒன்றையொன்று ஊடுருவுதல்.
ஒரு நிகழ்முறையில் செயற்படும் எதிரிணைகள் ஒன்றை ஒன்று ஊடுருவுகின்றன, ஒன்று மற்றொன்றாக மாறுகின்றன என்பது. முட்டையும் கோழியும் இதற்குச் சான்றாகலாம். தாய் குழந்தையைப் பெறுகிறாள்; குழந்தை தாயாகிறது என்ற வகையிலும் கூறலாம்.


2.அளவு மாற்றம் பண்புமாற்றமாதல்.
பெண்கள் வெளியில் வேலை பார்க்கச் செய்வது ஒரு காலத்தில் விதிவிலக்காக இருந்தது. இப்போது இயல்பாக மாறிவிட்டது. இன்னும் சில காலம் சென்றால் அதுவே விதியாகிவிடும்.


3.அகற்றுவது அகலல்.
ஒரு நிலைமை இருந்து அதனை அகற்றிவிட்டு புதிய ஒரு நிலைமை வருகிறது. சில காலத்தில் அதனையும் அகற்றிவிட்டு புதிதாக இன்னொன்று வருகிறது.

இந்த மூன்று விதிகளையும் ஒரே விதிக்குள் கொண்டு வருவோமா?

தாய் பெண் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தை வளர்ந்து வளர்ச்சி ஒரு கட்டத்தை அடைந்ததும் அவள் தாயாகும் பக்குவத்தை அதாவது பண்பைப் பெறுகிறாள். வளர்ச்சி அதாவது அளவு மாற்றம் எல்லையை எட்டியதும் அது பண்பு மாற்றமாக மாறுகிறது. இந்தத் தாய் ஒரு மகளைப் பெறும்போது மூன்றாம் விதி செயற்படுகிறது. இந்தத் தாய் பிறந்த போது அவள் தன் தாயை அகற்றினாள். இப்போது இவள் மகள் இவளை அகற்றுகிறாள். அகற்றிவிட்டு வந்தது அவளால் அகற்றப்பட்டது அல்ல, புதிய ஒன்று.

சீனத்தில் உள்ள ஒரு கோட்பாடு நாம் இறுதியில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முரண்பாட்டை ஒரே தொடராகக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஏங்கெல்சு வகுத்த இயங்கியல் கோட்பாடு தவறு என்று வாதிட்டனர் மூன்றாம் அணி எனப்படும் அமெரிக்க உளவு நிறுவனம் படைத்த அறிவுத்துறையினர். சீனத்தில் உள்ள வடிவம் இதோ:

முரண்பாடுகள், முதன்மை முரண்பாடுகள் என்றும் முதன்மை இல்லா முரண்பாடுகள் என்றும் இரு வகைப்படும். வளர்ச்சிப் போக்கில் முதன்மை முரண்பாடு பின்னணிக்குச் சென்றுவிட முதன்மை இல்லா முரண்பாடு முதன்மை முரண்பாடாகும். அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் அந்த முதன்மை முரண்பாடு பின்னணிக்குச் சென்றுவிட புதிதாக ஒரு முரண்பாடு முதன்மை முரண்பாடாக வரும். இதுதான் முரண்பாடுகள் என்ற தலைப்பில் மா சே துங் பெயரில் வெளிவந்துள்ள நூலின் சாரம். இதில் அகமுரண்பாடுகள், புறமுரண்பாடுகள் என்ற எதிரிணைகளும் ஒன்று மற்றொன்றாக மாறும் என்றே கூறப்பட்டுள்ளது.

வடிவம்தான் வேறே ஒழிய உள்ளடக்கத்தில் வேறுபாடு இல்லை என்பது மேலே உள்ளவற்றிலிருந்து உறுதிப்படுகிறது.

நாம் முன்னோரிடத்தில் குறிப்பிட்டுள்ளது போல் மார்க்சை வெளிப்படையாக மறுதலிக்கத் துணிவின்றி மார்க்சின் படிமத்தை முழுமையாகப் பேணிவைத்து அவர் பெயரைக் கூறியே அவரது கோட்பாட்டைத் திரிப்பது அவர்களது நோக்கம்.

இயங்கியலைப் பொறுத்தவரை அவருக்கு முன்பிருந்த மாபெரும் இயங்கியல் மெய்யியலாளரான செருமனியின் எகல் என்பவரை அடியொற்றி மார்க்சிய இயங்கியலை நுண்பொருளிய(Idealsim) அணுகலிலிருந்து பகுப்பொருளிய(Materialism) அணுகலுக்கு மாற்றியவர் மார்க்சே. சிந்தனையிலிருந்து பருப்பொருள் உருவாகிறது என்ற எகலின் கருத்தை மறுத்து பருப்பொருளிலிருந்து சிந்தனை உருவாகிறது என்று மாற்றியது மட்டுமே மார்க்சினுடைய பணி. அதனை முறையான வடிவில் எழுத்தாக்கிய பணியை ஏங்கெல்சு செய்தார், அவ்வளவே.

இனி, முரண்பாடுகளே இயற்கை, குமுகம், சிந்தனை ஆகியவற்றை இயக்குகின்றனவென்றால், பொதுமைக் குமுகம் முரண்பாடுகளற்ற ஒரு குமுகமாக இருக்கும் என்றும் சொன்னால் அந்த குமுகம் இயக்கம் இன்றித் தேங்கி நிற்குமா? அப்படி இயற்கையில் எதுவும் தேங்கி நிற்காது. முன்னே போக வேண்டும் .அல்லது பின்னோக்கிப் போக வேண்டும். மேலே போக வேண்டும் அல்லது கீழ்நோக்கிப் போக வேண்டும், (நம்மூர் பொதுமைத் தோழர்கள் பின்னோக்கிச் செல்லும் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எப்போதும் முன்னோக்கித்தான் எதுவுமே நகரும் என்பார்கள். தமிழக வரலாற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னுக்குத் தள்ளுவதற்குத் தோதாக இருக்கிறது என்பதுதான் அவர்களது இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்பது அவர்களது ″வரலாற்று″ அணுகல்களைப் பார்த்தால் புரியும்.)

மாற்றம் என்பது இயற்கையிலும் குமுகத்திலும் மனிதச் சிந்தனையிலும் இடைவிடாது நிகழ்வது என்பது இயங்கியல் பருப்பொருளியத்தின் அடிப்படைக் கோட்பாடு அல்லவா? இயற்கையிலிருந்து மனிதன் உருவாகி அவனது சிந்தனையும் உருவானாலும் அவை மூன்றும் ஒன்று பிறவற்றைச் சார்ந்தும் சாராமலும் இயங்கி ஒன்றை ஒன்று இயங்கவக்கின்றன, அதாவது மாற வைக்கின்றன. இந்த வகையில் எந்தக் குமுகமும் மாறாமல் நிலைத்து, உறைந்து போகாது என்ற வகையில் அரசு என்பது ″உதிர்ந்து போன″ நிலைமாறி மீண்டும் புதிய மனித உறவுகள் தோன்றலாம்.

இயங்கியல் எதிரிணைகள் என்ற வகையில் வகைதிணை(Catagories)களாக சிலவற்றைக் குறிப்பிடலாம். அவை:


1.காரணம் - விளைவு

2.வியத்தி(இயற்காட்சி) - சாரம்

3.வடிவம் - உள்ளடக்கம்

4.அமைப்பு - பயன்பாடு

5.விதி - தற்செயல்

6.நிகழ்தகவு - பட்டாங்கு

இவை மீப்பொதுவான வகைத்திணைகள். மற்றப்படி இயங்கியல் வகைத்திணைகள் எல்லையற்றவை. ஒவ்வொரு வகை இயக்கத்துக்கும் அதற்கே உரிய ஒன்றோ பலவோ இயங்கியல் வகைத்திணை உண்டு.

மனித அறிதல் குறித்த ஒரு கோட்பாடு அறியொணாமையியம் (அஞ்ஞானவாதம்- Agnosticism) என்பதாகும். இயற்கையை நம்மால் முழுமையாக அறிய முடியாது என்று அது கூறுகிறது அது. மார்க்சியம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இயற்கை இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பதால், மாறிக் கொண்டிருப்பதால் மனித அறிவும் அதற்கேற்ப மாறிக் கொண்டிருக்கும், அறிவு தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் என்கிறது. அது போலவே குமுகமும் அதனுள் காலம் கொண்டுவரும் புதிய மாற்றங்களால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்.

எந்த ஓர் இயங்குதிணையும் முரண்பாடுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் இன்றி நிகழாது. நீர் மட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் அது ஓடும். காற்று அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் அது வீசும். மின்னாற்றலில் பொதியல் வேறுபாடு (Potential Difference) இருந்தால்தான் மின்னோட்டம் இருக்கும். அதே வேளையில் அளவுக்கு மீறிய முரண்பாடு நமக்குப் பயன்படுவதற்கு மாறாகப் பெருங்கேட்டை விளைக்கும். அணையில் மறுகால் இயங்காமல் நீர் மட்டம் உயர்ந்தால் அணை உடைந்து பேரழிவை உண்டாக்கும். காற்றழுத்த வேறுபாடு மிகுதியானால், ″மிகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்நிலை″ அளவுமீறினால் புயல் வீசிப் பேரழிவை ஏற்படுத்தும். மின்சாரம் இரு வீச்சுக் கம்பிகள்(Phase wires) ஒன்று சேர்ந்து போனால் மின்தளவாடங்கள் அனைத்தும் தீய்ந்து போகும். அது போல்தான் நாடுகளுக்கிடையிலும் நாட்டுக்குள் மக்களுக்கு இடையிலும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் வந்தால் அதனால் நிகழும் பேயாட்டம் உலகத்தை அல்லது நாட்டை அழிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

இன்று அமெரிக்காவில் தாங்கள் கட்டிய வீட்டுக்கு வாங்கிய கடனை அடைத்து உரிமையாக்க முடியாத ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருக்கிறது. அங்குள்ள வெள்ளையர்கள் பயன்படுத்தி வீசியெறியும் புதுமை மாறா தொ.கா.பெட்டி, குளிர்பதனப் பெட்டி போன்ற பல்வேறு பயன்படு பொருட்களைப் பொறுக்கிப் பயன்படுத்தும் கூலி வேலை தேடிப் போன ″ஏழை″ நாட்டு மக்கள் பெருமளவில் அங்கு குவிந்துள்ளனர். அங்கு வேலைக்குச் சென்று அளவின்றி ஈட்டும் நம் நாட்டு ″இறைச்சிக் கோழிகள்″ தம் ஊரிலும் தம் வீட்டிலும் தமக்குத் தேவையான வசதிகளும் சூழல்களும் இல்லை என்பதற்காக அவர்கள் வந்து தங்கி தன் உற்றோருக்கும் மற்றோருக்கும் திருக்காட்சியளிப்பதற்காக நம் நாட்டிலுள்ள நகரங்கள் தோறும் ″விண்மீன்″ தரமுள்ள விடுதிகள் எழும்பி வருகின்றன. அதே வேளையில் ஆப்பிரிக்காவின் ஆள் நுழைய முடியாத, அன்றாடம் பிற்பகலில் மழை பெய்து பாம்புகளுக்கும் பூச்சிகளுக்கும் குருதியை உறிஞ்சும் செடிகொடிகளுக்கும் நடுவில் வாழும் குறளி(குள்ள) மனிதர்களுக்கு இணையாக, மெய்யியலிலே உலகுக்கு வழிகாட்டியவர்கள் நாம் என்று நண்பர் செயமோகன் போன்றவர்கள் போற்றிப் புகழும் நம் நாட்டிலும் மலைகளில் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நிலை மேம்பட்டால் அவர்கள் பேணிப் பாதுகாத்துவரும் பண்பாடு கெட்டுப் போகும் என்று கூசாமல் பேசும் வெளிநாட்டு பணத்தில் புரளுகிறவர்களும் சொந்தப் பணத்தில் வாழுகிறவர்களுமாகிய படித்த ஒட்டுண்ணிகள் ஓயாமல் பரப்பி வருகிறார்கள்.


(தொடரும்)

0 மறுமொழிகள்: