குமரி மாவட்டக் கலவரம் - ஒரு பகுப்பாய்வு (7)
படிப்பினைகள்
இந்தக் கலவரத்தின் போது பெற்ற இரு படிப்பினைகள் மதிப்பு மிக்கவை.
ஒன்று, சிறு எண்ணிக்கை கொண்ட மீனவர்கள் பெரும் வெள்ளமெனப் பாய்ந்த நாடார்களைக் கலக்கியடித்தது. இது வரலாற்றில் அடிக்கடி நிகழும் ஒன்று. நெடுங்காலம் ஒடுக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் மக்கள் கூட்டம் எப்போதுமே இத்தகைய வீரத்தைக் காட்டிவந்துள்ளது. முன்பு தம்மை ஒடுக்கிய நாயர், குறுப்பு, வெள்ளாளர்களை எதிர்த்த போதும் சிவகாசிக் கலவரத்திலும் இதே நாடார்கள் காட்டிய வீரம், இபபோது புளியங்குடியில் காவல்துறை - பிற்படுத்தப்பட்டோர் கூட்டணியை எதிர்த்து நின்ற தாழ்த்தப்பட்டோரின் சான்றான்மை, இராமநாதபுரம் கலவரத்திலும் மற்றும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் வழிவழியாகப் படைவீரர்களென்று இறுமாந்திருக்கும் சாதியினரை வெற்றி கொண்டு நிற்கும் தாழ்த்தப்பட்டோர் காட்டும் வீரம் ஆகியவை இதற்குச் சான்றுகளாக நின்று நிலவுகின்றன.[1] ஒரு குமுகத்தை முன்னோக்கிச் செலுத்தும் விசை அதிலுள்ள வீரம் மிக்க இந்த மக்கட்கூட்டம் தான். இக்கூட்டத்தோடு அக்குமுகத்தின் பொருளியல் விளைப்பு விசைகளும் உயிரியக்கமாக ஒன்றிணையும்போது அக்குமுகத்தின் வளர்ச்சியை உலகிலுள்ள எந்த ஆற்றலும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வளர்ச்சியைத் தமிழகம் காணத்தான் போகிறது.
இரண்டாவதாக, புதூர் என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சி. இவ்வூர் ஈத்தாமொழிக்குக் கிழக்கிலுள்ள அதை அடுத்த பெரிய ஊர். இவ்வூரை ஒட்டி அலைவாய்க் கரையில்[2] பொழிக்கரை, கேசவன் புத்தன்துறை, புத்தன்துறை என்ற மீனவர் ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களில் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு அடங்கிய போதிலும் மோதல் என்று எதுவும் நிகழ்ந்து விடாமல் இரு புறத்து மக்களும் மிக விழிப்பாக இருந்தனர். தீவிரப்போக்கு காட்டியோரை அடக்கி வைத்தனர். பள்ளம் இவ்வூர்களை அடுத்துத் தான் உள்ளது. பள்ளத்து மீனவர்களின் தூண்டுதல்களுக்கும் இவ்வூர்களிலுள்ள மீனவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இதற்குக் காரணம் உண்டு. புதூரில் தென்னந்தும்பு(தென்னைநார்) அடிக்கும் ஆலைகள் உள்ளன. அப்பகுதியிள்ள கயிறு முறுக்கும்(திரிக்கும்) சிறு தொழிலுக்கு தும்பு அடித்துக் கொடுப்பவை இவ்வாலைகள் தாம். எனவே ஆலைகளில் விலை மதிப்புள்ள தும்பு குவிந்து கிடக்கும். அத்துடன் மேலே குறிப்பிட்ட ஊர்களிலுள்ள கடற்கரையர் (மீனவர்) ஓரளவுக்குச் செல்வ நிலையிலுள்ளவர்கள். அவர்களுக்குத் தென்னந்தோப்புகள் உண்டு. ஆண்மக்கள் பலர் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள். இந்தக் காரணங்களால் கலவரம் விளைந்தால் தமக்கு வரும் இழப்புகளை எண்ணி இரு தரப்பாரும் தமக்குள் கூடிப் பேசி உறுதியாக அமைதி காத்து இன்றளவும் நிற்கின்றனர். 'இழப்பதற்கு விலங்குகளைத் தவிர எதுவுமில்லாத' (இழப்பதற்குச் சாதியைத் தவிர எதுவுமில்லாத என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும்) ஏழைகள் நிரம்பிய ஊர்களில் தான் இம்மக்கள் தீய விசைகளின் கைப்பாவைகளாகிக் கலவரத்தில் இறங்கினர். முற்போக்கு ஆற்றல்களின் கைகளில் புதிய குமுகத்தை உருவாக்கும் கருவியாக வேண்டிய மக்கள் உண்மையாக முற்போக்கு ஆற்றல்கள் உருவாகாத காரணத்தால் நாட்டைப் பின்னோக்கி நகர்த்தும் கயவர்களின் கருவியாகச் செயற்படும் கொடுமை இக்கலவரத்தில் தெளிவாகத் தெரிந்தது.
கலவரத்தின் விளைவாக யாருக்கு என்ன நேர்ந்ததோ, ஒரேயொரு நிலையான விளைவு மட்டும் தெரிகிறது. கலவரத்துக்கு முன்பு ஏழை மீனவப் பெண்கள், பெரும்பாலும் அகவை முதிர்ந்தவர்கள் தலையில் கடகங்களில்[3] மீன் சுமந்து குமரி மாவட்டத்துக் கடலை அடுத்த ஊர்ப்புறங்களில் விற்பது வழக்கம். அவர்களுக்குச் சோற்றுக்கு அது தான் ஒரே வழி. இது அவர்கள் கைகளிலிருந்து இன்று பிடுங்கப்பட்டு பெரும்பாலும் முகமதியர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள்[4] அது மட்டுமல்ல வெளியேயுள்ள பெரும் வாணிகர்கள் சுமையுந்துகளில் மீனை அள்ளிச் சென்றுவிடுகின்றனர். மீனை ஒரு முகாமையான உணவாக உண்டு வந்த நாடார்களின் கையிலிருந்தும் அது தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது. ஆடுகளிள் சண்டையில் குருதி குடித்த ஓநாய் போல் இடைத்தரகர்கள் ஆதாயம் பெற்றுவிட்டனர்.[5]
அனைத்தையும் விடக் குறிதகவுள்ள ஒன்றை, ஒரு விளைவை இக்கலவரத்தைத் திட்டமிட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்துமாக் கடலில் ஆதிக்கம் செலுத்த உலக வல்லரசுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்திய அரசு அதை முழுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் இந்திய அரசுக்கும் கடற்கரையில் வாழும் மக்களுக்கும் பகைமையை மூட்டி விட்டால் அவர்கள் தமக்கு ஐந்தாம் படையாக உதவுவார்கள் என்று இவ்வல்லரசுகள் கணிக்கின்றன. எனவே ஏதாவதொரு அடிப்படையில் உள்நாட்டு மக்களையும் கடற்கரை மீனவர்களையும் மோதவிட்டு ''கிறித்துவர்களான'' மீனவர் துயர்களுக்கு ''இந்து அரசான'' இந்திய அரசு தான் காரணம் என்று கூறிவிட்டால் தம் நோக்கம் எளிதில் நிறைவேறும். போர்த்துக்கீசியர் நுழைந்த காலத்தில் இயல்பாகவே நிலவியது போன்ற சூழலைத் திட்டமிட்டு உருவாக்க இவர்கள் விரும்புகிறார்கள். இந்நோக்கத்தை நிறைவேற்ற கிறித்துவ இயக்கங்கள் மட்டுமல்ல, ''நாட்டுப் பற்று நிரம்பி வழியும்'' இரா.சே.ச.வும் உடந்தை என்பதை அண்மை நிகழ்ச்சிகள் ஐயத்துக்கிடமின்றி மெய்ப்பித்து விட்டன. எனவே மக்களைப் பிளவு படுத்தும் இந்த மத இயக்கங்களின் மயக்கு வலையில் வீழாமல் மக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
இனிவரும் காலத்தில் என்ன செய்யலாம்?
இனிமேலும் இத்தகைய பிற்போக்கு விசைகளின் முயற்சிகளை முறியடிக்க அல்லது தவிர்க்க குமரி மாவட்ட நாடார்களும் மீனவர்களும் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பார்ப்போம்.
நாடார்களில் இப்போது நடுப்பருவத்தைத் தாண்டிக் கொண்டிருப்போருக்கு முந்திய தலைமுறையினர் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இன்றைய தலைமுறையனரின் வாழ்க்கை முறை அதற்குத் தலைகீழானது. முன் தலைமுறையினர் கடைப்பிடித்த சிக்கன வாழ்க்கை சிறப்பு மிக்கது. வளம் படைத்தோர் கூட அன்றைய வட்டத் தலைநகரான நாகர்கோயிலுக்குச் செல்வதாயின் காலையில் வீட்டில் உண்ட உணவுடன் வில் வண்டியில் சென்று வீடு திரும்புவது வரை வெளியில் உணவுண்ணார். முன்பு சிக்கனத்துக்குப் பேர் போன குமரி மாவட்டத்தினரே கேலி பேசுமளவுக்கு இவர்களது சிக்கனம் இருந்தது. ஆனால் இன்று இருசக்கர உந்துகளின் மீது நாடார் இளைஞர்கள் மாவட்டத்தையே கலக்குகிறார்கள், பெரும்பாலும் வீணாக. நடைபெற்ற கலவரங்களில் இந்த வெற்று இளைஞர்களின் வீண் வம்புகள் மீனவர்களுடன் ஏற்பட்ட கசப்புக்குப் பெருமளவு காரணமாக இருந்தன.
அத்துடன் இவ்வேலையில்லா இளைஞர்கள் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள மத இயக்கங்களுக்கு, தமிழர்களைப் பிளவு படுத்தும் ஆப்புகளாகச் செயற்பட்டு கொண்டிருக்கும் இந்த நச்சியக்கங்களுக்குக் கூலிக்கு உழைக்கப் போய்விடுகிறார்கள். இதனை முதலில் நிறுத்தியாக வேண்டும்.
இந்தக் கலவரத்தில் தம் நலன்களைக் கொண்டவர்கள் மூன்று வகையினரே. உடைமைகளைச் சார்ந்திராமல் சம்பளம், கோயிற்பணம், வைப்பகத்திலுள்ள பணம் ஆகியவற்றை நம்பியிருப்போராகிய ஒட்டுண்ணிகளைப் பெரும்பாலோராகக் கொண்ட சீர்திருத்த சபை கிறித்துவர்கள், வாணிகத்தை நம்பியிருப்போரான முகமதியர்கள், தலைமை வேட்கை கொண்டு இறந்த காலத்தை எண்ணிக் கனவு கண்டு மேல் சாதியாரோடு ஒட்டி வாழ எண்ணும் தாணுலிங்கர்கள், நந்தனர்களாக மாறிவிட்ட மதுரானந்தசீகள் தம் நாட்டு நலன்களை அயலவர்களுக்கு விற்றுவிட்ட முருகேசன்கள், எம்.ஆர்.காந்திகள், வெளிநாட்டு ''நன்கொடை''களுக்காக மக்களிடையில் மதவெறியை ஊட்டும் கிறித்துவ மத இயக்கத் தொழில் நடத்துவோர், கிறித்துவ வழக்கறிஞர் சங்கம் போன்றவற்றை அமைத்து மக்களைப் பிளவுபடுத்துவோர் ஆகியோர். இவர்களன்றி நாடார்களில் பிறருக்கு சாதிப்பூசல் ஏற்பட்டால் இழப்பு தான். எப்படி?
குமரி மாவட்ட நாடார்களில் மிகப் பெரும்பான்மையினர் நிலஞ்சார்ந்த வாழக்கையினர். கை நிறைய மாதச் சம்பளம் வாங்குவோருக்கும் கூட நிலத்தின் மீதுள்ள பற்று சிறிதும் குறையவில்லை. எனவே தான் கிடைக்கும் பணத்தைத் தொழில்களிலோ வங்கிகளிலோ போடாமல் சொத்துகளில் முதலிட முனைந்து நிலங்களின் விலையை மலையளவுக்கு இங்கு உயர்த்தியுள்ளார்கள். இது இங்குள்ள பணம் படைத்த பிற பிரிவினர்க்கும் பொருந்துவதாயினும் வருமானத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலிடுவோரில் நாடார்களே மிகுதி. கலவரங்கள் மூலம் இச்சொத்துகளுக்கு குறிப்பாகத் தென்னந்தோப்புகளுக்கும் வீடுகளுக்கும் இழப்பு வந்தால் என்னவாகும்?[6]
அதேபோல் பழஞ்சபைக் கிறித்துவர்களிலும் பெரும்பாலோர் உழைப்பாளிகள். ஆனால் அவர்களுக்கும் சொந்த வீடுகளும் கொஞ்சமாவது நிலமும் இருக்கும்; அதிகமாக நிலமுடையோரும் உண்டு. மொத்தத்தில் இவ்விரு பிரிவினரும் சீர்திருத்தசபைக் கிறித்துவர்களிலிருந்து பொருளியல் அடித்தளத்தைப் பொறுத்த வரையில் மாறுபட்டவர்கள். இந்த ஒற்றுமை இவர்களைப் பிரிக்க எண்ணிய விசைகளைத் தோல்வியுறச் செய்தமைக்கு முகாமையான காரணமாகும். ஒரு மதப் பூசல் இவர்கள் இருவரின் பொருளியல் நிலைப்பாட்டையும் அழித்துவிடும். ஆனால் இந்த உண்மைகளை உணராமல் இவர்கள், குறிப்பாக இந்து நாடார்களில் செல்வம் படைத்தோர் பழைய முதலூடி மனப்பான்மையின் தாக்கத்தில் மதவெறியை மனதில் வளர்த்து வைத்துள்ளனர்; தம்மை அழிக்க எண்ணும் கருவிகளுக்குத் தாமே விசையாகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் செய்ய வேண்டியது இதுதான். குமரி மாவட்டத்தில் ஏராளமான மூலப்பொருட்கள் உள்ளன. தேங்காய், தேங்காய் நார், கயிறு, இரப்பர், அரும் மண்கள், மீன், கம்புக் கிழங்கு, முந்திரிப் பருப்பு முதலியன. இவற்றைக் கொண்டு எண்ணெய் ஆலை, கயிற்று விரிப்புகள், தேங்காய்ப பால், தேங்காய்ப் பொடி, இரப்பர் பொருட்கள், மெத்தைககள், இரப்பர் மரக் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுத்தல், அரும் மண்களைப் பிரித்தெடுத்தல், அதிலிருந்து இறுதிப் பொருட்களைச் செய்தல், மீன் பதப்படுத்தல், விசைப்படகுகளில் மீன் பிடித்தல், முந்திரிப் பருப்பு பிரித்தெடுத்தல், முந்திரிக்கொட்டைத் தோட்டிலிருந்து எண்ணெய் எடுத்தல், முந்திரிப் பழச்சாறெடுத்தல், கிழங்கிலிருந்து உணவுப் பொருட்கள் ஆக்கல் என்று எத்தனையோ தொழில்களில் தம் பணத்தை முதலிடலாம். மீனவர்களும் இம்முயற்சிகளில் அவர்களோடு ஒத்துழைக்கலாம். நாடார் இளைஞர்களுக்கும் மீனவ இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பளிக்கலாம். கல்வி, அரசுப் பணிகளில் மட்டுமல்ல, தொழில்துறைகளிலும் குமரி தலைசிறந்த மாவட்டம் என்று நிறுவிக் காட்டலாம். எதிர்காலத் தமிழகத்தைத் தெற்கிலிருந்து தொடங்கி வைக்கலாம்.
இவ்வாறு, எங்களைப் பிளவுபடுத்த முடியாது, நாங்கள் வளர்வதைத் தடுக்க முடியாது, உங்கள் முயற்சி எங்களை ஊக்குமே ஒழிய தளர்வடையச் செய்யாது என்று தம் மேல் அழுக்காறு கொண்டுள்ள மேல் சாதியினருக்கு உணர்த்திவிட்டால் அவர்கள் தம் போக்கைக் கட்டாயம் மாற்றிக் கொள்வார்கள், தமிழகம் என்ற பெரும் நீரோட்டத்தில் அனைவரும் ஒன்றாகக் கலக்கலாம். இது ஒன்றும் வரலாற்றில் புதிய நிகழ்ச்சியல்ல.
குமரி மாவட்டத்துக்கு ஒரு சாபக்கேடுண்டு. அங்கு பிறந்து புகழ் பெற்றோரில் பெரும்பாலோர் உள்ளூரில் வாழந்து பெயர் பெற்றவரில்லை. தேசிக வினாயகர், நேசமணி போன்றோர் உள்ளூர்ச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயன்றவர்கள். ஆனால் அவர்கள் எடுத்துக் கொண்டவை ஒருவகையில் சாதிச் சிக்கல்களே. கலைவாணர், சீவா, அப்பாத்துரையார், கே.கே.பிள்ளை, தி.க. சண்முகம் போன்றோர் இம்மாவட்டத்துக்கு வெளியே சென்றதால் தான் வளர்ச்சியடைந்தனர் என்றால் தவறாகாது, ஏனென்றால் சாதியுணர்வை மீறிய வலுவான எந்த உணர்வும் மேலோங்க முடியாத ஒரு சூழ்நிலை இங்கு நிலவுகிறது. பொன்னீலனும் அவரைத் தொடர்ந்த எழுத்தாளளர்களில் பெரும்பாலோரும் கூட இம்மாவட்டத்தில் வாழ்ந்தாலும் சிறிது காலமாயினும் வெளி மாவட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.
அயல் விசைகள் இங்கு புகுந்து இதுவரை நிலவிவந்துள்ள மயக்கத்திலிருந்து இம்மாவட்ட மக்களை உலுப்பிவிட்டடிருக்கிறதென்று கூறலாம். அந்த இவகையில் இத்தீய விசைகளின் வினையில் ஒரு நன்மை இருக்கிறது. இதைப் பயன்படுத்தி அம்மாவட்ட மக்களை முன்னோக்கி நடத்திச் செல்ல வேண்டிய கடமை உண்மையான முற்போக்கு விசைகளுக்கு உண்டு.
குமரி மாவட்டத்தின் ஒர் இரு நூறாண்டுக் கால வரலாறு தமிழ்நாட்டு வரலரற்றின் ஒப்புருப் போல் விளங்குகிறது. குறிப்பாகச் சீர்திருத்த சபைக் கிறித்துவர்கள் நடத்தை சிறப்பானது. குமுக ஒடுக்குமுறையால் இவர்கள் மதம் மாறிய காலத்தில் தமக்குரிய குமுகத்தரத்தை மேல் சாதியினர் வழங்காத போது மதம் எனும் கட்டை அறுத்து நாடார்களை ஒன்றிணைத்து ஒரு பெரும் போராட்டத்ததை இவர்கள் நடத்தினர். பின்னர் தம் சாதியினர் என்று இன்றும் அவர்கள் உரிமை கொண்டாடும் இந்து நாடார்கள் தமக்கு இணையாக (போட்டியாக?) வளர்ந்து வந்தவுடன் சாதி என்ற கட்டை ஊடறுத்து மதம் என்ற அடிப்படையில் பிற சாதியினரைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டனர். சாதி வரம்புகளை மங்க வைப்பது முற்போக்கில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இவர்கள் ஒரு போதும் மீனவர்களையோ அல்லது தாழ்த்தப்பட்டோரையோ தமக்கு இணையாக மனம் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.[7] மொத்தத்தில விளைவு இவ்வாறிருக்கும். சாதியாகப் பிளவுண்டிருக்கும் மக்களுக்குள்ளேயே ஒரு மத அணிவகுப்பு மத அடிப்படையில் ஒன்று சேர முடியாத பிளவுகளை (இந்து நாடார், கத்தோலிக்க நாடார், சீர்திருத்த சபை நாடார் என்று) உண்டாக்கும். இன்று அது இருந்தாலும் சாதியின் முன் வலுவிழந்தே நிற்கிறது. இவர்களது முயற்சி அதன் வலுவைக கூட்டும்
தமிழகத்தில் இதற்கிணயாக பார்ப்பனரல்லா உயர்சாதியினரின் நடத்தையைக் கூறலாம். இவர்கள் பார்ப்பனர்களை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் ஒன்றிணைத்தனர். இவர்களின் நலன்களை எதிரொளிப்பதாக திராவிடர் கழம் வளர்ந்தது. சாதியையும் மதத்தையும் எதிர்த்து அது வன்மையாகப் போராடியது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வியிலும் அரசுப் பணியிலும் சலுகை பெற உதவியது. ஆனால் இந்தச் சலுகைகளைப் பெற்ற அம்மக்களின் ஒரு சிறு பகுதியினர் வளர்ந்து வந்ததைக் கண்டதும் அம்மேல்சாதியினர் தம் முன்னாள் பகைவர்களான பார்ப்பனர்களுடன் சேர்ந்து பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் பிளவு படுத்தும் பணியில் இரா.சே.ச. வுக்கு முன்னணிப்படையாக இயங்குகின்றனர். இத்தகைய போக்கைக் கொண்டோரைப் புத்தன் பார்ப்பனர் என்றும் இப்போக்கை புத்தன் பார்ப்பனியம் என்றும் கூறுகின்றனர். உண்மையில் இது புதிய இயற்காட்சியல்ல; தமிழ்க் குமுகத்தின் நெடுநாள் பண்பு. இத்தகையோர் எல்லாச் சாதிகளிலும் இருந்தாலும் ஒரு சாதியின் இடம் குமுகப்படியில் எவ்வளவு உயரத்திலிருக்கிறதோ அதற்கிசைய இது விகிதத்தில் கூடும். இதைச் சீர்த்திருத்தச் சபைக் கிறித்துவர்களிடையில் நாம் குமரி மாவட்டத்தில் வெள்ளிடை மலைபோல் காண்கிறோம்.
தமிழ்க் குமுகத்தின் வளர்ச்சிக் கட்டங்களில் தொழிலடிப்படையில் சாதிகள் ஏற்பட்டு பொருளியல் ஏற்றத் தாழ்வுகளால் சாதி உயர்வு தாழ்வுகளும் ஏற்பட்டன. இவ்வாறு மக்கள் பிளவுண்டு தம்முள் பகைகொண்டு நின்ற நிலையில் வெளியிலிருந்து வந்தோரை உள் நாட்டிலுள்ள தம் போட்டியாளர்களிடமிருந்து தம்மைக் காக்கும் மீட்பார்கள் என்று நினைத்த தமிழ் மக்கள் அவர்கள் வீசிய மதங்கள் எனும் நச்சு வலைகளில் சிக்கி வந்துள்ளனர். ஒரு வலையில் சிக்கியோர் அதிலிருந்து மீள இன்னொரு வலையை நாடினரேயன்றித் தம் சொந்த முயற்சிகளில் ஈடுபடவில்லை. இவ்வாறு புதிய புதிய வலைகளில் சிக்கி எண்ணற்ற புதுப்புதுச் சாதிகளான இம்மக்கள் பிளவுண்டனர். இன்று இறுதியாக இந்து, கிறித்துவம், முகமம்தியம் எனும் நச்சு வலைகளில் சிக்கி இவர்கள் உழல்கின்றனர். இவ்வாறு நச்சு வலைகளில் சிக்கிய மக்களின் குருதியை இவ்வலைகளை வீசுவோர் தடங்கல் ஏதுமின்றிச் சுவைத்து உறிஞ்சிக் குடிக்கின்றனர்.
இவ்வாறு வெளியாருக்கு வரவேற்புக் கூறுவதில் உண்மையில் ஒட்டுண்ணி வகுப்பினர், அதாவது உழைப்பிலோ உழைப்பை உருவாக்குவதிலோ எவ்விதப் பங்கும் எடுத்துக் கொள்ளாதவரே முன்னணியில் இருக்கின்றனர். நேற்று வரை பார்ப்பனர்களும் பிற மேல் சாதியினரும் இதை முன்னின்று நடத்தினர் என்றால் இன்று சலுகைகள் மூலம் ஒட்டுண்ணித்தனமான அரசுப் பணிகளில் அமர்ந்துவிட்ட எல்லாச் சாதித் தலைவர்களும் தத்தம் குழு நலன்களுக்காகத் தத்தம் சாதியினரைத் தம் பின்னால் அணிவகுக்க வைத்து அவர்களுக்குள் மோதல்களை உருவாக்கக் கடுமையாக முயல்கிறார்கள். இந்த ஒட்டுண்ணிகளிடமிருந்து குமுக இயக்கம் என்று விடுபட்டு உழைப்போர், உழைப்பை உருவாக்குவோரிடம் போய்ச் சேருகிறதோ அன்று தான் தமிழகம் முன்னோக்கி நகரும்.
பச்சையான சாதிப் பூசல் என்ற மாயையில் சிக்கியிருந்த குமரி மாவட்டத்ததை மதச் சாயம் பூசப்பட்ட சாதிப் பூசல் என்ற குளவி கொட்டிவிட்டது. குமரி மாவட்டம் நெளிவது தமிழகத்தின் கண்களையும் கருத்தையும் குமரி மாவட்டத்தின் மீது மட்டுமல்ல, தன் மீதே திருப்பியிருக்கிறது. இதன் விளைவுகளைக் காலம் காட்டும்.
அடிக்குறிப்புகள்:
[1]புளியங்குடி கலவரத்தில் பிற்படுத்தப்படடோருடன் காவல்துறையினரும் சேர்ந்து தாழ்த்தப்பட்டோரைத் தாக்கினர். ஆனால் தாழ்த்தப்படடோர் தம் பக்கத்தில் நேர்ந்த உயிரிழப்புகளுக்குக் குறையாத அளவுக்கு எதிரிகளிடையிலும் உயிரிழப்பை ஏற்படுத்தினர் என்றும் தாக்கியோரின் வீரம் பற்றி நிலவி வரும் கற்பனைப் படிமம் கலைந்து விடக் கூடாது எனத் திட்டமிட்டும் தாழ்த்தப்போர் மீது பொது மக்களுக்குப் பரிவு ஏற்படவேண்டும். என்ற நோக்கத்திலும் (மதிப்பு ஏற்படவேண்டும் என்று நினைத்திருந்தால் இதைச்செய்திருக்க மாட்டார்கள்) அனைவரும் இவ்வுண்மையை இருட்டடிப்புச் செய்தனர் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி நண்பர் ஒருவர் கூறினார்.
[2]அலைவாய்-கடலைக் குறிக்கும் அலைவாய் எனும் கழக (சங்க) காலச்சொல்போன்று இன்னும் பல எண்ணற்றசொற்கள் குமரி மாவட்டத்தில் இன்றும் வழக்கிலிருக்கின்றன.
[3]கடகம் அளவாக வாரப் படாத பனை ஓலைளைக் கொண்டு முடையப்படும்
[4]இது கலவரம் நடைபெற்ற உடனடி நிலைமை. இன்று நிலைமை மாறிவிட்டது. கடகத்துக்குப் பகரம் அலுமினியக் கூடை புழக்கத்துக்கு வந்துள்ளது. தலையில் சும்ப்பதற்குப் பகரம் தானிகளிலும் சிறு சரக்கிகளிலும் மீனைக் கடைக்குக் கொண்டு வருகின்றனர்.
[5]நாடார்கள் இப்போது பார்ப்பனியத்துக்குள் நுழையத்தொடங்கிவிட்டதால் புலால் உண்ணா நாட்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது. இதனால் மீன் ஏற்றுமதியாளர்களுக்கு வசதி தானே!
[6]இந்தாண்டு (1983) வறட்சி அதை ஏறக்குறையச் செய்துவிட்டது.
[7]இன்று தமிழகத்தில் உள்ள கிறித்துவத் தேவாலயங்களிலும் அவை நடத்தும் கல்வி உட்பட்ட பிற நிறுவனங்களிலும் நடைபெறும் சாதிப் பூசல்கள் உலகறிந்தவை. இந்து நாடார்களும் மேம்பட்டவர்களில்லை. ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் போல் இந்து நாடார்களும் கோயில்களுக்குள் நழையத் தடை இருந்தது. அனைவருக்கும் கோயில் நுழைவு ஆணை வந்த போது தாழ்த்தப்பட்ட மக்களோடு தாமும் ஒரே நாளில் நுழைவது இழுக்கென்று கருதி நெல்லை மாவட்டத்தில் அவர்களுக்கு முன்று நாட்கள் முன்பே இவர்கள் கோயில்களில் நுழைந்தார்களாம். நாடார்களிடையில் தங்களுக்கென்று ஓர் உள்ளடுக்கு உள்ளது. சீர்திருத்த சபையினர் முதலடுக்கு, பழஞ்சபைக் கிறித்துவர்கள் இரண்டாம் அடுக்கு, இந்துக்கள் முன்றாம் அடுக்கு தாழ்த்தப்பட்டோரிடையில் பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற முப்பிரிவினடையிலும் கூட நாடார்களிடையிலுள்ளதைப் போன்ற உள்ளடுக்குகள் உள்ளன. காப்பதற்குச் சாதிமானம் தவிர வேறு எதுவுமில்லாத(ஏழை) மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது தான் இதற்குக் காரணம் போலும். பருப்பொருள் முந்திச் செல்கிறது, தன்னுணர்வு தொடர்ந்து செல்கிறது என்ற அடிப்படையில் மக்களிடையில் பொருளியல் உறவுகளில் மாற்றம் ஏற்பட்டாலும் குமுகத் தன்னுணர்வில் மாற்றம் ஏற்படச் சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டும்.
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக